ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 7 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
News
வெந்து தணிந்தது காடு

ஒரு பதிவுல கல்லூரி நினைவுகள்... அப்படின்னு கட்டுரை மாதிரி எழுதியிருந்திங்க. நீங்க நாடகம்லாம் போட்ருக்கிங்களா அப்போ

“அபர்ணா யாருங்க?’’ என்றாள் அமுதா... வீட்டின் முன்புறத்தில் தொங்கிய மூங்கில் கூடையிலசைந்தபடி சூடான தேநீரை அருந்திக்கொண்டு பேசிய உதயகுமார் அமுதாவின் கேள்வியில் திடுக்கிட்டான்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

அபர்ணா கல்லூரி காலத்தில் தோழி. தோழமையைக் கடந்தும் வகைப்படுத்த முடியாத ஒரு பிரியம் அவள் மேலிருந்ததும்... ஆனால், அந்தப் பிரியத்தைக் காதல் என்று முத்திரை குத்த முடியாமல் ஏதோ ஒன்று தடையாய் மனதின் குறுக்கே சுவராய் எழுந்து நின்றதும்... ரகசியமாகச் சில காதல் நுரை பொங்கும் சோடா கவிதைகள் எழுதிக் கிழித்துப் போட்டதும்... நள்ளிரவின் திடீர் விழிப்புகளில் அவளின் நினைவுகளால் புன்னகைத்ததும்... பிரிவு விழா முடிந்து ஸ்லாம் புக்குகளில் பரஸ்பரம் கையெழுத்துகள் போட்டபோது ‘இனிய தோழிக்கு...’ என்று அழுத்தம் திருத்தமாக மனதின் இறுதியான முடிவை அம்பலப்படுத்தியதும்...

ஆனாலும் இன்றுவரை ஏதாவது கதைகளில் கதாநாயகியின் பெயராக அபர்ணா என்று படிக்கும்போதெல்லாம் புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு ஒரு மணி நேரத்துக்கு நினைவுகளில் ஆழ்ந்துவிடுவதும் மனதுக்குள் மாண்டேஜ் காட்சித் துணுக்குகளாக வந்து போக...

‘‘என்னாச்சு? லைன்ல இருக்கிங்களா... கட்டா யிடுச்சா?’’ என்ற அமுதாவின் குரலில் மீண்டான் உதயகுமார்.

இவள் அந்த அபர்ணாவைத்தான் கேட்கிறாளா... இவளுக்கு எப்படித் தெரிய வாய்ப்பு? இதென்ன எல்லோரும் இப்படி சட்டென்று சஸ்பென்ஸ் வைத்து அதிர்ச்சி தருகிறார்கள்... இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்?

“எந்த அபர்ணாவைப் பத்திக் கேக்கறிங் கன்னு தெரியலை. அதான் யோசிச்சிட் டிருக்கேன்...’’

‘‘ஓ... உங்களுக்கு நிறைய அபர்ணாவைத் தெரியுமா...’’ என்று சிரித்தாள் அமுதா.

‘‘கொஞ்சம் ஸ்ட்ரைட்டா கேட்ருங்களேன் ப்ளீஸ்...’’

‘‘ஸாரி. நீங்க ஃபேஸ்புக்ல இருக்கிங்கதானே?’’

‘‘ஆமாம்...’’

‘‘பார்த்தேன். அதுல உங்க நண்பர்கள் யாருன்னு பார்த்தேன். உங்க பதிவுகள் எல்லாம் போய்ப் பார்த்தேன்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஒரு பதிவுல கல்லூரி நினைவுகள்... அப்படின்னு கட்டுரை மாதிரி எழுதியிருந்திங்க. நீங்க நாடகம்லாம் போட்ருக்கிங்களா அப்போ?’’

‘‘ஆமாம்...’’

“ ‘என் நாடகங்களின் பெண் கதாபாத்திரங் களுக்கு உடை தந்து உதவிய தோழிக்கும் மேலான அபர்ணா இப்போது என் தொடர்பு எல்லைக்கு வெளியே’ன்னு ஒரு வரி படிச்சேன். அதான் கேட்டேன்.’’

‘‘ஓகோ. அப்படி எழுதிருக்கேனா... எனக்கே நினைவில்லை.”

‘‘நான் கேட்டதுல எதுவும் தப்பில்லையே?’’

“சேச்சே... இதுல என்ன தப்பு? எனக்குத் தோணலை.”

‘‘நாம் பொண்ணு பாக்கப்போற பொண்ணு நம்ம ஃபேஸ்புக்கெல்லாம் நோண்டிப் பாப்பான்னு தோணலையா...’’

‘‘அப்படி சொல்லலை. இதே மாதிரி உங்களை ஃபேஸ்புக்ல தேடிப்பாக்கணும்னு எனக்குத் தோணலைன்னு சொன்னேன்.’’

“இன்னும் தொடர்பு எல்லைக்கு வெளில தான் இருக்காங்களா?’’

‘‘ஆமாம். தொடர்பு விட்டுப்போச்சு. ஒருவேளை முனைஞ்சு காமன் ஃபிரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சா கண்டுபிடிச்சிடலாம்.’’

‘‘ஏன் கண்டுபிடிக்கலை?’’

‘‘மெனக்கெட்டு கண்டுபிடிக்கணும்னு ஒரு உந்துதல் இல்லை.”

‘‘ரொம்ப நேர்மையா பேசறதால கேக்கறேன். தோழிக்கும் மேலான அபர்ணா அப்படின்னா என்ன அர்த்தம்?’’

“இதுக்கும் நேர்மையாவே சொல்லிடறேன். ஒருவிதமான எதிரினக் கவர்ச்சி அவ மேல கூடுதலா இருந்திச்சு. தோழமை எல்லையைத் தாண்டக் கூடாதுன்ற எச்சரிக்கை உணர்வும் அடிக்கடி உள்ளே ஒலிச்சிக்கிட்டே இருந்திச்சு. நிச்சயமா காதல் கிடையாது.’’

வெந்து தணிந்தது காடு - 7 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘ஆனா, கிட்டத்தட்ட காதல்... அப்படி வெச்சிக்கலாமா?’’

‘‘இருக்கலாம்.’’

‘‘ஏன் அந்தக் காதல் முழுசா பூக்காமப் போச்சு?’’

‘‘என் குடும்பச் சூழ்நிலை முதல் காரணம். என் குடும்பத்துல முன்னுதாரணம் இல்ல. என்னால் புரிய வைக்க முடியாது. போராடவும் முடியாது. நான் சுய சம்பாத்தியத்தோட லைஃப்ல செட்டில் ஆகாதது இன்னொரு காரணம்.’’

‘‘புரியுது. இதெல்லாம் கேட்டதால்... இல்ல... இதெல்லாம் சொல்ல வேண்டி வந்ததால் சங்கடமா ஃபீல் செஞ்சிங்கன்னா... ஸாரி.’’

‘‘நிச்சயமா இல்ல. கேட்டது பிடிச்சிருக்கு. கேட்டவங்களையும் பிடிச்சிருக்கு.’’

“இதென்ன இப்பவே ரிசல்ட்டை சொல்லிட் டிங்க? நேர்ல பாக்க வேணாமா?’’

“எதையும் ஓப்பனா பேசிடுவேன் அமுதா... உங்க போட்டோ பார்த்ததுமே மனசுல என் வாழ்க்கை உங்களோடதான்னு ஒரு எண்ணம் தோணிடுச்சு.’’

‘‘அவசரப்படாதிங்க. பெரியவங்களும் முடிவு செய்யணும்.”

‘‘அவங்கதான் முடிவு பண்ணிட் டாங்களே... நேர்ல பொண்ணு பார்க்க வர்றது நம்ம ரெண்டு பேரோட சம்மதத் துக்காகத்தான். உங்களுக்கு நான் ஓக்கேன்னு படுதா அமுதா?’’

‘‘நானும் வெளிப்படையா பேசினா கோவிச்சுக்கக் கூடாது.’’

‘‘இல்ல... சொல்லுங்க.”

“போட்டோ பார்த்ததும் நிராகரிக்க எதுவும் தோணலை. ஸ்மார்ட் லுக்கிங் அப்படின்னு தோணிச்சு. படிப்பு, வேலை பின்னணி தெரிஞ்சதும் ஒரு மரியாதை ஏற்பட்டுச்சு. ஃபாரெஸ்ட் ஆபீஸர்ன்னா முரட்டுத்தனமான குணங்கள் இருக்குமோன்னு தோணிச்சு. உங்க ஃபேஸ்புக் பதிவுகள் படிச்சு, கவிதை, நாடகம் எழுதறவர்னு தெரிஞ்சதும் அந்த எண்ணம் போயிடுச்சு. இப்ப போன்ல பேச ஆரம்பிச்சதும் சமாளிக்காத நேர்மை யான உங்க பதில்கள் நம்பிக்கையை அதிகப்படுத்துது. ஆனா...’’

‘‘ஆனா?’’

‘‘உங்களை மாதிரி சட்டுன்னு ஒரு எண்ட் ரிசல்ட் சொல்லத் தோணலை. ஐம் நியூட்ரல்.’’

‘‘நெகட்டிவா இல்லையே... அது போதும். நேர்லயும் பேசுவோம். அப்போ முடிவுக்கு வந்தா போதும். ஒண்ணு கேக்கணும்.”

“கேளுங்க...”

‘‘கல்யாணத்துக்கு அப்புறம் டீச்சர் வேலை தொடரணும்னு நினைக் கிறிங்களா?’’

‘‘டீச்சர் வேலைதான்னு இல்ல... ஆனா, ஏதாச்சும் ஒரு வேலைக்குப் போகணும். அது ஒரு தனி சுதந்திரம். சுயமான உலகம்.”

‘‘நிச்சயமா. எனக்கு ஆட்சேபனை இல்ல. காட்டுப் பகுதியில் வாழ பயம் எதுவும் இல்லையே?’’

‘‘எந்த மலைப்பிரதேசம் போனாலும் எனக்கு ட்ரெக்கிங் போகப் பிடிக்கும். அந்த ஊர்ல ஜூ இருந்தா கட்டாயம் போவேன். பயம் கிடையாது. ஆனா, எனக்குப் பேச, பழக ஜனங்க வேணும். தனிமை பிடிக்காது. இந்த டீச்சர் வேலையே அதுக்காகதான். சம்பளம் ரெண்டாம்பட்சம்.’’

‘‘புரிஞ்சிக்கிட்டேன். நான் இப்படி போன் செஞ்சுப் பேசினதுல உங்களுக்கு சங்கடம் எதுவும் இல்லையேங்க அமுதா?’’

“இல்லை. நீங்க என்ன மாதிரி பர்சனாலிட் டின்னு மனசுல ஒரு கேள்வி ஓடிக்கிட்டே இருந்திச்சு. இப்போ கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கிறதால பேசுனது நல்லதா போச்சுங்க.”

‘‘உங்களுக்கு வேற ஏதாவது கேக்கணுமா?’’

‘‘இல்லை. ஏதாச்சும் தோணினா போன் செய்றேன்.”

‘‘ஷ்யூர்.’’

போனை வைத்ததும்... `கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேனோ’ என்று அமுதா யோசிக்க,

`இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமோ’ என்று உதயகுமார் யோசித்தான்.

இன்ஸ்பெக்டர் கரிகாலன் கழுத்து மூடிய ஸ்வெட்டர் அணிந்து காகிதக் கோப்பைகளை காரின் டாப்பில் வைத்து காற்றுக்கு நடுவில் சாமர்த்தியமாக விஸ்கி ஊற்றிவிட்டு, முறுக்கு பாக்கெட்டை பல்லால் கடித்துப் பிரித்தார்.

குயிலருவியில் குளித்துவிட்டு இடுப்பில் துண்டு மட்டும் கட்டி மெலிதாக நடுங்கியபடி எச்சரிக்கை யாக சின்ன பாறைகளில் ஈரத்தடம் பதித்து வந்த ரேஞ்சர் ருத்ரபாண்டியன் தன் பைக் மீது கழற்றிப் போட்டிருந்த உடைகளை அணிந்து கொண்டார்.

வெந்து தணிந்தது காடு - 7 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வேகத்துடன் கொட்டிய அருவியிலிருந்து தண்ணீரின் மைக்ரோ புள்ளிகள் துண்டை உதறியது போல காற்றில் படர்ந்திருந்தன.

கோப்பைகளை சன்னமாகத் தொட்டுக் கொண்டு பருகத் தொடங்கினார்கள்.

சிகரெட் பற்றவைத்து ஊதியபடி கேட்டார் கரிகாலன். ‘‘குடைச்சல் கொடுக்குறானா?’’

‘‘ரொம்ப...’’

‘‘என்ன செய்றான்?’’

‘‘மதிக்க மாட்டேங்கறான்...”

‘‘சுத்தமான ஆளா?’’

‘‘ஆமாம்.’’

‘‘அதான் பிரச்னை.’’

‘‘அந்தக் காட்டுப் பசங்க குடுத்த புகாரை மேல அனுப்பிச்சிடுவேன்னு சொல்லிச் சொல்லி மிரட்றான்யா.’’

‘‘புகார் கொடுக்குற அளவுக்கு அவனுங்களுக்கு எப்படி தைரியம் வந்துச்சு?’’

‘‘அங்க காடையன், வெட்டுக்கிளின்னு ரெண்டு பேரு வெவரமானவனுங்க. அவனுங்க எது சொன்னாலும் அந்தக் குறிஞ்சிக்காடே கட்டுப் படுது. ஒரு பெரிய கூட்டத்தைத் திரட்டிக்கிட்டு வந்து போராட்டம் பண்ண உக்காந்துடறான்.”

‘‘தூக்கி உள்ள வெச்சு சுளுக்கெடுக்கத் தயாரா வந்தேனே... அதுக்குள்ள உங்காளு சமாதானம் பேசி அனுப்பி வெச்சிட்டான். அரசாங்கத்துக்கு டீசல்தான் வேஸ்ட்டாப் போச்சு.’’

‘‘அதுல திடீர் ஹீரோ ஆயிட்டான். அவங்க ஊருக்கே போயி இங்க என்னல்லாம் பிரச்னை இருக்குன்னு நோண்டிருக்கான்.”

“எலெக்‌ஷன்ல நிக்கப்போறானா?’’

‘‘பெரிய இவனாட்டாம் பென்சில்காரரைப் போயிப் பார்த்துருக்கான் கரிகாலன்.”

‘‘இது வேறயா... பாத்து?’’

“தர்ம காரியம்லாம் செய்றிங்க... எதுக்கு குறிஞ்சிக்காட்டுக்கு ரோடு வர்றதை தடுக்கறிங் கன்னு நேரடியா கேட்ருக்கான்.”

‘‘உனக்கு எப்படிய்யா தெரியும்?’’

‘‘அவரே போன் செஞ்சு சொன்னாரு. ரொம்ப துள்ளுவான்னு தெரியுது. கொஞ்சம் தட்டி வையின்னாரு.’’

‘‘சரி... இவரு அவனுக்கு என்ன பதில் சொன்னாராம்?’’

‘‘ஆழம் தெரியாம காலை விடாதப்பான்னு நாசூக்கா எச்சரிக்கை செஞ்சிருக்காரு.”

“என்ன செய்யலாம்னு என்னைக் கூப்புட்டே?’’

“தம்பி ஞாயித்துக்கிழமை கள்ளக்குறிச்சிக்கு பொண்ணு பாக்கப் போறாரு. அதுக்கு முன்னாடி ஒரு தரமான சம்பவம் செய்யணும். உலகத்துல ஒரு பய அவனுக்குப் பொண்ணு கொடுக்கக் கூடாது. அப்படி இருக்கணும்.”

“என்னய்யா பெருசா சொல்றே?’’

‘‘அவன் அரெஸ்ட் ஆகற மாதிரி பேப்பர்ல போட்டோவோட மேட்டர் வரணும். சேலத்துல லஞ்ச ஒழிப்புத் துறையிலதானே உன் மச்சான் வேலை பார்க்கறான்?’’ என்றார் ருத்ரபாண்டியன்.

“புரிஞ்சிடுச்சு’’ என்று கள்ளமாகச் சிரித்தார் கரிகாலன்.

- தொடரும்...