Published:Updated:

நினைவில் காடுள்ள மிருகம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- க.அம்சப்ரியா

“இட்லி மாவே… இட்லி மாவே…” தன்னால் முடிந்த வரை சத்தமாகத்தான் குரல் எழுப்பினான். எத்தனை பேருக்குக் கேட்டிருக்குமென்று சந்தேகம் மறுபடியும் எழுந்தது. இன்னும் கொஞ்சம் சத்தமாகத்தான் கூறிப் பார்க்கலாமே என்று மனம் தூண்டியது. வகுப்பறையில் மெதுவாகப் பேசுகிறவர்களை ‘இன்னும் கொஞ்சம் சத்தமாகப் பேசு… பேசு’ என்று கூறுவதைப் போல் தொண்டைக்குழியின் ஆழம் வரை சென்று தன் குரலை எழுப்பினான். இன்னும் சற்றே கூடுதலாகக் குரல் எழுந்தது. வெயில் வருவதற்குள் நான்கைந்து வீதிகளை முடித்துவிட்டால் பரவாயில்லைதான். இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு வந்ததால் மூச்சிரைத்தது. தன் வயதைக் குறித்து பயம் லேசாய் எழுந்தது.

மூன்று தெருக்கள் சந்திக்கும் முனை அது. சிறு வேப்பமரம், பூக்களோடு நிறைந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, சற்று ஓய்வெடுக்கலாமென உடல் கெஞ்சியது. மனம் வேண்டாமென்று எச்சரித்தது. இது ஓய்வெடுக்கும் நேரமல்லவென்று மனம் மன்றாடியது.

“இட்லி மாவே... இட்லி மாவே…” இன்னும் சற்று உரத்துக் குரல் கொடுத்தான்.

“சார்... உங்க வாய்ஸ் ரொம்ப சிறப்பு… நீங்களே இன்னிக்கு மீட்டிங்ல ப்ரேயர் சாங் பாடுங்களேன்… ப்ளீஸ், மத்த டீச்சர்ஸும் உங்களத்தான் எதிர்பார்க்கிறாங்க.”

உள்ளுக்குள்ளிருந்த, இவன் துரத்தியடித்த இவன் குரல் ஒன்று முந்திக்கொண்டு எழுந்தது. வண்டியின் மீது தைரியமாக வந்து காகமொன்று அமர்ந்தது.

“சூ…” காகத்தையும் குரலையும் சேர்த்தே விரட்டினான்.

நான்கைந்து வீதிகள் சுற்றியாயிற்று. ஐம்பது ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகியிருக்கிறது. விசாலாட்சியோ மிகவும் ஆர்வமாக இன்னும் சற்று நேரத்தில் போனில் அழைக்கக்கூடும். இன்னும் மாவு தீரவில்லை என்று கூறினால் சோர்ந்து போகக்கூடும். இந்த ஆலோசனையைச் சொன்னதும் அவள்தான்.

வேலை விருப்பம் இல்லைதான். வாழ்க்கை விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டதல்ல… வயிறு ஒன்றே தீர்மானிக்கிறது. எதை வேண்டுமானாலும் தள்ளிப்போடலாம். யாரிடம் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம், வயிற்றுடன் பொய் கூற முடியாது. வேறு வழியில்லை. செய்துதான் ஆக வேண்டும்.

தொலைக்காட்சிச் செய்தியில்கூட இருவரும்தான் பார்த்தார்கள். தாங்கள் இதுவரை பார்த்த வேலைகளை இழந்து வேறு வேறு வேலைகளை வயிற்றுக்காகவே செய்யத் தொடங்கியதைப் பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள்.

பதில் கூறுகிறவர்களின் முகம் மலர்ந்தும் வாடியும் இருக்கிறதாகவே தோன்றியது. தான்தான் அப்படி நினைத்துக்கொள்கிறோமோ எனக் கழிவிரக்கம் சூழ்ந்தது. உண்மையில், ஆழ்மனதிற்குள் துயரங்களைப் புதைத்துக் கொண்டுதான் பதில் தருவார்களாக இருக்கலாம். யார் கண்டது? தன்னைப் போலவேதான் வருத்தமாகவும், விதியை நினைத்து நொந்து போயும் இருக்கக்கூடும்.

‘யாராவது பார்த்தால் எதையாவது சுருக்கென்று கூறிவிடுவார்களோ’ என்று படபடப்பாகவும் இருந்தது. முதல் இரண்டு, மூன்று நாள்கள் இப்படித்தான் இருந்தது. முதல் நாளில் கொஞ்சம் நம்பிக்கை தருவதாக இருந்தது.

நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் இரண்டு குடும்பம் சாப்பிடுகிற அளவு மாவு மீதமாகிவிட்டது, விசாலாட்சியின் மனம் வாடவில்லை.

“இருக்கட்டும் விடுங்க… இந்த அளவுக்காவது வித்துச்சேன்னு சந்தோசப்படுவோம்… நாம ரெண்டு நாளைக்கு சூர்யவம்சம் உப்புமா செஞ்சு சாப்பிட வேண்டியதுதான்...”

விசாலாட்சியின் கைப்பக்குவத்தில், இட்லி உப்புமா அத்தனை சுவைதான். விசாலாட்சியின் சமையலுக்குப் பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண்தான்.

நினைவில் காடுள்ள மிருகம் - சிறுகதை

“இன்னிக்கு பாவக்கா கொழம்பு ரொம்ப ருசின்னு கவிதா, ரேணுகான்னு எல்லாரும் மொய்ச்சிட்டாங்கன்னு சொல்லுவீங்க… நீங்க மிச்சம் வைக்காமே சாப்பிட்டீங்களா… வழக்கமா எலி கொறிக்கிற மாதிரிதானா?”

எப்போதும் விசாலாட்சியின் விசாரிப்பு இப்படித்தான் இருக்கும். அது கேலி செய்வது போலவும் இருக்கும். அக்கறையானதாகவும் இருக்கும். பருப்புச் சாதத்திற்கும், புளிச்சாதத்திற்கும் எப்போதுமே தனிருசிதான்.

“இப்படி நெழல் பார்த்து நின்னுட்டா எப்படிங்க யேவாரம் நடக்கும்..? கொஞ்சம் சத்தமா சொன்னாத்தானே, வூட்டுக்குள்ளாற இருந்து யாராவது வருவாங்க… வீதியில இப்படி நின்னாலும் கொரோனா புடிச்சுக்கும் தெரியுமா..?”

குடத்தோடு வந்துகொண்டிருந்த பெண்மணி இவன் அருகே வந்து அதட்டுகிற தொனியிலும், ஆலோசனை கூறுகிற தொனியிலும் கூறிவிட்டு இவனைக் கடந்து போய்க்கொண்டிருந்தாள்.

தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது. அப்போதெல்லாம் எந்தத் தெருவிலாவது குழந்தைகளோ, பெரியவர்களோ சின்ன மரத்தடி நிழலிலும் இருப்பதைப் பார்க்கலாம். பள்ளிக்கூடச் சிறையிலிருந்து இப்போது வீட்டுச்சிறைக்கு சிக்கியிருக்கிறார்கள். யாரும் நேசமாக அணுகக்கூட பயப்படுகிறார்கள். பிறகு எப்படி தைரியமாக மாவை வாங்குவார்கள்.

முன்பகுதியில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மெல்லமாய் சரித்தான். தொண்டைக்குழிக்குள் மெதுவாய் இறங்கியது.

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பின் இடையிலும் இப்படித்தான் கொஞ்சமாகத் தண்ணீரை மெதுவாக சரித்துக் குடிப்பான். மொடக்மொடக்கென்று குடிப்பது தண்ணீரை ரசனையற்றுக் குடிப்பதுபோல இருக்கும். அப்படிக் குடிப்பவர்களைக் கண்டால் பிடிப்பதுமில்லை.

வழக்கமான நாளாக இருந்திருந்தால் பள்ளிக்கூடம், வகுப்பறை, மாணவர்கள், சாக்பீஸ் என்று மகிழ்ச்சியானதாக இருந்திருக்கும். செடி முளைத்து அரும்புவதற்குள் வெடுக்கென்று பிடிங்கி தூர வீசிவிட்டது போல இருக்கிறது.. “செய்யும் தொழிலே தெய்வம்” என்று வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கும்போது எளிய சொல் போலவேதான் இருந்தது.

ஆசிரியர் பணி விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. பயிற்சியின்போதே மாலை நேரத்தில் தனிப்பயிற்சியும் நடத்தி வந்த அனுபவமும் இருந்தது. இதற்கு முன் முடித்தவர்கள் வயது மூப்பு முறையில் பள்ளியில் பணியமர்த்தப்பட்டார்கள். பயிற்சி முடித்துவிட்டு வருகிறபோதுதானா தேர்வுகளின் மூலம்தான் பணி கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும்? அலுப்பாய் இருந்தது.

தனியார் பள்ளியில் சேர்ந்தபோது, முதல் இரண்டு நாள்கள் பரவாயில்லை என்பது போலத்தான் இருந்தது. எப்படியும் மாலை நேரம் தேர்விற்குப் படிப்படியாகத் தயாராகிவிடலாம் என்று தோன்றியது. ஆனால் போகப்போக ஸ்டோர் வேலை, நூலக வேலையெனச் சேர்ந்து கொண்டே போக, வீட்டிற்கு வந்தும் மாணவர்களின் நோட்டுப்புத்தகங்கள் திருத்துவது என்று வேலைப்பளு, தேர்வுக்குத் தயாராவது என்பதே மறக்கடிக்கப்பட்டிருந்தது.

விசாலாட்சியைப் பெண்பார்க்கையில், தன்னைப் போலவே ஆசிரியர் பயிற்சியை முடித்திருந்தது ஒரு விதத்தில் பிடித்திருந்தது. சௌகரியம் போலவும் இருந்தது. அப்போது விசாலாட்சியும் தனியார் பள்ளிக்குத்தான் சென்றுகொண்டிருந்தாள். திருமணத்திற்குப் பிறகும் வேலைக்குச் செல்வதில் விருப்பம் தெரிவித்திருந்தாள். அப்போது ஒரு மனக்கணக்கு இருந்தது. அரசுப்பணிக்கு இருவரும் தேர்வாகிவிட்டால், எப்படியும் மாதம் ஒரு லட்சமேனும் வருமானம் உறுதி.

சொந்தமாக ஒரு வீடு, வெளியே போய்வர ஒரு வாகனம். தன் பரம்பரையில், ஏன் தலைமுறையிலும் ஆசிரியர் வேலைக்கு என்று யாருமே படித்ததில்லை. குறைந்த சம்பளத்தில் அல்லது அதிக வருமானம் தருகிற, நிரந்தரமற்ற, உயிருக்கு ஆபத்தான வேலைகளில்தான் வாழ்க்கையை நகர்த்தியபடியே இருக்கிறார்கள்.

வீடென்று சொல்லிக்கொள்ள இயலாமல் இரண்டு அறைகள் கொண்ட தன் வீடு, சிறு வயதிலேயே சலிப்பூட்டிவிட்டது. கல்யாணத்திற்குப் பிறகு, அந்த வீட்டில் போதுமான வசதி அமையாது என்பதாலும், விசாலாட்சியின் உறவினர்கள், தன் நண்பர்கள் எவர் வந்தாலும் உட்கார்ந்து பேசக்கூட இறுக்கமாகத்தான் இருக்கும். இருவருமே நகரத்திற்குப் பக்கமாக இருந்தால், வேலைக்குச் சென்றுவர வசதியாக இருக்கும், தனியார் பள்ளி ஆசிரியப் பணிக்கும் பொருந்தும் என்பதால் வாடகை வீடு பார்த்துக் குடிவந்தார்கள்.

குறைவான சம்பளம்... கூடுதல் வேலை. எப்படியும் ஜெயித்து விடுகிற கனவு என்றுதான் வாழ்க்கை நகர்ந்தபடியிருந்தது. சட்டென்று எல்லாக் கனவுகளையும் உடைத்து எறிந்துவிடுகிற புயலாய் நுண்மிக்காலம்.

நினைவில் காடுள்ள மிருகம் - சிறுகதை

இனி பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வேலை என்று மனம் உணர்ந்தபோது கையில் இருந்த தொகை வெறும் ஐந்தாயிரம்தான். வீட்டு வாடகை, ஞாயிற்றுக்கிழமைச் செலவுகள், கல்யாணம், சடங்கு என்று விருந்துக்குப் போய் வருகிற செலவுகளென்று வருமானம் போதுமானதாக இருப்பதுபோலவே பிரமை காட்டிக்கொண்டிருந்ததை இப்போதுதான் உணர முடிகிறது. அன்றாட வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழியும்போது, எதிர்காலம் பற்றிய எந்த பயமும் இல்லாமல் இருக்கிறது.

ஆனால் இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என்று கடந்து போய்க்கொண்டிருந்த போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. எப்போதும் விடுமுறைக்காக ஏங்குகிற மனம் இப்போது சபித்துக்கொண்டிருக்கிறது. நிலைமை எப்போது சீராகும் என்று மனம் தவிக்கிறது.

விசாலாட்சிதான் மாவு விற்கிற ஆலோசனைக்குத் தயாரானாள். தான் எப்படியோ வீடு வீடாகச் சென்று விற்றுவிடுவேன் என்றாள். எத்தனையோ ஆலோசனைகள் இருவரின் மனதிற்குள்ளும் வந்து வந்து அலைமோதின. மஞ்சள்தூள் பாக்கெட் போடுவது, சோப் தயாரிப்பது, கோதுமையை மொத்தமாக வாங்கி அரைத்து பாக்கெட் போடுவது, காய்கறிக்கடை போடுவதெனப் பல யோசனைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு சிக்கல் முளைத்தபடியே இருந்தது.

கருணையும் அன்பும் வெகுதூரத்தில் இருப்பதை பலரிடம் கடன் கேட்கத் தயாரானபோதுதான் உணர முடிந்தது. வீட்டிற்குள்ளேயே அனுமதிக்க பயந்துகொள்கிற போது, உட்கார வைத்துக் கடன் கொடுப்பார்களா..? இறுதியில்தான் இட்லி மாவு விற்பனைக்குத் தயாரானார்கள். வண்டியை நகர்த்திக்கொண்டே வீதிக்கு வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தான்.

“சார்… கொஞ்சம் இப்படித் திரும்புங்க…” குரல் வந்த திசையில் பார்வையைத் திருப்பினான். “சும்மாவே வண்டிய தள்ளிட்டுப் போனா, என்ன விக்கிறீங்கன்னு எப்படித் தெரியும்? எண்ணெயா? விக்கறீங்க. செக்கு எண்ணெயா?” லிட்டரு என்ன வெலை?’’

நடுத்தர வயதுப் பெண்மணி கொஞ்சம் வசதிதான் என்பதைத் தோற்றம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் துணுக்குற்றான்.

“இட்லி மாவுங்கம்மா… வாங்குங்க… விலை கொஞ்சம்தான்…”

வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. முன்பின் இந்த மாதிரி வேலைக்கு வந்திருந்தால் எப்படிப் பேசி வியாபாரம் செய்வது என்று தெரியும். வகுப்பறையா, புத்தி சொல்வதற்கு? பேசத் தொடங்கினால் அப்துல் கலாமில் தொடங்கி நெல்சன் மண்டேலாவிற்கு சென்று உள்ளூர் சாதனையாளர் வரை உரையாற்றியிருப்பான்.

`இட்லி, இட்லி மாவோய்...’ என்பதே தொண்டைக்குழிக்குள்ளிருந்து சற்றென மெதுவாகத்தான் வருகிறது.

“ம்... நானே மாவு அரச்சுக்குவேன், இவ்வளவு தூரம் ஊருக்குள்ள வந்து விக்கிறீங்க...உங்களுக்காகவாவது வாங்கத்தானே வேணும். ஒரு கப் ஊத்துங்க.”

பெரிய அளவு கருணை காட்டியது போலான பாவனையில் வீட்டிற்குள் சென்று பாத்திரத்தை எடுத்து வந்தார்.

“மாவு ஒரிஜினலா இருக்கும்தானே. இப்பவெல்லாம் அரிசிய நேரடியாவே அரச்சு வெச்சுக்கிறாங்களாம்… வேணுங்கிறபோது அதக் கலக்கி, இட்லி போடுறாங்களாம்… கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் எனக்கு இது தெரிஞ்சது…”

பாத்திரத்தின் மூடியைத் திறந்து காட்டினான். “இல்லீங்க… இது என் வீட்டுக்காரம்மா தயார் செஞ்சது… படிச்சு முடிச்சுட்டு வேல இல்லாம இருக்கறமேன்னு இதச் செய்றேன்மா.”

“ம்... ஊரே அப்படித்தான் கலங்கிப்போய்க் கிடக்கு… இந்தாங்க, மீதி கொடுங்க…”

ஐந்நூறு ரூபாயை நீட்டினார் பெண்மணி.

“அச்சச்சோ... சில்லறை இருந்தா கொடுத்தா பரவாயில்லே… இவ்வளவு பணம் இப்ப இருக்காதே.’’ இழுத்தான்.

“இது வேறயா… யேவாரம் செய்றவங்க சில்லறை வச்சிக்க மாட்டீங்களா..?’’

பள்ளிக்கூடத்தில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண் குறைந்த மாணவர்களின் அம்மாக்கள் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அப்போதெல்லாம் சொற்கள் பொருத்தமாக, அழுத்தமாக வெளியே வந்து குதிக்கும். ஒவ்வொரு சொல்லும் அவங்களுக்கு நான் முந்தி, நீ முந்தியென நம்பிக்கையூட்டும். இப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி மெளனமானான்.

இதோ வருகிறேன் என்று கூறிவிட்டுப் போன பெண்மணி, பத்து நிமிடக் காத்திருப்பிற்குப் பிறகுதான் வந்தார்.

“இந்தாங்க…’’ பணத்தை நீட்டியபடியே தொடர்ந்தார். ‘‘இந்தத் தெருவில யாரும் இப்படி வண்டியில வர்றவங்ககிட்ட எதுவும் வாங்க மாட்டாங்க… கெழக்கு வலவுலயும், தெற்கால காந்தி நகர்லயும்தான் நல்லா ஏவாரம் நடக்கும்.”

தெரிந்த ஊர்களுக்குச் சென்றால், பள்ளியில் படிக்கிற குழந்தைகளின் வீடுகளுக்கும் செல்ல வேண்டியிருக்கும். பெற்றோர்களும் பார்க்கக்கூடும்! நோட் புத்தகங்கள் புழங்கிய கைகளால், இப்படி எதிர்கொள்வதற்கு மனம் கூச்சப்பட்டுத்தான் சற்று தூரமாய் அறிமுகம் இல்லாத ஊர்ப்பக்கம் வந்திருந்தான்.

அதனால் எந்த வீதியில் என்ன வகையான பொருள்கள் தேவையாக இருக்குமென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

சில தெருக்களில்தான் வாங்கும் மனிதம் குடியிருக்கும். சில தெருக்கள் எதையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும். சில தெருக்களோ அலட்சியமே உருவாக இருக்கும்.

எப்படியும் இன்று மாவை முழுவதும் விற்றுவிட்டால்தான் கொஞ்சமாவது தாக்குப்பிடிக்க இயலும்.

நினைவில் காடுள்ள மிருகம் - சிறுகதை

“தொழில் எதுவா இருந்தா என்ன? செய்யற தொழில்ல பொய்யும் புரட்டும் இருக்கக்கூடாது அவ்வளவுதான்... கூச்சப்படாம செய்யுங்க.”

விசாலாட்சி திரும்பத் திரும்பக் கூறி அனுப்பிய வாசகங்கள். இதைத்தான் மனதிற்குள் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டான். அதனால்தான் கொஞ்சமாவது இப்படி தைரியமாகப் பேசமுடிகிறது.

கடிகாரத்தைப் பார்த்தான். இன்னேரம் பள்ளியாக இருந்தால் மதிய உணவு நேரமாக இருக்கும். நல்ல பசியெடுத்த வேளை. குழந்தைகளோடு அமர்ந்துதான் சாப்பிடுவான். அத்தனை கலகலப்போடு சாப்பிட்டுப் பழகியவனுக்கு தனியே சாப்பிடுவதும், பேச ஆட்களற்று தனித்துப் போயிருப்பதும்கூட பெருங்கொடுமைதான். எப்போதும், யாருடனாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு, சட்டென்று யாருடனும் பேசாமல் இருப்பதும் நரகம்தான்.

“கத்தரி... தக்காளி... வெங்காயம்... வாங்கண்ணா... வாங்கக்கா...”

எதிரில் இரைச்சலான பதிவு செய்யப்பட்ட குரலொலியோடு காய்கறி வாகனம் ஒன்று மெதுவாக வந்துகொண்டிருந்தது. யாருக்குத் தெரியும்... இவர்களும் இதற்கு முன் வேறு வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்களாக இருக்கும். புளிய மரத்தடியில் வண்டி நிற்கவும் ஆறேழு பெண்கள் முகக்கவசம்கூட இல்லாமல் அவசரமாகக் காய்கறி வாகனத்தை மொய்த்துக்கொண்டார்கள்.

இப்படி ஏதாவது செய்திருக்கலாமோ..? இதற்கு வண்டி வாடகைக்கு எடுக்க வேண்டும். காய்கறி மொத்தச் சந்தையில் பார்த்து வாங்க வேண்டும். ஒருநாள் விற்காவிட்டாலும் பெரும் நட்டத்தை எதிர்கொள்கிற தைரியம் வேண்டும். இடுமுதல் பணமும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

வண்டியை எதிர்வீதிக்குள் நகர்த்தினான். கொஞ்சம் வீடுகள் நெருக்கமாக இருந்தன. இங்காவது யாராவது வாங்குவார்களா? தனக்குத் தெரிந்த வகையிலெல்லாம் மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.

“மாவு... இட்லி மாவே…” மறுபடியும் மறுபடியும் குரல் கொடுத்தான். குயில், காகம் போல் இரைவதாகக் கற்பனை எழுந்தது. ‘நினைவில் காடுள்ள மிருகம்’ என்று எப்போதோ வாசித்தது நினைவுக்கு வந்தது. முதலில் உயிரெழுத்தை வாசிக்கிறபோது உயிரெழுத்தாக மாற வேண்டும் என்றும், மெய்யெழுத்தை வாசிக்கிற போது மெய்யெழுத்தாக மாற வேண்டும் என்றும், கவனத்தில் பிசகிய சொற்கள் நினைவில் நிற்பதில்லை என்றும் வகுப்பறையில் போதித்ததே திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வந்து வந்து சென்றது.

காய்கறி வாகனம் நின்றிருந்த இடத்தைக் கடந்தபடியிருந்தான்.

“மாவுக்காரரே... கொஞ்சம் நில்லுங்க...”

காய்கறி வாகனத்திலிருந்து, பெண்ணொருவர் குரல் கொடுத்துக்கொண்டே இறங்கினார். வாகனத்தின் இன்னொரு பக்கம் சிறுவனும் ஒரு ஆணும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பாவும் மகனுமாக இருப்பார்கள். பக்கம் நெருங்கி வந்த பெண்ணுக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் முகத்தில் வாழ்நாளின் மொத்தச் சோர்வும் தெரிந்தது.

“ரெண்டு கப்பு கொடுங்க… பாக்கெட்ல ஊத்திக் கொடுங்க. பொழுதுக்கும் இப்படித் தெருத் தெருவா சுத்திட்டு வீட்டுக்குப் போறப்ப யாரோ அடிச்சுப் போட்ட மாதிரி ஆயிருது. மாவாட்டறதுக்கும் சட்னி அரைக்கிறதுக்கும் எங்க நேரமிருக்கு… இந்த மாவுகூட சட்னியையும் கொடுத்திட்டா சௌகர்யமாகத்தான் இருக்கும்.”

அலுப்பும், லேசான புன்னகையும் அந்தப் பெண்ணுக்கு சற்றே மெருகான அழகாகத் தெரிந்தது.

“நல்ல வேலைக்குத்தான் போயிட்டு இருந்தாரு… திடீர்னு இப்படி ஊரெல்லாம் நோய் வந்து, வேலை இல்லே. அப்புறம் கூப்பிடறேன்னு சொல்லிட்டாங்க. வயிறுன்னு ஒண்ணு இருக்கே. கால்ல, கையில இருக்கிறதையெல்லாம் கழட்டி அடகு வெச்சு, ஒரு வண்டியை வாடகைக்குப் புடிச்சு, இப்படி காய் காய்ன்னு தெருத் தெருவா வர்றோம்… இங்க, அது சொத்த, இது சொத்தென்னு ஆயிரத்தெட்டு கொறை சொல்றாங்க ஜனங்க. வீட்டு வாசற்படிக்கே பொருள் வருதுன்னு சந்தோசமா வாங்கணும்… என்ன புலம்பி, என்ன ஆகப் போவுது..? நீங்க மாவு கட்டுங்க...”

நான்கைந்து நாள்களில், மாவை கவரில் ஊற்றி, நூலைச் சுற்றி, இறுக்கிக் கட்டுவது ஓரளவு பழகியிருந்தது. சாக்பீஸும், டஸ்டரும் புழங்கிய கைகள் தொடக்கத்தில் நன்றாகவே தடுமாறின. எல்லாம் போகப்போக சரியாகிடும்தான்.

எல்லாரும் இப்படித்தான் தொழிலை மாற்றிக்கொண்டிருப்பார்களோ..?

இப்படி, இவ்வளவு மெதுவாக விற்பனை செய்து மாவு எப்போது தீருவது? பாத்திரத்தில் முக்கால் பாகம் அப்படியே இருக்கிறது. ஒரு வீதியில் பத்துப் பேராவது சடசடவென்று வாங்கினால்தான் விரைவில் மாவு தீரும். இப்படி மெதுவாக விற்பனையாகும் நிலையைப் பார்த்தால், இன்றைக்கு மாவு மீதமாகும் வாய்ப்புதான் அதிகம். அப்படி மீந்துபோனால், நாளைய தொழிலுக்கு மறுபடியும் என்ன செய்வது? நேற்று ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது.

தரமான நல்ல இட்லி அரிசி, நல்ல தரமான உளுந்தம்பருப்பு, விசாலாட்சியின் கைப்பக்குவமான அரைப்பு இதுவெல்லாம் நிச்சயமாக மல்லிகைப்பூ இட்லியென்று சொல்வார்களே, அப்படித்தான் இருக்கும். யாராவது வாங்கியவர்கள், இப்படி இருந்ததெனப் பாராட்டிச் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும் அப்படிச் சொன்னால், குறைத்து விலைபேசிப் பொருளை வாங்க முடியாது என்பதால், எதையாவது குற்றம் சொல்லித்தான் திரும்பவும் வாங்குவார்கள். அடுத்ததாக இன்னும் எவ்வளவு வீதிகள் சுற்றியலைவது?

‘சலிப்பும், சோர்வும் தொழிலின் விரோதிகள்.’ விசாலாட்சியின் இன்னொரு தாரக மந்திரம் இது. வருகிற உடல்சோர்வை என்ன செய்வதென்று தெரியவில்லை. காலையில் தொடங்கி மாலை வரை பள்ளியில் நின்று கொண்டே பாடம் நடத்தும்போது, கால்கள் இற்றுக் கீழே விழுந்துவிடுவது போல வலியாக இருக்கும். ஆனாலும் குழந்தைகளின் முகங்கள் அந்தச் சோர்வைத் தற்காலிகமாக நீக்கும். அதுவே பிழைப்பிற்கென இப்படி வீதி வீதியாக அலையும்போது இரட்டைச் சோர்வு சூழ்ந்துகொள்கிறது.

தன்னையும், தங்களையும் எல்லாரும் கைவிட்டுவிட்டதாகவே மனம் பதறியது. கனவில் வருகிற வகுப்பறைகள், குழந்தைகள், சக ஆசிரியர்கள் என யாவற்றையும் உதறிக் கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது.

விசாலாட்சியும் இதையேதான் கூறுவாள். அதுவும் அவள் மழலையர் பிரிவு என்பதால் குழந்தைகளின் தாக்கமும் அதிகம். அவளே சமாதானமும் செய்வாள்.

“நாம எவ்வளவோ பரவாயில்லைங்க… என்கூட வேலை செய்தாங்களே வேணி டீச்சர், அவங்க வீட்டுக்காரரும் ஆசிரியர்தான். ஆனா இப்ப கட்டட வேலைக்குப் போறாராம். நூறு நாள் வேலைக்குக்கூட சிலர் முயற்சி செய்யுறாங்களாம்… நாம சொந்தத் தொழில், யாருக்கும் பயப்பட வேண்டாம்.”

ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தைக் கீழே உருவிக் குரல் கொடுப்பது இன்னும் அசௌகர்யம்.

“மாவு… மாவு… மாவேய்…’’ இப்போது எத்தனை யோசனையிலும் குரல் கொஞ்சம் சத்தமாகவே எழுந்தது. நான்காவது வீதிக்குள் நுழையும்போதே வெளியே வரிசையாக சேர்கள் போடப்பட்டி ருந்தன. பக்கம் போகலாமா, வேண்டாமா..? குழப்பமாக மனம் தடுமாறியது. சூழ்நிலை தெரியாமல் அருகில் சென்று சிக்கலாகிவிட்டால் என்ன செய்வது?

ஆறேழு பேர் அமர்ந்திருப்பது தூரத்திலிருந்தே தெரிந்தது.

“சார், வேணு சார்...”

திடுக்கிட்டது மனம். இதுவும் உண்மைதான். அருகில் சிறுமியொருத்தி நின்றிருந்தாள்.

“சார்… என்னைத் தெரியலையா சார்? நான் அபி சார். ஐந்தாவது பி பிரிவு சார்.’’ நினைவிற்கு வந்தது. ஆனால் இப்படி இந்தச் சூழ்நிலையில் பார்ப்பது மனம் துணுக்குற்றது. அதற்குள் ஆறேழு குழந்தைகள் பின்தொடர்ந்து வந்து சூழ்ந்துகொள்ள, இன்னும் கூடுதலான அவமானம் ஒன்று உடலெங்கும் படர்ந்தது.

ஆடையற்றுத் தெருவில் நிற்கிற அவமானம். என்ன செய்வதென்று தவிப்பு… வண்டியை நழுவவிட்டுவிடுவோமோ என்று பயம். சற்றே கைகளில் நடுக்கம். நாக்கு உலர்ந்து, உடலெங்கும் பரவிய பதற்றம். உள்ளங்கைகளில் வியர்வை.

தன்னை முதலில் நிலைப்படுத்தத் தயாரானான்.

“வீதியில என்னடி கூட்டமா... சொல்லாம எங்கும் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன், மறந்திட்டியா..?’’

சந்துக்குள்ளிருந்து வெளியே வந்த பெண்மணி இவனைச் சுற்றி நிற்கிற குழந்தைகளைக் கண்டு முகம் மாறியது.

“சித்தி… இவங்க எங்க சார்...”

“சார் நீங்கதான் மாவு... மாவுன்னு சத்தம் போட்டதா... நான்தான் சத்தம் கேட்டு வந்தேன். வாங்க… அதோ, சாமியானா போட்டிருக்கே, அந்த வீட்டுப் பக்கமா வாங்க. நேத்து ஒரு பெரிய காரியம்… ஓட்டலுக்குப் போற சூழ்நிலை இல்லே... உங்ககிட்டே மாவு வாங்கிக்கலாம்… ஒரு முப்பது பேருக்குப் போதுமான அளவு மாவு இருக்குமா..?’’

நினைவில் காடுள்ள மிருகம் - சிறுகதை

‘இருக்கு’ எனத் தலையாட்டினான்.

“ஏன் சார்... வாத்தியாரா இருந்துட்டு இப்படி யேவாரம் செய்ய வந்துட்டமோன்னு கூச்சமா… அதெல்லாம் பார்க்கக்கூடாதுங்க சார்... வாங்க, இப்படி வண்டியை நிறுத்திவிட்டு வந்து உட்காருங்க…”

பந்தலுக்குள் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டார். இவனும் கையெடுத்துக் கும்பிட்டான்.

அழைத்து வந்த பெண்மணி உள்ளே போனவர் எப்போது வருவார் என்று மனம் எதிர்பார்த்திருந்தது. இந்த ஊரில் யாரையும் தெரியாது என்று நினைத்திருந்தோம். ஒரு வேளை இந்த ஊருக்கு அந்தச் சிறுமி வந்திருக்கக்கூடும்.

“சார்... இந்தாங்க, இந்தக் காபியைக் குடிங்க...” அந்தப் பெண்மணி, தம்ளரை நீட்டிக் கொண்டிருந்தார். இவனின் தயக்கம் புரிந்திருக்க வேண்டும்.

“பெரிய காரியம்தான். திடீர்னு மயக்கமாயி எறந்துட்டாரு... தீட்டெல்லாம் இல்லே...தைரியமா வாங்கிக் குடிங்க தம்பி...”

பக்கத்தில் இருந்த பெரியவரின் குரலில் பரிவும் அன்பும் உபசரிப்பாய் மிளிர்ந்தது.

“சார்... நாளைக்கு சாயங்காலம் ஐம்பது பேருக்கு ஆகிற மாதிரி மாவு கொண்டாந்துடுங்க… நீங்களே ரெண்டு வகை சட்னியும் தயார் செஞ்சு கொடுத்துடுங்க… அதுக்கு எவ்வளவு கூடுதல் பணம் ஆகுமோ அதையும் கொடுத்திடறோம்… முடிஞ்சா அதே ஐம்பது பேருக்கு உப்புமாவும் செய்ய முடியுமா..?’’

யோசிக்காமல் பதில் கூறினான், “உங்களுக்கு வேணுங்கிறதைச் சொல்லுங்க.. நானே தயார் செஞ்சு கொண்டு வந்திடறேன்…” இப்போதும் வகுப்பறை, மாணவர்கள், சாக்பீஸ் யாவும் நினைவுக்கு வந்தன.