பிரீமியம் ஸ்டோரி

வேலூரில் பிறந்து சென்னையிலும் லண்டனிலும் கல்வி பயின்ற மால்கம் ஆதிசேசய்யா, 22 ஆண்டுகளுக்கு மேல் யுனெஸ்கோவில் பணியாற்றியும் அதன் துணை இயக்குநர் நாயகமாக விளங்கியும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.

கல்வியாளராகவும், பொருளாதார வல்லுநராகவும் மட்டுமே அதிகம் அறியப்பட்டிருக்கும் மால்கம் ஆதிசேசய்யா ஒரு பன்முக ஆளுமையாளர். இரண்டாம் உலகப் போரின் பின்விளைவுகளை உலகம் எதிர்கொண்டிருந்த காலகட்டத்தில், தமது செயல்திட்டங்களால் 23 ஆண்டுகள் யுனெஸ்கோ மூலம் வளரும் நாடுகளின் கல்வி, அறிவியல், பொருளாதார நிலைமைகளை மீள்கட்டமைப்பு செய்தார் ஆதிசேசய்யா. இந்தியாவின் திறனை வளர்ப்பதற்கான அயராத முயற்சிகளையும் செய்தார்.

1970களின் பிற்பகுதியில் இந்தியப் பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் 1980களில் வேகம் எடுத்தது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா திரும்பியிருந்த ஆதிசேசய்யா, இந்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை வெளியிடும் ‘யோஜனா’ மாதமிருமுறை ஆங்கில இதழில், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்து கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘யோஜனா’வின் தமிழ் வடிவமான ‘திட்டம்’ இதழில் வெளியிடப்பட்டன.

ஆறாம், ஏழாம், எட்டாம் ஐந்தாண்டுத் திட்ட (1980-1994) காலங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் விவசாயம், வெளிநாடு முதலீட்டுக் கொள்கைகள், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி, அரசு சாரா நிறுவனங்கள், மதச்சார்பின்மை, மக்கள்தொகை ஆகியவை குறித்த ஆதிசேசய்யாவின் ஆழமான, அழுத்தமான புரிதலை நமக்குப் புலப்படுத்துகின்றன.

படிப்பறை

இந்தியாவின் இன்றைய சமூக, அரசியல், பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ள, 1980களிலும் 1990களிலும் எடுத்த சிக்கலான, அதே நேரம் தவிர்க்க முடியாத நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வது அவசியம். அதற்கு இன்றியமையாத வாசிப்பாக ஆதிசேசய்யாவின் இந்தக் கட்டுரைகள் விளங்குகின்றன.

ஆதிசேசய்யா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டில், அவருடைய எழுத்துகள் தொகுக்கப்பட்டு நூலாக வந்திருப்பது தமிழ் சமூக அறிவியல் ஆய்வுக்கு முக்கியப் பங்களிப்பாகும்.

இந்தியப் பொருளாதாரம் - வரலாறு காட்டும் வழிகள்

- மால்கம் ஆதிசேசய்யா

வெளியீடு:
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
79, இரண்டாம் பிரதான சாலை, காந்தி நகர்,
அடையாறு, சென்னை 600020

பக்கங்கள்: 251

விலை: ரூ.250

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு