Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 12 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

‘`சந்திச்சாதான் பேசுனாதான்னு இல்லைங்க அமுதா. மனசுல நினைச்சாலே போதும். காதல் தானா வளரும். விரும்பி மெனக்கெட்டு நினைக்கலை.

வெந்து தணிந்தது காடு - 12 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`சந்திச்சாதான் பேசுனாதான்னு இல்லைங்க அமுதா. மனசுல நினைச்சாலே போதும். காதல் தானா வளரும். விரும்பி மெனக்கெட்டு நினைக்கலை.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமாருக்கு ஆத்திரம் எகிறியது.பென்சில்காரரோடு எத்தனை பெரிய பகை ஏற்பட்டாலும் சரி... அவர் தயவு இல்லாமலேயே கன்னியப்பனை வெளியே கொண்டுவந்து அவர் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று மனதில் உறுதி ஏற்பட்டது.

‘இதை எப்படி செய்யப் போகிறேன்?’ - சிந்தித்தபடியே பைக்கை செலுத்திக் கொண் டிருந்த உதயகுமார் செல்போன் ஒலிப்பது கேட்டு ஓரமாக நிறுத்தி எடுத்தான். `அமுதா’ என்று பெயர் பார்த்ததும் உடனே தென்றல் காற்று முகத்தில் படர்வதைப் போல உணர்ந்தான். பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை தண்ணீருக்குள் போட்டது போல சட்டென்று மனதின் வெம்மை மாறி குளிர்ந்துபோனது.

“சொல்லுங்க அமுதா...’’

‘`எங்க இருக்கிங்க?’’

“ரோட்டோரமா பைக்கை நிறுத்திட்டுப் பேச றேன்...’’

‘`அப்டின்னா ஆபீஸ் போனதும் கூப்புடறிங்களா?’’

‘`பரவால்ல... சொல்லுங்க...”

‘`அப்பா உங்ககூட பேசணும்னு சொல்றாரு.’’

‘`இரண்டாம்கட்ட இன்டர்வியூவா?’’

‘`எப்போ கூப்பிடச் சொல்லட்டும்?’’

‘`பத்து நிமிஷத் துல நானே பேசறேன். ஏதாச்சும் நிபந்தனை வைக்கப்போறாரா?’’

‘`தெரியாது. அவர் என்ன கேட் டார், நீங்க என்ன சொன் னிங்கன்னு உடனே எனக்கு சொல்லுங்க. காத்துட்டிருப் பேன்.’’

“இப்ப அவர் எங்க இருக் கார்?”

‘`பிரின்ட்டிங் பிரஸ்லதான் இருக் கார். நீங்களே பேசுவிங்கன்னு சொல்லிட றேன். வைக்கிறேன்.’’

‘`ஒரே ஒரு நிமிஷம்.’’

“சொல்லுங்க...”

‘`இல்லை... ஒண்ணுமில்ல...’’

‘`அட... என்னமோ சொல்ல வந்திங்க. சொல்லிடுங்க.”

‘`சந்திச்சாதான் பேசுனாதான்னு இல்லைங்க அமுதா. மனசுல நினைச்சாலே போதும். காதல் தானா வளரும். விரும்பி மெனக்கெட்டு நினைக்கலை. தானா வருது. அடிக்கடி உங்களை நினைக்கிறேன். நினைக்கிறப்ப ஜில்லுன்னு இருக்கு. இந்த ஃபீலிங்கை நான் மறைக்க விரும் பலை. ஒருவேளை... உங்கப்பா ஏதாச்சும் நெகட் டிவா பதில் சொன்னாருன்னு வெச்சிக்கங்க...’’ என்றவன், இடைவெளி விட்டான்.

வெந்து தணிந்தது காடு - 12 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`ம்... நெகட்டிவா சொன்னாருன்னா?’’

‘`அப்படி சொல்றாரான்னு பார்ப்போம். அப்பறம் என் பதிலைச் சொல்றேன்” என்று விட்டு வைத்துவிட்டான்.

அருகில் ஒரு ஜூஸ் கடை இருப்பதைப் பார்த்த உதயகுமார் உள்ளே சென்று பைனாப் பிள் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தான்.

மேஜைமீது விரல்கள் ஓசை வராமல் தாள மிட்டன. கண்ணாடிக் கதவுக்கு வெளியே மௌன நடமாட்டத்தைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்தான்.

மிகவும் கறாரான பேர்வழி ஆயிற்றே அமுதாவின் அப்பா. என்ன கேட்கப் போகிறார்? என்ன சொல்ல வேண்டும்? சின்ன தாக ஒரு பதற்றம் ஏற்பட்டது. சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் பதற்றத்தை விட அவரின் கேள்விகளைச் சந்தித்துவிடுவதே சிறந்தது என்று பட்டதால் உடனேயே அமுதா வின் அப்பாவை அழைத்தான்.

‘`ஹலோ தமிழ்மணி பேசறேன்’’ என்றார் அவர் கம்பீரமாக.

அந்தக் குரலிலேயே ஓர் அதட்டல் இருந்தது. மரியாதையைக் கேட்டு வாங்கியது.

‘`நான்... உதயகுமார் பேசறேன் சார். வணக்கம்’’ என்றான் குரலில் குழைவு சேர்த்துக் கொண்டு.

“வணக்கம் தம்பி. பத்து நிமிஷத்துல கூப்புடு விங்கன்னு இப்பதான் அமுதா சொன்னிச்சு. உடனே கூப்புட்டுட்டிங்க.”

‘`சொல்லுங்க சார். எங்கிட்ட பேசணும்னு சொன்னிங்களாம்...’’

‘`ஆமாம். உங்கப்பாவோட பேசினா ஒரு வேளை வாக்குவாதமாயிடலாம்னு நினைச்சு தான் உங்ககூட பேசறேன்.’’

‘`புரியுதுங்க சார். சொல்லுங்க.”

‘`தம்பி... உங்களைப் பத்தியும், உங்க குடும்பத் தைப் பத்தியும் விசாரிச்சபோ கிடைச்ச தகவல்கள் எனக்கு ரொம்ப திருப்தியா இருந் திச்சு. இந்த இடம் முடியும்னு என் மனசுல ஒரு நம்பிக்கை விழுந்துச்சு. ஆனா, இப்படி கொள்கை முரண்பாட்டுனால ஒரு குழப்பம் வரும்னு நான் எதிர்பார்க்கலை. என் பொண்ணு எங்கிட்ட அதிகம் பேசமாட்டா. ஆனா, என் பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னு எங்கிட்ட வெளிப்படையாவே சொல்லிட்டா தம்பி.’’

மீண்டும் மனதில் ஜில்!

‘`அப்படிங்களா சார்... சந்தோஷம்.’’

‘`அதனால் அவ எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து நான் யோசிக்க வேண்டியிருக்கு. இத்தனை வருஷமா கடைப்பிடிச்சுகிட்டிருக்கற கொள்கைகளை எப்படி விட்டுக் கொடுக்கற துன்னு பெரிய மனப் போராட்டம் இருந்துச்சு. பாரதியார் தன் பொண்ணோட கல்யாணத்துல தன் கொள்கைகளைத் தள்ளி வெச்சதைப்பத்தி நீங்க சொன்னதா அமுதா எங்கிட்ட சொன் னிச்சு. உடனே எனக்கு பொட்டுல அறைஞ்ச மாதிரி இருந்திச்சு. என் பொண்ணு மேல் உங்களுக்கு ஏற்பட்டுருக்கற பிரியத்தையும் என்னால் புரிஞ்சிக்க முடிஞ்சது. அதனால்...’’

அவர் இறங்கி வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததால் உதயகுமாரின் முகம் மலர்ந்தது. கடைசி வார்த்தை மட்டும் நெருடியது.

‘`அதனால்? சொல்லுங்க சார்’’ பரபரத்தான்.

‘`ஒரு சின்ன நிபந்தனையோட ஒப்புக்க லாம்னு நினைக்கிறேன்.”

‘`என்ன நிபந்தனை சார்?’’

‘`உங்க அப்பாவோட விருப்பப்படி புரோகிதர் மந்திரம் ஓத... சம்பிரதாயங்களோட நீங்க தாலி கட்டுங்க. அது முடிஞ்சதும் என் விருப்பப்படி எனக்குப் பிடிச்ச சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தலைமையில் மாலை மாத்திக்கங்க. அவங்க உங்களை வாழ்த்திப் பேசுவாங்க. இந்த ஏற்பாட்டுக்கு சம்மதமான்னு நீங்களே உங்க அப்பாட்ட பேசிட்டு சொல்லுங்க தம்பி.”

‘`அவ்வளவுதானே சார்... கண்டிப்பா ஒப்புக் குவாரு சார். நீங்க இவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்கறதே பெரிய விஷயம். நான் பேசறேன் சார். நல்ல பதிலா சீக்கிரமே சொல்றேன்.”

‘`சரிங்க தம்பி. வெச்சிடறேன்.”

ஆர்டர் செய்த ஜூஸ் வந்தது. செய்தி கொடுத்த தித்திக்கும் மனதுடன் உடனே அமுதாவை அழைத்தான். விவரம் சொன்னான்.

‘`இப்படித்தான் அவரு எங்கிட்ட பேசப் போறாருன்னு உங்களுக்கு நிஜமா தெரியாதா அமுதா?’’

‘`தெரியாது. உங்க வீட்ல சம்மதிப்பாங்க தானே?’’

“எங்கப்பா ஒருத்தரைத் தவிர மத்த எல்லாருக்குமே ஏற்கெனவே சம்மதம்தான். அவரையும் சம்மதிக்க வெச்சிடுவேன்.’’

போனை வைத்தவன் உடனே அண்ணியை அழைத்து விவரமாக எல்லாம் சொல்லி, “அண்ணி... நீங்க அண்ணன் எல்லாருமா சேர்ந்து அவரை சமாதானப்படுத்திட்டு நல்ல பதிலா சொல்லுங்க. அப்படி உங்களால முடியலைன்னா அப்பறம் நான் அப்பாட்ட பேசறேன்” என்றான்.

ஜூஸ் குடித்து முடித்து பணம் கொடுத்து விட்டு வெளியே வந்தான். அவன் பைக் அருகில் காத்திருந்தார்கள் காடையனும் வெட்டுக்கிளியும்.

‘`உங்க வண்டியைப் பார்த்தோம் சார். அதான் காத்திருந்தோம். பென்சில்காரர்கிட்ட பேசுனிங்களா சார்?’’

‘`வாங்க... கடைக்குள்ள போயி பேசலாம்.”

இருவரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்குள் வந்து அவர்கள் கேட்ட நன்னாரி சர்பத் ஆர்டர் செய்தான்.

‘`பென்சில்காரர் உங்க எல்லார் மேலயும் கடுமையான கோபத்துல இருக்கார். என்னை மதிச்சிப் பேச மாட்டேங்கறார். அவருக்கு பெரிய பெரிய செல்வாக்கு இருக்கற தைரியத் துல அலட்சியமா உதறிப் பேசறார்.’’

“இனிமே நீங்க எங்களுக்கு ஆதரவா எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிப்பார்த்திங்களா சார்?’’ என்றான் வெட்டுக்கிளி.

“சொன்னேன். நம்ப மாட்டேன்னு மூஞ்சிக்கு நேரா சொல்றார். உங்களுக்கு சம்பாரிச்சுக் கொடுக்கறதுக்காக உசுரையே பணயம் வெச்சு உழைக்கிற அவங்களுக்கு நீங்கதானே சார் ஆதரவா இருக்கணும்னு கேட்டேன். ஒரு தடவை அனுபவிச்சாதான் அவங்களுக்கு புத்தி வரும்னு திமிரா பேசறாரு.”

வெந்து தணிந்தது காடு - 12 - பட்டுக்கோட்டை பிரபாகர்

இருவரின் முகமும் வாடிப்போனது.

‘`சார்... நாங்க அதிகம் படிக்காத கும்பல். காசும், அதிகாரமும் இருக்கறவங்களுக்கு முன்னாடி கைகட்டி எதிர்ப்பேச்சு பேசாம சேவகம் செஞ்சே பொழைப்பை ஓட்றவங்க. பரம்பரை பரம்பரையா அடிமையாவே இருக் கணும்னு எங்க தலையெழுத்து சார். அதை யாரால மாத்த முடியும்? அப்படியே இருந்துட் டுப் போறோம் சார்’’ என்றான் வெட்டுக்கிளி சலிப்புடன்.

‘`உங்க ஊருக்கு ரோடு வந்துட்டா புள்ளைங் களை படிக்க அனுப்புவிங்க. அடுத்த தலைமுறை விவரமாயிடும். நிமிர்ந்து நின்னு கேள்வி கேக் கும். அவங்க தொழில் தடை பட்டுப்போகும். இதுக்காகத்தான் உங்களை தன் கட்டுப்பாட்டு லயே வெச்சிருக்கணும்னு நினைக்கிறார் அவரு.’’

‘`முந்தி இதெல்லாம் புரியலை. இப்ப நல்லாவே புரியுது. ஆனா, எதுவும் செய்ய முடி யாமப் போகுது சார். ஊர் ஜனம் எல்லாத்தையும் திரட்டிக்கிட்டு அவரைப் போய்ப் பார்த்து அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட லாம்னு நினைக்கிறேன்’’ என்று நொந்துபோய் சொன்ன வெட்டுக்கிளியைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனால், காடையன் முகம் இறுக்கமாகவே இருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்து குரலுயர்த்தி அவன் சொன்னான்.

“வேணாம் வெட்டுக்கிளி. நம்ம மானம், மரியாதை எல்லாத்தையும் அடகு வெச்சது போதும். நேத்து தம்பி என்னை ஒரு கேள்வி கேட்டதுலேர்ந்து எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு.’’

‘`அடடா என்ன சொன்னேன்?’’ என்றான் உதயகுமார்.

‘`நீங்க சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை தம்பி. உன் சொந்த பிரச்னைக்காக ஊர் பிரச்னையை ரெண்டாம்பட்சமா நினைக் கிறியேன்னு ஒரு வார்த்தை கேட்டிங்க. சுரீர்னு இருந்துச்சு. ரொம்ப நியாயமான கேள்வி. வெட்டுக்கிளி... எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போயி அவரு கால்ல விழறதெல்லாம் வேணாம். அதுக்கு பேசாம உசுரை விட்டுடலாம். உப்பு போட்டுதானே திங்கறோம். கொஞ்சமாச்சும் ரோஷம் இருக்க வேணாம்?’’ என்றான் ஆவேசமாக.

‘`அங்க உன் புள்ளை கன்னியப்பன் மாட்டியிருக்கான். என் பொண் ணோட பரிசம் போட்டுட்டோம். கல்யாண வேலையெல்லாம் நடந்து கிட்டு இருக்கு. இந்தச் சூழ்நிலையில்...’’ என்றான் வெட்டுக்கிளி.

‘`இந்தப் பிரச்னையில் பென்சில்காரர் தயவு இல்லாம சாதிச்சிட்டா அதுக்கப்பறம் அவர் கொடி இறங்கிடும். அவரோட அதிகாரம் எல்லாம் செல்லாமப் போயிடும்’’ என்ற உதயகுமார், ‘‘இது உங்க ஊர்ப் பிரச்னை, கல்யாணப் பிரச்னை மட்டும் இல்ல... எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் விட்டிருக்கற சவாலும்கூட” என்றான்.

“பணம், காசு எவ்வளவு செலவானாலும் பரவால்ல... வழிதான் புரிபடலை” என்றான் காடையன்.

‘`நானும் ஒரு அரசு அதிகாரிதான். எனக்கும் சட்டத்திட்டங்கள் தெரியும். அதுல உள்ள சந்து பொந்துகளும் தெரியும். கன்னியப்பனை விடுவிக்கிறதுக்கு நான் ஒரு யோசனை வெச்சிருக்கேன்’’ என்று உதய குமார் சொல்ல... காடையன் நெகிழ்ந்து போய் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“தம்பி... எந்த ஜென்மத்துல நாங்க உங்களுக்கு கடன்பட்டோம்னு தெரியல... தெய்வமா எங்க குறை தீர்க்க வந்துருக்கிங்க. எங்க நல்லதுக்காக யோசிக்கிற ஒரே ஜீவன் நீங்கதான் தம்பி.”

‘`புகழ்றதெல்லாம் இருக்கட்டும். கன்னியப்பனைக் காப்பாத்தி கூட்டிக்கிட்டு வந்துட்டா அதுக்கப்பறம் அந்த பென்சில்காரருக்கு ஆதரவா யாரும் எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாது. செம்மரம் வெட்றதுக்குக் கூப்புட்டா ஊர்ல ஒருத்தர்கூட போகக் கூடாது. இந்த உத்தரவாதத்தை எனக்குக் கொடுப்பிங்களா?’’ இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“என்ன யோசிக்கிறிங்க? இங்கயே நேர்மையா பொழைக்கிறதுக்கு ஆயிரம் யோசனை இருக்கு.’’

‘`சரிங்க தம்பி. குறிஞ்சிக்காடு எங்க ரெண்டு பேர் வார்த்தைக்கு எப்ப வுமே கட்டுப்பட்டதுதான். அதுலயும் தலைவனான் என் பையனையே பென்சில்காரர் மாட்டி வெச்சிட்டு விளையாடறாருன்னு தெரிஞ்சதுக்கப் பறம் ஊரே கொந்தளிப்பா இருக்கு. இதை மட்டும் நீங்க செஞ்சிட்டிங் கன்னா.. அதுக்கப்பறம் மொத்த ஊரும் உங்க பின்னாடி நிப்போம். நீங்க என்ன சொன்னாலும் உங்க வார்த்தைக்குக் கட்டுப்படுவோம்” என்றான் காடையன் ஆவேசமாக.

உதயகுமாரின் மனதில் லேசாக உருவாகத் தொடங்கிய அவனுடைய திட்டம் ஆழமாக வேர்விடத் தொடங்கியது.

‘`நான் ரெண்டு நாள் லீவு போடப்போறேன். நீங்க ரெண்டு பேரும் என்னோட வாங்க. திருப்பதி போலாம். கன்னியப்பனோடதான் ஊர் திரும்பறோம்” என்றான்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism