Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 22 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

பைக்கின் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தான். தூரத்தில் கௌசிக் வருவது தெரிந்தது. அவனுடைய சட்டையின் காலர்கள் காற்றில் பறவையின் இறக் கைகள் போல அடித்துக்கொண்டன.

வெந்து தணிந்தது காடு - 22 - பட்டுக்கோட்டை பிரபாகர்

பைக்கின் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தான். தூரத்தில் கௌசிக் வருவது தெரிந்தது. அவனுடைய சட்டையின் காலர்கள் காற்றில் பறவையின் இறக் கைகள் போல அடித்துக்கொண்டன.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

குயிலருவிக்கு அருகில் காற்று சிலுசிலுவென்று அடித்தாலும் ருத்ரபாண்டியனும் கரிகாலனும் சூடாக இருந்தார்கள். கண்கள் சிவக்குமளவுக்கு குடித்தபடி ஆவேசமாகப் பேசினார்கள்.

``அந்த ...... மவனை என்ன செய்யப் போறோம்?’’ என்றார் ஆத்திரமாக கரிகாலன்.

“சொல்றேன் கேளு” என்றார் ருத்ரபாண்டியன்.

“சொல்லு...’’

“என்ன உத்தரவு போட்டாலும் அப்படியே செய்றதுக்கு பாண்டி தயாரா இருக்கான் இல்லையா?’’

“ஆமாம்...’’

“ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் உதயகுமார் இந்தக் குயிலருவிக்கு வந்து குளிப்பான். வர்ற ஞாயிறு அவன் வந்து குளிச்சிட்டிருக்கிறப்ப... அருவிக்கு கொஞ்சம் மேல ஒரு பாறைக்குப் பின்னால மறைஞ்சு நிக்கிற பாண்டி, பெரிய கல்லைத் தூக்கி அவன் தலையில் போடணும். மண்டை சிதறி சாவான். விபத்து சாவு மாதிரி ஃபிரேம் பண்ணிடலாம்.’’

ருத்ரபாண்டியன் சொன்ன திட்டத்தைப் பற்றி சிகரெட் பிடித்தபடி யோசித்தார் கரிகாலன்.

காட்டின் உள்பகுதியில் அடர்த்தியாக மரங்களின் கிளைகள் கைகோத்ததால் அமைந்த இயற்கையான கூரைக்கு அடியில் வடிகட்டி அனுமதிக்கப்பட்ட மாலை வெயில் இதமாக இருந்தது. காற்று உதய குமாரின் சிகையைக் கலைத்து விளையாடியது.

உதயகுமார் நேரம் பார்த்துக்கொண்டு சிந்தனை யாக இப்படியும் அப்படியுமாக நடந்தான்.

பைக்கின் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தான். தூரத்தில் கௌசிக் வருவது தெரிந்தது. அவனுடைய சட்டையின் காலர்கள் காற்றில் பறவையின் இறக் கைகள் போல அடித்துக்கொண்டன. உதயகுமாரின் அருகில் வந்து நிறுத்தி இன்ஜின்அணைத்து ஸ்டாண்ட் போட்டான். ஹெல்மெட்டைக் கழற்றி வைத்தான். உதயகுமாரின் கையை புன்னகையுடன் குலுக்கினான்... “கல்யாணத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் சார்.’’

“தேங்க்யூ கௌசிக்.”

“இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கு. இன்னும் டூட்டில இருக்கிங்களே... எப்பயிலேர்ந்து லீவு சார்?’’

“கல்யாணத்துக்கு முதல் நாள்லேர்ந்து.’’

“என்ன சார் இது...’’

“தாலி கட்றது தவிர, வேற எனக்கு ஒரு வேலையும் இல்லையே கௌசிக். எல்லாம் வீட்ல பார்த்துக்குவாங்க. அதை விடுங்க. ஏதாச்சும் புது நியூஸ்?’’

“நாலு நாளைக்கு முன்னாடிதான் அவர் ஆபீஸ் ரூம்ல ஃபைல்ஸ் கேபினெட்ல பக்கிங் டிவைஸ் வைக்க முடிஞ்சது சார்.’’

“வெரிகுட்.”

“நாலு நாள்ல ரெக்கார்டு ஆன கான்வர் சேஷன்ஸ் எல்லாம் கவனமா கேட்டேன். எதுலயும் உருப்படியான தகவல் கிடைக்கலை.’’

“இந்த நாலு நாள்ல அவர் பையன் யோகேஷ்கிட்ட ஒரு தடவை கூட பேசலையா என்ன?’’

“பையன்ட்ட பேசறப்ப மட்டும் வேற ஒரு போன்ல அப்ப மட்டும் ஒரு சிம் போட்டுப் பேசறார். பேசி முடிச்சதும் கழற்றி வெச்சி டறார். அதுவும் ஆபீஸ்ல வெச்சு அதிகம் பேசறதில்ல சார்.’’

“பின்ன?’’

“ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டிக்கிட்டிருக் காரில்ல... அந்த பில்டிங் சைட்ல வெச்சுதான் பேசறார்.’’

“அந்த போனோட உங்க போனை பேரிங் செய்ய முடிஞ்சா எக்கச்சக்கமான இன்ஃபர் மேஷன் கொட்டும் கௌசிக்.’’

“அதுக்கு அந்த போன் மினிமம் ரெண்டு நிமிஷம் என் கைல இருக்கணுமே சார். கங்காரு குட்டியை வெச்சிக்கிற மாதிரி அந்த போனை சட்டைப் பாக்கெட்லயே வெச்சுக் கிட்டு திரியறார்.’’

“தூங்கற நேரம்னு ஒண்ணு இருக்கில்ல?’’

“வீட்ல மூணு ஷிப்ட்ல செக்யூரிட்டி போட்ருக்காரு சார். தவிர டிரைவர், தோட்டக் காரன், வேலைக்காரன்னு ஆறு பேர் வேலை பார்க்கறாங்க.’’

வெந்து தணிந்தது காடு - 22 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“நானும் கவனிச்சிருக்கேன். வீட்டைச் சுத்தி பத்து சிசிடிவி கேமரா போட்ருக்காரு. கன்னுக்குட்டி சைஸ்ல ரெண்டு நாய் வேற நிக்கும்.’’

“ஆமாம் சார். இது அத்தனையும் தாண்டி அவர் வீட்டுக்குள்ளே போறது கஷ்டம்.”

“ஆனா, எப்படியாவது போயிடணும் கெளசிக். அவரோட பெட்ரூம்ல பக் பண்ணினா... சொளையா தகவல்கள் கிடைச்சிடும்.”

“கரெக்ட்தான் சார். ஆனா, எப்படி என்ட்டர் பண்றது?’’

உதயகுமார் தாடையைத் தடவியபடி யோசித்தான். “ஜெயபால் உங்களை முழுசா நம்பறார்தானே?’’

“ஆமாம் சார். பேங்குல அஞ்சு லட்சம், பத்து லட்சம்னு கேஷ் வித்ட்ரா பண்றதுக்கு என்னை அனுப்ப ஆரம்பிச்சிருக்கார். சில கம்பெனி களுக்கு கொட்டேஷன் ரெடி செஞ்சி அனுப்பற ரகசியமான ஆபீஸ் வேலைகளை யும் என்னைச் செய்யச் சொல்றார்.’’

“வெரிகுட். எனக்கு லேசா ஒரு ஐடியா தோணுது. அதை முழுசா ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்’’ என்றான் உதயகுமார்.

சேலம். கலெக்டர் வீட்டின் வரவேற்பறை யில் கையில் பாதாம், திராட்சை, முந்திரி இவையெல்லாம் கொண்ட ஒரு கிஃப்ட் அட்டைப்பெட்டி மற்றும் தன் திருமண அழைப்பிதழுடன் உதயகுமார் அழைக்கப்படக் காத்திருந்தான்.

அவன் போனில் வாட்ஸ்அப் நோட்டி ஃபிகேஷன் சத்தம் கேட்டு எடுத்துப்பார்த்தான்.

அமுதா அனுப்பிய படத்தில் மூன்று பட்டுப் புடவைகள் இருந்தன. ஒன்று அரக்கு நிறம். ஒன்று பர்ப்பிள். மூன்றாவது பச்சை. தொடர்ந்து அவள் அனுப்பிய ஆங்கிலச் செய்தியில்... ‘இந்த மூன்றில் முகூர்த்தப் புடவைக்கு எது உங்கள் விருப்பம்?’ என்றிருக்க... பதிலனுப்பி உரையாடத் தொடங்கினான்.

‘உன் சாய்ஸ் என்ன?’

‘முதலில் நீங்கள்.’

‘எனில் பர்ப்பிள்.’

‘நானும் அதைத்தான் நினைத்தேன். சேம் பின்ச்.’

‘எங்கே கிள்ளுவதாம்?’

‘எங்கே கிள்ள விருப்பம்?’

‘அந்த பளிச் இடுப்பில்.’

‘ஏய்!’

`அல்லது உப்பல் கன்னத்தில். இதோ இப்போது கிள்ளுகிறேன் அமுதா டியர்.’

‘உணர்கிறேன். எங்கே இருக்கிறீர்கள்?’

‘கலெக்டருக்கு பத்திரிகை வைக்க அவர் வீட்டின் வரவேற்பறையில் காத்திருக்கிறேன். எந்த நேரமும் அழைப்பார். உடனே நம் உரையாடலைத் துண்டித்து விடுவேன்.’

‘சரி. அதுவரை பேசலாமல்லவா?’

‘தாராளமாக.’

‘ரிசப்ஷனுக்கு கோட் சூட் வேண்டாம் என்றீர் களாமே.’

‘ஆமாம். ஏற்கெனவே ஒரு கோட், சூட் இருக்கிறது. அதையே அணிந்து வருடங்களாயிற்று. அதோடு சேர்ந்து இதுவும் ஜோடியாக பீரோவில் தூங்கும். ஒரு பிளேசர் மட்டும் வாங்கிக் கொள்கிறேன். உனக்கு பியூட்டிஷியன் புக் செய்தாயிற்றா?’

‘ஆமாம். வேண்டாமென்றால் அக்கா கேட்கவில்லை. மெகந்திக்கு தனியாக ஸ்பெஷலிஸ்ட் புக் செய்திருக்கிறாள். இத்தனை அலங்காரம் எனக்குக் கூச்சமாக இருக்கிறது.’

‘பரவாயில்லை. தினமுமா இப்படி அலங்காரம் நடக்கப்போகிறது அமுதா? ஒரு நாள் மட்டும்தானே? படங்களில் ஜொலிப்பாய். வாழ்நாள் முழுதும் சேகரிக்கப் போகும் நினைவுகளுக்கு எடுப்பாகத்தான் இருக்கட்டுமே!’

‘அப்பா ஒன்று சொல்லச் சொன்னார் உதய்.’

‘என்ன?’

‘நகைகள் வாங்க மட்டும் ஒரே ஒரு நாள் வந்துபோக முடியுமா என்று கேட்கச் சொன்னார்.’

‘அதற்கு நான் எதற்கு அமுதா? உனக்குப் பிடித்ததை தேர்வு செய்துகொள். அணியப்போவது நீதானே?’

‘அழகு பார்க்கப்போவது நீங்கள்தானே?’

‘உனக்கு எது பிடித்தாலும் அது எனக்கும் பிடிக்கும்’

‘புடவை படம் அனுப்பிய மாதிரி நகைக்கடையிலிருந்து படம் அனுப்புகிறேன் அல்லது வீடியோ காலில் அழைக்கிறேன். எனக்கு உங்கள் யோசனையும் வேண்டும்.’

‘சரி. கலெக்டரின் பி.ஏ வரு கிறார். பிறகு, தொடர்கிறேன். பை’ உதயகுமார் எழுந்து கொண்டான். குளிர் அறைக்குள் அவன் நுழைந்த தும் கதவு தானாக மூடிக் கொண்டது. எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் வைத்து அவன் அமர இருக்கை காட்டி விட்டு அமர்ந்தார் பானுமதி.

“கல்யாணம் மேடம்...”

“அப்படியா... சந்தோஷம்!’’

நீட்டிய பத்திரிகையை வாங்கிப் படித்து விட்டு, ‘‘பொண்ணு சொந்தமா?’’ என்றார்.

“புது சொந்தம்தான் மேடம்.”

“அந்தத் தேதியில் சென்னையில் சி.எம்மோட கலெக்ட்டர்ஸ் மீட்டிங் இருக்கு. இப்பவே வாழ்த்துகளைத் தெரிவிச்சிக் கிறேன்.’’

“பரவால்ல மேடம்... தேங்ஸ்.’’

``உங்களுக்கு ஒரு சந்தோஷம் வருத்தம் கலந்த செய்தி ஒண்ணு வெச்சிருக்கேன் உதயகுமார்.’’

“என்ன மேடம்?’’

“குறிஞ்சிக்காடு ரோடு மேட்டர் சம்பந்தமா நான் சி.எம்கிட்டயே போன்ல பேசினேன். ரொம்பவே எடுத்துச் சொன்னேன். சரியா புரிஞ்சிக்கிட்டார். அவரே மினிஸ்டரை பைபாஸ் பண்ணி சேலத்துல உங்க டி.எஃப்.ஓ கிட்ட பேசியிருக்கார். அவர் அலறியடிச்சுக் கிட்டு என்னை வந்து பார்த்தார். ரோடுக்கு கிளியரன்ஸ் சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டார்.’’

“ஓ மை காட்... இந்தச் செய்தி குறிஞ்சிக்காடு ஜனங்களுக்குத் தெரிஞ்சா திருவிழா மாதிரி கொண்டாடுவாங்க மேடம்.’’

வெந்து தணிந்தது காடு - 22 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“இருங்க. இதுல ஒரு வருத்தமும் கலந்திருக் குன்னு சொன்னனே... மூணு வருடமா கிடப்புல இருந்த திட்டம். ஏற்கெனவே சேங்ஷன் ஆன அமவுன்ட்டை விடவும் இப்போ முப்பது சதவிகிதம் காஸ்ட் அதிக மாயிடுச்சு. கூடுதலா ஃபண்ட் இப்போ உடனடியா அரசாங்கத்தால் ஒதுக்க முடியாத சூழ்நிலை. காத்திருக்கணும்.”

“போச்சுடா! மறுபடி காத்திருப்பா? ஆனா, இந்தத் தடவை காரணம் மாறுது.’’

“என்ன செய்யச் சொல்றிங்க உதயகுமார்? ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு நல்ல மனசு மட்டும் பத்தாதே... பணம் முக்கியமாச்சே. யதார்த்த நிலைமை இதுதான்.’’

“கூடுதலா எவ்வளவு தேவைப்படுதுங்க மேடம்?’’

“50 லட்சம்...’’

“அதை அந்த ஜனங்களே வசூலிச்சுக் கொடுத்தா?’’

“உடனே திட்டத்தை செயல்படுத்திடலாம். அவங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்குமா என்ன?’’

“அவங்களுக்கு ரோடுன்றது ரொம்ப அத்தி யாவசியமான தேவை மேடம். பேசிப் பார்க்க றேன்’’ என்ற உதயகுமார் எழுந்து கைகூப்பி விட்டு வெளியேறினான்.

உதயகுமாரின் குவாட்டர்ஸுக்கு பைக்கில் வந்து சேர்ந்த காடையன், வெட்டுக்கிளி இருவர் முகங்களும் சோகமாக இருப்பதைக் கவனித்தான்.

தேநீர் போட்டுக் கொடுத்து, “கல்யாணத்தை தான் ஜம்முன்னு நடத்தி முடிச்சிங்களே... ஏன் டல்லா இருக்கிங்க?” என் றான்.

“அது இருக்கட்டுங்க தம்பி. நீங்க எதுக்குக் கூப்பிட்டிங்கன்னு சொல் லுங்க” என்றான் வெட்டுக் கிளி.

கலெக்டர் சொன்ன வற்றை விரிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, “உங்களால் 50 லட்சம் பணம் திரட்ட முடியுமா?’’ என்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“இனிமே ஊர்ல என் பேச்சு எடுபடாதுங்க தம்பி.’’

“ஏன்?’’

“அந்த பாண்டி ஊரைக் கூட்டி என் மேல பிராது கொடுத்தான். நாளைக்கு புது தலை வரைத் தேர்ந்தெடுக்கறோம். அவனே போட்டி போடறான். தலைக்கு ஒரு லட்சம் கொடுத் திருக்கான். எல்லாம் பென்சில்காரரு பணம். பெரிய தொகைன்றதால எல்லாப் பயலுங் களும் கூசாம வாங்கிட்டானுங்க.’’

காடையன் சோகமாகச் சொல்ல... உதய குமாருக்கு ஒரு யோசனை தோன்றியது...

“இப்படி செஞ்சா?’’ என்றான் அவன்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism