அந்தக் கண்கள்!
பார்த்ததுமே அசந்து நின்றுவிட்டேன்.
மும்பையின் சந்தடிமிக்க அந்தச் சந்தின் முனையில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. வழுவழுவென்ற காகிதத்தில் அச்சாகியிருந்த அந்த வண்ணச் சுவரொட்டியில் ஓர் இளைஞனும் ஓர் இளைஞியும் ஒருவருடன் ஒருவர் கோத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். இந்தியிலும் ஆங்கிலத்திலும் அச்சாகியிருந்த வாசகம் புத்தம் புதிய இந்தி சினிமாவின் முதல் பார்வை என்று பறைசாற்றியது.
என் பார்வையை அகற்ற முடியாமல் நின்றிருந்தபோது, என் தோளில் கை விழுந்தது.
“என்னடா அப்படி வெறிச்சுப் பாத்துட்டு இருக்கே?” என்றான் கிரிதர், சிகரெட்டைக் காலடியில் நசுக்கி. எங்கள் கிரிக்கெட் டீமின் விக்கெட் கீப்பர் நண்பன்.
“இந்தப் பொண்ண எனக்குத் தெரியும், கிரி...”
“நான்கூடப் பார்த்திருக்கேன்... `நெடுஞ்சாலை'ன்னு ஒரு டி.வி சீரியல்ல ஹாஸ்பிட்டல் நர்ஸா தலை காட்டியிருக்கா.”
“நான் டி.வி சீரியல் எல்லாம் பாக்கறதில்ல.”
“நானும்தான் ரெகுலரா பாக்கறது இல்ல... லீவுக்குப் போயிருந்தப்போ, அம்மா ஒரு சீரியல் பாத்துட்டிருந்தாங்க... அதுல ஒரு மின்னல் மாதிரி இவ வந்தா... பளிச்சுனு அந்த மூஞ்சி மனசுல பதிஞ்சுபோச்சு... இப்போ சினிமாவுக்கு ஜம்ப் அடிச்சிட்டா... தினத்தந்திலகூட ‘மும்பையைக் கலக்கவிருக்கும் தென்னிந்திய அழகி’ன்னு செய்தி வந்ததேடா..!”

“நான் படிக்கலடா...”
“என்ன கண்ணுடா அவளுக்கு..!”
“அந்தக் கண்ணை வெச்சுதான் எனக்கும் அடையாளம் தெரிஞ்சுது... இவள நான் நேர்லயே பாத்திருக்கேன்...”
“வாட்! ருக்ஸானாவ உனக்குத் தெரியுமா?”
“அவ ஒரிஜினல் பேரு ருக்ஸானா இல்ல... பொன்முடி...”
பொன்முடியை முதன்முதலாக எப்போது சந்தித்தேன்?
அப்போது எனக்கு வயது பதினொன்று இருக்கும். நீலகிரி மலையின் அடிவாரத்தில், பூப்பந்தல் என்ற சிற்றூரில் அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டி
ருந்தேன். குப்தா டீ எஸ்டேட்டில் அப்பா மேனேஜராக இருந்தார். எங்களுக்கான க்வாட்டர்ஸ் இயற்கையின் மடியில் பொத்திவைக்கப்பட்ட ஒரு சிறு கட்டடம். காலையில் ஜீப்பை எடுத்துக்கொண்டு போனால், அப்பா மாலையில்தான் திரும்புவார். அம்மா பக்கத்தில் இருந்த பள்ளிக்
கூடத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கப் போய்விடுவாள்.
ஒரு கோடை விடுமுறைக்கு என் பெரியப்பா மகன் சந்தோஷ் சென்னையிலிருந்து வந்திருந்தான்.
சந்தோஷைவிட அவனுடைய தோளில் தொங்கிய கேமராதான் என்னைக் கவர்ந்திழுத்தது. பசுஞ்செடியை, வண்ணப்பூக்களை, பனி படரும் புல்வெளியை, மரக்கிளைகளில் அமரும் வண்ணப் பறவைகளை என்று பார்ப்பதையெல்லாம் அவன் கேமரா சிறைபிடித்தது.
அவ்வப்போது என்னையும் ஏதாவது ஒரு மரத்தடியில் நிற்கவைத்துப் படம் எடுத்து, உடனே கேமராவின் முதுகில் சின்னச் செவ்வகத்தில் அந்தப் படத்தைக் காட்டி மகிழ்விப்பான்.
“டிஜிட்டல் கேமரா. புதுசா வந்திருக்கற மாடல். வெலை தெரியுமா? ஒண்ணே கால் லட்சம்!”
அப்பாவின் ஐந்து மாதச் சம்பளம்!
இரண்டு மூன்று முறை அப்பாவுடன் ஜீப்பில் எஸ்டேட் பகுதியைச் சுற்றிப் பார்க்கப் போய்வந்ததிலேயே அவனுக்குச் சலித்துவிட்டது.
“சித்தப்பா, திரும்பத் திரும்ப எஸ்டேட்ல முக்காடு போட்ட பொம்பளைங்களைப் பார்த்து போரடிக்குது. இங்க புதுசா பாக்கறதுக்கு எதுவும் இல்லையா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஊட்டிக்குப் போறியா?”
“அதெல்லாம் நூறு தடவை பார்த்த எடம்... இங்க பக்கத்துல அனுமான் அருவின்னு ஏதோ இருக்காமே..?”
“அங்கெல்லாம் வண்டி போகாது, சந்தோஷ்... குத்தால அருவி மாதிரி ஜாலியா போய்க் குளிச்சுட்டு வர அருவி இல்ல அது. காட்டருவி... ஒரு வாரமா பேய் மழை. காட்டருவி வெள்ளமாப் போயிட்டிருக்குன்னு சொன்னாங்க...”
“ஐயோ, அதைத்தான் போய்ப் பாக்கணும்...”
“அப்பா, நானும் அந்த அருவியைப் பார்த்ததே இல்லப்பா...” என்று கெஞ்சினேன்.
“எனக்கு எஸ்டேட்ல இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கே...” என்று சற்றே தயங்கிய அப்பா, “சரி, வாங்க என்கூட...” என்றார்.
அம்மா கொறிப்பதற்குச் சில தின்பண்டங்களும், இரண்டு பாட்டில் தண்ணீரும் நிரப்பிக்கொடுக்க, அந்தத் தோள்பை என் முதுகில் ஏறியது.
கேன்வாஸ் ஷூக்கள் அணிந்து, முழங்கால் வரை ஒரு ஜீன்ஸ் டிராயரும், ஒரு கறுப்பு டி-ஷர்ட்டும், கழுத்தில் கேமராவுமாக சந்தோஷ்.
“அந்த அருவியத் தள்ளி நின்னு பார்க்கணுமே தவிர, குளிக்கப் போயிடாதீங்க” என்று அம்மா நான்கைந்து முறை எச்சரித்தாள்.
சற்றே கரடுமுரடான மலைப்பாதையில் ஜீப் எங்களைச் சுமந்து ஏறியது. உயரமான முகடுகளில் மேகங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. குளிர்காற்று, பாதையின் இருபுறமும் மரங்களை உலுக்கிக் கொண்டிருந்தது. பள்ளத்தாக்குகளில் ஆடுகள் நிசப்தமாக மேய்ந்துகொண்டிருந்தன. உயரத்தில் ஒரு பருந்து இரை கிடைக்குமா என்று கூர்மையான பார்வையுடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
ஒரு குறிப்பிட்ட மேட்டில் ஜீப் நின்றது. சற்று இறக்கமாயிருந்த பகுதியில், மூன்று குடில்கள் இருந்தன. அவற்றின் புகைபோக்கி
களிலிருந்து வெண்புகை வெளிப்பட்டு விண் நோக்கி எழுந்து கலைந்து கொண்டிருந்தது.
அப்பா முதல் குடில் வாசலில் நின்று, “கோவிந்து...” என்று கூப்பிட்டார்.
குடிலுக்குள் இருந்து வெளியே வந்த நபருக்கு சுமார் 50 வயது இருக்கும். சற்றே கூன் விழுந்த முதுகு. பராமரிக்கப்படாத தலைமுடி. முள்தாடி. சிவப்பு வரியோடிய கண்கள். உழைப்பின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள். தோளில் ஒரு கறுப்புக் கம்பளி போர்த்தி, அதை உடலோடு இறுக்கிக்கொண்டு, வெளியே வந்த கோவிந்து, வாயைப் பொத்தி, “ஐயா, கும்பிடுறேனுங்க...” என்று சொன்னார். அதிலேயே களைத்துப்போனவராக, குடில் வாசலில் இருந்த ஒரு பாறையில் சட்டென்று உட்கார்ந்துவிட்டார்.
“கோவிந்து, இவங்க ரெண்டு பேரையும் அனுமான் அருவிக்குக் கூட்டிட்டுப் போ...”
“ஐயா, ரெண்டு நாளா குளிர்காய்ச்சலுங்க... வெளிய தலகாட்டலங்க...”
“ஊருலேர்ந்து இந்தத் தம்பி வந்திருக்கு. நான் உன்ன நம்பிக் கூட்டிட்டு வந்திருக்கேன்... இல்லன்னு சொல்லாத...”
“காய்ச்சலய்யா... நவர முடியல...”
“வேற யாருகிட்ட போகச் சொல்றே கோவிந்து?” என்று அப்பா சற்றுக் கோபமாகக் கேட்டார்.
“கோச்சுக்காதீங்கய்யா... நான் பொன்முடிய அனுப்பிவெக்கறேன்...” என்று சொல்லிவிட்டு, அவர் உட்பக்கம் திரும்பி “பொன்முடி...” என்று உரக்கக் கூப்பிட்டார். ஒரு சிறுவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, ஓலைக் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று, முகத்தை மட்டும் காட்டியது ஒரு பெண்.
உடனடியாக என்னைத் தாக்கி, உடலில் மின்னலைப் பாய்ச்சியது அவளுடைய கண்கள்.
“இவங்கள அனுமான் அருவிக்குக் கூட்டிட்டுப் போ, கண்ணு...”
“அப்பா, இன்னும் சமைச்சு ஆகல...” மெலிந்த குரல் பதில் சொன்னது.
“பரவால்ல, வந்து சமைச்சுக்கலாம்... கூட்டிட்டுப் போ...” என்று என் அப்பாவும் சற்று அதிகாரமாகச் சொல்லிவிட்டார்.
அதற்குள் அவருடைய போன் ஒலித்து, காதில் வைத்து, “வந்துட்டேயிருக்கேன்...” என்று கட் பண்ணி, “டேய் பசங்களா, எனக்கு அவசர வேலை வந்துருச்சு... சூப்பர்வைசர் பிரச்சன... கவனமாப் போயிட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு அவசரமாக ஜீப்பில் ஏறி, போயே போய்விட்டார்.
சந்தோஷ் சற்றுத் தள்ளிப்போய் நின்று, புகை கக்கும் அந்தக் குடிலையும், அதன் வாசலில் குந்தி அமர்ந்திருந்த கோவிந்துவையும் கேமராவில் க்ளிக்கினான்.
“கோவிந்து, ஒன் பொண்ண அதேபோல கதவுக்குப் பின்னாலயிருந்து எட்டிப்பாக்கச் சொல்லு... ஒரு போட்டோ எடுத்துக்கறேன்...”
என்னவோ இவனே பெயர் வைத்தாற்போல் வயதில் மூத்தவரை அவன் பெயர் சொல்லி அழைத்ததும், திடுக்கிட்டேன்.
“அண்ணா, அவரு பெரியவரு... பேர் சொல்லிக் கூப்புடற...”
“டேய், நம்மகிட்ட கைநீட்டி கூலி வாங்கறவன்டா... இவனுக்கு அப்பன் வந்தாலும் பேர் சொல்லிக் கூப்புடலாம்...”
குடிலின் கதவு திறந்து, அந்தப் பெண் வெளியே வந்து நின்றது. இடுப்பில் சற்றே சாயம்போன பாவாடை. மேலே ஆண்கள் அணியும் ஒரு தொளதொள சட்டை. அவளுடைய அப்பாவுடையதாக இருக்கலாம்.
என்னைவிட உயரமாகவும், சந்தோஷைவிடக் குள்ளமாகவும் இருந்தாள். கூந்தலை அப்படியே முடிச்சிட்டிருந்தாள். ஆனால், எதையும் கவனிக்கவிடாமல் அவள் கண்கள் ஈர்த்துப்பிடித்தன.
என்னிடம் இருந்த கோலிக்குண்டுகளில் சில பூவில்லாமல், வெறும் கண்ணாடி உருண்டையாக இருக்கும். அதைப் போல் தெளிவான, சற்றே நீலநிறக் கண்கள்.
“ஏ, பொன்முடி, அந்தக் கதவுக்குப் பின்னால போய் ஒரு போஸ் குடு...”
“செய்யு, கண்ணு...” என்று கோவிந்துவும் வற்புறுத்தவே, அவள் விருப்பமில்லாமல் போய் கதவுக்குப் பின்னால் நின்று முகம் மட்டும் காட்டினாள்.
சந்தோஷ் சட்சட்டென்று நான்கைந்து க்ளிக்குகள் தட்டினான்.
“போட்டிக்கு அனுப்பி பிரைஸ் வாங்கப்போறேன்...” என்று என்னிடம் சொன்னான்.
மேற்கொண்டு அவன் கோணம் தீட்டிக் கொண்டிருந்தபோது, அவள் சடக்கென வெளிப்பட்டாள்.
“இத பாருங்க, அருவியைப் பார்க்கணும்னா, அதலபாதாளத்துக்கு இறங்கணும். மொழங்காலு முறிஞ்சுபோயிரும். பாதி வழியில திரும்பறேன்னு சொல்லக்கூடாது...” என்று ஒரு டீச்சர் போல் உறுதியான குரலில் சொன்னாள்.
“துன்றதுக்கும் குடிக்கறதுக்கும் தேவையானது இருக்கு,..” என்று சந்தோஷ் சொல்லி முடித்தபோது, அவள் சரசரவென்று நடக்க ஆரம்பித்திருந்தாள். அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், பின்தொடர்ந்தோம்.
“கொஞ்சம் நிதானமாப் போ, கண்ணு...” என்று சந்தோஷ் அவள் அப்பாபோல் பேசியதை அவள் ரசிக்கவில்லை. திரும்பிப் பார்த்து முறைத்தாள்.
மரங்களுக்கு இடையில் ஒரு உள்பாதையில் அவள் நுழைந்தாள். நெருக்கி நின்ற மரங்களால் சட்டென்று வெளிச்சம் குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், நின்றாள்.
அந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்துத் தொங்கி ஊஞ்சலாடினாள். சந்தோஷ் கேமராவை எடுத்ததும், சட்டென்று குதித்து இறங்கினாள். கீழேயிருந்து, நீளமான குச்சிகளைப் பொறுக்கி ஆளுக்கொன்றாகக் கொடுத்தாள்.
“போற வழியில நூத்துக் கணக்குல கொரங்கு வரும். அசந்தா, பையப் பிடுங்கிட்டுப்போயிரும்... குச்சியக் காட்டி மெரட்டிட்டேயிருக்கணும்...”
“அதான் அனுமான் அருவின்னு பேரா?”
“இல்ல, இல்ல, அனுமான் மாதிரி சமயத்துல அடக்க ஒடுக்கமாவும் இருக்கும். சமயத்துல முழு வேகத்தக் காட்டும்...”
பாதை கால்வாய் வெட்டியதுபோல் சரிவாக இறங்கியது. அங்கங்கே நட்டுக் குத்தி வைத்திருந்த கருங்கற்கள்தாம் படிகள். அக்கம்பக்கம் பிடித்துக்கொண்டு, கவனமாக இறங்கி, பொன்முடியைப் பின்தொடர்ந்தோம்.
“அக்கா, நீ என்ன படிச்சிருக்கே?”
“எட்டாப்பு. அதுக்கு மேல டவுனுக்கில்ல போவணும்..? அப்பா அனுப்பல... மூணு வருஷமா வீட்லதான் கெடக்கேன்... நீ?”
“நான் இப்ப சிக்ஸ்த் படிக்கறேன்...”
“நான் பி.டெக் முடிச்சிட்டு, கேம்பஸ் அட்டென்ட் பண்ணிட்டு, ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன்...” என்றான் சந்தோஷ், கேட்காமலேயே.
சட்டென்று ஒரு மலைக் குரங்கு பாதையில் குறுக்கிட்டு, உர்ரென்று பற்களைக் காட்டியது. அது தலைவன் போலிருக்கிறது. இருபுறமும், தபதபவென்று குரங்குகள் வந்து இறங்கின. அவற்றைப் புகைப்படம் எடுக்க சந்தோஷ் முனைய, தலைவன் குரங்கு அவன் கேமராவைக் குறிவைத்துப் பாய...
பொன்முடி தன் கையிலிருந்த கோலைக் காற்றில் சுழற்றி ஓங்கித் தரையில் அடித்தாள். கழி முறிந்தது. ஆனால், குரங்குகள் மிரண்டு பின்வாங்கின. சந்தோஷ் பயந்துபோய் கேமராவை மார்போடு அழுத்திக்கொண்டான். நானும் முதுகுப் பையை முன்னால் கொண்டுவந்து மார்போடு அணைத்துக்கொண்டேன்.
“நீ அம்சமாத்தான இருக்க, ஒனக்கு ஏன் ஆம்பிளைத் தடியன் மாதிரி பொன்முடினு பேர் வெச்சாங்க?” என்று சந்தோஷ் கேட்டான்.
அவள் பதில் சொல்லவில்லை.
“ஒனக்கு இப்ப வயசு பதினாறா, பதினேழா?”
பதில் இல்லை.
“ஏய், என்னடி ஒனக்குத் திமிரு?” என்றான், சந்தோஷ், திடீரென்று குரலை உயர்த்தி.
காற்றில் கூடும் அந்த உஷ்ணத்தை நான் ரசிக்கவில்லை. பேச்சை மாற்ற விரும்பினேன்.
“அக்கா, அது பேரிக்கா மரமா..?”
“ஆமா... வேணுமா?” என்று ஆசையுடன் கேட்டாள். பின், சற்றும் யோசிக்காமல், பாவாடையைச் சற்றே உயர்த்திக்கொண்டு, அந்த மரத்தை இரு கைகளாலும் கால்களாலும் பற்றிக்கொண்டு சரசர என்று ஏற ஆரம்பித்தாள்.
சந்தோஷ் ஓடிப்போய் மரத்தடியில் நின்று அண்ணாந்து பார்த்தான். பொன்முடி முகத்தில் கோபம் கொப்பளித்தது. “ஏய், ஒதுங்கு...” என்றாள். அவன் அசையாமல் அங்கேயே நின்றான்.
“ச்சீத் தூ...” என்றாள். பாவாடையைக் கால்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு, சர்ரென்று சரிந்து இறங்கிவிட்டாள்.
பாவாடையைக் கால்களுக்கு நடுவில் கொடுத்து பின்பக்கம் தார்ப் பாய்ச்சிக் கட்டிக்கொண்டாள். மரத்தின் மீது, ஒரு தேர்ந்த குரங்கு போல் சரசரவென்று ஏறினாள். பேரிக்
காய்களைப் பறித்து எடுத்துக்கொண்டு கிளைகள் மாறி இறங்கினாள். அவளுடைய வேகமும் உடலின் உறுதியும் அபாரமாக இருந்தன.
“அப்படியே மரத்து மேல சாய்ஞ்சு நில்லு... ஒரு போட்டோ எடுத்துரலாம்.”
“வேணாம்...”
“சரி, நான் எடுக்கல... இவன் எடுப்பான்... ஓகே? நீ எடுடா...” என்று கேமராவை என்னிடம் கொடுத்தான் சந்தோஷ்.
கேமரா என் கைக்கு மாறியதும், பொன்முடி தயங்காமல் மரத்தில் ஒயிலாக சாய்ந்து நின்றாள். கேமராவின் லென்ஸ் வழியே பார்த்தபோது, அவள் கண்கள் இரண்டு விளக்குகளை ஏற்றிவைத்ததுபோல் ஒளிர்ந்தன. நான்கைந்து கோணங்களில் அவளைப் படம்பிடித்தேன்.
“அக்கா, பாரு... எவ்வளவு சூப்பரா இருக்கு...” என்று கூப்பிட்டேன்.
ஆவலுடன் வந்து என் அருகில் நின்று அவள் கேமராவின் பின்புறம் தெரிந்த அவளுடைய பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தபோது, சந்தோஷ் அவள் தோள்மீது கை வைத்து சற்றே தன்னுடன் நெருக்கிக்கொண்டான். நெளிந்தபடி, அவள் அடுத்தடுத்த படங்களைப் பார்க்க... அவனுடைய கை மெல்ல அவள் தோளிலிருந்து முன்புறம் இறங்கியது.
சட்டென்று அவனை உதறிவிட்டு அவள் விலகினாள்.
“இத பாரு, மேல கைவெக்கற வேலைலாம் வேணாம்...” என்று கையிலிருந்த குச்சியை உயர்த்திக் காட்டினாள்.
சந்தோஷ் கவலைப்படாமல் சிரித்தான்.
“ஏண்ணா வம்பு பண்ற..?” என்று கேட்ட என்னை வாயில் விரல் வைத்து, “உஷ்” என்று அடக்கினான்.
“இங்க ஒரு பிரேக்... நீ பேரிக்கா சாப்புடு... நான் கொஞ்சம் தாகத்த தணிச்சுக்கறேன்” என்று சந்தோஷ் பக்கத்து மரத்தின் புடைத்திருந்த வேர்மீது உட்காந்து, தன் கைப்பையைத் திறந்தான். உள்ளே இருந்து பச்சை நிற பாட்டில்கள் இரண்டு எடுத்தான்.

“வேணுமா?” என்று அவளிடம் காட்டினான்.
அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஒனக்கு இன்னும் பீர் சாப்பிடற வயசாவல...” என்று என்னிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் தொண்டையில் சரித்துக்கொண்டான்.
“டேய், இதைலாம் வீட்ல சொன்னே, கொன்னுருவேன்...”
பொன்முடி ஒரு பேரிக்காயை என்னிடம் தூக்கிப் போட்டாள். ஒன்றை அவள் கடித்தாள்.
“அக்கா, எல்லாம் கைலதான கட்டிப்பாங்க.. நீ என்ன கால்ல கறுப்புக் கயிறு கட்டியிருக்க?”
“எனக்குக் கொலுசு போட்டுக்கணும்னு ஆசை. அதுக்கு வாய்ப்பில்ல... அதான், பத்துக் கருகமணியக் கோத்து கால்ல கட்டியிருக்கேன்...” என்று சிரித்தாள்.
சந்தோஷ் பாதி பாட்டிலுக்கு மேல் கடகடவென்று சரித்துக்கொண்டு, பாட்டிலைத் தூக்கிப் போட்டான். பொன்முடி உடனே சென்று அந்த பாட்டிலைப் பொறுக்கி எடுத்துவந்தாள்.
“உன்ன மாதிரி கண்ட இடத்தில குப்பையப் போட்டுட்டுப் போறவங்களாலதான் இந்த இடமே அசிங்கமாவுது...”
அடுத்த திருப்பத்தில் மரத்தில் ஆணியடித்துத் தொங்கிய ஒரு குப்பைக்கோணியில் பாட்டிலைப் போட்டாள்.
இறக்கமாயிருந்ததால், முழங்கால் முறியவில்லை. ஒரு கட்டத்தில், அருவி கண்களுக்குப் புலப்படவில்லை என்றாலும், அதன் அருகில் இருக்கிறோம் என்பதுபோல் ஹோவென்று காதை அடைத்து இரைச்சல் கேட்டது.
அடுத்த இறக்கத்தில் சடாரென்று திரையை விலக்கினாற்போல அருவி எங்கள் கண்களில் புலப்பட்டது. வானத்தில் இருக்கும் தொட்டி உடைத்துக்கொண்டதுபோல் ராட்சஸத்தனமாக தண்ணீர் பொழிந்து இறங்கி, அந்த வேகத்தில் ஒரு குட்டையாக சேகரமாகித் ததும்பி வழிந்து அடுத்த பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.
நூறடி தள்ளி நின்றபோதே, காற்றில் அதன் சாரல் சிலீர் என்று எங்கள்மீது தெளித்து சிலுசிலுக்க வைத்தது.
பொன்முடி ஒரு பாறையில் உட்கார்ந்து, ஒரு பேரிக்காயைக் கடித்தாள்.
சந்தோஷின் கண்கள் சிவந்திருந்தன. கேமராவை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் தாவி, பல புகைப்படங்கள் எடுத்தான். திடீரென்று அவனுக்குக் கிறுக்கு பிடித்தது.
“டேய், இவ்ளோ தூரம் வந்துட்டு குளிக்காமப் போறதா? நான் நனையப் போறேன்... நீ என்னை ஒரு போட்டோ எடு...” என்று கேமராவை என் கையில் திணித்தான்.
பொன்முடி கலவரமானாள். “உனக்கு நீச்சல் தெரியுமா?” என்று அவனைக் கேட்டாள்.
“தெரியாது...”
“பாத்தே இல்ல? தண்ணி பேயா எறங்குது... தள்ளி நின்னு போட்டோ பிடிக்கறதோட நிறுத்திக்க... குளிக்கணும்னு எறங்கினா, வெள்ளம் அடிச்சிட்டுப் போயிரும்.”
“அதான் பிடிச்சுக்கக் கம்பி போட்டிருக்காங்களே!”
“அது சீசன்ல குளிக்கறதுக்கு. இப்ப இல்ல...”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது... இவனுக்கு நீச்சல் தெரியும். அப்படி தண்ணி என்னை அடிச்சிட்டுப் போனா இவன் காப்பாத்துவான்” என்று என்னைக் காட்டினான். டி-ஷர்ட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு சரேலென்று அருவி மெலிந்திருந்த விளிம்புக்குப் போய்விட்டான். அங்கே பொழிந்த தண்ணீரே அவனை உலுக்கியது. அவன் மண்டையில் சடசடவென்று நீர் வேகமாக அடித்தது. கட்டுப்
பாடின்றி அவன் தலை ஆடியது. அங்கிருந்து அவன் தன் உடலை விரித்துக் காட்டினான். புஜங்களை உயர்த்தி, தன் தசைப்பற்றை உருட்டிக் காட்டினான். ‘வரியா?’ என்று பொன்முடியை அவன் கூவி அழைத்தது காற்றில் விரயமானது.
“உங்கண்ணன சீக்கிரம் வெளிய வரச் சொல்லு...” என்று பொன்முடி பதறினாள். என் சைகைகளை சந்தோஷ் மதிக்கவில்லை. தன் தைரியத்தை அவளிடம் பறைசாற்ற வேண்டும் என்று நினைத்தவன்போல கம்பியைப் பிடித்துக்கொண்டு, அருவியின் மையப்பகுதிக்குப் பொறுப்பில்லாமல் நகர்ந்தான்.
என்னதான் பாதுகாப்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டிருந்தாலும், அருவி விழுந்த வேகத்தில் சட்டென்று இரண்டு கம்பிகளுக்கு நடுவில் அவன் இழுக்கப்பட்டு நொடியில் தண்ணீரோடு காணாமல்போனான்.
“ஐயோ!” என்று அலறினேன்.
அருவி பொழிந்து இறங்கும் இடத்தில் தேங்கிய ஆழமான குட்டையில் சந்தோஷ் செலுத்தப்படுவதும், சுழன்று இழுக்கப்பட்டு, கைகளை உயர்த்தி அவன் தகதகவென்று தண்ணீரை அடிப்பதுமாக இருக்க...
கேமராவை வைத்துவிட்டு உடைகளைக் கூடக் கழற்றாமல் அந்தக் குட்டைக்குள் பாய்ந்தேன். தண்ணீர் உடலை ஐஸ்கத்திகளால் வெட்டியது. நீச்சலடித்து அவனை நெருங்கினேன். சந்தோஷை இழுக்கப் பார்த்தால், அவன் பாரம் என்னையும் சேர்த்து தண்ணீருக்குள் மூழ்கடிக்கப் பார்த்தது.
என்னுடைய வயதும் அனுபவமும் போதாமல் நானும் மூழ்கிவிடுவேனோ என்று பதற்றத்துடன் கைகளை வீசி பொன்முடியை உதவிக்கு அழைத்தேன். கரையில் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தவள், சரக்கென்று தண்ணீரில் நழுவி இறங்கினாள். தேர்ந்த வேகத்தில் எங்களை நெருங்கினாள். சந்தோஷின் தலைமுடியை இறுக்கமாகப் பின்புறமிருந்து பற்றினாள். அவன் தலையை தண்ணீருக்கு மேல் உயர்த்திப் பிடித்து, அவள் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமுமாக அவனைப் பக்கவாட்டில் இருந்த கரைக்கு இழுத்துவந்தோம்.
அவன் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் கக்கி இருமியபிறகுதான், எங்களுக்கு மூச்சே வந்தது.
என் ஈர உடைகள் கனத்து இழுத்தன.
“சட்டையக் கழட்டிப் பிழிஞ்சு, காய வெச்சுப் போட்டுக்க. இல்லேனா, ஜன்னி கண்டுரும்...” என்று பொன்முடி என்னிடம் சொன்னாள்.
சந்தோஷ் புரண்டு படுத்ததும், அவன் கண்கள் பொன்முடியை விழுங்குவதுபோல் பார்த்தன. அப்போதுதான், நானும் பொன்முடியை ஒழுங்காகப் பார்த்தேன். உடைகள் முற்றிலும் நனைந்து அவள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்ததில், இதுவரை புலப்படாத அவளுடைய இளம் வளைவுகள் பளீரென்ற அந்தப் பொன் வெயிலில் எடுப்பாகத் தெரிந்தன. சட்டைக்குள் அவள் ஏதும் உள்ளாடை அணிந்திருக்கவில்லை என்பதால், சந்தோஷால் அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை.
அவன் பார்வையைப் பார்த்ததும், அவள் தன் சட்டையை உடலோடு ஒட்டவிடாமல் முன்புறம் இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.
“பொன்முடிக் கண்ணு, நீ சட்டையக் கழட்டலியா? ஒனக்கு ஜன்னி கண்டுரப் போவுது..!” என்று சந்தோஷ் பிழைத்த திமிரில் பேசினான். பொன்முடி பதில் சொல்லாமல் அவனை முறைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் மறைந்தாள்.
சந்தோஷ் கைகளை ஊன்றி மெல்ல எழுந்தான். கேமராவை எடுத்துக்கொண்டு அவள் மறைந்த பாறையை நோக்கி அவன் நகர்ந்ததும், நான் குறுக்கில் நின்றேன்.
“வேணாம்ணா...”
பாறைக்குப் பின்னாலிருந்து அவள் குரல் வந்தது. “எந்த வழில எறங்கி வந்தோமோ, அதே வழிலயே ஏறி வந்துக்குங்க.”
அவள் நிற்காமல், ஒரு குறுக்குப் பாதையில் சரசரவென்று பாம்புபோல் ஏறிப் போவதைத்தான் எங்களால் பார்க்க முடிந்தது.
“இதப் பாரு, சித்தப்பாகிட்டயோ, சித்திகிட்டயோ இதெல்லாம் சொல்லக் கூடாது... புரியுதா?” என்று சந்தோஷ் அதட்டும் குரலில் என்னிடம் சொன்னான்.
ஈர உடைகளைக் காயவைத்து அணிந்து, முழங்கால் முறிய முறிய, வந்த வழியில் ஏறினோம்.

இரண்டு நாள்கள் கழித்து சந்தோஷ் அப்பாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு குன்னூர் வரை போய்வந்தான். என்னைத் தனியே கூட்டிப்போய் ஒரு பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினான். அதில் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகள் மின்னின.
“இது யாருக்கு சொல்லு...”
“பொன்முடிக்கா?”
“ஆமாண்டா... நானே அவகிட்ட கொடுக்கணும்...”
“அருவில ஒன்னக் காப்பாத்தினதுக்கா..?”
“அதெல்லாம் உனக்கு எதுக்கு? கொலுசு போட்டா அவ இன்னும் அழகாயிருவா... ஆனா, அவ என்னப் பார்த்தா மெரள்றா... நீ போய் அவளத் தனியா வரச்சொல்லு... இந்தா, இந்தப் போட்டோவ அவகிட்ட கொடுத்திரு...”
பொன்முடியை மரத்தடியில் நான் எடுத்த புகைப்படங்களின் பிரதிகளையும் கொடுத்தான்.
“ஏய், இதுலாம் சித்தப்பா, சித்திக்குத் தெரிய வேணாம். நம்ப ரெண்டுபேருக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியமா இருக்கட்டும்...”
அந்த வயதில் எனக்கென்று ரகசியங்கள் வைத்துக்கொள்வது ஒரு பெருமிதமாகவே இருந்தது.
புகைப்படங்களைப் பொன்முடி ஆசையுடன் பார்த்தாள்.
“அக்கா, சந்தோஷ் அண்ணன் ஒனக்காக கொலுசு வாங்கிட்டு வந்திருக்கான். உன்னத் தனியாப் பார்த்துக் கொடுக்கணுமாம்...”
பொன்முடி கோபத்தை அடக்குவதில் முகம் சற்றுச் சிவந்தது.
“வாங்கிக்கிட்டாப் போச்சு. நான் ஒரு ஆலமரம் காட்டுனேன் இல்ல, உங்க அண்ணன சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல அங்க வரச் சொல்லு...”
சந்தோஷிடம் சொன்னபோது அவன் முகத்தில் பரவசம்.
“எந்தக் குதிரைக்கும் ஒரு கடிவாளம் உண்டுடா...” என்றான்.
“அப்படினா?”
பதில் சொல்லாமல் என் முதுகில் தட்டினான்.
மாலை நான்கு மணிக்கே கேமராவைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.
“நீயும் வா... வழி காட்டிட்டுத் திரும்பி வந்துரு...” என்றான்.
பொன்முடி குறிப்பிட்ட ஆலமரத்தடிக்குப் போய்ச் சேர்ந்தோம். வேறொரு மரத்துக்குப் பின்னாலிருந்து பொன்முடி வெளிப்பட்டாள். பாவாடை. மேலே சற்று இறுக்கமான சட்டை. முகம் கழுவி, பளிச்சென்று நெற்றியில் பொட்டு. அந்த அபாரமான கண்களைச் சுற்றி மைவிளிம்பு.
“சூப்பரா இருக்க, பொன்னு...” என்றான் சந்தோஷ்.
“கேமராவத் தம்பிகிட்ட குடுத்து அனுப்பிரு...” என்றாள்.
“ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமே!”
“வேணாம்னா வேணாம்...”
சந்தோஷ் மனமில்லாமல் கேமராவை என்னிடம் தந்தான்.
“ஒரு மணி நேரம் கழிச்சு வந்து ஒங்கண்ணனக் கூட்டிட்டுப் போ..!”
தயங்கி நின்றேன்.
“நிக்காத... ஓடுரா...” என்றான் சந்தோஷ், சந்தோஷமாக.
புரிந்தும் புரியாமலும்தான் அந்த இடத்தை விட்டு அகன்றேன்.
அடுத்த ஒரு மணி நேரமும் படபடப்பாக இருந்தது.
தொலைக்காட்சியில், ஆறு மணிச் செய்தி ஆரம்பித்ததும், சந்தோஷைக் கூட்டிவர மேட்டில் மூச்சிரைக்க ஓடினேன்.
அவனை விட்டுவிட்டு வந்த இடத்தில் சந்தோஷைக் காணவில்லை.
“சந்தோஷ் அண்ணா...” என்று மூன்று நான்கு முறை கூப்பிட்ட பிறகு முனகலாக ஒரு குரல் வந்தது. அந்தக் குரலைத் தேடிப் போனேன்.
பார்த்த காட்சி அதிரடித்தது.
அங்கே ஒரு காய்ந்த மரத்தின்மீது சந்தோஷ் முதுகு சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் பின்புறம் ஆலமரத்தின் விழுதுகளால் கட்டப்பட்டிருந்தன.
அவனுடைய மூடிய வாய்க்குள் இருந்து இரண்டு கொலுசுகளின் இணைப்புச் சங்கிலிகள் மட்டும் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தன. கண்கள் தெறித்து விழுவதைப்போல அகன்று இருந்தன. அவனுடைய உடலில் கட்டெறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவை கடித்த இடங்கள் அங்கங்கே தடித்திருந்தன.
பதற்றத்துடன் அவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டேன்.
“பொன்முடி வேலையா இது?”
“அந்தப் பொண்ணு சரியான ராட்சஸி...”
“எதுக்காக இப்படிப் பண்ணினா?”
“அதெல்லாம் இந்த வயசுல உனக்குப் புரியாது...”
ஓடைத் தண்ணீரை எடுத்து உடம்பெங்கும் பூசி, எரிச்சலைக் குறைக்கப் பார்த்தான்.
“அப்பாகிட்ட சொல்லி அவங்களை எஸ்டேட்டை விட்டே தூக்கிரலாம்...” என்றேன், ஆதங்கத்துடன்.
அவன் சட்டென்று என் கைகளைப் பிடித்துக்கொண்டான். “சத்தியம் பண்ணிக்கொடு... யார்கிட்டயும் நீ பார்த்ததச் சொல்லக்கூடாது...”
“ஒன் ஒடம்பெல்லாம் தடிச்சிருக்கேண்ணா...”
“போட்டோ எடுக்கப்போன இடத்துல எறும்புப்புத்த தெரியாம மிதிச்சிட்டேன்னு சொல்லப்
போறேன்... மாத்திக்கீத்தி சொல்லி என்னை அசிங்கப்படுத்திராத...”
அடுத்த இரண்டு நாள்கள், அம்மா அவனுக்கு ஒத்தடம் கொடுத்தாள். திருநீற்றைக் குழைத்து தடித்த இடங்களில் பூசிவிட்டாள். அம்மாவிடம் சொல்ல வேண்டும்போல இருந்தபோதெல்லாம் சத்தியத்தை நினைத்து, சொல்லவே இல்லை.
“அந்தப் பொன்முடிதானா இது..?” என்றான், கிரிதர் புதிய சிகரெட்டைப் பற்றவைத்து.
“ஆமாடா... மும்பை வரைக்கும் வந்திருக்கோம். அவளைப் போய்ப் பார்க்கப்போறேன்...”
“பைத்தியமா நீ? சினிமா விழா... கூட்டம் அலமோதும். உன்ன கேட்டுக்கு வெளியே நிக்க வச்சிடுவாங்க...”
தெரிந்தும் பிடிவாதமாகப் போனேன். விழா அரங்கத்தின் வெளியே, எங்கு திரும்பினும் தலைகள், தலைகள், தலைகள். அப்படி இப்படி இடம் பண்ணிக்கொண்டு, கேட் அருகே போய் நின்றுகொண்டேன்.
சினிமாப் பிரபலங்களோ, பிசினஸ் பெரும்புள்ளிகளோ வந்த கார்களுக்கு மட்டுமே கேட் திறந்தது. அப்போதெல்லாம் கூட்டம் முண்டியடித்து என்னை முன்னே செலுத்தும். காவல் சீருடைகள் எங்களைப் பின்னால் தள்ளும். நான் எதிர்பார்த்துக் காத்திருந்த கார் வந்தது.
கறுப்புநிற வோல்வோ காரின் பின் இருக்கையில் பளபளவென்று அமர்ந்திருந்த பொன்முடி கூட்டத்துக்குக் கையசைத்தபடி வந்தாள்.
கார் என்னை நெருங்கிக் கடக்கையில், “பொன்முடிக்கா...” என்று குரல் கொடுத்தேன். அது அவள் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. கார் நுழைந்து, கேட் மூடியதும், குழப்பமாக நின்றேன்.
திரும்பிவிடலாமா என்று யோசித்த கணத்தில், கேட்டின் பக்கவாட்டிலிருந்து, சஃபாரிச் சீருடை அணிந்த ஒருவன் வெளியே வந்தான். சட்டென்று என்னை அணைத்து இழுத்துக்கொண்டு உள்ளே போனான்.
பத்திரிகையாளர்கள் கேமராக்களோடு மொய்த்துக்கொண்டிருந்த இடத்தில் என்னைக் கொண்டுவிட்டான்.
பொன்முடி அவர்களுக்கு விதம் விதமாகத் திரும்பிநின்று, இடுப்பை வளைத்து போஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
தரை வரை புரளும் பாவாடை. பட்டையாக வயிற்றுப் பகுதியைக் காட்டும் விதமாக நின்றுவிட்ட பூச்சட்டை. சுருள் சுருளாக இறங்கும் கூந்தல். எங்கும் என் கவனம் நிற்கவில்லை. ஈர்த்துப்பிடிக்கும் அவள் கண்களையே ஆசைதீரப் பார்த்தேன். பூப்பந்தலைச் சேர்ந்த பொன்முடிதான் இது என்று அந்தக் கண்கள்தாம் கட்டியம்கூறின.
படத்தில் அவளுடைய ஜோடியாக அறிமுகமானவன், ஒரு நடிகனின் மகன். அவள் இடுப்பில் சுவாதீனமாகக் கையைப் போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டு கேமராக்களுக்கு போஸ் கொடுத்தான். அவள் சிரிப்பு மாறவில்லை. ஒரு பத்திரிகைக்காரன் கேட்டுக்கொண்டதற்காக ஹீரோவின் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்து, ஃப்ளாஷ்களில் கூச்சப்படாமல் நின்றாள்.
கேமராக்களிலிருந்து விடுபட்டதும், என்னைக் கண்ணாலேயே அருகே அழைத்தாள்.
“தாஜ் ஹோட்டல். ரூம் 6003. பத்து மணிக்கு வா...” என்றாள். பிரபலர்களோடு கூட்டத்தில் கரைந்து மேடையேறிவிட்டாள்.
விழா அரங்கத்தின் அருகில்தான் அவள் ஹோட்டல். இரவு பத்து மணிக்கும் பரபரவென்றிருந்தது. அவளிடம் போனில் அனுமதி வாங்கித்தான் என்னை லிஃப்ட்டில் நுழையவே அனுமதித்தார்கள்.
ஆறாவது மாடியில், அறைக் கதவை ஒருமுறை தட்டியதுமே, திறந்தது. பொன்முடி சாதாரண உடையில் இருந்தாள். என் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டாள்.
“வா, வா... எவ்ளோ வருஷமாச்சு நாம பார்த்து... ஒக்காரு...” என்று சோபாவில் அமர்த்தி, என் அருகில் அமர்ந்தாள். அவளிடமிருந்து உயர் மணம் ஒன்று பரவியது. “என்ன மும்பைல..?”
அவள் குரலில் கூடுதலாகத் தேன் சேர்ந்திருந்தது. பேச்சு நடையில் நாகரிகம் வளர்ந்திருந்தது. கண்களில் மட்டும் அதே காந்தம் தொடர்ந்தது.
“காலேஜ் டீமோட ஒரு கிரிக்கெட் டோர்னமென்ட்டுக்கு வந்திருக்கேன். போஸ்டரப் பார்த்ததும், மீட் பண்ணலாமேன்னு தோணுச்சு... அப்பா எப்படியிருக்காரு?”
“அப்பா செத்து நாலு வருஷமாச்சு... உங்கப்பா?”
“இப்ப டார்ஜிலிங்ல வேல... நான் கோயமுத்தூர்ல காலேஜ் ஹாஸ்டல்ல...”
டீப்பாயிலிருந்து ஒரு சிகரெட்டை மிக இயல்பாக எடுத்துப் பற்றவைத்துக் கொண்டாள். என்னிடம் நீட்ட, மறுத்தேன்.
“டிரிங்க்ஸ்?” என்று ஃப்ரிட்ஜைக் காட்டினாள்.
“காலைல மேட்ச் இருக்கு... நீ எப்படிக்கா..?”
“நம்ம எஸ்டேட்ல ஒரு ஷூட்டிங் நடந்துச்சு. தெலுங்கு டைரக்டர், வேடிக்கை பார்த்த என்னை ஹீரோக்குத் தங்கச்சியா நடிக்கச் சொன்னாரு... அங்கேர்ந்து ஒரு சீரியல். அங்கேர்ந்து இந்தி சினிமா...” என்று புகையை ஊதினாள்.
புகையிலிருந்து நான் நெளிந்து நகர, “ஸாரி” என்று ஆஷ்ட்ரேயில் நசுக்கினாள்.
“அப்புறம், சொல்லு... உங்கண்ணன் எப்படியிருக்கான்..?” என்று கண்களைச் சிமிட்டினாள்.
“கல்யாணமாகி, இப்ப ரெண்டு குழந்தைக்கு அப்பன் அவன்... மலேஷியால இருக்கான்...”
“எங்க சினிமா மலேஷியாலயும் ரிலீஸாகும். போட்டோ பார்த்துட்டு, கொலுசை எடுத்துக்கிட்டுத் தேடி வருவானா?” என்று கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தாள். “அன்னிக்கு என்னாச்சுன்னு சொன்னானா?”
“இல்ல... நீயாவது சொல்லுக்கா...”
“அவனுக்குத் திமிரு.. கூலி வாங்கறவன்லாம் அடிமை, கூலிக்காரன் பொண்டாட்டியும் அடிமை, கூலிக்காரனுக்குப் பொறந்தவளும் தனக்கு அடிமைன்னு நெனப்புல வர்ர திமிரு. ‘கொலுசை நானே போட்டுவிடறேன், கிட்ட வாடி’ன்னு கூப்பிட்டான். ஆனா, கட்டிப்பிடிச்சு, உதட்டைக் கடிக்கப் பார்த்தான். கொலுச மாட்டிவிட கைய வெச்சது என் ரவிக்கைல. கொரங்கு ஆட்டம் காட்டுனா, கோலெடுத்துதான ஆவணும்? ‘டேய், கொலுசுக்கு ஆசப்பட்டு உன்னத் தனியாக் கூப்பிடல, உனக்குப் பாடம் சொல்லணும்னு
தான் கூப்பிட்டேன்’னு மூக்குலயே குத்தினேன். ‘மரமேறி உரமேறுன உடம்புடா இது’ன்னு மரத்தோட அவனக் கட்டிப் போட்டேன்...”
“நீ பாட்டுக்கு விட்டுட்டுப் போயிட்டியே... பாம்புகீம்பு வந்திருந்தா..?”
“நான் எங்கயும் போகல... ரெண்டு மரம் தள்ளி மேல ஏறி உக்காந்திருந்தேன். நீ வந்து அவனக் கூட்டிட்டுப் போற வரைக்கும் அவன்மேல ஒரு கண்ணு வெச்சிருந்தேன்...”
“அப்படிலாம் ரோஷமா இருந்துட்டு, சினிமால? எப்படிக்கா?”
சட்டென்று அவள் முகம் சீரியஸானது.
“டேய், தெளிவாப் புரிஞ்சுக்க. யார் கை வெக்கலாம், யார் வெக்கக் கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை ஒரு பொண்ணுகிட்டதான் இருக்கு. நீ உசந்த ஜாதி, பணக்காரன், அதனால எம்மேல உரிமை இருக்குன்னு நீயா கணக்கு போடக் கூடாது... திமிரா, வற்புறுத்தித் தொடக்கூடாது... நான் இஷ்டப்பட்டா, யாருக்கு வேணா இடம் கொடுப்பேன். அந்தச் சுதந்திரம் ஒவ்வொரு பொண்ணுக்கும் உண்டு. அவளுக்கு மட்டும்தான் உண்டு. இஷ்டமில்லாத பொண்ணுங்க மேல வன்முறையா கை வெக்கறவன் ஒவ்வொருத்தனையும் மரத்துல கட்டிவெக்கணும்... தேளையும் பாம்பையும் அவன் மேல ஊர விடணும்...”
“நீ கோபப்பட்டாகூட உன் கண்ணு பேசுதுக்கா... உன்னோட ப்ளஸ் பாயின்ட் இந்தக் கண்ணு...”
மனம்விட்டுச் சிரித்தாள். “இந்தக் கண்ணுதான் இந்திக்கு இழுத்திட்டு வந்திருச்சு... இது எங்கப்பாகிட்டேர்ந்து வந்த கண்ணு...”
திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
“கோவிந்து கண்ணு இப்படியில்லியே...”
“கோவிந்து எங்கம்மாவோட புருஷன். எஸ்டேட்டுக்கு வந்த வெளிநாட்டுக்காரன் யாரோதான் எங்கப்பன். அவன் யாருன்னு செத்துப்போன எங்கம்மாக்குத்தான் தெரியும்...” என்று பெருமூச்சு விட்டாள்.
“எங்க தங்கியிருக்க..?”
“எங்க டீமுக்கு மாதுரி லாட்ஜ்ல ரூம் போட்டுருக்காங்க...”
“நைட்டு நீ போகலேனா, தேடுவாங்களா?” என்று கேட்டாள், அந்தக் கண்களால் என்னைக் குடைவதுபோல் பார்த்து.
“அக்கா!”
“அட, பேசிட்டிருக்கலாம்டா... ஏன்னு தெரியல, அன்னிக்கும் உன்னப் பிடிச்சுது. இன்னிக்கும் பிடிக்குது...”
அந்தக் கண்கள் வழியே அவள் மனதைப் படிக்க முயன்று தோற்றேன்.
“அதுக்கில்லக்கா... காலைல மேட்ச் இருக்குன்னு சொன்னேனே...”
“சரி வா, சேர்ந்து ஒரு போட்டோவாச்சும் எடுத்துப்போம்...”
என் முகத்தோடு முகம் வைத்து ஒரு செல்ஃபி எடுத்தாள்.
“வித் யுவர் பர்மிஷன்...” என்று என் கன்னத்தில் தன் இதழ்களைப் பூப்போல ஒற்றியெடுத்தாள். “மும்பைக்கு எப்ப வந்தாலும், வந்து பாரு...” என்று தன் செல் நம்பரைக் கொடுத்தாள்.
லிஃப்ட் வரை வந்து வழியனுப்பினாள்.
ஹோட்டலை விட்டு வெளியில் வந்தபோது, நிலவு மேலே ஏறியிருந்தது. அந்த சினிமா விழாவின் அரங்க அலங்காரங்களை ஆட்கள் கலைத்துக்கொண்டிருந்தார்கள்.