Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 19 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

இந்த ரெண்டு பேரும் காட்ல சந்தன மரத் தோட கிளையை வெட்டி எடுத்துட்டுப் போறதைப் பார்த்து நீங்க மடக்கிப் பிடிச்சிங்க

வெந்து தணிந்தது காடு - 19 - பட்டுக்கோட்டை பிரபாகர்

இந்த ரெண்டு பேரும் காட்ல சந்தன மரத் தோட கிளையை வெட்டி எடுத்துட்டுப் போறதைப் பார்த்து நீங்க மடக்கிப் பிடிச்சிங்க

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

``நீங்க அனுமதிச்சா ஒரு யோசனை சொல்லலாமா மேடம்?’’ என்று கலெக்டர் பானுமதியிடம் உதயகுமார் சொன்ன அதே நேரத்தில்... அவன் குவாட்டர்ஸில் அந்த சந்தனக் கட்டைகள் வைக்கப்பட்டன.

“சொல்லுங்க” என்றார் பானுமதி கைகளைக் கட்டிக்கொண்டு.

``எங்க டி.எஃப்.ஓ ராஜசேகர் நல்லவர் மேடம். அவரை எனக்கு நல்லா தெரியும். கை சுத்தம். ஆனா, தைரியம் இல்லாதவரு. குறிஞ்சிக்காடு கிராமத்துக்கு ரோடு போடறதுல எங்க டிபார்ட் மென்ட்டுக்கு எந்த மறுப்பும் இல்லைன்னு அவர் கிளியரன்ஸ் கொடுத்தா, அவரை வேலையிலேர்ந்து தூக்கிடுவோம், குழந்தை களுக்கு டார்ச்சர் நடக்கும்னு ஸ்ட்ராங்கா மிரட்டி வெச்சிருக்காங்க. அதனாலதான் பயப்படறார்.’’

``யாரு மிரட்டறது?’’

“பென்சில்காரர் ஜெயபாலும் அவர் பையன் யோகேஷும் செம்மரம் ஸ்கேம் நெட்வொர்க்ல முக்கியமான புள்ளிங்கன்னு ஊருக்கே தெரியுமே மேடம். ரோடு வந்துட்டா குறிஞ்சிக்காட்டு ஜனங்க மரம் வெட்ட வரமாட்டாங்கன்னு இதைத் தடுத்துக்கிட்டு இருக்கறது அவர்தானே மேடம்.”

“எனக்கு அவரைப் பத்தி அப்பப்ப பேர் போடாம புகார் கடிதங்கள் வருது. அதெல்லாம் எஸ்.பி ஆபீஸுக்கு அனுப்பி விசாரிங்கன்னுதான் சொல்றேன். `அவரோட தொழில் வளர்ச்சிமேல் பொறாமை பிடிச்சவங்க எழுதிப்போடற மொட்டைக் கடுதாசிக் கெல்லாம் மதிப்புக் கொடுக்காதிங்க மேடம், விசாரிச்சிட்டோம் எந்தத் தப்பும் நடக்கல’ன்னு கிளீன் சர்ட்டிஃபிகேட் கொடுக்கறாங்க.”

உதயகுமார் அமைதியாக அர்த்தத்துடன் சிந்திய சின்ன புன்னகையைப் பார்த்து பெருமூச்சு விட்டார் பானுமதி.

``உதயகுமார்... குறிஞ்சிக்காடு ஜனங்களோட நன்மைக்காக அக்கறையோட நீங்க செயல்படறிங்கன்னு எனக்குத் தெரியும்... மனிதாபிமான அடிப்படையில் நீங்க தனிப்பட்ட முறையில் மெனக்கெட்டு இறங்கி ஆந்திரா போயி அவங்க ஆளு ஒருத்தரை மீட்டுட்டு வந்திங்க. அந்த மரியாதையினாலதான் உங்களுக்குக் கொடுத்த வாக்குப்படி இனிமே ஆந்திராவுக்கு மரம் வெட்டப் போக மாட்டோம்னு அந்த ஊர் ஜனங்க முடிவெடுத்திருக்காங்க. தகவல்கள் சரியா?’’ ஆச்சர்யமாக அவரைப் பார்த்தான் உதயகுமார்.

வெந்து தணிந்தது காடு - 19 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

``உதயகுமார்... உங்களைப்பத்தி தரோவா விசாரிச்சு தெரிஞ்சிக் கிட்டதுக்கு அப்பறம்தான் நேர்ல வரச்சொன்னேன். அபூர்வமாதான் உங்களை மாதிரி நேர்மையான, சமூகத்துக்கு ஏதாச்சும் செய்யணும்ன்ற துடிப்போட இருக்கற அதிகாரிங்களைப் பார்க்க முடியுது.’’

“தேங்க்யூ மேடம். பல பேரு அப்படித்தான் உள்ளே வர்றாங்க மேடம். நாள்பட நாள்பட மழுங்கிப் போயிடறாங்க. ஒண்ணு அவங்களும் அந்த நீரோட்டத்துல கலந்துடறாங்க. இல்ல... நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிடறாங்க.’’

‘யூ ஆர் ரைட். இதெல்லாம் நான் உங்ககிட்ட பேசக் கூடாது. இங்க என்ன தப்பு நடக்குது, யாரு தப்பு செய்றாங்கன்னு எல்லாம் பகிரங்கமா எல்லாருக்கும் தெரியும். அதிகாரிகளை பணம் இல்ல, பயம் இந்த ரெண்டால் விலைக்கு வாங்கிட முடியும்ன்ற வாய்ப்பு இங்க இருக்கற தாலதான் எல்லாமே அப்படி அப்படியே தடங்கல் இல்லாம தொடர்ந்து நடக்குது.”

``நீங்களும் ஒரு நேர்மையான அப்பழுக் கில்லாத அதிகாரின்னு எனக்குத் தெரியும் மேடம். அதனாலதான் நம்பிக்கையோட

வந்து பேசறேன். நல்ல அதிகாரிகள் இணைஞ்சு செயல்பட்டா நல்ல விஷயங்களை கண்டிப்பா செய்ய முடியும் மேடம். நான் ஏதாச்சும் அதிகப்பிரசங்கித்தனமா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க.’’

“நோ... நோ... என்ன செய்யலாம்னு சொல்லுங்க.’’

உதயகுமார் தன் மனதிலிருந்த யோசனை யைச் சொல்லத் தொடங்கினான்.

உதயகுமார் அலுவலகம் முடிந்து தன் குவாட்டர்ஸுக்குத் திரும்பியபோது வானம் சாயம் போகத் தொடங்கியிருந்தது. மரங்கள் எல்லாத் திசைகளிலும் சுழன்று அசைந்தன. மழை சாத்தியம் காற்றில் தெரிந்தது. மண் வாசனை நாசியில் இடறியது.

குளித்துவிட்டு பிரெட் ஆம்லெட் தயார் செய்துகொண்டு அமர்ந்து நிதானமாக சாப்பிட்டபடி காலையில் படிக்காமல் மிச்சம் வைத்த பகுதிகளை தினசரியில் மேய்ந்தான்.

போனில் அமுதா அழைக்க... ஆர்வமாக எடுத்தான்.

``ஹாய் ஃப்யூச்சர் பொண்டாட்டி.”

``ஹாய் மாப்பிள்ளை சார்... குவாட்டர்ஸுக்கு வந்தாச்சா?’’

``யெஸ் டியர்.”

``குளிச்சாச்சா?’’

“யெஸ் டியர்.’’

``பிரெட் ஆம்லெட் போட்டு சாப்ட்டாச்சா?’’

``பாதி சாப்ட்டுட்டேன். மீதி கைல இருக்கு.”

``நாளைக்கு புறப்படறத்துக்கு பேக் பண்ணி யாச்சா?’’

``என்ன... ஒரே ஒரு செட் டிரஸ் எடுத்து வைக்கணும். பிரஷ், பேஸ்ட், சோப் பாக்ஸ், டவல் எடுத்து வைக்கணும். அஞ்சு நிமிஷத்து வேலை.’’

``ஃபங்ஷனுக்கு என்ன கலர் டிரஸ் போடப் போறிங்க?”

``எதுக்கு?”

``அதே கலர்ல நானும் டிரஸ் பண்ணிக் கலாம்னு நினைச்சேன். போட்டோஸ்ல மேட்ச்சிங்கா அழகா இருக்கும்ல?’’

``ம்... டார்க் பிரௌன் கலர்ல ஷர்ட், க்ரீம் கலர் பேன்ட்.’’

“ஓக்கேப்பா... உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்.”

“ஹை! என்ன?”

``அதை சொல்லிட்டா அப்புறம் எப்படி சர்ப்ரைஸ்?’’

``எங்க வீட்ல உனக்கு பிரசன்ட் பண்றதுக்கு பட்டுப்புடவை, நெக்லஸ் எல்லாம் வாங்கிருக் காங்க. ஆனா, நான் உனக்காக ஒரு பிரசன்ட் வாங்கிருக்கேன் அமுதா.’’

``லவ்லி. என்னவாம்?’’

“இதுவும் சர்ப்ரைஸா இருந்தாதானே த்ரில்?’’

``ஓகே. சொல்ல வேணாம். அப்புறம்...’’ என்று அமுதா ஏதோ சொல்ல வந்தபோது வாசல் கதவு தட்டப்பட்டது.

``அமுதா... லைன்ல இரு. யாரோ வந்திருக் காங்க. பார்த்துட்டு வந்துடறேன்” - போனை வைத்துவிட்டுச் சென்று கதவைத் திறந்தான் உதயகுமார்.

இன்ஸ்பெக்டர் கரிகாலன், நான்கு கான்ஸ் டபிள்கள் மற்றும் சந்தனக் கட்டை திருடர்கள் இரண்டு பேரும் நின்றிருந்தார்கள். புரியாமல் பார்த்தான் உதயகுமார்.

``ஒரு என்கொயரி சார்’’ என்றபடி உள்ளே வந்தார் கரிகாலன்.

``சார்... ஷூ’’ என்று சுட்டிக்காட்டினான்.

``இதென்ன கோயிலா?’’ என்று அலட்சியம் காட்டிய கரிகாலன், ``உதயகுமார், உங்க வீட்டை சோதனை போட வேண்டிருக்கே?’’ என்றார்.

``எதுக்கு?”

``ஒரு திருட்டுல சம்பந்தப்பட்டிருக்கிங்க...”

``வாட் டு யூ மீன்?’’

“இந்த ரெண்டு பேரும் காட்ல சந்தன மரத் தோட கிளையை வெட்டி எடுத்துட்டுப் போறதைப் பார்த்து நீங்க மடக்கிப் பிடிச்சிங்க. எனக்கும் பங்கு கொடுத்தா விட்டுடறேன்னு சொன்னிங்க. அவங்க கொடுத்தாங்க. விட்டுட் டிங்க. ஆனா, எங்ககிட்ட வேற மேட்டர்ல மாட்னானுங்க. விசாரிக்கிறப்ப இதுவும் வெளில வருது. என்னடா... நிக்கிறிங்க... சொல் லுங்கடா... இவருக்குதானே திருடின கட்டைங் கள்ல ரெண்டு கட்டைய பங்கு பிரிச்சு கொடுத்திங்க?’’ என்று அதட்டும் குரலில் அவர்களைப் பார்த்துக் கேட்டார் கரிகாலன்.

``ஆமாங்க” என்றார்கள் இருவரும் கோரஸாக.

``அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?’’ என்றான் உதயகுமார்.

``நான் என்ன கதையா சொல்லிட் டிருக்கேன்..?’’

``இவங்களை நான் பார்த்ததுகூட இல்லையே..!’’

``பார்க்காமயா பங்கு போட்டிங்க..?’’

``இது உங்க டிராமா மிஸ்டர் கரிகாலன். இதை நீங்களா செய்யலன்னு எனக்குத் தெரியும்... வேற யாரோ சொல்லி செய்றிங்க. என் நேர்மையோட விளையாடறிங்க மிஸ்டர் கரிகாலன். தப்பு! இது பெரிய தப்பு!’’

“தப்பு செஞ்சது நீங்க உதயகுமார்.’’

``எது... எங்க ஆபீஸ்ல இந்த மாதிரி தப்புகள் நடக்கறதுக்கு துணை போகாம இருக்கேனே... அதுதான் தப்பா?’’

``வாதம் செய்யாதிங்க. இது எங்க கடமை.’’

``சரி... நான் ஒரே ஒரு போன் பண்ணிக்கலாமா?”

``மொதல்ல சோதனை முடியட்டும். யோவ்... தேடுங்கய்யா’’ என்று கான்ஸ்டபிள்கள்களைப் பார்த்து உத்தரவிட்டதும் அவர்கள் அந்த குவாட்டர்ஸின் இரண்டு அறைகள், கிச்சன் பகுதி எங்கும் தேடத் தொடங்கினார்கள்.

சட்டென்று நினைவு வந்தவனாக உதய குமார் சென்று போனை எடுத்து, “அமுதா... நான் அப்புறம் பேசறேன். இங்க ஒரு சின்ன இஷ்யூ” என்று சொல்லி கட் செய்தான்.

அந்த உரையாடல்களை எல்லாம் உதய குமாரின் போன் மூலம் கேட்டுக்கொண்டிருந்த அமுதாவுக்கு பதறியது. அவசரமாகத் தன் அப்பாவுக்கு போன் செய்தாள்.

இங்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக நின்றான் உதயகுமார்.

கட்டில் மெத்தைக்கு அடியிலிருந்து ஒரு கான்ஸ்டபிள் இரண்டு சந்தனக் கட்டைகளை எடுத்து வந்தார்.

“இதுக்கு என்ன சொல்றிங்க உதயகுமார்?’’

“எல்லாம் உங்க நாடகப்படி சரியா நடக் குதுன்னு சொல்றேன். வேற என்ன சொல்ல முடியும்?’’

“போலாமா?’’

``எங்க போகணும் சார்?’’

``ஸ்டேஷனுக்கு. அங்க இன்னும் கொஞ்சம் விசாரிச்சிட்டு, எஃப்.ஐ.ஆர். போட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னாடி ஆஜர்படுத்தணும். கிளம்புங்க.’’

``கொஞ்சம் இருங்க சார். அவசரப் படறிங்களே... உங்க குற்றச்சாட்டு என்ன? இவங்க சந்தன மரம் வெட்னாங்க. அதை நான் பார்த்துட்டேன். எனக்கும் பங்கு கொடுங்கன்னு சொன்னேன். கொடுத்தாங்க. அதைப் பதுக்கி வெச்சேன். இதானே?’’

வெந்து தணிந்தது காடு - 19 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``ஆமாம்.’’

``அதாவது லஞ்சம் வாங்கினேன். பணம் வாங்கறதுக்குப் பதிலா பொருளா வாங்கி யிருக்கேன்... சரியா? அப்படின்னா இது சம்பந்தமா என்னை விசாரிக்க வேண்டியது லஞ்ச ஒழிப்புத்துறை. போலீஸ் இல்லை சார்.’’

“இப்படில்லாம் சட்டம் பேசுவிங்கன்னு தெரியும். அதனாலதான் தீர விசாரிச்சேன். இது லஞ்சமா வாங்கலை. திருட்டுல பங்கு!’’

“அதெப்படிங்க? அப்போ நானும் திருடிருக் கணுமே. வெட்னது இவங்க ரெண்டு பேரு தானே?’’

``ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா? எனக்கு பங்கு கொடுத்துட்டு நீங்க வெட்டிக்கங்கன்னு அனுமதி கொடுத்திருக்கிங்க அப்படித்தான் எஃப்.ஐ.ஆர்ல போடுவேன்.”

``அப்படி நடக்கல. ஆனா, என்னைக் கைது செஞ்சே ஆகணும். அதுக்காக அப்படிப் போடு விங்க. இதை நீங்களே உங்க வாயால ஒப்புக் கறிங்க. ஆக இது ஒரு செட்டப்.’’

``உங்களுக்கு இதுக்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது. வர்றிங்களா இல்லையா? இல்லன்னா கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்துக்க வேண்டி யிருக்கும்...’’

``இப்ப மென்மையாவா பேசிட்டிருக்கிங்க? விலங்கு கொண்டு வரலையா?’’

``நீங்க தப்பிச்சு ஓடிட மாட்டிங்கன்ற நம்பிக்கைதான்.’’

``அதே நம்பிக்கை இருந்தா நீங்க முன்னாடி போங்க. நான் என் பைக்குல ஸ்டேஷனுக்கு வர்றேன்”

``அதை அனுமதிக்க முடியாது. எங்க வண்டிலதான் வரணும்.’’

உதயகுமார் குவாட்டர்ஸைப் பூட்டிவிட்டு கரிகாலனுடன் போலீஸ் வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

வழியெல்லாம் அவனுக்குக் கேட்காத வகையில் சன்னக் குரலில் தொடர்ந்து யார் யாரிடமோ ஏதோ பேசிக்கொண்டே வந்தார் இன்ஸ்பெக்டர் கரிகாலன்.

ஸ்டேஷனுக்கு அவர்கள் வந்தபோது... அங்கே கும்பலாக பல மீடியாக்காரர்கள் கேமராக்கள் சகிதம் காத்திருந்தார்கள்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism