சொல் என்பதுதான்
நிறைவேற்றத் தவித்தலையும்
இல்லாதானின்
வாக்காகவும்
சொல் என்பதுதான்
நெஞ்சுக்கடியில்
ஒளிநிறைப்பதாகவும்
சொல் என்பதுதான்
கயிற்றில் தொங்கியவளுக்கு
தாங்கமுடியாத தருணமதின்
விபரீத ஊக்கமாகவும்
சொல் என்பதுதான்
ஆத்திரத்தில் அவன்
சிறையின் வேப்பமர நிழலில்
புகைப்பதாகவும்
சொல் என்பதுதான்
விரல் பற்றித்
தன்னுடலை அவள்
நம்பித் தந்தமையாகவும்
சொல் என்பதுதான்
கருவேலங்காட்டில்
மஞ்சள் விதைகளை மிதித்து
நிழல் இருளுக்குள்
தப்பியோடிய
விசாரணைக் கைதியாகவும்
சொல் என்பதுதான்
பாவ மன்னிப்பாகவும்
சொல் என்பதுதான்
விவரிக்க முடியா
காலம் தரும் தண்டனையாகவும்
சொல் என்பதுதான்
விம்ம வைக்கும் கருணையாகவும்
சொல் என்பதுதான்
நினைவின் ஈரப்பாதையில்
ஓடும் பால்யத்தின் கால்களாகவும்
சொல் என்பதுதான்
ஓசையுடைய அன்பாகவும்
சொல் என்பதுதான்
மதுவின் செம்மைமிக்க
போதையாகவும்

சொல் என்பதுதான்
அச்சிறுமிக்கு
கயவனின்
நிழலைப் பின்தொடர்ந்து
பாதியில் கட்டிய மணல்
வீட்டின் நினைவழிந்ததாகவும்
சொல் என்பதுதான்
கசிந்த கண்ணீரின்
முதல் துளியின் வெம்மையாகவும்
சொல் என்பதுதான்
முதுகில் செருகும்
முன்பு
முகத்தின் முன்னே
பல் இளித்த
கத்தியாகவும்.
