Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 15 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

அவர் நேர்மையான நபர்னு சொன்னே. ஒருவேளை பெருசா பணம் எதிர்பார்க்கறாரோ

வெந்து தணிந்தது காடு - 15 - பட்டுக்கோட்டை பிரபாகர்

அவர் நேர்மையான நபர்னு சொன்னே. ஒருவேளை பெருசா பணம் எதிர்பார்க்கறாரோ

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

``சூரியபிரகாஷ் உன்னை மீட் செய்யணும்னு சொல்றார். ரெண்டு நிபந்தனை இருக்காம். அதுக்கு நீ ஒப்புக்கணுமாம்.”

``அவ்வளவு பெரிய ஆபீஸருக்கு நான் என்ன செய்ய முடியும்? அப்படி என்ன கண்டிஷன்ஸ் அபர்ணா?’’ என்றான் உதயகுமார், ஆர்வமாக.

‘‘தெரியாது. அதை லாயர் இளவரசன்கிட்ட அவர் சொல்லலை.”

‘‘சந்திச்சு நேர்லயே கேட்டுடலாமே...’’ என்றான் உதயகுமார்.

அபர்ணா உடனே மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த தோழர் இளவரசனிடம் பேசினாள்.

“ஆபீஸர் சூரியபிரகாஷ்கிட்ட பேசி டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு திருப்பிக் கூப்புடறேன்னு சொல்றார்.’’

‘‘என்னோட வந்திருக்கறவங்களைக் கூப்புடறேன். அவங்களுக்கு கன்னியப்பனை விடுவிச்சுக் கூட்டிட்டுப் போயிட முடியும்னு நம்பிக்கை சொல்லு அபர்ணா.”

‘‘நிச்சயமா...”

உள்ளே அழைக்கப்பட்டதும் பவ்யமாக நுழைந்த காடையனையும் வெட்டுக்கிளியையும் அவர்கள் மறுக்க மறுக்க வற்புறுத்தி அமர வைத்து, குடிக்க பழச்சாறு வரவழைத்துக்கொடுத்த அபர்ணாவை அவர்கள் நன்றியுடனும் மரியாதையுடனும் பார்த்தார்கள்.

‘‘கன்னியப்பனை கண்டிப்பா நீங்க கேஸ் எதுவும் இல்லாம கூட்டிக்கிட்டுப் போயிடலாம். அதுக்குத்தான் ஏற்பாடு செஞ்சுகிட்டிருக்கோம். இதெல்லாம் இவர் எதுக்காக செய்றார்னு உங்களுக்குப் புரியுதா?’’ என்றாள் அபர்ணா.

“தம்பிக்கு இரக்கமுள்ள நல்ல மனசும்மா. இவருல்லாம்தான் நாட்டை ஆட்சி செய்ற பெரிய தலைவரா வரணும். அப்பதான் ஊரும் ஜனமும் நல்லா இருக்கும்’’ என்று தழுதழுத்த காடையன் தோளை அழுத்தினான் உதயகுமார்.

‘‘புகழ்றதோட நிறுத்திடாதிங்க. ஊருக்குப் போனதும் அவருக்கு வாக்கு கொடுத்ததை மறந்துடக் கூடாது. இனிமே யாரும் இந்தத் தப்பை செய்யாம பார்த்துக்கணும்.”

‘‘எங்களையே வெட்டிப் போட்டாலும் சரி... இனிமே செம்மரம் வெட்றதுக்கு எங்கூர் லேர்ந்து ஒருத்தன் வர மாட்டான் வக்கீலம்மா” என்றான் வெட்டுக்கிளி உணர்ச்சிபூர்வமாக.

‘‘அதான் வேணும்...’’ என்றான் உதயகுமார்.

அந்தப் பூங்காவில், வேகவைத்த சோளத் தைக் கடித்துச் சாப்பிட்டபடி, டாஸ்க்ஃபோர்ஸ் அதிகாரி சூரியபிரகாஷுக்காக உதயகுமாரும் அபர்ணாவும் காத்திருந்தார்கள்.

வெளிச்சம் மங்கி சற்று நேரத்தில் மின்சாரத் தேவையை நினை வூட்டியது. காற்றில் ஐஸ் தூவியிருந்தது. பறவைகள் கோரஸாகக் குர லெழுப்பியபடி ஒரே திசையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தன.

அவர்கள் அமர்ந்திருந்த மெட்டல் பெஞ்ச் அருகில் வயதான பெரியவர்கள் அவர்களுக்கான தனியான வட்ட நடைபாதையில் மெதுவாக வாக்கிங் போனார்கள். பசேலென்ற புல்வெளியில் ஓடியும் சறுக்கியும், ஊஞ்சலாடியும் விளை யாடிய குழந்தைகளின் அம்மாக்கள் அருகில் நின்று உற்சாகப் படுத்தினார்கள். தூரத்தில் அமர்ந் திருந்த ஒரு காதல் ஜோடி அவசரமாக முத்தமிட்டு யாராவது வரும்போது அவசரமாகப் பிரிந்து அவர்கள் கடக்கும் வரை காத்திருந்தார்கள்.

‘‘ஆபீஸுக்கு வரச் சொல்லாம எதுக்கு இங்க வரச் சொல்லிருப்பார்னு கெஸ் பண்ணேன்’’ என்றான் உதயகுமார்.

“தன் டிபார்ட்மென்ட்டுக்கே தெரியாம ஏதோ பேசணும்னு நினைக்கிறார்னு புரியுது’’ என்றாள் அபர்ணா.

‘‘அவர் நேர்மையான நபர்னு சொன்னே. ஒருவேளை பெருசா பணம் எதிர்பார்க்கறாரோ?’’

வெந்து தணிந்தது காடு - 15 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘சேச்சே. அவரோட நேர்மை பத்தி சொன்னா உன்னால் நம்பவே முடியாது உதய். அவர் பசங்களை அரசுப் பள்ளிக்கூடத்துலதான் படிக்க வைக்கிறார். அரசு மருத்துவமனைக்கு தான் போறார். எரிபொருள் சிக்கனத்துக்காக அரசு கொடுத்திருக்கற காரை வேணாம்னு சொல்லிட்டு சைக்கிள்ல அலுவலகம் வந்து போறார். அலுவலகத்துலயும் வீட்லயும் ஏசி பயன்படுத்தறதில்லை.’’

‘‘ஆச்சர்யமா இருக்கே. அவரை சந்தேகப் பட்டதுக்கே மானசீகமா மன்னிப்பு கேட்டுக் கறேன். உன்னை ஒண்ணு கேக்கணும்...”

“கேளு...” காற்றில் அலைந்த கூந்தல் உதிரி களை காதுக்குப் பின்னால் கட்டுப் படுத்தியபடி கேட்டாள் அபர்ணா.

“காலையில் உன் ஆபீஸ்ல பார்த்தப்ப முகத்துல இருந்த உற்சாகம் இப்ப இல்லை. கோர்ட்ல உன் கேஸ்ல ஏதாச்சும் சறுக்கலா?’’

“எல்லா கேஸ்லயும் ஜெயிச்சிக் கிட்டே இருக்க முடியுமா என்ன? அதுக்காக நான் கவலைப்பட்டதே இல்லைப்பா.”

“வேற என்ன? ஏதோ ஒரு விஷயம் உன் மண்டையைக் குடைஞ்சிக்கிட்டு இருக்கு. அதெல்லாம் எதுவும் இல்லைன்னு பொய் சொல்லாத அபர்ணா.”

‘‘என் முகமும் சரி... மனசும் சரி, எப்பவும் பொய் சொல்லாது உதய். உன் மூடைக் கெடுக்க விரும்பலை. விடு.”

“இதான் அநியாயம். இதுக்கு அப்படில்லாம் எதுவும் இல்லைன்னு பொய்யே சொல்லியிருக்கலாம்.”

‘‘உதய்... உங்கிட்ட ஒரு நாடக மாடிட்டிருக்கேன். அந்தக் குற்ற உணர்ச்சி வலிக்குது.’’

“என்னாச்சு?’’

“என் ஹஸ்பண்ட் மும்பைல ஷேர் மார்க்கெட் ஆபீஸ் திறந்து அங்க இருக்கார், வந்து வந்து போவார்னு சொன்னேன்ல... அதுல ரெண்டாவது பகுதி பொய்.’’

‘‘புரியல.’’

‘‘அங்கயே இருக்கார். வர்றதில்ல. வரவும் மாட்டார்.’’

‘‘அப்படின்னா?”

‘‘வரவும் அவசியமில்ல. சட்டப்படி பிரிஞ்சிட்டோம். நான் சட்டம் படிச்சதுக்கு நல்ல யூஸ், கேஸை சீக்கிரமே முடிச்சி வெளில வர முடிஞ்சது.”

‘‘அடடா... உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு பொண்டாட்டியா அமை யறது வரம் இல்லையா...”

“இன்னொரு பெரிய கோடீஸ்வர நல்ல பொண்ணு அமைஞ்சா அது இன்னும் பெரிய வரம் இல்லையா... இதுல ஒரு பியூட்டி என்னன்னா அவ என் னோட கிளையன்ட்தான். ஒரு சொத்து மேட்டருக்காக என்னைச் சந்திக்க அடிக்கடி வந்தா. எனக்குத் தெரியாம அவங்க அடிக்கடி சந்திச்சது ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சது.’’

‘‘ஸாரி அபர்ணா... என்ன சொல்றதுன்னே தெரியல. கஷ்டமா இருக்கு. உனக்கு இது நடந்திருக்க வேண்டாம்.’’

‘‘நமக்கு என்ன நடக் கணும்னு தீர்மானிக்கிற சாய்ஸ் நம்மகிட்ட இருக்கா என்ன? அதுலேர்ந்து நான் வெளில வந்துட்டேன். ப்ளீஸ்... என் மேல பரிதாபப் படாம எப்பவும் போல கேஷுவலாப் பேசு.’’

அதன் பிறகு, அவர்களுக்கு நடுவில் விழுந்த மௌனத் தைக் கலைக்க அவனால் இயலாமல் விலகிச் சென்று குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க ஆரம்பித்தான்.

‘‘உதய்... அவர் வர்றாரு.”

சூரியபிரகாஷ் வெகு எளிமையான பருத்தி உடைகளில் இருந்தார். கண்ணாடி அணிந் திருந்தார். சுலபமாக சிரித்தார். குலுக்கிய கை, பூப்போல இருந்தது.

‘‘கீழே உக்காந்தா முகம் பார்த்துப் பேச சௌகரியமா இருக்கும்’’ என்றவர், செருப்பு களை ஓரமாகக் கழற்றிப் போட்டுவிட்டு புல்வெளி யில் சம்மணம் போட்டு அமர்ந் தார். அவருக்கு எதிராக இவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.

‘‘உதயகுமார்... உங்களைப் பத்தி இளவரசன் சொன்னதைக் கேட்டப்போ ஆச்சர்யமா இருந்துச்சு. இது உங்க வேலையே இல்ல. ஈக்கோ சிஸ்டம் கெடக் கூடாதுன்னு நினைக்கிற யாரா இருந்தாலும் நான் சல்யூட் அடிப்பேன். சமூகத் துக்காக சிந்திக்கிறவன்தான் நல்ல மனுஷன். அவன் எந்தச் செயலும் செய்ய வாய்ப்பில்லாமப் போனாக் கூட அந்த எண்ணத்தோட இருந்தாலே போதும். ஔவையார் அறம் செய விரும்புன்னுதான் சொன்னாங்க. செய்யின்னு சொல்லலை. மொதல்ல விரும்பு. செய்ய முடிஞ்சா செய்.’’

அவர் கடகடவென்று பேச ஒரு மரியாதை சேர்ந்து, இயல்பாக உதயகுமார் கை களைக் கட்டிக்கொண்டான் ஒரு மாணவன்போல.

‘‘பெரிய வார்த்தைங்க சார். உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டதெல்லாம் ரொம்ப சிலிர்ப்பா இருந்திச்சு சார். நீங்க என்னைப் பாராட்டறது பெருமையா இருக்கு.’’

வெந்து தணிந்தது காடு - 15 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘ஒரு ஊரையே திருத் தணும்னு நினைக்கிறது சின்ன விஷயமா உதய்? அந்த ஊரைத் திருத்தறதால இந்தத் தப்பே சுத்தமா நின்னுடுமான்னு கிடையாது. சுத்தமா இருட்டா இருக்கற பிரதேசத்துல ஒரு அகல் விளக்கு தர்ற வெளிச்சம் ரொம்பப் பெருசு. கெட்ட விஷயம் மட்டும் இல்ல... நல்ல விஷயமும் பரவும். அந்த நம்பிக்கை மட்டும் வேணும்.”

‘‘கரெக்ட் சார். உலகத்துல நடக்கற எல்லாத் தப்பையும் நம்மால சரிசெய்ய முடியாது சார். நம்ம எல்லைக்குள்ள, நம்ம அதிகாரத்துக்குள்ள சரிசெய்ய முடியற தப்பை ஒவ் வொருத்தரும் சரி செய்ய ஆரம்பிச்சாலே போதும் சார்.’’

‘‘அதானே இங்க பிரச்னையா இருக்கு. அதிகாரத்தை நல்லதுக்கும் சமூகத்துக்கும் பயன்படுத்தாம கெட்டதுக்கும் சுயமுன்னேற்றத் துக்கும் மட்டும் பயன்படுத்தறாங்களே... இந்த அசிங்கம் எல்லா இடத்துலயும் இருக்கு. நம்ம இடத்துலயும் இருக்கு. என் ஆபீஸ்லயே யோக்கியனுங்களை ரெண்டு கை விரல்ல எண்ணிட முடியும். தப்புக்குத் துணை போனா பணத்துல பங்கு கிடைக்குது. பெரிய தப்புன்னா பெரிய பணம். பணத்தோட சேர்த்து பாவத்துலயும் பங்கு கிடைக்கறதை சுலபமா மறந்துடறாங்க. லஞ்சப் பணத்தையும் தொட்டு கும்பிட்டு வாங்கிக்கறவனை என்னன்னு சொல் றது... அப்ப கடவுள் நம்பிக்கையிலயும் அவன் உண்மையா இல்லையே...’’

‘‘கை தட்டணும் மாதிரி இருக்கு சார்” என்றாள் அபர்ணா.

‘‘அட... நீ வேறம்மா. உதய்... இந்த செம்மரக் கடத்தல் ஒரு பெரிய அளவுல நடக்கற ஸ்கேம். இதுல கோடி கோடியா கொட்டுது. நிறைய உயிரிழப்புகள், ரத்தக் காயங்கள், கொலைகள், துரோகங்கள்னு நெகட்டிவிட்டி அதிகம். நீங்க சொன்ன மாதிரிதான்... நம்மால முடிஞ்ச அளவுக்குக் கட்டுப்படுத்தியே தீர ணும்னு சின்சியரா உழைச்சிட்டிருக் கேன். உள்ளேயே இருக்கற நிழல் கிரிமினல்ஸை சமாளிக்கிறதுதான் பெரிய சேலஞ்சா இருக்கு.’’

“புரியுது சார்.’’

‘‘ஒரு ஸ்பாட்ல மூவ்மென்ட் இருக்குன்னு இன்ஃபார்மர்ட்டேர்ந்து நியூஸ் வந்து டீமோட புறப்பட்டுப் போறதுக்குள்ள பார்ட்டிக்கு நியூஸ் போயிடுது. அலர்ட் ஆயிடறான். மடக்கற லாரில ஒண்ணுமே இருக் காது. நான் ரகசியமா ஒரு ஆபரேஷன் ஆரம்பிச்சிருக்கேன். உங்களை மாதிரி... என்னை மாதிரி கடமையைக் காதலிக்கிற நாலே பேர்தான் அதுல இருக்காங்க. அதுல நீங்களும் இணை யணும்னு நான் விரும்பறேன்.’’

‘‘நல்ல விஷயம் சார். ஆனா, நான் தமிழ் நாட்ல இருக்கேன்.’’

‘‘எங்களுக்கு அங்கதான் வேலை. அதுவும் உங்க ஊர்லயேதான். பென்சில் ஃபேக்டரி ஓனர் ஜெயபால் எங்க சர்வேலன்ஸ்ல இருக் கார் உதய். ஹைதராபாத்ல அவர் பையன் யோகேஷையும் கண்காணிச்சிட்டிருக்கோம். பையன் வாலு. அப்பன்தான் தலை. அங்க இருந்துகிட்டு விளையாடறாரு. இவங்களோட முழு நெட்வொர்க்கையும் பிடிக்கணும்.”

‘‘அவர் இதுல ஈடுபட்டிருக்கார்னு ஊர்ல எல்லாருக்கும் தெரியுது. அவரும் வெளிப் படையா சவடாலா பேசறார். எங்கிட்ட டென்ஷனா கத்தினார். அதுல வேகம் வந்துதான் கன்னியப்பனை மீட்டே தீரணும்னு நான் மெனக்கெட்டேன்.’’

“இன்னும் கேஸ் போடாமதான் வெச்சிருக்கான் வெங்கல் ராவ். அவன் ஒரு பொறுக்கி ஆபீஸர். ஆனா, எங்கிட்ட வெச்சிக்க மாட் டான். நான் போன் செஞ்சா விட்ரு வான். அடிச்சிருப்பான் ராஸ்கல். ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் குடுத் துட்டுக் கூட்டிட்டுப் போங்க.”

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். உங்க ஆபரேஷன்ல நான் என்ன செய்ய ணும்னு சொல்லுங்க சார்.’’

‘‘அவரோட பென்சில் ஃபேக்டரில் சூபர்வைசரா சமீபத்துல கௌசிக்னு ஒரு பையன் சேர்ந்திருக்கான். அவன் இதுல ஒரு அண்டர் கவர் ஆபீஸர். அவனுக்குப் பேசிடறேன். அவனோட தொடர்புல இருங்க. அடுத்து... குறிஞ்சிக்காட்டுல ரொம்ப வருஷமா குறி வெச்சிருக்கற மேட்டுப்பாதை பாண்டின்னு ஒருத்தன். அவன் மேல பல கேஸ் இருக்கு. இப்ப இங்க மரம் வெட்ட வர்றதில்ல. அவன் ஜெய பாலுக்கு ரொம்ப நெருக்கம். அவனைப் பிடிச்சு அப்ரூவராக் கணும்னு ஒரு பிளான் இருக்கு. இதை உடனே செய்யக் கூடாது. சரியான சமயத்துல செய்யணும்.’’

‘‘அந்த பாண்டியனை நான் பார்த் திருக்கேன் சார். உங்க ஆபரேஷன்ல என்ன வேணாலும் செய்ய நான் தயாரா இருக்கேன்.”

‘‘நிதானமா யோசிச்சு சொல்லுங்க உதய குமார். இதுல உயிர் போற அபாயம் இருக்கு” என்று சூரியபிரகாஷ் சொன்னபோது... குறுக்கிட்ட அபர்ணா, “ஒரு நிமிஷம் சார். கொஞ்சம் பேசிட்டு வர்றோம்’’ என்று அவனைத் தள்ளி அழைத்து வந்தாள்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism