Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மீ டூ ஆண்களுக்கு எதிரானது அல்ல, மீ டூ ஆண்களை வெறுக்கக்கூடிய பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்டது அல்ல;

படிப்பறை

மீ டூ ஆண்களுக்கு எதிரானது அல்ல, மீ டூ ஆண்களை வெறுக்கக்கூடிய பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்டது அல்ல;

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

‘மீ டூ’ #MeToo இந்த இரண்டு சொற்களும் உலக அளவில் ஏற்படுத்தியிருக்கும் விவாதங்கள் எண்ணற்றவை. ‘பாலின சமத்துவத்துக்கு பெண்களது இடையூறற்ற வளர்ச்சி இன்றியமையாதது’ என்றார் காந்தி. ‘வலிமை, கோபம், ஆளும் திறன் போன்றவை ஆணுக்கும்; சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது ஆண் பெண்ணை அடக்கியாளப் பயன்படுமே தவிர பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது’ என்றார் பெரியார். குடும்பம், பணியிடம் எனப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் சொல்லில் அடங்காதவை. ஒரு பெண் பொருளாதார ரீதியாக, பணி நிமித்தமாக அடுத்தகட்டத்துக்கு நகர்வதைக்கூட பாலியல் எள்ளலாக மாற்றும் வல்லமை படைத்த ஆணாதிக்கச் சமூகத்தில்தான் இன்றளவும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

மீ டூ இயக்கம், அதில் இதுகாறும் நடந்திருக்கும் பல்வேறு மாற்றங்கள், வழக்குகள், இந்தியாவில் ‘மீ டூ’ எப்படிப் பார்க்கப்படுகிறது என்பன பற்றியெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல். மீ டூ ஆண்களுக்கு எதிரானது அல்ல, மீ டூ ஆண்களை வெறுக்கக்கூடிய பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்டது அல்ல; ஆண்களின் மோசமான நடத்தைக்கு எதிராக, தான் செய்யும் பாலியல் அத்துமீறலைத் தனக்கான அதிகாரமாக நினைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்பதைப் பல இடங்களில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

படிப்பறை

மீ டூ போன்ற இயக்கங்களின் வழி, தங்களின் கடந்தகால கசப்பான அனுபவங்கள் குறித்துத் தற்போது பேசும் பெண்களுக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் இந்நூல் பேசுகிறது. வாழ்க்கை முழுக்க இளம்பருவத்தில் நடந்த வடுக்களோடு சுற்றும் பெண்களையே மீண்டும் மீண்டும் நாம் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து வருகிறோம் என்பதை உறுதிபடச் சொல்கிறது. கவிஞர் வைரமுத்து தொடர்பான உரையாடல்களுக்கு ஒரு முழு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார் சாந்தகுமாரி. முன்னுரையில் நீதியரசர் சந்துருவும் `சின்மயி விவகாரம் ஏனோ சமூகத்தில் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், இடதுசாரி இயக்கங்களின் முறையான தலையீடு இப்பிரச்னையில் ஏற்படவில்லை என்பதையும்’ பதிவு செய்கிறார்.

நீதித்துறையில் படிந்திருக்கும் பாலியல் குற்றங்களை அடிக்கோடிட்டு எழுதியிருக்கும் மேனாள் நீதிபதி சந்துருவின் முன்னுரை, நாம் பணியில் இருக்கும் துறையில் உள்ள பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசவேண்டும் என்பதைச் சொல்கிறது. சமகாலக் குரலை முன்வைத்து, காலங்காலமாய் நிலவும் அநீதிகளைப் பேசும் முக்கியமான புத்தகமிது.

மீ டூ

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி

எதிர் வெளியீடு,

96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி - 642002

04259-226012,

9942511302

பக்கம்: 320

விலை: ரூ. 350