பிரீமியம் ஸ்டோரி

ஒருமுறை தூக்கம் வரவில்லையெனப் புலம்பியதற்கு

பல்லாண்டுகள் தனித்துவிடப்பட்டவள்

அன்று வெளியே நின்றாடும் வேப்பமரம்

நிலைக்கதவின் இண்டு வழியே நிழல்களைப் பரப்ப

திடுமென எழுந்து அதைக் கட்டிக்கொண்டு அழுகிறாள்

யாரிடமும் சொல்லத்தகுந்ததல்ல அவள் வாழ்வு

ஜன்னல் கம்பிகளுக்கிடையே பறவைகள்

விட்டுச்செல்லும் தானியங்களை உண்டு வாழ்கிறாள்

கூதிர் இரவின் வெம்மை தேடியும்

கோடை மதியத்தில் குளிர்மை தேடியும்

இறைஞ்சும் உடல் அவளுடையது

இப்போது அதே இண்டு வழியே சூரியன் உள் நுழைந்து

தனது சிறிய பளிச்சென்ற கண்களால் அவளை உற்றுநோக்க

``உன் வெப்பம் தணிக்க சிறு குளிர்ச்சிகூட இல்லை

எப்போதும் எனக்கென எதுவுமே இருந்ததில்லை” என்கிறாள்

சூரியன் புன்னகைக்கிறது

அதைப்பார்த்ததும்

அதுவரை மயங்கிக்கிடந்தவளின் நாக்கு

மெல்ல நீண்டு ஒளியை அருந்தியது

சூரியனைத் தலைமாட்டில் வைத்துத் தூங்கினாள்

சிறிது நேரத்தில் கால்மாட்டுக்கு இறங்கி

அவள் அசந்ததொரு தருணத்தில்

இண்டு - கவிதை

முற்றாக வெளியேறியது சூரியன்

அப்போதுதான் அவளுக்கு

கதவுகளைத் திறக்க வேண்டுமென்கிற ஞானம் பிறந்தது

திறந்த கதவுகளுக்கு வெளியே

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அவளிடம்

``இவ்வளவு நேரம் கதவுகளை மூடி

என்ன செய்துகொண்டிருந்தாய் அம்மா” என்கிறான்

அவன் மேல் நெய் வாசனை அடித்தது

பருப்பு சாதத்தை மசியப்பிசைந்து

அவள்தான் அவனுக்குச் சாப்பிடக்கொடுத்திருந்தாள்

ஒரு மதியத் தூக்கம் அவளைப் பல்லாண்டுக்கால

தூக்கப் பிரமைக்குள் தள்ளியிருந்தது

ஆசிரியரிடம் அனுமதி வாங்கி

சிறுநீர் கழிக்கச் சென்றுவந்த சிறுமி

மீண்டும் கவனமாகப் பாடத்தைக் கவனிப்பதுபோல

மகனைத் தூக்கி இடுப்பில் வைத்தாள்

அவன் திரும்பிவந்த தனது அம்மாவுக்கு

ஒரு நெய் முத்தம் கொடுத்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு