Published:Updated:

செம்பா: துரோகம்... வன்மம்... இஜினாசி | பகுதி 35

செம்பா

மூர்ச்சை தெளிந்து பார்க்கும் சில சமயங்களில் அவளது பணிவிடைகளை கவனித்திருக்கிறான். வலியில் முனகும் அவனது மொழி புரிந்து அவள், தேவைகளை நிறைவேற்றுவதையும் இப்போது நினைத்துப் பார்த்தான். தோளில் வலி பீறிட்டது.

செம்பா: துரோகம்... வன்மம்... இஜினாசி | பகுதி 35

மூர்ச்சை தெளிந்து பார்க்கும் சில சமயங்களில் அவளது பணிவிடைகளை கவனித்திருக்கிறான். வலியில் முனகும் அவனது மொழி புரிந்து அவள், தேவைகளை நிறைவேற்றுவதையும் இப்போது நினைத்துப் பார்த்தான். தோளில் வலி பீறிட்டது.

Published:Updated:
செம்பா

செம்பவள ஒளிச்சிதறல்கள் நக்தோங் நதிப்பரப்பெங்கும் பொன் முத்துச்சரங்களை உருட்டிவிட்டிருந்தன.

அந்தி மாலை வேளை.

நதிக்கரையோரமாக அமைந்திருந்த அந்த மண்டபத்தின் மூங்கில் தூண்களைச் சுற்றியோடிய தென்றலில் சேலா மலர்களின் மணம்.

அந்த ரம்மியச் சூழலை ரசிக்க மனமற்ற நிலையில் இருந்தனர் அங்கிருந்த நால்ரும். இத்தனைக்கும் இருவர் இளையர். இன்னும் சில காலத்தில் மணமுடிக்கக் காத்திருப்பவர்களும்கூட.

”அந்த ஜீமின் இருக்கும்வரை நாம் நினைக்கும் எதுவுமே நடக்காது அப்பா.” அடிக்குரலில் கூறியவளை வியந்து பார்த்தான் இஜினாசி.

“மணமுடிக்க இருப்பவள். இப்போது இந்தப்பேச்செல்லாம் உனக்கெதற்கம்மா?”

அவனுக்குமே அப்போதுதான் அது உறைத்தது. அன்று காலையில் அவையில்வைத்து `இவள்தான் உன்னை மணக்கப்போகிறவள், ஹிம்சானின் மகள் சூஜின்’ என்று இல்சங் அறிமுகப்படுத்தியபோது ஒரு மெல்லிய வெட்கத்தைக் காட்டியது தாண்டி பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை அந்தப் பெண்.

இதோ இங்கேகூட சோஜு ஊற்றிக்கொடுக்கலாம் அல்லது பண்டங்களை எடுத்துப் பரிமாறலாம். ஆனால் இவள் அருகே அமர்ந்து அரசியல் பேசுகிறாள். முகத்தில் இன்பத்தைக் காட்டவில்லையென்றாலும் அவளது குரலில் உற்சாகம் வழிந்தோடியதை மட்டும் அவளால் மறைக்க முடியவில்லை என்றே தோன்றியது.

அந்த உற்சாகத்துக்குக் காரணம் அவன்தான் என்று அருகே கிசுகிசுப்பாக இல்சங் சொன்னாலும் ஏனோ இஜினாசியால் அதை நம்ப முடியவில்லை.

மணச்சடங்குகள் பற்றியோ, மணநாள் ஆடை பற்றியோ எண்ணம் அவள் மனத்திலே இல்லை என்று தெரிகிறது. வியப்புதான்.

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சுரோ அடிக்கடி…சட்டென உள்ளே இறுகப் பற்றியது ஏதோவொன்று.

ச்சை... செத்துப்போனவனைப் பற்றி என்ன எப்போதும் மண்டைக்குள் ஊறலெடுத்துக்கொண்டேயிருக்கிறது.

“யார் பேசினால் என்ன... என்ன பேசுகிறோம் என்பதுதானே முக்கியம்... என்ன வாங் (மன்னா) நான் சொல்வது சரிதானே?”

”என்ன?” உள்ளிருந்த எரிச்சலைத் துப்பினான்.

”அந்த ஜீமின் இருக்கும்வரை நமக்குத் தொல்லை என்று சொன்னேன். அது சரிதானே?”

“அதற்கு... கிழவனைக் கொன்றுவிடலாமா?” எரிச்சல் மிகுதியில் வாய் வார்த்தையாகச் சொன்ன இஜினாசி அந்தக் கேள்வியின் பதிலாக இல்சங்கும் ஹிம்சானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதையும், அவர்கள் கண்கள் பளீரிடுவதையும் கண்டு திகைத்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

``நான் அப்படியா சொன்னேன்?” சிறு கோபத்தில் முகத்தைத் திருப்பினாள் சூஜின். ஆனால் ஆவலோடு ஓரடி முன்னே எடுத்துவைத்த ஹிம்சான், இஜினாசியின் கண்களில் தோன்றிய அதிர்வையும் எச்சரிக்கையையும் கணப்பொழுதில் பிடித்துக்கொண்டு முகத்தை மாற்றினார்.

“விளையாட்டுக்காகக்கூட அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் வாங். யார் காதிலாவது விழுந்துவைத்து அந்தக் கிழவன் செத்துகித்துவைத்தால் பிறகு தேவையில்லாமல் நம் தலை உருளக்கூடும். என்னதான் இருந்தாலும் நமது கூட்டமைப்பின் மூத்தவர் அவர்தானே?”

நம்பாமை முகத்தில் தெளிவாகத் தெரியவும் பேச்சை மாற்றினார் ஹிம்சான்.

“சூஜின் தேவையற்ற பேச்சுகளைக் குறை. திருமணத்துக்கு என்ன வேண்டுமோ அது பற்றிப் பேசுங்கள். நியாயத்துக்கு உன்னை நான் இப்படி அழைத்து வந்து பேசவிட்டிருக்கவே கூடாது. நீ பார்க்க வேண்டுமென பிடிவாதமாகக் கேட்டதால்தான் அழைத்து வந்தேன். கிளம்பு. வீட்டுக்குப் போய் அம்மாவோடு சேர்ந்து ஆடைகளுக்கான வேலையைப் பார். பிறகு கடைசி நேரத்தில் என் உயிரை எடுக்காதீர்கள்.”

“அதெப்படி... ஆடை தேர்ந்தெடுப்பதில் கொடுக்கும் மதிப்பை கட்டிக்கொள்ளப்போகும் ஆணைத் தேர்ந்தெடுப்பதில் கொடுக்க முடியாதா... இதென்ன முட்டாள் தனம்... நீங்களே சொல்லுங்கள் இஜினாசி.”

“மணம் பெரியோர் பார்த்துச் செய்துவைப்பது. அதில் நீ என்ன கருத்து சொல்வது... பேசாமல் சொல்வதைக் கேள்.”ஹிம்சான் இடைமறித்தார்.

“அதெல்லாம் முடியாது.” கையைக் கட்டிக்கொண்டு தலையைச் சிலுப்பியவளைப் பார்த்துச் சிரிப்புத்தான் வந்தது இஜினாசிக்கு.

“இப்படியெல்லாம் செய்யாதேயம்மா! அதுவும் நாளைய அரசன் முன்னே நின்றுகொண்டு...” இல்சங் சொல்லவும் வேகமாக இடைமறித்தாள் சூஜின்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அவர் அரசரென்றால் நான் அரசிதானே... குடிவழியாகவும் நாங்கள் ஒரு நிலத்துப் பிள்ளைகள்தானே... நானும் நாளை தலைமைப் பொறுப்பைப் பார்க்கத்தானே போகிறேன்.” சொல்லிவிட்டு சட்டென நிறுத்தினாள். இஜினாசியும் இறுகி நின்றான்.

வேகமான அவளது பேச்சில் வந்து விழுந்த சொற்கள் இஜினாசிக்கும் சூஜினுக்கும் ஒருவனையே நினைவூட்டின. புன்னகையோடு இதே சொற்களை அவர்கள் இருவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன சுரோ!

—-------------

சுரோ கண்களைத் திறக்க முயன்று மீண்டும் தோற்றான்.

அவனது முயற்சி புரிந்ததுபோல யாரோ ஈரம் பாய்ந்த மென் துகில்கொண்டு கண்களை மெல்லத் துடைப்பதை உணர்ந்தான். இனம் காண முடியாத நறுமணமொன்று நாசி நிரப்பிச் சென்றது.

ஈரம் கசிந்து, பின் மூடிய இமைகளின் வழியே மெல்லிய வெளிச்சத்தின் வெம்மை படர்ந்தது. சிரமப்பட்டாலும் இப்போது கண்களைத் திறக்க முடிந்தது.

திறந்த விழிகளை நிரப்பி நின்றாள் அவள். தேவதைதான்.

முகத்தில் மெல்லிய புன்னகை. அவன் எழுந்துவிட்டது கண்ட நிம்மதி அதில். வியப்பு இல்லை. என்றால் எழுந்துவிடுவானென்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அப்படியென்றால் அதற்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன.

இத்தனை எண்ணங்கள் கோர்வையாக முளைப்பதற்குள் உடலில் அயர்ச்சி மீண்டும் தோன்றியது. தன்னிச்சையாக எழ முயன்ற தோளில் மெல்லிய கரம் பதிந்தது.

கட்டிலில் அழுத்தி தலையசைத்து மறுத்தாள். `இப்போதே அலட்ட வேண்டாம், உறங்க முயலுங்கள். எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்வது போன்ற பார்வை. ஏனோ அது சரியென்று தோன்ற மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் எண்ணங்கள் உறங்கவில்லை.

யார் இவள்... எங்கிருந்து வந்தாள்?

இந்த நறுமணம் அவன் இதற்கு முன்பு ஒருமுறை…எங்கோ…எங்கே? நங்நங்…ஆம் நங்நங் சந்தையில்…எப்போது... எப்படி… ஆம்…மேற்கே ஏதோ ஒரு நிலத்திலிருந்து வந்த நறுமணச் சாந்து.

செம்பா
செம்பா

வந்தவள் மேற்திசை நிலத்திலிருந்துதான் வந்திருக்கிறாள். நிறமே சொல்கிறதே... சீனர்கள் நிறமோ வா தேசத்தினரின் நிறமோ அல்ல. அந்தக் கண்கள்…

அத்தனை பெரிய கண்களை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. அதிலேதான் எத்தனை தீட்சண்யம்?

மூர்ச்சை தெளிந்து பார்க்கும் சில சமயங்களில் அவளது பணிவிடைகளை கவனித்திருக்கிறான். வலியில் முனகும் அவனது மொழி புரிந்து அவள், தேவைகளை நிறைவேற்றுவதையும் இப்போது நினைத்துப் பார்த்தான். வேற்று நிலத்துப் பெண் ஆனால் மொழி தெரிந்திருக்கிறது. எப்படியோ ஏதோவொரு தொடர்பு... எப்படி? சட்டென தோளில் வலி பீறிட்டது.

கலத்தில் நடந்த கொலை முயற்சி. அதை எப்படி மறந்தான்?

வன்மமும் துரோகமும்... எப்படி மறந்தான்?

படகிலிருந்து வாள் வீசி அவனைக் கொன்று போட முயன்றவன் உச்சரித்த பெயர். மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது.

இஜினாசி…

எண்ணங்கள் அயர்ந்து மீண்டும் மூர்ச்சையானான் சுரோ.

----------------

மாலை வேளை.

தம்னா கரை வழக்கம்போலவே ஆளரவமற்று அடங்கியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடல் நோக்கிய சிறு குன்றின் உச்சியில் நிலைகொண்டிருந்த அந்தக் கூடாரக் கூட்டத்தைச் சுற்றிப் புற இருளையும், அக இருளையும் விரட்டும் விளக்கொளியும் சிரிப்பொலியும் படர்ந்து பரவிக்கிடந்தன.

”ஏதேது, போகிற போக்கைப் பார்த்தால் சங்கன் ஊமையே ஆகிவிடுவான்போலிருக்கிறதே!”

“பேசாமல் இரேன் டோரியன்! ” சங்கனை மீறிக்கொண்டு வந்தது அடுத்த குரல்.

“ஆமாமாம். முதன்முறை கலத்திலே ஏறிய அன்று இரவு நம்மோடு விடிய விடியக் குடித்துக் கூத்தாடி எவ்வளவு வாயடித்தான்... பேசிப் பேசிக் களைத்துப்போய் உறங்கினானே நினைவிருக்கிறதா... அன்றோடு அவன் ஆயுளுக்கான பேச்செல்லாம் தீர்ந்து போய்விட்டதுபோல.” போ சிரித்தபடி சொல்லவும் வேகமாகப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தான் டோரியன்.

“அப்படிச் சொல்! ஐயாதான் மொத்தமாக புத்தியைக் கழற்றி மனைவியின் காலடியிலேயே போட்டுவிட்டாரே! இனி பேச்சோ மூச்சோ எல்லாம் பெண்டாட்டி சொல்வதுதான்.”

காய்ச்சல் விலகாத கண்களோடு சிரிக்க முயன்றான்.

“அதற்கு முதலில் அப்படியொன்று அங்கே இருந்திருக்க வேண்டுமே!” செம்பா தொடர்ந்து அடிக்கவும் கொல்லென வெடித்துப் பரவியது சிரிப்பு.

“போதும் போதும். மாலையானால் போதுமே... குடுவைகளை நிரப்பிக்கொண்டு குடும்பங்களைக் கேலி செய்வது. பெண்களென்றால் அதுவும் மனைவியரென்றாலே கேலிப்பொருள்தானே? போ அண்ணா... உங்களுக்கும் கூடிய விரைவில் மணம் செய்துவைக்கத்தான் போகிறார்கள். இங்கே இருந்து நானும் அதைப் பார்க்கத்தானே போகிறேன். இருக்கட்டும் இருக்கட்டும்” எழினி ஒற்றை விரல் காட்டி எச்சரித்தாள்.

“ஐயோ தெய்வமே!” என்று போ கதற, “அந்தத் தப்பெல்லாம் நான் செய்யவே மாட்டேன்.” டோரியன் அங்கலாய்க்க, “அப்பாடா பிழைத்தால் ஒரு பெண்” என்று வேகமாக செம்பா சொல்ல மீண்டும் வெடிச்சிரிப்பு.

“இளவரசி. நேரமாகிவிட்டது. உறங்கவில்லையா?” கண்ணன் சிரிப்பினூடே காரியத்தில் கவனமாக இருந்தான். கண்ணன் கொற்கையில் வைத்து நெடுஞ்செழியன் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்துவந்தான்.

”கலத்தில் ஏறியபோது உடன் ஏறிய இறுக்கம் இன்னும் உங்கள் உடலில் மிச்சம் இருக்கிறதுபோலிருக்கிறதே. பெரும் புயலையே கடந்து வந்து நிற்கிறோம். இன்னும் என்ன கவலை உங்களுக்கு?”

”உங்களைச் சரியான நிலையில் இருத்தும்வரை எனக்கு அந்தக் கவலை இருக்கும் தேவி. செழிய மகாராஜாவின் அன்புக்கட்டளை என்பதைத் தாண்டி எனது மதிப்பிற்குரிய இளவரசியாரின் மகள், உங்கள் நலனில் எனக்கு தனிப்பட்ட அக்கறை இருக்காதா?”

செம்பா
செம்பா

“அந்த அக்கறை கவலையாகவேண்டிய அவசியமென்ன கண்ணன்... மற்ற பெண்களைப்போல இல்லையே செம்பவளம்... இத்தனை நாள்கள் ஒன்றாகப் பயணித்ததில் இதை உணரவில்லையா நீ... அது மட்டுமல்ல…” போ காரணமாக இடைநிறுத்த எல்லோர் கவனமும் அவன் மீது போனது.

“வேறு என்ன?”

“கண்ணா. உன் கவலைக்கான தீர்வும்தான் கிடைத்துவிட்டதே.”

“என்ன தீர்வு... என்ன சொல்கிறாய்?” போ கூடாரம் நோக்கிக் கண்ணைக் காட்டிச் சிரித்தான்.

“எங்கள் ஊர் உப்புக்கறி எப்படிப் போடுவதென்று கேட்டீர்கள்தானே போ... செய்து காட்டட்டுமா?”

“ஐயோ வேண்டாம் செம்பா” அவன் போலியாக அலறி எழுந்தோட முயலவும் மீண்டும் சிரிப்பு வெடித்தது. வெடித்த வேகத்தில் சட்டென நின்றும் போனது.

பாதையின் முடிவில் ஓர் ஒடிசலான உருவம் நின்றுகொண்டிருந்தது.

பாறை மீது இலகுவாக அமர்ந்திருந்தவள் கையில் எப்படி வில் அம்பு வந்தது என்று எழினி உணர்வதற்குள் செம்பா கையில் வில்லோடு அந்த உருவத்தைக் குறிவைத்திருந்தாள்.

“செம்பா பொறு. யாரென்று...”

“யாராக இருந்தாலும் கவனமாக இருப்பதில் தவறில்லை போ.”

”நான் சொன்னேனே… அவர்தான்.” போவின் குரல் தயக்கமாக வந்தது.

வில் இறங்கியது. உருவம் நெருங்கியது.

சிறு மூங்கில் இருக்கையைக் கைகாட்டி “அமருங்கள்” என்றான் போ.

அமர்ந்தார் அவர். பந்த ஒளியில் அவரது முகத்தைப் படிக்க முயன்றாள் செம்பவளம். வந்திருக்கக்கூடியவரின் பெயர் யூசு என்று அறிந்தே இருந்தாள்.

காலையில்தான் போ திரும்பி வந்திருந்தான். வந்ததும் குயா நிலத்தின் மொத்த கதையும் சொல்லியிருந்தான். தம்பியின் துரோகத்தால் தாக்குண்டு கிடக்கும் சுரோவுக்கு மிஞ்சியிருக்கும் ஒரே அன்புள்ள உறவு இந்த யூசு மாமன்தான். தெரியும் வயது மூப்பில் இல்லை களைப்பில் என்று தோன்றியது.

“தகவல் கிடைத்ததும் கிளம்பிவிட்டீர்கள்போலிருக்கிறது. நல்லது. இவர்தான் இளவரசி. இளவரசி செம்பவளம். மேற்திசையில் ஒரு பெரிய நிலத்திலிருந்து வந்திருக்கிறார். பெருவேந்தன் ஒருவரின் ஒற்றை மகள். பயணம் செய்வதே கனவு...”

”போ… அறிமுகத்துக்கான நேரமில்லை இது. களைத்துத் தெரிகிறார் பாருங்கள். படகோட்டியதில் பசியெடுத்திருக்கும். எழினி கஞ்சி சூடாக இருக்கிறதுதானே... அவருக்குக் கொடு. முதலில் பசியாறட்டும்.” போவுடனான முதல் பாதி உரையாடல் அவர்கள் மொழியிலும், தோழிப் பெண்ணுடனான உரையாடல் வேறேதோ மொழியிலும் பேசிய அந்தப் பெண்ணை ஏதோ அற்புதத்தைப் பார்ப்பதைப்போலப் பார்த்தார் அவர்.

கஞ்சியருந்தி முடிக்கும் வரை யாரும் பேசவில்லை. பிறகு.

“பசியடங்கியதா?”

“ம்ம்.”

“இப்போது சொல்லுங்கள். என்ன வேண்டும்?” கம்பீரமாக அவரோடு அவரின் மொழியில் பேசும் அந்நியப் பெண்ணை ஆச்சர்யமாகப் பார்த்தார் பின் மெல்லக் கேட்டார்.

“வந்து... வணக்கம் சுங்யோ! என் மருமகன் சுரோ… அவனைப் பற்றித் தகவல் இருப்பதாகக் காலையில் போ சொல்லியனுப்பினார். இங்கே வந்து உங்களைச் சந்தித்தால் மேலதிக விவரம் சொல்வதாக...”

“ம்ம்?”

“சுரோ பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்... அவன்... என் சுரோ பிழைத்தானா... எங்கே இருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா... நீங்கள் கலத்தில் வருகையில் எங்காவது அவன்...அவனது... அவனைப் பார்த்தீர்களா? அவனது. அவ...”

இறந்துவிட்டானா என்ற கேள்வியைத் தவிர்க்க அவர் படும்பாட்டை உணர்ந்தவள் சட்டென “உயிரோடு இருக்கிறார். உங்கள் சுரோ நலமாக இருக்கிறார். அந்தக் கூடாரத்திலேதான் இருக்கிறார்.”

உயிர் தரும் புன்னகை. மின்னல் வெட்டியதுபோல அப்போது நினைவுக்கு வந்தது தன் மருமானின் கனவு.

“நான் உருவாக்கப்போகும் பொன்கயா நாட்டின் அரசி அவளேதான் மாமா.” உள்ளே ஓங்கி ஒலித்தது சுரோவின் குரல்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism