Published:Updated:

``பபாசியின் செயல், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது" - கொதிக்கும் பதிப்பாளர்கள்

 புத்தக விற்பனை
புத்தக விற்பனை

`இது வெறும் பேப்பர் வியாபாரம் அல்ல. இது புத்தக வியாபாரம். இங்கு கருத்துரிமை அவசியமானது. அதை பபாசி புரிந்துகொள்ள வேண்டும்’

கடந்த 9 - ஆம் தேதி சென்னை நந்தனம் Y.M.C.A மைதானத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பொது மக்கள், வாசகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் பபாசியின் தரப்பிலிருந்து 11 ஆம் தேதி வெளியான ஓர் அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அறிக்கையில், அரங்கு எண் 101-ல் செயல்பட்டு வந்த மக்கள் செய்தி மையத்தை அரங்கிலிருந்து வௌியேறுமாறு தெரிவித்திருந்தனர்.

`புத்தகக் காட்சிக்கு அரங்கம் விண்ணப்பிக்கும்போது பபாசியின் விதிகளுக்கு உட்படுவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தோம்.

மக்கள் செய்தி மையம்
மக்கள் செய்தி மையம்

நீங்கள் அதற்கு ஒப்புக்கொண்டு விண்ணப்பித்து இருந்தீர்கள். அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக நீங்கள் உங்கள் கடையில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்பது விதிமீறலாகும். ஆகவே நீங்கள் தொடர்ந்து புத்தகக் காட்சியில் கலந்துகொள்வதை எங்கள் அமைப்பு தடை செய்கிறது. தங்கள் கடையை உடனடியாக அகற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மக்கள் செய்தி மையத்தின் அமைப்பாளர் வி அன்பழகன், பபாசி அமைப்பாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொன்னுலகம் பதிப்பகத்தின் உரிமையாளரும், எழுத்தாளருமான திருப்பூர் குணாவிடம் இதுகுறித்துப் பேசினோம்.``வெறும் பரபரப்பான செய்தியாக மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்துக்கான முயற்சியில் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைத் துறையினர் செயல்பட வேண்டும். எங்களின் பொன்னுலகம் பதிப்பகம் சார்பில் பிற பதிப்பக நண்பர்களையும் இணைத்துக் கொண்டு பபாசியிடம் இதுகுறித்து முறையிட உள்ளோம். மக்கள் செய்தி மையம் அரங்கில் தடை செய்யப்பட்ட நூல்கள் எதுவும் விற்கப்படவில்லை. அப்படியான சூழலில் இந்த நடவடிக்கை தவறானது. மேலும் அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்ற செய்தியிலும் உண்மையிருப்பதற்கான வாய்ப்பில்லை. இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகத் தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது " என்றார் திருப்பூர் குணா.

திருப்பூர் குணா
திருப்பூர் குணா

உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், ``அரசாங்கத்துக்கு எதிராக ஒரு புத்தகம் விற்பதற்காக ஒரு அரங்கை காலி செய்வதும், கைது செய்வதும் அச்சுறுத்தலாக இருக்கிறது. வெளியில் உள்ள வகுப்புவாத சக்திகள் காவல்துறையை இயக்குவதாகத் தெரிகிறது. ஒரு மொழியில் எழுதுகிற நூல்களில் அரசுக்கு ஆதரவானது, எதிரானது எனப் பிரிக்க முடியாது. தடை செய்யப்பட்ட புத்தகத்தை விற்பதுதான் சட்டப்படி குற்றம். மற்றபடி ஒரு அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிறது என்பதற்காக அந்தப் புத்தகத்தைப் பறிமுதல் செய்வதும், கைது செய்வதும் கண்டிக்கத்தக்கது" என்றார்.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

எழுத்தாளரும், ஆழி பதிப்பகத்தின் உரிமையாளருமான `ஆழி' செந்தில்நாதன், ``இதுபோன்று ஒரு அழுத்தம் அரசிடமிருந்து வரும்போது பபாசி அதற்குப் பணிந்திருக்கக் கூடாது. பபாசி என்பது பல பதிப்பகங்கள், பல புத்தக விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு. அரசாங்கத்திடமிருந்து ஒரு நிர்பந்தம் வருகிறபோது உறுதியாக அதை எதிர்த்து நிற்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அரங்கு உரிமையாளர்களை அழைத்து இதுபோன்ற ஒரு அழுத்தம் வருகிறது எனத் தெரியப்படுத்தி கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. பபாசியை மட்டுமன்றி அரசையும் சேர்த்துதான் விமர்சிக்க வேண்டும்.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், பதிப்பகங்கள் என அனைத்திலுமே அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அது கண்டிக்கத்தக்கது. பபாசி, கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஒருவர் மேல் வரும் புகாருக்கு முடிவெடுப்பது என்பது தவறானது. புத்தகச் சந்தை என்பது வெறுமனே விற்பனை சார்ந்தது அல்ல. அது ஒரு கலாசாரத் திருவிழா. அறிவுத் திருவிழா. அதில் கருத்துச் சுதந்திரம் கட்டாயம் வேண்டும். இது வெறும் பேப்பர் வியாபாரம் அல்ல. இது புத்தக வியாபாரம். இங்கு கருத்துரிமை அவசியமானது. அதை பபாசி புரிந்துகொள்ள வேண்டும்." என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு