Published:Updated:

செம்பா: ``சுரோ தலைமையேற்பதை இஜினாசியால் மட்டுமல்ல, யாராலும் மறுக்க முடியாது” | பகுதி 36

செம்பா

“தெளிவாகப் புரிகிறது யூசு அவர்களே. கண்டிப்பாக இளவரசர் சுரோ போருக்கு வரத்தான் வேண்டும். ஆனால் எப்போது என்பதில் மட்டும்தான் நாம் வேறுபடுகிறோம்.”

செம்பா: ``சுரோ தலைமையேற்பதை இஜினாசியால் மட்டுமல்ல, யாராலும் மறுக்க முடியாது” | பகுதி 36

“தெளிவாகப் புரிகிறது யூசு அவர்களே. கண்டிப்பாக இளவரசர் சுரோ போருக்கு வரத்தான் வேண்டும். ஆனால் எப்போது என்பதில் மட்டும்தான் நாம் வேறுபடுகிறோம்.”

Published:Updated:
செம்பா

சுரோவின் குரல் மனதினுள் ஒலித்த கணத்தில் யூசுவுக்குள் ஒரு தெளிவு பிறந்தது. கண்முன்னிருக்கும் பெண்ணின் மீது காரணமற்று ஒரு நம்பிக்கையும் பிறந்தது.

கரட்டுப்பாறையில் ஒரு மகாராணியைப்போல அமர்ந்திருக்கும் அவளும் அவளைச் சுற்றி அவளது அன்புக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்கும் அத்தனை முகங்களும் அவரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்றே எண்ணத் தோன்றியது.

யாவற்றையும் தாண்டி, இனி கிடைத்திடவே வாய்ப்பில்லை என்று நம்பிக்கையற்றுப்போயிருந்த நிலையில் அவரின் மருமான் சுரோவைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே அவர் தனது வாழ்நாள் முழுவதையும் இந்தக் கூட்டத்துக்கு அடிமைச்சாசனம் எழுதிவைத்துவிடச் சித்தமாக இருந்தார்.

கண்கள் நிரம்ப அவர் அசைவற்று நின்றிருப்பதைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள் செம்பா.

“அண்ணா!” கண்ணசைத்து அவள் காட்டியதும் சங்கன் உடல் நடுங்க நின்றிருந்தவரைத் தோள்பற்றி அழைத்துக்கொண்டு, கூடாரத்துக்குள் விட்டுவிட்டு வந்தான்.

ஓரிரு நாழிகை நேரம் கழித்து யூசு வெளியே வந்தார். மனம் தெளிவுற்றிருந்ததை முகம் பிரதிபலித்தது.

எழினியை உடல்நிலை காரணம் சொல்லி உறங்க அனுப்பிவிட்டு, துணையாக சங்கனையும் அனுப்பிவிட்டு போவும் கண்ணனும் செம்பவளமும் மட்டும் சிறு தீயின் முன்னே அமர்ந்திருந்தனர்.

அவருக்காகக் காத்திருந்தனர்போலும்.

“நன்றிகளைச் சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை” சொற்களைத் தாண்டிய உணர்வுகளைத் தழுதழுத்த குரல் தந்தது.

“எங்கள் கடமையைத்தான் செய்தோம்.” தெளிவாக வந்தது பதில். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அந்தத் தெளிவு இருக்குமென்று தோன்றியது.

சுரோவைப் பார்த்துவிட்டுத்தானே வந்திருந்தார்... மருந்திட்ட இடங்களிலிருந்து காயங்கள் எத்தகையவை, எந்த எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டவை என்பதை அவரால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த நிலையிலிருந்து இப்போதிருக்கும் சுரோவின் தேர்ச்சிநிலை அவர்களின் செயல்முறை நேர்த்தியைக் காட்டத்தானே செய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

கண்ணைத் திறக்காவிட்டாலும் பந்த ஒளியில் சுரோவின் முகத்தில் தென்பட்ட அமைதியும் மூச்சில் இருந்த நிதானமும் அவருக்கு நிம்மதியளித்திருந்தன. அவனைப் பார்த்துக்கொண்டு அவன் கண்விழிப்பானோ என்று காத்துக்கொண்டு நெடுநேரம் அமர்ந்திருந்தவரை பல்வேறு கேள்விகள் தின்னத் தொடங்கவும்தான் எழுந்து வெளியே வந்திருந்தார்.

”வந்து... மருந்துமுறை?”

“மூலிகைகள் சில இங்கே கிடைத்தவை. ஆனால் மருத்தவம் எங்கள் நாட்டுமுறை. இப்போதே நாளைக்கு ஒரு முறையாவது விழித்துச் சுற்றிலும் பார்க்கிறார். இன்னும் ஓரிரு நாளில் எழுந்து அமர்ந்துவிடுவார். ஐயம் வேண்டாம். கவலையை விடுத்து முதலில் சற்று அமருங்கள் ஐயா. ஏதாவது அருந்துகிறீர்களா... புதிதாய்ப் பிழிந்த மக்கொலி இருக்கிறது தரச்சொல்லட்டுமா?” சொன்னவளை வியப்போடு பார்த்தார்.

“அதெல்லாம் வேண்டாம் சுங்யோ. சுரோவை விடியலில் அழைத்துச் சென்ற விடுகிறேன். அதுவரை இங்கே தங்க அனுமதித்தால் போதும்.”

“அவரை அழைத்துச் செல்லப்போகிறீர்களா... எப்படி?”

“எப்படியென்றால்?”

“என் அனுமதியில்லாமல், என் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை அழைத்துச்செல்ல முடியும் என்று எப்படி நினைத்தீர்கள்?”

இப்படியொரு கேள்வியை யூசு எதிர்பார்த்திருக்கவேயில்லை. முகம் கறுத்துவிட்டது. சற்றுத் தடுமாறினார். பின் வேகமாகச் சொன்னார்.

“அவன் என் மருமகன்.”

“அது தெரிந்ததுதானே. அதனால்?”

“அதனால், என்னைவிட அதிக உரிமை யாருக்கு இருக்கிறது... அவனை அழைத்துச்செல்ல எனக்கு யார் அனுமதி தர வேண்டும்?” தன்னையறியாமல் குரலில் சற்றுக் காட்டம் ஏறியது. அவள் சிரித்தாள்.

“அவரைக் காப்பாற்றி, மருந்திழைத்து உயிரை மீட்டுக்கொடுத்திருக்கும் என்னிடம் அனுமதி பெற வேண்டும்.” அந்த சிம்ம கர்ஜனைக்கு பதிலே இல்லை அவரிடம். போவுக்கே சற்றுப் பாவமாகத் தோன்றியதுபோலும்

“செம்பா, என்ன இருந்தாலும் அவர் உற்றவர்.”

“அப்படியா... அது உறுதியா போ?”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டென சத்தெல்லாம் வடிந்து அமர்ந்துவிட்டார் யூசு. அவருக்குப் புரிந்துவிட்டதெனத் தோன்றியதுபோலும், செம்பவளத்தின் குரலும் சற்று இறங்கியது.

“அவர் இன்னும் கண் திறந்து பேசவில்லை யூசு அவர்களே. அவரே எழுந்து உங்களை நம்புவதாகச் சொல்லட்டும்.” முடியாமல்விட்ட அவளது பதிலில் ஏதோ உறுத்த, யூசு வேகமாகக் கேட்டார்.

“அவன் எழுந்து சொன்னால் அப்போது அனுப்புவீர்களா?” கேள்வியில் இருந்த ஐயத்தைப் படித்தவள் சத்தமாகவே சிரித்தாள். பின் மெல்லத் தலையசைத்தாள் இடவலமாக.

“இது என்ன அநியாயம்... அதெப்படி எங்கிருந்தோ வந்த நீங்கள் என் சுரோவைச் சொந்தம் கொண்டாட முடியும்?”அந்தக் கேள்வியில் சட்டென முகம் சிவந்தாலும், சமாளித்து நிதானமாகவே பதில் தந்தாள் செம்பவளம்.

“ஐயா! அமைதியாக நான் சொல்வதைக் கேட்டால் நான் சொல்வது சரியென்று உங்களுக்கே தோன்றும். நீங்கள் உணர்ச்சி மிகுதியில் சிந்திக்க மறுக்கிறீர்கள்.”

“என்ன சிந்திக்க மறுக்கிறேன்... இதோ! இப்போது போய் ஜீமின்னுக்கும் இன்னும் சிலருக்கும் உண்மையைச்சொன்னால்...”

“சொன்னால்?” சட்டென இடைநிறுத்தி அவள் போட்ட கேள்வியில் தடுமாறினார் யூசு.

“சொன்னால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?”

“...”

“யூசு அவர்களே! உங்கள் கதை அத்தனையும் யாம் அறிவோம். சுரோவின் பிறந்தகாலத்து தெய்வவாக்குச் சிக்கலிலிருந்து குயாவின் இன்றைய நிலை வரை அத்தனையும் எனக்கும் தெரியும். பதற்றப்படாமல் நான் சொல்வதைச் சற்றுக் காதுகொடுத்துக் கேளுங்களேன்.”

“இதை அருந்துங்கள் யூசு.” செம்பாவின் கண்ணசைவில் அவருக்குத் தரப்பட்ட வெதுவெதுப்பான பானம் அப்போது அவருக்குத் தேவைப்பட்டதாகவே இருந்தது. அவர் அருந்திக்கொண்டிருக்கும்போதே அவளது நிதானக் குரலில் தொடர்ந்தாள் அவள்.

“குயாவின் இன்றைய நிலை தலைவனற்ற நிலம். இளவரசர் சுரோவை கடலில் மாய்த்துவிட்டு, அவரது பதவியைப் பிடுங்கிக்கொள்ள நினைத்த அவரது சகோதரர் இஜினாசி இப்போது சாரோவின் படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். பியோன்ஹானின் பன்னிரண்டு கூட்டமைப்புத் தலைவர்களும் பிளவுபட்டு நிற்கிறார்கள். சரிதானா?” ஆமோதிப்பாகத் தலையசைத்தார் யூசு.

“குயாவுக்கு எதிராக படை நடத்திவரும் சாரோவின் மன்னர் நம்ஹேவின் மருமகன், அதாவது சாரோவின் இன்றைய படைத்தளபதி, ஒருகாலத்தில் சுரோவின் நம்பிக்கையை உடைத்த சியோக் தல்ஹே. சரிதானா?”

”சரிதான்.”

“சரி, இளவரசர் சுரோ இல்லாத, பிளவுபட்டுக் குழம்பிக்கிடக்கும் கூட்டமைப்பினரின் படைப்பிரிவுகளை இஜினாசி மட்டுமாக தலைமையேற்றுச் சென்று சாரோவை வென்றுவிடும் சாத்தியம்..?”

செம்பா
செம்பா

“சிறிதுகூட இல்லை. கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். கேவலமாகத் தோற்றுவிடுவான்.” யூசுவின் வேக பதிலில் வியப்பாகப் புருவம் உயர்த்தியவளைப் பார்த்துச் சங்கடப் புன்னகை செய்தார்.

“இஜினாசியும் என் தங்கை மகன்தான். நல்லவன்தான். அறிவாளிதான். ஆனால் அவன் மனதைப் பொறாமைப் பேய் பிடித்தாட்டுகிறது. தெளிவான எந்த முடிவையும் அது எடுக்கவிடாது. அதுவுமன்றி சாரோவின் படையும் சிறியதல்ல. அது தல்ஹேவின் கவனிப்பில் மெருகேறியிருக்கிறது. ஆகப்பெரிய மாஹான் நிலத்து போஜிப்படையையே தோற்கடித்து விரட்டும் வலிமைகொண்டது சாரோவின் படை.”

“வெற்றி தோல்விக்குப் படை வலிமை மட்டுமே காரணமல்லதானே யூசு அவர்களே?”

திடீரென தொடர்பற்று யுத்த சாத்திரம் பேசுபவளைக் குழப்பத்தோடு பார்த்தார். “இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள் சுங்யோ. தெளிவாகப் புரியும்படி சொல்லுங்கள்.” செம்பா முன்னே நகர்ந்து அமர்ந்தாள்.

”சாரோவுக்கு குயாவின் நிலம் வேண்டும். குறிப்பாக, தல்ஹேவுக்கு இங்கே இருக்கும்போது கிடைக்காத இரும்பு வேண்டும். இது புதிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் முன்னேற்பாடுகள் மிகையாகவே நடந்திருக்கும். அதனால் சரியான திட்டமிடல் இல்லாமல் இந்தப் போரைச் சந்திப்பதென்பது குயாவைத் தோல்விக்கு இட்டுச்செல்வதாகும். இது ஒருபுறமிருக்க, இளவரசர் சுரோவின் புகழின் நிழலில் நெடுநாள் வாழ்ந்த இஜினாசிக்குத் தன் திறனை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் முதல் மற்றும் ஒரே வாய்ப்பு - அதாவது இளவரசர் சுரோ இருந்திருந்தால்கூட இப்படிச் சமாளித்திருக்க மாட்டாரென்று மக்கள் பேச வேண்டுமென்பது மட்டுமே இப்போது இஜினாசியின் மனநிலையாக இருக்கும். சரிதானே?”

என்ன சொல்ல வருகிறாள் இந்தப் பெண் என்று குழப்பத்தோடும் மெல்ல ஏறிக்கொண்டிருந்த ஒருவித படபடப்போடும் பார்த்திருந்தார் யூசு.

“சுருங்கச் சொல்வதென்றால் இந்தப் போரில் குயா வெல்வதைவிடவும், இஜினாசி தோற்பதுதான் இளவரசர் சுரோவுக்கு நல்லது. சரிதானா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொல்லியேவிட்டாள். அவர் பயந்ததை பயந்தவிதமே சொல்லியேவிட்டாள்.

”அதற்காக..?”

“பொறுங்கள் பதற்றம் வேண்டாம். முழுமையாகச் சொல்லிவிடுகிறேன். இஜினாசி தன்னை நிரூபிக்க இடமின்றித் தோற்க வேண்டுமென்று சொன்னேனே ஒழிய, குயா தோற்க வேண்டுமெனச் சொல்லவில்லை.”

“இது இரண்டுமே நடக்க வேண்டுமென்றால் சுரோ என்னோடு இப்போதே வர வேண்டும் அது புரிகிறதா இல்லையா உங்களுக்கு?” கோபம் வெளிப்படையாகத் தெரியவே கேட்டார் யூசு. அவள் சிரித்தாள்.

“தெளிவாகப் புரிகிறது யூசு அவர்களே. கண்டிப்பாக இளவரசர் சுரோ போருக்கு வரத்தான் வேண்டும். ஆனால் எப்போது என்பதில் மட்டும்தான் நாம் வேறுபடுகிறோம்.”

“புரியவில்லை.”

”புரியும்படியே சொல்கிறேன் கேளுங்கள்” என்றவள் கண்கள் ஒளிர சொல்லச் சொல்ல ஓராயிரம் பந்தயக் குதிரைகள் அவருக்குள் ஓடத் தொடங்கின.

“அப்படி வந்து நின்றால்?” திட்டத்தைச் சொல்லி முடித்து முத்தாய்ப்பாக அவள் கேட்க, அவரையறியாமல் பதில் வந்து விழுந்தது.

“சுரோவின் தலைமையை.. குயாவின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது.”

“அவ்வளவுதான்.” அவளது சிரிப்பில் நம்பிக்கையும் பேராவலும் கலந்து மிளிர்ந்தன.

“ஆனால் இது சரியாக வருமா? ”

“சரியாகவே வரும்.”

கண்கள் ஒளிர அவள் திட்டங்களைத் தீட்டும்விதம் கண்டு வியந்தாலும், இன்னும் கண்ணாலும் கண்டிராத இஜினாசியின் மீது இத்தனை வெறுப்பு இந்தப் பெண்ணுக்கு ஏனென்று வியப்பேற்பட்டது யூசுவுக்கு.

காரணம் என்னவாக இருக்க முடியுமென்று சிந்தித்ததில் சிரிப்பும் வந்தது.

இயற்கையில் ஏற்பாடுகளைத் தாண்டி மனிதன் செய்துவிட என்ன இருக்கிறது... அடேயப்பா! என்று நினைத்துக்கொண்டார் அந்த வயதான மாமன்.

—---

குயாவில் இஜினாசி பெரும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தான்.

சாரோவை எதிர்க்க, குயா தயாராகிக்கொண்டிருந்தது.

“பன்னிருகுடிவாழ் படைகளும் குயாவின் படைகளோடு கலக்கத் தொடங்கிவிட்டார்களா... சீன ஆயுதங்களைப் பயன்படுத்த, பயிற்சிகளை அதிகப்படுத்தச் சொல்லியிருந்தேனே?” இஜினாசி ஆலோசனை மண்டபத்தில் ஹிம்சான் சூஜின்னோடு அமர்ந்திருந்தான்.

செம்பா
செம்பா

“எல்லாம் ஏற்பாடாகியிருக்கிறது அரசே, நில எல்லைகளில் இருக்கும் குடிப்படைகளையெல்லாம் அங்கேயே பயிற்சிகளை அதிகப்படுத்தச் சொல்லி ஆணை போயிருக்கிறது. அழைக்கும் நேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்...”

“ஆனால்?”

“பன்னிரு குடிகளும் நமக்கு ஆதரவைத் தரவில்லை.”

“ஏன்... நமது கூட்டமைப்பு விதியின்படி யாரொருவரின் உதவிக்கும் மற்றவர் செல்ல வேண்டுமே?”

“அதற்கும் விதிவிலக்கு இருக்கிறதே... தன் நிலத்தின் பாதுகாப்பு என்ற விதிவிலக்கு. ஜீமின்னும், ஜியோப்தோகன் தலைவரும், இன்னும் சில கிழக்கு வடகிழக்குக் குடித்தலைவர்கள் சாரோ அவர்கள் நிலத்தின் வழியாக குயா வரக்கூடுமெனக் காரணம் சொல்லி நம் படையோடு இணைய மறுத்துவிட்டனர்.”

“ம்ம். அதுவும் உண்மைதானே... அப்படி வந்தால் அந்த வழியை அடைக்கத்தான் வேண்டும். சரி அங்கெல்லாம் பயிற்சியை மிகுதியாக்க நமது வீரர்களை...”

“நம் உதவி வேண்டாமாம். அவர்களே பார்த்துக்கொள்கிறார்களாம்.”

“அதாவது..?”

“அதாவது உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை இல்லையென்று சொல்லாமல் சொல்கிறார்கள்.”

பீங்கான் சிதறியது. தேநீர் திரைகளைக் கரையாக்கியது. முகங்கள் சிவந்தன.

“அவ்வளவு திமிராகிவிட்டதா அந்தக் கிழவனுக்கு... அந்த சுரோவுக்குக் கொடுத்த மரியாதையை இவருக்குக் கொடுப்பதற்கு அவ்வளவு வலிக்கிறதா அவனுக்கு...” சூஜின் கத்த, கைதொட்டு அமைதிப்படுத்தினான் இஜினாசி. கையில் கிடைத்தால் ஜீமின்னை வயது பார்க்காமல் அறைந்துவிடுவாள் போலிருந்தது.

“எல்லாம் அந்த யூசுவினால்தான்.”

“புரியவில்லை.”

”சுரோவின் உடல் இன்னும் கிடைக்கவில்லையல்லவா?” சட்டென நிமிர்ந்தான் இஜினாசி.

“என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது... அவன்தான் கடலிலே கலந்து பல நாள்களாகின்றன. இறுதிச்சடங்கெல்லாம் முடிந்த பின்னும் இவ்வளவு பிடிவாதமா அந்த ஒல்லிக்கிழவனுக்கு?” சூஜின் வெடித்தாள்.

“அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு”

”அண்ணா... வந்து... சுரோ பிழைத்திருக்க ஒருவேளை வாய்ப்பிருக்கிறதா மாமா... தப்பியிருக்க வாய்ப்பு?” இஜினாசியின் குரலில் இன்ன உணர்ச்சியென்று பிரித்தறிய முடியவில்லை.

”கடற்கொள்ளையர்கள் கையில் அகப்பட்டவன் எப்படிப் பிழைக்க முடியும் அரசே?

அவர்கள் முதலில் கத்திவைப்பதே கழுத்தில்தான். உயிரைப் போக்குவதுதான் அவர்களின் தாக்குதல் உத்தி. சண்டையெல்லாம் செய்து நேர விரயம் செய்ய மாட்டார்கள். பிறகு எப்படிப் பிழைத்திருப்பான்?” செய்யச் சொன்னது நானல்லவா மனதுக்குள் நினைத்தபடி இறுக்கம் தளர்ந்து சிரித்தார் ஹிம்சான்.

தொடர்ந்த சில நாள்களில் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவிதமான மாற்றங்கள் நடந்தன.

சாரோவை வென்றுவிடும் நம்பிக்கையை ஹிம்சான் தொடர்ந்து இஜினாசிக்கு ஊட்டிக்கொண்டிருந்ததாலும், ஹிம்சானின் உதவியோடு நங்நங்கிலிருந்து வந்திறங்கிய புதிய சீன ஆயுதங்கள் இஜினாசிக்கு மிகுந்த மனோபலத்தைத் தந்ததாலும் அவனும் சூஜின்னும் அரசனும் அரசியுமாக மாபெரும் கனவுக்கோட்டைகளை மனதுக்குள் எழுப்பியபடி உலவிக்கொண்டிருந்தனர்.

ஆனால் சாரோவில், தல்ஹே அப்படி இருக்கவில்லை. சுரோவின் மறைவை இன்னும் ஏற்றிருக்காத அவனது மனது தன் கையால் நேரப்போகும் இஜினாசியின் முடிவுக்காகத் துடித்துக்கொண்டிருந்தது.

சாரோவின் படை குயா மண்ணில் புழுதி பறக்க நுழையப்போகும் காலம் நோக்கி வெகுவாகக் காத்திருந்தான் தல்ஹே.

தம்னா கூடாரத்திலோ இரவு வேளைகளில் ஆளரவம் மிகுதியாகத் தொடங்கியிருந்தது. முதலில் ஜீமின் மட்டும் வந்தது போய், இப்போது பன்னிருகுடிகளின் கூட்டமைப்பில் சுரோவின் அன்புக்குரிய தலைவர்கள் பலரும் வந்து போகலாயினர்.

இவையெல்லாம் தவிர மிக முக்கியமான ஒன்றும் நடந்திருந்தது

சுயநிலை முற்றுமாகக் கைப்பெற்று கண்விழித்திருந்தான் சுரோ.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism