Published:Updated:

பொன்வண்டு காலம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- ம.காமுத்துரை

பொன்வண்டு காலம் - சிறுகதை

- ம.காமுத்துரை

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
பொன்வண்டு காலம் - சிறுகதை

‘`வணக்கம் அய்யா!’’

ராசு வாத்தியார் வோப்புக்குள் வந்துவிட்டார்.

கோரசான வணக்கத்தில் தண்டபாணியும் சேர்ந்துகொண்டான். பயலுகள் பூராப்பேருக்கும் தொண்டக் குழிக்குள் இருங்கச் சோளக் களி, உருண்டையாகப் போய் அடைத்துக் கொண்டதுபோல கண்ணுமுழி பிதுங்கியது. வோப்பே கப்சிப் கபர்தார் என அமைதியானது.

லீடர் டஸ்டர் எடுத்து பரபரவென போர்டை அழித்துக் கறுப்பாக்கினான். டஸ்டரில் திரண்ட சாக்பீஸ் தூளை சன்னல் வழியே வெளியில் தட்டிவிட்டு, வாத்தியாரது மேசையின் இழுப்பறையில் டஸ்டரை வைத்தான், கைகளில் படர்ந்திருந்த துகள்களை வாயால் ஊதியும் கைகளால் தட்டியும் சுத்தம் செய்துகொண்டவன் வாத்தியார் வோப்புக்குள் நுழைகையில் முதல் சல்யூட்டும் வைத்தான்.

‘`உக்காருங்க.’’

எல்லோரும் உட்காரும் நேரத்தில் மாணவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு மூடிவைத்தார். மூடிய ரிஜிஸ்தர்மீது சாக்பீசையும், பிரம்பையும் எடுத்து வைத்தார். இரண்டும் அருகருகே ஒட்டிக்கொண்டு நின்றன. எல்லோரையும் ஒரு சுற்று நோட்டம் விட்டுவிட்டு ஆப்சென்ட்டைக் கேட்டார்.

``ரெண்டுபேர் சார்’’ - லீடர் சொன்னான்.

பிரம்பைக் கையிலெடுத்து வளைத்து நிமிர்த்திப் பார்த்தார்.

இன்னைக்குக் காலையில் பிரேயருக்கு ராசு வாத்தியார் வரவில்லை, ‘வாத்தியார் லீவூ’ என சந்தோசமாய் இருந்தது. மூணாம் பீரியட்தான் இந்த வோப்புக்கு வருவார். ஒருவேளை ரீசஸ் டயத்தில் ஸ்கூலுக்கு வந்திருப்பாரோ?

தண்டபாணிக்கு வயிறு கலங்கியது.

டெஸ்க்குக்குள் கைவிட்டுப் பார்த்தான். புத்தகப் பையை ஒட்டி மூலையோடு மூலையாய் ஒட்டிக்கொண்டு ‘அந்த’ தீப்பெட்டி டப்பா இருந்தது. அதைத் தொட்டபோது உள்ளுக்குள் விர்ரென பொன்வண்டின் சிறகடிப்பு தண்டபாணியின் கைகளில் பதிந்தது. மூடியை அழுத்தமாய் இறுக்கினான். எடுத்து பைக்குள் திணித்தான்.

‘‘பொம்மண்டு, வெளீல வந்துருமாடா?” தண்டபாணியை அடுத்து அமர்ந்திருந்த ரவி அவன் காதருகே வந்து கிசுகிசுத்தான். அவனது கைகளும் டெஸ்க்கின் அடிப்புறம் இருந்தது.

ரீசஸ் பிரியடில் இருவரும் ஒரு ஏவாரம் நடத்தி முடித்திருந்தனர்.

ராசு வாத்தியார் பிரேயருக்கு வராதபடியால் லெசர் பீரியடாக இருக்கும். லீடர் மட்டும் வகுப்பைக் காபந்து செய்துகொண்டு இருப்பான். எழுதாத - ஒப்பிக்காத பாடங்களை அமைதியாக சத்தம் இல்லாமல் செய்யச் சொல்லி ஹெட்மாஸ்டர் அறையிலிருந்து பியூன் குருசாமித் தாத்தா பொக்கை வாயைச் சுவைத்தபடி வந்து சொல்லிவிட்டுப் போவார் என்று வோப்பு பயலுகள் பூராவும் நினைத்திருந்தனர். தண்டபாணியும் அந்த எண்ணத்தில் ரீசஸ் பீரியடில் ஓட்டமாய் ஓடி வீட்டில் இருந்த பொன்வண்டுகளை எடுத்து வந்திருந்தான். பள்ளிக்கூடம் அவனது வீட்டுக்கு ஒரு தெருதான் தூரம். பள்ளிக்கூடத்தின் மணிச்சத்தம் வீட்டுக்குத் துல்லியமாய்க் கேட்கும்.

பொன்வண்டு காலம் - சிறுகதை

அவன் அப்பா, மருதமலை மலைக்கு விறகுக்குப் போகும்போதெல்லாம் எப்படியும் நாலைந்து பொன்வண்டுகளைப் பிடித்து சோறு கொண்டு வரும் தூக்குச்சட்டிக்குள் போட்டுக்கொண்டு வருவார். அம்மா அரப்புத்தூள் கொடுக்கும், அவற்றை முதலில் பெரிய மூக்குப்பொடி டப்பாவில்தான் அடைத்தான். அது உயரமாக இருந்தாலும் ஒடுக்கமாக இருந்தது. சந்தையில் போய் பெருங்காயக் கடையில் அம்பது காசு கொடுத்து பெரிய டப்பாவாக வாங்கினான். அரப்புத்தூள் போட்டாலும் கால்கள் புதைய வண்டுகள் ஊர்ந்து போக வசதியாய் இருந்தது. கருவேலமரத்தின் இலைகளை உருவிக்கொண்டு வந்து தண்டபாணி, அவற்றுக்கு உணவாக ஊட்டிவிடுவான். கிளிப்பு போலிருக்கும் அதன் உதடுகள் இலையைக் கொடுத்ததும் கஜக் கஜக் என வெட்டியெடுக்கும். அதே சமயம், அதன் கழுத்தில் கைபடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும். கழுத்தைப் பின்புறம் சாய்த்து சதையை நெரித்துவிடும். உடனடியாய் விரலை எடுத்துவிட முடியாது. வலிக்கவும் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் யாராவது காசுக்குக் கேட்டால் அவனும் தங்கச்சியும் பொன்வண்டுகளைத் தீப்பெட்டிக்குள் அடைத்துக் கொண்டு வருவார்கள். விலைக்கு விற்றதும் வண்டுகளின் பின்னங்கால்களை ஒடித்து விடுவான். இல்லாவிட்டால் விர்ரெனப் பறந்துவிடும். ரவிக்குக் கொடுத்த பொன்வண்டின் கால்களை இன்னமும் ஒடிக்கவில்லை. மணி சார் பீரியடில் ஒடித்துத் தருவதாகச் சொல்லியிருந்தான். கையால் ஒடித்தால் சமயத்தில் முழுக்காலும் ஒடிந்து நகர முடியாமல் ஆகிவிடுகிறது, அதனால் துண்டு பிளேடு ஒன்றை எடுத்து வந்திருந்தான். அதை வைத்து நறுக்கினால் சமமாய் இருக்கும். அதற்குள் வாத்தியார் வந்துவிட்டார். டி.ஜி. டி.குருசாமி சாராக இருந்தாலும் உட்கார்ந்த சேரை விட்டு எழுந்திருக்க மாட்டார். ராசு வாத்தியார் வகுப்பையே வட்டமடிப்பார். சடாரெனக் கைவிட்டு டெஸ்குக்குள்ளும் சோதிப்பார்.

திம்பண்டம், விளையாட்டுச் சாமான், களவுப் பொருள் என்ன இருந்தாலும் குடுமிப்பிடியாய்ப் பிடித்துவிடுவார். படிக்கிறவனுக்குப் படிப்பு நேரத்தில் கவனம் பிசகுகிற மாதிரி எந்த ஒரு பொருளும் வகுப்பில் இருக்கக்கூடாது. எதுவானாலும் எடுத்து சன்னல் வழியே தூர எறிந்துவிடுவார்.

போனமாசம், இதேபோல ஒரு பீரியடில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மூர்த்தி சார் வோப்பில் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது மடமடவென வகுப்புக்குள் வந்து ராசு வாத்தியாரை வாங்கு வாங்கென அந்தப் பேச்சு பேசிவிட்டார்.

“நா நெனச்சேன்னா இந்த நிமிசமே ராமநாதபுரம் தண்ணியில்லாக் காட்டுக்குத் தள்ளி விட்ருவே. தராதரம் பாத்து நடந்துக்கங்க. அரசாங்க உத்தியோகஸ்தர்னா அம்புட்டு அதிகாரமா? என் அதிகாரத்தக் காட்டவா?”

தனது அறையிலிருந்து ஓடிவந்த ஹெட்மாஸ்டருக்கு வோப்பு லீடர் விசயத்தைச் சொன்னான். “நேத்திக்கு மூர்த்தி சாரோட மவெ சம்பத்து அவக மாமா மெட்ராசுலேருந்து வாங்கிட்டு வந்த ராக்கெட் பொம்மைய டெஸ்க்குக்கு உள்ளாற வச்சிருந்தான். அதப் பாத்த சாரு, எடுத்து சன்னல் வழி எறிஞ்சிப் புட்டார் சார்.”

“அது என்னா வெல தெரியுமா சார். வெலையக்கூட விடுங்க, ஒரு அன்பளிப்ப இப்பிடி கிரித்திரியம் பிடிச்சாப்பல யாராச்சும் வீதில விட்டெறிவாகளா?”

‘‘அதப் பாக்கற பயலுகளுக்கு அன்னைக்கிப் பூராம் நெனப்பெல்லா ராக்கெட் மேலதான சார் இருக்கும் ! நடத்தற பாடத்தில பதியாதில்ல சார்.” ஹெட்மாஸ்டரிடம் மட்டும் சார், விளக்கமளித்தார்.

ராசு வாத்தியார் நல்ல உயரம். அவர், கொடிக்கம்பத்தில் நின்று கொடியேத்தினால், கம்பத்தின் பாதியில் அவரது தலை இருக்கும். முழுக்கைச் சட்டையை மடித்து முழங்கை வரை விட்டிருப்பார். வெள்ளை வேட்டி சரியாக அவரது பாத விளிம்பினைத் தொட்டுக் கொண்டிருக்கும். நடக்கும்போது மட்டும் கீழ் நுனியினை வலதுகையால் பிடித்துக்கொள்வார். சட்டைப் பைக்குள் மெல்லிசான பால்பாய்ன்ட் பேனாவும் ஐம்பது அல்லது நூறுரூபாய்த் தாள் ஒன்றும் கண்ணாடிபோலத் தெரியும். கறுப்பு முகத்தில் லேசாய் பவுடர் போட்டு வாசனை கமகமக்கும், நறுக்கக் கத்தரித்த கிருதாவும் மீசையும், கூடவே போலீஸ்கார கிராப்பும் ஆளை மிடுக்காய்க் காட்டும். வாயோரம் எப்பவும் ஒரு புன்னகை ஒட்டவைத்ததுபோல சிரித்துக் கொண்டே இருக்கும். மூர்த்தி சார் திட்டிய அன்னைக்கும் அந்தப் புன்னகை அழியவே இல்லை.

தண்டபாணிக்கு, ராசு வாத்தியார் ஏழாம் வகுப்பில் வரலாறு நடத்தினார். ஜாலியாகக் கதை சொல்லியபடியே பாடம் ஓடியது. இந்த வகுப்பில் ஆங்கிலம். தினசரி போயெம் ஒப்பிக்க, எழுதிக்காட்ட, மனப்பாடம் செய்து, குரூப் லீடர்களிடம் ஒப்பிக்க, செம கடுப்பாய் இருந்தது.

எதுக்குத்தே இங்கிலீச பாடமா வச்சாங்களோ! இங்கிலீசே இல்லாத பள்ளியொடத்துல கூடச் சேந்திருக்கலாம். அம்மாவிடம் அஞ்சாம் வோப்பு முடிச்சப்பயே சொல்லி அழுதான். ‘‘நா கரட்டுப் (ஊருக்குக் கிழக்கே கரட்டை ஒட்டி பள்ளிக்கூடம் இருந்தது) பள்ளியொடம் போவல... வாத்தியார்லாம் பெரம்பு வச்சி அடிப்பாங்க.’’

மாங்கா மூஞ்சி சீனிவாசன் சொல்லியிருந்தான். அவனெல்லாம் அஞ்சாப்பு முடித்தபிறகு பள்ளிக்கூடமே போகவில்லை. அவன் அப்பாவோடு, சந்தைகளில் கரும்புக் கட்டு விற்க ஊரூராக ஜாலியாகச் சுத்திக்கொண்டிருக்கிறான். சந்தையில் பார்த்தால் பெரிய மனுசனைப்போல தலையில் உருமால் ஒன்றைச் சுற்றி, “சவளம் பத்து கட்டா எடுத்தா அறுவது” எனக் கத்திக் கொண்டிருப்பான். தண்டபாணியைப் பார்த்தால் சவளத்தில் பாதி வெட்டி ஓசியாகத் தருவான்.

‘‘வாத்திமாருக்கெல்லா மதியாடா பிடிச்சிருக்கு. பள்ளிக்கூடம் வார பிள்ளியலப் பூராம் பெரம்பால சாத்தணும்னு? இப்பிடி பிரிக்கினிப் பயலா இருக்க! ஆறாப்பு போகப் போறவெ, அதும் அய்ஸ்கூலுக்கு... கெம்பிரிக்கமா நடக்கணும்டா படுவா’’ தாத்தா இழுத்து அணைத்து வைத்துப் பேசினார்.

‘‘இல்ல தாத்தா, நேரத்துக்கு ஒரு வாத்தியார் வருவாங்களாம். ஆளுக்கொரு நோட்டு வச்சு எழுதச் சொல்லுவாங்களாம். டெய்லி மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கணுமாம். இல்லாட்டி பெரம்படிதானாம். அதும் ராசு வாத்தியார்னு ஒரு சார் இருக்காராம். அவரு காதப் பிடிச்சு நிமிண்டி கையில குடுத்துருவாராம். எனக்கு பள்ளியொடம் வேணாம் தாத்தா. ஒங் கூட காட்டு வேலக்கி வாரேன்.’’

பொன்வண்டு காலம் - சிறுகதை

அப்பாவின் அமட்டு, அம்மாவின் நைச்சியம் எல்லாத்தையும் அமத்திவிட்டு தாத்தாவே நேரில் பள்ளியொடம் வந்து ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டுப் போனார். ஹெட்மாஸ்டர் இவனது பயம் கண்டு வாய்விட்டுச் சிரித்தார்.

‘‘ராசு வாத்தியார் ஏ வகுப்புக்குத்தான் டா வருவார். நீ பி வகுப்புக்குப் போ...’’

பி வகுப்பிற்கு டி.ஜி. சார்தான் வகுப்பு வாத்தியார். ஆங்கிலத்துக்கும் நீதிபோதனை வகுப்புக்கும் வருவார். முதல் பீரியடே அவரோடுதான் தொடங்கும். அவர் அடிக்கவெல்லாம் மாட்டார். பக்கத்தில் கூப்பிட்டுக் காதைப் பிடித்து மாவாட்டுவார்.

‘‘பாடம் எழுதாம எங்க போன? மாடு மேச்சியா, கழுத ஓட்டப் போனியா?’’

‘‘சார் சார் சார் சார் சார் சார்...’’

பதில் சொல்ல முடியாதபடிக்கு அவரது கைப்பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைந்து காது மடலைத் துளைக்கும். அதேநேரத்தில் அவரது கால்பெருவிரல் மாணவனின் கால் பெருவிரலை நசுக்கும். இறுதியாய் தலையில் ஒரு குட்டோடு, ‘‘வெளிய ஒக்காந்து படிச்சு ஒப்பிச்சுட்டுத்தே வகுப்புக்குள்ள வரணும்’’ என்று அனுப்புவார்.

அந்த பீரியட் முடிந்த பின்னும் வெளியிலேயேதான் பலர் இருப்பான்கள். அதைக் கண்டு கொள்ளாமல் அடுத்த பீரியடுக்கு மணியடிச்சதும் காலை ஸ்டெப் போட்டு நடந்து அடுத்த வகுப்புக்குப் போய்விடுவார்.

அந்த வருடமே, அடுத்து போகிற ஏழாம் வகுப்புக்கு டி.ஜி சார் வந்துவிடக்கூடாது என பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் இருக்கும் வெங்கலாமுனி தொட்டு குலசாமி சீலக்காரிவரைக்கும் மனுப்போட்டான். ‘ஆறாம் வகுப்பில் வருகிற வகுப்பு வாத்தியார்தான் ஒம்பதாம் வகுப்புவரை வருவார் டீ’ என லீடர் வைத்தியநாதன் சொல்லியிருந்தான்.

தண்டபாணியை எப்பவுமே சாமிகள் காப்பாத்திவிடும். ஆனால் அவன்தான் அவர்களுக்குச் சொன்னபடி நடக்க மறந்து விடுவான். அதனால் சாமி கும்பிடும்போதெல்லாம் ‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்துக் காத்து, ரட்சிக்க வேண்டும்’ என வேண்டிக்கொள்வான்.

அப்படி இருந்தும் வாத்தியார் விசயத்தில் சாமிகள் அவனுக்குச் சாதகமாய் நடந்து கொண்டன. ஏழாம் வகுப்பு வரும்போது டி.ஜி சாரை ஏ வகுப்புக்கு மாறிவிட்டார்கள். ஸ்கூலுக்குப் புது ஹெட்மாஸ்டர் வந்து நடைமுறையை மாற்றிப் போட்டார். அந்த நாளில்தான், ராசு வாத்தியார் தண்டபாணியின் பி வகுப்புக்கு வந்து சேர்ந்தார்.

அவருக்குக் காலையில் வகுப்பு தொடங்கும் போதே வளைந்து நீளக்கூடிய ஒரு குச்சி மேசைமேல் இருக்க வேண்டும். அதன் பச்சை வாசனை சாருக்கு ரெம்பப் பிடிக்கும். அதன் மேல்தோலைச் சீவிவிட்டு கண்கள் செருக முகர்ந்து பார்த்து லயிப்பார். இதற்காகவே லீடரோடு மனோகரனையும், ரங்கசாமியையும் சேர்த்து குச்சி ஒடிக்க அனுப்புவார். ஒடித்து வரும் குச்சியால் அடிக்க சார் ஒரு புது முறை கண்டுபிடிப்பார். தப்பு செய்தவர்களைத் தனியே நிறுத்திவைத்து அவர்கள் கையில் பிரம்பைக் கொடுத்து ஒருத்தனை ஒருத்தன் அடித்துக் கொள்ளச் சொல்வார். விழுகிற அடியில் எதிராளிக்குத் தழும்பு விழவேண்டும்.

‘‘விழலே?’’

அடுத்த வார்த்தையெல்லாம் கிடையாது. அச்சுப்பதிப்பாய் தழும்பு தடிமனாய் அமைந்து வீங்கிவிடும்.

“வாய வெச்சுக்கிட்டுச் சும்மார்ரா வெண்ணெ. சாருக்குக் கேக்கப் போவுது.” தண்டபாணி தலையைக் குனிந்தவாக்கில் ரவிக்கு பதில் சொன்னான்.

மொத பீரியட்லயே ரவி, பொம்மண்டின் விலை கேட்டான். “நிய்யெல்லா வாங்க மாட்ட!” எடுத்த எடுப்பிலேயே ரவியிடம் முகம் கொடுக்காமல் பேசினான் தண்டபாணி. பலதடவை இதேபோல கேட்டுக் கேட்டு வாங்கவே இல்லை.

“டே, காசு வச்சிருக்கண்டா!” சேப்பைத் தட்டிக் காண்பித்தான். ஜல்ஜல் எனச் சத்தம் கேட்டது. “அட்ஜேய் ஏமாத்தறாண்டா, அது சீனிக்கல்லு.”

ஓரத்திலிருந்த குட்டையன், தண்டபாணியை உசார்ப்படுத்தினான்.

“எம் படிப்புத்தான சத்தியமா காசுதாண்டா, பாக்கறியா?” சட்டைப் பையை விரித்துக் காட்டினான். மத்தியானம் வீட்டுக்கு விட்டதும் வீட்டில் வைத்து பொன்வண்டு எடுத்துத் தருவதாகச் சொன்னான். கேட்கவில்லை. தொணதொணவெனப் பேசி இப்பவே வேணுமே வேணுமென தொங்கித் தொயங்கட்டி வீட்டுக்குப் போய் பொன்வண்டை எடுத்து வரச் செய்து விட்டான். வாத்தியார் லீவு என நம்பி எடுத்து வந்தால், இப்படி வந்து நிக்கிறாரே!

தொண்டையைச் செருமியபடி எழுந்த சார், “இன்னிக்கி என்னா பாடம்?” வகுப்பைப் பரந்து நோக்கியபடி கேட்டார்.

‘‘த மூன் சார்” வழக்கம் போல லீடர்தான் சொன்னான்.

ராசு வாத்தியார் எப்பவுமே அடுத்த நாள் நடத்தவிருக்கும் பாடத்தை முதல் நாளே சொல்லி விடுவார். அதனை பிள்ளைகள் புத்தகத்தைப் பார்த்து வாசித்து வந்துவிட வேண்டும். மறுநாள் நடத்தும்போது அறிந்த சாலைக்குள் நடந்த உணர்வு மாணவர்களுக்கு இருக்கும் என்பார்.

‘‘அது எத்தனாவது பாடம்?’’

லீடர் சொன்னான்.

‘‘படிச்சீங்களா? படிக்காத மாப்ள சார்கள்?”

யாருமில்லை.

‘‘ரைட், மொதல்ல இப்ப, வழக்கம்போல வீட்டுப்பாடம் எழுதாத, ஒப்பிக்காத சார்வாள்க தனியா வாங்க. வந்து மரியாதைய வாங்கிக்கிட்டு போனீகன்னா இன்னிய பாடத்த ஆரம்பிக்கலாம்ல!”

வீட்டுப்பாடத்தைக் கேட்க மறந்து பாடம் நடத்தத் தொடங்கினார் என்ற சந்தோசத்திலிருந்த பயலுகளுக்கு தலை தொங்கிப்போனது. அப்படியே எழுந்து நின்றனர்.

‘விர்ர்ர்...’ டெஸ்கின் அடிப்பக்கமிருந்து தண்டபாணியின் பொன்வண்டு சிறகடித்தது. மாப்பிள்ளை சாராக எழத் தயாராய் இருந்தவன் பொன்வண்டு தீப்பெட்டி டப்பாவைத் திறந்து வந்துவிடுமோவென அச்சத்துடன் தயங்கி நின்றான்.

மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து கரும்பலகையை ஒட்டி நின்றார்கள். நின்றவர்களைக் கண்களால் அளந்தார். கைகளில் பிரம்பை எடுத்து வளைத்தபடி ஒவ்வொருத்தன் முகத்தையும் பார்த்தார்.

“ம்! வேற?”

தீப்பெட்டி டப்பாமேல் புத்தகங்களை பாரமாக வைத்துவிட்டு பைக்கட்டின் வாயை உட்புறம் திருப்பி விட்டு மெதுவாய் எழுந்து வந்தான் தண்டபாணி. ரவி, பாடம் எழுதி ஒப்பித்திருந்தான். அவனது கையும் டெஸ்க்குக்கு உள்ளேயே இருந்தது. கைக்குள் பிடித்திருந்த தீப்பெட்டியின் அதிர்வு, நேரத்துக்கு நேரம் அதிகமானது.

“சாருக்கு எந்திரிச்சு வர இத்தன யோசனையா?” தண்டபாணிக்கு போனஸ் அடி, சார் கையாலேயே கிடைத்தது. கெண்டங்கால் சதையில் சொத்தென தடம் பதிந்தது. ‘வீச்’செனக் கத்தினான்.

‘‘ம் ! இதுபோல, சொத் அப்படின்னு பெரம்புச் சத்தமும் கேக்கணும். சார் கத்துனார்ல ‘வீச்’, அந்தக் கத்தலும் வரணும். நா பாக்க மாட்டேன். காதுக்குக் கேக்கணும். யாருக்கு யாரப் பிடிச்சிருக்கோ அவன அடிக்கலாம்.” நாற்காலியில் உட்கார்ந்து பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.

பொன்வண்டு காலம் - சிறுகதை

லீடர் ஒவ்வொருத்தனிடமும் பிரம்பைக் கொடுத்து அடிக்கச் சொன்னான். வகுப்பு சுவாரஸ்யமானது.

“சார், வேணும்னே கத்தறான் சார்!” அமர்ந்திருந்த மாணவர்களிடமிருந்து புகார் வந்தது. சார் தலையைத் திருப்பாமலேயே, “அடிச் சத்தம் எனக்குக் கேக்கல” என்றார்.

‘சொத்’.

“ஸ்ஸ்”, “ய்யோ”, ‘‘ங்ஙீ’’, ‘‘யம்மா”

சத்தம் வகைவகையாய் எழும்பின.

தண்டபாணியிடம் பிரம்பு வந்தபோது இருவர் மிச்சமிருந்தனர். மற்றவர்களைப் போல யாரை அடிக்க என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஞாபகமெல்லாம் தீப்பெட்டியின் மீதே இருந்தது. அருகில் இருந்தவனைக் கைநீட்டச் சொன்னான். அவன் கைநீட்டிபடி கண்ணை மூடிக்கொண்டான்.

பிரம்பு துவண்டுபோயிருந்தது. கொஞ்சம் பின்னால் தள்ளிவந்து சுளீரென வீசினான் தண்டபாணி.

“ம்க்கும்” என்ற அடி வாங்கியவனது சத்தத்தை மீறி, “அய்யய்யோ!” என அலறினான் ரவி. சார் உட்பட அத்தனை பேரும் ரவியின் பக்கம் திரும்பினர்.

உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்றிருந்த ரவி, வலது கையை உயர்த்திப் பிடித்து அலறினான். கருஞ்சிவப்பான நிறத்தில் இருந்த பொன்வண்டு அவனது வலக் கையின் ஆள்காட்டி விரல் சதையினைத் தனது கழுத்துக் கொடுக்கால் இறுகப் பற்றியிருந்தது.

“அய்யோ அய்யய்யோ” வலக்கையைத் தன் இடக்கையால் முட்டுக்கொடுத்துப் பிடித்துக் கொண்டே அலறினான்.

“ஒதர்ரா” பக்கத்தில் இருந்தவன் சொன்ன அறிவுரையில் கையை உதறினான். பின்கழுத்தால் ரவியின் விரல் சதையைப் பற்றியிருந்த பொன்வண்டு, சார் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் மோதி மேசையில் மல்லாக்க விழுந்தது. கால்களை உதைத்துக்கொண்டே நகர்ந்து நகர்ந்து எழ முயன்றது பொன்வண்டு.

வகுப்பு முழுவதும் எழுந்து வந்து மேசை முன்னால் திரண்டது.

ராசு வாத்தியார் தண்டபாணியிடமிருந்து பிரம்பை வாங்கினார். தன் திரண்ட விழியினை மூடித்திறந்து கால்களை ஓயாமல் அளைந்தபடி முதுகால் மேசைமேல் நகர்ந்துகொண்டிருந்த பொன்வண்டின் கால்களில் பிரம்பின் நுனியைக் காட்டினார்.

கால்களால் பிரம்பைப் பற்றிக்கொண்ட பொன்வண்டு, மளமளவென ஏறி பிரம்பின் மறு நுனிக்கு வந்தது. படுக்கைவசத்தில் வைத்தார், திருப்பினார். அலைந்தது. தலைகீழாய்ப் பிடித்தார் வாத்தியார். திரும்பவும் அசராமல் மரமேறிபோல ஏறியது.

“ஏறவிடாதீங்க சார், கால ஒடிக்கல, பறந்துரும் சார்!” தன்னையறியாமல் தண்டபாணி குரல் கொடுத்தான். சார் அவனைப் பார்க்கத் திரும்பியபோது, பொன்வண்டு தன் சிறகை விரித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism