Published:Updated:

ரயில் பூச்சி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- அமுதா ஆர்த்தி

ரயில் பூச்சி - சிறுகதை

- அமுதா ஆர்த்தி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

அம்மா சொன்னதையே நினைத்துக் கிடந்தாள்.

‘நாளைக்காவது போய் அந்த ஜுவல்லரிக் கடையில நிக்கிற தொகை இருபதாயிரத்தை வாங்கிக்கிட்டு வா. இந்த வாரத்துக்குள்ள புது வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். இல்லன்னா வீடு மாறிப் போய்விடும்.’

எப்படி அந்த ஜுவல்லரிக் கடைக்குப் போறது? நினைக்கும்போதெல்லாம் அவன் நினைவுகளால் குழம்பிக்கிடந்தாள். அவன் ஜுவல்லரிக் கடையில் இல்லாதிருந்தால் பணத்தை கேஷியரிடமிருந்து வாங்கிவிட்டு வந்துவிடலாம். கேஷியர் லீவில் இருக்காருன்னும் எத்தனை முறைதான் அம்மாவை ஏமாற்றுவது. போறதுக்கு அரைமணி நேரத்திற்குமுன் பேங்குக்குப் போனார் என்றும் அடுக்கடுக்கான பொய்கள் சொல்லித் தப்பித்து வந்தாள்.

நாளைக்கி எப்படியாவது போய் வாங்கிவிட வேண்டியதுதான். அவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும். கண்களை நேருக்குநேராகப் பார்க்கும் துணிச்சல் இல்லாமலா அவனைக்கண்டு மனசு படபடக்கிறது. எல்லா நினைவுகளும் அவனைச்சுற்றியே ஒரு போர்வையைப்போலப் போர்த்தியிருந்தாள். அவள் அம்மா எப்போதும் அதிகாலையில் எழும்பி மின் விசிறியைக் குறைத்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். இப்ப படுத்தது மாதிரி தெரியுது, அதற்குள் விடிந்துவிட்டது. மின்விசிறியை வெறிப்பதுபோல் மல்லாந்து படுத்துக் கிடந்தாள். மின்விசிறியின் வேகம் குறைந்திருந்தது. அப்படியே தன்மீது விழுந்துவிடாதா? ஐயோ, வேண்டாம்… வீட்டில் உருப்படியாக இருப்பது இது மட்டும்தான். விழுந்தாலும் மீண்டும் வாங்கி நான்தான் மாட்டணும், அதுக்கு தொங்கிக்கிட்டே இருக்கலாம். எந்த ஒட்டடையும் இல்லாமல் அவ்வளவு சுத்தமாக இருந்தது மின்விசிறி. இப்படியான வேலைகளை மட்டும் அம்மா சரியாகச் செய்கிறாள். அதிகாலைக் குளிராலும் இரவு தூக்கம் இல்லாததாலும் உறக்கம் சொக்கிக்கொண்டு வந்தது. இந்த ஊரடங்கை இன்னும் ஒரு மாசம் நீட்டி வச்சாங்கன்னா நல்லாருக்கும். இப்போது வேலை பார்க்கும் அந்தப் பிரபல ஜுவல்லரியில வேலை கிடைச்சதால தப்பிச்சேன். இந்தக் கொரோனாத் தொற்று ஊரடங்கிலும் சம்பளம் சரியாக அக்கவுண்டுக்கு வந்துவிடுகிறது. அங்கு வேலை கிடச்சதே அதிர்ஷ்டம் என்று அம்மா சொன்னாள்.

ரயில் பூச்சி - சிறுகதை

கடையில் வேலை பார்ப்பதே உற்சாகமான மனநிலை அவளுக்கு. பகலைவிட அந்திசாயும்போது விளக்குகளின் ஒளியில் நகைகளின் மினுமினுப்பு சேர்ந்து ஜொலிப்பது மங்களகரமான உணர்வையே உண்டுபண்ணியது. ஒரே மாடல் நகைகளைப் பார்ப்பது அயர்ச்சியாக இருக்கும். புதிய மாடல்களில் மனம் உற்சாகம்கொள்ளும். கடையில் வேலை பார்க்கிறோம் என்ற நிலையை மீறி, பொறுப்பும் நகைகளைக் கையாளும் விதத்திலும் அக்கறை கொள்ளும்.

வீட்டுச் சன்னலின் இடைவெளியில் அதிகாலை ஒளி தவழ்ந்தது. ஒளிக்கு முதுகுகாட்டி வலப்பக்கமாகச் சரிந்தாள். மகள் தானாக எழும்புவதற்கான பரபரத்த சத்தங்களை உருவாக்கிக்கொண்டேயிருந்தாள் அம்மா. ஒருகட்டத்தில், மின்விசிறியை ஆஃப் பண்ணி பொறுமையின் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்துவாள்.

கொஞ்சநேரத்தில் எழும்பிவிடலாம் என நினைத்தே மீண்டும் உறங்கியிருந்தாள். அம்மா தண்ணி பிடித்து, பாத்திரம் கழுவி, முற்றத்தில் நீர்தெளித்து கோலத்திலும் சில புள்ளிகளை மறந்து எப்படியோ ஒன்றுசேர்த்திருந்தாள். வெந்நீர் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. ரேசன் அரிசி புடைத்து சுத்தமாக்கி, பாத்திரத்தில் தட்டி நீர் ஊற்றி வைத்திருந்தாள். மெல்லமாக தொண்டையைச் செருமினாள். ஆனாலும் வாயைத் திறக்க பயமாக இருந்தது. எதாவது சொல்லப்போய் தற்கொலை செய்துகொண்டால் தன்னந்தனி ஆகிவிடுவோமே என்ற எண்ணமும். எப்படி இவளை வழிக்குக் கொண்டு வருவது.

மகளின் வயதில் சந்தோஷமாக வாழ்ந்த நினைவுடன் அவள் கணவனது போட்டோவின் முன் நின்று அழுதாள். மகளின் ஐந்து வயதில், விபத்திற்குள்ளாகி இறந்துபோனார். உடற்கூறாய்விற்கு சம்மதிக்காததால் நஷ்டஈட்டுப் பணமும், ஒவ்வொரு வீடாக மாறுவதால் விதவைக்கான உதவித்தொகையும் அவள் கைக்கு வரவில்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வயதும் சில வருடங்களில் அறுபதைத் தொடும். திருமணமாகி இருபது வருடங்கள் கழித்து நாகராஜா கோவிலில் நேர்ந்து பிறந்த மகள் என்பதால் அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவாள். பிறந்த மூன்று மாதத்தில் மகளின் அருகில் நல்ல பாம்பு வந்ததைச் சொல்லுவாள், மகள் தெய்வத்தின் பிறவி என்று. பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்க வைத்தாள். மகள் வேலைக்குச் செல்லத் தொடங்கியதும் உடல்நிலை சரியில்லை என வேலைக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டாள். மகள் உழைப்பில் எல்லாம் நடந்தன.

வீட்டின் பின்புறம் மீன் விற்பவளின் சத்தம் கேட்டது. `மீன் வாங்கணுமா, சொல்லு’ எனக் கோபம் அடக்கிய மெதுவான குரலில் கேட்டாள்.

ரயில் பூச்சி - சிறுகதை

விழிப்புத்தட்டியவள், `ஐயோ தூங்கிட்டோமே, எப்படி வேலைக்குப் போகமுடியும். முன்பு வேலைபாத்த ஜுவல்லரிக் கடைக்கு ரூபா வாங்கப் போணும். நாளைக்கி வேலைக்கி போய்க்கிடலாம்’ என சமாதானம் செய்துகொண்டே அம்மாவிற்குப் பதில் சொன்னாள்.

“நேத்தைக்கே மீன்காரி திட்டிக்கிட்டுதானே போனாள். வாங்கின கடனைக் கொடுக்காம எப்படி மீன் வாங்கமுடியும். கடன் வாங்குவதே உங்களுக்குப் பிடிக்காது, இருந்தும் வாங்கியாச்சி, திரும்ப எப்படி? என்னை எழுப்பணும்னா எழுப்பிருக்கலாம்தானே. அதுக்கு இப்படியா?” என்றாள் மகள்.

“ஜுவல்லரி திறந்து பதினைந்து நாள் ஆகுது. உனக்கு இன்னும் ஊரடங்கு முடியல. இந்த மாதத்தோட நாம இருக்குற வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகை வாடகையில் கழியுது. இருந்த பொட்டுக் கம்மலையும் அடகு வச்சாச்சி. அதுல இப்ப நூறு ரூபாதான் மிச்சம். அதத்தான் உனக்கு பஸ்ஸுக்குத் தந்துவிடணும்.”

“பதினைந்து நாள் லீவுக்கான டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கி வச்சாச்சு. நீ இன்னும் எதையோ நினைச்சிக்கிட்டு...’’

எதுவும் பேசாமல் பல் துலக்கத் தொடங்கினாள். தேய்க்கும்போதே மண்ணில் ஊர்ந்துசெல்லும் கறுப்புநிற ரயில் பூச்சி உடலின் பக்கவாட்டில் மினுங்கிக்கொண்டிருந்த அதன் உருவ அமைப்பைப் பார்த்து வியந்தாள்.

ரயில்பூச்சிகூட பொறக்கும்போதே நகையோட பொறந்திருக்கு. ஜுவல்லரிக் கடையில் நகைகளையே பாத்துக்கிட்டு இருப்பதால் அந்த ஆசை வரவில்லை. அவன் என்றைக்கு வந்துவிட்டுப் போனானோ அன்றிலிருந்துதான் அதன்மீது வெறுமையை உணர்ந்தாள். பற்பசையை வேண்டுமென்றே ரயில்பூச்சியின்மீது துப்பினாள், சுருண்டு கொண்டது. சிறிது நேரத்தில் பசையுடன் அது நகர்வதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். கடைக்குக் கிளம்புவதற்காக பீரோவில் இருந்த மஞ்சள் நிறப் புடவையை எடுத்து முகர்ந்தாள். புதுத் துணியின் வாசனை அப்படியே இருந்தது. புடவை கட்டிக்கொண்டிருக்கும்போதே அம்மா மறுபடியும் நினைவுபடுத்தினாள்.

“எப்படியாவது ரூபா வாங்கிட்டு வந்துடு. அந்த வீட்ட விட்டா வீடு கிடைக்கிறது கஷ்டம்.”

கோபமாக அம்மாவின் முகத்தைப் பார்த்தவள், வார்த்தைகளை வாரி இறைத்தாள்.

ரயில் பூச்சி - சிறுகதை

“நாகர்கோவிலையும் வில்லுக்குறியையும் விட்டா வேற இடமே கிடையாதா உங்களுக்கு. அதுலயும் நம்ம ஜாதிக்காரங்க இருக்குற இடம் பாத்துதான் குடிபோற… வேலை பாக்க நிறைய கடைகள் இருக்கு. எதுக்காக ஜுவல்லரிக் கடையை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிற... உனக்கு என்ன கட்டியே குடுக்கக்கூடாது, அப்படித்தானே? உன்ன நான் கண்கலங்காம வச்சிக் காப்பத்தணும், அதத்தானே நினைக்கிற. எனக்க மேல உனக்கு அக்கறை இருந்தா காசு சேத்து வச்சிருப்ப. என்னோட சம்பளக் காசு அத்தனையும் செலவழிக்கிறது உனக்க வேல... வர்றவன்கிட்ட சொல்லு, சீதனமா என் பொண்ணுகூட நான்தான் வருவேன்னு... பானையில கடைசிச் சொட்டு நீர் தீரும்வரை இருக்க வேண்டியது, மறுபடி புலம்ப வேண்டியது...’’

“உனக்குக் கிடைக்கிற வருமானத்துல வீட்டுப்பாடுக்குத்தான் சரியா இருக்கு. இதுல எங்க மிச்சம் பிடிக்க முடியும். நீ ரூபா வாங்கவே போக வேண்டாம்...” கண்ணீரைத் துடைத்தபடி சமையலறையில் கொதிக்கும் சோற்றுப்பானையின் மூடியைத் திறந்துவைத்து வெறித்தபடி பார்த்துக்கொண்டேயிருந்தாள் அம்மா.

மகள் கோபம் அடங்கியதும் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தாள், அம்மாவிடம் எதுவும் சொல்லாமல்.

பேருந்தில் இருக்கையைப் பிடித்து உட்கார்ந்துகொண்டு அம்மாவைத் திட்டியதை நினைத்துத் தனக்குத்தானே பேசினாள். ‘எதுக்காக இவ்வளவு கோபம் அவங்கமேல? நான் செய்தது சரியே இல்ல… அடங்க மறுக்கும் உடலின் உணர்வு இப்படியெல்லாம் பேசச் சொல்லுது. இனிமேல் அவங்கள பேசக்கூடாது. தப்பு அம்மா மேல இல்ல. அவன் மேலதான். இல்ல... இல்ல... என்மேலதான்.’ பழியைத் தன்மேல் எறிந்ததும் கண்ணீர் வந்தது. முகம் மறைத்தாள். கொஞ்சநேரம் பார்க்கில் போய் தனிமையில் உட்கார்ந்துவிட்டுக் கடைக்குப் போகலாம் என எண்ணினாள். பஸ்ஸை விட்டு இறங்கி சாலையைக் கடந்து பார்க் போகும்வழியில் ஐந்து ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு தனிமையில் இருந்த இருக்கையில் போய் உட்கார்ந்தாள். மரங்களைப் பார்த்தவாறே அவனை நினைத்தாள்.

முதலில் காதலைச் சொன்னான். இரவில் அதிக நேரம் பேசினோம், தினமும் எல்லா வேலைகளும் எளிதாக இருப்பதாக உணர்ந்தேன். எத்தனையோ முறை வெளியில் செல்ல அழைத்தும் போகாததுதான் அவனுக்குக் கோபமோ… இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அம்மா என்னோடு அடிக்கடி சொல்லும் வார்த்தை ஆசை வார்த்தைசொல்லும் ஆண்களை நம்பக்கூடாதென்று. வீட்டிற்குப் பெண் பார்க்க வருவேன் என்று சொன்னான். வாங்கிவைத்த மல்லிகைப்பூ இரவு முழுவதும் வீடெல்லாம் மணத்துக்கொண்டிருந்தது. காலையில் அம்மா அவளின் அக்காவையும் அக்காவின் மகளையும் அழைத்திருந்தாள். அவன் அம்மா அக்காவோடு வீட்டிற்கு வந்தான்.

முதல்முறை பார்ப்பதுபோன்று நடந்துகொண்டான். ஐந்து பவுன் நகை போட்டுக் கல்யாணத்தை நடத்தியும் விட வேண்டும் என்றார்கள். அம்மா முழித்துக்கொண்டிருந்தாள். அக்காதான் இடையில் கேட்டாள். ‘உங்க பையன் விரும்பித்தானே வந்தான். அப்புறம் எதுக்கு இதெல்லாம். வசதியில்லாதவர்கள், தகப்பனில்லாத பெண், பார்த்துப் பேசுங்கள்’ என்றாள். ‘நம்ம ஜாதியா இருக்குறதனாலத்தான் வீடு தேடிவந்தோம்’ என்றார்கள். கொடுத்த டீயில் பாதியைக்குடித்துவிட்டு வைத்துவிட்டான். ஒரே வார்த்தையில் அம்மா சொன்னாள். ‘என் பொண்ணுக்கு இப்போது நேரம் சரியில்லை. ஒரு வருடம் கழியட்டும்’ என்றாள். அவன் எதுவுமே பேசாமல் இருந்தான்.

அவனோடு பழகிக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் கையைப் பற்றி இழுத்து வாயில் மிட்டாயைத் திணித்தான். அப்பாவின் அரவணைப்பில்லாத ஏக்கம் அவன் கைகளில் காண்பதாகத் தோன்றியது.

அவர்கள் போனபிறகு அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ள அவளின் அம்மா சொன் னாள். அவளோ, வேலையை விட்டு நீங்குவதாகவே சொன்னாள். இரண்டு மாதம் வேறு ஜுவல்லரியில் வேலைதேடி அலைந்தாள்.

இரவில் செல்போனின் மெல்லிய குருவிச்சத்தம் எந்த ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப் படையச் செய்கிறது. வேகமாகத் துடிக்கும் இதயத்தை ஆற்றுவதே பெரும்பாடெனக் கடந்தாள்.

எல்லாம் குறிப்பிட்ட எல்லைக்கு மேலே பழகிவிடத்தான் செய்கிறது. செல்போன் சத்தம் கேட்கும்போதெல்லாம், அவனோ என தினமும் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். அவன் போன் நம்பரை டெலிட் பண்ணியபின் மனம் பதைத்தது. ஒருமுறை போன் பண்ணிப் பாத்திருக்கலாமோ. அவசரப்பட்டுச் செய்துவிட்டோமோ. எனது நம்பரும் அவனிடம் இருக்கும், சொல்லலாமே ஒரு மன்னிப்பாவது.

என்னை நிராகரிப்பதற்கு இது ஒரு வழியாகக் கூட இருக்கலாம். இரண்டு மாதத்திற்குமுன் என்னோடு வேலைபார்த்த பெண் பேருந்தில் வைத்துச் சொன்னாளே, ‘‘ஏ, என்ன உங்க வீட்ல அவனுக்கு டீக்கு பதிலாக பாயாசம் காச்சிக் குடுத்தீங்களாம்... அப்புறமா உங்க அம்மா ஒரு லூசாமில்ல. அப்படின்னு சொன்னான். கடையில எல்லாரும் சிரிச்சிட்டோம் தெரியுமா...’’ அப்படிச் சொன்னதையாவது சொல்லி அவனை போன் பண்ணித் திட்டியிருக்கலாமே, அதையும்தான் செய்யவில்லை என நினைத்தாள்.

பார்க்கில் கூட்டம் இல்லாமல் இருந்தது. அவளைச் சுற்றிச் சுற்றியே ஓடித்திரிந்த அணில்கள் இலைகளையும் காய்களையும் கடிப்பதும் கொறிப்பதுமாக இருந்தன. பார்க்கில் தனித்திருக்கும் ஒரு பொம்மையைப்போல் தன்னை நினைத்தாள். அவனைப் பார்த்தால் எப்படியெல்லாம் பேசவேண்டும் எனக் கற்பனை செய்துகொண்டாள். அவனோடு எதற்குப் பேசவேண்டும் எனவும் சமாதானம் செய்துகொண்டாள்.

அவனைப் பார்த்து `நீயெல்லாம் ஒரு மனுஷனா?’ எனக் கேட்டுவிடலாமா... வேண்டாம். அவன் முகத்தையே பார்க்கக்கூடாது. வேலையை விட்டு நின்று எட்டு மாதமாகிறது, அவனைப் பார்த்தும்தான். அவனுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமோ... என்ன நினைப்பு இது? அவனுக்கு ஆனால் என்ன, ஆவாட்டி என்ன, நாம வந்த வேலை ரூபா வாங்க... அத மட்டும் பாப்போம். தேவையில்லாத வேலை நமக்கெதுக்கு என நினைத்துக்கொண்டே மணியைப் பார்த்தாள். இப்போது போனால் சரியாக இருக்கும் என நினைத்தபடி கடைக்கு நடந்தாள்.

கடையை அருகில் பார்த்ததும் பாதை தவறிய குழந்தைபோல் விழித்தாள். கதவைத் தள்ளி உள்ளே சென்றாள். அவளைப் பார்த்த வரவேற்பறைப் பெண் சிரித்த முகத்துடன் கைகளைப் பற்றினாள்.

``எப்டி இருக்க..?”

``ம்... இருக்கேன். அவன் எங்கே..?”

‘‘அவன் வரல...”

கொஞ்சம் நிம்மதியடைந்தவளாக சேரில் உட்கார்ந்தாள். வரவேற்பறைப் பெண் கேஷியருக்கு போன் செய்து விவரம் சொல்லி அழைத்தாள். சிறிதுநேரத்தில் அவர் வந்தார்.

‘‘வாம்மா... நல்லாருக்கியா..?”

‘‘இருக்கேன் சார்...”

‘‘ஒரு போனாவது பண்ணி விவரம் நீ கேட்கல. இரண்டு வாரம் ஆள் வேலைக்கு வரவில்லை என்றால் வேறு ஆள் எடுப்போம். உனக்கு வரவேண்டிய பணத்தை வேலையை விட்டுப் போகும்போதே எழுதிக் கொடுக்க வேண்டாமா... நீ இப்போது எழுதிக் கொடுத்துவிட்டுப் போ, மூன்று மாதம் கழித்துதான் ரூபா கிடைக்கும்.”

ரயில் பூச்சி - சிறுகதை

கைகளைப் பிசைந்து யோசித்தவளாக, ‘‘சார், வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கணும்” என்றாள். ‘‘என்னம்மா பண்றது, ரூல்ஸ் அப்படி. இந்தாம்மா, இந்தப் படிவத்தை நிரப்பிக்கொடு, உன்னோட அக்கவுண்டுக்குப் போட்டுவிட்டிருவோம்.” எழுதிக் கொடுத்துவிட்டு என்ன சொல்வதென்றே தெரியாமல் எழுந்தாள்.

வரவேற்பறைப் பெண் தன்னிடம் பொய் சொல்கிறாளோ என நினைத்து அங்குமிங்கும் நோட்டம் விட்டதை அறிந்த கேஷியர், “அவனையாம்மா தேடுற… அவன் வேலையை விட்டு நின்று ஐந்து மாதமாகிறது” என்றார்.

வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதுபோல் உடலெங்கும் வெறுமையை உணர்ந்தாள். அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. மீண்டும் அதே பார்க்கில் போய் உட்கார்ந்தாள். அங்கு கூட்டம் பரவாயில்லாமல் இருந்தது. யாரும் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. காலியான இருக்கையில் சிந்தனையற்ற பாவனையில் இருந்தாள்.

காலில் ஏதோ ஊர்ந்துசெல்லும் உணர்வு. கால்களைத் தட்டிவிட்டுக் குனிந்து பார்க்கும்போது, அங்கு நிறைய ரயில்பூச்சிகள் ஊர்ந்து சென்றன. அவள் தட்டியதில் பாதி உடல் நசுங்கிய பூச்சி, மீதி உடலை இழுத்துக்கொண்டு சென்றது. தொடு உணர்வில் ரயில்பூச்சி தன்னைச் சுருட்டிக்கொள்வதுபோல் அவன் நினைவுகளால் தன்னைச் சுருட்டிக்கொண்டாள். சில பூச்சிகள் ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்தன.