Published:Updated:

எறாக்கறி... புறாக்கறி... - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- பாக்கியம் சங்கர்

எறாக்கறி... புறாக்கறி... - சிறுகதை

- பாக்கியம் சங்கர்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

தலையில் அன்னக்கூடையை ஒரு கரகாட்டக்காரியின் சாகசத்தைப்போல கீழே விழாமல் தாங்கியபடி, நட்ட நடு வெயிலில் மின்சாரப் பெட்டியின் பின்னால் தனது கால்களைக் கொஞ்சம் அகட்டி வைத்து, புடவையைக் கைகளால் முட்டிவரை தூக்கியவளின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தது. நெடு நேரம் கனத்துக்கொண்டிருந்த நீரை உடம்பிலிருந்து வெளியேற்ற தனக்குக் கிடைத்த தோதான இடம்தான் மின்சாரப் பெட்டியாக இருந்தது. ஆனாலும், இதுபோன்ற நேரங்களில் அடிவயிற்றின் கடுப்பு தனத்துக்கு மிகுந்த சோர்வைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஒரு கறுத்த நாய் உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தது,

தனம் இப்படித்தான் நினைத்துக்கொள்வாள் “கண்ட நாய்ங்கலாம் பைனாக்குலர் வச்சு பாக்குது... நீயும் பாத்துட்டுப் போயேன்” என்று தனக்குள்ளாகச் சிரித்துக்கொண்டாள். இப்போதுதான் தனத்துக்குக் கண்கள் தெளிவாகத் தெரிந்தன. ``ஏசப்பா’’ என்று பெருமூச்செறிந்தாள். தலையில் தாங்கிக்கொண்டிருக்கும் மீன்களையும் இறால்களையும் விற்றாக வேண்டும் என்கிற ஓர்மை வந்தது “பைரவா, பார்த்தது போதும் போய்டு” என்று விரட்டியவள், கரண்ட் பெட்டியிலிருந்து வெளியேறினாள். தெருவைப் பார்த்தாள். சோம்பேறித்தனமான ஞாயிற்றுக்கிழமையின் வீடுகள் மூடிய தாழ்ப்பாள்களில் தெரிந்தன. தனம் பார்ப்பதற்குத்தான் மெல்லிய வளைக்கரம் கொண்டவளாகத் தெரிவாள். மீன் ஏலம் எடுப்பதற்கு தனம் வருவதற்கு முன்பாக அவளின் ஒய்யாரக் குரல் காசிபுரத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும். இன்னமும் விழித்துக்கொள்ளாத தெருவை ஒரே குரலில் விழிக்க வைத்துவிடுவாள்.

“எறாக்கறி புறாக்கறி” என்ற அவளின் முதல் குரலில் ஒரு வீட்டின் தாழ்ப்பாள் திறந்தது. தலையிலிருந்த அன்னக்கூடையை இறக்கி தெருவில் வைத்தாள். முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

எறாக்கறி... புறாக்கறி... - சிறுகதை

அன்னக் கூடையினுள்ளே நடுவில் ஒரு பலகையை வைத்து ஒரு பக்கம் மீன்களும் மற்றொரு பக்கம் இறால்களையும் வைத்திருந்தாள். அன்னக்கூடையை மூடியிருந்த பலகையில் மீனையும் எறாவையும் கூறு கட்டினாள். அருவாமணையை எடுத்துப் பக்கவாட்டில் வைத்துக்கொண்டாள். மீன் கவுச்சியின் வாசத்திற்குத் தெருப்பூனைகள் எல்லாம் தனத்தைச் சூழ்ந்துகொண்டன. அதிலும் கடாப்பூனை ஒன்று உண்டு, அதற்கு மட்டும் ஆயும் ஏதாவது ஒரு மீனின் தலையை வாங்குபவர்களுக்குத் தெரியாமல் போட்டுவிட வேண்டும். கொடுவா தலையென்றால் கொள்ளைப்பிரியம் அந்தக் கடாப்பூனைக்கு. கொஞ்சம் அசந்தாலும் ஏதாவதொன்றைக் கவ்விக்கொண்டு ஓடும் பூனைகள் தனத்திடம் மட்டும் பம்மிக்கொண்டு பாவமாய்ப் பார்த்து நிற்கும். பூனைகளோடு பேசுவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் தனம். அலமேலுவும் ஜமீலாவும் கடாயோடு வந்து உட்கார்ந்துகொண்டார்கள்.

“ஜமீலாக்கா, சீலா ப்ரெஸ்ஸா இருக்குது ஆஞ்சிடவா?”

“போனவாரமே ஆலி எத்துனு வான்னுதானே சொன்ன…”

“செட்டாண்டா போயி கேட்டேன்க்கா, ஆலி இல்லட்டானுங்கோ… வேணும்னா நாளைக்கு இலிப்பூச்சி கொண்டாரன்... அண்ணனுக்குச் செஞ்சு போடு சும்மா மஸ்தா இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே கெழங்கா மீனை எடுத்துக் கூறு வைத்தாள். அலமேலு பார்த்துச் சிரித்தாள், “இதச் சொல்லியே எல்லாத்தியும் வித்துடுவடி” ஜமீலாவும் சிரித்தாள், அதற்குள் நாலைந்து பெண்கள் தனத்தைச் சூழ்ந்துகொண்டனர். வந்தவர்களில் ஒருவள் பூனைகளை விரட்ட கடாப்பூனை மட்டும் உர்ரென்று முறைத்து பின், தனத்துக்குப் பின்னால் போய் நின்றுகொண்டது. “அது இன்னாடிம்மா புறாக்கறி… ஒரு நாளுகூட கண்ணுல காட்ட மாட்ற” கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி கேட்டாள். “எங்கையால மீனு வாங்கிக் கொழம்பு வச்சி சாப்புடு.. புறாக்கறி மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும். அதான் எறாக்கறி… புறாக்கறி...” என்று சிரித்தாள் தனம். கழுத்தை அறுத்துப்போடும் வெறித்தனத்தில் ஒருவன் வந்தாலும், தனத்தின் தெத்துப்பல் சிரிப்பில் தணிந்து கனிந்து சென்றுவிடுவான். அப்படியான கனிந்த சிரிப்பைக் கொண்டவள் தனம்.

“யக்கா, எங்கம்மா அம்பது ரூபா புறாக்கறி குடுக்கச் சொல்லிச்சி” சிறுவன் ஒருவன் தனத்தைக் கலாய்த்தான். அவனின் டவுசரைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து அவனது குஞ்சாமணியைச் செல்லமாக முறுக்கி “புறாக்கறிய வெட்டில்லாமா” என்று சிரித்தாள். சிறுவன் வலியில் “எங்கம்மாகிட்ட சொல்றேன் இரு… உன் புறாக்கறிய வெட்றாங்களா இல்லையான்னு பாரு...’’ என்றதும் ஜமிலாவும் அலமேலுவும் தனத்தை மேலும் கீழும் பார்த்துச் சிரித்தனர். தனமும் அடக்க முடியாமல் சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வரும் அளவுக்குச் சிரித்தவளுக்கு அடிவயிறு திரும்பவும் கனத்தது. தனத்தின் முகம் சட்டென்று மாறியது. இந்த வலியானது மாதப் பிரச்சினையாக இருக்குமோவென இடதுகாலை பக்கவாட்டில் தூக்கிக் கீழே பார்த்தாள். உட்கார்ந்து உட்கார்ந்து நைந்த வாயில் புடவையின் பூக்களெல்லாம் வாடிப்போயிருந்தன. அந்த வலியிலும் விஜியோடு போனபோது வீராஸில் போகன்வில்லா வரைந்த சேலை அவளது நினைவிற்கு வந்தது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அந்தப் புடவையை வாங்கியே தீரவேண்டும் எனச் சொல்லிக்கொண்டாள். அவளது வலியானது வனத்திலிருக்கும் அட்டையைப் போல மெதுவாக ஊர்ந்தபடி உடம்பெங்கும் நெளிந்து கொண்டிருந்தது. எறாவையும் மீன்களையும் இன்னும் நாலு தெருவில் அலைந்து விற்றால்தான் எமிமாலுக்கு கவுன் வாங்கிக் கொடுக்கமுடியும். அதிலும், கிறிஸ்துமஸுக்கு வீட்டில் நட்சத்திரம் கட்ட வேண்டுமென ஒரு பாடு அழுதுதீர்த்ததும் நட்சத்திரம் வாங்கித் தருவதாக வாக்குக் கொடுத்ததும் வேறு தனத்தை பயமுறுத்தியது. “இந்த வலியிலிருந்து என்னை மீண்டெழச்செய்யும் ஆண்டவரே... ஏசப்பாவே” என்று தனக்குள்ளாகவே ஜபித்துக்கொண்டாள். அலமேலுவிற்கு சீலாவை ஆய்ந்தாள்.

தனத்தின் முகக்குறிப்புகளைக் கவனித்த அலமேலு, “ஏண்டி இப்பிடி நீர்க்கடுப்பு வச்சிகினேருந்தா எப்டி... நெறையா தண்ணி குடிக்கணும், அப்பத்தான் கடுப்பு போவும்…” என்றாள்.

எறாக்கறி... புறாக்கறி... - சிறுகதை

சீலாவைப் பதமாகத் துண்டம் போட்டுக்கொண்டே, “ரெண்டு சொம்பு தண்ணி குடிக்கணும்போலதான் இருக்குது… குடிச்சா ஒன்னுக்கு வருமே, எங்க போறதுக்கா” துண்டம் போட்ட சீலாவை அலமேலுவிடம் கொடுத்ததும் எதுவும் பேசாமல் மீனுக்கான காசைக் கொடுத்துவிட்டு “வரண்டிம்மா” என்று கிளம்பினாள். பாவமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த கடாப்பூனைக்கு கெழங்கா மீனின் தலையைப் போட்டாள். சிவந்திருந்த தலையை ருசித்து ருசித்துத் தின்றதை ரசித்துப் பார்த்தவள் அன்னக்கூடையைத் தலையில் தூக்கி வைத்தாள். தலையிலிருக்கும் கனத்தைவிட மடியிலிருக்கும் கனம் பாடாய்ப் படுத்தினாலும் ஏசப்பா என்று நடந்தாள்.

“எறாக்கறி புறாக்கறி… ஓடியா ஓடியா...” நாகூரான் தோட்டத்தின் தெருவொன்றில் நுழைந்தாள். தெரு முழுவதும் விழித்திருந்தது. தலையிலிருக்கும் அன்னக்கூடையை இறக்கிக் கடை விரித்தாள். இந்தத் தெருவிலேயே மீதத்தையும் விற்றுவிட்டால் எமிக்கு நட்சத்திரமும் வாங்கிவிடலாம். அப்படியே, கவுச்சியும் வியர்வையும் மணக்கும் ஆடையைக் களைந்து கழிவறையில் காலாற ஏசப்பாவென்று உட்கார்ந்து கொள்ளலாம் என்று தனம் நினைத்தபோதே குளிர்ந்த காற்று அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது. இருந்தாலும், இந்தத் தெருவிலிருக்கும் மின்சாரப்பெட்டியின் பின்னால் போர்க்கால நிவாரணமாக சிறுநீர் மட்டும் கழித்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், தெருப்பயல்கள் எல்லோரும் கோலியை குறிபார்த்து பேந்தாஸ் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கணம் கண்களை இறுக்க மூடியவள் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து “ஏசப்பா’’ என்று மூச்சை விட்டாள். புருவ மத்தியிலிருந்து வழிந்த வியர்வைத் துளி ஒன்று கீழே கூறு கட்டி வைத்திருந்த மீனில் கலந்து கரைந்தது. இன்னும் கொஞ்சம் சரக்குதான் இருக்கிறதென்பது தனத்துக்கு ஆறுதலாயிருந்தது. முந்தியில் முடிந்திருந்த சுருக்குப்பையில் கசங்கிய தாள்களைப் பார்த்தபோது எமியின் முகம் நட்சத்திரமாகத் தெரிந்தது. பொடி டப்பாவைத் துழாவி எடுத்தாள். ஒரு சிட்டிகை எடுத்து மூக்கில் தடவித் தும்மினாள். வயிற்றுக் கடுப்பு ஏகத்தில் இருக்கிறபோது இந்தப் பொடியின் வாசனை அவளுக்கு இதமாய் இருக்கும். தனத்திற்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. எமிக்கி நட்சத்திரம் வாங்கி அதில் பொன்னிறத்தை அடைத்து உள்ளே வைத்து எமியின் சிரிப்பைப் பார்த்துவிட வேண்டும்.

“கூறு எவ்ளோடிம்மா” சொர்ணத்தின் குரல்தான் இவ்வளவு கனிவாக இருக்கும். “சொர்ணாயா மூணு கூறு நூர்ரூபா எடுத்துக்கோ...”

மூன்று எறாக்கூறையும் ஒன்றாக்கி சொர்ணத்துக்குப் போட்டாள்.

“இன்னாடிம்மா வியாபாரத்தைச் சுருக்கா முடிச்சுட்டு எந்தக் கோட்டய புடிக்கப் போற?”

“எமிமா கோட்டைக்கு நட்சத்திரம் வாங்கப்போறன்” சிரித்தாள் தனம்.

கிட்டத்தட்ட எல்லா மீன்களும் விற்றுத் தீர்ந்தன. ஏலம் எடுக்கும்போது கில்நெட் சண்முகம் டிரைவர் கொடுத்த வெள்ளை வவ்வாலை எமிமாலுக்கென்று எடுத்து வைத்தாள். பூண்டை நசுக்கி மிளகுத்தூளைச் சன்னமாகப் போட்டு செவக்க வறுத்து எடுத்துக் கொடுத்தால் கருத்தாகச் சாப்பிடுவாள் எமிமாள்.

சொர்ணம் நூறு ரூபாயை தனத்திடம் கொடுத்தாள் “ஏண்டி தனம், கிறிஸ்மஸுக்கு எமிக்குத் துணி எடுத்தியாடி?”

“இன்னிக்கு நட்சத்திரத்த வூட்ல கட்டிட்டு… நாளிக்கு வீராஸ் போலான்னு இருக்கேன் ஆயா.. எமிமா பிரியாணி கேட்டுச்சு… உனுக்கும் எத்தாந்து தர்றன்னா…” அன்னக்கூடையிலிருக்கும் ஐஸ் தண்ணியை மொண்டு ஊற்றினாள்.

“எனக்கு ஏண்டிம்மா… கொழந்த தின்னா போதும்” என்று எழுந்த சொர்ணம் “நைட்டு ஜபத்துக்குப் போறியாடி?’’

அன்னக்கூடையைத் தலையில் வைத்த தனம், “இந்த வருஷம் ரொம்ப விசேஷமான கிறிஸ்மஸ்ஸாமே... பாஸ்டர் எல்லாரையும் கண்டிப்பாக வரச் சொன்னாரு ஜபத்துக்கு” ரொம்பவும் பொறுப்புணர்ச்சியுடன் சொன்னாள்.

“போன வருஷமும் ரொம்ப விசேஷம்னுதான் சொன்னாரு பாஸ்டரு” என்ற சொர்ணம் சிரித்துக்கொண்டே கிளம்பினார். தனித்த பொம்பளையாக வாழ்ந்துகொண்டிருக்கும் சொர்ணத்தின் மேல் தனத்திற்கு மிகுந்த பரிவு உண்டு. “உனுக்கு ஒன்னுக்குப் போறதுக்குக்கூட என்னால ஒரு இடம் கொடுக்க முடியலியேடி” என்று ஒரு முறை அழுத சொர்ணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

ரொம்ப முடியாமல் தவித்த தனத்தைத் தனது காம்பவுண்டிலிருக்கும் கழிவறைக்குள் கூட்டிச்சென்றார் சொர்ணம். பதினாறு குடித்தனம் கொண்ட அந்த காம்பவுண்டில் ஒரேயொரு கக்கூஸ் கட்டிக் கொடுத்திருக்கும் ஹவுஸ் ஓனரைத் திட்டிக்கொண்டே கடனை முடித்து வெளியேறினாள். அப்போது பார்த்து அந்த ஹவுஸ் ஓனர் வந்துவிட்டான். ஏற்கெனவே, நாறிக்கொண்டிருக்கும் அந்த கக்கூசை தனம் போய்தான் கெடுத்துவிட்டதாக ஏகத்துக்கும் பேசிவிட்டான். “வாடக கொடுக்கறவ மட்டும்தான் கக்கூசுக்குள்ள கால வைக்கணும்… கண்டவளுங்கலாம் வந்து ஒன்னுக்குப் போறதுக்கு நான் என்ன சுலாப் இன்டர்நேஷ்னலா கட்டி வச்சிக்கறன்” என்று தனத்தின் அன்னக்கூடையை வெளியே தூக்கிப் போட்டான். தனம் பதறிப்போய் அன்னக்கூடையிலிருந்து சிதறி விழுந்த மீன்களை எடுத்துப் போட்டுக்கொண்டே அவனைப் பார்த்தாள். வங்காரம் வைக்கலாமென்று வாயெடுத்தவள் தலைகுனிந்து நின்ற சொர்ணத்தைப் பார்த்ததும் வாயடைத்து வெளியேறினாள். எல்லாரும் பார்க்க நடுத்தெருவில் நிர்வாணமாய் நின்ற மாதிரி உடம்பெல்லாம் பற்றியெரிய அன்றைய இரவு எமிமாவை மடியில் கிடத்தியபடி ஜபத்திலேயே இருந்தாள். இனி எவர் வீட்டுக் கழிவறைக்கும் சென்றுவிடக்கூடாது என்று ஜெபத்திலேயே தீர்க்கமாய் சாட்சியம் கூறிக்கொண்டாள். ஆனாலும், தனக்காக அன்பாய் இருந்த சொர்ணத்துக்காக அவர் நலம் வேண்டி ஜெபத்தில் மன்றாடினாள் தனம். அன்றிலிருந்தே தனது ஆயாவைப் போலவே சொர்ணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அப்போது தனத்துக்கு சோபியிடமிருந்து போன் வந்தது. இடுப்பில் செருகியிருந்த போனை எடுத்துப் பார்த்தாள். இந்த முறை போனிலிருந்து ரப்பரை மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

போனை எடுத்தவள் “சொல்லுடி சோபி” என்று நடந்தாள்.

“ஏண்டி, யூனியன்ல ஏதோ மீட்டிங் வச்சிருக்கானுங்களாம்... எல்லோரும் வரணுமாம். நா இங்கதான் இருக்கிறேன்… நீயும் வந்துடு” என்றவளிடம்,

“இதுவரைக்கும் என்ன புடுங்குனானுகன்னு மீட்டிங் வைக்கிறானுங்களாம்.. இத்தினி வருசமா ஒன்னுக்குப் போறதுக்கு ஒரு கக்கூசு கட்டித்தர வக்கில்ல. இவனுங்க பெரும பீத்திக்கிறத்துக்கு ஒரு மீட்டிங், அதுக்கு கைதட்றதுக்கு நாம வேணுமா... நா வர்ல... நீ வேணா போ” அடிவயிற்றின் ரோதனை வார்த்தைகளாக வெடித்தன. “ஏய் அவங்களோடதான் நாம பொழப்ப நடத்தியாவணும்… ஒழுங்கா வந்து சேரு... நேர்ல பேசிக்கலாம்…” சோபியா சொன்னால் தனம் கேட்டுக்கொள்வாள்.

போனை அமர்த்தியவள் பிரதான சாலையை நோக்கி நடந்தாள். இன்னும் ஒரு பர்லாங்கில் காசிமேட்டு மீனவர் ஐக்கிய சபைக்குச் சென்றுவிடலாம். ஆனால் அவ்வப்போது தனத்துக்கு அடிவயிற்றின் கடுப்பால் உடல் சிலிர்த்து வருகிறது. ஷேர் ஆட்டோ பிடிக்கலாமென்றால் அவன் குலுக்குகிற குலுக்கலில் தானாகவே சம்பவம் நிகழ்ந்துவிட்டால் என நினைத்து, தனக்குள் சிரித்துக்கொண்டாள். கடலோரம் எங்காவது ஒதுங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் நடக்க ஆரம்பித்தாள்.

உச்சி வெயிலின் வெம்மை தனத்தைக் கூடுதலாகக் கசகசப்பாக்கியது. ஒரு சிறிய இடம்கூட சிறுநீர் கழிப்பதற்கு இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தபோது காறி உமிழத்தோன்றியது தனத்துக்கு. தலையில் இருக்கும் அன்னக்கூடை தன்னோடு முடிய வேண்டும். எமிமாமை நன்றாகப் படிக்க வைத்து விடவேண்டும். சுதந்திரமாக ஒன்னுக்குக்கூடப் போகமுடியாத ஒரு வாழ்வை அவள் வாழக்கூடாதென ஏசப்பாவிடம் கேட்டுக்கொண்டு கழுத்திலிருக்கும் சிலுவை டாலரைத் தொட்டு ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டாள். கடலின் உப்பின் சுவை மிகுந்த காற்று தனத்தின் முகத்திலடித்தது. கடலைப் பார்த்தாள். நீலம் பாரிக்கும் கடலை எப்போது பார்த்தாலும் சலிக்கவில்லை, எமிமாவைப் போல. இளவழகி எதிர்ப்பட்டாள். “இன்னாடி வியாபாரத்துக்குப் போலியா” தனம் கேட்டாள். “ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்தன் தனம்... வவுரு வலின்னு டாக்டராண்ட போனல்ல... எதோ கிட்னீலதான் பிரச்சினையாம், நாளைக்கு போட்டோ புடிச்சுப் பாத்தாதான் இன்னான்னு தெரியுமாம்” மிகுந்த சோர்வோடு சொன்னாள் இளவழகி. “நாளிக்குதான, நானும் வரன்... எனுக்கும் கடுப்பு இருக்குது அழகி” தன் பாட்டையும் சொல்லி வைத்தாள் தனம். “ஒன்னுக்கு அடக்குறதுதான் பிரச்சினைன்னு டாக்டர் சொல்றாரு. இந்தப் பாடு பசங்க கல்லாரத்திலயாவது கக்கூசு கட்னா இங்கியாவது போலாம். இங்கியும் அடக்கிகினு, வெளியயும் அடக்குனா வவுரு வெடிச்சிதான் சாவணும்… சாவரதுக்குள்ள எம்புள்ளைக்கு ஒரு வழி பண்ணுனாப் போதும்.. நீ எங்கடி போற” முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள் இளவழகி. “சோபி போன் பண்ணுச்சு, மீட்டிங்காமே... அதான் போறேன்” தனம் சொன்னாள். “இந்த டாபருங்களுக்கு மீட்டிங் ஒரு கேடு… சிங்காரவேலரு சிலையாண்டதான் பேசிகினுருக்கானுங்கோ, உத்தம புத்திரனுங்கோ” என்றாள். தனம் சின்னதாய்ச் சிரித்தபடி இளவழகியிடமிருந்து நகர்ந்தாள்.

எறாக்கறி... புறாக்கறி... - சிறுகதை

கண்ணாடிப் பாறையைப்போல பளபளப்பாக இருந்த இளவழகி காய்ந்துபோன கருவாட்டின் கசாராக இருப்பதைப் பார்த்து தனத்துக்கு ஏதோ போல் இருந்தது. தனது வலியைவிட, சாரமற்ற இளவழகியின் குரல் தனத்தை ஏகத்துக்கும் தொந்தரவு செய்தது. சங்கத்து நிர்வாகிகளின் மேல் பெருங்கோபம் உண்டானது. கூட்டத்தை நோக்கி நடந்தாள். இப்போது தனத்துக்குச் சிறுநீரைச் சுமந்துகொண்டிருக்கிற ரோதனை கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப்போனது. வலி என்பது தனத்தின் உடலில் ஓர் அங்கமாகிப்போனது. உடல் மனம் எல்லாம் தனத்துக்கு வலியைவிட கோபம் முழுவதுமாய் ஆட்கொண்டுவிட்டது. நிர்வாகத்தை வண்டை வண்டையாகக் கேட்க வேண்டும்போல் இருந்தது. ஐக்கிய சபையை நோக்கி நடந்தாள். தூரத்தில் வீணாய்ப்போன கோபால்தான் பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அவனது வீர தீர சவடால்களில் தெரிந்தது.

சிங்காரவேலரின் சிலைக்குப் பெரிய ரோஜாப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. சிங்காரவேலரின் பிறந்த நாள் நிகழ்ச்சி என்பது தனத்துக்குப் புரிய வந்தது. இவன் பேசுகிற பேச்சுக்கு சிங்காரவேலர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கல்லைக் கட்டிக் கடலில் இறக்கியிருப்பார். கூட்டத்திலிருந்து எதிர்முனையிலிருந்த ஐக்கிய சபையும் தோரணங்களால் ஜொலித்துக்கொண்டிருந்தது.

அன்னக்கூடையைக் கவிழ்த்துப் போட்டு அதன் மேல் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டிருந்தாள் சோபியா. அவளைப்போலவே சிலரும் உட்கார்ந்திருந்தார்கள். மீன் வெட்டும் பெண்களும் கூட்டத்தில் இருந்தார்கள். வட்டமாக நாற்காலிகளைப் போட்டு ஒரே ஒரு மைக்கை வைத்து அருமைபிரகாசம் பேசிக்கொன்டிருந்ததை தனம் பார்த்தாள், ஐக்கிய சபையின் புது நிர்வாகி. வேலையேதும் செய்யாமல் வெள்ளையும் சொள்ளையுமாய் அருமைபிரகாசம் மினுங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை தனத்துக்கு. இப்படியான பதவிக்கு வரும் எல்லோரும் ஒரே மாதிரியாகப் பேசுவதும், ஒரே மாதிரியாகச் சிரிப்பதும் எங்கேயிருந்து கற்றுக்கொள்கிறார்கள் என்று தனத்திற்கு எப்போதும் ஒரு ஆச்சரியம்தான்.

வருடங்கள்தோறும் ஆட்கள்தான் மாறுகிறார்களே தவிர நாற்காலிகள் மாறுவதேயில்லை. நாற்காலிகளுக்கென்று ஒரு விசேஷ குணமுண்டு. உட்காருபவர்களைத் தவிர, எதிரே நின்றுகொண்டிருப்பவர்களை அது எப்போதும் கண்டுகொள்வதே இல்லை. தனம் நேராக சோபியாவிடம் சென்றாள். அருமைபிரகாசம் உலகத்திலுள்ள அத்தனை தரும நியாயங்களையும் பேசிக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது தனத்துக்கு. “இன்னாடி மொகத்த உர்ருன்னு வச்சிருக்க...” சோபியா தனத்துக்கு உட்கார இடம் கொடுத்தாள். “ஒன்னுக்குப் போவணும்.”

“எனக்கும்தான் வருது... மீட்டிங் இப்ப முடிஞ்சுரும்.. தலுப்புகல்லாண்ட போயிட்டு வந்துல்லாம்…” என்ற சோபியாவைப் பார்த்து “உன்ன மாதிரி ஆளுங்களாலதாண்டி இவனுங்க இப்படிப் பேசிட்டு இருக்கானுங்க.” சோபியா சிரித்துக்கொண்டாள். “கில்நெட்டு சண்முகம் ஒயிட்டு குத்துதாமே.” அருமைபிரகாசம் கொள்கைகளைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தார். “எமிமாக்கு எத்து வச்சிருக்கேன்... அவுளுக்கு ஸ்டாரு வாங்கணும். மார்க்கெட்டுக்குப் போய்ட்டுப் போலாண்டி.” இப்போது அருமைபிரகாசம் பேசுவதை கவனித்தாள் தனம். சோபியாவும் கவனித்தாள். “எல்லா உறுப்பினருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், டெய்லி சந்தாவ ஐக்கிய சபைக்கு கரெக்டா கட்னாதான்… சங்கம் உறுப்பினர்களோட தேவைய பூர்த்தி செய்யமுடியும். தொடர்ந்து கட்லனா சங்கத்திலிருந்து உறுப்பினரை நீக்க வேண்டியிருக்கும். சங்கத்துலேருந்து வெளிய அனுப்பிட்டா கடல்லேருந்து வெளிய அனுப்புனா மாதிரி… புரியுதா…” இதற்குமேலும் இவர்களின் சவடால்களைக் கேட்கமுடியாமல் எழுந்தாள், சோபியா என்னவென்று புரியாமல் தனத்தைப் பார்த்தாள். அவளின் முகம் வியர்த்துப்போனது. ஆங்காரம் கொண்டவளாய் மாறினாள்.

“நா கொஞ்சம் பேசணும்” என்று கத்திச் சொன்னாள். பேசிக்கொண்டிருந்த அருமைபிரகாசத்தின் முகம் சட்டென மாறியது. கூட்டம் சிறு சலசலப்பிற்குள்ளானது.

சோபியா தனத்தின் முந்தியைப் பிடித்து இழுத்து “ஏய் உட்கார்டி, இன்னாடி பண்ற” என்று சொல்லிப் பார்த்தாள். அருமைபிரகாசம் கொஞ்சம் நிதானித்து “எதுவா இருந்தாலும் சொல்லு” என்றார். “இன்னாத்த சொல்லச் சொல்றிங்க… இத்தினி வருசமா சந்தா கட்டிக்கினுதான் இருக்கிறோம்… அந்தக் காசுக்குலாம் இன்னா கணக்குன்னே தெரில...” அருமைபிரகாசத்தின் முகம் இறுகியது. பக்கத்திலிருக்கும் கோபாலைப் பார்த்தான். கோபாலுக்கு அருமைபிரகாசத்தின் முகக்குறிப்புகள் தெரியும் என்பதால் தனத்திடம் வந்தான்.

“இவ்ளோ நாளா கேட்ணுருக்கோம்.. கக்கூசு கட்டித்தரச்சொல்லி… எந்த நிர்வாகம் வந்து கட்டிக்குத்துச்சு… நீங்களும் சந்தாதான் கட்டச் சொல்றீங்களே தவிர கக்கூசு கட்டித்தரன்னு சொல்றீங்களா... பெருசா பேச வந்துட்டீங்க… நைட்டு ரெண்டு மணிக்குக் குண்டான தூக்கினு கடலுக்கு வந்தா… மறுநாள் சாய்காலந்தான் வூட்டாண்ட போறோம். இதுக்கு நடுவுல வயிருன்னு ஒன்னு இருக்குதே... அதுக்குப் பசிக்கும், தாகம் எடுக்கும், ஒன்னுக்குப் போவும்… இதெல்லாம் உங்களுக்குப் புரியுதா... தலைவருக்குச் சிலை கட்றது, சங்கம் கட்றதுன்னு எல்லாத்தையும் யோசிக்கிறீங்களே… எங்களுக்கு எதுக்குய்யா சிலை, சங்கம்… சங்கத்த கக்கூசா மாத்திக் கட்டிக் கொடுங்க… உங்களுக்குப் புண்ணியமா போவும்… எந்தக் கண்ணு பாக்குதோன்னு தெரியாம சேலைய முட்டி வரைக்கும் தூக்கினு போற அவஸ்த உங்களாலலாம் புரிஞ்சிக்க முடியாது. தலையில மீனையும், வயித்தல ஒன்னுக்கையும் சுமந்துக்கினு நாலுதெரு சுத்தி வந்தாதான் உங்களுக்குலாம் புரியும்...” என்று தனம் அவளுக்கே தெரியாமல் அழுதாள். அங்கிருந்த எல்லாப் பெண்களும் உறைந்து போயிருந்தனர். சோபியா தனது முந்தியில் கண்களைத் துடைத்துக்கொண்டாள். கோபால் தனத்தைக் கூட்டத்திலிருந்து விலக்க முயன்றான்.

“நீ இன்னா என்ன தொரத்தறது... கடைசியா சொல்றன்… இனிமே நா சந்தா கட்டமாட்டன்… என்ன கடலுக்கு வராதன்னு சொல்றதுக்கு எவனுக்கும் உரிமயில்ல... இது என் கடலு... எப்போ கக்கூசு கட்டித்தரியோ அப்போ சந்தா கட்றன்...’’ உட்கார்ந்திருந்த பெண்களைப் பார்த்த தனம் “ஏண்டி இவனுங்கள நம்பி உக்காந்துகினு இருக்கீங்கோ.. எந்திர்ச்சு வூட்டுக்குப் போங்கடி… நம்ம மூத்திரத்த உறிஞ்சிக் குடிக்குற பசங்க” என்றவள், சோபியாவைப் பார்த்து “உனக்கென்ன தனியா சொல்லணுமா... வா...’’ என்றதும் சோபியா எதுவும் பேசாமல் தனத்தோடு கிளம்பினாள். இன்னும் சில பெண்களும் அன்னக்கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

அருமைபிரகாசம் தனத்தை சிரித்தபடியே பார்த்தான். அவனின் சிரிப்பானது தனத்தை எரித்துவிடுவது போலவே இருந்தது. மீண்டும் எதுவும் நடக்காததுபோல தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான்.

தனமும் சோபியாவும் பேசாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். காலங்காலமாக அடக்கி வைத்திருந்த வெடிப்பு இது. ஆனாலும், தனத்துக்கு இன்னமும் கொதிப்பு அடங்கவில்லை. நடந்து வரும் வழியிலேயே சங்கம் திறந்திருப்பதைப் பார்த்தாள்.

“சோபி, குண்டானப் புடி… உள்ள போயிட்டு வந்துர்றேன்” என்றவள் சங்கத்திற்குள்ளே நுழைந்தாள். தூரத்தில் கூட்டம் நடக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது, உள்ளே நுழைந்து தாழ்ப்பாள் போட்டாள். டேபிளின் மேல் ஏறினாள். கரண்ட் கம்பிகளில்லாத, எந்தக் கண்களும் பார்க்க முடியாத ஒரு வனாந்தரத்தின் பறவையாக அவள் மாறினாள். யுகங்களாய் அடக்கி வைத்திருந்த சுனை, அருவியாய் அந்த சங்கத்தின் அநீதிகளைத் தூய்மைப் படுத்திக்கொண்டிருந்தது. சன்னதம் கொண்ட தேசம்மாவின் தாண்டவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. ஐக்கிய சபையிலிருந்து வெளியே வந்தாள். கடலைப் பார்த்தாள். கடல் அவ்வளவு துலக்கமாக இருந்தது. உடம்பும் மனதும் லேசாய் ஆகிப்போனது தனத்துக்கு. சோபியாவிடமிருந்து குண்டானை வாங்கினாள். ‘இன்னாடி பன்னிட்டு வந்துருக்குற.. அவனுங்கள எதுத்து நாம வாழ முடியாதுடி. சங்கத்துல போய் போய்ட்டு வந்திருக்கியேடி...” என்று நடுக்கத்துடன் சோபியா கேட்டாள். “இன்னிக்கு சங்கத்துல போனன்… கொஞ்ச நாள்ல கக்கூசு கட்டித் தர்லனா புடிச்சு அவனுங்க மூஞ்சில ஊத்திருவன். இளவழகிய பாத்தியாடி, அடக்கி வச்சி... அடக்கி வச்சி... கிட்னீ போயிடுச்சி... இப்டி கிட்னீ போயி நாறிக்கிட்டு சாவுறதவிட, இவனுங்க மூஞ்சில ஊத்திட்டு கௌரவமா சாவலாண்டி” என்றாள். சோபியா ``ஏசப்பா’’ என்று பெருமூச்சு விட்டாள். “சோபி எமிமாக்கு நட்சத்திரம் வாங்கணும்டி... போலாமா...” என்றபோது, “தனம், குண்டான கொஞ்சம் புடி... நானும் போயிட்டு வந்துர்றன்” என்று ஐக்கிய சபையினுள் சோபியாவும் நுழைந்தாள். ``ஸ்தோத்திரம் ஆண்டவரே’’ என்று வெடித்துச் சிரித்தாள் தனம். சிரித்ததும் தெரியும் அவளது தெத்துப்பல் இந்த கணத்தில் அவ்வளவு அழகாக இருந்தது.