புகலிடம்!
பார்க்கில் காந்தி சிலைக்கு
அருகில் இருக்கும் பெஞ்ச்தான்
நடை தளர்ந்த எங்களுக்கு
பிடித்தமான புகலிடம்...
சனிக்கிழமைகளில்
அஸ்தமன வேளைக்கு முன்பாக
இங்கே கூடி
ஆன்மிகம் தவிர்த்து,
கொஞ்சம் அரசியல், சிறிதே இலக்கியம்,
மீதம் மருமகள் கொடுமை,
அடிமை வாழ்வு,
கண்டுகொள்ளாத மகன், மூட்டுவலி,
டயாபட்டீஸ், ஆவாரம்பூ கஷாயம்
ரத்தம் சுண்டாத காலத்தில்
எங்களின் வீரதீர பிரதாபங்கள்,
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்,
இத்யாதி... இத்யாதி...
முன்னர் பேசியவற்றையே மீண்டும் பேசி
அலுப்பின்றி அதையே மறுபடியும் கேட்டு
வாய் விட்டு சிரித்து…
எல்லாம் முடிந்து
சுமை நீங்கிய சுகத்துடன்
இல்லம் நோக்கித் திரும்புவோம்
உண்டு முடித்து, புரண்டு படுத்து
உறக்கம் தொலைக்க...
அடுத்த வாரம்
மறுபடியும் அதே இடம்,
அதே நேரம், அதே அரட்டை...
ஆனால் என்ன,
குறைந்திருக்கக்கூடும்
எங்களின் எண்ணிக்கையில்
ஒன்றிரண்டு!
- கே.ஜானகி, பெங்களூரு-102

இனி பேசட்டும்...
உன்னிடம் எவ்வளவோ
பேச நினைத்தேன்
பின் பேசவாவது வேண்டும்
என நினைத்தேன்
பின் அதையாவது பேசலாம்
என நினைத்தேன்
இப்பொழுதெல்லாம்
உன்னையோ உன் தெருவையோ
கடந்து செல்லும்போதெல்லாம்
இனி பேசி என்னாகப் போகிறது
என்று நினைக்கிறேன்
இனிமேல் அங்கே யாராவது
யாரிடமாவது பேசட்டும்
நான் பேசாமல் விட்ட
வார்த்தைகளை!
- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி