Published:Updated:

`அடுத்த படைப்பு எப்போது வரும்?’ - 'வேள்பாரி பாராட்டு விழாவில் சு. வெங்கடேசன் பதில்

சென்னையில் வேள்பாரி நாவலுக்கான பாராட்டு விழா, நூலாசிரியர் சு.வெங்கடேசன் வாசகர்களுடன் கலந்துரையாடினார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

'வேள்பாரி' - ஆனந்த விகடனில் 111 வாரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வெகுஜன மக்களின் மனதைக் கவர்ந்த தொடர். அவை தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளிவந்ததும் பல லட்சம் வாசகர்கள் பொக்கிஷமாக அதைத் தங்கள் நூலகத்தில் வைத்திருக்கிறார்கள். சு.வெங்கடேசனின் வசீகர எழுத்தும் மணியம் செல்வத்தின் அழகு ஓவியங்களும் பறம்பு மலையை, பாரியை யாராலும் எளிதில் மறந்துவிடாத வண்ணம் தாக்கம் செலுத்திவருகிறது. வேள்பாரிக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் விழா எடுத்துச் சிறப்பித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'பறம்பு தமிழ்ச் சங்க'த்தின் தொடக்க விழாவும் வேள்பாரி நூலுக்கான பாராட்டு விழாவும் சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

நூலின் ஆசிரியரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் கலந்துகொண்டு வாசகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். "நேரில் அறிமுகம் இல்லாத 500 பேர் இணைந்து பாராட்டு விழா நடத்துவது என்பது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு" என்று நெகிழ்ந்தார்.

வேள்பாரி நூல் பாராட்டு விழா
வேள்பாரி நூல் பாராட்டு விழா

'தங்களின் அடுத்த படைப்பு எப்போது வரும்?' என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு, "நீச்சல் தெரிந்த ஒருவன் 50 வருடங்கள் கழித்து, 51 வது வருடத்தில் குளத்தில் குதித்தாலும் நீந்துவான். காரணம், நீச்சல் அவனின் உடலெங்கும் பரவியுள்ளது. அதே போல்தான் நானும். எனக்கான குளத்தைக் கண்டவுடன் குதித்துவிடுவேன்" என்று கூறினார்.

விழாவில் கலந்துகொண்ட மருத்துவர் கு.சிவராமன் கூறுகையில், "வேள்பாரி நாவலைப் படித்துவிட்டு பலர் என்னிடம், சு.வெ-வுக்கு நீங்கள்தான் மூலிகை பற்றி கூறுகிறீர்களா... என்று கேட்பார்கள். ஆனால், எதார்த்தம் என்னவென்றால் நான்தான், நாவலில் வரும் மூலிகைகள் பற்றி சு.வெ-விடம் கேட்பேன். அவர் எழுதும் மூலிகைகளைப் பற்றி நான் ஆராய முயல்வேன்" என்றார்.

ஓவியர் மணியம் செல்வம் பேசுகையில், "நான் பல ஓவியங்கள் வரைந்து இருந்தாலும் வேள்பாரிக்கு வரைந்த ஓவியங்களுக்கு வாசகர்களிடம் பெற்ற வரவேற்பு என் வாழ்வில் கிடைத்ததே கிடையாது" என்று உணர்வுபூர்வமாகத் தம் கருத்தைப் பதிவுசெய்தார்.

'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வேள்பாரி நூல் பாராட்டு விழாவில் சு.வெங்கடேசன்
வேள்பாரி நூல் பாராட்டு விழாவில் சு.வெங்கடேசன்

'வேள்பாரி' புதினம் குறித்த வாசகர்களின் உரை, கவிதை, நடனம் பாடல், சிலம்பம் எனப் பலவும் வாசகர்களால் நிகழ்த்தப்பட்டன. வேளிர் குல பறம்பு மக்களை நினைவுகூரும் வகையில் இசைக்கப்பட்ட பறை இசை, வாசகர்களைத் துள்ளல் ஆட்டம் போட வைத்தது. ஓர் எழுத்தாளருக்கு வாசகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பாராட்டு விழா எடுத்தது நிச்சயமாகக் கிடைத்தற்கரிய அன்புப் பரிசுதான்!

இந்நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட பறம்பு தமிழ்ச் சங்கம், தமிழ் என்றும் இளமையோடு வாழும் என்று சொல்வதுபோல் இருந்தது. பறம்பு தமிழ்ச் சங்கம் சிறக்க வாழ்த்துகள்.

'வேள்பாரி' நாவலை இணையம் வழியே வாங்க இங்கே கிளிக் செய்யவும்.