Published:Updated:

மனமே நலமா? - 7

மனமே நலமா?
பிரீமியம் ஸ்டோரி
மனமே நலமா?

மருத்துவர் யாமினி கண்ணப்பன்

மனமே நலமா? - 7

மருத்துவர் யாமினி கண்ணப்பன்

Published:Updated:
மனமே நலமா?
பிரீமியம் ஸ்டோரி
மனமே நலமா?
“ஹலோ டாக்டர், வணக்கம். எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் மினி. என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?”

“உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கு. அதான் ஸ்பெஷல்”

“கேள்விகள் நீ எப்பவும் கேக்குறதுதான. கேள்வி ராணி மினின்னு உனக்கு பேரே வைக்கலாம்.”

“ஹாஹாஹா. அது சரிதான் டாக்டர். ஆனா இந்த முறை கேள்வி வாசகர்களுடையது. அதான் ஸ்பெஷல்”

“வாவ். கேளு கேளு”

“இந்த வாரம் வந்த பல கேள்விகளில்... தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளோடு வந்திருக்கேன். எல்லாக் கேள்விகளையும் ஒண்ணா சொல்லிடுறேன்.”

“சொல்லு மினி.”

“1. எனக்கு வயசு 54. எப்பவும் பதற்றமான, குழப்பமான மனநிலையே இருக்கு, ஆழ்ந்த உறக்கம் அப்படிங்குற ஒண்ணே எனக்கு இல்ல. வேறு எந்த பிபி, சுகர் பிரச்னையும் இல்லை.எனக்கு என்ன பிரச்னை?

2. தைராய்டு நோய்க்கும் மனநலனுக்கும் என்ன சம்பந்தம்?

3. என் நண்பன் தனிமையை விரும்புபவர். அதனால், அவரைச் சந்திப்பதற்கு யாராவது வந்தாலோ அல்லது தொலைபேசியில் ஏதாவது அழைப்பு வந்தாலோ தனக்குள் ஒருவித பயம் பதற்றம் ஏற்படுவதாகக் கூறுகிறார். இது மனம் தொடர்பான பிரச்சினையா? இதற்குத் தீர்வு என்ன?”

மனமே நலமா? - 7

“ ம்ம்ம்... ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூணு கேள்விகள் மாதிரிதான மினி உனக்குத் தோணுது.”

“யெஸ் டாக்டர்.’’

“ஆக்சுவலி அப்படி இல்ல. இது எல்லாமே குறிப்பிட்ட ஒரு மனநலப் பிரச்னையின் வெளிப்பாடா இருக்க வாய்ப்புண்டு.”

“ரியலி, என்ன பிரச்னை டாக்டர் அது?”

“ சொல்றேன் அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். பொதுவா மனநலன் சார்ந்த பிரச்னைகள் ஒருத்தரோட உடலியல், உளவியல், சமூகவியல் காரணிகளோட பாதிப்பினாலதான் ஏற்படுது. அதனால ஒருத்தரைப் பத்தி முழுசா அறியாம, உளவியல் ஆய்வு செய்யாம உங்களுக்கு இந்தப் பிரச்னைதான்னு சொல்லிட முடியாது.’’

“புரியுது டாக்டர். ஒவ்வொரு மனநல பிரச்னையும் unique தான். இல்லையா?’’

“கரெக்ட்.’’

“மேல கேட்ட மூன்று கேள்விகளுக்கும், அப்போ பொதுவான பதில் சொல்லுங்க டாக்டர். அந்த மூன்று கேள்வியும் எப்படித் தொடர்புடையது?’’

“மினி, இந்த கோவிட் காலத்துல, மற்ற எல்லாத்தையும்விட, குறிப்பிட்ட இந்தப் பிரச்னையால பாதிக்கப்பட்டு என்கிட்ட வந்தவங்கதான் அதிகம். ஆங்கிலத்தில் அதற்குப் பேரு Anxiety disorder. தமிழில் மனப்பதற்ற நோய். இந்த மூணு கேள்வியின் அறிகுறிகளும் இந்த anxiety-ல அடங்கும்.”

“ஓகே டாக்டர்... ஆனா anxiety இல்லாதவங்க இந்தக் காலத்துல யாரு இருக்காங்க?’’

“கரெக்ட். Anxiety எனப்படும் மனப்பதற்றம் எல்லோருக்கும் இருக்கு. ஆனா அது anxiety disorder அப்படிங்குற மனப்பதற்ற நோயா மாறும்போதுதான் அது பிரச்னையாகுது. Infact வெறும் anxiety நல்லதுதான். பதற்றப்படும்போது, ஒரு விஷயத்துக்காகக் கூடுதல் கவனத்தோடு தயார் ஆவோம். சிறப்பாச் செயல்படுவோம். ஆனா இது ஒரு நோயா மாறும்போது அங்க உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள்னு மூன்றிலும் அறிகுறிகள் தென்படுது.”

“ப்ளீஸ்... அந்த மூன்றைப் பற்றியும் கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்?”

“இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் அதிகமாகுதல், மூச்சடைப்பது போன்ற உணர்வு, தலை சுற்றல், உடலெங்கும் நடுக்கம், வாய் உலர்ந்துபோகுதல், அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இதெல்லாம் தான் உடல் ரீதியான அறிகுறிகள். மன ரீதியாக அறிகுறிகள்னா ஏதோ விபரீதம் நடக்கப் போகுதோன்னு அதீத பயம், பரபரப்பு, அமைதியற்ற மனநிலை, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தல் இவையெல்லாம்தான். அடுத்தது எண்ணங்கள். மனப் பதற்றத்திற்கு அடிப்படையாய் அமையும் எண்ணங்களை ஆய்வு செய்தால், தனக்கு ஏற்படும் சவால்களை மிகைப் படுத்திப் பார்க்கும் கண்ணோட்டமும் (Over estimation of threat), அதை சமாளிக்கும் தன்னுடைய திறனைக் குறைத்து மதிப்பிடும் தன்மையாகவும் (Under estimation of abilities) அது வெளிப்படுது.

“இந்த அறிகுறிகளைக் கொண்டு உடல்நோயிலிருந்து மனப்பதற்ற நோயை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது டாக்டர்?’’

“சரியான கேள்வி கேட்ட மினி. உடல்நோயைப் போன்றே தோற்றமளிக்கும் மனப்பதற்ற நோய் உள்ளவங்க பெரும்பாலும் பொது மருத்துவர்களிடமும், நரம்பியல் மருத்துவர்களிடமும், இரைப்பை, குடல் சார்ந்த பிரச்னைகள்னு நினைச்சு குடலியல் மருத்துவர்களிடமும் தான் முதலில் உதவி நாடிப் போவாங்க. மருத்துவர்கள் அவர்களுக்கு உடல் ஆய்வுகள் நடத்தி, அதன் பிறகுதான் அவங்களுக்கு உடல்சார்ந்த பிரச்னை இல்லை, மனம் சார்ந்த பிரச்னைன்னு கண்டறிதல் நிகழும். கடைசியா அது என்ன விதமான மனப்பதற்ற நோய்னு நாங்க கண்டறிவோம்.

“மனப்பதற்ற நோய்கள் பல வகைப்படுமா?’’

“Anxiety disorder பல வகைப்படும்... கடந்த வாரங்களில் நம்ம டிஸ்கஸ் பண்ணுன OCD, Illness anxiety disorder இந்த ரெண்டும் இதோட ஒரு வகை தான். இவை தவிர்த்து Generalised anxiety, Panic disorder (திடீர் பதற்ற நோய்), Specific phobias (குறிப்பிட்ட விஷயங்களுக்கு பயங்கள்) போன்றவையும் இந்த anxiety disorder பிரச்னையின் வகைப்பாடுகள்தான். இதுல எந்த வடிவத்திலயும் நோய்த் தாக்கம் ஏற்படலாம்.’’

“ஒருத்தருக்கு anxiety disorder வருவதற்கான காரணங்கள் என்னென்ன?’’

“உடலியல் காரணங்களை ஆராய்வது ரொம்ப முக்கியம் மினி. குறிப்பாக, தைராய்டு சுரப்பிகளின் அதிக செயல்பாடு போன்ற சில endocrine disorders காரணமாகலாம். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மரபியல் காரணங்களா இருக்கலாம். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள். மது அருந்துதல், அதிகமான caffine உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் இருக்கலாம். இவை எல்லாம் உடலியல் காரணங்கள். மனப் போராட்டங்களினால் ஏற்படும் குழப்பநிலை, இந்த உலகம் நம்மை ஏற்குமான்னு மற்றவர்களின் மதிப்பீட்டையே அதிகமா சிந்தித்து ஏற்படும் கலக்கம். இவையெல்லாம் உளவியல் காரணங்களா இருக்கலாம். இப்படி உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த, சமூகம் சார்ந்த பல காரணங்களின் கலவையால் தான் ஒருத்தருக்கு இந்த மனப்பதற்ற நோய் ஏற்படுது.”

“Anxiety disorder-இன் ஒரு வகையா panic disorder வரும்னு சொன்னீங்க அப்படின்னா என்ன டாக்டர், கேள்விப்பட்ட மாதிரி இருக்கு?”

“Panic attack கொஞ்சம் வித்தியாசப்படும். Panic attack அப்படிங்குறது. திடீர்னு ஏற்படும் தீவிர பதற்றம், அதாவது நொடிப்பொழுதுல ஒருத்தருக்கு ஏற்படுற அதீத பீதியுணர்வு. நெஞ்சு படபடத்து, வியர்த்து, மாரடைப்பிற்கான அறிகுறிகள் மாதிரியே வரும். தனக்கு என்னமோ நிகழப் போகுதுன்னு ரொம்ப பயப்படு வாங்க. ஆம்புலன்ஸ், அவசர சிகிச்சைப் பிரிவுன்னு அலைஞ்சா, உங்களுக்கு உடலுக்கு ஒண்ணுமில்லன்னு டாக்டர்ஸ் சொல்லுவாங்க. இது ஒரு முறை மட்டுமல்ல, அடிக்கடி நிகழும். சில நிமிடங்களில் உச்சமடையும் இந்த உடல்சார் அறிகுறிகள் மற்றும் தீவிர பயமானது, இந்தத் தாக்குதல் திரும்ப வந்துடுமோ அப்படிங்குற அதீத அச்சத்தை ஏற்படுத்தும் (Anticipatory Anxiety). அப்பறம்தான் இது உளவியல் சார்ந்த பிரச்னைன்னு புரிஞ்சு கிட்டு மனநல மருத்துவத்தை நாடுவாங்க.”

“இதுக்கு என்னதான் தீர்வு டாக்டர்?’’

“மருந்துகள், மனநல ஆலோசனை, இது மனநலன் சார்ந்த பிரச்னைன்னு விழிப் புணர்வு ஏற்படுத்தும் விளக்கங்கள், நடைமுறைப் பழக்கங்களை மாற்றும் பயிற்சிகள் (Techniques), இப்படிப் பிரச்னையின் தன்மையைப் பொறுத்து சிகிச்சைகள் வேறுபடும் மினி. குறிப்பா அந்த techniques என்னென்னா மனதை சாந்தப்படுத்தும் விஷயங்களை நினைத்துப்பார்த்தல் (Visualisation), மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின் படிப்படியாக வெளியேற்றும் சுவாசப் பயிற்சி (breathing), படிப்படியாக தசைகளைத் தளரச் செய்யும் பயிற்சிகள் (Progressive muscle relaxation), புலன் சார் உணர்வுகளை மேம்படுத்தி செய்யும் விழிப்புடைய ஆழ்நிலை பயிற்சிகள் ( Mindfullness exercise), grounding technique இப்படி பலது உண்டு. அதைப்பற்றி விரிவா விளக்க படங்கள் ஷேர் பண்ணுறேன்.’’

“வாவ் டாக்டர். sure... நம் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒரு உளவியல் காரணமும், அது சார்ந்த அறிவியலும் இருக்கு இல்ல.”

“ஆமா மினி... ரொம்ப அதிகமா Selfie எடுக்கிறதுல தொடங்கி, குடும்ப சிக்கல்கள், வேலையில் பிரச்னைன்னு நாம சந்திக்கிற எல்லாச் சூழல்கள் பின்னாடியும் ஒரு உளவியல் இருக்கு... இனி வரும் வாரங்களில் அதைப் பத்தியெல்லாம் பாப்போம்.”

“கண்டிப்பா டாக்டர். நிறைய பேசுவோம்.’’

(மினி-மன உரையாடல் தொடரும்)

மனமே நலமா? - 7

காட்சிப்படுத்துதல்

னதைப் பதற்ற நிலையிலிருந்து நகர்த்தி வேறொரு நிலைக்குக் கொண்டு செல்ல இது உதவும். விஷுவலைசேஷன் என்னும் காட்சிப்படுத்துதல் ஒரு பழக்கமாக மாறலாம். நீள் மூச்செடுப்பு பதற்றத்தைக் குறைக்க உதவுவதுபோல, காட்சிப்படுத்துதலும் மனதை அமைதியாக்கும்.

மனமே நலமா? - 7

உங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களைச் சுற்றியுள்ள பொருள்களில் எந்த 5 பொருள்களை உங்களால் பார்க்க முடிகிறது?

மனமே நலமா? - 7

உங்களால் கேட்க முடிந்த மூன்று அல்லது நான்கு விஷயங்கள் என்னென்ன?

மனமே நலமா? - 7

நன்றாக சுவாசியுங்கள். உங்களால் என்ன வாசம் உணர முடிகிறது?

மனமே நலமா? - 7

உங்கள் கைகள் மற்றும் கால்களால் தரை அல்லது உங்களால் தொட முடிந்த தூரத்தில் இருக்கும் பொருளைத் தொட்டுப் பாருங்கள். உங்கள் விரல்களுக்கு அடியில் அவை எப்படி இருக்கின்றன... என்ன உணர்கிறீர்கள்?

மனமே நலமா? - 7

உங்கள் உடலுடன் தொடர்புகொள்ளுங்கள். மெதுவாக சுவாசியுங்கள். நுரையீரலை முழுதாக காலி செய்யுங்கள். பிறகு மெதுவாக நுரையீரலைக் காற்றால் நிரப்புங்கள்.

மனமே நலமா? - 7

Progressive muscle relaxation (படிப்படியாக தசைகளைத் தளரச்செய்தல்)

நண்பர்களே... மனநலம் தொடர்பாக உங்கள் கேள்விகள், சந்தேகங்களை manam@vikatan.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.