Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 25 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

நான் ஒரு போலீஸ்காரன் என்பது இன்னும் இவருக்குத் தெரியவில்லை. நான் ரகசியமாக தகவல் சேகரித்ததை அரைகுறையாகத்தான் தெரிந்து வைத்திருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு - 25 - பட்டுக்கோட்டை பிரபாகர்

நான் ஒரு போலீஸ்காரன் என்பது இன்னும் இவருக்குத் தெரியவில்லை. நான் ரகசியமாக தகவல் சேகரித்ததை அரைகுறையாகத்தான் தெரிந்து வைத்திருக்கிறார்.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

கெளசிக் ஏராளமாக ரத்தம் சிந்தியிருந் தான். முகத்தில் அவன் மொத்த அடையாளமும் கொஞ்சமும் புரியாத அளவுக்கு இரும்பு ராடால் அடிவாங்கியிருந்தான். சதைகள் கிழிந்து தொங்க... கோடாக ரத்தம் ஒழுக... மிச்சமிருக்கும் உயிரைத் தேக்கிப்பிடித்து அவசர மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.

ரத்தம் சொட்டும் இரும்பு ராடை கையில் உறுதியாய்ப் பிடித்தபடி ஜெயபாலின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தான் பாண்டி.

ஜெயபால் தரையில் வீசப்பட்ட துணிபோல கிடந்த கெளசிக் அருகில் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

தன் கால் லெதர் கட் ஷூவால் அவன் முகத்தை லேசாக நிமிர்த்தினார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

“ஏண்டா... நாயே... உனக்கு வலிக்கலை?’’

இமைகளைப் பிரிக்க முடியாமல் கஷ்டப் பட்டு கொஞ்சமாகப் பிரித்து பரிதாபமாகப் பார்த்தான் கெளசிக்.

“இன்னும் ஒரு அடி மார்ல அடிச்சா அவ்ளோதான். செத்துடுவடா. சின்ன

வயசுடா உனக்கு. ஒண்ணும் அனுபவிக்காம போயிடறியா? உங்கப்பா, அம்மாவுக்கு மாசா மாசம் எவன் பணம் அனுப்புவான்? அவங்க பிச்சை எடுத்தா பரவால்லையா?’’

“தண்ணி... தண்ணி’’ முனகலாகக் கெஞ்சினான் கெளசிக்.

ஜெயபால், பாண்டியைப் பார்த்து தலை யசைக்க... அந்த பென்சில் குடோனின் ஓரத்தில் மேஜை மீதிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து வந்தான் அவன்.

வாங்கிய ஜெயபால் தரையில் அமர்ந்து அவன் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு புகட்ட... ஆர்வமாகக் குடித்தான் கெளசிக்.

“பார்த்தியா? நான் நல்லதனமாதானே நடந்துக்கறேன்? ஒரு கோபத்துல அடிக்கச் சொல்லிட்டேன். என் இடத்துல நீ இருந்தாலும் உனக்கு கோபம் வரத்தானே செய்யும்? உன்னை உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ராஜ வைத்தியம் செய்றேன். ரெண்டே நாள்ல சரியாகிடுவே. ஆனா, நீ இப்படி அடம்பிடிக்காம பேசணும். உன்னை வேவு பார்க்கச் சொன்னது யாரு? இதுவரைக்கும் என்ன தெரிஞ்சுகிட்டே? எப்படி தெரிஞ்சு கிட்டே? என்னமோ பதிவு செஞ்சு வெச்சிருக்கியாமே... எதுல பதிவு செஞ்சே? எங்க... கடகடன்னு எல்லாம் சொல்லு பார்க்கலாம்.’’

அவர் குரலில் கெஞ்சலும் மிரட்டலும் கலந்திருந்தது.

கெளசிக் அந்தச் சூழ்நிலையிலும் ஒரு போலீஸ்காரனாகத்தான் யோசித்தான்.

‘நான் ஒரு போலீஸ்காரன் என்பது இன்னும் இவருக்குத் தெரியவில்லை. நான் ரகசியமாக தகவல் சேகரித்ததை அரைகுறையாகத்தான் தெரிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் நானாகச் சொன்னால்தான் உண்டு. என்னிட மிருந்து இவருக்கு தகவல்கள் கண்டிப்பாக தேவை. அதைத் தெரிந்துகொள்ளாமல் நிச்சயமாக என்னைக் கொலை செய்ய மாட்டார்.

இன்னும் கொஞ்சம் சித்ரவதை செய்யலாம். செய்யட்டும். பொறுத்துக்கொள்ளலாம். எப்படியும் எனக்கு உதவி கிடைக்கும். காப்பாற் றப்படுவேன்.

உதயகுமார் இப்போது என்னை எதிர்பார்த்து தன் குவாட்டர்ஸில் காத்திருப்பார். வராததால் குழப்பமடைந்து முதலில் என்னை போனில் அழைப்பார். என் போனை பறிமுதல் செய்து அந்த மேஜையின் மீது வைத்திருக்கிறார்கள். அதற்குள் இருக்கும் குட்டி மெமரி கார்டில் தான் எல்லாம் பதிவாகியிருக்கிறது. அதை எப்படியாவது உதயகுமாரிடம் சேர்த்து விட்டால் போதும்.

நான் இப்படி சிக்கிக்கொண்டு அபாயத்தில் இருக்கிறேன் என்று எப்படியாவது உதய குமாருக்கு உணர்த்திவிட்டால் அவர் நிச்சயமாக என்னை இங்கிருந்து காப்பாற்றி விடுவார்.

எப்படி? எப்படி? யோசி! யோசி!

நல்ல வேளையாக என்னைக் கட்டிப் போடவில்லை. எதுவும் சொல்ல மாட்டேன் என்று மறுத்துக்கொண்டே இருப்பதைவிடவும் ஒரு நாடகமாடி இவர்களை ஏமாற்றப் பார்ப்பதுதான் சரி.’

“சார்... வெளிப்படையா பேசலாமா?’’ என்றான் கெளசிக் ஈனக் குரலில்.

“அதான் நல்லது. பேசு.’’

“எனக்கு ஒரு உத்தரவாதம் தரணும்.’’

“என்ன?’’

“நான் உண்மையைச் சொன்னதும்

என்னைக் கொலை செய்துட மாட்டீங்களே... மாட்டேன்னு ப்ராமிஸ் செய்யுங்க.’’

ஜெயபாலுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார்.

“அதான் வைத்தியமே செய்றேன்னு சொல்றனே...’’

“நான் மிடில் கிளாஸ் சார். இல்லாத கொடுமை. காசுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு எதிரா செயல்பட்டுட்டேன். பத்தாயிரம் எனக்கு பெரிய தொகை சார்.’’

“யார் கொடுத்தாங்க?’’

“வந்து...’’ என்று பாண்டியைப் பார்த்தான் கெளசிக்.

“நம்பிக்கையான ஆளுதான். பரவால்ல... சொல்லு.’’

“டெப்டி ரேஞ்சர் உதயகுமார் சார்.’’

“நெனைச்சேன். என்ன செய்யச் சொன்னான்? என்ன செஞ்சே?’’

“ரொம்ப வலிக்குது. மொதல்ல ஏதாச்சும் மருந்து போட்டுவிடச் சொல்லுங்க. ஒண்ணு விடாம எல்லாம் சொல்லிடறேன்.’’

“பாண்டி... மெயின் பில்டிங்ல ஃபர்ஸ்ட் எய்ட் பொட்டி இருக்கும்.

வெந்து தணிந்தது காடு - 25 - பட்டுக்கோட்டை பிரபாகர்

சீக்கிரம் எடுத்துட்டு வா.’’

பாண்டி விரைவாக விலகியதும்...

“மேல சொல்லுடா’’ என்றார் ஜெயபால்.

கெளசிக் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு, “ரெஸ்ட் ரூம் போகணும் சார்’’ என்றான்.

“என்னடா இப்படி படுத்தறே? என்னை ஏமாத்தணும்னு நெனச்சே... ஒரு நிமிஷம்கூட யோசிக்க மாட்டேன். தொலைச்சிடுவேன்.

ம்... போ...’’ என்று அங்கேயே ஓரத்தில் இருந்த கழிவறையைக் கை காட்டினார்.

சிரமப்பட்டு ஒவ்வோர் அடியாக வைத்து தான் நடக்க முடிந்தது. கடைக்கண்ணால் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்தபடி நடந்தான். அவனுடைய போன் இருந்த மேஜையைக் கடந்துதான் போக வேண்டும். போன் மீது ஒரு பார்வை வைத்தபடி நகர்ந்தான்.

ஜெயபால் ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைப்பதில் சில விநாடிகள் கவனம் பிசக... சட்டென்று தன் போனை எடுத்து வயிற்றில் செருகிக்கொண்டான்.

கழிவறைக்குள் அவன் நுழைய...

“உள்ள தாப்பா போடக் கூடாது’’ என்று உத்தரவாகக் குரல் கொடுத்தார்.

“சரி சார்’’ என்றவன் கதவை லேசாக மூடிவிட்டு அவசரமாக போனை எடுத்து

ஆன் செய்தான். உதயகுமார், சூரியபிரகாஷ் இருவரும் தலா நான்கு முறை பேச முயற்சி செய்திருந்தார்கள்.

உதயகுமாரை அழைத்தான்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பானுமதியின் அறைக்கு வெளியில் காத்திருப் போர் அறையில்... அழைக்கப்படக் காத் திருந்தான் உதயகுமார்.

அவனால் அமைதியாக அமர முடியவில்லை. எழுந்து இப்படியும் அப்படியுமாக இருப்பு கொள்ளாமல் நடந்தான்.

ஒலித்த போனில் திருப்பதியிலிருந்து சூரிய பிரகாஷ் பேசினார்.

“இங்க டாப் லெவல் ஆபீசர்ஸ் ஒரு எமர்ஜென்சி மீட்டிங்ல இருந்தோம். இப்ப தான் லாயர் அபர்ணா நேர்லயே வந்து நீங்க அவசரமா பேசணும்னு சொன்னாங்க. சொல்லுங்க உதய்.’’

கெளசிக் தன்னிடம் சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னான்.

“கிரேட் நியூஸ். இப்ப நான் கெளசிக்கோட பேச முயற்சி செஞ்சேன். போன் கிடைக்கலை.’’

“ஆமாம் சார். எனக்கும் கிடைக்கலை.

உங்க போனும் கிடைக்கலை. நானும் அவருமா சேர்ந்து கலெக்டர் ஆபீஸ் வர்றதா முடிவு செஞ்சோம். சொன்னபடி என்னைப் பார்க்க அவர் வரலை.

நான் மட்டும் வந்து இப்போ கலெக்டர் ஆபீஸ்ல காத்துட்டிருக்கேன்.’’

“அப்படியா? ஆக்சுவலா இன்னிக்குதான் இங்கேயும் ஒரு பிரேக் த்ரூ கிடைச்சது. ஹைதராபாத்ல யோகேஷ் லக்டிகாபூல் ஏரியால ஒரு பழைய ஹாஸ்பிடலை தன்னோட நிழல் வேலைகளுக்குப் பயன்படுத்தறான்னு எனக்கு ஆதாரபூர்வமா நியூஸ் கிடைச்சிருக்கு.’’

“வெரி குட் சார். இனி மேற்கொண்டு...’’

“என்ன செய்யலாம்னு பிளான் பண்ணிட்டு உங்களைக் கூப்புடறேன். நீங்க அங்கேயே இருங்க உதயகுமார். கலெக்டர் உதவியும் வேணும். கெளசிக்குக்கு என்னாச்சின்னு பாருங்க.’’

“சரிங்க சார்.’’

போன் பேசி முடித்த அடுத்த விநாடியே மீண்டும் அடித்தது. பார்த்தான். கெளசிக்.

“ஹலோ கெளசிக்... எங்க இருக்கிங்க?’’

“மாட்டிக்கிட்டேன் சார். உயிர் மட்டும்தான் மிச்சம் இருக்கு’’ என்று அவன் ரகசிய குரலில் பேசியதை உன்னிப்பாகக் கவனித்துதான் புரிந்துகொள்ள முடிந்தது.

“எங்க இருக்கிங்க?’’

“பென்சில் ஃபேக்டரி குடோன்ல. என் போன் மெமரி கார்டுல...’’

“இன்னுமாடா ஒண்ணுக்குப் போற? வாடா வெளில’’ என்று ஜெயபாலின் அதட்டும் குரல் கேட்டது.

மேற்கொண்டு கெளசிக் எதுவும் பேசவில்லை. ஆனால், காலைத் துண்டிக்கவில்லை என்பது அங்கு கதவை மூடும் சத்தம், நடக்கும் சத்தம் இவற்றை வைத்து தெரிந்துகொண்டான் உதயகுமார். கெளசிக்கின் சூழல் தெளிவாகப் புரிந்தது.

வெந்து தணிந்தது காடு - 25 - பட்டுக்கோட்டை பிரபாகர்

மேற்கொண்டு அங்கு நிகழ்வதை பதிவு செய்தபடி கவனித்தான்.

“ம்.. இப்ப சொல்டா மிச்சத்தை. சீக்கிரம் சொல்லு’’ – இது ஜெயபாலின் குரல்.

“பயமா இருக்கு சார். கிட்டத்தட்ட உயிர் போற அளவுக்கு இப்படி அடிச்ச நீங்க என்னைக் கொன்னுட மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?’’- இது கெளசிக்கின் குரல்.

உதயகுமாருக்கு பதறியது.

‘தனக்கு அங்கே நிகழ்ந்ததைத் தெரிவிக்கத்தான் கெளசிக் இப்படிப் பேசுகிறான். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? கெளசிக் ஆபத்தில் இருக்கிறான். எங்கே இருக்கிறான்? தெரியும். யார் மிரட்டுவது? தெரியும்.

இப்போது உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் புறப்பட்டாலும் சரி... இல்லை... நானே அதிவேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்றாலும் சரி... இங்கிருந்து ஜெயபாலின் பென்சில் ஃபேக்டரிக்குச் செல்ல குறைந்தது அரை மணி நேரமாகும்.

அதற்குள் விபரீதமாக எதுவும் நடந்துவிடக் கூடாதே...’

அங்கே நிகழும் உரையாடல் தொடர்ந்தது.

“முட்டாளாடா நீ? எல்லாத்தையும் சொல்லு... உன்னை ஆஸ்பத்திரில சேர்த்துக் காப்பாத்தறேன்னு எத்தனை தடவை சொல்றது? அந்த உதயகுமார் காசு தந்ததாலதான் என்னை வேவு பாத்தேன்னு சொல்ற. அப்படி என்ன வேவு பாத்தே?’’

“நீங்க உங்க பையனோட போன்ல ரகசியமா பேசினதை உங்க பெட்ரூம்ல நான் ஒளிச்சி வெச்சிருந்த ஒரு கருவி மூலமா ஒட்டுக் கேட்டுட்டேன். அதை ஒரு பென் டிரைவ்ல சேமிச்சிட்டேன்.’’

“என்ன கேட்டே?’’

“உதயகுமாரை கொலை செய்ய ஏற்பாடு செஞ்சிருக்கிறதைப் பத்தி பேசுனிங்க.’’

“வேற?’’

“அப்பறம்... ஹைதராபாத்லேருந்து தங்கம் இங்கே வரப்போறதைப் பத்திப் பேசுனிங்க.’’

“கம்னாட்டி நாயே! அந்தப் பென் டிரைவ் எங்கடா?’’

“அதை உதயகுமார்கிட்ட சேர்த்துட்டேன்.’’

“டேய்! நீ பொய் சொல்றே! நீ ஃபேக்டரியை விட்டு வெளில போறதுக்கு முன்னாடி உன்னை மடக்கியாச்சே... எப்படி கொடுத்திருக்க முடியும்?’’

“போன்ல தகவல் சொன்னதும் உதயகுமார் நான் அனுப்பற ஆள்கிட்ட ஒப்படைச்சிடுன்னு சொன்னாரு. அவர் சொன்ன ஆள்கிட்ட ஒப்படைச்சிட்டேன்.’’

கெளசிக் அழகாக ஒரு திரைக்கதை

அமைத்து நாடகமாடுவதை உதயகுமார் புரிந்து கொண்டான்.

“யாரவன்? உதயகுமாரோட நோக்கமென்ன?’’

“சொன்னா அதிர்ச்சியடைஞ்சிடுவிங்க சார். உதயகுமாருக்கு உங்களை அரசாங்கத்துக் கிட்ட மாட்டி வைக்கணும்னு நோக்கம் இல்ல... அவரோட பிளானே வேற! இப்ப அவர் கையில இருக்கற ஆதாரத்தை வெச்சிக்கிட்டு உங்களை மிரட்டி ஒரு பெரிய தொகை வாங்கறதுதான் திட்டம்.’’

“சீச்சீ! அவன் நேர்மையான ஆளு!’’

“அந்தப் பணம் அவருக்காக இல்ல சார். அதை வெச்சு குறிஞ்சிக்காடு ஜனங்களுக்கு பலவிதமான நல்ல திட்டங்களை செஞ்சு கொடுக்கறதுக்காக.’’

“இதை நம்ப முடியுது. இந்த பாண்டிக்கு ஓட்டுப் போடறதுக்காக அந்த ஊர்க்காரனுங் களுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்தேன். அந்த ஊருக்கு ரோடு வர்றதுக்கு அந்தப் பணத்துல கொஞ்சம் கொடுத்தா... கலெக்டர் கிட்ட சொல்லி ரோடு கொண்டுவர்றேன்னு சொல்லி அந்த ஜனங்க மனசை மாத்தி பாண்டியை தோக்கடிச்சிட்டான். ஆக...

நீ ஒப்படைச்ச அந்த ஆதாரத்தை வெச்சுக்கிட்டு அவன் போலீஸ்கிட்ட போகப் போறதில்லை தானே?’’

“நிச்சயம் போக மாட்டார்.’’

“சரி... உன் உசுரு அவனுக்கு முக்கியம்னா அவங்கிட்ட இருக்கற அந்தப் பென் டிரைவை எங்கிட்ட ஒப்படைச்சிட்டு உன்னை மீட்டுக்கட்டும்.’’

இப்போது உதயகுமார் என்ன செய்ய வேண்டும் என்பதை கெளசிக் மறைமுகமாக உணர்த்திவிட்டதாலும்... கெளசிக்கின் உயிருக்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை என்பது புரிந்ததாலும் போனை கட் செய்து விட்டு, கலெக்டர் பானுமதி உள்ளே அழைத்த தால் அவசரமாக நுழைந்தான்.

“மேடம்... உங்ககிட்ட நான் பேசினதுக்கு அப்பறம் நிறைய டெவலப்மென்ட்ஸ்’’ என்று தொடங்கியவன் போன நிமிடம் தான் கேட்ட போன் உரையாடல் வரைக்கும் அத்தனையும் சொன்னான்.

“பிரில்லியன்ட்டா அந்த ஆபீசர் நடந்துகிட்டிருக்காரு. உடனே எஸ்.பியை வரச் சொல்றேன். லெட் அஸ் பிளான் டு டிரேப் ஹிம். அதுக்கப்பறம் நீங்க ஜெயபாலுக்கு போன் செஞ்சு அதே டிராக்ல பேசலாம்’’ என்றார் பானுமதி.

ஆனால்... அப்போது ஒலித்த உதயகுமாரின் போனில் ஜெயபால், “என்ன தம்பி... நல்லா இருக்கியா? ஒரு தகவல் சொல்லணும். நீ

வேவு பார்க்க அனுப்பிச்ச கெளசிக் செத்துட் டான்ப்பா’’ என்றார்.

- அடுத்த இதழில் நிறையும்...