அன்பின் ருசி
மஞ்சப்பை சுமந்து வரும்
மளிகைப் பொட்டலங்களில்
கொசுறாகக் கிடைத்தன
கவிதைகளும் கதைகளும்
சீசாவில் நல்லெண்ணெய்
வாங்கி வந்து வைத்த
நாட்டுக் கோழிக் குழம்புதான்
எட்டூருக்கு மணத்துக் கிடந்தது
அண்ணாச்சி கடையில் அன்பாக
அள்ளிக் கொள்ளவென
பொரி மூட்டைகள் சிரித்தபடிக் காத்திருக்கும்
அம்மாச்சியெங்க காணோம் என்றவாறு
பால்கார பரமு மாமா சீம்பால் கொண்டு வந்து
கொடுத்து விட்டுச் சிரித்தபடி சைக்கிள் ஏறுவார்
இரண்டு கொத்துக் கறிவேப்பிலையேனும்
சும்மா தராமல் போகமாட்டாள்
பொன்னம்மா பாட்டி
அப்போதெல்லாம் வாங்கி வந்த
பொருள்களின் சுவையில் கலந்திருந்தது
பணத்தின் ருசி மட்டுமல்ல.
- கி.சரஸ்வதி, ஈரோடு.
*****
இடம்பெயர்தல்
விடுமுறை நாள்களில்
விளையாடும் குழந்தைகளுக்கு
பேருந்தாய் மாறும்
எங்கள் வீட்டுக் கதவு
கிரீச் கிரீச் என்ற சத்தத்தோடு
மெள்ள நகரும் அப்பேருந்தில்
தாழ்ப்பாளை கியராகப் போட்டு
ஓட்டுவான் மணிகண்டன்
தினசரி காலண்டரின் தாள்களை
பயணச் சீட்டாக்கித் தருவான்
பக்கத்து வீட்டு கோபு
பயணிகளாகத் தொற்றிக்கொள்வார்கள்
மற்றவர்கள்
பூர்வீக வீடு கைமாறி
நகரத்துக் குடியிருப்பில் இப்போது
தினமும் அலுவலகம் சென்று
திரும்பும் வேளைகளில்
ஆளுயர இரும்பு கேட்டை சீருடைக் காவலாளி
திறந்து மூடும்போதெல்லாம்
எழுந்து அடங்குகின்ற
கிரீச் சத்தத்தில்
கண்முன்னே வந்து செல்கிறது அந்தக்
கதவுப் பேருந்து.
- வெ.சிவலெட்சுமி, ஆலங்குடி.
கவிதை படைப்பவரா நீங்கள்..?
உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com