Published:Updated:

வடு - சிறுகதை

வடு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வடு - சிறுகதை

- ஓவியம்: ரவி

வடு - சிறுகதை

- ஓவியம்: ரவி

Published:Updated:
வடு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வடு - சிறுகதை
அனுசுயா எம்.எஸ்
அனுசுயா எம்.எஸ்

‘`ஆச்சுடா கண்ணு... போ… டிரஸ்ஸை மாத்திக்கோ. விரதம்னு இருக்கத் தேவையில்லை. பசிச்சா சாப்பிடு. உடம்பை வருத்திக்காதே. மனசை சாந்தமாக்கத்தான் இத்தனை பூஜைகளும். மத்ததெல்லாம் ஹம் பக்...” - ஸூம் காலில் மாமியார்.

கொரோனா காலத்தில் பெங் களூருக்கும் தஞ்சாவூருக்குமான இடைவெளியைக் குறைக்க ஸூம் செய்ய வேண்டியிருக்கிறது.

“அம்மா... அவள் இன்னும் என் காலில் விழல’’ - ஷ்யாம் சீண்டினார்.

“அக்ஷு... அதெல்லாம் வேண்டாம், அவன் கிடக்கான். இன்னிக்கி லீவ்தானே? லாக் இன் பண்ண வேணாமே? நல்லா ரெஸ்ட் எடு!”

எத்துணை திருப்தியான வரலட்சுமி விரதம். கொரோனா இல்லையெனில் வழக்கப் படி முதல் நோன்பு புகுந்த வீட்டில்தான். மாமனார், மாமியார், ஷ்யாமின் அண்ணா, அண்ணி எனத் திரையில் தெரிந்த புகுந்த வீட்டின் முகங்கள் எல்லாவற்றிலும் மெய்யான பூரிப்பு. மனசெல்லாம் அப்படி ஒரு நிறைவு.

“அப்புறம் ஷ்யாம்... நடராஜன் அங்க வந்தி ருக்கான். இன்னிக்கு சாயங்காலம் உன்னைப் பார்க்க வருவேன்னும் சொன்னான். போன் பண்ணி எப்போ வர்றான்னு கேட்டுடு...’’ ஷ்யாமிடம் மாமியார் சொன்னதும், இவ்வளவு நேரம் இருந்த என் உற்சாக மனநிலை நொடி யில் பறிபோனது.

‘`என்னம்மா லாக்டௌன்ல மாமா இங்க வந்திருக்கார்...’’ - கேட்டார் ஷ்யாம்.

“அவர் கடைசிப் பையன் சுரேஷ் ஒரு பொண்ணை லவ் பண்ணினானாம். ஒண்ணா வேலை பார்க்கறாங்களாம். அவளுக்கு அவங்க சைடுல வேற இடம் பார்த்தாங்கபோல. இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா கிளம்பி இங்க வந்துட்டா. தெருவே வேடிக்கை பார்த்தது. அதுபோக அரசியல் செல்வாக்கு எல்லாம் இருக்கும்போல. பெங்களூரு பொண்ணு. அதான் அவங்க வீட்டுல பேசி சமாதானம், சமரசம்னு விஷயத்தை முடிக்க அங்க வந்திருக்கான்.’’

மாமியார் போனை வைத்தவுடன், நடராஜன் மாமாவின் நெடிய உருவம் மனதுக் குள் வந்தது. கூடவே அவரின் குணங்களும். குறை காண்பது மனித குணம்தான். அவருக்கோ குறைகளை மாத்திரம் காண்பதே குணம். எத்தனை மாதங்கள் கழித்துப் பார்த் தாலும், ‘அன்னிக்கே நான் இதைத் தப்புன்னு சொன்னேன்ல?’ என்று கிளறி நினைவு படுத்துவார். பிறர் குறையைச் சட்டை செய் யாத என் மாமியாரின் குணத்துக்கு நேர் எதிராக ஒரு தம்பி அவருக்கு.

ஏழு மாதங்களுக்கு முன் எனக்குத் திருமண மான புதிதில் தஞ்சாவூரில் இருந்தபோது, நான் கொடுத்த காபியில் சர்க்கரை அதிகம் என்றார். இரண்டு நாள்களில் மீண்டும் காபி கொடுத்தபோது மறக்காமல் சர்க்கரையைக் குறைத்தே போட்டேன். ஆனாலும், அவருக்கு அது அதிகம்போல. இம்முறையும் ஜாஸ்தி என்று மட்டும் சொல்லி இருக்கலாம். ஆனால் அவரோ, “அக்ஷயா... அன்னிக்கே சொன் னேன்ல நினைவில்லை... என்னைச் சர்க்கரை நோயாளி ஆக்காமல் விடமாட்ட போல... ரெண்டு நாள் முன்னாடி சொன்னதைக்கூட மண்டையில நிறுத்திக்க முடியலையா...” என்றதும் சுருக்கென கோபம் வந்தது. மேலும், எங்கெல்லாம் அல்ப காரணங்களுக்காக அநாவசியமாக மட்டம் தட்டப்படுகிறேனோ, அப்போதெல்லாம் அதை எதிர்த்து சீறியதும் நினைவில் வந்தது.

வடு - சிறுகதை

“சின்ன விஷயம்தானேடா? இதுக்கு ஏன் இப்படி எல்லாம் பேசற? நான் வேணா வேற போட்டுத் தர்றேன்’’ என மாமியார் அன்று சொன்னது சற்று ஆறுதல்.

எவ்வளவு ரம்மியமான மனநிலையையும் சிதைக்க அவரால் முடியும். இடம், பொருள், ஏவல் எதுவும் கிடையாது. சிறு வயதில் அம்மாவை இழந்த என்னிடம், ‘உங்கப்பா ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலை?’ என்பதை அருவருப்பான சிரிப்புடன் கேட் டார். தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலைப்படாத செஃல்ப் சென்டர்டு ஆன ஒரு மனிதரின் கீழ்மையை, ‘நான்தான் உத்தமன்’ என்ற மனோபாவத்தை, வறட்டு சம்பிரதாயங்களுக்கும், போலி மரியாதை களுக்கும் பிரதான இடம்கொடுப்பதை, பிறரிடம் மாத்திரம் குறை கண்டுபிடிக்கும் திமிரை, அடுத்தவரை மட்டம் தட்டும் வக்கிர குணத்தை, ‘சரி விடு, இது அவரின் சுபாவம்’ என்றபடி உதறி, சகித்தபடி அடுத்தகட்டத்துக்கு நகர இவர்களால் எப்படி முடிகிறது என எனக்குத் தெரியவில்லை.

சித்தியும் சித்தப்பாவும் ஒருமுறை நடராஜன் மாமா வீட்டுக்குச் சென்ற போது, பார்க்கிங்கில் நின்ற நிமிடம் சித்தப்பாவுக்கு போன் வந்துவிட, ‘நான் பேசிட்டு வர்றேன், நீ உள்ளே போ’ என்று அவர் சித்தியை அனுப்பி யிருக்கிறார். என்ன, ஏதென்று எதுவும் கேட்காமல், ‘ஓ... உன் வீட்டுக்காரர் இல்லாம நீ மட்டும் தனியா வர்ற அளவுக்கு வந்துட்டியா? எல்லாம் பேங்க்ல வேலைபார்க்கிற திமிரா...’ என்று அவர் வார்த்தையைக் கொட்டி யதை ஆற்றாமையுடன் பகிர்ந்து கொண்டார் சித்தி.

பார்கவி அக்கா அன்று சொன்னது இன்றும் நினைவில். ‘`அக்ஷு, எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல மாமா எங்களை விருந்துக்கு அழைக்க வந்தார். அப்போ நான் சுடிதார்ல இருந்தேன். ‘நாளைக்கு விருந்துக்கு வரச்சே, இப்படி அரைகுறையா வராத. எனக்குனு ஊர்ல ஒரு மரியாதை இருக்கு. தெருவே உன் டிரஸ்ஸைப் பார்த்தா சிரிக்கும்... நாணக்கேடா கிடும்’னு சொன்னார். எனக்கு அழுகையா வந்தது. நம்ம மாமியார் தான் உடனே, ‘பார்க்கற கண்ணுலதான் குறை. குழந்தைகிட்ட போய் என்ன பேச்சு இது?’’னு கண்டிச்சாங்க.

தோளைத் தொட்டு நிகழுலகத்துக் குள் கொண்டு வந்தான் ஷ்யாம். ‘`மூணு மணி போல வர்றேன்னு சொல்லிருக்கார். சாப்பிட எதுவும் வேணாம்னுட்டார்.’’

“ம்.’’

“ஹே... ஆர் யூ ஓகே? மாமாவைப் பத்தி அலட்டிக்காதே. உன்னைச் சீண்டினா, நீ பதிலுக்குப் பேசிடு; நான் பார்த்துப்பேன். உன்னை ஹர்ட் பண்ற எதையும், யாரையும் நீ பொறுத்துக்க வேண்டாம்… சரியா?”

அவர் வந்தபோது மாலை 4.30. எப்படி வரவேற்க எனத் தெரியாமல் மையமாகச் சிரித்தேன்.

“என்னம்மா அக்ஷயா... பரவாயில்லையே புடவை எல்லாம் கட்டிக்கிட்டு இருக்க’’ என்றபடி உட்கார்ந்தவர் அணிந் திருந்தது தொப்பை பிதுங்கும் டி-ஷர்ட்டுடன் முட்டி தெரியும் பர்முடாஸ்.

காபி போடும் சாக்கில் நகர்ந்தேன். ஷ்யாமிடம் சுரேஷின் காதல் கதையைச் சொல்வது கேட்டது.

“பொண்ணு பெரிய இடம். ஏக வாரிசு. கல்யாணம் இங்கதான்னு அவங்க சொன்னாங்க. முடியவே முடியாது, ஊருலதான்னுட்டேன். புள்ளையைப் பெத்தவன்... என் கெத்தைவிட முடியுமா? அக்கா சொன்னாளா ஷ்யாம்? இவன்தான் வேணும்னு கிளம்பி வந்துட்டாள். பொண்ணுன்னா அப்படி இருக் கணும். என்ன தைரியம் பாரு... ஹாஹாஹா..!”

இப்போது ஷ்யாம் பேச ஆரம்பித் தார்... ‘`சுரேஷ்தான் வேணும்னு தீர்மானமாக அந்தப் பொண்ணு வந்ததுல எதுவும் தப்பில்லை. அது அவங்களோட பெர்சனல் ப்ளஸ் சூழ்நிலை. ஆனா, அவங்க வந்து வாசல்ல நின்ன சமயம் உங்களுக்கு கோபமே வரலையா மாமா? சின்னதா ஏதேனும்னாக்கூட… ‘தெருவுல என் பேரு என்னாகும்?’, ‘நாணக்கேடு … ஊரு சிரிக்கும்’னு சொல்றவர் நீங்க! இதை எப்படி சகஜமா எடுத்துக்க முடிஞ்சது?” - பட்டென்று ஷ்யாம் கேட்டதும், பேயறைந்தது போலாகிவிட்டார் நடராஜன் மாமா.

‘‘ஷ்யாம்... இதென்ன கேள்வி. என்னதான் உங்க மாமாவா இருந் தாலும், அது அவங்க குடும்ப விவகாரம். அடுத்தவங்க குடும்ப விவகாரத்துல தலையிடறதுக்கு வேற யாருக்குமே உரிமை இல்லை. நீங்க இப்படி யெல்லாம் கேக்கறதால மாமாவோட முகம் எப்படியெல்லாம் மாறியிருக்கு பாருங்க...’’ என்றபடியே பால், டிகாக்‌ஷன், சர்க்கரை மற்றும் காலி கப்களை தனித்தனியாக டீப்பாயில் வைத்தேன்.

அவற்றையெல்லாம் ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, எனை நோக்கித் திரும்பிய நடராஜன் மாமாவின் கண்களில் வழக்கமான உற்சாக ஒளி இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism