Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 8 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
News
வெந்து தணிந்தது காடு

மர நிழலில் கைகட்டி நின்ற உதயகுமாரை அண்ணனும் மதுரையிலிருந்து வந்திருந்த மச்சானும் ஓட்டிக்கொண்டிருந் தார்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

“அவன் அரெஸ்ட் ஆகற மாதிரி பேப்பர்ல போட்டோவோட மேட்டர் வரணும். சேலத்துல லஞ்ச ஒழிப்புத்துறையிலதானே உன் மச்சான் வேலை பாக்கறான்?’’ என்றார் ருத்ர பாண்டியன்.

``புரிஞ்சிடுச்சு’’ என்று கள்ளமாகச் சிரித்த கரிகாலன், உடனே சிகரெட்டை ஆழமாக இழுத்து புகையை அடர்த்தியாக வெளியேற்றிவிட்டு, ``ருத்ரா... வேணும்னா ஒரு தடவை வார்னிங் குடுத்துப் பார்த்துட்டு அப்புறம் நடவடிக்கைல இறங்கலாமா?’’ என்றார்.

``இல்ல கரிகாலன்... இது விஷப்பாம்புன்னு தெரிஞ்சிடுச்சு. விட்டுவைக்கிறது நம்ம எல்லாருக்குமே நல்லதில்ல.’’

``எதுக்கு சொல்றேன்னா... மொதல்ல வேலையிலேர்ந்து சஸ்பெண்ட் பண்ணிடு வாங்க. கேஸ் நடத்தி அவன் நல்லவன்னு ஃப்ரூவ் பண்றதுக்கு அஞ்சாறு வருஷம்கூட ஆகலாம்.’’

``அவன் ஒண்ணும் சோத்துக்கு தெருவுல நிக்க மாட்டான். குடும்பமே பால் கோவா கிண்டி கொள்ளை கொள்ளையா சம்பாரிக்குது.’’

``ஒருவேளை... நிரூபிக்க முடியாமப் போயிட்டா... ஜெயிலுக்கும் போக வேண்டி யிருக்கும். பரவால்லையா?’’

``என்ன நீ ரொம்பதான் அவனுக்காக இரக்கப் படறே... என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தறான்னு சொல்லலை. நெக்ஸ்ட் உன் பக்கமும் திரும்புவான். பென்சில்காரருக்கும் பிடிக்கலன்னு சொல்றேன்ல...’’

கரிகாலன் மோவாயைத் தடவியபடி சற்றே யோசித்துவிட்டு மீண்டும் தன் காகிதக் கோப்பையை நிரப்பிக்கொண்டார்.

``சரி... செஞ்சிடலாம். எந்தக் கோர்ட்ல கூப்பிட்டாலும் புரண்டுடாம கடைசி வரைக்கும் ஸ்ட்ராங்கா நிக்கிறதுக்கு ஆள் வெச்சிருக்கியா?’’

``ஒரு கூட்டத்துல நல்லவனைக் கண்டு பிடிக்கிறதுதான் கஷ்டம். கெட்டவன் பல பேரு கிடைப்பான். அந்த மலையாளி (கேரளாவைச் சேர்ந்த மலையாளி அல்ல... மலையை ஆள்கிறவர்கள் என்பதால் வந்த பெயர்!) கூட்டத்துல காடையன், வெட்டுக்கிளி ரெண்டு பேத்து மேலயும் வெறித்தனமான பகையோட இருக்கறவன் மேட்டுப்பாதை பாண்டி. நான் என்ன சொன்னாலும் செய்வான்.”

``அவனா... செம்மரம் வெட்றதுல கில்லியாச்சே. ஆந்திரால அவன் மேல அஞ்சு கேஸ் இருக்கு. எப்ப துப்பு குடுத்தாலும் வந்து அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க.’’

வெந்து தணிந்தது காடு - 8 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``அதனாலதான் சொல்றேன். குட்டிக்கரணம் போடுடான்னா... எண்ணிக்கோ சார்னு உடனே போடுவான்.’’

``அவன், நீ, நான், அப்புறம் என் சேலம் மச்சான்... எல்லாரும் யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திச்சுப் பேசணும். எங்க, எப்போன்னு பிளான் போட்டுச் சொல்லு.”

``இன்னிக்கு நைட்டே சேலத்துல மீட் செய்யலாம். ஞாயித்துக்கிழமைக்குள்ள அரெஸ்ட் நடக்கணும்” என்றார் ருத்ரபாண்டியன்.

``இப்படி செஞ்சா என்ன ருத்ரா? அவன் ஞாயித்துக்கிழமை போய் பொண்ணு பார்க்கட்டும். கல்யாணம் நிச்சயமாகட்டும். அதுக்கப்பறம் நம்ம பிளானை வெச்சிக்கிட்டா... கல்யாண மாப்பிள்ளை கைதுன்ற மேட்டர் இன்னும் அமர்க்களமா இருக்காது?’’

``கை குடுய்யா கரிகாலா... சூப்பர் போ! இந்த யோசனைக்கே உனக்கு தனியா ஒரு பார்ட்டி குடுக்கணும்” என்று கரிகாலனின் தோளில் தட்டிக்கொடுத்தார் ருத்ரபாண்டியன்.

கள்ளக்குறிச்சிக்கு இரண்டு கார்களில் வந்து சேர்ந்த உதயகுமாரின் குடும்பத்தினர் ஊர் எல்லையோரம் மர நிழலில் நிறுத்தியதும் அம்மா அகிலா, அண்ணி தாமரை, அக்கா ஜெயா மூவரும் கண்ணாடி பார்த்து ஒப்பனையை செப்பனிட்டுக் கொண்டு வழியில் வாங்கிய பூச்சரங்களை வைத்துக் கொண்டார்கள்.

மர நிழலில் கைகட்டி நின்ற உதயகுமாரை அண்ணனும் மதுரையிலிருந்து வந்திருந்த மச்சானும் ஓட்டிக்கொண்டிருந் தார்கள்.

``இப்ப ஒரு தடவை முகம் கழுவி ஃப்ரெஷ் அப் பண்ணிக் கோங்க மாப்பிள்ளை சார்’’ என்றான் அண்ணன் கணேசன்.

``அதெல்லாம் பரவால்ல. சும்மா இருண்ணே’’ என்றான்.

``ஏற்கெனவே போன்ல அந்தப் பொண்ணுகிட்ட லவ்ஸ்விட்டே போலிருக்கு?’’ என்றான் மச்சான் சரவணன்.

``சும்மா பேசுனேன். அவ்ளோதான்.”

``அநியாயத்துக்கு அட்வான்ஸா இருக்கிங்கப்பா.’’

ஒரு செயினோடு வந்து, ``வெறுங்கழுத்தா இருக்கே... இதை மட்டும் போட்டுக்கயேன் உதய்’’ என்றாள் தாமரை.

``அதெல்லாம் வேணாம் அண்ணி’’ என்று பிடிவாதமாக மறுத்தான்.

உதயகுமாரின் அப்பா சிதம்பரம் நெற்றியில் விபூதி குங்குமம் பூசி, வேட்டியை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, ``போலாமா?’’ என்றார்.

``இன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவோம்” என்று கணேசன், அமுதாவின் அப்பா தமிழ்மணியிடம் போனில் பேசிய பிறகு மீண்டும் கார்களில் புறப்பட்டார்கள்.

வீட்டின் வாசலில் நின்று கைகூப்பி புன்னகையுடன் ஒவ்வொருவரையும், ``வாங்க, வாங்க” என்று அழைத்தார் தமிழ்மணி.

சிதம்பரத்தின் பார்வையில் வீட்டுக்கு ‘பெரியார் இல்லம்’ என்று மார்பிள் டைலில் பெயர் போட்டிருப்பது கண்ணில்பட்டது.

வீட்டின் ஹாலிலும் பெரியார், பாரதியார், மகாத்மா என்று பெரிய பெரிய படங்களுக்கு சந்தன மாலைகள் தொங்குவதையும் கவனித்தார்.

``உக்காருங்க. இனியா... எல்லாருக்கும் தண்ணி குடும்மா’’ டிரேயில் தண்ணீர் ஊற்றிய டம்ளர்களுடன் வந்தவளை, ``இவ என் மூத்த பொண்ணு இனியா. காரைக்குடில கட்டிக் குடுத்திருக்கேன். மாப்பிள்ளை பேக்கரி வெச்சிருக்கார். கல்யாணமாகி மூணு வருஷமாச்சு. ஃபாரின் டிரிப் பிளான் பண்ணிட்டிருக்காங்க. போய்ட்டுவந்துதான் என்னை தாத்தா ஆக்குவாங்களாம்.”

``நீங்க ஏதாச்சும் கட்சில இருக்கிங்களா?’’ என்றார் சிதம்பரம்.

``இல்ல. எனக்கு பெரியார் மேல ரொம்ப பிரியம். அவரோட பல கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இலக்கிய மேடைகள்ல பேசுவேன். இங்க சில தமிழ் அமைப்புகள்ல மெம்பர்.’’

``தப்பா எடுத்துக்காதிங்க. எனக்கு பெரியார் மேல சில கோபங்கள் உண்டு’’ என்றார் சிதம்பரம்.

``அப்பா...’’ என்றான் கணேசன் சங்கடமாக.

``பரவால்ல தம்பி. பிடிக்கும்னு சொல்ல எனக்கு இருக்கற அதே உரிமை பிடிக்காதுன்னு சொல்ல அவருக்கும் இருக்கே’’ என்றார் தமிழ்மணி.

``கோடி பேர் நம்பிக்கை வைச்சிக் கும்புடற கடவுளை அவமதிச்சதும், இந்து மதத்தை மட்டுமே விமர்சனம் செஞ்சதும் தப்புங்க. அதுலயும் குறிப்பா பிராமணர்களை மட்டும் குறி வெச்சு...’’ என்று ஒரு வாக்குவாதத்தைத் தொடங்கிய சிதம்பரத்தை, ``அப்பா... இப்போ எதுக்கு இதெல்லாம்...’’ என்றான் உதயகுமார்.

``பரவால்லங்க தம்பி. பேசட்டுமே. எனக்கு இது புதுசில்ல. அவரோட கோபமான கேள்வி களுக்கு பெரியாரே பதில் சொல்லியிருக்காரு. அதை இப்போ சொல்லி இந்தச் சூழ்நிலையை மாத்த நான் விரும்பலை. பயணம் சுகமா இருந்துச்சா?’’ என்றார் மாறாத புன்னகையுடன் தமிழ்மணி.

``ம்’’ என்று மட்டும் சொன்னார் சிதம்பரம்.

அமுதா கைத்தறி புடவையில் வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தன் அப்பா அருகில் அமர்ந்துகொண்டாள்.

அம்மா, அண்ணி, அக்கா அவளிடம் பொதுவாக படிப்பு, வேலை தொடர்பாக கேட்க... புன்னகையுடன் பதில் சொன்னாள்.

``ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசிட்டு வரட்டுமே’’ என்றான் கணேசன்.

``தாராளமா. அவங்க ரெண்டு பேரும் பேசறதுதான் முக்கியம். அமுதா, மொட்டை மாடிக்குக் கூட்டிக்கிட்டுப் போம்மா.”

மொட்டை மாடியில் ஒருபுறம் கீற்றுப் பந்தலுக்குக் கீழே ஆறேழு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு சின்ன காய்கறித் தோட்டமும் பூந்தொட்டிகளும் இன்னொரு புறம் இருந்தன.

``ஞாயித்துக்கிழமை இங்க வந்து உக்காந் துட்டா... அப்பாவைப் பாக்க ஏகப்பட்ட நண்பர்கள் வந்துக்கிட்டே இருப்பாங்க. இலக்கியம், சமூகம்னு பேசிக்கிட்டே இருப்பாரு. உக்காருங்க” என்றாள் அமுதா இயல்பாக.

``நீங்க உக்காருங்க.”

இருவரும் அமர்ந்ததும்...

``இந்தத் தோட்டம்?’’

``அக்கா இருந்தப்போ அவ பார்த்துக்கிட்டா. அவ கல்யாணமாகிப் போனதும் நான் பார்த்துக்கறேன். கார்டனிங் ரொம்ப சந்தோஷம் கொடுக்கும் தெரியுமா? நாம் விதை போட்டு தண்ணி ஊத்தி வளர்க்கற ஒரு செடில முதல் பூ பூக்கறப்ப கிடைக்கிற சந்தோஷமே தனி.”

``ஆமாம். மறுபடி போன் செய்றேன்னு சொன்னிங்க... செய்யவே இல்லையே” என்றான் உதயகுமார்.

``இன்னும் ஏதாச்சும் கேக்கணும்னா போன் செய்றேன்னு சொன்னேன். அப்படி எதும் கேக்கறதுக்கு இல்ல.”

``அப்படியா... எனக்கு கேக்க கொஞ்சம் இருக்குங்க அமுதா.”

``கேளுங்க.”

வெந்து தணிந்தது காடு - 8 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``வெளிநாட்டுக்கெல்லாம் போய்ட்டு வந்துதான் உங்கப்பாவை தாத்தா ஆக்கற திட்டத்துல உங்க அக்கா இருக்கறதா சொன்னாரு உங்கப்பா. நீங்களும் அப்படித் தானா?’’

``இல்ல. எனக்கு நம்ம நாட்லயே சுத்திப்பாக்க நிறைய இருக்கு. சவுத் இந்தியா மட்டும்தான் இந்தியான்னு பல பேரு மனசுல இருக்கு. நார்த் இந்தியால ஒவ்வொரு ஸ்டேட்லயும் ஒரு வாரம் டூர் அடிக்கணும்னு ஆசை இருக்கு. டூர்னா சுற்றுலா பயணிகள் பாக்கற இடங்கள் மட்டும் இல்லாம... எனக்கு அந்தந்த மாநிலத்து மக்களோட கலந்து பேசணும். ஐ லவ் பீப்புள் மோர் தேன் ப்ளேசஸ்.”

``கிரேட். எனக்கும் பிடிக்கும்.’’

``இப்போ எனக்கு நாலு மொழில பேச, எழுத, படிக்கத் தெரியும். ஒரு வருஷத்துக்கு ரெண்டு புது மொழி கத்துக்கணும்னு ஒரு லட்சியம் வேற இருக்கு.”

``இன்ட்ரெஸ்ட்டிங். உங்களைப் பத்தி என் ரிசல்ட்டை அப்பவே போன்ல சொல்லிட்டேன். இப்ப அதை மறுபடி கன்ஃபர்ம் செய்றேன். நீங்க ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா, இல்லை... இன்னும் என்னை பெண்டிங்லதான் வெச்சிருக் கிங்களா?’’ பதிலுக்கு புன்னகை மட்டும் செய்தாள் அமுதா.

``அவங்க ரெண்டு பேரும் சம்மதத்தைத் தெரிவிச்சிட்டாங்க. மேற்கொண்டு என்ன பேசணுமோ பேசலாம்’’ என்றான் சரவணன்.

சிதம்பரம் தொண்டையை சரிசெய்து கொண்டு பேசினார். ``இத பாருங்க... என் மூத்த பையனுக்கு பெண் எடுத்தப்போ அவங்க வீட்ல சொன்னதையே இப்பவும் சொல்றேன். ஆண்டவன் புண்ணியத்துல நாங்க தொழில்ல நல்லா இருக்கோம். அவசியமே இல்லன்னாலும் உதய் தன்னோட விருப்பத்துக்காகதான் உத்தியோகத்துக்குப் போய்ட்டிருக்கான். அதனால் பொண்ணுக்கு என்ன செய்விங்கன்னு ஒரு கேள்வி எங்க பக்கத்துலேர்ந்து வராது.’’

``ரொம்ப மகிழ்ச்சிங்க. நான் ஓரளவுக்கு வசதியாவே இருக்கேன். ரெண்டே பொண்ணுங்க தான். எனக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல... அதனால் பெரிய மகளுக்கு என்ன செஞ்சனோ... அதே மாதிரி இவளுக்கும் செஞ்சிடுவேன்’’ என்றார் தமிழ்மணி.

``என்ன செஞ்சாலும் அது உங்க பொண்ணு கிட்டதான் இருக்கும். கல்யாணம் மட்டும் சிறப்பா செய்யணும்னு எதிர்பார்க்கறோம். எங்களுக்கு சொந்த பந்தம் அதிகம். குறைஞ்சது ஐந்நூறு பேராவது கல்யாணத்துக்கு வருவாங்க.”

``தாராளமா வரட்டும். கள்ளக்குறிச்சில பெரிய மண்டபமா பிடிச்சிடறேன். எனக்கு என்ன சந்தோஷம் தெரியுமா... பெரியாரைப் பிடிக்காத நீங்க சீர்திருத்த முறையில் கல்யாணம் நடத்த ஒப்புக்கிட்டிங்க பாருங்க... அந்தப் பெருந்தன்மை ரொம்ப பிடிச்சிருக்கு...”

முகம் மாறினார் சிதம்பரம்.

``சீர்திருத்த முறையிலயா... அதாவது அய்யர் இல்லாம... மந்திரம் இல்லாம... தலைவர் தாலி எடுத்துக் கொடுத்து... அப்படித்தானே? நான் எப்பங்க ஒப்புக்கிட்டேன்?’’

முகம் மாறினார் தமிழ்மணி.

``இது பத்தி உங்கப் பொண்ணு ஜெயாகிட்ட போன்ல தெளிவா சொன்னேனே... நானும் சீர்திருத்த முறையில் கல்யாணம் செஞ்சிக் கிட்டவன். பெரிய பொண்ணுக்கும் அப்படிதான் செஞ்சி வெச்சேன். இந்தத் திருமணமும் அப்படிதான் நடக்கும்னு சொன்னேனே. இதுக்கு சரின்னா, பொண்ணு பாக்க வாங் கன்னும் சொன்னேனே... அவங்க சொல்லவே இல்லையா?’’

உதயகுமாரும் அமுதாவும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

சிதம்பரம் திரும்பி மகள் ஜெயாவை எரித்து விடுவதைப் போலப் பார்த்தார்.

- தொடரும்...