Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 16 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

சாரி சார். இது வேற மேட்டர். உங்க ஆபரேஷன்ல இணைஞ்சு நான் வொர்க் செய்ய எனக்கு சம்மதம் சார். என்னை நீங்க நூறு சதவிகிதம் நம்பலா

வெந்து தணிந்தது காடு - 16 - பட்டுக்கோட்டை பிரபாகர்

சாரி சார். இது வேற மேட்டர். உங்க ஆபரேஷன்ல இணைஞ்சு நான் வொர்க் செய்ய எனக்கு சம்மதம் சார். என்னை நீங்க நூறு சதவிகிதம் நம்பலா

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘நிதானமா யோசிச்சு சொல்லுங்க உதயகுமார். இதுல உயிர் போற அபாயம் இருக்கு” என்று சூரியபிரகாஷ் சொன்னபோது...

குறுக்கிட்ட அபர்ணா, “ஒரு நிமிஷம் சார். கொஞ்சம் பேசிட்டு வர்றோம்’’ என்று அவனைத் தள்ளி அழைத்து வந்தாள்.

``என்ன அபர்ணா. அவர் தப்பா நினைக்கப் போறாரு...’’

``நினைச்சா பரவால்ல. நீ என்ன அவர் சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிகிட்டே இருக்கே உதய்?’’

“நல்ல விஷயம்தானே சொல்றார்?’’

``அவங்க டாஸ்க் ஃபோர்ஸ் ஆபரேஷன்ல உன்னை ரகசியமா வேலை பார்க்கச் சொல்றார். புரிஞ்சு தில்லையா?’’

``ஆமாம். அதுக்கென்ன?’’

“இது அரசாங்கத்தோட உத்தரவு இல்லை. இவரோட தனிப்பட்ட திட்டம். ஊர்ல உன் வேலையையும் பார்த்துக்கிட்டு இவருக்கும் ஒத்துழைக் கச் சொல்றார்.’’

``அதுல என்ன தப்பு?’’

``பென்சில் ஃபேக்டரி ஜெயபால் இந்த ஸ்கேம்ல ஒரு முக்கியமான புள்ளின்றார். அவரை நீ நேரடியா பகைச்சிட்டிருக்கே. கன்னியப்பனை மீட்டுக்கிட்டுப் போறதுல உன் மேல இன்னும் காண்டாயிருவார். இதுக்கே அவர் ரியாக்‌ஷன் என்னன்னு தெரியல. இதுல அவருக்கு எதிரா முழுக்க ஈடுபடப் போறேன்னா... அவர் என்ன வேணாலும் செய்வார் உதய்.’’

``எனக்குப் பின்னால் ஒரு பெரிய டாஸ்க் ஃபோர்ஸே நிக்கும்.’’

``கிழிக்கும். இந்த ஆப ரேஷன்ல ஏதாச்சும் தப்பாயி உனக்கு ஒரு பாதிப்புன்னு வையி... கண்டுக்கவே மாட் டாங்க.’’

``ஏன் நெகட்டிவாவே பேசறே அபர்ணா?’’

``அதையும் யோசிக்கணும்

உதய். வெளிப்படையா சொன்னாரே கேட்டேயில்ல... இதுல உயிர் போற ஆபத்து இருக்குன்னு அவர் சொன்னது விளையாட்டு இல்ல.”

“தெரியும். யாருக்கும் எப்பவும் எதுவும் நடக்கலாம்ன்ற சூழ்நிலைலதான் நாம் வாழ்ந்து கிட்டிருக்கோம் அபர்ணா. சும்மா என்னை பயமுறுத்தாதே. வா...’’

சட்டென்று விலகி மீண்டும் சூரியபிரகாஷ் எதிரில் வந்து அமர்ந்த உதயகுமார்,

“சாரி சார். இது வேற மேட்டர். உங்க ஆபரேஷன்ல இணைஞ்சு நான் வொர்க் செய்ய எனக்கு சம்மதம் சார். என்னை நீங்க நூறு சதவிகிதம் நம்பலாம்’’ என்றான் அழுத்தமாக.

புன்னகையுடன் அவர் கையைப் பற்றிக் குலுக்கிய அவர், “அந்த நம்பிக்கை ஏற்பட்டதாலதான் உங்களை சந்திக்க விரும்பினேன்’’ என்றார்.

வெந்து தணிந்தது காடு - 16 - பட்டுக்கோட்டை பிரபாகர்

அபர்ணா அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருக்க... அருகில் அமர்ந்திருந்தான் உதயகுமார். சாலையில் ஒவ்வொன்றாக வாகனங்கள் விளக்கைப் போட்டுக்கொள்ளத் தொடங்கின.

“கோபமா இருக்கியா?’’ என்றான் மெதுவாக.

``உன் மேல கோபப்படறதுக்கோ, அட்வைஸ் செய்றதுக்கோ நான் யாரு உதய்?’’

“சமுதாயத்துக்கு நல்லது நடக்கற ஒரு விஷயத்துக்கு உதவ வேண்டியது நம்ம கடமை இல்லையா அபர்ணா?’’

“எவ்வளவு தூரம்னு ஒரு கேள்வி எனக்கு உண்டு. நீ முடிவெடுத்துட்டே. விடு. இனிமே இது பத்தி வாதம் செய்ய வேணாம். ஆனா, ஒரு விஷயம். நீ கல்யாணம் பண்ணிக்கப்போற அமுதாகிட்ட இதைப் பத்தி சொல்வேதானே?’’

“இது சீக்ரெட் ஆப ரேஷன் அபர்ணா. இதை எப்படி அவகிட்ட சொல்ல முடியும்?’’

``அவ உன்னைக் கல் யாணம் பண்ணிக்கப் போறவ உதய். நீ

உன் உயிரைப் பணயம்

வெச்சு ஒரு விஷயத்துல இறங்கறே. இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு ஆகணும்.’’

``கல்யாணத்துக்கப் பறம் சொல்லிடறேன்.”

“நோ... கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லணும்.’’

``அபர்ணா... அவளைப்பத்தி எனக்குத் தெரியும். அவளுக்கும் சமூக அக்கறை நிறைய இருக்கு. அவங்கப்பாவே ஒரு சமூக சிந்தனை யாளர்தான். அதனால் அவ பெருமைதான் படுவா.’’

``நாட்டைக் காப்பாத்த உயிரைத் துச்சமா நினைச்சு ராணுவத்துல வேலை பார்க்கற ஒரு வீரனை மனசாரப் பாராட்டறது ஒரு மனநிலை. அந்த வீரனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறது வேற மனநிலை. அந்தத் துணிச்சலும், எப்பவும் எந்தச் செய்திக்கும் தயாரா இருக்கற தைரியமும், தியாக மனசும் எல்லாப் பொண்ணுங்களுக்கும் வராது. அதனாலதான் அவகிட்ட சொல்லிடுன்னு சொல்றேன்.’’

அபர்ணா சொல்வதில் ஒரு நியாயம் இருப் பதை உணர்ந்த உதயகுமார் அமுதாவிடம் எப்படி ஆரம்பித்து எப்படி இதைப் பற்றிச் சொல்வதென்று யோசிக்கத் தொடங்கினான்.

ஹைதராபாத். ஹுசைன் சாஹர் ஏரியில் நின்ற நிலையில் புத்தர் அமைதியைப் போதித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க... பிர்லா மந்திரின் வெள்ளைப் பளிங்குச் சுவர்களுக் குள் பக்திமான்கள் நடமாடிக் கொண்டிருக்க... மரத் தாலான பாலம் என்கிற பொருள் தரும் லக்டிகாபுல் என்கிற பழைமையான பகுதியில் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் கைவிடப்பட் டிருந்த ஒரு பழைய மருத் துவமனைக்கு உள் பகுதியில்...

பதினைந்து இளைஞர் கள் வட்டமாக அமர்ந்து வங்கிகளில் பயன் படுத்தும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஐந்நூறு மற்றும் இரண் டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை விர்விர்ரென்று எண்ணி பண்டல் போட்டுக் கொண்டிருக்க... நான்கு பவுன்சர்கள் மேற் பார்வையிட... சற்றுத் தள்ளி ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து போனில் ஒரு கேம் ஆடியபடி நடுநடுவில் இவர்களைப் பார்த்தபடி இருந்தாள் சில்வியா.

சில்வியா ஜீன்ஸ் பேன்ட்டும், முழுக்கை சட்டையும் அணிந்து கூந்தலை பாய் கட் செய்திருந்தாள். கைகளில் வளையல்களோ, காதுகளில் கம்மல்களோ, நெற்றியில் பொட்டோ இல்லை. கூர்ந்து பார்த்தால்தான் பெண் என்றே தெரியும்.

``ஜல்தி முடிங்கப்பா!’’ என்று தெலுங்கும் தமிழும் கலந்து அவர்களிடம் பொதுவாகச் சொன்னாள். நான்கு பவுன்சர் ஆசாமிகளில் ஒருவனை ஜாடை காட்டி அருகில் அழைத்தாள். ``வெங்கி, ஆம்புலன்ஸ் ரெடி செஞ்சிட்டியா?’’

“யெஸ் மேடம்’’ என்றான் அவன்.

``மறுபடி என்ஜின் செக் பண்ணிடு. பெட்ரோல் பார்த்துடு.’’

``டன் மேடம்...”

இவர்கள் மொத்த பேரையும் ரேன்ஞ் ரோவர் காரில் பயணம் செய்தபடி சிசிடிவி உப யத்தில் தன் லேப்டாப்பில் பார்த்தான் யோகேஷ்.

வெந்து தணிந்தது காடு - 16 - பட்டுக்கோட்டை பிரபாகர்

உச்சந்தலையில் கொத் தாக விட்டு சுற்றுப்புறம் முழுக்க ஒட்ட வெட்டிய பேக் ஃபேட் க்ரூ கட் ஹேர்ஸ்டைல். லெதர் பிளேசர். ட்ரிம் செய்த தாடி. கூலர்ஸ். ஒரு காதில் மட்டும் ஒற்றைக் கல் டைமண்ட் தோடு. ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் இளைஞன் போல படு ஸ்டைலாக இருந்தான் யோகேஷ்.

முன் சீட்டில் ஸ்டிஃபாக ஓர் எந்திர மனிதன் போல அமர்ந்து காரைச் செலுத்திக் கொண்டிருந்த பிரதான உதவியாளன் ஆப்ரஹாமின் தோளில் தொட்டான் யோகேஷ்.

``ஆப்ரஹாம்...’’

``சார்...’’

``ஆம்புலன்ஸ் நம்பர் குடுத்தாச்சா?’’

``கொடுத்தாச்சு சார்.”

``எப்போ?’’

“நேத்து நைட்டு சார்.’’

``சில்வியாகிட்ட செகண்ட் பிளானா மார்ச்சுவரி வேன் ரெடி பண்ணி வைக்கச் சொல்லு.” 

``சொல்லிடறேன் சார்.’’

``ஆம்புலன்ஸா, மார்ச்சுவரி வேனான்னு நான் லாஸ்ட் மினிட்ல டிசைட் செஞ்சு சொல்வேன். அப்ப லோடு செஞ்சா போதும். சமஜ் கயா?’’

``ஓக்கே சார்’’ என்றவன், காரை ஓட்டிய படியே ஸ்டாண்டில் பொருத்தியிருந்த மொபைல் போனில் எண் போட்டு காதில் பொருத்தியிருந்த இயர் டோப் மூலம் சில்வியாவிடம் ரகசியக் குரலில் பேசினான்.

ஒலித்த போனில் பெயர் பார்த்து, “யெஸ் டாடி. சொல்லுங்க” என்றான் யோகேஷ்.

பென்சில் ஃபேக்டரியில் தன் அலுவலக அறையி லிருந்து பேசினார் ஜெயபால்.

“என்னடா... நான் அவ் வளவு சொல்லியும் இப்படி கோட்டை விட்டுட்டியே...’’

``எதைச் சொல்றிங்க டாடி?’’

``அவனுங்க அந்தக் கன்னியப்பனைக் கூட்டிக் கிட்டு வந்துட்டானுங்கடா.’’

``தெரியும். ஒரே ஒருத்தன் தானே டாடி... விடுங்க.”

``எனக்கு அசிங்கமா இருக்குடா.’’

``விசாரிச்சேன். இங்க மனித உரிமை அமைப்புல தீவிரமா இருக்கற ஒரு சரியான வக்கீலைப் பிடிச் சிட்டான் அந்த உதயகுமார். அந்த வக்கீல் பெரிய அதிகாரிகிட்ட மூவ் செஞ்சு காரியத்தை முடிச்சிருக்கான். பரவால்ல விடுங்க... அவங்க தயவு நமக்கு வேணும். அவனுங்க இல்லாம யாரை வெச்சு மரம் வெட்டு விங்க... கொஞ்சம் விட்டுப் பிடிங்க.’’

``இனிமே அந்த ஊர்லேர்ந்து ஒருத்தனும் மரம் வெட்ட அங்க வர மாட்டானுங்களாம்.’’

``ஒரு கோபத்துல சொல்லுவானுங்க. அதெப்படி வராம இருப்பானுங்க? நாம் கொடுக்கற எக்கச்சக்கமான பணத்தை இழக்க யாரும் விரும்ப மாட்டாங்க டாடி.’’

“இல்லடா... நீ, இங்க இருக்கற நிலவரம் புரியாம பேசறே. அந்த உதயகுமார் அவங்களுக்கு பாடம் எடுத்து நல்லா பிரெயின்வாஷ் பண்ணிட்டான். ஊர்க் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கு. தலைவர் சம்பந்தப்பட்ட மேட்டர்லயே பிரச்னை வந்ததால் காடையன் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு கேட்பாங்க மத்த ஜனங்க.”

``என்ன டாடி இது... பெரிய பெரிய அரசியல் கட்சிலயே குழப்பம் செஞ்சு கட்சியை ரெண்டா, நாலா உடைக்க முடியும்னு உங்களுக்குத் தெரியாதா? ஆஃப்ட்ரால் கிராமத்துப் பசங்க... ஒண்ணுக்கு ரெண்டா வீசியெறிங்களேன். தலைவனையே தூக்கி வீசிட்டு நமக்கு தோதான ஒருத்தனைக் கொண்டு வர முடியாதா உங்களால்? இதெல்லாம்கூட சொல்லித் தரணுமா என்ன?’’

``ரொம்ப தேறிட்டே யோகேஷ்...’’ என்று சிரித்த ஜெயபால், ‘‘கொஞ்சம் அமவுன்ட்டை கோல்டா மாத்தச் சொன்னனே... முடிச்சிட்டியா?’’

``அந்த வேலைதான் நடந்துகிட்டிருக்கு. ஐ வில் டேக் கேர். வொர்ரி பண்ணிக்காதிங்க. அந்த உதயகுமாரைத் தட்டி வெச்சிடுங்க.”

“வேலையை விட்டே தூக்கப்போறேன். அதை நான் பார்த்துக்கறேன். சரி... வைக்கிறேன்’’ என்று வைத்தார் ஜெயபால். கொஞ்ச நேரம் கண்களை மூடி யோசித்தார்.

உள் தொலைபேசி அழைத்தது. “காடையனும் வெட்டுக்கிளியும் வந்திருக்காங்க சார்.’’ 

``அதெல்லாம் பார்க்க முடியாதுன்னு சொல்லு.’’

``கல்யாண பத்திரிகை வைக்கணுமாம் சார்.’’

அவருக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாக... `விட்டுப் பிடிக்கலாம்’ என்று யோகேஷ் சொன்னது நினைவுக்கு வர... பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

``வரச்சொல்லு” என்றார்.

தட்டு நிறைய மூன்று வகை பழங்கள்,

பூ, வெற்றிலைப் பாக்கு நடுவில் மஞ்சள் தடவிய கல்யாண பத்திரிகையுடன் உள்ளே வந்தார்கள் காடையனும் வெட்டுக்கிளியும்.

``அய்யா... எதையும் மனசுல வெச்சிக்காம நீங்க வந்து பசங்களை வாழ்த்தணும்யா’’ என்றான் காடையன்.

வாங்கி மேஜை மேல் வைத்துவிட்டு, “பெரிய ஆளுங்கப்பா நீங்க. யார் யாரையோ பிடிச்சு காரியத்தை சாதிச்சுட்டிங்க. இனிமே என் தயவு உங்களுக்கு எதுக்கு?’’ என்றார்.

``நாங்க செஞ்சது சரியான வேலையோ, தப்பான வேலையோ... இத்தனை வருஷமா எங்க வீட்ல அடுப்பெரி யறதுக்கு நீங்கதானே காரணம்? அந்த நன்றி மறந்தா நாங்க மனுஷங் களே இல்லை.”

 ``அப்ப இனிமே ஆந்திராவுக்குப் போறதா இல்லை?’’

“வேணாம்யா. போதும்யா. அப்படி உசுரைப் பணயம் வெச்சு தப்பான தொழில் எதுக் குய்யா செய்யணும்?’’

``அப்ப இனிமே வருமானத்துக்கு என்ன செய்றதா உத்தேசம்?’’

``கவனிக்காம போட்ட வயக்காடு இருக்கேய்யா. கூட்டா பயிர் செய்யலாம்னு இருக்கோம். கேரளாவுக்கு மிளகு அறுக்கப் போவோம். நேர்மையா பொழைக்கறதுக்கு நூறு வழிங்க இருக்குய்யா.”

கள்ளத்தனமாகச் சிரித்த ஜெயபால், “சரி சரி... போய் கல்யாண வேலையைப் பாருங்க. கண்டிப்பா வந்து ஆசீர்வாதம் செய்றேன்...”

அவர்கள் போனதும் போனை எடுத்து இன்ஸ்பெக்டர் கரிகாலனுக்குப்போட்டார்... ``இன்னிக்கு நைட் சந்திக்கணும்யா’’ என்றார்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism