Published:Updated:

`தாய்மடி கனவில் அழைக்க..!' - புலம்பெயர் தொழிலாளர்கள் துயர்சொல்லும் கவிதைகள்

புலம்பெயர் தொழிலாளர்கள்
News
புலம்பெயர் தொழிலாளர்கள் ( தே.அசோக் குமார் )

புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு பற்றித் தமிழ்க் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இங்கே...

உலக வரைபடத்திலுள்ள பல்வேறு நாடுகளுக்கு 2020 மறக்க முடியாத கொடுங்காலமாகிப் போனது. பெரும் அரசுகளின் செயல்திட்டங்கள் யாவும் செயலற்று நிற்கின்றன. கொரோனா இந்த நூற்றாண்டின் அனைத்து நவீனங்களுக்கும் மாபெரும் சவாலாகி நின்றது.

உலக மக்களின் வாழ்க்கையைச் சிலகாலம் பின்நோக்கி இழுத்துச்சென்றிருக்கிறது கொரோனா. நோய்த் தொற்றின்  தீவிரம் பல மக்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படையச் செய்துள்ளது. மக்கள்தம் வாழ்க்கைக் கட்டமைப்பை உருக்குலைத்துள்ளது.  உலகெங்கும் வாழும் எளிய மக்கள், உழைக்கும் மக்கள் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகிப் போனது. வறியவர்கள் பலர் கொரோனா ஊரடங்கில் தங்கள் இருப்பைத் தொலைத்துள்ளனர். வாகனங்கள் விரையாத நெடுஞ்சாலைகளெங்கும் பாதம் வெடிக்க நடந்து செல்கின்றனர். குடிநீரின்றி, உணவின்றித் தம் குழந்தைகளை சுமந்து செல்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
தே.அசோக் குமார்

புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாக  தம் சொந்த ஊர் திரும்பும் மக்களின் முகங்கள் நிகழ்காலத்தின் துயர சாட்சியம். உலகில் நடந்துள்ள அத்தனை துயரத்தையும், இன்னல்களையும் கலை இலக்கியப் படைப்புகளாக எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் மேலும் பல்துறைக் கலைஞர்களும் பதிவு செய்திருக்கின்றனர். அவை காலத்தின் பக்கங்களில் துயரத்தின் சுவடுகளாய் நிற்கின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு பற்றித் தமிழ்க் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இதோ:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எஸ்.வி.வேணுகோபாலன்

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
தே.அசோக் குமார்

குழந்தையை இழுத்துப் போகிறவர்கள்!

இழுபட்டுப் போகிறவள்

இழுத்துக்கொண்டும் போகிறாள்!

உறங்குபவனையும் சேர்த்து இழுக்கிறது

உலகம் ஒவ்வொரு திசையாய்

புலம் பெயர்தல் அல்ல

புலன்கள் எல்லாம் பெயர்ந்து விழ

ஒரு சமூகமே போய்க்கொண்டிருக்கிறது !

கடுதாசிகள் அற்ற காலத்தில்

கடந்து செல்ல வாகனங்களே அற்ற காலத்தில்

ஊர் விட்டு ஊர் போய்க்கொண்டிருக்கும்

யாத்திரிகர்கள் போல

ராத்திரி பகலாய்

எறும்புக் கூட்டம் போல

திரும்பிப் பார்க்காத நடையில்

ஓர் இனமே போய்க் கொண்டிருக்கிறது !

வேலைக்காக அலைந்தபோதும்

வெறுங்கால்களில் வெயிலை ருசித்தபோதும்

வயிற்றுச் சுமையோடு வாழ்வைச் சுமந்து உழைத்த போதும்

வலிக்காத கால்கள்

வலித்துவிடுமா இப்போது மட்டும் என்று

ஒரு படையே வழிநடந்து கொண்டிருக்கிறது !

பத்துக்குப் பத்து தங்குமிடம்

கொஞ்சம்போல மறைவு 

ஒரே வேளை கண்ணியமான உணவு

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரு கட்டு பீடியோ, சுருட்டோ

வாரத்திற்கு ஒரு முறை

ஊருக்குப் பேச  ரீ-சார்ஜ்

இதற்கும் கதியற்றுப் போகத்தானே

இத்தனை நாள் மறந்த ஊரின்

தாய்மடி கனவில் அழைக்க

மறுபேச்சு பேசாத

துயரத்தின் கனமும் சுமந்து

ஓட்டமும் நடையாய்

உறவுகளை நோக்கிக் 

குடும்பம் குடும்பமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது !

எந்த மொழியானாலும்

தேடித் தேடிக்

கற்றுப் பிழைத்தவர்களுக்குப்

புரியாத மொழியில்

ஆட்சியாளர்கள் குழப்பிய குழப்பத்தில்

வாழ்நாள் சாபம் போன்ற

நடையை நடக்கிறது ஒரு மனிதத் திரள் !

பெற்ற மகவைப்

பள்ளிக்கூடத்திற்கோ

விளையாட்டுத் திடலுக்கோ

மருத்துவமனைக்கோ

அழைத்துச் செல்ல வேண்டிய கால்கள்

இழுத்து நடந்து கொண்டிருக்கின்றன

எப்போது முடியும் என்ற பொழுதளக்காமல் 

எல்லையற்ற பெருவெளியில்.....

நல்ல வேளை,

எல்லாக் கடவுள்களும்

கண் பொத்திக்கொண்டு

கதவு சார்த்திக் கொண்டுவிட்டன

தத்தமது ஆலயங்களுள் !

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவிஞர் முத்துராசா குமார்

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
தே.அசோக் குமார்

வரைபடம்:

சாக்பீஸ்கள்

பெரியவர்களின் காலெலும்புகள்

சிலேட் குச்சிகள்

பிஞ்சுகளின் காலெலும்புகள்.

எட்டுவைத்து எட்டுவைத்துச் செல்வதால்

நாட்டின் வரைபடமெங்கும்

வெள்ளைக்கோடுகள்.

பிறழ்வில் கிறுக்கப்படும்

சாபசினத்தின் வரிவடிவங்களவை.

குட்டிகளை வாயில் கவ்வியேந்தும்

விலங்குகள் வராததால்

பறவைகளின் நகக்கால்களை வேண்டி

கரையும் கால்கள்

சூரியனையும் நிலவையும்

லட்சியமாக்கிக் கொண்டன.

யாத்திரையில் உடைந்துவிழும்

சிலேட் குச்சிகள்

வரைபடத்தினுள் நடப்பட்டு

தூரில் நீருற்றப்படுகின்றன.

தாவரங்களைப் போல மனிதர்களுக்கும் றெக்கையிலைகள் அரும்பட்டுமென

நீருறிஞ்சும் பிஞ்செலும்புகள்

வாக்குவிட்டு வழியனுப்புகின்றன.

கவிஞர் ஸ்டாலின் சரவணன்

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
தே.அசோக் குமார்

அற்புத விளக்கில் பற்றி எரியும் ஏதிலிகளின் பாதங்கள்

அகன்ற வானத்தைப் பார்த்தவாறே நடக்கின்றனர்

சூரியனும் இன்ன பிற நட்சத்திரங்களும் வழிகாட்டிகள்.

இன்னும் எவ்வளவு நேரமாகும்!?

துணைவியின் வார்த்தைகள் தெம்பு இழக்கின்றன.

வழித்தெறியும் அவளின் வியர்வைக்கு

தார்ச்சாலைகள் நாக்குகளை நீட்டுகின்றன .

அதோ ! அந்தக் கடைசி நட்சத்திரம் சிமிட்டும் இடம் நம் ஊர்.

அதுவரை நம் கால்கள் இயங்குமா

இயந்திரங்களுக்குக் கூட பதிலி கால்கள் உண்டே!?

நாம் மனிதர்கள் என்று நம்பப்படுகிறவர்கள் அன்பே

சூரியன் மறையும் பள்ளத்துக்கருகில் நம் வீடு.

அப்பா...! நம் கோழி நமக்காக அங்கே காத்திருக்கும்தானே!?

குழந்தைகளின் கேள்விகள் கடினமானவை

இப்போதைக்கு இந்த உறுதி மிக்க வேர்கள் ஓடும் மரத்தின் கீழ்

தலை சாய்ப்போம்

நம் கனவில்

கடலுக்கு அடியில் பாலம் அமைத்த அரசு

ஊருக்குச் செல்ல ஒரு மாயக் கம்பளம் தரும்.

நம் பிள்ளைகள் சூரியக் கதிர்களை தொங்கியபடி வீடு வந்து சேர்வர்.

காய்ந்து போன நம் இரைப்பைகளின் கேவலை கொஞ்சம் நிறுத்தலாம்

பாதங்களின் வெடிப்புகளுக்குக் கிழவி மயிலிறகால் மருந்திடுவாள்.

பிறகொரு நாள் 

அவர்கள் முதுகுகளைச் சுமந்துகொண்டு 

வீட்டு வாசலுக்கு வருவர்

நாம் ஊர் சேர்ந்த கதை கேட்க.

அதற்குள் நாம் நம் வீட்டுக் கூட்டுமாறுகளை பலப்படுத்தி 

வைத்துக் கொள்வோம்!

நடைவழிச் சித்திரங்கள்

நகரத்திலிருந்து வீட்டுக்கு நடந்தே செல்கின்றனர்.

விசாரணைகள், தடுப்புகள், திருப்பி அனுப்பல்கள்.

தேகபலத்தோடு வருபவனை

ஆரத்தழுவும் நகரத்திற்கு முட்கரங்கள்.

வெளியேறும் நாளில்

அவன் சுமந்து செல்வது

இத்துப்போன உடலையும்

குழந்தைகளுக்கான சொப்புப் பொருட்களுமே.

சிறுபிள்ளைகள் பாதம் வெடிக்கக் கதறி நொண்டுகிறார்கள்

இதை ஏன் நீங்கள் நடைபயிற்சி என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!?

பின்னாளில் அந்தக் குழந்தை ஓட்டப்பந்தயத்தில் நம் தேசத்திற்காக

ஒலிம்பிக்கில் தங்கம் கூட வெல்லலாம்.

வழியெங்கும் பசியின் ஓலம்

ஆகா! எத்தனை பேருக்கு நாட்டுக்காக இவ்வாறு தியாகம் செய்ய வாய்ப்புக் கிட்டும்!?

தொழிலாளர்கள் வேலையின்றிக் காய்கின்றனர்

எத்தனை நாட்கள் உழைத்த கரங்கள்

கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே!?

அரசாங்கத்தின் புலன்உறுப்புகள் 

இப்படித்தான்

விநோதமானவை

காது மலையிலும்

வாய் சமவெளியிலும் 

அமையப் பெற்றவை.

ஆனாலும் காதின் சவ்வுகள் மென்மையானவை

ஒரு அறைக்குத் தாங்காது.

மெளனன் யாத்ரிகா

பின் தொடரும் துயரங்கள்

நகரங்களில் கண்ணிவெடிகள் புதைத்துவிட்டார்களா அப்பா?

வெளியே சென்றால் நாம்

வெடித்துச் சிதறிவிடுவோமா அப்பா?

பயம் வேண்டாம் மகளே!

நாம்தான் வீட்டிலேயே இருக்கின்றோமே

உனது சின்ன வயிற்றுக்கு 

ரொட்டிகள் சுட்டுத்தர 

அப்பா கொஞ்சம் மாவு வைத்திருக்கிறேன்.

நம்மை நாமே ஊரைவிட்டு

துரத்திக்கொள்ளப் போகிறோமா அப்பா?

சந்தேகப்படாதே மகளே !

அப்பாவின் கால்களுக்கு 

தொழிற்சாலைக்குச் செல்லும் பாதைகள் மட்டும்தான் தெரியும்

இல்லை அப்பா 

நீங்கள் என்னிடம் மறைக்கிறீர்கள் 

நகரத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு விட்டன

நம் மாவு டப்பாவில் ஒன்றிரண்டு

புழுக்கள் மட்டுமே இருக்கின்றன

தொழிற்சாலைகளின் சங்குகள் ஊமையாகி

ஐம்பது நாட்களுக்கும் மேலாகிவிட்டன

துயரத்தைக் கற்பனை செய்யாதே மகளே!

எதுவும் கற்பனையில்லை அப்பா

எல்லாம் எனக்குத் தெரிந்துவிட்டது 

நமது சிறிய வீட்டை 

மூன்று மூட்டைகளாக மாற்றி விட்டீர்கள்

மற்றும் 

குப்பைகளில் கிடக்கும் 

பிய்ந்த செருப்புகளை எடுத்து வந்து 

நீங்களே தைக்கிறீர்கள் 

மேலும்

அம்மாவின் வயிற்றில் அசையும் தம்பிக்கு

மாத்திரைகள் கொடுக்கிறீர்கள்

தவிர

ரொட்டிகள் கேட்டு கையேந்துகிறீர்கள் 

அதுமட்டுமல்ல

மின் கம்பிகளில் அடிபட்டு 

இறந்துபோன காக்கையை 

புதைத்து மூடிவிட்டு கதறி அழுதீர்கள்...

அஞ்சாதே மகளே !

நமக்கு சொந்த கிராமம் ஒன்று உள்ளது

ஆறுகள் இறந்தாலும் காடுகள் அழிந்தாலும்

அது நமது சொந்த கிராமம் மகளே 

அங்கு போனால் 

நாம் பிழைத்துக் கொள்வோமா அப்பா?

போனால்தான் தெரியும் மகளே!