Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 4 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

ஒரு பத்து தடவையாவது இருக்கும் தம்பி. இங்க ஒரு ஏரியால சிக்னல் கிடைக்கும். ஒரு ஏரியால சிக்னல் கிடைக்காது. அது சாருக்கும் தெரியுமே.

வெந்து தணிந்தது காடு - 4 - பட்டுக்கோட்டை பிரபாகர்

ஒரு பத்து தடவையாவது இருக்கும் தம்பி. இங்க ஒரு ஏரியால சிக்னல் கிடைக்கும். ஒரு ஏரியால சிக்னல் கிடைக்காது. அது சாருக்கும் தெரியுமே.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

“சீனியர் ஆபீசர் பேசிட்டிருக்கேன்... ஒண்ணும் சொல்லாம நீ பாட்டுக்கு பெரிய புடுங்கி மாதிரி நகர்ந்து போனா என்னய்யா அர்த்தம்?’’ என்று அவன் தோளில் ருத்ரபாண்டியன் கைவைக்க... ஆத்திரம் கொப்புளிக்கத் திரும்பினான் உதயகுமார்.

``மொதல்ல கைய எடுங்க சார்! இந்த நிமிஷம் வரைக்கும் சார்ன்னுதான் சொல்றேன். அந்த மரியாதையைக் கெடுத்துக்காதிங்க’’ - அழுத்தமாக ருத்ர பாண்டியனைப் பார்த்து உதயகுமார் எச்சரிக்கையாக சொல்ல...

அவன் பார்வையில் இருந்த தீவிரத்தில் சற்றே தடுமாறிப்போன ருத்ரபாண்டியன், அவன் தோளிலிருந்து கையை எடுத்து விட்டார்.

``கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லிட்டு அப்பறம் உன் முறைப்பைக் காட்டுப்பா உதயகுமார்.’’

``அதிகாரியா நியாயமான கேள்வியைக் கேட்டா அடக்கமா பதில் வரும். அதிகாரமா கேட்டா இப்படித்தான் பதில் வரும்.’’

``எப்படி பேசணும்னு நீ எனக்குக் கத்துதர வேண்டிய அவசியம் எனக்கில்லை. நம்ம சரகத்துக்கான உயரதிகாரி நான் இருக்கறப்போ நீ எப்படி தன்னிச்சையா முடிவெடுக் கலாம்... இதுக்கு சரியான பதிலைச் சொல்லு!’’

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

``அப்ப நீங்க நம்ம ஆபீசுல இல்லையே. நீங்க இல்லாதப்போ முடிவெடுக்கற அதிகாரம் எனக்கு இருக்கு சார். அந்த சட்ட நடைமுறை உங்களுக்கும் தெரியும்னு நினைக் கிறேன்.’’

``எல்லா வெளக்கெண்ணெயும் எங்களுக்குத் தெரியும். ஆனா... என்னைக் கேக்காம சொந்தமா முடிவெடுக்கச் சொல்லலை. ஆடுங் களைப் பறிமுதல் செஞ்சது நான். அதை ஒப்படைச்சிடட்டுமான்னு என்னைக் கேக்க வேணாமா?”

அவருக்கு பதில் சொல்லாமல், ``வேலண்ணே...’’ என்று அழைக்க... அசுவாரஸ்யமாக சுண்டு விரலால் காது குடைந்துகொண்டிருந்த வேலுச்சாமி, ‘‘என்னங்க தம்பி?’’ என்றார்.

``எத்தனை தடவை நீங்களும் நானும் சாரோட போன்ல பேச முயற்சி செஞ்சோம்னு சொல்லுங்க’’ என்ற உதயகுமார் ரகசியமாக கண்ணடிக்க...

``ஒரு பத்து தடவையாவது இருக்கும் தம்பி. இங்க ஒரு ஏரியால சிக்னல் கிடைக்கும். ஒரு ஏரியால சிக்னல் கிடைக்காது. அது சாருக்கும் தெரியுமே...’’

``நான்தான் ஆபீசுக்கு வந்துட்டி ருக்கேன்னு சொன்னேன்ல... எனக்காக வெயிட் செஞ்சிருக்கணும்.”

வெந்து தணிந்தது காடு - 4 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``நாள் பூரா நான் வெயிட் பண்ணுவேன் சார். வந்தவங்க வெயிட் பண்ணுவாங்களா? நேரம் போகப்போக ஆவேசம் கூடிக்கிட்டே இருந்துச்சு... எப்ப எதுக்காக வெயிட் செய்யணும்னு இருக்கில்ல?’’

``நல்லா பதிலுக்கு பதில் பேசக் கத்துட்டிருக்கே. என்ன சமாதானம் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு!’’

``அப்படியா... நான் செஞ்சது தப்புன்னா மேலதிகாரிக்கு தாராளமா ரிப்போர்ட் அனுப்பிக்கலாம்.’’

``அனுப்ப மாட்டேன்னு நெனச்சியா?’’

``அனுப்புங்கன்னுதானே சொல்றேன். அவங்க கூட்டமா சேர்ந்து டி.எஃப்.ஓ ஆபீசுக்கு அனுப்பி வைக்கச்சொல்லி எங்கிட்ட ஒரு மனு குடுத்தாங்க. அதுக்கு முக்கியத்துவம் குடுக்க வேணாம்னு நெனைச்சேன். அதை நானும் அனுப்பி வைக்க வேண்டியதுதான்.’’

ருத்ரபாண்டியனுக்கு முகம் வெளுத்துப்போனது. வேலுச்சாமியும் சுந்தரமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ரகசியமாகச் சிரித்துக் கொண்டார்கள்.

``மனுவா? என்ன... என்ன மனு அது?” தடுமாறினார் ருத்ரபாண்டியன்.

``அதை எதுக்கு சார் நான் உங்களுக்கு சொல்லணும்?’’

ஆத்திரமாக வேலுச்சாமி பக்கம் திரும்பினார் ருத்ரபாண்டியன்.

``அவங்க மனு குடுத்தப்ப நீயும் தானேய்யா பக்கத்துல இருந்தே?” என்றார் வேலுச்சாமியிடம்.

``ஆமாங்கய்யா’’

``என்ன மனு அது?’’

``அது... வந்துங்கய்யா...’’

``எதுக்குத் தயங்கறிங்க. அவங்க என்ன எழுதிக் குடுத்துருக்காங்களோ அதைத்தானே கேக்கறார்... சொல்லுங் கண்ணே...’’ என்றான் உதயகுமார்

``அது... சார்... நீங்க அராஜகமா, அதிகாரமா நடந்துக்கறிங்கன்னும் அசிங்க அசிங்கமா திட்றிங்கன்னும், நேத்து பட்டுப்பூச்சிகிட்ட அநாகரிகமா பேசுனவரைக்கும் குறிப்பிட்டு எழுதி இதுக்கெல்லாம் நியாயம் கிடைக்கற மாதிரி உங்களை வேற ஊருக்கு மாத்தணும்னு கோரிக்கை வெச்சு...’’

ருத்ரபாண்டியனுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன. அவர் வேலுச்சாமியிடம் கேள்வி கேட்கத் தொடங்கியதுமே அவரைக் கண்டு கொள்ளாமல் திரும்பி அங்கே செடிகளை குழிகளுக்குள் வைத்து மண் தள்ளிக்கொண்டிருந்தவனிடம், “இருப்பா... இன்னும் அரையடி ஆழம் தோண்டி அப்புறம் வையி... இந்தச் செடிக்கு ஆழம் அதிகமா இருந்தாதான் நல்லா வேர் பிடிக்கும்’’ என்று உத்தரவிட்டு தன் வேலையில் இறங்கிவிட்டான் உதயகுமார்.

``உதயகுமார்!’’ என்ற ருத்ரபாண்டியனின் அழைப்பில் இப்போது குழைவு சேர்ந்திருந்தது. ``வேலையப் பாக்க விடுங்க சார்.’’

“இனிமே இப்படி நடந்துக்காத. நான் உன் மேல எந்தப் புகாரும் கொடுக்கலை.’’

``நடக்க இருந்த ஒரு பெரிய கலவரத்த தடுத்து சுமுகமா பேசி பிரச்சினைய முடிச்சதை ஒரு புகார்னு அனுப்பினா யார் படிச்சாலும் சிரிப்பாங்க சார். கொடுக்கறதும் கொடுக்காததும் உங்க இஷ்டம்னு சொல்லிட்டனே.’’

``அதான் கொடுக்கலைன்னு சொல்லிட்டனே. அந்த மனுவைக் கிழிச்சிப் போட்ரலாம்.’’

``அது எப்படி சார்? அத்தனை பேரு மெனக்கெட்டு கையெழுத்தும் கைநாட்டும் வெச்சிக் கொடுத்துருக்காங்களே...’’

ருத்ர பாண்டியன் எரிச்சலை அடக்கிக்கொண்டார். மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாததால், “சரி... வேலையைப் பாரு. அப்பறம் பேசிக்கலாம்’’ என்றுவிட்டு சட்டென்று ஜீப்பில் ஏறி, ``ஏறுன்னு உனக்கு தனியா சொல்லணு மாய்யா?’’ என்று வேலுச்சாமியிடம் கடுப்படித்தார்.

வேலுச்சாமி ஏறிக்கொள்ள, ஜீப் புறப்பட்டுச் சென்றதும் சுந்தரம், உதயகுமாரின் கையைப் பிடித்துக் குலுக்கி, “பின்னிட்டிங்க சார். அவருக்கு பதிலடி குடுக்கறதுக்கு சரியான ஒரு ஆள் இல்லையேன்னு எத்தனை தடவை புலம்பியிருப்போம் தெரியுமா... செம தைரியம் சார் உங்களுக்கு’’ என்றான்.

``மேஜைக்குக் கீழ கைய நீட்றவன்தான் எல்லாருக்கும் பயப்படணும் சுந்தரம்.’’

``அந்த மனுவை என்ன சார் செய்யப் போறிங்க?’’

``அவங்க எங்க குடுத்தாங்க? வாயாலதான சொன்னாங்க” என்று சிரித்தான் உதயகுமார். அந்த சிரிப்பில் சுந்தரமும் இணைந்துகொண்டான்.

பள்ளம், மேடு என்று கரடுமுரடாக இருந்த, மக்கள் நடந்து நடந்தே உருவான சாலை என்று சொல்ல முடியாத அந்தச் சாலையில் உதயகுமாரின் பைக் குதித்துக் குதித்துச் சென்றது. ஒவ்வொரு குதியலுக்கும் பின்னால் அமர்ந்திருந்த சுந்தரம் எம்பிக் கொண்டிருந்தான்.

அதிகாலைத் தென்றல் தாலாட்டியது. வடிகட்டிய மென்மையான வெளிச்சம் சூழலுக்கு இதம் சேர்க்க... உதயகுமார் காதில் அணிந்திருந்த ஏர்டோப் வழியாக இளைய ராஜா `புத்தம் புது காலை, பொன்னிற வேளை’ என்று மேலும் சுகம் தூவினார்.

பைக்கின் அடுத்த குதியலில் ஏர்டோப் எகிறிப்போய் கீழே விழுந்துவிட... பைக்கை நிறுத்தி இறங்கித் தேடியெடுத்து கர்ச்சீப் போட்டுத் துடைத்தபடி, “என்ன சுந்தரம்... எவரெஸ்ட்லகூட ஈசியா ஏறிடலாம் போல ருக்கு? இவ்வளவு மோசமா இருக்கே ரோடு?’’ என்றான்.

“ரோடு எங்க சார் இருக்கு? பாதைன்னு சொல்லுங்க. பைக்குல போறதுக்கே அலுத்துக் கறிங்களே... இந்தப் பாதையிலதான் ஆறு கிலோமீட்டர் குறிஞ்சிக்காடு ஜனங்க பூராவும் நம்ம ஊருக்கு வந்து போயிட்டிருக்காங்க.’’

``நடந்தேவா?’’

“வேற எப்படி? ஒருத்தன் ரெண்டு பேரு பைக்கு வெச்சிருக்கான். பத்து பேரு சைக்கிள் வெச்சிருக்கான். மத்தபடி ஸ்கூல் புள்ளைங்க, பொண்ணுங்க, கிழடுங்க எல்லாம் நடந்தேதான் வர்றாங்க.”

``அவங்க ஊர்ல ஒரு வசதியும் இல்லையா?’’

``பீடி விக்கிற ஒரே ஒரு பொட்டிக் கடை மட்டும்தான் இருக்கு. அவனே நாலு கிளாஸ் வெச்சிக்கிட்டு டீயும் போட்டுக்குடுப்பான். மத்தபடி அரிசி பருப்புலேர்ந்து, காய்கறிலேர்ந்து, மேலுக்கு முடியலன்னாலும், தபாலாபீஸ்ல பென்ஷன் வாங்கணும்னாலும் நம்ம மருது காட்டூருக்குத்தான் சார் வந்தாகணும்.’’

மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்த உதய குமார், “குயிலருவிக்குப் போற வழிலதான குறிஞ்சிக்காடு? ஊருக்குள்ள போயிட்டுப் போயிடலாம்’’ என்றபடி ஓட்டத் தொடங் கினான்.

“நீங்க வர்றீங்கன்னு காடையனுக்கு போன் போட்டுச் சொல்லட்டுமாங்க சார்?’’

“எதுக்கு... நான் என்ன மந்திரியா?’’

``அதுக்கில்ல சார். ரேஞ்சர் சுத்துப்பட்டுல எந்த ஊருக்குப் போறதா இருந்தாலும் போன் பண்ணச் சொல்வாரு. கூடை கூடையா காட்ல பறிச்ச பழம், மிளகு, தேனு இதெல்லாம் குடுப்பானுங்க.”

``அந்தப் பழக்கமெல்லாம் அவரோட இருக்கட்டும். இவ்வளவும் வாங்கிக்கிட்டும் அந்த ஜனங்ககிட்ட ஏன்யா காண்டா இருக்காரு?’’

``இந்தப் பாதைதான் பிரச்னை. இதை சமப்படுத்தி ஒரு மண்ணு ரோடாவது போட்டுக் கொடுங்கன்னு பல வருஷமா போராடிட்டிருக்கானுங்க. நம்ம ஆபீஸ் வாசல்ல வந்து உண்ணாவிரதம், போராட்டம்னு அடிக்கடி உக்காந்துடுவானுங்க.”

“இதுக்கு கலெக்ட்டர் ஆபீஸ்லதானே போராடணும்?’’

``அதுல ஒரு சிக்கல் இருக்கு சார். இந்த ஆறு கிலோமீட்டர் பாதையில் நடுவுல ஒரு கிலோமீட்டர் நம்ம டிபார்ட்மென்ட்டுக்கு சொந்தமானதுங்க சார். அதுக்கு கிளியரன்ஸ் கொடுத்தாதான் மொத்தமா ரோடு போட முடியும்.’’

``மரத்தையும் மணலையும் கடத்தறதுக்கா ரோடு கேக்கறாங்க? ஜனங்களோட போக்கு வரத்து அவங்க அடிப்படையான உரிமைப்பா. நம்ம டிபார்ட்மென்ட் ஏன் கிளியரன்ஸ் குடுக்க மாட்டேங்குது?’’

வெந்து தணிந்தது காடு - 4 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``அதெல்லாம் பெரிய சமாசாரம். நமக்கு என்னங்க புரியுது?’’

கொஞ்ச நேரத்தில் குறிஞ்சிக்காடு வந்துவிட... ஊர் பெயருக்கு ஒரு பெயர்ப்பலகைகூட இல்லை. ஒரு தெரு போன்ற அமைப்பும் இல்லை. கோலிகுண்டுகளைத் தரையில் கொட்டினதுபோல எல்லாத் திசைகளிலும் தூரதூரமாக சின்னச் சின்ன குடிசைகள் சிதறிக் கிடந்தன. மரத்தடி நிழல்களிலும், சிமென்ட் தண்ணீர் தொட்டிக்கு அடியிலும் இருந்த ஒரே டீக்கடையின் வாசலிலும் குந்தி அமர்ந்திருந்த சொற்பமான மனிதர்கள் பைக்கின் சத்தத்தில் திரண்டு அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவனாக இருந்த பட்டுப்பூச்சியின் அப்பா சின்ராசு தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கையில் வைத்துக்கொண்டு, “அய்யா... என்னங்கய்யா இங்க?” என்றான்.

``குயிலருவிக்குப் போறேன். வழில உங்க ஊரைப் பாக்கலாம்னு நினைச்சேன்.”

``என்னங்க இருக்கு, எங்க ஊர்ல பாக்கறதுக்கு?’’

``இந்த ஊர்ல மொத்தம் எத்தனை குடும்பம் இருக்கு?’’

``அது அம்பது அறுபது குடும்பம் இருக்குதுங்க. தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டுக் கேக்க மட்டும் வந்துடறாங்க. அதைச் செய்றோம், இதைச் செய்றோம்னுட்டு அப்பறம் எதுவுமே செய்றதில்லங்க.’’

மின்சாரக் கம்பத்தைப் பார்த்த உதயகுமார், “கரன்ட் குடுத்துருக்காங்களே!’’ என்றான்.

“சும்மாவா குடுத்தாங்க? மூணு வருஷம் கரை வேட்டி கட்டுன அத்தனை பேத்துக்கிட்டயும் மகஜர் கொடுத்து, ஆபீசு ஆபீசா அலைஞ்சு திரிஞ்சுதான் கொடுத்தாங்க.’’

``தண்ணித் தொட்டி?’’

``அது நாங்களே ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு கட்டிக்கிட்டதுங்க. உங்க மருது காட்டூருக்கு வரணுமின்னா ஆறு கிலோமீட்டருக்கு நடந்து தாங்க வரணும். பாதையோட லட்சணத்த நீங்க வர்றப்ப பாத்திருப்பீங்களே... ஆத்திரம் அவசரம்னாலும் சாவ வேண்டியதுதான். புள்ளத்தாச்சி பொம் பளைங்களுக்கு வலியெடுத்தா கம்புல தொட்டில் கட்டித்தாங்க தூக்கிட்டு ஓடுவோம். பல தடவை வழிலயே பிரசவமாயிடுமுங்க. அதுல சிக்கலாகி ரத்தம் போயி ஒண்ணு ரெண்டு உசுரு செத்தும் போயிருக்குதுங்க. அதனால எங்கூரு பசங்களுக்கு எவனும் பொண்ணு குடுக்க மாட்டேன்றான்.’’

சின்ராசு என்னவோ யதார்த்தமாக ஒரு கதை சொல்வதைப்போலத்தான் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால், உதயகுமாருக்கு இதயத்தில் கசிந்தது. தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கின. சாலை போடுவதில் என்ன பிரச்னை என்று ஆழமாக ஆராய்ந்து அதை, சரி செய்யாமல் இந்தச் சரகத்தை விட்டுப்போவதில்லை என்று மனதுக்குள் ஒரு அழுத்த மான எண்ணத்தின் விதை விழுந்தது.

``அய்யா... நீங்க சொல்லுங்க... ஏன் ரோடு போட அனுமதி கிடைக்க மாட்டேங்குது உங்களுக்கு?’’

“போட விட்ருவாரா பென்சில்காரரு? யாரு என்ன முயற்சி செஞ்சாலும் பெரிய பெரிய எடத்துக்குப் போயி முட்டுக்கட்டை போட்டுட்டுதான் மறு வேலை பார்ப்பாரு.’’

``பென்சில்காரருன்ன?’’

``நம்ம ஊர்ல பென்சில் ஃபேக்ட்ரி வெச்சிருக்கற ஜெயபால் அய்யாவைத் தான் இங்க பென்சில்காரர்னு சொல்லுவாங்க” என்றான் வாட்சர் சுந்தரம்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism