Published:Updated:

வெந்து தணிந்தது காடு - புதிய பகுதி - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

மழையில் நனைவது ஜென்மத்தில் ஒருமுறையென்றால் அவளும் ஓகோ மேகம் வந்ததோ என்று சினிமா நாயகி போல கைகளைச் சுழற்றி மழையை முகத்தில் வாங்கி சிலிர்த்து ஆடியிருப்பாள்.

வெந்து தணிந்தது காடு - புதிய பகுதி - பட்டுக்கோட்டை பிரபாகர்

மழையில் நனைவது ஜென்மத்தில் ஒருமுறையென்றால் அவளும் ஓகோ மேகம் வந்ததோ என்று சினிமா நாயகி போல கைகளைச் சுழற்றி மழையை முகத்தில் வாங்கி சிலிர்த்து ஆடியிருப்பாள்.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

காட்டின் அந்தப் பகுதியில் மழை வேறு மாதிரி இருந்தது. அடர்த்தியான பல வகை மரங்களும் வானத்தின் பெரும் பகுதியை மறைத்து கூட்டணியாக கிளை கோத்து, இலைகளால் வடிகட்டிய பிறகு மழையை மண் தொடவைத்துக் கொண்டிருந்தன.

வெயிலுடன் கூடிய பகல் மழை. பிடிவாத மாக ஊடுருவிய வெளிச்சத்தில் மழையின் துளிகள் வைரக் கம்மல் மாட்டிய காதுகளாக மிணுக்கின. சீரான தாள நயத்துடன் காற்றசைக்காத நேர்க்கோட்டு மழை. மணி விழா தம்பதி தலையில் ஊற்றும் தண்ணீரைப் போல பிரமாண்டமான சல்லடை வைத்து பூமிக்கு ஊற்றிய ஆர்ப்பாட்டம் இல்லாத மழை.

ஆங்காங்கே உருவெடுத்த குட்டி நதிகள் பள்ளம் நோக்கி ஒரே திசையில் ஓடி இணையுமிடத்தில் அடர்த்தி சேர்த்துக்கொண்டு செல்லச் சிணுங்கலுடன் தொலைதூர அருவி யைக் குறிவைத்து ஓடின.

குளத்தில் நீர் மறைக்கும் தாமரை இலை களைப் போல சிறு குச்சிகளும், பல வண்ண இலைகளும் போர்த்திய தண்ணீரின் பயணத் தில் கூழாங்கற்கள் நலம் விசாரித்து முதுகு தடவப்பட்டன.

எப்படி பெய்தால்தான் எனக்கென்ன என்று சொட்டச்சொட்ட நனைந்தபடி ஒரு சின்ன பாறையின் மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் பட்டுப்பூச்சி. அவளைச் சுற்றிலும் நின்றும் படுத்தும் பத்து ஆடுகள் காதுகளைக்கூட அசைக்காமல் சிற்பங்களாய், சித்திரங்களாய், உறைந்த புகைப்படங்களாய் இருந்தன.

வெந்து தணிந்தது காடு - புதிய பகுதி - பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுப்பூச்சி நீளமான கூந்தலைத் திரட்டி முன்பக்கமாகப் போட்டிருந்தாள். உச்சியில் கட்டிய ரிப்பனின் முனைகள் கழுத்தில் வழியும் ஈரத்துடன் ஒட்டியிருந்தன. காதிலும், கைகளிலும் எதுவுமில்லை. கழுத்தில் மட்டும் கரியாலூர் சித்திரைத் திருவிழாவில் வாங்கிய கறுப்பு கெட்டி நூலில் கோத்த கரியராமன் சாமி பிளாஸ்ட்டிக் டாலர் அணிந்திருந்தாள். சாயம்போன நீளப் பாவாடையும், நைந்துபோன காலருடன் அப்பாவின் பழைய முழுக்கை சட்டையும் போட்டிருந்தாள். அவள் கைகளின் நீளம் தாண்டிய சட்டையின் கைகளை முழங்கை வரைக்கும் மடித்திருந்தாள். அதன் மூடி கொண்ட பாக்கெட்டில் சரோசா கடையில் வாங்கியதில் தின்றது போக இரண்டு கடலை உருண்டைகள் வைத்திருப்பது வீக்கமாகத் தெரிந்தது.

மழையில் நனைவது ஜென்மத்தில் ஒருமுறையென்றால் அவளும் ஓகோ மேகம் வந்ததோ என்று சினிமா நாயகி போல கைகளைச் சுழற்றி மழையை முகத்தில் வாங்கி சிலிர்த்து ஆடியிருப்பாள். நனைவதும், உலர்வதும், காய்வதுமாய் வனங்களின் மரங்களைப் போல பிரதேச மக்களுக்கும் வாடிக்கையாகிப் போனதென்பதால் எதுவுமே பொருட்டில்லை. வெள்ளை மயில் முழுத் தோகை விரித்து அகவுவதும்... யானைக் கூட்டம் ஓடையில் நீர் அருந்தி தலையில் பீய்ச்சிக் கொள்வதும்... குரங்குகள் விநாடிகளில் நான்கு மரம் தாவுவதும் எதுவுமே அதிசயமில்லை.

அவளுக்கு இப்போது ஒரே கவலைதான். இருட்டுவதற்குள் இந்த சுரத்தில்லாத சன்ன மழை நின்றுவிட்டால் நல்லது. விரைவாக ஓட்டிச்சென்று ஆடுகளை வீட்டில் சேர்த்துவிட வசதியாக இருக்கும். இல்லையென்றால் பீட்டுக்கு செக்கிங்குக்காக உலா வரும் வாட்சர் இல்லை, கார்டு கண்களில் பட்டுவிட்டால் போயிற்று.

‘ஆட்டை ஏன் காட்டுக்குள் ஓட்டி வந்தாய், எத்தனை முறைதான் எச்சரிப்பது, சட்டப்படி குற்றம் என்று புரியவில்லையா’ என்று துவங்கி அர்ச்சனை நடக்கும். கெட்ட வார்த்தைகளும் வந்து விழுந்து அம்மா, பாட்டி எல்லாம் அசிங்கப்படுவார்கள். சில சமயம் பிட்டத்தில் குச்சியால் சுளீரென்று அடியும் விழும். நான்கு நாள்களாகும் கோடான வீக்கம் தணிய. உட்காரும்போதெல்லாம் வலி எடுக்கும்.

திடீரென்று துவங்கியதைப் போலவே மேகத்தில் இருப்பு தீர்ந்து போய் திடீரென்று நின்றுபோன மழையைப் பார்த்து உற்சாகமாக எழுந்தாள் பட்டுப்பூச்சி. வானத்தில் தோன்றியிருந்த வானவில்லையும், எங்கிருந்தோ வந்த மைனாவின் உற்சாகக் குரலையும் ரசிக்க அவகாசமில்லை அவளுக்கு.

கூந்தலையும், பாவாடை முனையையும் பிழிந்துவிட்டு சாய்த்து வைத்திருந்த நீளமான குச்சியையும், காலியான அலுமினிய தூக்கையும் எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட தூக்கத்திலிருந்த ஓர் ஆட்டின் முதுகில் தட்டி உதடுகளைக் குவித்து சங்கேதமாக ஒரு சத்தம் செய்ய... எல்லா ஆடுகளும் சிலிர்த்துக்கொண்டு அவளுக்கு முன்பாக நடக்கத் தொடங்கின.

அதில் கறுப்பும் வெள்ளையும் சமவிகிதத்திலிருந்த, அடிக்கடி கூட்டத்தை விட்டுப் பிரிந்து என் வழி தனி வழியென்று காணாமல் போய்விடுவதால் குட்டியாய் வெங்கல மணி கழுத்தில் கட்டியிருந்த ஆடு, `கிணிகிணி' என்கிற ஓசையுடன் தலைவன் மாதிரி முன்னால் போனது.

வெந்து தணிந்தது காடு - புதிய பகுதி - பட்டுக்கோட்டை பிரபாகர்

தூரத்து இறக்கத்தில் கரடுமுரடான மண் சாலையில் குதித்துக் குதித்துச் சென்றுகொண்டிருந்தது மேலே திறப்புடனிருந்த அந்த ஜீப். அதில் அமர்ந்து நனைந்திருந்த தன் கண்ணாடியை கர்ச்சீப்பால் துடைத்தபடி இருந்த ரேஞ்சர் ருத்ரபாண்டியன், ``டேய்! வண்டிய நிறுத்துடா!’’ என்றார். காக்கி யூனிஃபார்மில் முதலிரண்டு பட்டன்கள் போடவில்லை. சட்டையை பேன்ட்டுக்குள் இன் செய்யவுமில்லை.

சரக்கென்று உடனடியாக டிரைவர் நிறுத்தியதால் பின்னால் அமர்ந்திருந்த கார்டு வேலுச்சாமி ஜீப்பின் குறுக்குக் கம்பியில் நெற்றி மோதிவிடாமல் நடுவில் கை வைத்துத் தடுத்துக்கொண்டார்.

காதை ஒரு கை வைத்துக் குவித்துக் கேட்ட ருத்ரபாண்டியன், ``என்னடா மணி சத்தம் அது?’’ என்றார்.

இறக்கத்து மண் சாலையில் ஜீப் கண்ணுக்குத் தெரியவில்லையென்றாலும் கிரீச்சென்று பிரேக் போட்டு நின்ற சத்தத்தில் அது வனச்சரகத்தின் வண்டிதான் என்று புரிந்துகொண்ட பட்டுப்பூச்சி பதற்றத்துடன் ஆடுகளை நேரெதிர் திசையில் திருப்பி ஓட்டினாள்.

வேலுச்சாமிக்கு மணி சத்தம் கேட்டதுமே அது பட்டுப்பூச்சி ஆட்டின் மணி என்பது பழக்கதோ­ஷத்தில் தெரிந்துவிட்டது. அலு வலகத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் டெபுடி ரேஞ்சருடன் உராய்ந்துவிட்டு அந்தக் கடுப்பு மாறாமல் வந்துகொண்டிருக்கும் ரேஞ்சரிடம் இன்று அவள் சிக்கினால் அத்தனை ஆடுகளை யும் பறிமுதல் செய்யாமல் விட மாட்டார் என்று தோன்றியது.

‘‘பிடாரி கோயில்ல பூசாரி பூசை செய்றான் போலிருக்குய்யா’’ என்றார் அவளைக் காப்பாற்றிவிடுகிற நோக்கத்தில்.

ருத்ரபாண்டியன் வேலுவை ஒருமுறை முறைத்துவிட்டு ஜீப்பை விட்டு கீழே இறங்கினார்.

‘‘ஏன்யா... சாமி உனக்கு மூளை வைக்க வேண்டிய எடத்துல சாணிய வெச்சி அனுப்பிடுச்சா என்ன? பூசாரின்னா அடிக்கிற மணி ஒரே இடத்துல நிக்காம நகந்துகிட்டே இருக்குமா? வாய்யா... போய்ப் பாக்கலாம்...’’

கிடுகிடுவென்று அவர் ஓட்ட நடையில் ஏற்றத்தில் விரைய... வேறு வழியில்லாமல் வேலு அவரைத் தொடர்ந்தார்.

‘‘ஏ... புள்ள! நில்லுடி செறுக்கி மவளே!’’ மூச்சு வாங்க உச்சக் குரலில் கத்தினார் ரேஞ்சர்.

ரேஞ்சர் தன்னைப் பார்த்துவிட்டு கத்துவதைக் கேட்டுத் திரும்பிப்பார்த்த பட்டுப்பூச்சி இனி தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்து உடம்பு முழுக்க நடுங்க அப்படியே நின்றாள்.

வேக நடையில் அவளிடம் வந்து, வந்த வேகத்தில் அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்த ரேஞ்சர், ‘‘கொழுப்பெடுத்துக் கெடக்காடி உங்களுக்கெல்லாம்?’’ என்றவர் அவள் முதுகில் பொளேர் என்று ஒன்று வைத்தார்.

‘‘இல்லய்யா.. தெரியாம வந்துட்டேன்‘’

‘‘மேய்ச்சலுக்கு காட்டு எல்லைக்குள்ள வரக்கூடாதுன்னு உங்க பஞ்சாயத்துல வெச்சி சொல்லியாச்சு. வூடு வூடா தண்டோரா போட்டாச்சு. அப்பறமும் என்ன மயித்துக்குடி இப்படி பண்றிங்க?’’

ரேஞ்சர் அவள் முடியிலிருந்து கையை எடுத்துவிட்டு பாதத்திலிருந்து மெதுவாக பார்வையை உயர்த்தினார். ஈரத்தில் உடலோடு ஒட்டிப்போயிருந்த பாவாடையும், சட்டையும் வாளிப்பான அவள் தேகத்தின் இளைமைத் திமிறல்களை வெளிச்சமிட்டுக் காட்ட... அவள் சட்டைக்குள் வேறெதுவும் அணியாததை உணர்ந்ததும் கோபப் பார்வை, வேறு பார்வையாக மாறியது.

வெந்து தணிந்தது காடு - புதிய பகுதி - பட்டுக்கோட்டை பிரபாகர்

வேலு அவர் காதருகில் மெதுவாக, ‘‘பூராப் பசங்களும் கோபக்காரப் பசங்கய்யா... பிரச்னையாயிடும்’’ என்றார்.

‘‘என்னய்யா... நீ சர்க்காருக்கு வேலை பாக்கறியா இல்லை... அவனுங்களுக்கு வேலை பாக்கறியா? தேன் கொடுக்கறானுங்களா?’’

‘‘அய்யா... நான்...’’

‘‘யோவ்... தெரியும்யா உன்னைப் பத்தி. செவத்த காளையோட கொழுந்தியா வளைகாப்புக்குப் போயி அந்தப் பசங்க கொடுத்த சாராயத்தைக் குடிச்சுட்டு ஆட்டம் போட்டவன்தான நீ?’’

‘‘அய்யா.. குடிக்கல்லாம் இல்லிங்கய்யா... அன்பா கூப்பிட்டானுங்கன்னு...’’ மிச்ச வார்த்தைகள் தேய்ந்து போயின.

‘‘எந்த ஊருடி?’’

‘‘குறிஞ்சிக்காடுய்யா.’’

‘‘ஓ... நம்ம சரகம்தான்! காடையன் தான ஒங்கூரு தலைவன்?’’

‘‘ஆமாங்கய்யா’’

‘‘அதான் வெறப்பா நிக்கிற. உம் பேரென்னடி?’’

மெதுவாக நடுங்கியபடி, ``ப... பட்டுப்பூச்சி’’ என்றாள்.

‘‘பேரப் பாரு... பட்டுப்பூச்சி செலந்திப்பூச்சின்னு... உங்கப்பன் பேரு என்ன?’’

‘‘சின்ராசுங்கய்யா’’

‘‘என்ன செய்றான்?’’

‘‘அப்பப்ப வெட்டுக் கூலிக்குப் போய்ட்டு வருங்கய்யா...’’

‘‘பார்யா.. ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டப்போறது என்னவோ யுத்தத்துக்குப் போற மாதிரி பெருமையா பேசுது பாரு...’’

‘‘கெடுபிடியா இருக்கறதால இப்பப் போறதில்லைங்க.’’

‘‘முந்தி மாதிரி இல்ல. போனா திரும்பி வருவான்னு கேரன்டி கிடையாது. தெரியும்ல? ஆந்திரா போலீஸு சுட்டுத் தள்ளி கும்பலாப் போட்டு எரிச்சிட்டு பொணத்தைக்கூட கணக்கு காட்ட மாட்டான். காலம் பூரா இருக்கானா, செத்தானான்னு தெரியாம தேடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். ஆத்தா இருக்கா?’’

‘‘இருக்குங்கய்யா’’

‘‘அப்பறம்... நீ ஆடு மேய்க்கப் போவலைன்னு கார்டு அய்யா சொல்றாரே... அந்த சாக்குல சின்னச் சின்ன சந்தனக் கட்டைய லவட்டிக்கிட்டுப் போயிடறேன்னு சொல்றாரே...’’

‘‘அய்யா! நான்... எப்ப...’’ என்ற வேலுவை ஒரு கையால் அடக்கினார்.

‘‘மாரியம்மா சத்தியமா அதெல்லாம் நான் செய்யலைய்யா’’

‘‘சோதனை போட்ரலாமா? பதுக்கி வெச்சிருக்கேன்னு தோணுதே. சட்டைய அவுத்துக் காமி... பாத்துருவோம்’’

பதறிப் போய் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். கண்கள் கண்ணீர் உதிர்க்கத் தொடங்கின.

‘‘யோவ்... எல்லா ஆட்டையும் ஜீப்புல ஏத்துய்யா!’’

‘‘அய்யோ... வேணாங்கய்யா...’’

கையெடுத்துக் கும்பிட்டாள்.

‘‘அப்ப... அவுத்துக் காட்டிட்டுப் போயிட்டே இரு...’’

‘‘இந்தா புள்ளை.. இனிமே இந்தப் பக்கம் மேய்ச்சலுக்கு வர மாட்டேன்னு மண்ணுல அடிச்சி சத்தியம் பண்ணிட்டுப் போயிடு. என்ன... சரிதானாய்யா?’’ என்றார் அவசரமாக வேலு.

வேலு பக்கமாக ஆவேசமாகத் திரும்பினார் ரேஞ்சர்.

‘‘யோவ்... நான்தான் பேசிட்டிருக்கேன்ல... நடுவுல நீ என்னய்யா பஞ்சாயத்து? ஏய்... குட்டி... நாலு பட்டனைக் கழட்றதுக்கு என்னடி இவ்ளோ யோசிக்கிறே? பெரிய ஒலக அழகியா நீ? உன் மாரைப் பாக்கத்தான் ஏங்கிக் கெடக்காங்களா? தேக்குக் கட்டை ஒளிச்சி வெச்சிருக்கியான்னுதான பாக்கப் போறேன்.’’

மறுபடியும் அவர் காதருகில் ரகசியமாக வேலு, ``ரோடு போடறதுக்கு ஃபாரெஸ்ட் டிபார்ட்மென்ட் பர்மிஷ­ன் கொடுக்கலன்னு நம்ம மேல காண்டா இருக்கானுங்க. வெவகாரமாயிடும்யா...’’ என்றார்.

‘‘நீயே போயி போட்டுக் குடுப்பே போலிருக்கே... காட்டு வழியா ரோடு போடற துக்கு நம்ம சரகத்துலயாய்யா பர்மிஷன் கொடுக்க முடியும்? அது மேல மினிஸ்டர் லெவலுக்கான மேட்டரு... நம்ம மேல காண்டு காட்னா என்ன செய்ய முடியும்?’’

சடக்கென்று அவர் காலில் விழுந்துவிட்டாள் பட்டுப்பூச்சி.

‘‘விட்ருங்கய்யா... நான் போயிடறேன்‘’

‘‘சரி... போ. நீ மட்டும் போ! ஒத்த ஆடு வராது உன்னோட.’’

காலில் விழுந்திருந்த நிலையிலேயே தலையைத் தூக்கி பரிதாபமாக கார்டு வேலு வைப் பார்த்தாள் பட்டுப்பூச்சி. கையாலாகாத நிலையில் கைகளைப் பிசைந்தார்அவர்.

‘‘என்ன வேலு... அதான சட்டம்? ஏத்து... ஏத்து... அன்னிக்கு ஆபீஸுக்கு வந்து சிலுப்பிக் கிட்டுப் கையை நீட்டி நீட்டிப் பேசுனானே, வெட்டுக்கிளி... இவங்கூருதான? போயி அந்த சண்டியரக் கூட்டிக்கிட்டு வா. அபராதம் கட்டிட்டு மீட்டுக்கிட்டுப் போ...’’ உத்தரவாகச் சொல்லி காலைப் பிடித்திருந்த அவள் கைகளை உதறினார் ரேஞ்சர்.

பட்டுப்பூச்சி பாதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்கள் சிவந்துபோன சின்ராசு கூரையில் செருகி வைத்திருந்த அரிவாளை சரக்கென்று உருவிவிட்டான்.

‘‘இன்னிக்கு அந்த ரேஞ்சரோட தலைய வெட்டி வனச் சரகம் ஆபீஸ் வாசல்லயே நட்டு வெச்சிட்டுதான் வீடு திரும்புவேன். இல்லன்னா நான் எங்கப்பனுக்குப் பொறக்க லடி!’’ - ஆவேசமாக கத்திய சின்ராசுவை அச்சத்துடன் பார்த்தாள் பட்டுப்பூச்சி.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism