கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

கதவுகள் திறக்கப்படும் போதினில் - நாகாலாந்து படைப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கதவுகள் திறக்கப்படும் போதினில் - நாகாலாந்து படைப்புகள்

- சிவன்குமரன்

மொழிபெயர்ப்பு நூல்கள் எப்போதும் புதிய சாளரங்களைத் திறப்பவை. வேறு வேறு நில அமைப்புகள், உணவுப்பழக்கங்கள், உடைகள் என வடகிழக்கு இந்திய மாநிலங்கள் தெற்கிற்கு எப்போதுமே ஒரு புதிர்தான், அவர்களின் கலை இலக்கியங்களை உள்வாங்காதவரை. அவற்றை மொழிபெயர்ப்பு நூல்களே நமக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன. அப்படி ஒரு நூல்தான், ‘கதவுகள் திறக்கப்படும் போதினில்.'

நாகாலாந்து பெண் படைப்பாளர்களின் படைப்புகளை அனுங்லா ஜோ லாங்குமர் தொகுத்துள்ளார். இந்நூலினைத் தமிழில் ச.வின்சென்ட் மொழிபெயர்த்துள்ளார். நாட்டுப்புறப்பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள் ஆகியவை இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலைப் பற்றி இதன் தொகுப்பாசிரியர், `இந்த நூலில் முழுவதுமாகக் காணப்படும் ஒரு பிரதானமான சமூகப்பொருள் பெண் / பெண்ணியக்குரல். இது பெண்கள்மேல் தொடர்ச்சியாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதையும், நாகாக்களின் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் தொடர்ந்து செயலிழந்து நிற்பதையும் அழுத்தமாகக் கேள்வி கேட்கிறது’ என்கிறார்.

படிப்பறை

எமிசென்யா ஜாமிரின் `குன்றுகள் வீடுகளாய் வளரும் இடம்’ கதை, பணி ஓய்வு பெற்றுவிட்ட ஒரு மனிதரின் உளச்சிக்கலை நுட்பமாகச் சொல்கிறது. `அவருடைய பணி ஓய்வுக்குப்பிறகு இருக்கும் ஆண்டுகள் இருண்ட இடைவெளியாக அவர் கண்முன்பாக நின்றன. வெறுமைக்குள் நுழையவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அச்சமூட்டியது. உண்மையில் அவரை அதிகம் அச்சுறுத்தியது அவருடைய மனைவி ஓய்வுபெறுவதுதான்.’ இந்தக் கதை பாலின ஆதிக்கம் மட்டுமன்றி, தன் வாழ்விடம் பறிபோய்க்கொண்டிருக்கும் அச்சத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

அபோகாலி கிமோமியின் கவிதை, `பருவகாலங்கள் மாறுவதுபோல / மீண்டும் மீண்டும் அவளிடம் அவர்கள் சொல்கிறார்கள் / பெண்ணே, நீ ஆணாக இருந்திருக்க வேண்டும்’ என்கிறது. ரோசுமாரி சம்சாரா என்பவரின் பாடல் வரி இது, `நாகா தேசியவாதி நான் வெறுக்க வேண்டுமென்று சொன்னது - இந்தியரை / இந்து தேசியவாதி நான் வெறுக்குமாறு சொன்னது - பாகிஸ்தானியரை / ஐரோப்பிய தேசியவாதி நான் வெறுக்குமாறு சொன்னது - புலம்பெயர்ந்தோரை.’ இப்பாடல் ஆணாதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் சாடுகிறது.

இத்தொகுப்பிலுள்ள நாகா நாட்டுப்புறப்பாடல்கள் தனித்த கவித்துவம் கொண்டவையாக இருக்கின்றன. நவீனமும் பழைமையும் கலந்துள்ள இது வாசிக்க உகந்த நூலாக வந்துள்ளது. நம் பார்வைத்திறனைப் பரிசோதிக்கும் எழுத்துருக்களையும் அச்சுப்பிழைகளையும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பான ஒரு தொகுப்பாக அமைந்திருக்கும்.

கதவுகள் திறக்கப்படும் போதினில் - நாகாலாந்து படைப்புகள்

தொகுப்பு: Anungla Zoe Longkumer

தமிழில்: ச.வின்சென்ட்

வெளியீடு:
பன்முக மேடை பப்ளிக்கேஷன், வடபுதுப்பட்டி, அன்னஞ்சி,
தேனி - 625531

தொடர்புக்கு: 9487845666

பக்கங்கள்: 192

விலை: ரூ. 300