பொல்லாத காகம்
முதல் நாள்
என் இறந்துபோன அப்பாவின்
நெஞ்செலும்பை இழுத்துவந்தது
நெய்ச்சோறு படையலிட்டேன்
அடுத்த நாள்
என் முதல் காதலனின்
பதின்பருவத்துக் கண்களைக் கொத்திவந்தது
பழங்கள் நறுக்கிக் கொடுத்தேன்
மற்றொரு நாள்
என் முன்னாள் கணவனின்
விரைக்காத உறுப்பைப் பொறுக்கிவந்தது
இதமான சூட்டில் பால் அன்னம் வைத்தேன்
கள்ளமாய் நேசித்தவனின் முகம் கிடைக்குமா என்றேன்
அன்று மாலையே உருட்டிக் கொண்டுவந்தது
தானியப் பந்தைப் பிசைந்து ஊட்டினேன்
ஒரு சாமத்தில் எழுப்பி
குருதி சொட்டும் மூட்டையை எறிந்தது
என் கருவில் தங்கமறுத்த சிசுவின் உடல்
திரும்பிப் பார்ப்பதற்குள் பறந்துவிட்டது
இன்று
முற்றத்தில் நின்று வெகுநேரம் கரைந்தது
வீட்டிற்குள் அழைத்தேன்
தாவி என் தலையில் அமர்ந்தது
தருவதற்கு ஏதுமில்லை
இருவரிடமும்
தன் பெயர் துருக்கி ராஜா என்றது
என்னை திரௌபதி என அழைத்தது.

ஒரு இலை விடாமல் பூத்து
என்னை சரக்கொன்றையாய் ஆக்கியவன்
நாளங்கள் எங்கும்
மஞ்சள் நதியெனப்
பெய்துகொண்டிருக்கிறான்
அதன் நுரைத்த கரைகளில்
பதுமைகளென சமைந்திருந்த
ஏக்கங்களின் ஊற்றுக் கண்கள்
ஒவ்வொன்றாய்த் திறக்க
வாசலற்ற கோயிலென உடலின்
மணிகள் விடாமல் அடிக்கத் தொடங்கின.
அவனது அம்மணத்திற்கு
பூனையின் கண்கள்
அவனைத் தழுவுவதைத் தவிர
எனக்கு வேறு வெகுமதி இல்லை என்பதுபோல்
நித்தமும் உறுத்துப் பார்க்கிறது.
வெய்யிலும்
மழையும்
பனியும்
இடியும்
மேகாத்துமாய்
என்னைத் திரட்டிப்போடும்
அணைப்புக்காக
குற்றம் புரிவேன்
எந்த வெட்கமும் இன்றி
ஒரு வழிபாட்டைப் போல
ஆரவாரமாய்
மேலும் மேலும்.
