Published:Updated:

` குழந்தைகள் மீது நடத்தப்படும் மறைமுக யுத்தம்!' - தனித்துப் போராடும் புதுகை செல்வா #MyVikatan

புதுகை செல்வா
புதுகை செல்வா

'காலாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில், காந்தியின் பிறந்தநாள் விழாவைப் பள்ளிகளில் கொண்டாட வேண்டும்' என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில், காந்தியின் பிறந்தநாள் விழாவைப் பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் போக்கைக் கண்டித்தும் புதிய உத்தரவைத் திரும்பப் பெறக் கோரியும் சமூக ஆர்வலர்கள் பலரும் நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.

உண்ணாவிரதத் தில் புதுகை செல்வா
உண்ணாவிரதத் தில் புதுகை செல்வா

இந்நிலையில், கல்வியாளர் வசந்திதேவியின் தலைமையில் செயல்பட்டுவரும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா, செப்டம்பர் 16-ம் தேதி காலை முதல் புதுக்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார். இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

புதுகை செல்வாவிடம் பேசினோம். “ பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எதிராக உள்ளன. கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இரண்டு நாள்களுக்கு முன்பே புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. பள்ளி மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் மத்திய, மாநில அரசுகள் மறைமுக யுத்தத்தை நடத்துகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில், தமிழக அரசு முந்திக்கொண்டு, இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொள்ளாமல், இந்த அரசு நடந்துகொள்கிறது. தேர்வு, தரம், பாஸ், ஃபெயில் என்பதெல்லாம் பிஞ்சுகளை மிரட்டும் பூதங்கள் என்பதை இந்த அரசுகள் ஏன் உணர மறுக்கின்றன. கற்றலின் உளவியல் நுட்பம் தெரியாமல், குழந்தைகளின் உணர்வோடும் பெற்றோரின் பதைபதைப்புடனும் இந்த அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது. `நீ மக்கு', `மோசம்', `ஃபெயில்', `உருப்படாதவன்' என்ற வார்த்தைகளாலேயே ஒரு குழந்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மருத்துவமனையில் புதுகை செல்வா
மருத்துவமனையில் புதுகை செல்வா

இப்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வுகள் என்பது அந்தக் குழந்தைகளைப் பள்ளியை விட்டே விரட்டுவதற்கு செய்யப்படும் திட்டமிட்ட சதி. உதாரணத்துக்கு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக எத்தனை லட்சக்கணக்கான மாணவ மாணவியர் பள்ளிக்கூடங்களை விட்டே காணாமல் போனார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, ஐந்தாம் வகுப்புகளிலும் எட்டாம் வகுப்புகளிலுமே தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அவர்களைத் துரத்தியடிக்க நடத்தப்படும் நாடகம்தான் இந்தப் பொதுத்தேர்வு. இது, குழந்தைகள்மீது தொடுக்கப்படும் மறைமுக யுத்தம்.

இச்சூழலில், காலாண்டுத் தேர்வுக்குத் தேவையான பாடங்கள் முடிக்கப்படாமலேயே, இப்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. காலாண்டு விடுமுறை நாள்கள் என்பது ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில்தான் அவனை ரிலாக்ஸ் செய்துகொள்ளவும், மற்ற உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடவும், நீச்சல் பழகவும், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளவும் முடியும். அப்படிப்பட்ட இந்தக் காலாண்டு விடுமுறை நாள்களில், காந்திய சிந்தனைகளைப் பரப்பி, பள்ளிகளில் கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு, மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.

எல்லா பள்ளிகளிலும் காந்தியின் சமதர்மச் சிந்தனைகள் கற்றுக் கொடுக்கப்படாமலா இருக்கிறது.. அரசின் உத்தரவை எதிர்த்து எனக்குத் தெரிந்த அறவழியில் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறேன். நம் பிள்ளைகளை நாம் காப்பாற்றாமல் வேறு யார்தான் பாதுகாப்பது?” என்கிறார், புதுகை செல்வா.

புதுகை செல்வா
புதுகை செல்வா

செப்டம்பர் 16-ம் தேதி, பகல் முழுவதும் உண்ணாவிரதம் இருந்த புதுகை செல்வாவின் உடல் நிலை, நேரம் செல்லச்செல்ல மிகுந்த சோர்வுக்கு உள்ளானது. இதனால் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கும் அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதனை அடுத்து அவரை சந்திக்க பல்வேறு சமூக நல அமைப்பினரும் மருத்துவமனைக்குச் சென்றனர். அவரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதை அடுத்து, தனது உண்ணாவிரதத்தை அன்று மாலை 7 மணியுடன் முடித்துக்கொண்டார்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு