Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 20 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

அதெல்லாம் சரிதான். ஆனா, தெனா வெட்டாவே இருக்கான்யா. நேர்மை காப்பாத் தும்னு அழுத்திச் சொல்றான்

வெந்து தணிந்தது காடு - 20 - பட்டுக்கோட்டை பிரபாகர்

அதெல்லாம் சரிதான். ஆனா, தெனா வெட்டாவே இருக்கான்யா. நேர்மை காப்பாத் தும்னு அழுத்திச் சொல்றான்

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

ஸ்டேஷனுக்கு அவர்கள் வந்தபோது... அங்கே கும்பலாகப் பல மீடியாக் காரர்கள் கேமராக்கள் சகிதம் காத்திருந்தார்கள்.

காரிலிருந்து இறங்கியதும், இன்ஸ்பெக்டர் கரிகாலன் உதயகுமாரின் கையை அழுத்தமாகப் பிடித்து மீடியா கேமராக்கள் நோக்கி நடத்தினார்.

``ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலா இருக்கே... நான் என்ன அவ்ளோ பெரிய வி.ஐ.பியா... மீடியாவுக்கெல்லாம் சொல்லியிருக்கிங்க...” என்றான் நக்கலாக உதயகுமார்.

``நீங்க வேணும்னா சட்டையைக் கழற்றி மூடிக்கலாம்.”

``அது தப்பு செஞ்சவங்க செய்ற கோழைத்தனமான வேலை சார். நேர்மையும் சத்தியமும் என்னோட மானத்தையும் மரியாதையையும் காப்பாத்தும்.’’

``அப்படியா... அது எப்படி காப்பாத்துதுன்னு பார்க்கலாம்?”

கேமராக்கள் முன்பாக உதயகுமாரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு கரிகாலன் ஒருமுறை தொண்டையை செருமிக்கொண்டு பேசினார்.

“இவர் காட்டு இலாகா அதிகாரி. டெப்டி ரேஞ்சர் உதயகுமார். காட்ல சந்தன மரம் வெட்ற கும்பலோட இவருக்கு தொடர்பு இருக்கு. ஆதாரத்தோட சாட்சிகளோட பிடிச்சிருக் கோம். கொஞ்ச நேரத்துல மாஜிஸ்ட்ரேட் முன்னாடி ஆஜர்படுத்தப் போறோம்.’’

உதயகுமார் என்ன சொல்லப் போகிறான் என்று அவன்பக்கம் கேமராக்கள் திரும்ப...

``இது பொய் வழக்கு. நான் எந்தத் தப்பும் செய்யல. இப்ப அவ்வளவுதான் சொல்ல முடியும். உங்களுக்கு நேரம் இருந்தா மாஜிஸ்ட் ரேட் வீட்டுக்கு வாங்க. அங்க நிரூபிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கை கூப்பினான்.

உதயகுமாரை ஸ்டேஷனுக்குள் அழைத்து வந்து ஒரு பெஞ்சில் அமர வைத்தார் கரி காலன். ரைட்டரை அழைத்து எஃப்.ஐ.ஆர் எழுதச் சொன்னார்.

வெந்து தணிந்தது காடு - 20 - பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமார் தன் போனை எடுத்தபோது, “நோ... யாருக்கும் பேசக் கூடாது. உங்க போனைக் கொடுங்க” என்று கை நீட்டினார்.

``ஹலோ... நீங்க ஸ்டேஷனுக்குக் கூப்புட் டிங்க. கொஞ்சம்கூட மறுப்பே சொல்லாம வந்தேன். உங்க எல்லா உத்தரவுக்கும் ஒத் துழைச்சேன். ஏதாவது முரண்டு பிடிச்சேனா? எதிர்ப்பு காட்டினேனா? உங்க கடமையை நீங்க தாராளமா செய்யுங்க கரிகாலன் சார். அதே சமயம் என் உரிமைகளையும் யோசிங்க. நீங்க என்னை விசாரணைக்கு தான் கூட்டிட்டு வந்திருக்கிங்க. நான் இப்ப விசாரணைக் கைதி கிடையாது. நான் என் லாயரோட பேசித்தான் ஆகணும். அதுக்கான உரிமை எனக்கு இருக்கு.”

ஒரு விநாடி யோசித்தார் கரிகாலன்... ``சரி. பேசிக்கங்க. ஒரே ஒரு போன்தான் பேசணும். அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பதில் சொல் லுங்க. ஆமா... மீடியாவுக்கு முன்னாடி ரொம்ப கெத்தா மாஜிஸ்ட்ரேட்கிட்ட இது பொய் வழக்குன்னு நிரூபிக்கிறேன்னு சொன் னிங்களே... எப்படி நிரூபிப்பீங்க?’’

அவருக்கு பதில் சொல்லாமல் உதயகுமார் போனில் அபர்ணாவை அழைத்தான்.

அவனை முறைத்துவிட்டு விலகி ஸ்டேஷ னுக்குப் பின்புறம் வந்து ருத்ரபாண்டியனை அழைத்தார் கரிகாலன்.

``பின்னிட்டேய்யா கரிகாலா. மீடியா முன்னாடி நிறுத்தினே பாரு... அதான்யா ஹை லைட்டு. வீடியோ கால்ல உன் கான்ஸ்டபிள் எனக்குக் காட்டினான். பார்க்கவே ஆனந்தமா இருந்துச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் மானம் மரியாதை எல்லாம் உலகம் பூராவும் காத்துல பறக்கப் போகுது’’ என்றார் ருத்ரபாண்டியன் கொக்கரிப்பாக.

“அதெல்லாம் சரிதான். ஆனா, தெனா வெட்டாவே இருக்கான்யா. நேர்மை காப்பாத் தும்னு அழுத்திச் சொல்றான். இது பொய் வழக்குன்னு நிரூபிப்பேன்னு சொல்றான். அந்த இடம்தான் யோசனையா இருக்கு.’’

``அது சும்மா உதார் காட்றான்யா. எல்லாம் கரெக்டாதானே பிளான் செஞ்சிருக்கோம். வீட்ல சோதனை போட்டது, அங்க சந்தனக் கட்டை மாட்டினது... இதெல்லாம் வீடியோ செஞ்சிருக்கேதானே?’’

``ஆமாம்.”

``அந்த ரெண்டு திருட்டுப் பயலுகளும் மாஜிஸ்ட்ரேட் முன்னாடி மாத்திப் பேசிட மாட்டானுங்க. நான் அவ்வளவு மிரட்டி யிருக்கேன். நீயும் மிரட்டியிருக்கே. சரியா தானே ஒத்துழைக்கிறானுங்க... அப்புறம் எதுக்குக் கவலைப்படறே? அவனை பதினஞ்சு நாள் ரிமாண்ட்ல ஜெயில்ல அடைச்சிட்டு வா. பிரமாதமான பார்ட்டி உனக்கு நான் தர்றேன்”

``ஆனாலும்...’’

``பிளான் செஞ்சபடி சரியா நடக்கும். எதுக்கும் அந்த ரெண்டு பேரையும் மறுபடியும் மிரட்டிடு. அந்த மீடியாக்காரனுங்களை இவன் பேச்சை நம்பிக்கிட்டு மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்கெல்லாம் வர வேண்டியதில்லன்னு தெளிவா சொல்லிடு.”

``சரி’’ என்று கட் செய்தவர், உதயகுமார் போனில் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். ஸ்டேஷன் வாசலில் உட்கார வைக்கப்பட்டிருந்த திருடர் கள் இருவரையும் தனியாக அழைத்து வந்தார்.

“டேய்! ஞாபகம் இருக்குல்ல. நான் எப்படி சொல்லிக் கொடுத்திருக்கேனோ அப்படித்தான் மாஜிஸ்ட்ரேட் முன்னாடி சொல்லணும். ஏதாச்சும் மாத்தி கீத்தி பேசினிங்க... உடம்புல ஒரு எலும்பு உருப்படியா இருக்காது. துண்டுத் துண்டா உடைச்சு எடுத்துடுவேன். உடம்புல உசுரு மட்டும்தான் ஓடிட்டு இருக்கும். புரிஞ்சுதா?’’

``அய்யா... நீங்களும், ரேஞ்சர் அய்யாவும் சொன்ன மாதிரிதானேய்யா எல்லாம் செஞ்சு கிட்டிருக்கோம். எங்களைப் போயி எதுக்கு சந்தேகப்படறிங்க? அந்தாளு எங்களுக்கென்ன மாமாவா, மச்சானா? எங்களை கேஸில்லாம விட்டுட்டிங்கன்னா போதும்யா’’ என்றான் அவர்களில் ஒருவன். திருப்தியுடன் மீசையைத் தடவிக் கொண்டார் கரிகாலன்.

கள்ளக்குறிச்சி. அமுதா போன் செய்தவுடன் அவசர மாக பிரின்ட்டிங் பிரஸில் இருந்து புறப்பட்டு ஐந்தே நிமிடங்களில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் தமிழ்மணி.

தவிப்புடன் காத்திருந்த அமுதா, அவர் வந்ததும் “அவரை சிக்கல்ல மாட்டி விடறாங்க... என்னப்பா செய்யலாம்?” என்றாள்.

``எல்லாமே அந்த பென்சில் ஃபேக்டரி ஜெயபாலோட வேலைன்னு நல்லா புரியுதும்மா. எல்லா லெவல்லயும் அவ்வளவு செல்வாக்கோட இருக்கான்.’’

``அவரோட பேசிப் பார்க்கறிங்களா? உங்க ஃபிரெண்டுதானே?’’

“ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்ட்டெல்லாம் இல் லம்மா. இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு உதய குமார் பத்தி தப்பாச் சொன்னவன் அவன். என்னன்னு பேசறது?’’

“இப்படி திட்டம் போட்டு பழி சுமத்தி நடவடிக்கை எடுத்தா... அவர் பேரு, மரியாதைல்லாம் போயிடும்ப்பா. வேலையும் போனாலும் போயிடும். ரொம்ப நல்ல வருப்பா அவரு. சமூகத்தைப் பத்தி அக்கறையோட சிந்திக்கிறவருப்பா. அவருக்கு எந்த அவமானமும் வரக்கூடாதுப்பா.’’

``உன் தவிப்பு எனக்கும் இருக்குதும்மா. இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியலயே... சரி... பேசிப் பார்க்கறேன்.”

தமிழ்மணி போன் எடுத்து ஜெயபாலை அழைத்தார்.

``ஜெயபால் பேசறேன். என்ன தமிழ்மணி... சொல் லுங்க?’’

``அது... வந்து... அந்த உதயகுமார்...’’

``அந்தப் பையன்தான் நல்லவன் இல்லன்னு விசா ரிச்சு சொன்னேனே... கல்யாண ஏற்பாட்டை நிறுத்திட் டிங்கதானே?”

“இல்ல. அவர்தான் மாப்பிள்ளைன்னு முடிவாகி நாளை மறுநாள் வீட்ல நிச்சயம்கூட நடக்கப்போகுது.’’

“என்னங்க நீங்க புரியாத ஆளா இருக்கிங்க... மொதல்ல அதை கேன்சல் பண்ணுங்க. அந்தப் பையனை அரெஸ்ட் செஞ்சிருக்காங்க. நியூஸ் சேனல்ல ஓடிக்கிட்டிருக்கு. பாருங்க. ஒரு கும்பலோட சேர்ந்து சந்தன மரம் வெட்டி வித்திருக்கான்.’’

பேசியபடியே தமிழ்மணி டிவியைப் போடச்சொல்லி அமுதாவுக்கு ஜாடை காட்டினார். அவள் போட்டு செய்தி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். ஒரு சேனலில் மீடியாவுக்கு முன்பாக உதயகுமாரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் கரிகாலன் பேசுவது வரவே...

``ஒரு நிமிஷம் லைன்ல இருங்க ஜெயபால். அந்த நியூஸைப் பார்த்துட றேன்.”

தமிழ்மணியும் அமுதாவும் செய்தி யைப் பார்த்தார்கள். பிறகு டிவியை அணைத்துவிட்டு போனில் பேச்சைத் தொடர்ந்தார்... “இது பொய்யான குற்றச்சாட்டுன்னு நான் நம்பறேன்.”

``தமிழ்மணி... உங்களுக்கென்ன பைத்தியமா? என்ன தெரியும் உங் களுக்கு அவனைப் பத்தி? கொஞ்ச நேரத்துல ஜெயிலுக்குப் போகப் போறான். தப்பு செஞ்சு இருக்கான். அவனைப் போய் நம்பறேன்னு சொல்றிங்களே...’’

``ஜெயபால்... கொஞ்சம் வெளிப் படையா பேசுவமா? உங்களுக்கும் உதயகுமாருக்கும் பகை ஏற்பட்டுடுச்சு. அவருக்கும் டிபார்ட்மென்ட்ல உயரதிகாரிக்கும் உரசல். அவரு உங் களுக்கெல்லாம் இடைஞ்சலா இருக் கார். உங்க செல்வாக்கு மூலமா இப்படி ஒரு குற்றச் சாட்டை ஜோடிச்சிருக்காங் கன்னு நான் நினைக்கிறேன். சரியா?’’

``ஓ.. இவ்ளோ மேட்டர் தெரியுமா உங்களுக்கு?’’

``அவர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்க வேணாம் ஜெயபால். எல்லாத்தையும் நிறுத் திடுங்க.”

``இதென்ன கோரிக்கையா? மிரட்டலா?’’

``உங்களை மிரட்டற அளவுக்கெல்லாம் எனக்கு செல்வாக்கில்லைங்க. ஆனா, அவர் தான் என் மாப்பிள்ளைங்க. என் மாப் பிள்ளைக்கு ஒண்ணுன்னா நான் எப்படிங்க சும்மா இருக்க முடியும்?’’

“மாப்பிள்ளையா? இனிமேதானே நிச்சயமே நடக்கப்போகுது?’’

``மனசுல முடிவெடுத்தாச்சுங்க. அதெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான்.’’

வெந்து தணிந்தது காடு - 20 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``அதான் வெளிப்படையா பேசிக்கலாம்னு சொல்லிட்டிங்களே... உங்களால் முடிஞ்சதைப் பார்த்துக்கங்க தமிழ்மணி” என்ற ஜெயபால் சட்டென்று பேச்சைக் கத்தரித்து தொடர்பைத் துண்டித்தார்.

``அப்பா... இப்ப எனக்கு உதய் ஒரு மேசேஜ் அனுப்பியிருக்காரு” என்றாள் பதற்றமாக அமுதா.

“என்ன?’’

``திருப்பதியில இருக்கற அவர் ஃபிரெண்டு லாயர் அபர்ணாவை கான்டாக்ட் செய்யணு மாம். அவங்க நம்பர் அனுப்பியிருக்காரு.”

``உடனே போடும்மா...”

அமுதா, அபர்ணாவின் எண்ணை அழைத் தாள்.

``வணக்கம் அபர்ணா பேசறேன். யாரு?”

“மேடம். நான் அமுதா... உதயகுமாரோட...’’

``தெரியும். இப்பதான் நாங்க போன்ல பேசி னோம். இப்ப உதயகுமார் ஸ்டேஷன்ல தான் இருக்காரு. எஃப்.ஐ.ஆர் ரெடி செஞ்சிட்டிருக் காங்க. மாஜிஸ்ட்ரேட் வீட்ல ஆஜர்ப்படுத்தப் போறாங்க. உதயகுமார்கிட்ட ஏதோ ஒரு பிளான் இருக்கு. அதை ஸ்டேஷன்ல இருந்து கிட்டு அவரால் சொல்ல முடியல. அவரு இப்ப ஒரே ஒரு உதவியைத்தான் எதிர்பார்க்கறாரு.’’

``என்ன?’’

“போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு வந்த அத்தனை மீடியாவும் மாஜிஸ்ட்ரேட் வீட்டு வாசலுக்கு வரணும். அதுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். நான் என் இன்ஃப்லூயன்ஸை யூஸ் பண்ணி அங்க மீடியா வர்றதுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிட்டேன். உங்க அப்பாவையும் இன்ஃப்லூயன்ஸ் யூஸ் பண்ணச் சொல்லுங்க அமுதா. அப்புறம் பேசு வோம்’’ என்று அவசரமாகப் பேசிவிட்டு வைத்தாள் அபர்ணா.

அவள் பேசியதையெல்லாம் ஸ்பீக்கர் போன் வழியாகக் கேட்டுக்கொண்டிருந்த தமிழ்மணி, சேலம் எம்.பி-க்கு போன் செய்யத் தொடங்கினார்.

சம்பிரதாயமான அத்தனை காகிதங்களையும் தயார் செய்து முடித்த இன்ஸ்பெக்டர் கரிகாலன் சில கான்ஸ்டபிள்கள், திருடர்கள் மற்றும் உதயகுமாருடன் இரண்டு வாகனங் களில் மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்குப் புறப்பட்டார். அங்கு வந்து சேர்ந்தபோது அங்கே மீடியா காத்திருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

“என்னய்யா இது... இங்க யாரும் வர வேண்டியதில்லன்னு மெனக்கெட்டு ஒவ் வொருத்தனுக்கும் தகவல் சொன்னோம். அப் படியும் எப்படி வந்து நிக்கிறானுங்க?” என்று கோபமாக சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்க... உதயகுமார் உதட்டுக்குள் சிரித்தான்.

``உன் ஏற்பாடா?’’ என்றார்.

``யார் முன்னாடி பழி போட்டிங்களோ... அவங்க முன்னாடிதானே நான் தப்பு செய்ய லன்னு நிரூபிச்சாகணும்?’’ என்றான் உதய குமார்.

``எப்படி நிரூபிக்கிறேன்னு நானும் பார்க் கறேன். இறங்குடா!” என்றார் உத்தரவாக.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism