Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 17 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

வீட்டளவுக்கு தட்டு மாத்திக்கிற ஒரு சின்ன ஃபங்ஷன் உங்க வீட்ல வெச்சு செய்யணும்னு சொன்னாங்க.

வெந்து தணிந்தது காடு - 17 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வீட்டளவுக்கு தட்டு மாத்திக்கிற ஒரு சின்ன ஃபங்ஷன் உங்க வீட்ல வெச்சு செய்யணும்னு சொன்னாங்க.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமாரின் குவாட்டர்ஸின் முன்புற புல்வெளி. இரண்டு மாநிற முயல் குட்டிகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடின. வீட்டின் எல்லையோரமாக நடப்பட்டிருந்த செம்பருத்தி, சாமந்தி மற்றும் நந்தியாவட்டை செடிகள் காலைத் தென்றலின் தாலாட்டுக்கு ஒரே பக்கமாக தலையசைத்தன. பூக்களின் மீது நான்கைந்து பட்டாம்பூச்சிகள் தாவித்தாவி அமர்ந்தன.

ஓடிவிட்டு வந்ததால் கழுத்திலும் மார்பிலும் வழிந்து இறங்கிய வியர்வையைத் துண்டெடுத்துத் துடைத்துக்கொண்டு பிளாஸ்ட்டிக் நாற்காலியில் அமர்ந்தான் உதயகுமார். இன்னொரு நாற்காலியை இழுத்துப்போட்டு அதன்மீது இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டான். கேன்வாஸ் ஷூக்களைக் கழற்றிப் போட்டான். சாக்ஸையும் உருவி அதனதன் ஷூக்களுக்குள் போட்டான்.

காற்றில் நிறைந்திருந்த மண்வாசனையை ஆழமாக மூச்சிழுத்தான். கரைந்த நீலத்திலிருந்த வானத்தின் குறுக்கே கூட்டமாகப் பறந்த பறவைகளைப் பார்த்தான். கைகளில் விரல் விரலாகச் சொடக்கெடுத்தான். ஷார்ட்ஸில் வைத்திருந்த போனை எடுத்து ஒரு விநாடி யோசனைக்குப் பிறகு, அமுதாவை அழைத்தான்.

வெந்து தணிந்தது காடு - 17 - பட்டுக்கோட்டை பிரபாகர்

கள்ளக்குறிச்சியில் மாடித்தோட்டத்தில் தொட்டிச் செடி களுக்கு சின்ன பூவாளி மூலம் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த அமுதா அருகில் வைத்திருந்த போனை எடுத்து, அவன் பெயர் பார்த்து உற்சாகமான குரலில், “சொல்லுங்க மிஸ்டர் எஃப் ஹெச்?’’ என்றாள்.

‘‘எஃப் ஹெச்?’’ என்றான் புரியாமல்.

“கொஞ்சம் யோசிச்சுதான் பார்க்கறது.”

‘‘ம்... ஃப்யூச்சர் ஹஸ்பண்ட்?’’

‘‘அதான். நைட் கூப்புடறேன்னு சொன்னிங்க?’’

‘‘ரெண்டு நாள் ஊர்ல இல்லைல... ஆபீஸ்ல நிறைய வேலை அமுதா. குவாட்டர்ஸுக்கு வர்றதுக்கே லேட் நைட்டாயிடுச்சிப்பா.”

‘‘லேட் நைட் வரைக்கும் ஒருத்தி நம்ம போனுக்காக நகத்தைக் கடிச்சிக்கிட்டுக் காத்திருப்பாளேன்னு யோசிச்சு நாளைக்குப் பேசறேன்னு ஒரு மெசேஜாவது அனுப்பிருக்கணும்பா.”

‘‘ஸாரிம்மா...’’

‘‘ஒரு நாளைக்கு ஒரு ஸாரிக்கு மேல நீங்களும் சரி, நானும் சரி... சொல்லக் கூடாது.

இந்த டீல் ஓகேயா?’’

‘‘நல்லா இருக்கே இந்த டீல்’’ என்று சிரித்தவன்,

“அமுதா... எங்க வீட்ல கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்னு ஒரு ஃபங்ஷன் வைக்கணும்னு எங்கிட்ட பேசினாங்க. அடுத்து ஒரே மாசத்துல முகூர்த்தம்னு சொல்றாங்க. அதே ரிலேட்டிவ்ஸ்தான் ரெண்டுக்கும் வரப் போறாங்க. ரெண்டு செலவு வேஸ்ட், தவிர... எல்லாரோட டைமும் முக்கியம்னு நினைச்சேன். அதனால் நிச்சயதார்த்தம்னு தனியா ஒரு ஃபங்ஷன் வேணாம்னு சொன்னேன். ஒப்புக்கிட்டாங்க.’’

‘‘தெரியும். அப்பா சொன் னாரு. உங்க சிந்தனை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. அது மட்டுமல்ல... சமூக நோக்கத் துக்காக லீவு போட்டுட்டு திருப் பதிக்கு போன விஷயத்தை விவரமா எடுத்து சொன்னேன். மருமகனைப் பத்தி ரொம்ப பெருமைப்பட்டாரு.’’

‘‘பரவால்லையே. மாமனார் மெச்சிய மருமகன்னு இப்பவே பேர் வாங்கிட்டனா?’’

‘‘மாமியார் மெச்சிய மருமகள்னு நான் பேர் வாங்க ணுமே. வாங்குவனா?’’

“கண்டிப்பா வாங்குவே. உன்னை எல்லாருக்கும் ஏற்கெனவே ரொம்ப பிடிச்சிப் போச்சு. அப்பறம்... வீட்டளவுக்கு தட்டு மாத்திக்கிற ஒரு சின்ன ஃபங்ஷன் உங்க வீட்ல வெச்சு செய்யணும்னு சொன்னாங்க. லக்ன பத்திரிகை எழுதுறதுன்னு சொன்னாங்க. அதுக்கு மட்டும் சம்மதிச்சிட்டேன். ஏன்னு சொல்லு...’’

‘‘ஏனாம்?’’

‘‘என் எஃப் டபிள்யூவை கல்யாணத்துக்கு முன்னாடி நேர்ல சந்திக்கிற ஒரு சான்ஸை மிஸ் செய்ய வேணாமேன்னு தான்.”

‘‘புத்திசாலிப் பையன்... நீங்களே உங்க முதுகுல தட்டிக் கொடுத்துக்கங்க உதய்.’’

“அமுதா... இப்போ சீரியசா ஒரு விஷயம் பேசணும் உங்கிட்ட.’’

‘‘அதுக்கு நான் சீரியசா முகத்தை வெச்சிக்கணுமா?’’

“ஜோக் போதும். நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்.’’

“கேள்வி என்னவோ?’’

‘‘ஒருவேளை... ஒரு வேளைதான். நான் மிலிட்டரில வேலை பார்க்கற ஒரு ராணுவ வீரனா இருந்தா நீ கல்யாணம் செஞ்சிக்க ஓகே சொல்லியிருப்பியா?’’

‘‘எனக்கு இந்த ஹைபதட்டிகல் கேள்விகளே பிடிக்காது உதய். திடீர்னு நீ ஆம்பளையா மாறிட்டா என்ன செய்வே... திடீர்னு கடவுள் உன் முன்னாடி வந்தா என்ன கேட்பே... லைக் தட்...’’

‘‘ஒரு சுவாரஸ்யத்துக்காகக் கேக்கற கேள்விகள்தானே அது?’’

“இப்ப என்ன... இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு மிலிட்டரில நீங்க சேரப் போறிங்களா?’’

“இல்லை.’’

“பின்னே எதுக்கு இந்தக் கேள்வி?’’

“ராணுவ வீரனோட உயிருக்கு உத்தரவாதமில்லை. எப்பவும் உயிர் போகலாம். அப்படி எதுவும் நடக்காதுன்ற நம்பிக்கையோட அவங்களையும் கல்யாணம் செஞ்சிக்கத்தான் செய்றாங்க. ஆனா, எல்லாப் பொண்ணுங்களும் அப்படி தைரியமா யோசிக்க மாட்டாங்க. மிலிட்டரில இருக்கற மாப்பிள்ளை வேணாம்னு சொல்ற பெண்கள்தான் அதிகமா இருப்பாங்க. இதுல நீ எந்த ரகம்னு தெரிஞ்சிக்கணும்?’’

“எதுக்கு தெரிஞ்சிக்கணும்னு கேக்கறேன்.’’

“இப்ப நான் உண்டு, என் வேலை உண்டுனு இல்லையே. தேவையில்லாம தப்பைத் தட்டிக்கேக்க நினைக்கிறேனே... நினைக்கிறதோட இல்லாம செயல்லயும் தீவிரமா இறங்கறேனே... இதனால் பாதிக்கப்படற சமூக விரோதிங்க ளோட கோபத்தை சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கேனே...’’

‘‘அதனால்?’’

‘‘கிட்டத்தட்ட ஒரு ராணுவ வீரனோட நிலைமையிலதான் இப்ப நானும் இருக்கேன். அவன் நாட்டைக் காக்க உழைக்கிறான். நான் காட்டைக் காக்க உழைக்கிறேன்.’’

‘‘அதை நினைச்சு நான் பெருமைப்படறேன் உதய். பயப்படலை. நான் வேலைபார்க்கற ஸ்கூல்ல ஒரு சம்பவம் நடந்துச்சு. நேரமிருக்கா? டீட்டெய்லா சொல்லணும். சொல்லட்டா?’’

‘‘ஆபீஸ் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருக்கு. சொல்லு.’’

‘‘என் கிளாஸ்ல ஆறாவது படிக்கிற ஒரு பையன் வெம்பிப் பழுத்தவன். கிளாஸ்மேட் பொண்ணுகிட்ட மிஸ்ஹேவ் பண்ணிட்டான். அவ அழுதுகிட்டே வந்து எங்கிட்ட சொன்னா. அவனைக் கூப்புட்டு கிளாஸ்ல எல்லாருக்கும் முன்னாடி அறைஞ்சேன். மன்னிப்பு கேக்க வெச்சேன்.’’

‘‘வெரிகுட்.”

‘‘கதை முடியலை உதய். அவன் திருந்தலை. நான் கிளாஸுக்கு வர்றப்ப ஒளிஞ்சு நின்னு என் மேல இங்க் அடிச்சான். என் ஸ்கூட்டர் டயரை பஞ்சர் செஞ்சான். ஹெட் மாஸ்டர்ட்ட ஸ்ட்ராங்கா வாதாடினேன். அவனுக்கு டிசி கொடுக்கச் சொன்னேன்.’’

வெந்து தணிந்தது காடு - 17 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘கொடுத்தாங்களா?’’

‘‘அவனோட அப்பா முரட்டுத்தனமான ஆளுன்னு தயங்கினாங்க. டிசி கொடுக்க லைன்னா நான் வேலையை ரிசைன் பண் ணிட்டு போலீஸுக்கும் போவேன், மீடியாவுக் கும் போவேன்னு சொன்னேன். டிசி கொடுத் தாங்க. அவங்கப்பா என்னைத் தேடிக்கிட்டு வந்தான். எப்படி என் புள்ளையை அறைய லாம்னு கத்துனான். நீ அதை செய்யலை... அதனால் நான் செஞ்சேன்னு சொன்னேன். என் மூஞ்சில ஆசிட் அடிப்பேன்னு உதார் விட்டான்.’’

‘‘அய்யய்யோ!’’

‘‘நாளைக்கு காலையில் 10 மணிக்கு உன் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறேன்... முடிஞ்சா ஆசிட் அடிடான்னு சொன்னேன். அவன் சவால் விட்டதை ரகசியமா என் போன்ல வீடியோ செஞ்சதை அவன் கவனிக்கலை. அதை வெச்சு எங்கப்பா போலீஸ்ல புகார் கொடுக்க வெச்சார். மீடியாலயும் தகவல் சொன்னார். மறுநாள் சொன்ன டைம்ல இருபத்தஞ்சு மீடியா கேமிராஸ் சூழ

நானும் எங்கப்பாவும் போய் நின்னோம். மிரண்டுட்டான். போலீஸும் வந்துடுச்சு.

கை கால்லாம் நடுங்கிடுச்சு. பகிரங்கமா மன்னிப்பு கேட்டான். நான் புகாரை வாபஸ் வாங்கிட்டேன். அவன் ஊரையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்.’’

“செம... ஒரு புரட்சி வீராங்கனைதான் என் பொண்டாட்டின்னு நினைக்கிறப்போ சிலிர்க்குதுப்பா.’’

‘‘இந்தக் கதையை எதுக்குப்பா சொன்னேன்? உங்களுக்கு எதுவும் ஆகாது. ஆக விட மாட்டேன்னு நீங்க புரிஞ்சிக்கணும். உங்க தட்டிக்கேட்டல் மேட்டர்ஸ்ல எனக்கும் ஒரு குட்டி ரோல் இருந்தா கொடுங்கப்பா. தைரியமா செய்வேன். புரிஞ்சுதா செல்லம்?’’

“இப்ப நான் உன் முன்னாடி இல்லையேன்னு தவிப்பா இருக்கு டியர்.’’

“இருந்தா...’’

‘‘புரிஞ்சுதுன்னு வார்த்தையால சொல்ல மாட்டேன்.”

“வேற எப்படி சொல்விங்களாம்?’’

‘‘கட்டிப்பிடிச்சு கன்னத்துல ஒண்ணு கொடுத்து சொல்வேன்.”

‘‘கன்னத்துல மட்டும்தானா?’’

‘‘அது ஸ்டார்ட்டிங் பாயின்ட் டியர்.’’

“இப்போ சீரியஸா ஒரு கேள்வி நான் கேப்பனாம். நீங்களும் சீரியசா யோசிச்சு பதில் சொல்விங்களாம்.’’

‘‘போச்சுடா!’’

‘‘ஒருவேளை... ஒரு வேளை தான். அந்த ரவுடி சொன்ன மாதிரியே என் மூஞ்சில ஆசிட் அடிச்சிருந்தா... நான் அந்த முகத்தோட இருந்தா... கல்யா ணத்துக்கு ஓகே சொல்லிருப் பிங்களா உதய்?’’

‘‘பார்த்தியா? இதென்ன பழிக்குப் பழியா?’’

“இல்லை... கேள்விக்கு கேள்வி. நழுவாம பதில் சொல்லுப்பா.’’

‘‘உன் குணங்கள் தெரிஞ்சதுக் கப்பறம்... பின்னணி காரணமும் தெரிஞ்சதுக்கப்பறம்... கண் டிப்பா நெகிழ்ந்துடுவேன். நிச் சயமா நிராகரிக்க மாட்டேன்.’’

“கை தட்டணுமா? ஹலோ! குணமும் காரணமும் அப்பறம் தானே தெரியவரும்? போட் டோவைத்தானே முதல்ல பார்த் திங்க. அப்படி போட்டோ லெவல்லயே செலக்ட் செஞ்சிருப்பிங்களா?’’

‘‘நானும் உன்னை மாதிரியேதான் அமுதா. எனக்கும் இப்படி ஹைப்பதட்டிக்கலான கேள்விகள் பிடிக்காது.’’

“கேக்க மட்டும் பிடிக்குமா மிஸ்டர் நழுவல் திலகம்?’’

‘‘ஏய்... நான் கேட்டது உன்னை ஹர்ட் செஞ்சிருந்தா ஸாரிப்பா.”

‘‘நம்ம டீலை மீறிட்டிங்க. இன்னிக்கு இந்த ரெண்டாவது ஸாரி நாட் அலோவ்ட்’’ என்று அமுதா சிரிக்க... இணைந்து சிரித்தான் உதயகுமார் பஞ்சு மாதிரி லேசாகிப்போன மனதுடன்.

இரவு 11 மணி. கட்டி முடியாத அந்தக் கட்டடத்தின் மேல் குறை நிலாவின் வெளிச்சத்தில் ஜெயபாலும் இன்ஸ்பெக்டர் கரிகாலனும் அமர்ந்து மது அருந்தியபடி சிக்கன் பிரியாணி சாப்பிட்டார்கள்.

எதிரில் நின்றிருந்த மேட்டுப்பாதை பாண்டி அவர்களின் கிளாஸ்களில் மது தீரும்போது மரியாதையாக ஊற்றுவதும், மிக்சர், சிப்ஸ் பாக்கெட்டுகளைப் பிரித்து வைப்பதும், சிகரெட்டுக்கு நெருப்பு வைப்பதுமாக இருந்தான்.

‘‘மொத்தம் எத்தனை பேருடா உங்க ஊர்ல ஆம்பளை யாளுங்க?’’ என்றார் போதை மிதக்கும் குரலில் ஜெயபால்.

‘‘இருநூத்திச் சொச்சம் வருமுங்க.”

‘‘அவ்ளோ பேரும் காடையனுக்கு ஆதரவாடா?’’

‘‘ரொம்ப வருஷமா அந்தாளுதான் தலைவனா இருக்கான். ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு பிரச்னையாகி யாரு தலைவருன்னு போட்டியா வந்துடுச்சிங்க. அப்போ எதுர்த்துக்கிட்டது நான்தான். காடையனுக்கு கை தூக்குனது நூத்தி நாப்பது பேருங்க. எனக்கு அறுபத்து சொச்சம்தாங்க. அதனால அந்தாளே தொடர்ந்துகிட்டிருக்கான்.”

‘‘ஆக... உன் பக்கம் ஒரு அறுபது பேரு இருக்கான்! வெரிகுட். இனிமே ஆந்திராவுக்கு மரம் வெட்டப் போறதில்லைன்னு காடையன் தலைமையில் ஊர் கூடி எடுத்த தீர்மானத்துக்கு உன் பக்கத்து ஆளுங்க எதிர்ப்புதானே?’’

‘‘என் கூட்டம் மட்டுமல்லங்கய்யா... அவன் பக்கம் உள்ளவங்கள்லயும் கொஞ்சம் பேத்துக்கு இது பிடிக்கலை. ஊரு சேர்ந்து எடுத்த முடிவுக்குக் கட்டுப்படணும்னு புழுக்கத்தை வெளில சொல்லாம இருக்கானுங்க”

‘‘பாண்டி... குறிஞ்சிக்காட்டுக்கு நீ தலைவனாகணும்டா. அதுக்கு நான் என்ன சொன்னாலும் செய்வியா?’’

‘‘யாரையாச்சும் போட்டுத் தள்ளணும்னாலும் நான் ரெடிங் கய்யா... என்ன செய்யணும்னு சொல்லுங்க” என்றான் பாண்டி.

ஜெயபால் கரிகாலனைப் பார்த்தார். “நம்ம பிளானைச் சொல்லுய்யா கரிகாலா’’ என்றார்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism