என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 5 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
News
வெந்து தணிந்தது காடு

. ஊரு கள்ளக்குறிச்சி. அப்பா பிரின்ட்டிங் பிரஸ் வெச்சிருக்காரு. அம்மா இல்ல. ரெண்டு பொண்ணுங்க. இவ ரெண்டாவது.

உதய குமார் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி இரண்டு கைகளா லும் பிசைந்துகொண்டிருந்தபோது ஒலித்த போனை முழங்கையால் கையாண்டு, ``சொல்லுங்க அண்ணி” என்றான்.

``என்ன உதய்... பொண்ணு பிடிக்கலையா?” என்றாள் ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த தாமரை. பின்னால் சற்று தூரத்தில் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தெரிந்தது. அதன் மீது பறவைகள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன.

‘`என்ன சொல்றிங்க அண்ணி? எந்தப் பொண்ணு?’’

``நேத்து நைட்டு உங்கப்பா வாட்ஸ்அப்புல அனுப்பிருந்தாரேப்பா... உங்கிட்டேர்ந்து ஒரு பதிலும் இல்லையேன்னுதான் மாமா என்னை விசாரிக்கச் சொன்னாரு.’’

வெந்து தணிந்தது காடு - 5 - பட்டுக்கோட்டை பிரபாகர்

போனை தோளுக்கும் தாடைக்கும் நடுவில் இடுக்கிக்கொண்டு ஈரத் துணிகளை கொடிக் கயிற்றில் ஒவ்வொன்றாகப் போட்டு கிளிப் வைத்தாள் தாமரை.

மொட்டை மாடியில் வெள்ளை பெயின்ட் டால் வரையப்பட்டிருந்த பெரிய சைஸ் எட்டுக்குள் வளைந்து வளைந்து நடந்து கொண்டிருந்த உதயகுமாரின் அண்ணன் கணேசன் `நான் பேசட்டுமா...’ என்று ஜாடை யில் கேட்க... அவனைக் கையமர்த்தினாள்.

``நான் இன்னும் போனையே ஆன் பண்ணலை அண்ணி. இந்த ஊர்ல சரியா டவர் கிடைக்க மாட்டேங்குது. மொபைல் டேட்டா சில இடத்துலதான் வருது. ஆபீஸுக்குப் போனாதான் வைஃபை கிடைக் கும். பார்த்துட்டுப் பேசறேன்.’’

``சரி... பார்த்துட்டு சொல்லு. வெச்சிரவா?’’

``இருங்க அண்ணி. டீட்டெய்ல்ஸ் சொல்ல மாட்டிங்களா?’’

‘`ஆர்வமா கேக்கறியான்னு பார்த்தேன். ஊரு கள்ளக்குறிச்சி. அப்பா பிரின்ட்டிங் பிரஸ் வெச்சிருக்காரு. அம்மா இல்ல. ரெண்டு பொண்ணுங்க. இவ ரெண்டாவது. மூத்தவளை காரைக்குடியில் கட்டிக் கொடுத்திருக்காங்க. இவ டிகிரி படிச்சிட்டு ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துட்டிருக்கா.’’

‘`டீச்சரா? என்ன அண்ணி... நான்தான் ஒரு ஸ்போர்ட்ஸ் கேர்ளா பாருங்கண்ணு சொன்னனே...’’

‘`ஒரு வருஷமா பார்த்துட்டிருக்கோம்... ஸ்போர்ட்ஸ் கேர்ள் எதுவும் அமையலை யேப்பா.’’

வியர்வையில் முற்றிலும் நனைந்திருந்த கையில்லாத பனியன், லூசான ஷார்ட்சுடன் எட்டுக்குள் நடந்துகொண்டிருந்த கணேசன் வேகமாக வந்து போனை தாமரையின் தோளிலிருந்து எடுத்துக் கொண்டான்.

``டேய்! ரொம்பதான் பண்றே நீ! இப்ப கல்யாண மார்க்கெட்ல பசங்க அதிகம், பொண்ணுங்க கம்மி. அது தெரியுமா உனக்கு? நீ இஷ்டப்படுற மாதிரி ஆர்டர் கொடுத்தா செய்ய முடியும்?’’ என்றான்.

‘`அதுக்கில்லைண்ணா... இங்க ஃபாரஸ்ட்டுக்குள்ள குடித்தனம் நடத்தறதுக்கு தைரியம் வேணும். ஏதாச்சும் கேம்ஸ் விளையாடுற பொண்ணா இருந்தா...’’

``கேரம் போர்டு நல்லா விளையாடுவாளாம். ஓகேயா? அதுவும் கேம்ஸ்தானே?’’

``நான் சொல்றதைப் புரிஞ்சுக்காம...’’

‘`நீதான் புரிஞ்சுக்க மாட்டேங்கற. இத பாரு உதய்... நாலு பொண்ணுங்க காட்டியாச்சு. ஏதாச்சும் சொல்லி தட்டிக் கழிச்சிக்கிட்டே இருக்கே. உன் மனசுல லவ்வு கிவ்வு இருந்தா சொல்லிடு. அப்பாகிட்ட நான் பேசறேன்.”

‘`என்னண்ணா நீ? அப்படில்லாம் எதுவும் இல்ல. இருந்தா முதல்ல உங்கிட்டதான் சொல்லியிருப்பேன்... பேசறது, பழகறது அப்புறம்... ஒரு போட்டோவைப் பார்த்ததுமே மனசுல ஒரு ஃபீல் தோணணும்.’’

‘`சினிமா பார்த்து கெட்டுப்போய்ட்டே. மனசுக்குள்ள மணியடிக்கணும், மூளையில் பல்ப் எரியணும்னு சொல்லப் போறியா?’’

வெந்து தணிந்தது காடு - 5 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`நான் சொல்ல வர்றது உனக்குப் புரியலை. விட்ரு”

‘`உதய்... இந்த ஜாதகம் மதுரைலேர்ந்து உங்கக்கா அனுப்பிச்சது. பொருத்தம் பார்த்தாச்சு. ஒன்பது பொருத்தம் நல்லாருக்கு. அப்பா போன்ல பேசி உன் போட்டோவ அவங்களுக்கு அனுப்பிச்சாரு. அவங்களுக்குப் பிடிச்சதாலதான் பொண்ணு போட்டோ அனுப்பி யிருக்காங்க. இந்த இடம் சரியா வரும்னு எங்க எல்லாருக்கும் படுது. நீ பார்த்துட்டு ஓகேன்னு சொன்னா கள்ளக்குறிச்சி போய் நிச்சயம் பண்ணிட்டு வந்துடலாம்.’’

‘`இருண்ணா... விட்டா மண்டபம் பார்த்தாச்சு, பத்திரிகை அடிச்சாச்சு, வந்து தாலி கட்டுன்னு சொல்வே போலிருக்கே. போனை அண்ணிகிட்ட குடு...”

அண்ணி வாங்கி, ``என்னப்பா?’’ என்றாள்.

``என்ன அண்ணி... எல்லாரும் கிட்டத்தட்ட முடிவே பண்ணிட்டிங்க போலிருக்கு?’’

‘`அதெப்படி உதய் நீ சொல்லாம முடிவு பண்ணுவோம்?’’

‘`உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கா?’’

‘`சின்ன குடும்பம். படிச்ச பொண்ணு. அவங்கப்பா பண்பா பேசறாரு.’’

``பொண்ணு எப்படி இருக்கா?’’

‘`நல்லா நிறமா லட்சணமா இருக்கா உதய். அஞ்சடி ஆறு அங்குல உயரம். நல்லா மேட்ச்சா இருக்கும். நீ பார்த்துட்டு சொல்லு.”

‘`சரி... பார்த்துட்டு சொல்றேன்” என்று வைத்தவனுக்கு உடனே பார்க்க வேண்டும் என்று ஆவல் உந்தவே கைகளைக் கழுவி துண்டில் துடைத்தபடி போனுடன் மொட்டை மாடிக்கு விரைந்தான்.

மொட்டை மாடியின் மேற்கு மூலையில் நின்று கிழக்கு திசையில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் போனை வைத்துக்கொண்டால் மொபைல் டேட்டா எடுப்பதைக் கணித்து வைத்திருந்ததால் அந்த இடம் வந்து ஆன் செய்தான்.

நான்கு ஜி கிடைத்தது. ஆனால், புகைப்படம் மழுங்கலாகத் தெரிந்து நடுவில் வட்டம் போட்டுக்கொண்டே யிருக்க... எரிச்சலாக இருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, முழுமை யாகத் தெளிவாகப் புகைப்படம் தெரிய... பார்த்ததுமே... அவளின் முகம் அவனை வசீகரித்தது.

கொஞ்ச நேரம் விடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் ‘இவள்தான் உன் மனைவி’ என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது. `ச்சே! பெயர் கேட்கவில்லையே’ என்று தோன்றியது.

பென்சில் ஃபேக்டரியில் ஒவ்வொரு பகுதியாக நடந்து சூப்பர் வைசர்களிடம் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார் அதன் முதலாளி ஜெயபால்.

வேட்டி கட்டியிருந்தார். மேலே காலர் இல்லாத வட்டக்கழுத்து காட்டன் ஜிப்பா அணிந்திருந்தார். கோல்டு ஃபிரேமில் கண்ணாடி. மூக்கில் மரத்தூள் போய்விடாமலிருக்க நெற்றியில் ஃபேஸ் ஷீல்டு மாட்டியிருந்தார். கூடவே நடந்த மேனேஜர் சந்தானம் அவர் நடையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க சிரமப்பட்டார்.

விசாலமான ஃபேக்டரி ஷெட்டில் ஒருபக்கம் ரெட் சிடார் மரத்தை இயந்திரம் ஒன்று சிறிய அளவுகளில் பட்டையாக வெட்ட... இன்னொரு இயந்திரம் அதில் கிராஃபைட்டில் செய்த லெட்டை பொருத்தும் அளவுக் குக் குட்டியாக க்ரூ கட் செய்ய... அடுத்து அதில் க்ளூ அப்ளை செய்தது மற்றோர் இயந்திரம். லெட் வைக்கப்பட்டதும் மேலிருந்து மற்றொரு பாதி மரப்பகுதி வைக்கப்பட்டு... பிறகு, தனித்தனியாக வெட்டப்பட்டு வட்ட வடிவமாக சீவப்பட்டு வேறு இயந்திரத்தால் பெயின்ட்டில் டிப் செய்யப்பட... அந்தந்த இயந்திரங்களை இயக்குவதற்கும் மற்றும் இயந்திரத்தில் வைக்கவும், எடுக்கவும் யூனிஃபார்ம் அணிந்த தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள்.

``முக்கோணம் சைஸ்ல கட்டிங் டை செட் பண்ணி சாம்பிள் பார்த்தமில்ல... நாப்பது பர்சன்ட் பேரு பிடிச்சு எழுதறப்ப கைவலிக்குதுன்னு சொல்லியிருக்காங்க. அது வேணாம். வொர்க் அவுட் ஆகல’’ என்றார் ஜெயபால்.

‘`அப்போ அறுபது பர்சன்ட்டுக்கு ஓகேதானே சார்?’’ என்றான் அந்த சூப்பர் வைசர் புன்னகைத்தபடி.

விருட்டென்று திரும்பி அவனைப் பார்த்த ஜெயபால், ``உன் ஹார்ட்டும் கிட்னியும் அறுபது பர்சென்ட் வொர்க் பண்ணுதுன்னு டாக்டர் சொன்னா உனக்கு ஓகேயா மிஸ்டர் முட்டாள்?’’ என்றார்.

சுற்றி வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களும், அருகில் நின்றிருந்த மேனேஜர் சந்தானமும் சட்டென்று சிரித்துவிட... அறை வாங்கியது போல முகம் சிவந்தான் அவன்.

நடந்தபடி சந்தானத்திடம், ``அந்த முட்டாளுக்கு ஒரு பேர் இருக்கணுமே...’’ என்றார்.

‘`கௌசிக் சார். சேர்ந்து பத்து நாள்தான் ஆச்சு.”

``இன்னொரு தடவை எங்கிட்ட இப்படி மரியாதையில்லாம பதில் பேசுனா மூட்டையக் கட்டிட்டுப் போக வேண்டியிருக்கும்னு சொல்லி வையி.’’

``சரிங்க சார். அப்புறம்... டெப்டி ரேஞ்சர் நம்ம ஆபீஸ்ல அரை மணி நேரமா வெய்ட் பண்றார்’’ - நடப்பதை நிறுத்தி மேனேஜரை முறைத்தார் ஜெயபால்.

‘`வெய்ட் பண்ணச் சொன்ன எனக்குத் தெரியாதாய்யா?’’

‘`சரிங்க சார்...’’

‘`எதுக்கு வந்திருக்கான்?’’

‘`தெரியலைங்களே சார்.”

‘`புதுசா வந்திருக்கான்னு ரேஞ்சர் ருத்ரா சொன்னான். கொஞ்சம் முறுக்கிட்டுத் திரியறானாம்.’’

‘`நம்ம ஊர்ல போலீஸ் டிபார்ட்மென்ட், ஃபாரெஸ்ட் டிபார்ட்மென்ட்ல புதுசா யார் டூட்டில ஜாய்ன் செஞ்சாலும் உங்களைப் பார்த்துட்டுப் போறது வழக்கம்தானே சார்?’’

பேசியபடியே அலுவலக அறையை நெருங்க... சந்தானம் இரண்டடி முன்னால் ஓடி கதவைத் திறந்து பிடித்தார்.

உள்ளே பெரிய மேஜைக்கு இந்தப் பக்கம் அமர்ந்து மொபைல் போனில் செய்தி பார்த்துக்கொண்டிருந்த உதய்குமார் கதவு சத்தத்தில் திரும்பிப் பார்த்தான்.

‘`என்ன தம்பி... காக்க வெச்சிட்டனா?’’ சுற்றி வந்து உயர முதுகுடன் வெள்ளையான பூத்துண்டு போர்த்தியிருந்த தன் சுழல் நாற்காலியில் அமர்ந்த ஜெயபால் சிரித்தபடி, ‘`உங்க பால்கோவா நான் சாப்ட்ருக்கேன் தம்பி. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதென்ன குடும்பத் தொழிலை விட்டுட்டு இப்படி கை நீட்டி சம்பளம் வாங்கற அரசு வேலைக்கு வந்துட்டிங்க?’’ என்றார்.

‘`அது பிடிக்கலைன்னு இல்லை. இது ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

``சரியான வார்த்தை தம்பி. பிடிச்ச வேலைய ரசிச்சு செய்யணும். நமக்கு ஒரே பையன். ஹைதராபாத்துல மர வியாபாரம். நாலு பிராஞ்ச் போட்டு பெரிய அளவுல செய்றான். இங்க பென்சில் ஃபேக்டரியில் முந்தி மாதிரி பெரிய லாபம் இல்ல. எக்கச்சக்கமான போட்டி. பெரிய பெரிய முரட்டு கம்பெனிங்க வந்துடுச்சு. அதோட பாக்கறப்ப இது சும்மா சுண்டக்கா. இழுத்து மூடிட்டு அங்க வரச் சொல்றான் பையன். ஆனா, இருபத்தஞ்சு வருஷமா ஓடிட்டிருக்கற ஃபேக்டரிய நிறுத்த மனசு வரல. எதாச்சும் குடிக்க கொடுத்தானுங்களா?’’

``கேட்டாங்க. வேணாம்னுட்டேன்.”

‘`அப்புறம்... சொல்லுங்க... என்ன விஷயம்?’’

‘`ஊர்ல பெரிய மனுஷர் நீங்க. நல்லது கெட்டதுக்கு முன்னாடி நிக்கிறவர்னு சொன்னாங்க. கோயிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத் திருக்கிங்க. உங்கப்பா, அம்மா பேர்ல டிரஸ்ட் வெச்சு பல பேருக்கு வைத்தியத்துக்கு உதவறிங்க. கல்விக்கு உதவறிங்க. உங்களை அறிமுகப் படுத்திக்கலாம்னுதான் வந்தேன்.’’

‘`ரொம்ப நல்லது தம்பி. நாம் பொறந்த ஊருக்கு இதுகூட செய்யலைன்னா எப்படி? அடுத்த மனுஷன் அழறப்ப வயத்துல சோறு எப்படிப்பா எறங்கும்?’’

வெந்து தணிந்தது காடு - 5 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``தப்பா நினைக்காதிங்க சார். இவ்வளவு நல்ல மனசோட இருக்கற நீங்க குறிஞ்சிக்காடு கிராமத்துக்கு ரோடு வர்றதுக்கு எதுக்கு சார் இடைஞ்சலா இருக்கிங்க?’’

சட்டென்று முகம் மாறினார் ஜெயபால். ``தம்பி... இந்தக் கேள்விய பதில் தெரிஞ்சிக்கிட்டு கேக்கறிங்களா இல்ல... தெரியாம கேக்கறிங்களா?’’

‘`தெரிஞ்சிக்கிறதுக்குதான் கேக்கறேன். ஊர்க்காரங்க சில காரணங் களைச் சொன்னாங்க. அதை என்னால் நம்ப முடியலை. நேரா உங்களையே கேட்டுத் தெரிஞ்சிக்கலாமேன்னுதான்...’’

சில விநாடிகள் அமைதியாக இருந்த ஜெயபால் விஷமமாகச் சிரித்தார்.

‘`நமக்கு பழக்கமில்லாத ஒரு ஆத்துல இறங்கறதுக்கு முன்னாடி அதோட ஆழம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு இறங்கணும்.’’

‘`நீச்சல் தெரிஞ்சவன் ஆழத்தைப் பத்தி எதுக்கு சார் கவலைப்படணும்?’’

‘`ஆத்துல ஒரு வேளை முதலை இருந்தா?’’ உதயகுமார் பதில் யோசிப்பதற்கு முன்பாக, ``ஊர்க்காரங்க என்னமோ சொன்னாங்க, உங்களால் அதை நம்ப முடியலன்னு சொன்னிங்களே... அதையே நம்புங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு’’ என்றார்.

உதயகுமார் அமைதியாக எழுந்து கொண்டான். ``தம்பி... ஒரு நிமிஷம்... யோவ் சந்தானம். அம்பது டீலக்ஸ் பென்சில் பாக்ஸ் கட்டி எடுத்துட்டு வாய்யா. வெறுங்கையோடவா அனுப்ப முடியும்?’’

‘`இல்ல சார்... அதெல்லாம் எதுவும் வேணாம்.’’

‘`உங்களுக்கில்லை தம்பி. நீங்க சுத்தம்னு கேள்விப்பட்டேன். இது அந்த ஸ்கூல் புள்ளைங்களுக்கு...’’ - புரியாமல் பார்த்தான்.

‘`ஞாயித்துக்கிழமை கள்ளக்குறிச்சிக்கு பொண்ணு பார்க்கப் போறிங்கதானே... அந்தப் பொண்ணு டீச்சராமே. அந்த ஸ்கூல் புள்ளைங்களுக்கு என் அன்பளிப்பா குடுங்க” என்றார் ஜெயபால்.

திடுக்கிடலுடன் அவரைப் பார்த்தான் உதயகுமார்.

- தொடரும்...