Published:Updated:

பத்தாப்பு - சிறுகதை

பத்தாப்பு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பத்தாப்பு - சிறுகதை

- அசோக்ராஜ்

பத்தாப்பு - சிறுகதை

- அசோக்ராஜ்

Published:Updated:
பத்தாப்பு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பத்தாப்பு - சிறுகதை

காலை பத்தரை மணிக்கு வெள்ளை நிற சைலோ காரில் அதைவிட வெள்ளை நிறத்தில் மனைவி மற்றும் பத்து வயது மதிப்பில் ஒரு சிறுமியுடன் வந்து இறங்கினார் அவர். ஜாடையில் அப்பாவை உரித்துவைத்திருந்தாலும் நிறத்தில் அம்மாவைக் கொண்டிருந்தாள், அந்தக் குட்டி. அசப்பில் தெலுங்கு சினிமா வில்லன் தோரணையிருந்தது அவரிடம். மூன்று தங்கச் சங்கிலிகளைக் கழுத்தில் அணிந்திருந்தார். ஒவ்வொன்றும் இருந்த அடர்த்தியை வைத்துப் பார்த்தால் குறைந்தது தலா பதினைந்து சவரன் இருக்கும். ஆக கழுத்தில் மட்டும் நாற்பத்தைந்து சவரன் தங்கம்.

காதில் வைரக்கடுக்கன். கட்டைவிரலை மட்டும் நிராகரித்து, ஏனைய எட்டுவிரல்களிலும் விதவிதமான ரத்தினக் கற்களில் மோதிரங்கள் ஜொலித்தன. மறுபடி சவரன் கணக்கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க போரடிக்கிறது எனக்கு. அவரே இப்படி என்றால் அவர் மனைவியும் மகளும்? இல்லை, அவர்கள் இவரைவிட சற்று குறைத்துதான் தங்கத்தைத் தாங்கியிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததுமே எனக்கும் முத்தண்ணனுக்கும் ஏதோ பெரிய பார்ட்டி என்று பட்சி சொல்லிவிட்டது. அவர் ‘விடக் கூடாது' என்று கண்களால் சொன்னார். நானும் ‘இந்த பார்ட்டியை விடவே கூடாது அண்ணே' என்பதுபோல கண்களில் பதில் சொன்னேன். நாட்டில் ரியல் எஸ்டேட் வியாபாரம் படுத்த படுக்கையாகி தசாப்தம் ஆகிறது. ரியல் எஸ்டேட் செய்கிறேன் என்றால் ‘சோற்றுக்கு என்ன செய்கிறாய்’ என்று திருப்பிக் கேட்கும் நிலை. நானும் முத்தண்ணனும் புதையலை பூதம் காத்த கதையாக தினமும் ப்ளாட் ஆபீஸில் வந்து படுத்துத் தூங்கிச் செல்கிறோம். ஆறு மாதமாக வருபவர்கள் எல்லாம் விலை விசாரிக்கிறார்களே தவிர, அட்வான்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் என்று அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்த நேரத்தில் இப்படி ஒரு பார்ட்டி வந்தால் விடுவோமா?

பத்தாப்பு - சிறுகதை

முத்தண்ணன் கிட்டத்தட்ட கார் அருகில் ஓடினார். அவர்தான் இந்த வான்மதி நகரின் வாட்ச்மேன், புரோக்கர், பதிவு அலுவலகத்தில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர் எல்லாம். என் முதலாளிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்தப் பகுதியில் அவர் வீட்டுமனை லே அவுட் அமைத்தாலும், அந்த ஊர் ஆள் ஒருவரை அந்த நகரில் பொறுப்புக்கு அமைத்துவிடுவார். வயலைக் குலைத்து வீட்டுமனைகள் செய்து விற்கும் வியாபாரம் என்பதால் பிரச்னைக்கு என்றும் பஞ்சம் இருக்காது. திடீர் திடீரென்று ஆக்கிரமித்தோம் என்று வருவார்கள்; மரத்தை வெட்டினோம் என்று வருவார்கள்; வரப்பை உடைத்தோம் என்று வருவார்கள். எல்லோரையும் தன்னக்கட்டுவதற்கு உள்ளூர் ஆசாமி ஒருவரை வைத்துக்கொள்வதுதான் உசிதம் என்று முதலாளி நினைப்பார். அப்படி வந்து சேர்ந்தவர்தான் இந்த முன்னாள் பெருமாண்டி ஊராட்சி பிரசிடெண்ட் முத்தண்ணன். கையெழுத்து மட்டும் போடத் தெரிந்த வெள்ளந்தி ஆசாமி. ஒரு வீட்டுமனை முடிந்தால் அவருக்கு ஒரு சதவிகித கமிஷன். மற்றபடி சம்பளம் எல்லாம் கிடையாது. அவ்வப்போது கைச்செலவுக்கு ஏதாவது முதலாளியிடம் வாங்கிக்கொள்வார்.

பூத்துண்டைக் கக்கத்தில் செருகிக்கொண்டு அவர் ஓடுவது வயதின் பொருட்டு மிகைதான் எனினும் அவருக்கு வேறு வழியில்லை. எப்படியாவது இந்த மாதம் ஒரு ப்ளாட்டாவது வியாபாரம் முடித்தாக வேண்டும். சென்ற வாரம் சைட் விசிட்டிற்கு வந்த முதலாளியிடம் முன் பணம் கேட்ட முத்தண்ணனைச் செல்லமாகக் கடிந்துகொண்டார் முதலாளி. கேட்ட பணத்தைக் கொடுத்தார் எனினும் கணக்கு ஏறிக் கிடக்கிறது என்று நொந்துகொண்டுதான் சென்றார்.

‘‘வாங்க... வாங்க...'' என்ற முத்தண்ணனையும், பின்னால் முழு ஃபார்மல் உடையில், பாலீஷ் செய்யப்பட்ட கறுப்பு ஷூ பளபளக்க நின்ற என்னையும் பார்த்து மையமாகச் சிரித்துவிட்டு, ‘‘ஆந்திராவில கன்ஸ்ட்ரக்‌ஷன் பிசினஸ் செய்றேன். சொந்த ஊர் இதுதான். இங்கேயே செட்டில் ஆகலாம்னு ஒரு ஐடியா இருக்கு. உன் கிட்ட என்ன விலை போயிட்டிருக்கு ப்ளாட்டெல்லாம், சொல்லு?’' என்றார். அவர் பேச்சு தமிழுடன் தெலுங்கைச் சேர்த்து அரைத்தது போலிருந்தது. ‘உன்' என்றுதான் சொன்னார். அதனால் அது முத்தண்ணனைப் பார்த்து அல்ல என்று முத்தண்ணன் நினைத்துக் கொண்டார். என்னிடம் திரும்பி நீயே சொல்லு என்பதுபோல் பார்த்தார்.

‘‘எங்க கிட்ட இப்போதைக்கு சதுரடி 1,200, 1,800, 2,400 இப்படி எல்லா சைஸ்லயும் ப்ளாட்ஸ் இருக்கு. இங்க மட்டும் இல்லை... கும்பகோணம் டவுன்ஷிப்ல பல இடத்துல லே அவுட்ஸ் போட்டிருக்கோம் 600 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாய் வரைக்கும் ப்ளாட்ஸ் இருக்கு. எல்லாமே அப்ரூவ்டு. நான் ஓனர் இல்லை; மார்க்கெட்டிங் பண்ணிக் கொடுக்கிறேன்” என்றேன். தோரணையில் ஒரு எம்.பி.ஏ-வுக்கு உரிய மிடுக்கு காட்டினேன்.

‘‘அப்படியா? ஓனரை வரச் சொல்லு; பேசி முடிச்சிக்கலாம். இந்த லே-அவுட்ல எது எல்லாம் மிச்சம் இருக்கோ அல்லாத்தையும் எடுத்துக்கறேன்! இந்த ஏரியா எங்களுக்குப் பிடிச்சிருக்கு.”

இது ஏது அதிரிபுதிரி வியாபாரமாக இருக்கிறதே? ரியல் எஸ்டேட் தொழிலே நத்தையாக ஊர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஒரே பார்ட்டி எல்லா மனைகளையும் வாங்கிக்கொள்ளப் போகிறாரா?

எனக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. என் மூளை மிக வேகமாக யோசித்துக்கொண்டிருந்தது. மொத்த மனைகளையும் முடித்துக் கொடுத்தால் தேறுகிற பணத்தை முன்பொரு நாள் நானும் முத்தண்ணனும் அசுவாரஸ்யமாகக் கணக்குப் போட்டிருந்தோம். அது இப்படி நிஜமாகவே நடக்கும் வாய்ப்பு வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. வான்மதி நகர், பெருமாண்டியிலிருந்து அசூர் செல்லும் வழியில் சென்னை பைபாஸ் குறுக்கே வரும் இடத்தில் இருந்த இரண்டு ஏக்கர் காய்ந்த நஞ்சை நிலத்தில் உருவானது. சிறிது பெரிதாக இடத்தை அதிகம் வீணடிக்காமல் அமைத்திருந்த மனைகளின் எண்ணிக்கை நாற்பது. ஆனால் மொத்தமாக இது வரை பன்னிரண்டு மனைகள்தான் ஓடியிருந்தன. மீதம் இருக்கிற மனைகள் மொத்தத்தையும் இவர் ஒருவரே வாங்கினார் எனில் எனக்கும், முத்தண்ணனுக்கும் வருகிற கமிஷன் மட்டும் தலா ஆறு லட்சம் தேறும். கனவில் மட்டுமே நடந்தேறக் கூடிய அம்சங்கள் இவையெல்லாம். எனினும் ஏன் முடியாது என்று தோன்றிக்கொண்டிருந்தது.

ஆரம்பத்திலேயே முதலாளியிடம் சிட்டிங் கொடுத்துவிட்டால், இது நானோ முத்தண்ணனோ பெருமுயற்சி செய்து முடித்த டீல் என்று வராது. நாங்களே விலை, அட்வான்ஸ், பத்திரப் பதிவு என்று எல்லாவற்றையும் முன் முடிவு செய்து பார்ட்டியை ரெடிமேடாக அழைத்துச் சென்றால்தான் முதலாளி மகிழ்வார். ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து சுணங்காமல் கமிஷன் கொடுப்பார். இல்லாவிட்டால், ‘நீயா பேசி முடிச்சே... நானில்ல பார்ட்டியை மடிச்சேன்' என்பார். இது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எனவே முழுதாக இந்த பார்ட்டியின் டீலிங்கை இங்கே முடித்துவிட்டு கடைசியாக முதலாளியிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். வந்திருக்கிற பார்ட்டியைவிடவும், என் முதலாளி பெரிய கை என்பதாகப் பேசினேன். ஒருவிதத்தில் அது உண்மையும்கூட. கும்பகோணம் டவுனில் இருபது வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மூன் புரொமோட்டர்ஸைத் தெரியாதவர்கள் கிடையாது.

சாலையில் செல்லும் பத்துப் பேரில் இருவர் இவரிடம் மனை வாங்கியிருப்பார்கள், அல்லது நிலத்தை விற்றிருப்பார்கள். அப்படி ஒரு கொழுத்த டேட்டா பேஸ்.

‘‘சார்... முதலாளி வரமாட்டார் சார். அட்வான்ஸ் கொடுக்கிற ஸ்டேஜ்லதான் அவரைப் பார்க்க முடியும். டீலிங் நீங்க எங்ககிட்டயே பேசலாம். டு பி ஃப்ராங்க் வித் யூ, ஹி இஸ் வொர்க்கிங் பார்ட்னர்'' என்று முத்தண்ணனைக் காட்டினேன். தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் தத்துபித்தினேன். ஆனால் அவர் முத்தண்ணனைப் பார்த்த பார்வையில் என் வார்த்தையை அவர் நம்பவில்லை என்று புரிந்தது. எனினும் அதை அவர் மேலும் குடையவில்லை.

‘‘அப்படியா? சரி, லே அவுட் கொடு. எந்த ப்ளாட்லாம் ஓப்பன்ல இருக்கு, மார்க் பண்ணிக் கொடு'' என்றார். ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த சிறிய ப்ளாட் அலுவலகத்திற்குள் வந்தார். மின் விசிறி இருந்ததே தவிர அது உஷ்ணத்தைத்தான் மேலிருந்து கீழே தள்ளிக்கொண்டிருந்தது. ஒரு முற்றிய வாழைத்தாரை காலையில் வைத்தால் மாலையில் பழுத்துவிடும்.

அவர் மகள் ஏதோ சொன்னாள். அதில் ‘மாம்’ என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்தது.

‘‘அவளுக்கு ஹீட் சரிப்படலை... நாம அல்லாரும் வெளிலயே ஒக்காரலாமா... வெளில சேர் போடேன். உன் பேரென்ன?''

‘‘ஜெகன்'' என்றேன். எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனேஜர் என்று எழுதியிருக்கும் என் விசிட்டிங் கார்டை பந்தாவாக நீட்டினேன். அதை வாங்கி சற்றும் பார்க்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அவர் சொன்னபடியே நாலைந்து பாலிமர் நாற்காலிகளை வெளியே போட்டு உட்கார்ந்தோம். நானும் ஆந்திராக்காரரும் அருகருகே உட்கார, எனக்கு அருகில் முத்தண்ணன் உட்கார, அவருக்கு அருகில் அவர் மனைவி உட்கார்ந்தார். இது எதுவும் எனக்கு சம்பந்தம் இல்லை என்று சற்றுத் தள்ளி எனக்கு எதிரே உட்கார்ந்த அவர் மகள், அவள் உள்ளங்கையைத் தாண்டியிருந்த பட்டையான மொபைலை நிமிண்டிக்கொண்டிருந்தாள்.

லே அவுட்டில் எத்தனை மனைகள் விற்காமல் இருக்கின்றன என்று குறித்துக் கொடுத்தேன். மூலப் பத்திரம் உள்ளிட்ட பல பத்திரங்களின் நகல் கொடுத்தேன். பதிவு அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதைச் சொன்னேன், நானே என்னை முதலாளியாகக் கருதிக்கொண்டு. அருகில் அவர் மனைவியும் என் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பதில் ஒருவாறு உந்தப்பட்டு, மிகுந்த நம்பிக்கையுடன் பேசினேன்.

அவர் உடனடியாக மனைகளை வாங்கிவிடும் முனைப்பிலேயே இருந்தார். எந்த இடத்திலாவது திருப்தியின்றி டீலிங் சொதப்பிவிடுமோ என்று ஒரு பக்கம் கிலி இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினேன். ஆனால், அப்படி வியாபாரம் ரத்தாவதற்கான எந்தச் சுவடும் அவர் முகத்தில் இல்லை. கார் டிக்கியில் கட்டுக்கட்டாகப் பணத்துடன் வந்திருப்பவர் போலவேதான் பேசினார்.

‘‘சரி... ப்ராப்பர்ட்டி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. லீகல் ஒப்பீனியன் பார்த்துட்டா என்னிக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம்?'' என்று என்னைக் கேட்டார் அவர். எனக்கு வியப்பில் தொண்டை அடைத்தது. அவர் வேகத்துக்கு நான் ஈடுகொடுக்க வேண்டும்போல் இருந்தது. முத்தண்ணனிடம் திரும்பி, ‘‘அண்ணே, ஒரு பத்து நிமிஷத்துல ஈ.சி போட்டுப் பார்த்துடலாம்ல?'' என்றேன்.

பத்தாப்பு - சிறுகதை

‘‘உடனே பார்த்துடலாம். அவர் கார்லயே போவோம். பாலக்கரைலயே ஈ சேவா மையம் இருக்கு. அதுல டாக்குமென்ட் காப்பியைக் கொடுத்து உடனே பார்த்துடலாம்'' என்றார்.

‘‘சரி, வா போவோம்'' என்று காருக்கு விரைந்தார் அவர். நாங்கள் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அவர் பின்னாடியே கிட்டத்தட்ட ஓடினோம். காரின் கடைசி இருக்கைகளில் உட்கார்ந்துகொண்டோம். முத்தண்ணன் சொன்னதுபோலவே சடுதியில் சொத்தின் வில்லங்கம் பார்த்து, எந்தப் பிரச்னையும் இல்லை என்ற திருப்தி வந்ததும், திரும்ப ப்ளாட்டுக்குப் போகலாம் என்று அவர் காரை விரட்டினார். மறுபடி லே அவுட் வந்தார்கள். முகப்பிலிருந்து கடைசி வரை நடந்தே சென்று பார்த்தார்கள். நானும் முத்தண்ணனும் அந்தப் பகுதி எப்படியெல்லாம் முன்னேற வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தோம். காலேஜ் வரப்போகிறது என்றோம். ஒரு தீம் பார்க் வரப் போகிறது என்றோம். எட்டுவழிச் சாலைகூட இங்கே வந்து முட்டும் என்றோம். எல்லாம் பாதி உண்மை, பாதிப் பொய். எனக்கென்னவோ இவையெல்லாம் அவருக்கும் தெரியும் என்று தோன்றியது. ரியல் எஸ்டேட் துறையின் நகாசு வேலைகள் எல்லாம் அறிந்து வைத்திருப்பவராகவே அவர் காட்சியளித்தார். புதிதாக சொத்து வாங்குபவர்களிடம் பொதுவாகக் காணப்படும் மிரட்சி அவரிடம் இல்லை. அடிக்கடி சொத்து வாங்கிப் பழகியவருக்கு இருக்கிற அலட்சியத்தையேதான் அவர் உடல்மொழியில் காட்டினார்.

‘‘ஜெகன், இப்ப உங்க முதலாளியைப் பார்க்கலாமா? இன்னிக்கு ஒரு அட்வான்ஸ் கொடுத்திடறோம். நீங்க டாக்குமென்ட் ரெடி பண்ணிட்டா ரிஜிஸ்ட்ரேஷன் வெச்சுக்கலாம்... டாக்குமென்ட் எவ்ளோ சீக்கிரம் ரெடி பண்ணுவீங்க?''

இப்படி அவர் கேட்டபோது என் பார்வை தன்னிச்சையாக முத்தண்ணன் பக்கம் சென்றது. சினிமாக்களில் போல அவர் மூர்ச்சையாகிவிடுவாரோ என்றுகூட ஒரு கணம் நினைத்தேன். விட்டால் நாளை காலை பத்திரப் பதிவு முடிந்து எங்கள் கையில் சுடச்சுட ஆறு லட்சம் தவழும் போல இருந்தது. நடந்து கொண்டிருப்பதை கிரகிக்கத் திணறினோம்.

‘‘டாக்குமென்ட் ரெடி பண்ண ஒரு மணி நேரம் போதும் ஸார்... உங்க ஆதார் அட்டை போதும். டாக்குமென்ட் உங்க பேர்ல பண்ணணுமா..?'' என்றேன்.

‘‘அவ பேர்ல பண்ணணும்... ஷைலு, உன் ஆதார் கார்டு இருக்குல்லா?'' என்றார், அனேகமாக ஷைலஜாவாக இருக்கிற அவர் மனைவியிடம். அவர் தன் மகளிடம் ஏதோ தெலுங்கில் மாட்லாடினார். அந்தப் பெண் ஓடிச் சென்று காரைத் திறந்து ஒரு பேக்கை எடுத்து வந்து கொடுத்தது. அதிலிருந்த ஆதார் கார்டை எடுத்து என்னிடம் நீட்டி, ‘‘நீங்க டாக்குமென்ட் ஃபார்மாலிட்டிஸ் பண்ணிடுங்க. நாங்க லன்ச் பண்ணிட்டு போன் பண்றோம். உங்க சாரைப் பார்த்துடலாம். அவர் லோக்கல்தானே?'' என்றார் ஷைலு ஆங்கிலத்தில்.

அவர்கள் கிளம்பினார்கள். நானும் முத்தண்ணனும் உட்கார்ந்து கொஞ்சம் மூச்சு வாங்கினோம். எனக்கு என் கையையே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. இதெல்லாம் கனவா? நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? உண்மையிலேயே இந்த லே அவுட் முடிந்துவிட்டதா? இனி அடுத்த புராஜெக்ட்டுக்குப் போகப் போகிறோமா? முதலாளி கேட்டால் எப்படிச் சந்தோஷப்படுவார்? முதலில் நம்புவாரா? இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டு முத்தண்ணனைப் பார்த்தேன். அவர் திக்பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார்.

மதிய வேளை நெருங்கியிருந்தது. ஆனால் எனக்கு பசி சுத்தமாக இல்லை. வயிறு முட்ட தண்ணீர் இருப்பதுபோல் இருந்தது. முத்தண்ணனை அவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு எந்த நேரமும் முதலாளி அலுவலகம் வரத் தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு, நான் எங்கள் வழக்கமான பத்திர எழுத்தர் அலுவலகம் வந்தேன்.

ஏற்கெனவே அவர் கம்ப்யூட்டரில் இருக்கும் எங்கள் வான்மதி நகர் டெம்ப்ளேட்டில் சிலபல சர்வே எண்களையும், வாங்குபவர் பெயரையும் மாற்றிவிட்டால் போதும். பத்திரம் தயாராகிவிடும். அந்த வேலையை அவர் அருகிலேயே உட்கார்ந்து சொல்லி முடித்து, அதையும் பிரின்ட் எடுத்துக் கொண்டேன். முத்திரைத் தாளில் வர வேண்டிய அம்சங்கள் எல்லாம் பிழையின்றி வந்திருக்கிறதா என்று ஒரு தடவைக்கு நாலு தடவை படித்துப் பார்த்தேன். எல்லாம் திருப்தியாக இருந்தது.

முதலாளிக்கு போன் அடித்தேன். நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். அவர் முதலில் நம்பவில்லை என்பதும், அத்தனையும் நிஜம் என்று தெரிந்ததும் அவருக்குப் பேச்சே வரவில்லை என்பதும், அவருடைய படபடப்பான குரலிலேயே கண்ணாடிபோலத் தெரிந்தது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் இப்படி ஒரு அதிசயம் நிகழ்வதை வியக்காமல் இருக்க முடியுமா?

‘‘இன்னிக்குப் பூராவும் காத்திருக்கேன். எந்த அப்பாயின்ட்மென்ட்டும் இல்லை. அவங்களை எப்ப வேணாலும் வரச் சொல்லு. நாம வேணாலும் அவங்க இருக்கிற இடத்துக்குப் போவோம்'' என்ற முதலாளியிடம் நானே உரிமையுடன் கடிந்துகொண்டேன்.

‘‘சார்... அப்படியெல்லாம் இறங்கிப் போயிடாதீங்க. நான் உங்களைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி வெச்சிருக்கேன். கெத்து மெயின்டெயின் பண்ணுங்க சார்'' என்றேன்.

‘‘ஆறு மாசமாக முடியாம இருந்த ப்ளாட்... இப்படி ஒரேமுட்டா முடியுதுன்னா எப்படி இருக்கும் ஜெகன்? முடிச்ச உடனே உனக்கும் முத்துவுக்கும் கமிஷன் பைசல் பண்ணிடறேன். பார்ட்டியை மட்டும் விட்டுராதே'' என்றார். மனதின் ஓர் ஓரத்தில் அவர் இப்போதும் சற்று அவநம்பிக்கையுடன் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த பயம் எனக்கும் இருந்தது.

பத்தாப்பு - சிறுகதை

ஆனால் ஐந்து நிமிடம்கூட அந்த பயம் நீடிக்கவில்லை. ஆந்திராக்காரரே போன் செய்தார். டாக்குமென்ட் ட்ராஃப்ட் இருந்தால் வாட்ஸப்பில் அனுப்பச் சொல்லிக் கேட்டார். நான் பத்திர எழுத்தருக்குப் போன் செய்து வாட்ஸப்பில் வாங்கி, அவருக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த பத்தாவது நிமிடம் மறுபடி போன் செய்தார். ‘‘எல்லாம் பக்கா... உங்களுக்கு ஓக்கேன்னா நாளைக்கே ரிஜிஸ்ட்ரேஷன் வெச்சுக்கலாம். இப்ப கிளம்பி நாங்க எங்க வரணும். உங்க ஆபீஸ் எங்க இருக்கு?'' என்றார்.

பூமியிலிருந்து இரண்டு அடி மேலே மிதப்பது போலிருந்தது எனக்கு. அப்படியே மிதந்து அலுவலகம் சென்றேன். சற்றைக்கெல்லாம் வெள்ளை சைலோ வந்தது. முத்தண்ணனிடம் விஷயம் சொல்லி, அவர் அலுவலகம் வருவதற்குள்ளாகவே கோடியைச் சற்றே தாண்டிய மொத்த சொத்துக்கு வெறும் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. முதலாளி முகத்தில் டார்ச் லைட் தெரிந்தது.

அவர், ‘‘பூரா பணத்தையும் நீ நாளைக்கு வாங்கிக்கலாம்... சரியா சார்?'' என்று முதலாளியிடம் சொன்னபோதுதான், அவர் எல்லோரையுமே நீ, வா, போ என்றுதான் அழைக்கிறார் என்று புரிந்தது.

மறுநாள் காலை பதினொரு மணிக்கே எல்லோரும் பத்திரப் பதிவு அலுவலகம் வந்துவிட்டோம். முன்னதாக சார்பதிவாளர் அலுவலகத்துக்குக் கொடுக்க வேண்டிய வரைவோலை சமாசாரங்களை நான் திருத்தமாக முடித்து வைத்திருந்தேன். எந்தச் சுணக்கமும் இன்றி, கனவு கலைந்தது போன்ற எந்த அபாக்கியமும் இன்றி, வழுக்குப்பாறையில் நழுவும் வெண்ணெய்த் துண்டம் போல் தங்கு தடையின்றி ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்தது. நேற்று வரை முதலாளியிடம் இருந்த சொத்து, இப்போது ஆந்திராக் காரரின் மனைவி வசம். மூன்று நாள்களில் வந்து ஒரிஜினல் பத்திரம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.

எல்லாம் முடிந்து சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் சற்று நேரம் கலவையாகப் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் கமிஷனை முதலாளி, அலுவலகம் சென்றுதான் கொடுப்பார். ஆந்திராக் காரரின் மனைவியும், முதலாளியும் வான்மதி நகரில் இருக்கும் ‘வான்மதி' யார் என்று பேசிக் கொண்டிருக்க, அந்தக் குட்டிப் பெண் எப்போதும் போல அம்மாவுக்கு அருகில் மொபைலை நோண்டிக்கொண்டிருக்க, வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் பளீரென்று வந்திருந்த முத்தண்ணன் உள்ளூர் புரோக்கர் ஒருவரிடம் அனத்தலாக இந்த வியாபாரத்தைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தார்.

இப்படி சர்வ அலட்சியமாக ஒரு பெரிய சொத்தை வாங்கியிருக்கிற அந்த ஆந்திராக் காரரிடம், ‘‘ஆந்திராக்கு எப்ப சார் போனீங்க…எப்படி அங்கே செட்டிலானீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டேன்.

‘‘98-ல பத்தாப்பு பெயிலானவுடனே எங்க அப்பா அடிச்சு விரட்டினாரு. ரெண்டு பாடத்துல தான் பெயிலு... கணக்கு, சயின்ஸ்! ஆனா அப்பா, ‘போய் எங்கயாவது மாடு மேயி’ன்னு திட்டினாரு. நான் மேலக்காவேரி பக்கத்துல ஒரு கார் மெக்கானிக் கடைல சேர்ந்தேன். எல்லா வண்டியும் ரிப்பேர் செய்யக் கத்துக்கிட்டேன். கொஞ்ச நாள் டிரைவரா சுத்தினேன். அப்புறம் ஆந்திரா போய்… அதெல்லாம் பெரிய கதை சார்…”

அதற்கு மேல் அவர் கதையைத் தொடராமல் விட்டதில் ஒரு விருப்பமான துரிதம் தெரிந்தது. ‘இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்வானேன்’ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. அவர் பேச்சை நிறுத்தும் நேரம் எங்கள் அருகில் வந்த அவர் மனைவியைப் பார்த்து, ‘‘நீங்க ஆந்திராவா மேடம்?” என்ற என் கண்களில் தெரிந்த குறுகுறுப்பை அவர் கவனித்தார். விளைவாக வெட்கத்துடன் சிரித்தார்.

‘‘ஆமா, எங்க அப்பாட்டதான் இவர் டிரைவரா சேர்ந்தார்” என்றார். திக்கித் திக்கி இதை மட்டும் எப்படித் தமிழில் பேசினார் என்று யோசிக்கும் போதே நொடியில் அவர்களின் மொத்த கடந்த காலமும் எப்படி இருந்திருக்கும் என்று என் கண் முன் காட்சிகளாக விரிந்தன.

சற்று நேரத்தில் சைலோ கார் எங்கள் எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பியது; திருப்பத்தில் கார் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். கார் முற்றிலும் கண்ணை விட்டு மறைந்த பிறகுதான் எனக்கு நினைவு வந்தது, கணக்கிலும் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு எடுத்து நான் பத்தாவது பாஸ் பண்ணித்தொலைத்ததும் அதே 98-ல்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism