Published:Updated:

பூச்சி ஓடை - சிறுகதை

பூச்சி ஓடை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பூச்சி ஓடை - சிறுகதை

அம்மாவும் பக்கத்து வீட்டு சேகர் அண்ணனும் பேசிக்கொண்டது மூர்த்திக்குத் தெளிவாகக் கேட்டது. இந்தச் சனிக்கிழமை அப்பாதான் ஆடு அவுக்கப் போகிறார்.

பூச்சி ஓடை - சிறுகதை

அம்மாவும் பக்கத்து வீட்டு சேகர் அண்ணனும் பேசிக்கொண்டது மூர்த்திக்குத் தெளிவாகக் கேட்டது. இந்தச் சனிக்கிழமை அப்பாதான் ஆடு அவுக்கப் போகிறார்.

Published:Updated:
பூச்சி ஓடை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பூச்சி ஓடை - சிறுகதை

“இவரு என்ன, பெரிய மனுசன் பேலப் போன நேரமா இது. கூடப்போன பயலுவ அம்புட்டுப் பேரும் திரும்பி வந்து கொட்டிக்கிட்டு, மறுபடியும் வயித்த தடவிக்கிட்டுப் போறானுவ. இவரு மட்டும் அங்க எந்தக் கல்ல எடுத்துத் தேய்ச்சிக்கிட்டு இன்னும் இப்படி உட்காந்திருக்காரு” - அம்மா அயம்படும் இந்தச் சத்தம் கேட்டு மூர்த்தி எழுந்திரிக்கவில்லை. அவள் அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கையில் அவள் ஈரச் சேலையிலிருந்து சொட்டிய நீர், மூர்த்தியின் மூக்கில் பட்டுக் குறுகுறுக்க, கண்களைச் சுருக்கிக்கொண்டு எழுந்தான் அவன்.

“என்ன ராசா, பள்ளிக்கூடம் கிடையாதுன்னா அவுத்துப்போட்டு உறங்குவியே நீ, வாயப் பாரு வத்திப்போன தெக்கு வாய்க்கா வரப்பு மாதிரி, இங்குட்டு ஓடி அங்கிட்டு முடியுது கோத்த. போ... போய் மூஞ்சக் கழுவு, பூனை கீனை வந்து காய்ஞ்ச பால்சட்டின்னு நெனைச்சி நக்கி மொவத்தக் கிழிச்சிறப்போகுது” - பேசி முடிக்கிற வரை கண்களைக் கசக்கிக்கொண்டே இருந்த மூர்த்தி, அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அம்மாவின் முகம் திருச்செந்தூர் கடல் அலைகளுக்குள் சிக்கித் தத்தளிப்பதைப்போலத் தெரிந்தது. மூக்கு ஒரு பக்கம், கண்ணு ஒரு பக்கம், காது ஒரு பக்கம் எல்லாம் எங்கெல்லாமோ பிரிந்து நீந்துவதைப்போலத் தெரிந்தது அவனுக்கு. மறுபடியும் கண்களைக் கசக்கி அம்மாவைப் பார்த்தான். கண்ணு மூக்கு காது எல்லாம் இப்போது ஒன்றோடு ஒன்று சேர்வதுபோல இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து அடுப்பாங்கரையை நோக்கிப் போனான்.

“அங்க திங்குறதுக்கு ஒண்ணுமில்ல. எந்திரிச்ச உடனே எங்க போகுது பாரு கழுத. எட்டா வவுப்புக்கு வந்தாச்சி, இன்னும் முழுமாடு பல்ல விலக்காம திங்க அலையுது, போ... போய் பல்ல விலக்கி வா, அப்போதான் காபியும் தருவேன், பொரியும் தருவேன். இல்ல, ஊத்தவாய ஊறப் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஒண்ணும் தரமாட்டேன். இது மேளக்காரன் மேல சத்தியம். ஆமா, சொல்லிப்புட்டேன்.”

மேளக்கார், மூர்த்தியின் தாத்தா; அம்மாவைப் பெற்ற அப்பா. அவர் முகமெல்லாம் மூர்த்திக்கு நினைவு இல்லை. மேளக்கார் மாதிரிதான் மூர்த்தி இருப்பதாக அம்மா சொல்லுவாள். அப்போதெல்லாம் மூர்த்தி தனக்கு வயதான மாதிரி நினைத்துக்கொள்வான். தன் தலை வழுக்கை விழுந்துவிட்டதைப்போல தடவியும் பார்த்துக்கொள்வான். இப்போது உடனே அவனுக்குப் பொரி திங்க வேண்டும். ஆட்டுத் தொழுவுக்குப் போய் சாம்பலைத் தேடினான். தேங்காய்ச் சிரட்டையில் இருந்தது சாம்பல். எல்லாரும் அதை அள்ளி எடுத்து கொத்தாய் வாய்க்குள் போட்டு விலக்கினால், மூர்த்தி மட்டும் தொட்டு எடுத்து விலக்குவான். உள்ளே விரலை விட்டு அங்கிட்டு ஒரு தேய்ப்பு, இங்கிட்டு ஒரு தேய்ப்பு; அவ்வளவுதான் முடிந்தது.

“எப்பா ஏய் சேகரு, எங்க வூட்டு இளவட்டன எங்கேயாவது பார்த்தியா?”

“யாருக்கா, மூர்த்தி பயலையா கேக்குற?”

“இல்லப்பா, அவரு இங்கதான் சாம்பல் தின்னுக்கிட்டு இருக்காரு, அவரோட அப்பாவை எங்கேயாவது பார்த்தியா, காலையில பீங்காட்டுக்குப் போன மனுசன இன்னும் காணோம்.”

“ஆமா, காலையில பீங்காட்டுல பார்த்தேன். வெளிக்கி இருந்துட்டு கால் கழுவ பூச்சி ஓடைக்குப் போய்ட்டாரே.”

“பூச்சி ஓடைக்குப் போய்ட்டாரா. போன மனுசன் எங்கே போய் என்ன கதை அளந்துக்கிட்டு இருக்காருன்னு தெரியலையே.”

“எங்கேயாவது நின்னா வரச் சொல்றங்கா.”

“சீக்கிரம் வரச் சொல்லுப்பா, ஆட்ட அவுக்கணும். அம்புட்டும் கடிக்கிறதுக்கு இலை இல்லாம என் சேலைய கடிச்சித் திங்க வருதுவோ.”

“சரிக்கா சொல்லுதேன்.”

பூச்சி ஓடை - சிறுகதை

அம்மாவும் பக்கத்து வீட்டு சேகர் அண்ணனும் பேசிக்கொண்டது மூர்த்திக்குத் தெளிவாகக் கேட்டது. இந்தச் சனிக்கிழமை அப்பாதான் ஆடு அவுக்கப் போகிறார். நாம இல்லை என்கிற சந்தோசம் அவனுக்கு. வாய்க்குள் இருக்கும் கொஞ்சோண்டு சாம்பலும் அவ்வளவு இனிச்சிக் கிடந்தது. அப்பா வருவதற்குள், அம்மாவின் புத்தி மாறுவதற்குள், நல்ல பிள்ளையாக ஓடிப்போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து வீட்டுப் பாடத்தை எழுத வேண்டும். அத்தனை ஆடுகளும் பெரியப்பா வீட்டைத் தாண்டி தரிசு பாலத்துக்குள் நுழைந்த பிறகு விளையாடப் போனால் போதும். நினைச்சுப் பார்க்கவே மூர்த்திக்கு அவ்வளவு நல்ல சனிக்கிழமையாக இருந்தது, அந்த சனிக்கிழமை.

“யக்கோவ், யக்கோவ்... பாப்பாக்காவ்.”

முற்றத்திலிருந்து சேகர் அண்ணன் சத்தம்தான் கேட்டது.

“சொல்லுப்பா சேகரு, என்ன எங்க இருக்காரு?”

“யக்கா மாமாவைப் பார்த்தேன். அங்கே பூச்சி ஓடையில தான் உட்காந்திருக்காரு.”

“பூச்சி ஓடையில உட்காந்திருக்காரா, குண்டியக் கழுவிட்டு வீட்டுக்கு வராம அங்க என்ன பண்ணுறாரு?”

“தெரியலக்கா, `எதுக்கு மாமா வீட்டுக்குப் போகாம இங்கேயே உட்காந்திருக்கீங்க'ன்னு கேட்டேன். சும்மாதான் மாப்ளன்னு சொன்னாருக்கா.”

“சும்மா உட்காந்திருக்காரா... புத்தி கித்தி கெட்டுப் போச்சா மனுசனுக்கு. இது என்ன புதுக் கொடுசூரம்.”

“நீங்க தேடுனத சொன்னேன்.”

“என்ன சொன்னாரு அதுக்கு?”

“ஆ வாரேன் வாரேன். நீ வீட்டுப் பக்கம் போனா, மூர்த்திய இங்க வரச் சொல்லுன்னு சொன்னாருக்கா.”

“மூர்த்திய வரச் சொன்னாரா... எதுக்கு?”

“தெரியலக்கா... அவன சீக்கிரம் போவச் சொல்லு.''

சேகர் மாமா போய்விட்டார் போல, சத்தம் நின்றுவிட்டது. அம்மாதான் எதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

“அப்பா எதுக்கு நம்மள பூச்சி ஓடைக்குக் கூப்பிட்டிருப்பார்” - மூர்த்தி மூஞ்சிய அவசர அவசரமாகக் கழுவிக் கொண்டிருந்தான்.

“ஏலேய், அப்பா உன்ன பூச்சி ஓடைக்கு உடனே வரச் சொன்னாராம், ஓடு.”

“எதுக்கும்மா?”

“எனக்கு என்ன தெரியும். எதாவது மீனு கீனு புடிச்சிருப்பாரா இருக்கும். ஓடு.”

கரெக்ட், மீனுதான் மாட்டியிருக்கும். அப்பா சொல்லுவார், காலையிலே போனா தான் வாய்க்கால்ல இருந்து பூச்சி ஓடைக்கு மீனு ஏறுறதைப் பாக்கலாம்னு. கெண்டதான் ஏறியிருக்கும். கெண்டய பார்த்தா யார்தான் உட்டுட்டு வருவா. அப்பா துண்ட வைச்சி பொத்திருப்பாருனு நினைக்கிறேன். சூப்பர்... இந்த சனிக்கிழமையில மீன் கொழம்பும் வந்துடுச்சே.

மூர்த்தி பூச்சி ஓடை பார்த்து ஓடினான். பூச்சி ஓடைக்கு குண்டன் மச்சான் வீட்டு வழியாவும் போவலாம். அந்தோனியக்கா வீட்டு வழியாவும் போவலாம். குண்டன் மச்சான் வீட்டில் நாய் கிடக்கும். யார் ஓடினாலும் அது துரத்திக்கொண்டு வரும். அந்தோனியக்கா வீட்டு வழியா போறதுதான் சரியென்று ஓடினான். வழித்தொண்டில் எட்டி நின்னு பூச்சி ஓடையைப் பார்த்தான். அப்பா கொஞ்சம் தள்ளி உட்காந்திருந்தார். கையில் மீன் இல்லை. துண்டு அப்பாவின் மடியில் இருந்தது. பூச்சி ஓடைக்குள் இரண்டு கால்களையும் வைத்துக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டபடி அப்பா உட்காந்திருப்பதைப் பார்க்க என்னமோ மாதிரி இருந்தது அவனுக்கு.

அப்பா ஏன் இப்படி உட்காந்திருக்கார்? இரண்டு கால்களுக்கும் இடையில் மீனை அமுக்கிக்கொண்டு இருக்காரோ! இல்லயே, தண்ணி மேல தெறிக்கவேயில்லையே? கட்லாகெண்டைய அமுக்குனா எப்படித் தெறிக்கும், ஆளையே அது குளிப்பாட்டிவிட்டிரும்; அப்படிச் சிலுப்பும். அப்போ நிச்சயமா மீன் இல்ல, ஒருவேளை ஆமை வந்திருக்குமோ, அதக் காட்டுறதுக்காக நம்மளக் கூப்பிட்டிருப்பாரோ, ஆமையே தான் காலுக்குள்ள வச்சி அமுக்கிக்கிட்டு இருக்காரு.

வழித்தொண்டை தாண்டிக் குதித்து அப்பாவுக்கு அருகில் போனான் மூர்த்தி. அப்பா நிமிர்ந்து பார்க்கவில்லை. ஓடைக்குள் நெளிந்த மூர்த்தியின் நிழலைப் பார்த்தே பேசினார்.

“பக்கத்துல உட்காரு.”

மூர்த்தி உட்கார்ந்தான். கால்கள் இரண்டையும் அப்பாவைப் போலவே ஓடைக்குள் நீந்தவிட்டான். அப்பா இன்னும் மூர்த்தியை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஓடைக்குள் நிழலாய் நெளிந்துகொண்டிருந்த மூர்த்தியைப் பார்த்தே அவர் பேசினார்.

“நேத்து ராத்திரி சுப்பு தாத்தா வீட்டுக்குப் போனியா?” - அப்பா இந்தக் கேள்வியைக் கேட்கவும், ஒரு நண்டு மூர்த்தியின் காலைக் கவ்வவும் சரியாக இருந்தது. வெடுக்கென்று காலை ஓடையிலிருந்து உருவிக்கொண்டு எழ முயன்றவனை, அப்பா சிக்கென்று பிடித்து இழுத்து உட்கார வைத்து மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்.

“நேத்து ராத்திரி சுப்பு தாத்தா வீட்டுக்குப் போனியா?”

பதில் சொல்லாத மூர்த்தி, தன்னைக் கடித்த நண்டு பூச்சி ஓடைக்குள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், அப்பாவின் பிடிக்குள் இருந்த அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“போனியா? உங்கிட்டதான் கேக்குறேன்.”

“ம்... போனேன்” - சுண்டுவிரல் பக்கமா வந்து நின்ற நண்டைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“என்ன பண்ணுன அங்க?”

நண்டு சுண்டுவிரலில் ஏறியது. எந்தப் பக்கம் அது திரும்பும் என்று சொல்ல முடியாதபடி அப்படியே அது சுண்டுவிரலிலே கொஞ்ச நேரம் நின்று தனது கொடுக்கைத் தூக்கிக் காட்டியது.

“தாத்தா இடுப்பு பெல்ட்டைப் போய் எடுத்தியா?”

நண்டு ஒவ்வொரு விரலாய்த் தாண்டியது. சுண்டு விரலின் நுனியில் போய் நின்றது. அப்பா அவன் முகத்தைத் திருப்பி நேருக்கு நேராகப் பார்த்தார். இரண்டு கண்ணிலும் கண்ணீர் நிரம்பிக்கொண்டு நின்றது. தன் பிடியை விட்டுவிட்டு மெதுவாய்க் கேட்டார் அப்பா.

“எவ்வளவு எடுத்த?”

சுண்டு விரலிலிருந்து கீழிறங்கிய நண்டு திடீரென்று ஓடை மண்ணைத் துளைத்துக்கொண்டு அவன் உள்ளங்காலைப் போய் உரசத் தொடங்கியிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூச்சி ஓடை - சிறுகதை

“சொல்லு, எவ்வளவு எடுத்த?”

“நாப்பத்தஞ்சு ரூபா” உள்ளங்காலைக் கொஞ்சம் தூக்கி, கீழே நச்சரித்துக்கொண்டிருந்த நண்டு தன் பாதத்திற்குக் கீழே நுழைவதற்கு வழிவிட்டு, இந்த பதிலைச் சொன்னான் மூர்த்தி.

“எங்க வச்சிருக்க?”

“பீங்காட்ல வச்சிருக்கேன்.”

“சரி, எந்திரி பீங்காட்டுக்குப் போவலாம்.”

அப்பா உடனே எழுந்துவிட்டார். அவன்தான் அப்படியே உட்காந்திருந்தான். நண்டு கீழே சுரண்டிக்கொண்டிருந்தது கால்களை. அப்பா அவனைத் தூக்கினார். அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். அப்பாவின் கண்கள் கட்லா கெண்டையின் செதில்களைப்போலச் சிவந்திருந்தன. அப்பாவின் பின்னாடியே எழுந்து நடக்க ஆரம்பித்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டிருந்த நண்டு அவன் நிழலைத் துரத்திக்கொண்டு போனது. அப்பாவும் மகனும் பூச்சிவாய்க்கால் தொண்டுவழியைத் தாண்டிக் குதித்து மேலேற, நண்டு ஒரு புல்லின் நிழலில் அப்படியே அங்கேயே நின்றுகொண்டிருந்தது.

பீங்காட்டுக்குள் முதலில் அப்பாதான் நுழைந்தார். மூர்த்தி அப்படியே ஒத்தையடிப் பாதை முடியும் இடத்தில் நின்றான். பீங்காட்டுக்குள் வெயில் பன்றிக்குட்டிகளோடு கண்ணாம்பொத்தி விளையாடிக்கொண்டிருந்தது. ஈரம் ஊறிய முள்மர மூட்டுக்குள் துறுதுறுத்துக் கொண்டிருந்த பன்றிக்குட்டிகளைப் பார்க்கப் பார்க்க ஏனோ அழுகை வந்துவிடும் போலிருந்தது அவனுக்கு. அப்பா அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“போ, போய் எடுத்துட்டு வா.”

அப்பா சொன்னதும் மூர்த்தி முழுப் பீங்காட்டையும் பார்த்தான். நேற்று இரவு அந்த நாற்பத்தைந்து ரூபாயை வைக்க வரும்போது இந்த இடம் இப்படியா இருந்தது. உள்ளே வந்தால் திரும்பிப் போகத் தெரியாத பெரிய காட்டைப்போல கும்மிருட்டாக இருந்தது. ராஜா மாமா வீட்டு மாட்டுத்தொழுவு குண்டு பல்பிலிருந்து வந்த கொஞ்சோண்டு ஒளிக்கீற்றின் தடத்தை வைத்துக்கொண்டு அவனே மெல்ல மெல்ல நடந்துவந்தான். அப்போது அவனுக்கு முனிக்கல் மட்டும்தான் தெரிந்தது. அதுவும் இருட்டுக்குள் இருக்கும் நெல்மூட்டையைப் போலதான் தெரிந்தது. உச்சி மத்தியானத்தில் முனிக்கல்லைப் பார்க்கும்போது அவ்வளவு பயந்திருக்கிறான். ஆனால், ஆச்சரியம் இன்று இவ்வளவு இருட்டில் அந்தக் கல்லை இவ்வளவு பக்கத்தில் தனித்து நின்று பார்த்தும் அவனுக்கு பயமில்லை. கல்லைக் கூர்ந்து பார்த்தான். அம்மா சொன்னது போல, அந்தக் கல் தன் நாக்கைத் துருத்தவில்லை; கண்களை அகல விரிக்கவில்லை. அது ஒரு சாதாரணக் கல் போலத்தான் கிடக்கிறது. உள்ளங்காலை அழுத்தி அழுத்தி, மண்ணை விலக்கி விலக்கி, முட்களை மிதித்துவிடாமல் அவனால் முனிக்கல் வரைக்கும் போக முடிந்தது. முனிக்கல்லில் காசை ஒளித்துவைக்க முடியாது; கல்லுக்கு அடியிலும் வைக்க முடியாது; உள்ளங்கையில் பிசுபிசுத்துகொண்டிருக்கும் இந்த நாப்பதைந்து ரூபாயை எங்கேதான் வைப்பது? முனிக்கல்லிருந்து தன் காலால் பத்தடி ஒரு திசையை நோக்கி அளந்தான். ஒரு பன்றிக்குட்டியைப்போல அவசரமாகக் குழியைத் தோண்டி உள்ளே காசை வைத்து மூடிவிட்டான். திரும்பியும் பத்தடி காலால் அளந்து முனிக்கல்லுக்கு வந்தான். முனிக்கல்லில் ஏறி அமர்ந்தான். எப்பவும் முனிக்கல் அவ்வளவு சூடாக இருந்ததில்லை. திடீரென்று இப்போது அவனுக்குக் கல் அசைவது போலிருந்தது. கல்லின் உள்ளிருக்கும் முனி விழித்துக்கொண்டிருக்கும் போல, ஒரே ஓட்டம்... வீட்டுக்கு வந்துதான் நின்றான்.

“எங்க வச்ச, அடையாளம் தெரியலையா?”

“தெரியும். அந்த முனிக்கல் பக்கத்துல தான் புதைச்சி வைச்சேன்.”

அப்பா முனிக்கல்லுக்குப் பக்கத்தில் போய் நின்றார்.

“இந்தக் கல்லுக்குப் பக்கத்துலயா... எந்தப் பக்கம் புதைச்சு வச்ச?”

“எந்தப் பக்கம்னு தெரியல. ஆனா முனிக்கல்லுல இருந்து என் கால்ல பத்தடி அளந்து புதைச்சி வச்சேன்.”

முனிக்கல் கொஞ்சம் வட்டமா இருக்கக் கூடிய பெரியகல். ஒரு மாடு, இரண்டு ஆடு, மூணு மனுசன் மேல ஏறி உட்காரலாம். அப்பா முனிக்கல்லுக்குப் பக்கத்தில் போனார். சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு மூர்த்தியைப் பக்கத்தில் அழைத்தார்.

“ராத்திரி அளந்த மாரி உன் காலால பத்தடி அள.”

மூர்த்தி தலையைக் குனிந்துகொண்டே அளந்தான். மூர்த்தி நின்ற இடத்திலிருந்து வட்டமாக அப்பா ஒரு குச்சியை எடுத்துத் தோண்ட ஆரம்பித்தார். மூர்த்தி முனிக்கல்லில் சாய்ந்து நின்றான். கல்லில் இன்னும் சூடு ஏறவில்லை. முனி இன்னும் தூக்கத்தில் இருக்கும்போல... அப்பா வட்டமாகத் தோண்டிக்கொண்டே வந்தார்.

“நல்லா யோசிச்சி சொல்லு. இங்கதான் வச்சியா?”

“ஆமா இங்கதான் வச்சேன்... வைக்கும்போது முனி முழிச்சிக்கிட்டு இருந்துச்சி. ஒருவேள அது எடுத்தாலும் எடுத்துருக்கும்.”

அப்பா நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர் தோண்டிக்கொண்டே இருந்தார். முனிக்கல்லிலிருந்து தெற்கு திசையில் கிடைத்தது, அந்த நாற்பதைந்து ரூபாய்.

“முனி ஒண்ணும் எடுத்துட்டுப் போவல. இந்தா இங்க இருக்கு நீ வச்ச நாப்பதைந்து ரூபா.”

முனிக்கல்லில் இப்போது கொஞ்சம் சூடு ஏறுவது போலிருக்க, முனிக்கல்லிலிருந்து கையை எடுத்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டு நின்றான் மூர்த்தி.

“செரி வா, போவலாம்.”

அவனுக்குத் தெரிந்துவிட்டது, அப்பா இப்போது தன்னை எங்கே கூட்டிப் போகப் போகிறார் என்று. சங்கரன் மாமா வீட்டு முக்கைத் தாண்டும்போதே மூர்த்திக்குக் கண்ணீர் மூக்கு வரை வடிந்துவிட்டது. அவன் நினைத்ததைப் போல சுப்பு தாத்தா வீட்டுக்குத்தான் அப்பா அவனை அழைத்துக்கொண்டு போனார்.

“எதுக்கு இப்ப நீ அழுவுற, அப்பா கூடதான வர்ற... அப்புறம் என்ன? அழுவக்கூடாது, கண்ண நல்லாத் துடைச்சுக்கோ, வா.”

தோளில் கிடந்த துண்டை எடுத்து அப்பா கண்ணீர் முழுவதையும் துடைத்துவிட்டார். முழுக் கண்ணீரையும் துடைத்துவிட்டு அங்கிருந்து பார்த்தால், அவனுக்கு சுப்பு தாத்தா வீடு தெரிந்தது. சுப்பு தாத்தா எப்போதும்போல வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டுக்கொண்டிருந்தார். டீக்கடை சுந்தர் அண்ணன் சைக்கிளோடு நின்றான். அவன் கூடவே திரியும் சிவபாண்டி அண்ணனுடன் பிச்சை அண்ணனும் சும்மா கூட நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டரை பாட்டி கால் நீட்டி அமர்ந்திருந்தாள். தாய்லா அத்தை குட்டிச்சுவர் முனையில் உட்காந்து தன் பேத்திக்குத் தலைவாரிக்கொண்டிருந்தாள். இவர்கள் போதாதென்று மூர்த்தியோடு ஒன்றாகப் படிக்கும் குணசேகரும் தன் குட்டி சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட நின்றுகொண்டிருந்தான். குணசேகரைப் பார்த்ததும்தான் மூர்த்திக்குத் தன் உள்ளங்காலை அந்த நண்டு மறுபடியும் வந்து கடிப்பது போலிருந்தது. அப்பாவின் கைகளை உதறிவிட்டு ஒரு ஓட்டம் எங்கேயாவது ஓடிவிடாலாமா என்றிருந்தது. ஆனால், அப்பாவின் பிடி இறுக்கமாக இருந்தது. அப்பாவின் முகத்தைப் பார்த்தான். ஆச்சரியம், அப்பா கண்களில் முன்னர் தெரிந்த அந்த கட்லாகெண்டையின் செதில் சிவப்பு இப்போது இல்லை. அப்பாவிடம் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அப்பாவின் நிழலைப் பார்த்துப் பேசினான்.

“உனக்கு யாருப்பா சொன்னா?”

“எத யாரு சொன்னா?”

”நான் களவாண்டதை.”

”வேற யாரு சொல்லுவா? சுப்பு தாத்தா தான் சொன்னார்.”

“என்ன சொன்னாரு?”

காலையில பீங்காட்டுக்குப் போய்ட்டு அப்பா பூச்சி ஓடைக்குப் போகும்போது, பூச்சி ஓடைக்குள் நண்டோடு சுப்பு தாத்தா விளையாடிக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு அதைப் பார்க்க அவ்வளவு ஆச்சரியமாயிருந்தது. நண்டு சுப்பு தாத்தாவின் கையில் ஏறுவதும் ரேகையின் வழி ஊர்வதுமாக இருந்தது.

“என்ன சித்தப்பா, காலையிலே நண்டுகூட விளையாடிக்கிட்டு இருக்க.”

“நான் எங்க விளையாடுறேன். அது ஆசைப்பட்டு வந்து விளையாடுது. வந்து விரும்பி விளையாடுற பிள்ளைய ச்சீ போன்னு உதறியா விட முடியும்?”

“நல்ல மனுசன் நீரு.”

அப்பாவின் நிழல் சுப்பு தாத்தாவின் பக்கத்தில் போய் நின்றது. நிழலைப் பார்த்து சுப்பு தாத்தா பேச ஆரம்பித்தார்.

“ ஏலேய்... புள்ளாண்டன் சேட்ட பண்ண ஆரம்பிச்சிட்டான் போல இருக்கே, ராத்திரி விளையாட வீட்டுக்கு வந்த பய, இருட்டுக்குள்ள அப்படியும் இப்படியுமா தடவி என் பெல்ட்டை எடுத்துட்டாண்டே.”

“யாரு?”

“வேற யாரு நம்ம புள்ளாண்டன்தான். சின்னப் பையன், விளக்க ஊதி அணைச்சிட்டா கிழவனுக்குக் கண்ணு தெரியாதுன்னு நினைச்சிகிட்டு, கண்ணு முன்னாடியே சிப்பத் தொறந்து பணத்த எடுத்துப்புட்டான்.”

“யாரு... எம்மவன் மூர்த்தியா?”

“ம்ம்ம்... அவன்தான்.”

”நெசமாவா சொல்லுதீய?”

“நான் எதுக்குடே பொய் சொல்லப் போறேன் நம்ம புள்ளயப் பத்தி.”

அப்பாவின் கால்களை வரப்பு வழுக்கிவிட்டது அல்லது அப்பாவின் கால்கள் வரப்பை வழுக்கிக்கொண்டு பூச்சி ஓடைக்குள் குதித்தது. பூச்சி ஓடையில் கலங்கிய தண்ணீர் அப்பாவின் முகத்திலும் தெளித்திருந்தது. சுப்பு தாத்தாவின் முகத்திலும் தெளித்திருந்தது. அதனால் அப்பா அழத் தொடங்கியதை சுப்பு தாத்தா முதலில் கவனிக்கவில்லை.

“ஆமா... ஆமா... என்ன ஒரு நாப்பத்தஞ்சி ரூபா இருக்கும்னு நினைக்கேன். அதுக்காக அவனப் போய் அடிக்காத… புள்ளைகிட்ட அவன் திருடிட்டாம்னு சொல்லாம, தப்பு பண்ணிட்டான்னு சொல்லித் திருத்து. தாத்தா இல்ல, யாருகிட்டனாலும் என்ன வேணும்னாலும் கேட்கச் சொல்லு. யாரும் தரலனாலும் பரவாயில்ல. கேட்கிறது தப்பே கிடையாதுன்னு சொல்லிக் கொடுடே... சரியா?”

பூச்சி ஓடை கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வரத் தொடங்கியது. அப்பா முகத்தை நிமிர்த்தவே இல்லை. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், அப்பா தலை பூச்சி ஓடைக்குள் மூழ்கிக்கிடந்தது.

“ச்சீ... கிறுக்குப் பயல. இப்போ எதுக்கு நீ இப்படி தலைய தொங்கப்போட்டுக்கிட்டு நிக்குற. ஆங்… என்னல நடந்துபோச்சு. பய பெரிய பயலாயிட்டான். அவனுக்கு உலகத்துல என்ன இருக்கு, எது இல்ல, யார்கிட்ட எவ்வளவு இருக்கு, நாம ஆசப்பட்ட உலகம் நம்ம கைக்கு எப்போ வரும், அது எப்புடி வரும்னு எல்லாம் இப்போதான் தோண ஆரம்பிச்சிருக்கு.”

“நல்லாப் படிக்கிற பய சித்தப்பா, அவன்கிட்டேயும் களவாணித்தனம் இருந்திருக்கு பாரேன்.”

“ஏலேய், என்ன பேச்சு பேசுற? எவன்கிட்ட இல்ல களவாணித்தனம். உன்கிட்ட இல்லையா, என்கிட்ட இல்லையா, எவன்கிட்ட இல்லை? ஒன் நெஞ்சுல கைய வெச்சுச் சொல்லு, நீ இதுவரைக்கும் ஒண்ணையும் களவாண்டதில்லன்னு. பஞ்சம் வந்து பல்ல இளிச்சிக்கிட்டு நின்னப்போ, அடுத்தவன் வேலிய பிய்ச்சிக்கிட்டுப் போய் நொங்கு, இளநீ, கெழங்கு, அரிசி, குருண எது கைக்கு ஆப்புடுதோ அதை அள்ளிக்கிட்டு வந்து தின்னு செரிச்சிதான் என் உயிர நான் காப்பாத்துனேன்டே… நான் மட்டும் என்ன, ஒங்க அப்பன், ஒம்பாட்டன் அப்புறம் இங்க இருக்கிற எல்லாப் பயலும் அப்படி பொளைச்சி வந்தவனுங்கதான். எனக்கு இதெல்லாம் ஒரு மயிரும் கிடையாது. மண்ணுக்குள்ள இருந்து புடுங்கி திங்கிற கெழங்கும் என் பெல்ட்ல இருந்து எடுக்கிற அந்தத் தாளும் வேற வேற இல்ல. எல்லா மயிரும் ஒண்ணுதான். கெழங்க புடுங்கிருந்தா தெறமக்கார பயன்னு நாமளே சொல்லியிருப்போம். இந்த ரூவாத்தாள எடுத்தா மட்டும் களவாணிப்பயலா ஒனக்கு அவன்?”

“நான் என்ன பண்ணணும்?”

“நீ ஒண்ணும் கிழிக்க வேண்டாம்… பய அவசரத்துக்கு என் சைக்கிள எடுத்துட்டு வந்துட்டாம்னு நினைச்சு அத அவனையே கொண்டுவந்துவிடச் சொல்லு, அவ்வளவுதான். இன்னொருத்தருக்கு தேவைப்படுற எந்தப் பொருளையும் அவங்கள கேட்காம எடுக்கக்கூடாதுன்னு சொல்லு, போதும்.”

“அவன்கிட்ட போய் இத எப்புடிச் சொல்ல நான்.”

“நீயும் ஒரு களவாணிதாம்னு நினைச்சிக்கோ. இல்லைன்னா, இந்தச் சுப்பு ஒரு களவாணின்னு நினைச்சுக்கோ. ஒரு களவாணிப் பய ரூபா நமக்கு எதுக்குல தம்பி. வா, கொண்டுபோய்க் கொடுத்திடுன்னு சொல்லு, சரியா?”

சுப்பு தாத்தா போய் ரொம்ப நேரம் கழித்தும் பூச்சி ஓடைக்குள் கிடந்த அவர் நிழல் கடைசியாக ஒன்றைச் சொல்லி மறைந்தது.

“ஒண்ணு மட்டும் சத்தியம்லே, வயிறு இருக்கிற அம்புட்டு உயிரும் களவாணிதாம்லே, அத மறந்துராத. அதனால புள்ளய அடிச்சி திருத்திரலாம்னு நினைக்காத, சரியா?”

அப்பாவின் பிடிக்குள் இருந்த மூர்த்தியின் கைக்குள் ஊறத் தொடங்கியது அந்த நண்டு. அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அழுகை நின்றிருந்தது அவனுக்கு. உள்ளங்கைக்குள் நண்டு சுரண்ட சுரண்ட, அப்பாவோடு போய் சுப்பு தாத்தாவின் முன்னாடி நின்றான்.

“தாத்தாகிட்ட கொடு.”

சுப்பு தாத்தா நிமிர்ந்து மூர்த்தியைப் பார்த்தார். மூர்த்தி கண்களை சிக்கென்று மூடிக்கொண்டு தாத்தாவின் கைகளில் அந்த நாற்பத்தைந்து ரூபாயையும் வைத்தான். காசை வாங்கிக்கொண்டு எதுவும் தெரியாதது போல சுப்பு தாத்தா கேட்டார்.

“என்ன காசுடே இது?”

அவன் உம்மென்றிருந்தான். அப்பாதான் பதில் சொன்னார்,

“போன வாரம் முன் வீல் டியூப் மாத்திக் கொடுத்தல்ல, அதுக்கு.”

“அது நாப்பது ரூபாய்தான, இந்தா இந்த அஞ்சு ரூபா உனக்கு வச்சுக்கோ.”

மூர்த்தி வாங்கவில்லை அப்பாவைப் பார்த்தான். அப்பா சிரித்தார். திரும்பி சுப்பு தாத்தாவைப் பார்த்தார். அவரும் சிரித்தார். மூர்த்தி வாங்கிக்கொண்டான்.

“போ, போய் கடையில முட்டாய் வாங்கிட்டு வீட்டுக்குப் போ.”

அப்பா அவனை அவன் திசையில் ஓட விட்டுவிட்டார். மூர்த்தி மேற்கு நோக்கி ஓடினான். அங்கு பண்டாரத்தி பெரியம்மா கடை இருக்கிறது. கடையில் ஐந்து லட்டு உருண்டைகளை வாங்கி வந்து மூச்சிரைக்க சுப்பு தாத்தாவிடம் நீட்டினான்.

“என்னடே லட்டா… கொடு. எனக்கு ஒண்ணு போதும். ஆனா நீ நிறைய லட்டு திங்காத, அப்புறம் கொடல்ல நிறைய நண்டு ஊறும்டே பாத்துக்க.”

சிலிர்த்துத் தலையாட்டிய மூர்த்தி, பூச்சி ஓடையை நோக்கி ஓடினான். அது வடக்குத் திசையில் இருந்தது.