தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கண்ணாடி விநாடிகள்! - க்ரைம் ஸ்டோரி!

கண்ணாடி விநாடிகள்! - க்ரைம் ஸ்டோரி!
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணாடி விநாடிகள்! - க்ரைம் ஸ்டோரி!

ரிமோட் சில்லுசில்லா உடைஞ்சு சிதறியதும் ஜெயந்தி என்னையே கொஞ்ச நேரம் முறைச்சுப் பார்த்துட்டு சட்டுன்னு எந்திரிச்சு பக்கத்து ரூமுக் குள்ளே போய் நுழைஞ்சு கதவைச் சாத்திகிட்டா.

அரசு மருத்துவமனை அந்த ராத்திரியின் ஒன்பது மணி வேளையில் ஒரு பிடிவாதமான நிசப்தத்தில் இருக்க, டூவீலர் பார்க்கிங்கில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் இறங்கினார். கான்ஸ்டபிள் ஒருவர் வேக வேகமாய் வந்து சல்யூட் வைத்தார்.

``ஸார்...”

``என்ன முருகேசன்... அந்தப் பொண்ணு இன்னும் உயிரோடு இருக்காளா?”

``ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு ஸார்... உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னார்.”

``குழந்தையோட நிலைமை?”

``அதைப்பத்தி டாக்டர் சொல்லலை ஸார்.”

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத் திய சம்பத், கான்ஸ்டபிள் முருகேசனோடு ஹாஸ்பிடலின் இன் பேஷண்ட் வார்டை நோக்கி மெல்ல நடை போட்டார்.

``பொண்ணோட பேர் என்ன..?”

``ஜெயந்தி ஸார்.”

``புருஷன் பேரு?”

``தனபால். ஈ.பி-யில் ஒர்க் பண்றார் ஸார்.”

``கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு?”

``அஞ்சு வருஷம்.”

``குழந்தைக்கு என்ன வயசு?”

``மூணு ஸார்... பேரு ஸ்வேதா.”

இருவரும் ஹாஸ்பிடல் படிகளில் ஏறி இன் பேஷண்ட் வார்டுக்குள் நுழைந்தார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்த சுவர்கள், நாலா பக்கமும் தெரிய, வரிசையாய் போடப் பட்டிருந்த கட்டில்களுக்கு இடையே மெளன மாய் நடந்தார்கள்.

அரை நிமிட நடைக்குப்பின், வலது பக்க சுவரோரமாய் தெரிந்த அந்த அறைக்கு முன் பாய் போய் நின்றார் கான்ஸ்டபிள் முருகேசன்.

``இந்த ரூம்தான் ஸார்.”

லேசாய் திறந்திருந்த அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்கள்.

இன்ஸ்பெக்டர் சம்பத் கட்டிலில் துவண்டு போய் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தார்.

வயது இருபத்தைந்து இருக்கலாம். கறுப்பு நிறம்... களையான முகம். சற்றே மெலிந்த உடம்பு வாகு. பாதி விழிகள் மூடியிருக்க லேசாய் திறந்திருந்த உதடுகள் அவளுடைய சீரான பல்வரிசையைக் காட்டியது.

சம்பத் பக்கத்திலிருந்த ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டே உட்கார்ந்தபடியே அவளிடம் கேட்டார்.

``ஏம்மா... பெத்த பிள்ளைக்கு விஷம் குடுத்துட்டு நீயும் தற்கொலை பண்ணிக்கப் பார்த்திருக்கியே... உனக்கு என்னம்மா பிரச்னை?”

ஜெயந்தி மூச்சு வாங்கியபடி மூடியிருந்த விழிகளை சிரமத்தோடு பிரித்து பேச முயன்ற விநாடி சம்பத்துக்கு பின்புறமிருந்து அந்தக் குரல் கேட்டது.

``இப்போதைக்கு ஜெயந்தியால் சரியா பேச முடியாது... ஸார் என்ன நடந்ததுன்னு நான் சொல்லலாமா... நா அவளோட ஹஸ்பெண்ட்.”

சம்பத் திரும்பிப் பார்த்தார்.

அந்த அழகான இளைஞன் கண்களில் நீர் நிரம்பித் தெரிந்தான்.

``ஸார்... என்னோட பேரு தனபால். ஈ.பி-யில் ஃபோர்மேனா வொர்க் பண்றேன். என் மனைவி ரொம்பவும் நல்ல டைப் ஸார். ஆனா சீக்கிரத்துல உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பண்ணிடுவா. ஆனா இன்னிக்கு இப்படியொரு அதிர்ச்சியான முடிவு எடுப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை ஸார்.”

சம்பத் அந்த தனபாலை எரிச்சலோடு பார்த்தார்.

``முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு...”

``சொல்றேன் ஸார்... இன்னிக்கு மத்தியானம் ரெண்டு மணியிருக்கும். லஞ்ச் சாப்பிடறதுக்காக வீட்டுக்கு வந்தேன் ஸார். நல்ல பசி. நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சப்ப என் மனைவி டி.வியில் சீரியல் பார்த்துட்டிருந்தா. வந்து சாப்பாடு போடுன்னு சொன்னேன். கை கால் கழுவிட்டு டைனிங் டேபிள்ல போய் உட் காருங்க வந்துடறேன்னு... சொன்னா ஸார். நானும் அவ சொன்ன மாதிரியே செஞ்சுட்டு டைனிங் டேபிள்ல போய் உட்கார்ந்துகிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஜெயந்தி மும்முரமா டி.வி. பார்த்துட்டிருந்தா. எனக்கு பசி அதிகமாயிருந்ததால சாப்பாடு போடச் சொல்லி மறுபடியும் ஒரு குரல் கொடுத்தேன். ஆனா அவ நான் சொன்னதைக் கண்டுக்கவே யில்லை. ரெண்டு நிமிஷம் பொறுங்க.. சீரியல் முடியப் போகுதுன்னு சொல்லிகிட்டே டி.வி யைப் பார்த்துட்டிருந்தா... அஞ்சு நிமிஷமாகி யும் அவ வரலை... பொறுத்து பொறுத்து பார்த்த நான் ஒரு கட்டத்துல ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்க முடியாமே எந்திரிச்சு போய், அவ கையிலிருந்த ரிமோட்டைப் பிடுங்கி டி.வியை ஆஃப் பண்ணிட்டு, ரிமோட்டை தரையில் ஓங்கி அடிச்சேன்.”

தனபால் அழுகையில் சில விநாடிகள் பேச முடியா மல் திணறிவிட்டு பிறகு பேச்சைத் தொடர்ந்தான்.

கண்ணாடி விநாடிகள்! - க்ரைம் ஸ்டோரி!

``ரிமோட் சில்லுசில்லா உடைஞ்சு சிதறியதும் ஜெயந்தி என்னையே கொஞ்ச நேரம் முறைச்சுப் பார்த்துட்டு சட்டுன்னு எந்திரிச்சு பக்கத்து ரூமுக் குள்ளே போய் நுழைஞ்சு கதவைச் சாத்திகிட்டா. கொஞ்ச நேரத்துல அவளோட கோபம் சரியா யிடும்ன்னு நினைச்சு நானும் சாப்பிடாமே அப்படியே உட்கார்ந்துட்டேன். ஆனா ஜெயந்தி கதவைத் திறந் துட்டு வெளியே வரலை. அவளை சமாதானப்படுத்த லாம்ன்னு நினைச்சு கதவைத் தட்டினேன். கதவைத் திறக்கலை. உடனே ஸ்டூல் போட்டு மேலே ஏறி வெண்டிலேட்டர் வழியா உள்ளே பார்த்தேன். சாணிப்பவுடரை கரைச்சு குழந்தைக்கு குடுத்து தானும் குடிச்சு, ரெண்டு பேரும் வாய்ல நுரை தள்ளி மயக்கமாகி கிடந்தாங்க... நான் பதறிப் போய் குரல் கொடுக்கவும், பக்கத்து வீடு, எதிர் வீட்ல இருந்தவங்க ஓடி வந்தாங்க... கதவை உடைச்சுத்தான் ரெண்டு பேரையும் வெளியே கொண்டு வர முடிஞ்சுது ஸார்.”

பெரிய அழுகையோடு பேசி முடித்த தனபால் ஒரு குழந்தையைப் போல் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு தேம்பினான்.

சம்பத்தின் பார்வை ஜெயந்தியின் பக்கம் திரும்பியது.

``ஏம்மா... புருஷன் பசியோடு வீட்டுக்கு வந்தா அவருக்கு சாப்பாடு போடறதை விட் டுட்டு சீரியல் பார்த்தது எந்த விதத்துல சரி... தப்பை நீ பண்ணிட்டு அவரை குற்றவாளியாக்கறது எந்த விதத்துல நியாயம்... ஏம்மா இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க?”

ஜெயந்தி பாதி திறந்த கண்களோடு சம்பத்தைப் பார்த்தபடி ஈனஸ்வரத்தில் முனகினாள்.

``நா... பண்ணினது தப்புன்னு... இப்பத்தான் ஸார் எனக்குத் தெரியுது.”

``இப்ப தெரிஞ்சு என்னம்மா பிரயோஜனம்..? ஒரு சின்ன விஷயத்தை பெரிசா எடுத்துகிட்டு நீயும் விஷத்தைக் குடிச்சு குழந்தைக்கும் குடுத்து... நல்லவேளை ரெண்டு பேரை யும் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட லுக்கு கொண்டு வந்து சேர்ந்ததால உயிர்களைக் காப்பாத்த முடிஞ்சுது... என்ன இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கோபம் இருக்கக் கூடாதும்மா...”

சுவருக்கு சாய்ந்து அழுது கொண்டி ருந்த தனபால் இன்ஸ்பெக்டர் சம்பத்தை ஏறிட்டபடி குரலை உயர்த் தினான்.

``அவளோட புத்தியில் உறைக்கிற மாதிரி நல்லாச் சொல்லுங்க ஸார்.”

சம்பத்தின் பார்வை தனபாலிடம் திரும்பியது.

``உன்கிட்டேயும் தப்பு இருக்கு.”

``என்ன... ஸார்... சொல்றீங்க... நான் என்ன தப்பு பண்ணினேன்?”

``சொல்றேன். இதுல... உன்னோட மிகப் பெரிய தப்பு எது தெரியுமா...? சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத ஒரு வகையான ஈகோ உன்கிட்ட இருக்கிறதுதான். நீ பசியோடு வீட்டுக்கு வந்தப்ப உன் மனைவி டி.வி.யில் சீரியல் பார்த்துட்டு இருந்தா. நீ சாப்பாடு போடச் சொல்லிக் கூப்பிட்டே... இல்லையா?”

``ஆமா ஸார்.”

``நீ கூப்பிட்டதும் சீரியல் பார்க்கிற மும்முரத்துல அவ எந்திரிச்சு வரலை. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்கன்னு சொன் னாளா?”

``ஆமா ஸார்.”

``அடுத்த நிமிஷமே... நீ என்ன பண்ணி யிருக்கணும். மனைவி வந்து சாப்பாடு போடலைன்னா என்ன... நாம்பளே தட்டை எடுத்து வெச்சுகிட்டு சாப்பிடலாம்ங்கிற முடிவுக்கு வந்து, அதை செயல் படுத்தியிருக்கணும். நம்ம வீட்ல நாம்பளே தட்டை எடுத்து வெச்சுக் கிட்டு தானே பரிமாறிகிட்டு சாப் பிடறது ஒண்ணும் தப்பில்லையே... அது மரியாதைக் குறைவும் கிடையாது. மனைவி வந்துதான் பரிமாறணும்ன்னு நீ ஈகோ பார்த்த காரணத்தாலதான் இந்த விபரீதம் நடந்திருக்கு.”

தனபால் முகம் மாறிப்போய் ``ஸாரி ஸார்” என்றான்.

``உன்னை மாதிரியான ஈகோ உள்ள ஆட்கள் கடைசியா சொல்ற ஒரு சுலபமான வார்த்தை இந்த ஸாரிதான். இனியாவது இந்த ஈகோவையெல்லாம் தள்ளி வெச்சுட்டு கட்டினவளோடு சந்தோஷமா குடும்பத்தை நடத்து. சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையைவிட மனவலிமைதான் தேவை. புரியுதா..?”

``புரியுது ஸார்...” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி தனபால் தலையசைத்துக் கொண்டிருக்கும் போதே சம்பத் கட்டிலில் படுத்திருந்த ஜெயந்தியிடம் குனிந்தார்.

``உனக்கும்தாம்மா சொல்றேன். வெளியே போய் சம்பாதிச்சுட்டு வர்ற ஆம்பளைகளுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும். அந்தப் பிரச்சினைகளோடுதான் சாப்பிட உட்காருவாங்க. வீட்ல இருக்கிற பெண்கள்தான் அதைப் புரிஞ்சுட்டு நடந்துக் கணும். பசியோடு சாப்பிட காத்திருக்கிற புருஷனைவிட உனக்கு டி.வி சீரியல் பார்க்கிறதுதான் முக்கியமாபட்டிருக்கு இல்லையா..?”

ஜெயந்தி நடுங்கும் கைகளோடு சம்பத்தைப் பார்த்து கும்பிட்டாள். வறண்டு போன உதடுகளை அசைத்து மெல்லப் பேசினாள்.

கண்ணாடி விநாடிகள்! - க்ரைம் ஸ்டோரி!

``எ...எ... என்னை மன்னிச்சுடுங்க ஸார்… தப்பு… பண்ணினதுஅவரில்லை. நான்தான்.”

இன்ஸ்பெக்டர் சம்பத் மருத்துவமனை யிலிருந்து புறப்பட்டு தன்னுடைய வீடு போய்ச் சேர்ந்தபோது ராத்திரி ஒன்பதரை மணி.

பைக்கை முன்புற போர்டிகோவில் நிறுத்திவிட்டு வாசற்படி ஏறி காலிங் பெல்லை அழுத்த முயன்ற விநாடி, கதவு லேசாய் திறந்திருப்பதை கவனித்துவிட்டு அதைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனார்.

ஹால் சோபாவில் உட்கார்ந்து செல்போனில் எதையோ பார்த்து சிரித்தபடி அவருடைய மனைவி செளம்யா பார்வைக்குத் தட்டுப் பட்டாள். சம்பத் எரிச்சலான குரலில் கேட்டார்.

``என்ன செளம்யா... வாசல் கதவைக்கூட சாத்தி தாழ் போடாமே செல்போன்ல அப்படி என்னத்தைப் பார்த்துட்டிருக்கே..?”

செளம்யா நிமிர்ந்து கூட பார்க்காமல், செல்போனில் பார் வையை பதித்தபடி பேசினாள்.

``வாட்ஸ்அப்ல ஒரு இண்ட் ரஸ்டிங்கான வீடியோ போயிட் டிருக்கு. நீங்க யூனிஃபார்மை கழட்டி வெச்சுட்டு லுங்கி கட்டிட்டு வாங்க.. ரெண்டு பேருமே வீடியோவை சேர்ந்து பார்ப்போம்.”

சம்பத்தின் தலைக்கு ரத்தம் விர்ர்ரென்று பாய்ந்தது. கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டார்.

``சரி, இன்னிக்கு என்ன டின்னர்...?”

கேட்ட கேள்விக்கு செளம்யா பதில் சொல்லாமல் செல்போனின் வாட்ஸ்அப் வீடியோ காட்சியில் மூழ்கிப் போயிருக்க, சம்பத்தின் ஒட்டு மொத்த மூளைப் பிரதேசமும் கொதிநிலைக்குப் போயிற்று.குரலை உயர்த்தினார்

``செளம்யா… உன்கிட்டத்தான் பேசிட் டிருக்கேன்”

``எதுக்காக… இப்படி கத்தறீங்க... நான் என்ன செவிடா? இப்பத்தான் செல்போனை எடுத்து வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி என் ஃபிரெண்ட் ஒருத்தி அனுப்பியிருந்த வீடியோவைப் பாக்க ஆரம்பிச்சேன். அதுக் குள்ளே. நீங்க வந்துட்டீங்க… போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம். யு.எஸ்ஸில் இருந்து வீடியோவை என்னோட ஃபிரெண்ட் அஷ்வினி அனுப்பியிருக்கா... வெரி

அமேஸிங்.”

``வீடியோவெல்லாம் பார்க்க எனக்கு நேரமில்ல. நான் சாப்ட்டுட்டு உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போகணும். ஏசிபி பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக் கார்.”

``உங்க ஏசிபியைப்பத்தி எனக்குத் தெரியாதா என்ன... பத்து மணிக்கு அவர் வர்றேன்னு சொன்னா அதிலிருந்து ரெண்டு மணி நேரத்தைக் கூட்டிக்கணும்.”

“செளம்யா... இந்த கேலி கிண்டல் பேச்செல்லாம் வேண்டாம். நான் பத்து மணிக்கெல்லாம் ஸ்டேஷன்ல இருக்கணும்.”

சம்பத் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாத செளம்யா வீடியோவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, சம்பத்தின் உடலில் ஆவேச ரத்தம் அலையடிக்க ஆரம்பித்தது. வேகமாய் நெருங்கி அவள் கையில் இருந்த செல்போனைத் தட்டிப் பறித்து, எதிரில் இருந்த சுவரில் ஓங்கியடித்தார். செல்போன் தனக்குள் இருந்த உதிரிபாகங்கள் எல்லாத் திசைகளிலும் சிதறியபடி தெறித்து விழுந்தன.

மானசீகமாக ஒரே ஒரு விநாடி நேரத்தில் அந்தக் காட்சி தன் மூளைப் பிரதேசத்தில் ஓடி முடிய, சம்பத் அடுத்த விநாடியே இயல்பான நிலைமைக்குத் திரும்பினார்.

அவருடைய மூளையின் நியூரான்கள் வெளிச்சமாய் ஒளிர்ந்து சற்றுமுன் மருத்துவ மனையில் தனபாலுக்கும், ஜெயந்திக்கும் தான் சொன்ன வார்த்தைகள் ஸ்க்ராலிங் செய்தபடி மனத்திரையின் ஓர் ஓரமாய் ஊர்ந்தது.

``சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல்வலிமையைவிட மனவலிமைதான் தேவை.”

செளம்யா செல்போனின்றும் தலையை உயர்த்தாமல் பேசினாள்.

“என்ன… இன்னும் நின்னுட்டிருக்கீங்க… போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க.”

சில விநாடிகள் அங்கேயே நின்று செல் போனில் மூழ்கியிருந்த மனைவி செளம்யாவை ஒரு பெருமூச்சோடு பார்த்த சம்பத், பின் காக்கி யூனிஃபார்மிலிருந்து லுங்கிக்கு மாற, தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

உடம்பு முழுவதும் ததும்பிக்கொண்டிருந்த கோபத்தையும், ஆத்திரத்தையும் அவருடைய மன வலிமை சிறிது சிறிதாய் தின்று

ஜீரணித்துக் கொண்டிருந்தது.