Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 9 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
News
வெந்து தணிந்தது காடு

தம்பி... நான் மொதல்லயே தெளிவா சொல்லிட்டேன். உங்க சிஸ்டர் விஷயத்தை மறைச்சு கூட்டிக்கிட்டு வந்தது தப்பு

முகம் மாறினார் தமிழ்மணி. ``இது பத்தி உங்கப் பொண்ணு ஜெயாகிட்ட போன்ல தெளிவா சொன் னேனே... நானும் சீர் திருத்த முறையில் கல்யாணம் செஞ்சிக்கிட்டவன். பெரிய பொண்ணுக்கும் அப்படிதான் செஞ்சு வெச்சேன். இந்தத் திருமணமும் அப்படித்தான் நடக்கும்னு சொன்னேனே. இதுக்கு சரின்னா, பொண்ணு பார்க்க வாங்கன்னும் சொன் னேனே... அவங்க சொல் லவே இல்லையா?’’

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமாரும் அமுதாவும் பரிதாப மாகப் பார்த்துக்கொண்டார்கள்.சிதம்பரம் திரும்பி மகள் ஜெயாவை எரித்துவிடுவதைப் போலப் பார்த்தார்.

“அப்பா... ஒரு நிமிஷம்... கொஞ்சம் தனியா பேசலாம்’’ என்று ஜெயா வாசலுக்கு நடக்க... மொத்த குடும்பமும் அவளைப் பின் தொடர்ந்தது. அனைவரும் சுற்றி வட்டமாக நின்று அவள் முகத்தையே பார்க்க... மெது வாகப் பேசத் தொடங்கினாள் ஜெயா.

‘‘தம்பிக்கு ஒரு வருஷமா பார்த்துகிட்டிருக் கோம். சரியா அமையலை. இந்தப் பொண்ணு போட்டோ பார்த்ததுமே எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நம்ம வீட்லயும் எல்லாருக்கும் பிடிச்சது. உதய்க்கும் பிடிச்சது. இந்த ஒரு காரணத்துக்காக இந்த இடத்தை அவாய்ட் செய்ய வேணாம்னு தோணுச்சு. இங்க வந்து சொல்லிக்கலாம்னு நானும் உங்க மாப்பிள்ளை யும் பேசிதான் முடிவு செஞ்சோம். கொஞ்சம் கோவிச்சுக்காம சம்மதம் சொல்லுங்கப்பா.”

‘‘ஆமாம் மாமா. இது ஒரு பெரிய விஷயமா எங்களுக்குத் தோணலை. எந்த முறைப்படி கல்யாணம் நடந்தா என்ன?’’ என்றான், ஜெயா வின் கணவன் சரவணன்.

வெந்து தணிந்தது காடு - 9 - பட்டுக்கோட்டை பிரபாகர்

உதடுகள் கோபத்தில் துடிக்க... குரலை முடிந்தவரை அடக்கிக்கொண்டு... ஆனால், ஆத்திரமாகச் சொன்னார் சிதம்பரம். “மாப் பிள்ளை... இது நல்லா இல்ல. இது பெரிய விஷயம்தான். சாஸ்திரம் சம்பிரதாயங்கள் மேல எங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்கு. நம்ம வீட்ல அப்படித்தான் எல்லாக் கல்யாணமும் நடந்திருக்கு. புதுமை, புரட்சி எல்லாம் நமக்கு வேண்டியதில்ல. அப்படி என்ன ஊர்ல உலகத்துல கிடைக்காத பொண்ணு. வேற பொண்ணு பார்த்துக்கலாம். எங்களுக்கு சரிப்படாதுங்கன்னு சொல்லிட்டுப் புறப்படலாம்.’’

“இருங்க. அவசரப்படாதிங்க” என்றாள் அம்மா அகிலா.

‘‘ஒரு பெரிய விஷயத்தை மறைச்சு எல்லாரை யும் கூட்டிக்கிட்டு வந்து அசிங்கப்படுத்தினது பெரிய தப்பு. உன் பொண்ணைக் கண்டிக் கிறதை விட்டுட்டு என்னை அவசரப்படாதிங் கன்னு சொன்னா என்னடி அர்த்தம்?’’

“சரி... நடந்துடுச்சு. வந்தாச்சு. பார்த்தாச்சு. உதய்யும், அந்தப் பொண்ணும் தனியாப் பேசிட்டு வந்து சம்மதமும் சொல்லிட்டாங்க. இதுக்கப்புறம் பிடிவாதமா எப்படிப்பா நடந்துக்கறது?’’ என்றான் கணேசன்.

‘‘இப்ப என்ன தாலியா கட்டிட்டான்?’’

‘‘மாமா” என்று அழைத்த தாமரை, “இப்ப உதய்தான் முடிவெடுக்கணும் மாமா’’ என்றாள்.

கைகளைப் பிசைந்துகொண்டு அமைதியாக நின்ற உதய்யை நிமிர்ந்து பார்த்தார் சிதம்பரம்.

‘‘என்னப்பா சொல்றே?’’

“தப்பா எடுத்துக்காதிங்கப்பா. போன்லயும் இப்ப நேர்லயும் பேசுனதுல இந்தப் பொண்ணு அமுதா என் லைஃப்ல துணையா வந்தா சரியா இருக்கும்னு தோணுது.’’

‘‘அப்போ அவங்க போடற எல்லா கண்டிஷ னுக்கும் என்னைத் தலையாட்டச் சொல்றியா? அதெப்படி மந்திரம் இல்லாம... சடங்குகள் எதுவும் இல்லாம கல்யாணம் செய்றது? சாஸ்திர சம்பிரதாயங்கள் ஒவ்வொண்ணுக்கும் ஆழமான அர்த்தம் இருக்குப்பா. இந்த ஜெனரேஷன் பிள்ளைங்களுக்கு அதையெல் லாம் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம்கூட இல்லை. நாளைக்கு ஏதாச்சும் தப்பாப் போச்சுன்னா... மனசு உறுத்தும். இதுல நான் விட்டுக் கொடுக்கறதா இல்லை. உனக்கு இந்தப் பொண்ணை அவ்வளவு பிடிச்சிருக் குன்னா... அவரை விட்டுக் குடுக்கச் சொல்லு. போ... போய் நீயே அவங்கப்பாட்ட பேசு. நாங்கல்லாம் இங்கயே இருக்கோம்.’’

“போய்ப் பேசுப்பா” என்றாள் தாமரை.

தயக்கத்துடன் வீட்டுக்குள் வந்தான் உதய குமார்.

‘‘தம்பி... நான் மொதல்லயே தெளிவா சொல்லிட்டேன். உங்க சிஸ்டர் விஷயத்தை மறைச்சு கூட்டிக்கிட்டு வந்தது தப்பு!’’ என்றார் தமிழ்மணி.

“தப்புதான். மொதல்லயே சொல்லிருந்தா எங்கப்பா புறப்பட்டிருக்கவே மாட்டார். வந்து... உங்களுக்கு இந்தச் சம்பந்தம் பிடிச்சி ருக்கறபட்சத்துல... உங்க கொள்கையை விட்டுக்கொடுக்க வாய்ப்பிருக்கான்னு கொஞ்சம் யோசிங்களேன்...’’

‘‘நல்லா இருக்குப்பா நீ சொல்றது. அம்பது வருஷமா நான் கொள்கை பிடிப்போட வாழ்ந்துகிட்டிருக்கேன். இதுவரைக்கும் நூத்துக்கணக்கான சீர்திருத்த திருமணங் களை நானே தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வெச்சிருக்கேன். ஒவ்வொரு மேடையிலயும் சாஸ்திர சம்பிரதாயங்களை விமர்சனம் பண்ணிப் பேசிட்டு வர்றேன். நான் எப்படி மனையில் உக்காந்து மந்திரம் சொல்றது?’’

உதயகுமார், ‘கொஞ்சம் உதவிக்கு வாயேன்’ என்கிற மாதிரி அருகில் நின்ற அமுதாவைப் பார்த்தான். அவளோ பதற்றத்தில் இருந்தாலும் அமைதியாக இருந்தாள்.

“எங்கப்பாவும் பிடிவாதமா இருந்து நீங் களும் பிடிவாதமா இருந்தா எப்படி? யாராச்சும் ஒருத்தர் விட்டுக்கொடுத்தாதானே நல்லது?’’

‘‘அப்பா... ஒரு நிமிஷம் வாங்க” என்று அமுதாவின் அக்கா இனியா தன் தந்தையை அருகில் இருந்த அறைக்குள் அழைத்துச் செல்ல... தனித்து விடப்பட்ட உதயகுமாரும் அமுதாவும் தவிப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.

“இப்படி ஒரு பிரச்னையை நான் எதிர்பார்க்கலை.”

‘‘நானும்தான்” என்றாள் அமுதா.

‘‘ரொம்ப சென்சிட்டிவான விஷயம்.’’

‘‘ஆமாம்.”

‘‘நீங்க ஏதாச்சும் சொல்லலாம்ல?’’

‘‘இந்த விஷயத்துல எங்கப்பாகிட்ட யார் என்ன சொன்னாலும் நடக்காது.’’

‘‘உங்களை நேரடியா கேக்கறேன். உங்களுக்கு உங்கப் பாவோட அதே கொள்கைகள் இருக்கா? அதே சிந்தனைகள் தீவிரமா இருக்கிங்களா? கோயிலுக்குப் போக மாட்டிங்களா?’’

‘‘நான் கடவுள் இல்லைன்னு சொல்ற நாத்திகவாதி இல்லை. ஆனா, கோயில் கோயிலா போற பக்தையும் இல்லை. எந்தக் கோயிலுக்குப் போனாலும் சாமியைவிட சிற்பக்கலைதான் என்னை ஈர்க்கும். ஒரு நான் கன்ஃபர்மிஸ்ட்னு வெச்சிக்கலாம்.”

‘‘அப்படின்னா இந்தக் கல்யாணம் வைதீக முறைப்படி நடந்தா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைதானே?’’

‘‘என்னைக் கேட்டா ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்துல சட்டப்படி பதிவுத் திருமணம் செஞ்சிட்டு ஒரு வரவேற்பு மட்டும் கொடுத்தாப் போதும்னு நினைக்கிறவ.’’

‘‘அய்யர் வந்து மந்திரம் சொன்னா உங்களுக்கு அதுல எதுவும் ஆட்சேபனை இருக்கா? தெளிவா சொல்லுங்க.”

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்னையில்லை.’’

“அப்படின்னா போங்க. போய் உங்கப்பாகிட்டப் பேசுங்க.’’

அமுதா அந்த அறைக்குள் சென்றாள். வீட்டின் வாசலில் சிதம்பரம் ஜெயாவை திட்டிக்கொண்டிருக்க... அறைக்குள் தமிழ் மணி மகள்களிடம் அழுத்தமாக பேசிக் கொண்டிருக்க... நெற்றியைப் பிடித்துக்கொண்டு டென்ஷனாக நின்றான் உதயகுமார்.

ஊரில் உள்ள அந்த ஒரே டீக்கடையின் பெஞ்சில் காடையனும் வெட்டுக்கிளியும் நடுவாந்திரமாக அமர்ந் திருக்க... எதிரே அரை வட்டமாக ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தார்கள்.

வெட்டுக்கிளி ஆவேசமாகப் பேசினான்... ‘‘இந்த தடவை சேலத்துல கலெக்டராபீஸ் வாசல்ல நம்ம நடத்தப் போற ஆர்ப்பாட்டத்துல ஊர்ல உள்ள மொத்த சனமும் கலந்துக் கணும். ஒரு குஞ்சுக் குலுவான் பாக்கியில்லாம வந்தாகணும். எத்தன போலீஸ் வந்து மல்லுக் கட்டினாலும் உக்காந்த எடத்தை விட்டு அசையக்கூ டாது.’’

“இன்னொரு தடவை இங்க வந்து உக்காந்தா துப்பாக்கி சூடு நடத்துவேன் ஜாக்கிரதைன்னு எச்சரிச்சாரே ஒரு போலீஸ் ஆபீஸரு!’’ என்றான் கூட்டத்தில் அமர்ந்திருந்த மேட்டுப்பாதை பாண்டி.

‘‘அதுக்குதான் இந்த தடவை டிவிக்காரங்க, பத்திரிகைக் காரங்க எல்லாரையும் கூப்புட்டு வெச்சு அவுங்க முன்னாடி போராட்டம் நடத்தறோம். பத்திரிகைக்காரங்க முன்னாடி அப்படில்லாம் செய்ய மாட் டாங்க போலீஸ்காரங்க. வேணும்னா தடியடி, தண்ணி பீய்ச்சியடிக்கிறது இப்படிதான் செய்வாங்க” என்றான் காடையன்.

வெந்து தணிந்தது காடு - 9 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“இதுவரைக்கும் ஏழெட்டு போராட்டம் நடத்தியாச்சு. என்ன நடந்துடுச்சு? வெட்டியா போக்குவரத்து செலவு, சாப் பாட்டு செலவுன்னு தண்டம் அழுத்து தான் மிச்சம்’’ என்ற பாண்டியை கோபமாகப் பார்த்தான் வெட்டுக்கிளி.

‘‘ஏண்டா இப்படி முட்டுக்கட்டை போட்டுக்கிட்டிருக்கே... நீயும் இதே ஊர்ல தானே இருக்கே... உனக்கும் சேர்த்துதானே பேசிட்டிருக்கோம். இப்ப வந்திருக்கற கலெக்டரம்மா நல்லது செய்வாங்கன்னு நம்பிக்கை இருக்கு. ஃபாரெஸ்ட் ஆபீஸுக்கு வந்திருக்கற புது ஆஃபீஸர் உதய் சாரும் நமக்கு அனுசரணையா இருக்காரு. நம்ம ஊருக்கு ரோடு இல்லாம அவஸ்தை படறது நம்ம தலைமுறையோட போகட்டும்டா. பள்ளிக் கூடம் போகாம பசங்க கெட்டுப் போவுதுங்க.’’

அப்போது டமடமவென்று மோட்டார் பைக்கில் சத்தம் கேட்டு மொத்தக் கூட்டமும் திரும்பிப் பார்த்தது. உதயகுமார் இறங்கி கைகூப்பியபடி வர... அவனை பெஞ்சில் அமர வைத்து வெட்டுக்கிளியும் காடையனும் எழுந்து நின்று கொண்டார்கள். அவர்களின் போராட்ட திட்டம் பற்றி காடையன் விளக்க... மக்களைப் பார்த்துப் பேசினான் உதயகுமார்.

‘‘உங்க ஊருக்கு ரோடு ஏன் வரமாட்டேங்குதுன்னு யோசிச் சுப் பாருங்க. கிராமத்துல பாதி பேத்துக்கும் மேல பொழைப்புக் காக ஆந்திராவுக்கு மரம் வெட்ட கூலியாப் போய்ட்டு வந்துட்டு இருக்கிங்க. அடுத்த தலைமுறையும் இதையே தொடர்ந்து செய்யணும். அவங்க படிச்சு பெரிய வேலைக்குப் போயிட்டா மரம் வெட்டறதுக்கு ஆள் கிடைக்கா துல்ல? உங்களை இப்படியே வெச்சிருந்தாதான் அவங்க பொழைப்பு நடக்கும்... யார் யாரோ கோடி கோடியா கொழிக்கிறதுக்கு நீங்க உயிரப் பணயம் வைக்கிறிங்க. அம்பது பேர் வெட்றதுக்குப் போனா அஞ்சு பேரு பொணமாதான் திரும்பறிங்க. இன்னிக்கு தேதிக்கு ஆந்திரா போலீஸ் கைது செஞ்சி வழக்கு போட்டு உங்க ஊர் ஜனங்க எழுபத்தி ரெண்டு பேர் ஜெயில்ல இருக்காங்க.”

‘‘பொழைப்புக்கு வேற என்ன வழி இருக்கு இங்க? வெட்டுக் கூலிக்கு ஓசிலயா கூட்டிட்டுப் போறாங்க?’’ என்றான் பாண்டி.

‘‘உங்க உழைப்பை சட்ட விரோதமான செயலுக்குக் கொடுக்கறிங்க. அதனாலதான் பதினைஞ்சு நாள் வெட்டுக்கூலிக்குப் போனாலே அம்பதாயிரம், நாப்பதாயிரம்னு கூலி கொடுத்துகிட்டிருக்காங்க. பாதிக் காசை குடிச்சே தீர்த்துடறிங்க. மீதிக் காசுல துணிமணி, நகைன்னு வீட்டுக்கு கொண்டு வர்றதால பொம்பளைங்களும் பெருசா எதிர்ப்பு காட்டமாட்டேங்கறாங்க.’’

மேட்டுப்பாதை பாண்டி சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த தன் போனை ரகசியத் தொடர்பில் போட்டிருக்க... அந்தப் பக்கம் தன் பென்சில் ஃபேக்டரியில் அமர்ந் திருக்கும் ஜெயபால் மற்றும் ரேஞ்சர் ருத்ர பாண்டியன் இருவரும் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘‘இனிமே இந்த ஊர்லேர்ந்து செம்மரம் வெட்ட யாரும் வர மாட்டோம்னு உங்களுக்குள்ள உறுதியா ஒரு தீர்மானத்துக்கு வந்து சொல்ல முடியாதா?’’ என்றான் உதயகுமார். இந்தக் கேள்விக்கு ஊரே அமைதி காத்தது.

பென்சில் ஃபேக்டரியில் ஜெயபாலின் விழிகள் சிவந்தன.

“இவன் வேலை பார்க்க வந்தானா? இல்ல சீர்திருத்தம் செய்ய வந்தானா? எப்படி தூண்டி விடறான் பாரு... இவனை வேலையி லேர்ந்து தூக்க பிளான் பண்ணிட் டிருக்கேன்னு சொன்னியே... என்னாச்சு?’’

“கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதும் செஞ்சா எஃபெக்ட்டிவா இருக் கும்னு பார்த்தேன்’’ என்றார் ருத்ர பாண்டியன்.

‘‘பொண்ணு பார்க்கப் போனானே... ஃபிக்ஸ் ஆகலையா?’’

‘‘பொண்ணோட அப்பா சீர்திருத்த முறையில்தான் கல்யாணம்னு சொல்லிட்டார். இவங்க சைடுல வைதீக முறைப்படிதான் நடக்கணும்னு நிக்கிறாங்க. நாலு நாள் கழிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்னு பேசி பிரிஞ்சிருக் காங்க. நிச்சயமாயிடுச்சின்னு வைங்க. அடுத்த நாளே நம்ம பிளான் அரங்கேற்றம்” என்ற ருத்ரபாண்டியன் ஜெயபாலின் சிகரெட்டுக்கு நெருப்பு வைத்தார்.

- தொடரும்...