Published:Updated:

செம்பா: ``சினக் கங்குகளின் மத்தியில் பூத்தது அன்பின் சிறுமலர்..!” | பகுதி 22

செம்பா

பாண்டிமாதேவி அப்படித்தான். முன்கணிக்க முடியாதவள். எந்தச் செய்கைக்குமான பொருளையும் யாரும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. கோட்டை அகழிபோல உள்ளிருக்கும் எதையும் வெளிக்காட்டாத கண்கள்.

செம்பா: ``சினக் கங்குகளின் மத்தியில் பூத்தது அன்பின் சிறுமலர்..!” | பகுதி 22

பாண்டிமாதேவி அப்படித்தான். முன்கணிக்க முடியாதவள். எந்தச் செய்கைக்குமான பொருளையும் யாரும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. கோட்டை அகழிபோல உள்ளிருக்கும் எதையும் வெளிக்காட்டாத கண்கள்.

Published:Updated:
செம்பா
கியேரிம், கொரியா.

மணிகளின் ஒருமித்த ஓசை மடங்கிய இடைவெளியில் அவனது பெயர் அழைக்கப்படுவது கேட்டுத் திரும்பிப் பார்த்தான் தல்ஹே.

அந்தச் சிறு குடியின் வாசலில் நின்று, போவோர் வருவோரையெல்லாம் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்த தெய்வக்கந்து, `போய் வா... பிறகு பேசுவோம்’ எனும்படி கொடியசைத்து அனுப்பியது அவனை. விலகி விளிப்பு வந்த திசையில் நடந்தான் தல்ஹே.

தல்ஹே குயாவிலிருந்து வெளியேறிச் சில காலமாகியிருந்தது. எல்லாம் அந்த இரும்புத்திருட்டு விவகாரம் தொடங்கிவைத்ததுதான். சுரோவின் பாரா முகத்தைப் பார்த்தபடி நெடுநாள் இரும்பாலையில் இருக்க முடியவில்லை தல்ஹேவால். அது சுரோவின்பால் உள்ள அன்பினால் என்பதைவிடவும், தன்மீதான குற்ற உணர்ச்சியால்தான் என்பதை அவன் அறிந்தே இருந்தான். அதனாலேயே இரும்பாலைப் பொறுப்பைத் துறந்து, இந்த சிறுமலைக்குடியின் நிர்வாகத்தில் ஒரு சிறு பணியை முயன்று பெற்றுக்கொண்டு வந்துவிட்டான்.

அவன் இங்கே வந்ததிலிருந்து இஜினாசி பலமுறை வந்து பார்த்துவிட்டுப் போயிருந்தான். இரும்புத்திருட்டின் பின்புலம் வெளிப்பட்ட பிறகும் இஜினாசியின் நடத்தையில் எந்த வேறுபாடும் இல்லை. உள்ளபடியே அவன் தன்னை அவனோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறான் என்பதுணர்ந்து சற்று உள்ளம் கனிந்தாலும் சுரோவை நினைத்து பேசாமலே இருந்தான் தல்ஹே. இத்தனை நாளில் ஒரு முறைகூட சுரோ வரவில்லை. இஜினாசியும் அதை ஒவ்வொரு முறையும் சொல்லிக்காட்ட மறக்கவில்லை. எறும்பூர இந்த தல்ஹேவின் கல்மனது தேய்ந்துவிடுமோ என்று அவனுக்கே கலக்கமாயிருந்தது.

சுரோவின் மீதிருந்த அன்பு வருத்தமாகி, பிறகு கழிவிரக்கமாக ஆனதுபோல விரைவிலேயே அது சினமாக, வெறுப்பாக மாறிவிடுமோ என்று தோன்றத் தொடங்கியிருந்தது. அடிக்கடி இப்படி கந்தின் முன் நின்று கவலைகளை இறக்கிவைப்பது வாடிக்கையாகியிருந்தது.

“தல்ஹே உன்னை நெடுநாளாகப் பார்க்க விரும்பினேன். ஒருவழியாக உன்னைச் சந்திக்க வர இவ்வளவு காலமாகிவிட்டது. என்ன திடீரென்று குயாவிலிருந்து கிளம்பிவிட்டாய்? அது இருக்கட்டும், இதென்ன இவ்வளவு கீழான பணியைக் கேட்டு வாங்கி வந்திருக்கிறாய் நீ?” முதன்முறை சந்திப்பதின் முறைமைகளையெல்லாம் கவிழ்த்துவிட்டு உடையவன்போல தோளில் கைபோட்டுப் பேசத் தொடங்கியவரை வியப்பாகப் பார்த்தான் தல்ஹே.

``கீழான பணியா?”

``இல்லையா பின்னே... உன் தகுதிக்கு இந்தப் பணியா செய்வாய்? இரும்பாலையிலேயே உன்னைக் கண்டு மனங்கலங்கினேன்.” தல்ஹே புரியாமல் விழித்தான்.

``ஆமாம்! இது இரும்படிக்கவேண்டிய கைகளல்ல தல்ஹே. செங்கோல் ஏந்தவேண்டிய கைகள். மன்னர் மகனடா நீ. ஆளப்பிறந்தவன். வா என்னோடு... உன்னைச் சரியான இடம் சேர்க்கிறேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்தவர் யார், ஏதென்ற அறிமுகம்கூட இன்னும் இல்லை. ‘மன்னர் மகன்... ஆளப்பிறந்தவன்’ என்று அவர் சொன்ன முக்கியமான எதுவும் அவனுள் முழுமையாக இறங்கியிருக்கவில்லை. தகுதி…தகுதி… இது மட்டுமே மனதில் நின்றது. சட்டென சுரோ இரும்பாலையில் சொன்னது நினைவுக்கு வந்தது.

***

ஒரு மலைக்காடு, சேரநாடு.

இருளும் ஈரமும் அப்பிக்கிடந்த அந்த அடர் மலைக்காட்டில், இருப்பது தெரியாமல் மறைந்துகிடந்த இடிந்த சத்திரமொன்றில் அந்த நள்ளிரவில் ஆள் நடமாட்டத்தை எதிர்பார்த்திராத புல்லினங்கள் படபடவென பந்தங்கள் ஒளிர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு ஒதுங்கியோடிக்கொண்டிருந்தன.

சத்திரத்தின் உள்ளே மூவர். யாருக்காகவோ காத்திருந்தனர். சில புரவிகள் வந்து நின்றன. முதலில் இறங்கியவர் யாருக்கும் காத்திராமல் வேகமாக சத்திரத்தின் உள்ளேறினார். எங்கோ போகும் வழியில் பாதை திருப்பி அவசரமாக வந்திருக்கிறார் என்பது புரிந்தது.

செம்பா
செம்பா

“நான் கேட்டதெல்லாம் உண்மையா?” கேட்டுக்கொண்டே வந்தவர் கண்களில் வெஞ்சினம் வெளிப்படையாகத்தெரிந்தது. ஆயினும் அந்த சினத்தைத் தாண்டியதோர் அச்சமும் மெலிதாக மின்னி மறைந்தது.

“உ… உண்மைதான் மன்னவா. இது இப்படியாகுமென நான் நினைக்கவில்லை. எப்படியாவது இந்த முறை...” வாய்ப்பு கோரிய குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.

“கிழித்தாய்! இதைத்தானே நெடுநாளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்... நானும் பழைய கதைதானே... என்ன பெரிய சிக்கலென்று நினைத்து விட்டுவிட்டேன். அதுதான் தவறாகிப்போனது.” சொல்லிக்கொண்டே இன்னொருவனிடம் கண்ணைக் காட்டினான். அந்த வீரன் எதிரே கைகூப்பி நின்றவன் கழுத்தில் வாளைப் பதித்தான். அவன் மிரண்டான்.

“மன்னவா! எச்சரிக்கையோடு எந்நேரமும் பலத்த பாதுகாப்பும் இருந்தது. நான் என்ன செய்வது?”

“அதாவது, இவ்வளவு காலத்தில் ஒற்றை நொடிகூட உனக்குச் சாதகமாக அமையவில்லை அப்படித்தானே?” கழுத்தில் வாளின் அழுத்தம் கூடியது. கண்கள் நிரம்பி வழிந்தன.

“ஐயோ! இது நியாயமா? இத்தனையாண்டு காலமாக உண்மையாக உழைத்ததற்கு இதுவா மன்னா பரிசு?”

“இல்லை, இத்தனையாண்டுகால உன் இயலாமையைப்பொறுத்துக்கொண்டிருந்தேனே அதுதான் உன் உண்மைக்கான பரிசு. இது உன் திறனின்மைக்கான தண்டனை” அதற்குமேல் கண்சிமிட்டும் நேரங்கூட காத்திருக்காமல் திரும்பியவனைப் பார்த்துக் கதறிக்கொண்டிருந்தான் அவன். நொடியில் வாளின் ஆழங்கண்ட அவனது மூச்சுக்குழல் கதறலைக் குழறலாக மாற்ற, அதைக் கேட்டு ரசித்தபடி பரியேறிக் கிளம்பினான் மன்னன் என்று விளிக்கப்பட்டவன். அவனுக்கு இன்னுமொரு மிக முக்கிய வேலை மிச்சமிருந்தது.

***

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கூடல் நகர், பாண்டிநாடு

அந்தி வேளை,

தாமரையிதழ்களாக மலர்ந்து விரிந்த தெருக்களினூடே தாதுக்குமிழ்போல மிகச்சரியாக நகரின் நடுவே பேரழகோடு வீற்றிருந்தது பாண்டியன் கோயில். பலநிலை கோபுரங்களடங்கிய அக்கோயிலின் பின்புறம் பந்தங்களின் பேரொளியில் யாழும் பண்ணும் விறலியர் நடனமுமென அந்தப்புரம் இன்பலோகமாகத் துலங்கியது.

அந்தப்புரம் ஓர் அலாதியான உலகம். ஆண்களுக்காகவே, ஆண்கள் படைத்துக்கொண்ட அவ்வுலகில் பெரும்பான்மை நேரம் ஆண்களுக்கே அனுமதியில்லை.

அது முழுமையாகப் பெண்ணின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் உலகம். அவ்வுலகின் அரசி மன்னன் மனைவி.

இங்கே பாண்டிமாதேவி. ஆனால் அந்த அழகிய உலகை ரட்சிக்கவேண்டியவள், அது பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாதவளாக கூடல் தென்றலின் குளுமையை உள்வாங்கும்விதமாக பெருஞ்சாளரங்களினருகே இடப்பட்டிருந்த வட்டக்கட்டிலில் விழுந்து கிடந்தாள்.

முதிர்ந்த யானைகளின் தந்தங்களைக் கடைந்தெடுத்துச் செய்த வேலைப்பாடமைந்த கால்கள்கொண்ட கட்டிலின் மேல் அன்னத்தின் மென்தூவிகள் கொண்டு செய்யப்பட்ட மஞ்சத்தில் சிறு தந்தச்சிலையொன்று சாய்ந்து கிடந்தது. வட்டக் கட்டிலைச் சுற்றித் தொங்கிய முத்துச்சரங்களின் பொலிவுக்குப் போட்டியிடும் முகம் களையிழந்து கிடப்பதுபோல் தோன்றியது முதுகிழவிக்கு. கட்டில் விதானத்தில் வண்ணமேற்றப்பட்ட மயிர்களைப் பதித்து வரையப்பட்டிருந்த சிங்க ரூபத்தின் மீதும் அதைச் சுற்றியோடிய பூங்கொடிகளின் மீதும் பார்வை நிலைத்திருக்க, அசையாமல் கிடந்தாள் பாண்டிமாதேவி.

அரிமாவும் அனிச்சமலரும். அவனும் அவளும்.

பொன்னணிகள் ஏதுமின்றி மணிமார்பில் தொய்யிலின்றி கருங்குழலில் நெய்யின்றி பாதங்களில் செஞ்சாந்துக் கோலமின்றி அவள் கிடக்கும் கோலம் காணச் சகியாமல் கண்ணைக் கசக்கினாள் முதுகிழவி - அந்தப்புரச் செவிலிகளில் மூத்தவள்.

அந்தக் கோலத்தோடு கூடவே அப்போது தான் கண்டுவந்த வேறொருத்தியின் கோலமும் மனதில் வந்து ஒப்புநோக்க உள்ளுக்குள் காந்தலெடுத்தது. `சிறுக்கி மகளிடம் என்ன ஒரு நிமிர்வு?’ என்று பொருமியது கிழவியின் உள்ளம்.

தோழிப் பெண்கள் பாண்டிமாதேவியின் கை கால்களை மெல்ல அழுத்திவிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி கிழவியின் மனதைப் படித்தவள்போலச் செம்பாவைப் பற்றிப் பேசத் தொடங்கினாள்.

“கேட்டீர்களா தேவி சேதியை? அந்தப்பெண் இருக்கிறாளே... அதுதான் கொற்கையிலிருந்து வந்த கொள்ளிவாய்ப் பிசாசு… அது...” முதுகிழவி கண்ணைக் காட்ட, பேச்சைப் பாதியில் நிறுத்தினாள் அந்தப் பெண்.

`கூறுகெட்டக் கழுதை... எதை எங்கே பேச வேண்டுமென்று தெரியாமல் உளறி வைக்காதே..’ என்று அவள் சாடுவதை அவளது முகக்குறியிலேயே புரிந்துகொண்டு தலை கவிழ்ந்துகொண்டாள் அந்த இளமகள்.

“சொல் கோதை... அந்தப் பிசாசு என்ன செய்தது?” தேவியின் மென்குரல் ஒலிக்கவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பின் கதை சொல்லலாயினர்.

செம்பவளம் அதற்குள் பெயரெடுத்திருந்தாள். திமிர்பிடித்த கொண்டிமகள்.

ஆம்! பட்டுக்கும் படோடாபத்துக்கும் கொஞ்சமும் பழக்கமற்ற மீனவக் குடிப்பெண்தானே என்றெண்ணி, பொன்னும் மணியும் பூட்டிவிட்டால் காலில் கிடப்பாள் என்ற அந்தப்புரவாசிகளின் கற்பனையைப் பொய்யாக்கியிருந்தாள் செம்பவளம்.

அவளைப்போல ஆயிரம் பேரைப் பார்த்துவிட்டவள் முதுகிழவி. வென்ற நாடுகளில் கவர்ந்து வரப்பட்ட பொருள்களில் முக்கியப் பங்கு அந்தப்புரத்து மகளிர்தானே!

மன்னர்குலப் பெருமையல்லவா! அந்த வகையில் ஐந்து நிலவகைத் திமிரும் பார்த்திருக்கிறாள் அவள். ஆனால் அவளுக்குக்கூட இந்தப் பெண்ணிடம் ஒரு வேறுபாடு தோன்றத்தான் செய்தது. குறுகுறுவென அவளைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். யார் அழைத்துக் கேட்ட கேள்விகளுக்கும் எந்த பதிலும் சொல்லாமல் அசராத பார்வை பார்த்தவளை ஒட்டுமொத்தமாக அங்கே யாருக்கும் பிடிக்காமல் போனது. ஆனாலும் அவள் மறுக்க மறுக்க அணிகளணியச் சொல்லிக்கொண்டிருந்தனர் சேடிப் பெண்கள்.

``அடியென்னடி அதிசயம்... ஏவல் மகளாக வந்தவளுக்குப்போய் பொன்னும் மணியும் பூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? போதும் போதும் விடுங்கள்” முதுகிழவி இடித்துரைத்தாள்.

“ஏவல் மகளா? தூர்த்த கிழவி! வாயில் போட்டுக்கொள். இவள் மன்னரின் தனிச்சொத்தென்று சொன்னது நினைவில்லையா?”

``அதனாலென்ன? மன்னர் மதுரை வரட்டும். அதுவரை இவள் ஏவல் மகள்தான். ஏய்! இதோ பார். இனி உன் வாழ்வு இதுதான். இருந்தாலும் இங்கேதான், இறந்தாலும் இங்கேதான். தேவையில்லாமல் உடலையும் மனதையும் புண்ணாக்கிக்கொள்ளாதே. சொல்வதைக் கேட்டு பணிந்து போ. இதோ இதை மட்டும் அணிந்துகொள். மூலியாக இருக்காதே. இது அந்தப்புரம். அழகு மட்டுமே குடிகொள்ளுமிடம். மன்னரின் தனிச்சொத்தென்றாலும் அந்தப்புரத்தில் அனைவரும் எனக்கடங்கிய சொத்துதான்.” முதுகிழவி தொடருமுன் செம்பவளத்தின் குரல் கணீரென்று ஒலித்தது.

“யாருக்கு யார் சொத்து? உளறலை நிறுத்து கிழவி. யாருக்கும் சொத்தாக நானொன்றும் உயிரற்ற பொருளல்ல. என் விருப்பமின்றி என்னை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தெரிகிறதா?” யாரும் என்பதில் தெரிந்த அழுத்தத்தில் அத்தனை பேருக்கும் வியர்த்துவிட்டது. அதில் மன்னரும் அடக்கமா... இவளென்ன புத்தி கெட்டுப்பேசுகிறாளா? கொஞ்சம் கழிவிரக்கம்கூடத் தோன்றிவிட்டது கிழவிக்கு.

செம்பா
செம்பா

``இதோ பாரடி பெண்ணே! பெண் என்பவள் பிறப்பே அப்படித்தான்.

மகளாகவோ, மனையாளாகவோ, பின் மகனுக்கடங்கியோ ஆண்களின் கைச்சொத்துதான் அவள் விதி.

மன்னர் மகளானாலும் அப்படித்தான்... ஊரோடிப் பிழைக்கும் பாடினியானாலும் அப்படித்தான். அப்படிச் சொத்தாக நிற்பவள் தன் இல்லத்துக்கு திருவை அழைத்து வருகிறாளா அல்லது குடும்பத்தைத் தெருவில் இழுத்துவிடுகிறாளா என்பதில்தான் அவள் வாழ்வின் பொருளே அடங்கியிருக்கிறது. இப்படிச் சிலிர்த்துத் திரிவதானால் கொண்டிமகளாக, ஊர்ப்பரத்தையாகத் திரியவேண்டியதுதான். ஊர் வெறுக்கும் நிலை அது. அந்தக் கேவலத்தையா நீ வேண்டுகிறாய்?”

“தன்னிச்சையாக முடிவெடுத்தால் திமிர் பிடித்தவளா? யாருக்கோ அடங்கித் திருவாக பெயரெடுப்பதைவிட என் மனதுக்குக் கட்டுப்பட்டு தெருவில் இறங்குவதே எனக்குச் சரியாக வரும். யார் வெறுத்தால் எனக்கென்ன? என்னவோ திரு தெரு என்று எதுகையாகப் பேசுகிறாயே கிழவி... நீங்களெல்லாம் யார்... உங்கள் வாழ்வின் பொருளெல்லாம் ஒற்றை ஆணின் விரலசைவுக்குள் அடங்கியதுதானா... அதைத் தாண்டி வேறொன்றுமே இல்லையா... பிறப்பெடுத்ததே அதற்குத்தானா?” சொற்களில் மிதந்த ஏளனத்தில் மூழ்கி மூச்சடைத்தது கிழவிக்கு.

“வரட்டும் உங்கள் தலைவன் அவரிடமே பேசித் தெளிகிறேன். அதுவரை என்னை இப்படி அதட்டி உருட்டி அதிகாரம் செய்கிற வேலையெல்லாம் வேண்டாம். யாரையும் வீழ்த்த எனக்கு ஆயுதம் தேவையில்லை. நானே பேராயுதம். புரிகிறதா கிழவி?”

“அடியம்மா! வயதுக்குக் கொஞ்சம் பணிவு காட்டுகிறாளா பார்த்தாயா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“சான்றோரைப் பார்த்தால்தான் பணியச் சொல்லித் தந்திருக்கிறார்கள். உன் சான்றாண்மையைக் காட்டு... நானும் பணிந்து போகிறேன். நீ இப்போது செய்யும் வேலைக்கெல்லாம் பணிய முடியாது கிழவி.”

அந்தப் பிரகடனத்தில் கூடியிருந்த அத்தனை பெண்களும் அதிர்ந்துபோயினர். அதில் வந்த நாள் முதல் வசைபாடினாலும் தனக்கொரு இன்மை வாராமல் பார்த்துக்கொள்ளும் கிழவியையே இப்படி எதிர்க்கிறாளே என்ற கோபமும், என்னதான் தான் வாயாடினாலும் இப்படி நேரடியாக எதிர்த்துப் பேச நம்மால் முடியவில்லையே என்ற ஆற்றாமையும் கலந்தேயிருந்தன. கிழவியிடம் பேச்சே இல்லை.

“ஏய்! மூதாளின் ஆற்றல் புரியாமல் பேசாதே. அவள் நினைத்தால் இந்தக் கணமே உன்னைக் கடுஞ்சிறையில் அடைக்க முடியும்.” அதற்கு வெறுமனே அசட்டையான சிறு உடல்மொழியைப் பதிலாக்கிவிட்டு ஏதும் பேசாமல் அவர்களைக் கடந்து போனாள் செம்பவளம்.

கதை சொல்லிக்கொண்டிருந்தவளை இடைநிறுத்தினது குரல்.

“அப்படியா சொன்னாள்?” பாண்டிமாதேவியின் குரலில் ஏதோ மாற்றம் தென்பட்டிருக்க வேண்டும், கிழவி அவளை ஆழ்ந்து கவனிக்கலானாள்.

“வேறென்ன சொன்னாள்?”

“சொல்வதற்கு என்ன தேவி, நூறு சொற்களுக்கு ஒரு சொல்தான் திரும்பி வருகிறது. இழுக்கவோ அடிக்கவோ முடியவில்லை. உடல் வலுவில் அவள் இயக்கியேதான். இதோ குழலியின் கையை முறுக்கி வைத்திருக்கிறாள் பாருங்கள்! வீக்கமெடுத்துவிட்டது. கையைத் தூக்க முடியவில்லை.”

“வேறு?”

“ஏனடி முறுக்கினாயென்று கேட்டால், அடிக்கவந்த கையை முறுக்கத்தான் செய்வேன் அது தற்காப்பு.”

என்று திமிராகச் சொல்கிறாள்.

“ஓகோ.”

“குத்த வந்தால் வெட்டிவிடுவாயா என்று பேச்சுக்குக் கேட்டால் குத்தித்தான் பாரேன் என்று சொல்லிவிட்டு வாயில் வீரன் வாளைக் கண்காட்டுகிறாள்! வெட்டித்தான் விடுவாளோ என்று பயமாகப் போய்விட்டது. கொற்கையில் மன்னருக்கு எதிராக அம்பெய்தவள்தானே!”

```ஏய் மன்னருக்கு எதிராக அல்ல, முன்பாக. இரண்டுக்கும் வேறுபாடிருக்கிறது” இன்னொருத்தி எடுத்துக்கொடுத்தாள்.

“நீ பார்த்ததுபோலப் பேசாதே! எல்லாம் திமிர்தான். ஆனால் எதைச் சாதிக்க அப்படியொரு காரியத்தைச் செய்திருப்பாளென்றுதான் புரியவில்லை. மாளிகை முழுக்க மாளிகையென்ன... மதுரை முழுக்க... ம்ஹூம்... மதுரையல்ல... தென்பாண்டிநாடு முழுக்க இன்று இதுதான் பேச்சு.”

“ஓகோ.”

“தேவி! ஆளைப் பார்க்க வேண்டுமே...”

“அழகியோ?”

“அதெல்லாம் இல்லை. குதிருக்குக் கைகால் முளைத்ததுபோல. பேய்க் கண்கள் பிசாசு வாய்...”

“அவ்வளவு அழகா?” குரலில் மெல்ல விளையாட்டு எட்டிப்பார்த்தது. கட்டிலில் கவிழ்ந்து கிடப்பது துயரத்தால் அல்லவோ என்ற எண்ணம் பெண்களுக்குத் தோன்றியது. பாண்டிமாதேவி அப்படித்தான். முன்கணிக்க முடியாதவள். எந்தச் செய்கைக்குமான பொருளையும் யாரும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. கோட்டை அகழிபோல உள்ளிருக்கும் எதையும் வெளிக்காட்டாத கண்கள். சோகத்தின், இன்பத்தின் எதிர்பார்ப்பின் எந்தச் சாயலும் காட்டாத அதே புன்னகை.

செம்பா
செம்பா

``அதில்லை தேவி... உங்கள் முன் ரதியே அழகற்றவள்தான்.”

“அப்படியென்றால் அவள் ரதிதான். இல்லையா?”

“தேவி... அப்படியில்லை.”

“ஏய் இவளே எதையாவது உளறாதே. தேவி சற்று உறங்கட்டும்.” கிழவி பேச்சை மாற்ற முயல பாண்டிமாதேவி குறுக்கிட்டாள்.

“பார்க்க வேண்டும் அந்த ரதியை. அழைத்து வாருங்கள்.” பாண்டிமாதேவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாயில்காப்பாள் ஓடி வந்தாள்.

“அம்மா! சொல்லச் சொல்லக் கேட்காமல் இவள்...” அவள் முடிக்கும் முன் குரலொன்று முந்தி வந்தது.

“அந்தப்புரத்தின் தலைவி நீங்கள்தானே... உங்களைப்பார்க்க இவ்வளவு சிரமம் ஏன்? அணுக முடியாத தலைமை அவ்வளவு நல்லதில்லையே!” தோழிப் பெண்கள் மிரண்டு விழிக்க, தன்னிலை மாறாமல் கிடந்த கோலத்திலேயே பார்வையை மட்டும் திருப்பி வந்து நின்ற பெண்ணைப் பார்த்தாள் பாண்டிமாதேவி.

அதிகாரத் தொல்லைகளைச் சொல்லி நீதி கேட்க வந்த செம்பவளம் அந்த சாய்வுப் பார்வையில் அடங்கினாள்.

அடக்கும் பார்வையல்ல அது. அதிகாரத்தின் உக்கிரம் கொஞ்சமும் அதில் இல்லை. மாறாக அருகே அழைத்துத் தோளோடு தோள் அணைத்துக் கதை பேசக் கேட்கும் பார்வை.

தோன்றா புன்னகையின் சாயல் இருவர் முகத்திலும் தோன்றுவது கண்டு கிழவி மெல்ல மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு வெளியேறலானாள்.

மதுரை வந்து முதன்முறையாக உள்ளே கனன்ற நெருப்பு கொஞ்சம் அடங்கியதுபோலிருந்தது செம்பவளத்துக்கு. சினக் கங்குகளின் மத்தியில் பூத்தது அன்பின் சிறுமலர்.

(தொடரும்..!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism