Published:Updated:

விலக முடியாத நிழல் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- அசோக்ராஜ்

விஸ்கி லார்ஜ் இரண்டு மடக்கு குடித்துவிட்டு ``பூர்ணிமாவை நீ பார்த்தியா?'' என்றான் அவினாஷ். ‘வெச்சாலும் வெக்காமப் போனாலும் மல்லி வாசம்’ என்று அலறிக்கொண்டிருந்தன ஸ்பீக்கர்கள். எப்போதோ வந்த பாட்டு இப்போது அப்படியே இன்னொரு படத்தில் வந்திருக்கிறது. அதுவும் ஹிட் அடித்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு அதையும் பார்க்கிறார்கள் 90 கிட்ஸ். அதைப் பார்த்துவிட்டு இதையும் பார்க்கிறார்கள் 80 கிட்ஸ். நாலு தடவை ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு எனக்குக் காது புளித்திருந்தது. அந்தப் பாட்டுச் சத்தத்தையும் தாண்டி அவினாஷ் காதருகே...

``ஆமா, ரெண்டு நாள் முன்னாடி பியூட்டி பார்லர் வந்திருந்தா... ஆக்சுவலி நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே எப்போதும் பியூட்டி பார்லர் போவோம்'' என்றபடி அவன் அருகில் மேலும் நெருங்கி அவன் தோளை அணைத்துக் கொண்டேன்.

அவன் கோப்பையை என் கோப்பையால் மோதி, ``ஏன்பா அப்செட்டா இருக்கே?'' என்றேன்.

அவினாஷ் என் அணைப்பிலிருந்து விலகி, ``அவ ஒரு ஓட்டை வாய். அவகிட்ட எதுவும் உளறி வைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?'' என்றான். பாட்டின் அலறல் கேட்காத தூரத்திற்குச் செல்ல முயன்று தோற்றுக்கொண்டிருந்தான். பப் முழுவதும் யுவன், இல்லையில்லை இளையராஜா இசை உச்சஸ்தாயியில் மிதந்துகொண்டிருந்தது.

விலக முடியாத நிழல் - சிறுகதை

நான் அவன் பின்னாலேயே சென்று ``என்ன ஆச்சு டார்லிங்?'' என்றேன். மறுபடி அவனை அணைத்தேன்.

``ப்ச். நந்தினி லீவ் மீ'' என்று என்னிடமிருந்து விலகியவன் ``நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி ஏதும் உளறி வெச்சியா?'' என்றான். நெற்றியைத் தடவிக் கொண்டான்.

நான் அன்று பூர்ணிமாவிடம் என்ன பேசினேன் என்று யோசித்தேன். அன்று நான் அவினாஷின் பொண்டாட்டி விமலாவைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசினேன்தான். ஆனால், அதற்கு காரணம் நானில்லை. ஆரம்பித்தது அவள்தான். வம்பு என்று என்னிடம் யார் வந்தாலும் பதிலுக்கு பதில் பட்டென்று கேட்டுவிடுவேன்.

விமலாதான் பூர்ணிமாவிடம் போன வாரம் என் புது சீரியலின் பாலியல் தொழிலாளி கேரக்டர் குறித்து என்னைக் கேவலமாகப் பேசியிருக்கிறாள். மோசமான அந்தக் கெட்ட வார்த்தையை அவள் சொன்னதாக பூர்ணிமா சொன்னவுடன் எனக்கு குப்பென்று கோபம் வந்துவிட்டது.

``நான் பேசினது இருக்கட்டும் அவினாஷ். அவ என்னைப் பத்தி என்ன சொல்லியிருக்கா தெரியுமா?''

``எவ?''

``அதான் உன் அருமைப் பொண்டாட்டி!''

``என்ன சொன்னா?''

``அரசி சீரியல் கேரக்டர் அப்படியே அச்சு அசல் என் நிஜ கேரக்டராம். அடுத்தவ புருஷனைக் காசுக்காக வளைச்சுப் போட்டுப் பணம் பறிக்கிறதுதான் என் தொழிலாம். என்னைக் கெட்டவார்த்தை சொல்லித் திட்டியிருக்கா. இப்படிச் சொன்னா எந்தப் பொண்ணு சும்மா இருப்பா சொல்லு?''

``ஓகே. அதுக்கு நீ என்ன சொன்னே?''

``பொண்டாட்டி ஒழுங்கா இருந்தா எந்த ஆம்பளையும் ராத்திரி வீட்டுக்கு வந்துடுவான்னு சொன்னேன்.''

``ஏண்டி உனக்கு இந்த புத்தி? அவளே நம்மளப் பத்தி வர்ற கிசுகிசுவெல்லாம் படிச்சுட்டு டெய்லி சண்டை போடறா.''

``எங்க வீட்ல மட்டும் என்னை என்ன கொஞ்சிட்டிருக்காங்களா அவினாஷ்? எங்க அம்மா எனக்கு சின்சியரா மாப்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எவனுக்காவது ரெண்டாந்தாரமா போய்டுவியோன்னு பயமா இருக்குன்னு என்கிட்டயே சொல்றாங்க...'' விட்டால் அழுதுவிடுவேன்போல என் குரல் இருந்தது. அடைத்த தொண்டையை விஸ்கியால் நனைத்தேன்.

``வேற என்ன சொன்னே பூர்ணிமாகிட்டே?''

நான் சற்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் தயங்கித் தயங்கி ``அவளைப் பார்க்கறதுக்கு முன்னாடி என்னைப் பார்த்திருந்தா என்னைத் தான் நீ கல்யாணம் பண்ணியிருப்பேன்னு சொன்னேன்.''

அவினாஷின் முகம் கடுகடுத்தது. ``இப்படிச் சொன்னா... அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரிஞ்சுதான் சொன்னியா நந்தினி?''

``என்ன வேணாலும் பண்ணட்டும். அதுதானே உண்மை. நீ அன்னிக்கு அப்படித்தானே சொன்னே?'' - போன வாரம் அவினாஷும் நானும் ரிசார்ட் வீட்டில் இருந்தபோது அவன் சொன்னதை அவனுக்கே நினைவுபடுத்தினேன். ஒரு விதத்தில் அதை மேலும் ஊர்ஜிதப்படுத்தவே அப்படிச் சொன்னேன்.

``அது ஏதோ ஒரு மூடுல சொன்னது...'' அவினாஷ் மிக அலட்சியமாக இப்படிச் சொன்னதும், என் கண்களில் நீர் திரண்டது. அதை அவன் பார்த்திடாதவாறு,

``என்ன மூட்? என்னைப் பார்க்கும்போதெல்லாம் உனக்கே ஒரே `மூட்' தானே?'' என்றேன். என் உடைந்த குரல், நான் அழுகிறேன் என்பதை அவனுக்கு உணர்த்தியிருந்தது. அவினாஷ் மெளனமாக இருந்தான். விஸ்கியை ஒரு மிடறு விழுங்கினான்.

விலக முடியாத நிழல் - சிறுகதை

``உனக்கு விமலாகூட கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. குழந்தை இல்லை. அவளுக்கும் உனக்கும் அண்டர்ஸ்டேண்டிங் சரியில்லை. அவளை டைவர்ஸ் பண்ணிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ அவினாஷ்.''

``அது அவ்ளோ ஈஸியான காரியம் இல்லை.''

``அப்படின்னா என்னை விட்டுடு. இது போதும்! இனிமேலும் உன்னை நம்பி ஏமாற நான் தயாரா இல்ல'' என்றேன். கையில் வைத்திருந்த கோப்பையைக் காலி செய்தேன். பப்பிலிருந்து வெளியேறி, காரை எடுத்தேன். அவினாஷ், விமலாமீதுள்ள கடுப்பை ஆக்ஸிலேட்டரில் காட்டினேன். கார் என் மனம்போல் சினந்து சீறியது. இந்த அவினாஷின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிட்டேன். அம்மா சொன்னாள். `பெரிய ஹீரோ அவன். டைம்பாஸுக்கு ஏதாவது செய்வான். நம்பி ஏமாந்துடாதே' என்றாள். அவளுக்குத் தெரிந்திருப்பதுகூட எனக்குத் தெரியவில்லை.

அப்படித்தான் பேசினான் அவன். என்னை ‘உலக அழகி’ என்றான். நான் இருக்க வேண்டிய இடமே வேறு என்றான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் கனவுக் கன்னியாக என்னை மாற்றுகிறேன் என்றான். இதே பப்பில்தான் அவனை முதலில் சந்தித்தேன்.

அவனாக வந்தான் ``நீங்க டி.வி சீரியல் ஆக்டர் நந்தினி தானே?'' என்றான். அத்தனை பெரிய ஹீரோ என்னிடம் வந்து பேசியதில் நான் விதிர்த்து நின்றேன்.

``யெஸ்... மை குட்னஸ்... உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கு... அம் யுவர் ஃபேன் சார்!'' என்றேன்.

``ஓ ஸ்வீட்டி... இன் ஃபேக்ட் அம் யுவர் ஃபேன். இந்த சார்லாம் வேணாம்'' என்றான். அவன் வார்த்தைகளில் கொஞ்சம் தேன் இருந்தது. என் மூளையில் கொஞ்சம் வைன் இருந்தது. கிறங்கிப் போனேன். நம்பர்கள் மாறின. நாள்கள் மாறின.

ஒரு நாள் 'ஐ லவ் யூ' என்றான். ஒரு நாள் இன்னும் மேலே போய் 'ஐ நீடு யூ' என்றான். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிக்க ஆரம்பித்தேன். எனக்காக ரிசார்ட் ரோடில் தனியாக ஒரு ஃப்ளாட் வாடகைக்கு எடுத்தான். பல இரவுகள். பல போதைகள். பல தேவைகள்.

வீட்டிற்கு வந்தேன். அம்மா சாப்பிடச் சொல்லி வேண்டாம் என்று என் ரூமிற்குச் சென்றேன். என் நடை தள்ளாட்டமாக இருந்தது. ``நீ திருந்தவே போறதில்லை'' என்ற அம்மாவின் குரலை ரூம் கதவால் சாத்தினேன்.

படுக்கையில் சாய்ந்து பூர்ணிமாவுக்கு அடித்தேன். ``என்னடி சொன்னே என்னைப் பத்தி விமலாகிட்டே?'' என்றேன் எடுத்த எடுப்பிலேயே.

``ஏண்டி என்னாச்சு?'' அவள் குரலில் சின்னப் பதற்றம்.

``அவினாஷ் என்னையும் உன்னையும் திட்டறான். இங்க கேட்கறத அங்கயும், அங்க கேட்கறத இங்கயும் வத்தி வைக்கறதுதான் உன் பொழப்பா... பிட்ச்'' என்றேன். என் குரல் உளறலாக இருந்தது.

பூர்ணிமா சிரித்தாள். ``குடிச்சிருக்கியா? ரெண்டு பேருக்கும் ஃப்ரெண்டா இருந்து தொலைச்சேன் பாரு, என்னைச் சொல்லணும்டி. நீங்க ரெண்டு பேரும் அதுக்குத்தானே என்னை யூஸ் பண்றீங்க?'' என்றாள்.

``நீ அவளைப் பத்தி எதுவும் என்கிட்டே பேசாதே...''

``அப்படின்னா அவினாஷ் பத்திப் பேசவா? அவனை நம்பாதே. அவனைப் பத்தி ஏதாவது கிசுகிசு வர்றதுக்காகவும், ஒரு த்ரில்லான கிளுகிளுப்புக்காகவும்தான் உன்கூட பழகிட்டிருக்கான். அம்மா சொல்றதைக் கேளு. உன் அழகுக்கு எத்தனையோ நல்ல பசங்க வரிசைகட்டி நிப்பானுங்க. அவினாஷ் எந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தாலும் இதைத்தான் செய்வான்.''

``அப்படின்னு யார் சொன்னா உனக்கு? அவினாஷ் விமலாவை கூடிய சீக்கிரம் டைவர்ஸ் பண்ணிடுவான். நான் பண்ண வைப்பேன்.''

``டைவர்ஸ் பண்ணிடறேன்னு அவன் உன் கிட்ட என்னைக்காவது சொல்லியிருக்கானா?'' யோசித்துப் பார்த்தால் அவன் இதுவரை சொல்லியிருக்கவே இல்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பான்.

``சரி, மேல சொல்லு'' என்றேன்.

``மேல என்ன சொல்றது? அவன் நிச்சயம் சொல்லியிருக்க மாட்டான். அவனுக்கு விமலாவைப் பிடிக்கும். எந்தக் காலத்துலேயும் அவளை விட்டு வர மாட்டான். உங்க ரெண்டு பேர்கிட்டயும் டபுள் ட்ராக் ஓட்டிட்டிருக்கான் அவன்'' - பூர்ணிமாவின் வார்த்தைகளில் உண்மை இருப்பதை என்னால் உணர முடிந்தது. அதனால் அழுகை வந்தது. அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்தேன்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. இடைப்பட்ட நாள்களில் அவினாஷை நானும், என்னை அவினாஷும் அழைக்கவில்லை. ஒரு வாட்ஸப் கூட இல்லை. நிஜத்தில் அவனை என்னால் மறக்க முடியவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடவுளே, அடுத்தவள் புருஷனைக் காதலிக்கும்படி என்னை ஏன் படைத்தாய்?

`நீ உயிருடன் இருக்கிறாயா?' என்று அவனுக்கு வாட்ஸ் அப் செய்தேன். உடனடியாக... `ஏன், இருக்கிறது பிடிக்கலையா?' என்று பதில் அனுப்பினான்.

`ஐ நீடு யூ' என்று அனுப்பினேன். ஓர் இரவில் காதலுடன் என் காதருகே அவன் சொன்ன அதே வார்த்தைகள். அவன் செல் திரையில் ஒளிர்ந்திருக்கும். முதல் தடவையாக இப்படிச் சொல்கிறேன். என்ன நினைப்பான்? மனசு மாறி இரவு ரிசார்ட் வீட்டுக்கு அழைப்பானா?

`திஸ் இஸ் ஓவர்' என்று அனுப்பியிருந்தான். உடனே அவனுக்கு போன் அடித்தேன். அவன் எடுக்கவே இல்லை. மறுபடி மறுபடி அடித்துக் கொண்டிருந்தேன். அவன் எடுக்கவே இல்லை. என் போனைத் தூக்கிச் சுவரில் வீசினேன். அதன் திரை மட்டும் விரிசல் கண்டு கீழே விழுந்தது. அம்மா பார்த்தாள். என்ன என்றுகூடக் கேட்கவில்லை. அவளுக்கு எல்லாம் புரிந்திருந்தது. நானாக அழுது முடித்து ஒரு தெளிவுக்கு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.

ஒரு மாதமாகப் பல காரணங்கள் சொல்லி ஷூட்டிங் போகாமல் தவிர்த்து வந்தேன். அம்மா காட்டிய மாப்பிள்ளை போட்டோக்களைத் தூர வீசினேன். ஒரு நாள் பூர்ணிமா வீட்டிற்கே வந்து துக்கம் விசாரித்தாள். அவள் விசாரிப்பில் கிண்டல்தான் தொனித்தது.

``பெரிய அமர காவியம்டீ உங்க காதல்'' என்று சிரித்தாள். நான் அவளை உஷ்ணத்துடன் பார்த்தேன்.

``உனக்குத் தெரியுமா? விமலா கன்சீவ் ஆகிட்டா... பல நாள் ட்ரீட்மென்ட் பலன் கொடுத்துடுச்சு. ரெட்டைக் குழந்தை ஃபார்ம் ஆகியிருக்கு'' என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் என்னை அறியாமல் ஒரு சந்தோஷம் என்னுள் பரவியது. ‘குழந்தை இல்லை என்று அவினாஷ் எவ்வளவு கவலைப்பட்டான். கடவுள் கண் திறந்துவிட்டார். அவர்கள் நல்லாருக்கட்டும்’ என்று மனதுக்குள் வாழ்த்தினேன்.

விலக முடியாத நிழல் - சிறுகதை

அவனை இனிமேல் நாடுவது முறையில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அவினாஷை மறக்க ஆரம்பித்திருந்தேன். வேறு போன் வாங்கினேன். அம்மா காட்டிய சில பையன்களில் ஒருவனை `அழகா இருக்கான்' என்று சிரித்தேன். அம்மா கண்களில் மகிழ்ச்சி பொங்க, ‘விசாரிக்கிறேன். பையன் பேரு சரண். நல்ல குடும்பமா இருந்தா முடிச்சிடலாம்' என்றாள்.

டைரக்டருக்கு போன் செய்து திரும்பவும் ஷூட்டிங் வருவதாகச் சொன்னேன். பழையபடி சகஜமான, காதல் என்ற சாத்தானின் துன்புறுத்தல் இல்லாத அவினாஷிற்கு முந்தைய என் அழகான வாழ்க்கை என்னை முழுவதுமாக வியாபிக்கத் தொடங்கியிருந்தது.

ஒரு ஞாயிறு மாலை தட்டில் இரண்டு காபிக் கோப்பைகளுடன் வந்த அம்மா, அந்தப் பையன் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் என்றும், அவனுக்கும் என்னைப் பிடித்திருப்பதாகவும் சொல்லி அவன் நம்பரை எனக்குக் கொடுத்து மெசேஜ் அனுப்பச் சொன்னாள்.

வராண்டா மூங்கில் ஊஞ்சலில் உட்கார்ந்து கையில் காபியுடன் `ஹாய், திஸ் இஸ் நந்தினி' என்று அவனுக்கு வாட்ஸ் அப் அனுப்பினேன். அவனிடமிருந்து பதில் வருவதற்குள்,

`நீ அப்பாவாகப் போகிறாய்... வாழ்த்துகள். இனி நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்' என்று அவினாஷுக்கு வாட்ஸ் அப் அனுப்புவதற்காக டைப் செய்ய ஆரம்பித்தேன்.

திடீரென்று தலை சுற்றியது. அடிவயிற்றில் புரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. பாதி வார்த்தைகளில் வாட்ஸ் அப் வாழ்த்து அப்படியே தொங்கிக்கொண்டிருக்க... அம்மா கொடுத்த காபி பழைய பாலில் தயார் செய்ததோ என்று நினைத்தபடியே ஓடிப்போய் பாத்ரூமில் குவாக் குவாக் என்று வாந்தி எடுத்தேன்.

``கெட்டுப் போன பாலா அம்மா... வயித்தைப் பிரட்டுது'' என்று கத்தினேன். மேலும் பிரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தேன். அம்மா ஓடி வந்து எட்டிப் பார்த்தாள். பார்த்தாள் என்பதைவிட முறைத்தாள் என்பதே சரி. அவள் முறைத்த முறைப்பில் எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது. நான் பார்வையைத் தழைத்துக்கொண்டேன். ஒரு துண்டை எடுத்துக்கொண்டு ஹால் சோபாவில் உட்கார்ந்தேன். மூச்சு வாங்கியது. நெற்றி வியர்த்திருந்தது.

அம்மா அதே முறைப்புடன் ``தள்ளிப் போயிருக்கா?'' என்றாள். நான் அவினாஷுக்கு அனுப்ப இருந்த மெசேஜை அழித்தேன்.