Published:Updated:

“இது பதிவு செய்யப்பட வேண்டிய தியாக வரலாறு!”

ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்

கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட வெள்ளையர்கள், ஊமைத்துரை, சிவத்தையா உட்பட 16 பேரைப் பாளையங்கோட்டைச் சிறையிலும் இன்னும் சிலரைக் கோவைச் சிறையிலும் அடைத்திருந்தார்கள்.

``இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. எழுதப்படாத அந்த வரலாறுகளில் புனைவுக்கான இழைகள் ஏராளம் இருக்கின்றன. மலேசியப் பயணத்தில், நான் கண்ட ஒரு தெருவின் பெயரிலிருந்து துளிர்த்ததுதான் ‘காலா பாணி’ நாவல். ‘காலா பாணி’யை சாகித்ய அகாடமி தேர்வு செய்ததன்மூலம் அந்த வரலாறு பெரும் வாசிப்புத்தளத்துக்குச் செல்லும்’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

மாவட்ட ஆட்சியர் தொடங்கி கூட்டுறவுத்துறைத் தேர்தல் ஆணையர் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்து ஓய்வுபெற்றுள்ள ராஜேந்திரன், காலா பாணி தவிர்த்து, மதாம், 1801 உள்ளிட்ட நாவல்களையும் சிறுகதைத் தொகுப்பொன்றும், 3 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். கவிஞர் வெண்ணிலாவோடு இணைந்து, வந்தவாசிப் போர், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு ஆகிய இரு முக்கியத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நாடுகடத்தப்பட்ட தமிழ் அரசகுடிகளின் கதையை முன்வைத்து ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி' நாவல் 2022-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருக்கிறது. ராஜேந்திரனுக்கு வாழ்த்துகள் கூறி உரையாடினேன்.

“இது பதிவு செய்யப்பட வேண்டிய தியாக வரலாறு!”

‘‘2018-ல் என் ‘வடகரை' நாவலும், 2019-ல் ‘1801' நாவலும் இறுதிப்பட்டியல் வரை வந்தன. இந்த ஆண்டு ‘1801', ‘காலா பாணி' இரு நாவல்களுமே இறுதிப்பட்டியலில் இடம்பிடித்திருந்தது மகிழ்ச்சி. ‘1801' நாவலின் தொடர்ச்சிதான் ‘காலா பாணி' நாவல்.

கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட வெள்ளையர்கள், ஊமைத்துரை, சிவத்தையா உட்பட 16 பேரைப் பாளையங்கோட்டைச் சிறையிலும் இன்னும் சிலரைக் கோவைச் சிறையிலும் அடைத்திருந்தார்கள். சிறையுடைத்து அவர்களை மீட்க இரண்டுமுறை முயற்சிகள் நடந்தன. கோவைச் சிறையுடைப்பு முறியடிக்கப்பட்டு, அதில் முன்னின்ற 48 பேர் தூக்கில் போடப்பட்டார்கள். பாளையங்கோட்டையில் போத்திப் பகடை, பாண்டியன் சேர்வைக்காரர், குமாரசாமி நாயக்கர் மூவரும் முன்னின்று சிறையை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்டு சிவகங்கைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன்பின் போர் உக்கிரமாகி, ஊமைத்துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டு 1801-ல் காளையார்கோவிலில் தூக்கிலிடப்படுகின்றனர். இதுதான் ‘1801' நாவலின் உள்ளடக்கம்.

‘1801' நாவலுக்கு மலேசியாவில் ஒரு விருது அறிவிக்கப்பட்டது. அதற்கான பயணத்தில் பினாங்குத் தீவுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு தெருவுக்கு ‘ஜார்ஜ் லெயித் தெரு' என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயர் என்னை ஈர்க்க, அவரைப் பற்றித் தேடினேன். 1801 முதல் 1805 வரை அவர் பினாங்கில் கவர்னராக இருந்துள்ளார். அவர் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருந்தார். அந்த நூலை இணையத்திலேயே வாசித்தேன். அதில், ‘தூத்துக்குடியில் இருந்து அரசியல் கைதிகளாக 72 பேர் கப்பலில் பினாங்குக்கு வந்தார்கள். அவர்களில் சிவகங்கை மன்னராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவர் என்பவரை மட்டும் சுமத்ரா தீவில் தனிமைச் சிறையில் வைத்தோம். அவர் அங்கு நான்கு மாதங்களில் இறந்துவிட்டார்' என்று எழுதியிருந்தார். உடையணத் தேவர் உள்ளிட்டோரை சுமந்து வந்த கப்பல் 66 நாள்கள் கடலில் பயணித்திருக்கிறது. கப்பலிலேயே மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள். 10 பேர் மனநலம் பாதிக்கப்பட்டனர். நினைக்கவே நெஞ்சம் பதற வைக்கும் வரலாறு அது. இவற்றையெல்லாம் வாசித்தபோது இந்த வரலாற்றை நாவலாக எழுத வேண்டும் என்று தோன்றியது. சுமத்ரா தீவுக்குச் சென்று உடையணத் தேவர் இருந்த இடங்களையெல்லாம் பார்த்தேன். காலா பாணியை எழுத ஆரம்பித்தேன். வரலாற்றைச் சிதைத்துவிடாமல் சில புனைவுகளைச் சேர்த்தேன்.

வேங்கை பெரிய உடையணத் தேவர் இறந்த பகுதி என்னை பெரிதும் பாதித்தது. எழுதிவிட்டு திரும்பவும் வாசித்தபோது என்னையறியாமல் கண்ணீர் ததும்பியது. ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டவர், தன் நாட்டை மீட்கப் போராடிய காரணத்தால், பெயர் தெரியாத, மொழி தெரியாத ஒரு தீவில் அடையாளம் இல்லாமல் இறந்துபோனது உண்மையில் பெரிய சோகம்...’’ என்கிறார் ராஜேந்திரன்.

“இது பதிவு செய்யப்பட வேண்டிய தியாக வரலாறு!”

‘‘ஒவ்வோராண்டும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதும் விமர்சனங்களும் எழும். இவ்வாண்டும் சிலர் விமர்சிக்கிறார்கள்... கவனித்தீர்களா?’’

‘‘நான் பார்த்தவரை கடந்த ஆண்டுகளில் உருவான எதிர்ப்புகள், விமர்சனங்கள் அளவுக்கு இவ்வாண்டு எழவில்லை. ‘காலா பாணி' என்பது நம் முன்னோர்களின் கதை. பதிவு செய்யப்பட வேண்டிய தியாக வரலாறு.’’

‘‘அடுத்து என்ன எழுதுகிறீர்கள்?’’

‘‘ஒரு சமூக நாவல் எழுதி வருகிறேன். இப்போது மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் ஆட்சியர்கள் மீது புகார் அனுப்பும் நடைமுறை இருந்திருக்கிறது. அதில் சில சுவாரஸ்யங்களைக் கண்டடைந்திருக்கிறேன். அதுதான் நாவலின் மையமாக இருக்கும். இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இன்னும் ஏராளம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆங்கிலேய அதிகாரிகள் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், கடிதப் பரிமாற்றங்களில் லட்சக்கணக்கான செய்திகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அனைத்தையும் தமிழில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது...’’