Published:Updated:

மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் டி.கே.இரவீந்திரன் கொரோனாவால் மரணம்!

டி.கே.இரவீந்திரன்
டி.கே.இரவீந்திரன்

மாலை முரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே. இரவீந்திரன் ஜூன்14-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் விளங்கிய இரவீந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த 19ம்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட இரவீந்திரன் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆளுமை கொண்டிருந்தவர். மாலை முரசு குழுமத்திலிருந்து வெளிவந்த 'நவீனம்' என்ற மலையாள மாத இதழின் ஆசிரியராகவும் பொறுப்பேற்றிருந்தார். மாலை முரசு, தேவி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பல ஆக்கப்பூர்வமான படைப்புகளை வழங்கினார். மாலை முரசில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழுநேர எழுத்தாளராக மாறினார். பத்திரிகையாளராகப் பணியாற்றிய காலத்தில் வரலாறு, கல்வி சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் கவனம் பெற்றன.

'நந்திபுரத்து நாயகன்', 'முகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்', 'பகதூர் கான் திப்புசுல்தான்', 'மாமன்னர் அக்பர்', 'இருமுடிச் சோழன் உலா' போன்ற இவரது நூல்கள் விகடன் பிரசுர வெளியீடாக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றன.

சங்க காலத்திற்குப் பிறகு சுமார் மூன்று நூற்றாண்டுகள் களப்பிரர் காலமாகக் கருதப்படுகிறது. களப்பிரர்கள் யார் என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. அது தொடர்பாகவும் தீவிர ஆய்வு செய்து 'தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்' என்ற ஒரு ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய வயநாட்டின் வரலாறு குறித்து ஒரு விரிவான ஆய்வு நூலை வெளியிடுவதற்காக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதை எழுதும் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு காலமாகியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு