Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 26 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

இரு தம்பி. ரொம்ப உணர்ச்சி வசப்படாதே... நிறைய ரத்தம் போயிடுச்சு. கொஞ்சம் உசுரு தான் ஒட்டிக்கிட்டிருக்கு. இப்ப அவன் என்ன நிலைமையில இருக்கான்னு நீ பாரு.

வெந்து தணிந்தது காடு - 26 - பட்டுக்கோட்டை பிரபாகர்

இரு தம்பி. ரொம்ப உணர்ச்சி வசப்படாதே... நிறைய ரத்தம் போயிடுச்சு. கொஞ்சம் உசுரு தான் ஒட்டிக்கிட்டிருக்கு. இப்ப அவன் என்ன நிலைமையில இருக்கான்னு நீ பாரு.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

ஒலித்த உதயகுமாரின் போனில் ஜெயபால், “என்ன தம்பி... நல்லா இருக்கியா? ஒரு தகவல் சொல்லணும். நீ வேவு பார்க்க அனுப்பிச்ச கெளசிக் செத்துட்டான்ப்பா’’ என்றார்.

மேற்கொண்டு உரையாடச் சொல்லி சைகை செய்த கலெக்டர் பானுமதி உள் தொலைபேசியிலும், மொபைல் போனிலும் தள்ளி நின்று சன்னக் குரலில் உத்தரவுகள் இடத் தொடங்கினார்.

“யாரு கெளசிக்? நீங்க என்ன சொல்றிங்க? எனக்கு எதுவும் புரியலை..’’

“போதும் தம்பி நீ நடிச்சது. எல்லாம் கக்கிட்டான். பத்தாயிரம் கொடுத்து நீதான் என்னை வேவு பார்க்கச் சொன்னேன்னு சொல்லிட்டான். உங்கிட்ட என் ரகசியம் இருக்கற பென் டிரைவ் இருக்குன்னும் தெரி யும்.’’

“அதெல்லாம் இருக்கட்டும். கெளசிக்குக்கு என்னாச்சு?’’

“யாரதுன்னு கேட்டே.. இப்ப எதுக்கு பதறுரே... டென் ஷனாகாதே. உன் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்னு பார்க்கத் தான் ஒரு ஷாக் கொடுத்தேன்.''

“அப்படின்னா..?’’

“கெளசிக் இப்ப உயிரோடதான் இருக்கான். தொடர்ந்து உயிரோட இருக்கணுமா வேணாமான்னு நீதான் முடிவு செய்யணும்.’’

“ப்ளீஸ்... அவன் அப்பாவி. நல்லவன். சின்னப்பையன். அவனை எதுவும் செஞ்சிடா திங்க.’’

“அந்த பென் டிரைவை நீ ஒப்படைச்சிட்டா நான் எதுவும் செய்ய மாட்டேன். கொடுக்கலைன்னாதான் விபரீதம்’’

“அது... வந்து...’’

“தெரியும்டா. அதை வெச்சி எங்கிட்ட பணம் கறக்கறதுதானே உன் பிளான்?’’

“அதையும் சொல்லித் தொலைச்சிட்டானா?’’

“ஒரு பைசா தர மாட்டேன். கெளசிக் உயிர் தான் விலை.’’

இவர்கள் இருவரின் பேச்சு இங்கே தொடர... கலெக்டரின் உத்தரவின்பேரில் எஸ்.பி தலைமையில் இருபது பேர் கொண்ட போலீஸ் படை ஒன்று ஐந்து வாகனங்களில் ஆயுதங்களுடன் ஜெயபாலின் பென்சில் ஃபேக்டரி நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

“ஜெயபால் சார்... கெளசிக் ஒண்ணும் என் கூடப் பொறந்தவன் இல்ல. ஒரு மனிதாபிமான அடிப்படையில தான் அவனை விட்ருங்கன்னு சொன்னேன். பென் டிரைவ்ல இருக்கற ரகசியம் அவன் உயிரைவிட மதிப்பானதுன்னு உங்களுக்குத் தெரியும். அதை நான் ஒப்படைக்க வேண்டிய இடத்துல ஒப்படைச்சா என்ன நடக்கும்னும் தெரியும்.’’

“இரு தம்பி. ரொம்ப உணர்ச்சி வசப்படாதே... நிறைய ரத்தம் போயிடுச்சு. கொஞ்சம் உசுரு தான் ஒட்டிக்கிட்டிருக்கு. இப்ப அவன் என்ன நிலைமையில இருக்கான்னு நீ பாரு. போட்டோ அனுப்பியிருக்கேன். பார்த்துட்டுப் பேசு.’’

வெந்து தணிந்தது காடு - 26 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வாட்ஸ்அப்பில் போட்டோ பார்த்த உதயகுமார் தடுமாறினான். ஆனாலும், தடுமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் அலட்சியம் காட்டிப் பேசினான்.

“சமூகத்துக்கு கிடைக்கப்போற நல்ல விஷயத்துக்காக ஒரு உயிரை பலி கொடுத்ததா நினைச்சுக்கறேன். தர்மத்துக்காக நடந்த போர்ல களபலின்னு உயிரைக் கொடுக் கலையா...’’

அந்தப் பக்கம் திமிராகப் பேசிய ஜெயபால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அவன் கெஞ்சுவான், கூத்தாடுவான் என்று மட்டுமே எதிர்பார்த்தார். பென் டிரைவை ஒப்படைப்பதைத் தவிர, அவனுக்கு வேறு வழியே இல்லை என்றுதான் நினைத்திருந்தார்.

கலெக்டர் பானுமதி ஒரு காகிதத்தில் ‘பேச்சை வளர்க்கவும். கெளசிக் உயிர் முக்கியம். ஒரு பொது இடத்துக்கு அவரை வரவழைக்க வேண்டும். அதற்குத் தகுந்தபடி சாமர்த்தியமாகப் பேசவும்’ என்று எழுதிக் காட்டினார். அவருக்கு ஆமோதிப்பாகத் தலையை அசைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தான் உதயகுமார்.

“என்ன சத்தத்தையே காணோம்?’’

“தம்பி... என் கண்ணு முன்னாடி ஒருத்தன் அரை உசுரோட கிடக்கறான்னு சொல்றேன். பொறுப்பில்லாமப் பேசறியே?’’ என்றார் ஜெயபால் வெறுப்பாக.

“ஒரு தனி உசுரைவிடவும் ஒரு ஊர்ல இருக்கற மொத்த உசுரும் முக்கியம்னு ரொம்ப அதிகமான பொறுப்போட பேசறேன். நாடு நல்லா இருக்கணும்னு ராணுவ வீரர்கள் உயிரை விடற மாதிரி... காடு நல்லா இருக் கணும்னு கெளசிக் உயிரை விடறான்னு நினைச்சிக்கறேன்.’’

“அடப்பாவி...’’

“அப்பறம் இன்னொரு விஷயம்... இப்ப கொலை செய்வேன்னு மிரட்டினிங்க பாருங்க... இந்த நம்ம உரையாடலும் பதிவு செஞ்சிட்டுதான் இருக்கேன். இப்ப நான் என்ன செய்யணும்னு நீங்கதான் சொல்லணும் மிஸ்டர் ஜெயபால்.’’

“இத பாருடா... சமூகம், சுரைக்கான்னு பேசறதை நிறுத்து. என்னைக் காட்டிக் கொடுக்கணும்னு நினைச்சா உன் உசுரு உன்னுதில்ல... ஞாபகம் வெச்சிக்க.’’

“டேய்... பொறுக்கி! மிஸ்டர் போட்டு எவ்வளவு மரியாதையா பேசிட்டிருந்தேன். நீயே கெடுத்துக்கிறியேடா... இனிமே உனக்கு மரியாதை கிடையாதுடா. டேய்... லூசு... என் உயிரைப் பத்திக் கவலைப்பட்டிருந்தா உன்னை மாதிரி விஷமமான ஆளை பகைச்சுக் கிட்டிருக்கவே மாட்டேன். உன்னை மாட்டி விட்டா கொஞ்ச நாள்ல நீ வெளில வந்துடுவே. உன் செல்வாக்கு தெரியும்.”

“புரியுதில்ல... பின்ன எதுக்கு சவடால் பேச்சு?’’

“ஆனா... இப்ப நான் சொல்ற நிபந்தனைக்கு நீ சம்மதிக்கலைன்னா... வேற வழி இல்லாம ஆதாரத்தை அரசாங்கத்துக்கிட்ட நான் ஒப்படைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை உன்னால விலைக்கு வாங்கவே முடியாத என்னை மாதிரி நேர்மையான அதிகாரிங்க கிட்ட இந்த வழக்கு போச்சுன்னா அப்போ உன் சொத்து, இமேஜ் எல்லாமே டோட்டல் டேமேஜ் ஆகிடும். உன்னை தண்டிச்சே யாகணும்னு வைராக்கியத்தோட இருக்கற ஒரு போலீஸ் அதிகாரி உன்னை என்கவுன்டர் கூட செய்யலாம். உன் உயிருக்கும் உத்தரவாத மில்லை. எப்படி வசதி?’’

ஜெயபால் வியர்த்துப்போனார். அவன் சொன்னபடியெல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாதே...

அதிக நேரம் யோசிக்கவில்லை அவர்.

“என் நேரம்டா. என்ன உன் நிபந்தனை?’’

“உங்கிட்ட என்ன சம்பந்தமா பேச முடியும்? பணம்தான். குறிஞ்சிக்காடு ஜனங்க உயிரைப் பணயமா வெச்சு உனக்கும் உன் புள்ளைக்கும் கோடிக்கணக்குல சம்பாதிச்சுக் கொடுத் திருக்காங்க. அதுல கொஞ்சூண்டு கேக்கறேன்.’’

“எவ்வளவு வேணும்?’’

“ஜஸ்ட் அஞ்சு கோடி ரூபாய். அது உனக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அப்புறம்... கெளசிக்கை உயிரோட ஒப்படைக்கணும். இது ரெண்டும் நடந்தா பென் டிரைவை திருப்பி ஒப்படைக்கிறேன்.’’

“வார்த்தை மாற மாட்டியே...’’

“அது உன் பழக்கம்.’’

“என் பென்சில் ஃபேக்டரி குடோனுக்கு வந்துடு.’’

“எதுக்கு? கெளசிக் மாதிரி உதை வாங்கறதுக்கா? இடம் நான் சொல்றேன்’’ என்றபடி கலெக்டரைப் பார்த்தான்.

அவர் ‘ஊருக்கு வெளியே தனிமையான இடம் சொல்லவும்’ என்று எழுதிக்காட்டினார்.

“எங்க வரச் சொல்றே?’’

“குயிலருவி பக்கத்துல ஒரு காட்டுப் பிரதேசம் ஆரம்பிக்குமே... அங்க வந்துடு.’’

“நம்பி வர்றேன். எதாச்சும் கோல்மால் நடந்துச் சுன்னா... கள்ளக்குறிச்சில நீ கட்டிக்கப் போற பொண்ணை நாறடிச்சிடுவானுங்க நம்ம பசங்க.’’

வெந்து தணிந்தது காடு - 26 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“பேங்க் மாதிரி எல்லா இடத்துலயும் கிளை வெச்சிருக்கியா?’’

“காசுக்கு எதையும் செய்ற கூட்டம் எங்கயும் இருக்கு. தம்பி... அதை மனசுல வெச்சுக்கிட்டு பென் டிரைவோட வா.''

``பணம், கெளசிக்! நீ மறந்துடாத. அங்க வந்துட்டு போன் செய்யி.’’

“தனியாதானே வருவே?’’

“உன்னை மாதிரி எனக்கு ஆள் படை இருக்கா? ஆனா... டிபார்ட்மென்ட் குடுத்துருக்கற துப்பாக்கி வெச்சிருக்கேன். ஒளிஞ்சிருப்பேன். நீ தனியாதான் வர்றியான்னு செக் பண்ணிட்டுதான் உன் முன்னாடி வந்து பேசுவேன்.''

“தம்பி... லைசென்ஸ் இல்லாம நாலு விதமா நான் வெச்சிருக்கேன். புல்லட்டுக்கு நீ கணக்கு காட்டணும். எனக்கு அந்த அவசியமில்ல. நானும் ஆயுதத்தோடதான் வருவேன்னு உனக்குத் தெரியணும்ல...’’

“சரி... உடனே புறப்பட்டு வா.’’

“அஞ்சு கோடி ரெடி செய்ய வேணாமா... ஒரு மணி நேரமாகும்.’’

“சரி... வா... முன்னாடி போயி வெயிட் பண்றேன்’’ தொடர்பைத் துண்டித்தான் உதயகுமார்.

கலெக்டர் பானுமதி எஸ்.பி-யிடம் பேசினார்.

“உங்க டீம் பென்சில் ஃபேக்டரிக்குப் போக வேண்டாம். குயிலருவிக்குப் பக்கத்துல இருக்கற ஃபாரஸ்ட் ஏரியாவுல மொத்த டீமும் பதுங்கி யிருக்கணும். வெப்பன்சோட. வாகனமெல்லாம் பார்வையில படாத தூரத்துல மறைவா நிறுத்தி டுங்க. அங்க வந்ததும் பேசுங்க. ஃபர்தர் இன்ஸ்ட்ரக் ஷன்ஸுக்கு வெய்ட் பண்ணுங்க.’’

“மேடம்... அவனும் துப்பாக்கியோட வர்றான். அவன் ஒரு குள்ள நரி. அவன் வார்த்தையை நம்ப முடியாது. கெளசிக்கை ஒப்படைச்சிடுவான்னுதான் நினைக்கிறேன். ஒரே ஒரு குழப்பம் இருக்கு. கெளசிக் போன் இன்னும் அவன்ட்டயே இருக்கான்னு தெரியலை. அதுலதான் ஆதாரம் இருக்கு. வெத்து பென் டிரைவ் கொடுத்து ஏமாத்த முடியு மான்னு தெரியல. லேப்டாப்போடதான் வருவான். செக் செய்வான். என்ன செய்யப் போறோம்?’’

“அதெல்லாம் போய்ட்டேப் பேசலாம். புறப்படுங்க உதயகுமார்.’’

“நீங்க எதுக்கு மேடம்? ஹைலி ரிஸ்க்கான மேட்டர்.’’

“அந்த ரிஸ்க் ஃபேக்டர் எல்லாருக்கும் தான் இருக்கு. சும்மா உத்தரவுகள் கொடுத் துட்டு ஏசி ரூம்லயே உக்காந்திருக்க என்னால முடியாது. லெட் அஸ் ஃபேஸ் இட். வாங்க.’’ என்றார் பானுமதி.

தீவிரமாக யோசித்து திட்டத்தை விவாதித்தபடி பயணித்தார்கள்.

காரில் வந்துகொண்டிருந்தார் ஜெயபால். அருகில் துணைக்கு பாண்டி. அவனிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த துப்பாக்கி இருந்தது. பின் சீட்டில் கிட்டத் தட்ட மயக்கத்தில் சாய்ந்திருந்தான் கெளசிக். அவன் வயிற்றில் மறைவாகத் தன் செல்போனை செருகியிருந்தான்.

“பாண்டி... பென் டிரைவ் வாங்கி நான் செக் செய்வேன். அது சரியா இருந்தாலும் சரி... எதாச்சும் ட்ரிக் இருந்தாலும் சரி... கண் ஜாடை காட்டுவேன். உதயகுமார், இவன் ரெண்டு பேரையும் சுட்ரு. என்ன பிரச்னை ஆனாலும் பார்த்துக்கறேன். இதை சரியா செஞ்சிட்டின்னா... அவனுக்குக் கொடுக் கறதுக்காக எடுத்துட்டு வந்திருக்கற அஞ்சு கோடியும் உனக்குதான்’’ என்றார் ரகசியக் குரலில்.

வலிகளைப் பொறுத்துக்கொண்டு சரிந் திருந்த கெளசிக்குக்கு ஜெயபாலின் குரல் விட்டு விட்டு சன்னமாகத்தான் கேட்டது. ஆனாலும் புரிந்தது. திக்கென்றது.

உதயகுமார் மனதில் என்ன திட்டமிருக் கிறது என்று தெரியவில்லையே... பொய்யாக சொன்ன பென் டிரைவ் மேட்டரை எப்படி அவர் சமாளிக்கப் போகிறார்?

காட்டில் பாதுகாப்பான மறைவான பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் சகல தொடர்பு கருவிகள், சிஸ்டத்தில் இளைஞர்களுடன் கலெக்டர் பானுமதியும் உதயகுமாரும் எஸ்.பி-யும் காத்திருந்தார்கள்.

தூரத்தில் ஜெயபாலின் கார் வருவதை ஒரு மரத்திலிருந்து வயர்லெஸ் கேமரா மூலம் ஒரு அதிகாரி காட்ட... அதை சிஸ்டத்தின் திரைகளில் பார்த்தார்கள். ஒரு பறவை வடிவத்திலிருந்த குட்டி டிரோன் கேமரா ஓசையின்றி புறப்பட்டது.

அது அந்தக் காரையும், காரில் இருப்பவர் களையும் நெருக்கத்தில் சென்று காட்டியது.

“அவரேதான் ஓட்டிட்டு வர்றார். பக்கத்துல இருக்கறவன் பேரு பாண்டி. எதுவும் செய் வான். என்னைக் கொலை செய்ய அவனை தான் துப்பாக்கியோட அனுப்பிச்சார். ஸோ... அவன்கிட்டயும் வெப்பன் இருக்கு’’ என்றான் உதயகுமார்.

“பின் சீட்ல கெளசிக். கண்டிஷன் மோசமா தான் தெரியுது. மயக்கமா, கான்ஷியஸ் இருக்கான்னு தெரியல. ஆம்புலன்ஸ் ரெடியா இருக்குதானே?’’ என்றார் கலெக்டர்.

வெந்து தணிந்தது காடு - 26 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“யெஸ் மேடம். அவன் அனுப்பிச்ச போட்டோ பார்த்து சர்ஜரி தேவைப்படும்னு உணர்ந்து ஆம்புலன்ஸ்லயே சர்ஜரி செய்ய ஒரு டாக்டர்ஸ் டீம் ரெடியா இருக்கு மேடம்’’ என்றார் எஸ்.பி.

“அந்த ட்ரோன் பேக் சீட் கண்ணாடி பக்கமா இன்னும் கொஞ்சம் நெருக்கமா போக முடியுமா?’’ என்றான் உதயகுமார்.

அதன் ஆபரேட்டர் உடனே செயல்பட... குட்டிப் பறவை காரின் மிக அருகில் பறந்து போனது. அந்த விஷுவல் ஃபுட்டேஜில் கெளசிக்கை ஃபிரேம் பை ஃபிரேம் ஜூம் செய்து பார்த்தான் உதயகுமார். அவன் முகம் மலர்ந்தது.

“கெளசிக் இடுப்புல செல்போனை ரகசியமா வெச்சிருக்கறது புரியுது. இங்க பாருங்க உப்பலா செல்போன் சைஸ்ல... அது போனேதான். அதுலதான் எவிடென்ஸ் இருக்கு’’ என்றான்.

கார் வந்து நின்றது. ஜெயபால் இறங்கினார். அவர் கையில் ஒரு லேப்டாப். தவிர, ஒரு பெரிய பேக். பாண்டியும் இறங்கினான். நாலா பக்கமும் பார்த்தபடி இருவரும் நிற்க...

கலெக்டர், உதயகுமாரின் கையைக் குலுக்கினார்.

“ஆல் தி பெஸ்ட்’’ என்றார். ஒரு சின்ன பிரீஃப்கேஸுடன் உதயகுமார் கூடாரத்தை விட்டு வெளியேறி கொஞ்ச தூரம் நடந்து காரை நோக்கி வந்தான்.

அருகில் வந்ததும் கையை நீட்டினார் ஜெயபால்.

“கெளசிக்’’ என்றான்.

“அவனைக் கீழ எறக்குடா.’’

பாண்டி கைத்தாங்கலாக கெளசிக்கை இறக்கி தன் மீது சாய்த்து நிறுத்தினான்.

“பணம்...’’

பேக் ஜிப்பைத் திறந்து உள்ளே இருந்த ஐந்நூறு ரூபாய்க் கட்டுக்களைக் காட்டினார்.

“மொதல்ல பென் டிரைவ். இதுக்கு எதுக்கு சூட்கேஸ்?’’

பிரீஃப்கேஸை நீட்டினான்.

“உள்ளே இருக்கு. அதோட நீ கேக்காத உனக்குத் தெரியாம உன் ஆபீஸ்ல திருடப்பட்ட சில ஃபைல் களும் இருக்கு. தாராளமா செக் பண்ணிக்கலாம்.’’

பிரீஃப்கேஸை கார் மீது வைத்துத் திறந்த ஜெயபால் அதிர்ந்தார். உள்ளே டெட்டனேட்டர் களுடன் இணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஐஈடி பாம்!

திரும்பிப் பார்க்க... உதயகுமார் கையில் ஒரு குட்டி ரிமோட் கன்ட்ரோல்.

“அது வெடிச்சா நாம் எல்லாருமே காலி. ரெண்டு பேரும் உங்க துப்பாக்கியைக் கீழ போட்டா மேற்கொண்டு பேசலாம். ம்... சீக்கிரம். என் உயிரைப் பத்தி கவலைப்பட மாட்டேன்னு உனக்குத் தெரியும் ஜெயபால்.’’

நடுங்கிப்போன ஜெயபால் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியைக் கீழே போடுவதற்கு முன்னால் பாண்டி போட்டுவிட்டான்.

அடுத்த விநாடி துப்பாக்கிகளுடன் இருபது பேர் கொண்ட போலீஸ் படை எல்லா திசை களிலிருந்தும் ஜெயபால், பாண்டியைச் சூழ்ந்தது.

குறிஞ்சிக்காடு மலைக்கிராமத்துக்கு சாலை போடும் திட்டத்தை அந்த ஊர் மக்கள் முன்னிலையில் தொடங்கி வைத்துப் பேசினார் கலெக்டர் பானுமதி.

“இந்தத் திட்டத்துக்கு பணம் குறையறது தெரிஞ்சு நீங்க எல்லாரும் சேர்ந்து பணம் கொடுக்க முன்வந்ததை நான் சி.எம் கிட்ட சொன்னேன். குறையும் பணத்தையும் அரசாங்கமே பார்த்துக் கும்னு அறிவிக்கச் சொல்லிட்டார். இனிமே மரம் வெட்ட ஆந்திரா போயி உயிரைப் பறிகொடுக்க வேணாம். உங்களுக்கு வருமானம் ஏற்படுத்த இந்தப் பகுதியில ஃப்ரூட் ஜாம் தயாரிக்கிற தொழிற்சாலையும், ஃபர்னிச்சர் தயாரிக் கிற தொழிற்சாலையும் துவங்கப் போறோம். பென்சில்காரர் ஜெயபால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத்ல அவர் பையனையும் கைது செஞ்சாங்க. இவ்வளவு பெரிய ஆபரேஷனுக்கு தன் உயிரைப் பணயம் வெச்சு செயல்பட்ட டெப்டி ரேஞ்சர் உதயகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம்ம சிஸ்டத்துல நேர்மையான அதிகாரிகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க ஒரு புள்ளியில இணைஞ்சா போதும். இந்த மாதிரி நிறைய சாதிக்க லாம்.’’

மக்கள் விடாமல் கைதட்ட... நெகிழ்ச்சி யுடன் கைகூப்பினான் உதயகுமார்.

தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி யைப் பார்த்துக்கொண்டிருந்த அமுதா வின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் ததும்ப... அவள் தோளை அணைத்துக்கொண்ட தமிழ்மணி, ``மாப்பிள்ளையை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கும்மா’’ என்றார்.

அமுதா, உதயகுமாருக்கு வாட்ஸ் அப்பில் குபுகுபுவென்று பொங்கும் ஆட்டீன்களையும்... முத்தம் ஏந்திய உதடுகளையும் அனுப்பினாள்.

- நிறைவடைந்தது