Published:Updated:

செம்பா: ``ஒரு பாவையின் அம்புக்குத்தான் பாண்டியன் தோற்றதோ?!” | பகுதி 24

செம்பா

அவளது வலிகளைப்புரிந்து கொண்ட பாவனை, அடிபட்ட சிறுகுஞ்சை அணைத்துக்கொள்ளும் தாய்ச்சிறகின் இதம் அந்தப்பார்வையில் இருந்தது.

செம்பா: ``ஒரு பாவையின் அம்புக்குத்தான் பாண்டியன் தோற்றதோ?!” | பகுதி 24

அவளது வலிகளைப்புரிந்து கொண்ட பாவனை, அடிபட்ட சிறுகுஞ்சை அணைத்துக்கொள்ளும் தாய்ச்சிறகின் இதம் அந்தப்பார்வையில் இருந்தது.

Published:Updated:
செம்பா
மதுரைப்பெருநகர்

“பாண்டிமா தேவி வசிக்கும் பகுதி ஏதென்றா கேட்டீர்கள்? அதோ! அங்கே அந்தத் தங்கநிறக் கோபுரத்தின் மூன்றாம் மாடத்தின் மேல் பெரிய தூண்கள் கொண்ட பலகணியொன்று தெரிகிறது பாருங்கள்! அது தான் பாண்டிமாதேவி வசிக்கும் அந்தப்புரப் பகுதி.”

இற்சிறை பெற்ற தலைவி போலக் கடுங்காவல் கொண்ட உட்கோட்டைக்குள் நெடுமரங்களிடையே ஒளிந்து நின்ற நான்மாடக் கோபுரத்தின் கிழக்குப்பகுதி நோக்கிச் செஞ்சாந்து பூசியத்தன் விரல்நீட்டிக்காட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப்போக, அவள் நீரெடுத்துச்சென்ற சிற்றோடையின் கரையிலே நின்ற மருதமரத்தின் மேல் சாய்ந்தபடி யோசனையோடு அந்தப்பகுதியைப் பார்வையால் அலசலானான் சங்கன்.

அதிகாலை வேளை.

வையையிலிருந்து சுருங்கை வழி கோட்டைக்குள் வந்து சுழித்தோடிய அந்தச் சிற்றோடையில் நீரெடுக்கும் பெண்கள் தவிர்த்து அதிகப் புழக்கமில்லாதிருந்தது அவ்வீதி.

அதன் சந்தியில் நின்ற மருதமரத்தைச்சுற்றி உதிர்ந்த மலரிதழ்கள் செந்நிற வட்டம் கட்டியிருந்தன. அதன் மேல் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அவன் ஏதாவது சொல்வானென்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள் எழினி.

மதுரைக்கு வந்து மூன்று நாட்களுக்கு மேலாகிவிட்டன. இன்னும் அவர்கள் செம்பவளத்தைச் சந்திக்கும் வழியைக்காட்டவில்லை மருதனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தித்த அன்று எப்படியாவது அவர்களை அரண்மனைக்குள் அனுப்பி விடுவதாகச் சொன்னவர் மறுநாள் காலையிலேயே பெரிய கல்லைத்தூக்கி அவர்கள் தலையில் போட்டிருந்தார்.

“புதியவர்கள் யாரையும் அரண்மனைக்குள் அனுமதிக்கக் கூடாதென ஆணை பிறப்பித்திருக்கிறார் மன்னர்.”

“இது எப்போது?”

“உன் தங்கை வரும்போது அந்த ஆணையும் சேர்ந்தே வந்தது.”

“அப்படியென்றால் இது உங்களுக்கு முன்பே தெரியுமா?”

“ம்ம். எப்படியாவது உங்களை உள்ளே அனுப்பிவிடலாமென நினைத்தே சொல்லாமலிருந்தேன். ஆனால் முடியவில்லை.” திடீரென இப்படிப் புதிய சட்டங்களைப்போடுவது செழியனுக்கு ஒன்றும் புதிதல்ல என்பது ஒருபுறம் இருக்க அப்படி மன்னர் செய்யும் காரியமெதுவும் காரணமின்றி இருக்காது என்ற புரிதல் மருதனாருக்கு உண்டு. இருந்தாலும் அவர் வரை இந்தச் சட்டம் நீண்டிருந்தது அவருக்குச் சற்று வருத்தமளித்தது. தனக்கொளித்து செழியனிடம் ஒன்றுமில்லை என்ற அவரது பெருமிதம் அடிபட்டிருந்தது. இந்த விஷயத்தில் தான் மன்னர் பக்கம் நிற்கவில்லையென்பதால் தான் இப்படியோ என்று எண்ணத்தோன்றியது அவருக்கு.

“ஐயோ! இனி என்ன செய்வது?” சங்கன் செய்வதறியாது கையைப் பிசைந்தான்.

“ஓரிரு நாட்கள் பொறுங்கள். மன்னர் இப்போது பொதினியில் இருப்பதாகச்செய்தி வந்திருக்கிறது. அங்கேயே போய் அவரிடம் பேசிப்பார்க்கிறேன்.”

“அது வரை செம்பவளம்..”

“கவலைப்படவேண்டாம். உன் தங்கை பாண்டிமாதேவியின் பாதுகாப்பில் பத்திரமாக இருப்பதாகக் கேள்வி. அன்னையின் பரிவு அவளுக்குக்கிட்டும்.”

“அதெல்லாம் எதற்கு? மன்னர் வருவதற்குள் அவருக்குத் தெரியாமல் எங்களை உள்ளே அனுப்பமுடியாதா? செம்பாவை அழைத்துக்கொண்டு நாங்கள் ஓடி விடுவோமே!” எழினி கேட்கவும் மருதனார் முறைத்தார்.

“அப்படியெல்லாம் செய்யலாம் என்று கனவு கூடக்காணாதீர்கள். கோட்டைக்காவலில் செழியனின் உக்திகளுக்கு இணையில்லை. அதனால் நான் வரும்வரை இருவரும் கவனமாக இருங்கள். அதிகம் வெளியே சுற்ற வேண்டாம். சங்கா உன் தங்கையைச் சுற்றிய சிக்கல் பெரிது. அவளோடு தொடர்புடைய எல்லோருக்கும் ஆபத்திருக்கிறது. அது தெரியும் தானே?”

“தெரியும்” என்றான் சுருக்கமாக.

சங்கன் ஒளித்துப்பேசினாலும் அவர் இரவே திரைநாடனிடம் தெளிவாகப்பேசியிருந்தார். அவரது பல கேள்விகளுக்குத் திரைநாடரிடம் பதிலிருந்த போதிலும் முக்கியமான கேள்விக்குப்பதிலின்றி இருவருமே தவித்தனர். அந்த உண்மை கோடனோடு புதைந்து போய்விட்டதாகச் சொல்லியிருந்தார் திரைநாடன். மன்னனோ எடுத்ததை முடிக்காமல் விடுகிறவரில்லை. இது எங்கு போய் முடியப்போகிறதோ! பெருமூச்செறிந்தார் மருதனார்.

“புரிந்தால் சரி. அரண்மனைக்குள் நுழையவும் முயற்சிக்க வேண்டாம். தெரிகிறதா?” அவர் கிளம்பியபோது அவர்களிருவரும் தலையாட்டி வைத்ததை நினைத்துப்பார்த்துப் பெருமூச்செறிந்தாள் எழினி.

அன்றோடு திரைநாடனுக்கும் மேனி சுகமில்லை. கடுஞ்சுரம். மருதனாரின் வீட்டிலேயேக் கவனமாகப் பராமரிக்கப்படுகிறார் என்றாலும் அவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று உபாயஞ்சொல்லும் நிலையில் அவரில்லை.

செம்பா இருந்திருந்தால் இந்நேரம் பலவிதமான உபாயங்களைப் பட்டியலிட்டிருப்பாள் என்று அங்கலாய்த்து அதற்கும் சங்கனிடம் திட்டு வாங்கிக்கொண்டாள்.

அவன் சதா சர்வ காலமும் எரிச்சலிலேயே இருந்தான். அவனுக்குச் செம்பவளத்தைக் காக்க வேண்டுமென்ற துடிப்புக்கு இணையாக இப்போது வேறொரு சங்கடமும் சேர்ந்து கொண்டிருந்தது. அது அருகே அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. விலகிச்செல்ல முடியாமல் தொற்றிக்கொண்டே வரும் துன்பம்.

’எல்லாம் வாங்கி வந்த வரம் போலும். முன்பு தங்கை இப்போது இவள். ஆனால் செம்பாவோடு இவளை இணை சொல்ல முடியுமா? அவனது தங்கை கொஞ்சம் பிடாரிதான் என்றாலும் பேரழகி.

இவளொன்றும் அத்தனை…’ என்றெண்ணியபடி அவள் புறம் திரும்பியவனின் எண்ண ஓட்டம், கதிர் நோக்கிய வெள்ளாம்பல் போல நீண்டிருந்த அவள் முகம் பார்த்துச் சிதறியது.

“ச்சை…”

“என்ன ச்சை? என்ன வேலைக்காகாத சிந்தனையில் இருக்கிறீர்கள்? நம் சிக்கல் குறித்து உருப்படியாக ஏதேனும் வழி கிட்டியதா அன்றி அது வெற்றுக்குடம் தானா? அதனால் தான் அத்தனைக் கலகலக்கிறதா?” அவன் புத்தியைக்குறை கூறிச் சீண்டினாள்.

”ஏன் அவ்விடத்து நிறைகுடத்துச் சிந்தனைகளை இப்படிக் கொஞ்சம் தெறிக்க விடுவது தானே?”

செம்பா
செம்பா

“நானொன்றும் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளவில்லையே. நீங்கள் தான் பெருமை பீற்றிக்கொண்டீர்கள். போதாக்குறைக்கு உங்கள் தங்கை வேறு.”

“ஐயோ! பேச்சைக்குறையேன்!” என்றவன் பார்வை மீண்டும் மாடம் நோக்கி நீண்டது. அவ்வப்போது பெண்கள் சிலர் கடந்து போவது தெரிந்தது. அதிலே பழக்கப்பட்ட அந்த உருவத்தைத்தேடித் தோற்றான்.

எவ்வளவு பெரிய அரண்மனை! எத்தனைக்காவல்! இதெல்லாம் மீறி எப்படித்தான் அவளைச் சிறை விடுவிப்பது? மன்னர் வருவதற்குள் அவளை எப்படியாவது மீட்டுக்கொண்டு கண்காணா தேசத்துக்குப் போய்விட முடியுமானால்...திடீரெனத் துள்ளி நிமிர்ந்தான்.

“என்ன?”

“வேறு வழியில்லை. ஒரே வழி தான் நமக்கு மிஞ்சியிருக்கிறது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்ன வழி?”

“மருதனார் போகக்கூடாதெனச் சொன்ன வழி.” அவன் பதிலைக்கேட்டு முதலில் திடுக்கிட்டவள் முகத்தில் மெல்ல ஒரு விஷமப்புன்னகை பரவிப்பொலிந்தது.

…………

கிழக்குக்கோபுரம் பாண்டியன் அரண்மனை

வரித்திருந்த ஆணுடை களைந்து தலைச்சீரா தொலைந்து எளிமையான அணிமணிகள் பூண்டு ஏவல் பெண்டிருள் ஒருத்தி போலப் பாண்டிமாதேவியின் அறைக்கதவில் கண்வைத்தபடி வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்தாள் செம்பவளம்.

அவள் ஆடை திருத்திக்கொண்டு அங்கே வருவதற்குள் மன்னன் அரசியின் அறைக்குள் போய்விட்டதாகச் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர் மற்ற பெண்கள்.

பார்ப்போருக்கு எளியவளாய் பழகியோர்க்குப் புதிராய் இருப்பவள் பாண்டிமாதேவி. அப்படிப்பட்டவளோடு இந்த மூன்று நாள்களும் நேரங்காலம் பாராமல் கதைத்துக்கிடப்பதும், நித்தமொரு வேடம் புனைந்து கைகோர்த்துக்கொண்டு கோட்டை வாயில் தாண்டிப்போய் ஊர்சுற்றி வருவதும் - இதெல்லாம் இந்தச் செழியன் கோயில் சரித்திரத்திலேயே நடந்ததில்லையென்று வியந்தனர். அதனால் அவளைப்பார்த்து மிரண்டு ஒதுங்கினர்.

அவள் வாசலில் காத்திருந்தாள்.

உள்ளுக்குள் பலவித எண்ணங்கள் அலையலையாய்ப் புரண்டெழுந்தன. பொங்கி நடுக்கிய சினம், அதைத்தடுக்க முயன்று தோற்ற- அரசியின் மீதான இனம்புரியாத -பாசம், இவற்றுக்கிடையே கிளர்ந்து வளர்ந்த குறுகுறுப்பு, பேராவல்.

ஒரு நாழிகை நேரமிருக்கும்.

மசமசப்பாய்ப் பேச்சுக்குரல். அதிர்ந்தொலிக்கும் குரல்கள். சிரிப்பா கேவலா என்று இனங்காண முடியவில்லை.

உலோகம் உருளும் ஒலி எதிரொலித்து அடங்கியது. ஏவல் மகளிரிடையே கிசுகிசுப்பு.

“ஆரம்பித்துவிட்டார்கள்..” உச்சுக்கொட்டுதலும் பெருமூச்சுமாகச் சாளரந்துடைப்பவளொருத்தி புலம்பினாள். செம்பாவுக்குக் குழப்பமாக இருந்தது.

வாடிக்கையான சண்டையா?

அந்தச் சாகசக்காரிக்குச் சண்டை போடக்கூடத் தெரியுமா? அவளை அறிந்த இத்தனை நாட்களில் என்று எண்ணம் போன போக்கில் திடுக்கிட்டாள்.

அவள் வந்து நான்கு நாட்கள் தான் ஆகின்றனவா? அதற்குள் ஆண்டாண்டு காலம் பழகியது போல எப்படித் தோன்றுகிறது?

முதன்முதலாய் அரசியின் அறைக்குக் கேள்வியோடு சென்று நின்றகணம் இன்னும் அவள் மனதில் நிழலாடியது. அந்த முதல் பார்வை…அவளைப் பற்றிய யாவும் அறிந்தது போன்ற அந்தப் பார்வை...

அவளது வலிகளைப்புரிந்து கொண்ட பாவனை, அடிபட்ட சிறுகுஞ்சை அணைத்துக்கொள்ளும் தாய்ச்சிறகின் இதம் அந்தப்பார்வையில் இருந்தது. அது அவள் பழகியறிந்திடாத ஒரு உணர்வை அவள் உள்ளத்துள் பாய்ச்சியது. தன்னையறியாமல் கண்கள் கலங்கி நின்றாள்.

அதன்பின் பாண்டிமாதேவியின் கண்ணசைவுக்கு ஆடும் பாவையாக அவளும் மாறிப்போனது அதிசயமேதுமில்லை. அங்கே அனைவருமே அப்படித்தான் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

ஆனால் இந்த நெடுஞ்செழியனுக்கு மட்டும் அது முடியவில்லையா?

முதன்முறை பார்த்தவளுக்கே இன்முகம் காட்டியவள், கட்டிய கணவன், நாடாளும் மன்னன் அவனோடு என்ன பிணக்கு? ஒருவேளை மாறுவேடம் புனைந்து தன்னோடு கோட்டைக்கு வெளியே சென்று வந்தது தெரிந்துவிட்டதோ! அதற்காகத்தான் அரசியைக் கடிந்து கொள்கிறாரோ!

அறையினினுள் நெடுநேரம் அமைதி நிலவியது போலிருந்தது. ஒரு வழியாகத் தாதியை அழைக்கும் முரசு ஒலித்தது. அவசர அவசரமாகப் பானகமும் பழங்களும் பெருந்தட்டுகளில் ஏந்தியபடி இரு பெண்கள் நுழையப்போயினர். ஓடிச்சென்று அவர்களைத் தடுத்தாள் செம்பா.

“என்னிடம் கொடு.”

“இதோ பார். இதெல்லாம் தெரிந்தால் மன்னர் வந்து…”

“எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். பயப்படாதே, என்னிடம் கொடு” பானகக்குடுவையிருந்த தட்டைக் கையில் வாங்கிக்கொண்டுக் கதவு நோக்கி நடந்தாள் செம்பா.

நடுங்கியபடி அவளைப்பின் தொடர்ந்தாள் மற்றவள்.

கதவு திறந்தது.

மாலைக் கதிரவனின் மஞ்சள் ஒளியில் பொன்னரவமாய்ப் புரண்டோடும் வையைக்காட்சி விரியத்தெரிந்த பலகணி. அதன் நடுவில் இடப்பட்டிருந்த பெரும் வட்டக்கட்டிலில் பாண்டிமாதேவி சாய்ந்து அமர்ந்திருந்தாள். பாண்டியப் பெருநிலத்தைப் பார்வையாலே அளந்து விடுவது போலப் பலகணிச்சுவர் மீது சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு நெடிய உருவம்.

நெடுஞ்செழியனின் நிமிர்ந்த தோள் கண்டு சட்டெனக் கால்கள் துவள்வது போலிருந்தது செம்பவளத்துக்கு.

பதற்றம் கூடியது. உடல் வியர்த்தது. அப்படியும் பார்வை தாழ்த்தாமல் அவனைப் பார்த்தபடியே கட்டிலருகே வந்தவளைச் சின்னச்சிரிப்போடு வேடிக்கை பார்த்திருந்தாள் பாண்டிமாதேவி.

அரவங்கேட்டுத் திரும்பிய நெடுஞ்செழியன் நடந்து அருகே வந்தான். பிசிரற்ற அசையாத நெடும்பார்வை.

“ஓ! இங்கேயே வந்துவிட்டாயா?” குரலில் விளையாட்டா? அலட்சியமா? இரண்டுமே அவளுக்குப்பிடிக்கவில்லை. ஆனால் அவனது பார்வைக்கட்டிலிருந்து விலக முடியவில்லை. சிலையாய்ச் சமைந்து நின்றாள் செம்பவளம்.

“தேவி! இதென்ன பெண்ணென்று நினைத்தால் பதுமையொன்று ஏவலுக்கு வந்து நிற்கிறது?”

“அது வெறும் பதுமையல்ல. கொல்லிப்பாவை. ஜாக்கிரதை அரசே!”

“அடடா! அப்படியா! கொல்லிப்பாவையென்றால்…பழி வாங்க வந்த பாவை அல்ல அல்ல பலிகொள்ள வந்த பாவையென்று சொல்” கண்கள் மின்ன அவன் பேசப்பேச அவளுக்குள் ஆர்ப்பரித்த உணர்வுகள் அவளை நடுங்கச்செய்தன.

“பாவையா? அப்படியென்றால் கேவலம் ஒரு பாவையின் அம்புக்குத்தான் பாண்டியன் தோற்றதோ?”

நங்கென்று விழுந்து ஒலியெழுப்பியபடி உருண்டோடியது தாம்பாளம். பழங்கள் சிதறிவிழ, நின்று பொறுக்கத் துணிவற்ற சேடிப்பெண் ஓடிப்போனாள் வாசல் நோக்கி.

ஊசிமுனையாய்ச் சிறுத்த செழியனின் உணர்வைப்படிக்க முடியாமல் பாண்டிமாதேவி தவித்து நிற்க அசராமல் நின்றாள் செம்பவளம்.

“அதாகப்பட்டது..இந்தப்பாண்டியனின் வில் இந்தப் பதுமையின் விரலிடம் தோற்றுப்போனது…ம்ம்…கேட்டாயா தேவி இதை?” அரசன் பாண்டிமாதேவியைத் துணைக்கிழுக்க அவள் பேச்சற்று நின்றாள்.

“நல்லது, இந்தப் பாண்டியனைச் சாய்த்த பாவையின் அடுத்த திட்டமென்னவோ?” செழியன் கைகள் கட்டிக்கொண்டு தொடரவும் செம்பவளத்தின் உள்ளத்தில் மீண்டும் வெஞ்சினம் பெருக்கெடுத்தது.

என்ன மமதை? வையமே தனதென்ற இறுமாப்பு. கரமிழந்த தாயின் கோலம் மனக்கண்ணில் வந்து போனது.

“திட்டமா? இருக்கிறது..பெருந்திட்டமொன்று இருக்கிறது.” ஒளிர்ந்தன நீள்விழிகள்.

“தெரியும், உன் திட்டமத்தனையும் எனக்குத்தெரியும்” நிதானமாய் வந்து விழுந்த செழியனின் பதிலில் துணுக்குற்றாள் செம்பவளம். தெரியுமா? இந்தப்பார்வை? இவனுக்கு உண்மையிலேயே நான் யாரென்று தெரியுமா?

“போலவே இப்போது என் திட்டத்தை நீ தெரிந்து கொள்….” என்றவன் மெல்லச்சிரித்துவிட்டு “யாரங்கே” என்று உரக்க அழைத்தான்.

வந்து நின்ற காவல்வீரர்களிடம் ஆணைகளை அடுக்கினான் நெடுஞ்செழியன், “இந்தப்பெண்ணை தனிச்சிறையில் வையுங்கள். பாண்டிமாதேவின் சவுகரியத்துக்கிணையான அறையில் மிகக்கவனமாகப் பாதுகாப்பாக வையுங்கள். ஜாக்கிரதை! என்னைத்தவிர இன்னொருவர் பார்வை இவள்மீது விழக் கூடாது. எக்காரணம் கொண்டும் இவள் வெளியே போகக்கூடாது. இந்த முறையாவது கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!”

“அரசே!” இடையே ஓடிவந்த பாண்டிமாதேவியை கைநீட்டித்தடுத்தான்.

“விலகி நில் தேவி.”

“நீங்களொன்றும்..” சீறிய செம்பவளத்தையும் இடைமறித்தான்.

“ம்ஹ்ம்ம்ம்..பதுமை பேசலாகாது.” ஆட்கள் அவளை இழுத்துப்பிடிக்க சிரித்தான் செழியன்.

“உன் திட்டத்தின் முதல் பகுதியைச் சொல்லட்டுமா? உனக்கு என்னோடு பேசியாக வேண்டும். சரி தானா?” அவள் பேசாதிருக்கவும் அவன் தொடர்ந்தான் “அடுத்த பகுதி…” என்றவன் இடைவெளி விட்டு கடகடவெனச் சிரித்தான்.

செம்பா
செம்பா

“எப்படியாவது உன் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் அப்படித்தானே? கவலை வேண்டாம் பெண்ணே! நானே வருகிறேன். தனியே உன்னை நாடி வருகிறேன்.” சொல்லிவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான். பின் விடுவிடுவென நடந்து வெளியே சென்றான் நெடுஞ்செழியன்.

அந்தப்பார்வை…அவளை முழுமுற்றாய்க் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவள் எண்ணிப்பயந்த கயமைக்கு, அவனது ஆணைகளிலிருந்த திமிருக்கு, அவனது பேச்சில் தொக்கி நின்ற எள்ளலுக்கு அந்தப்பார்வை எப்படிப் பொருந்தும்?

அல்லது அவளது பார்வையில் தான் கோளாறா?

இல்லை.. கண்டிப்பாக இல்லை. அந்தக்கண்களில் மிகத்தெளிவாக அவள் கண்டது… அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது எப்படிச்சாத்தியம்? என்றால் அவள் எண்ணியதெல்லாம் தவறா?

தன்னிச்சையாய்க் கைவிரல்கள் கழுத்து மணியில் கோர்த்திருந்த முத்திரை மோதிரத்தை நாடின.

கலைந்து போனத் தன் திட்டங்களை மறந்து கடந்து செல்லும் உருவத்தைப்பார்த்தபடி மலைத்து நின்றாள் அவள்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism