Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதைகள்

மயிரிழைக் கால்கள் கொண்டு மலையை அளந்து விடுகிறது எறும்பு

சிறப்புப் பரிசு - தவா

பட்டங்கள்

காதலித்தவனை கைப்பிடித்தேன்
ஓடுகாலி என்றார்கள்.
வரதட்சணை கொண்டு வரல
வக்கத்தவள் என்றார்கள்.
வருடங்கள் ஆனது குழந்தை இல்லை
மலடி என்றார்கள்.
வீட்டை விட்டு துரத்தப்பட்டேன்
வாழாவெட்டி என்றார்கள்.
நோயால் இறந்தான் கணவன்
விதவை என்றார்கள்.

- இந்துமதி, தாத்தையங்கார்பேட்டை

****

கவிதைகள்

பரிசு: ரூ.300

ருசி

ஆள்
ஆளுக்கு
அவர்களுக்குப்
பிடித்த
உணவை
சமைக்கச்
சொன்னார்கள்...
யாருமே
கேட்கவில்லை
அவளுக்கு
என்ன
பிடிக்குமென்று!

- ச.சாந்தி, மேட்டுமகாதானபுரம், கரூர்

****
ரூ.300

பேரறிவுயிர்

மயிரிழைக் கால்கள் கொண்டு மலையை
அளந்து விடுகிறது எறும்பு
குட்டிச் சிறகுகள் கொண்டு
பல்லாயிரம் மைல்கள் பயணிக்கிறது தேனீ
பூவளவு எடையுடன்
வானத்தைச் சுமக்கிறது சிட்டுக்குருவி
விரலளவே நீளம் எனினும்
கடலைக் கடைகிறது மீன்
மெல்லிய வேர்கள் கொண்டு
தரையைப் பிளக்கிறது தாவரம்
தான் என்ற எண்ணத்தில்
தன்னைப் பேரறிவுயிர் என்று
எண்ணிக்கொள்கிறான் மனிதன்.

- கி.சரஸ்வதி, ஈரோடு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com