பிரீமியம் ஸ்டோரி

சாமித்துரை ஒரு வினோதமான கனவு கண்டுகொண்டிருந்தான்… அதில் அவன் மிகவும் வீரத்துடன் நாலைந்து பேரை இடக்கையால் அடித்துப் போட்டுவிட்டு மாமனாரின் வீட்டுக் கதவை எட்டி உதைக்கிறான். மாமனார் அரிவாளோடு இவனை ‘டேய்’ என்று வெட்ட வருகிறான். நாசமாப்போன பொண்டாட்டிகாரி அப்பனுக்குப் பின்னால் இரண்டு கையிலும் ஜிலேபியை வைத்துத் தின்றபடியே, ``அந்தக் கையை வெட்டுங்கப்பா. அந்தக் கையிதான் என் மேல முக்காலியைத் தூக்கி அடிச்சுச்சு” என்று சொல்ல, அவன் “அப்படியா தாயி... என் தங்கத்தையா அடிச்சான்’’ என்று சொல்லியபடியே இவன் காலை வெட்ட, ரத்தம் ‘பொலக்’ என்று கொட்ட, சாமித்துரைக்கு வலிக்கவே இல்லை. பொண்டாட்டி ஜமுனாவோ “அப்பா, கையிப்பா, கையி” என்க, அவன், “அட காலையா வெட்டினேன்? இரும்மா, இப்ப கையை வெட்டிர்றேன்” என்று பாய்ந்து மறுபடி இன்னொரு காலை வெட்ட…

“லூசுப் பய மாமனாருக்குக் கடைசிவரைக்கும் கால் எது, கை எதுன்னு தெரியலையே” என்று ரத்தம் வழிய சாமித்துரை சிரிக்கையில் மறுபடி காலிங் பெல் ஒலித்தது. பட்டென்று எழுந்தான். காலை மணி எட்டு. காலைப் பார்த்தான். வேர்த்துப்போய் இருந்தது. எழுந்து கதவைத் திறந்தால் மணி நின்றிருந்தான்.

“என்ன மாப்ளை, விடிஞ்சு வெள்ளை வெயில் அடிக்கிற வரைக்கும் தூங்கறவன்?”

“என்னா பண்ணச் சொல்ற, உன் தங்கச்சி கோவிச்சுக்கிட்டுப் போயிட்டா. ராத்திரி சரக்கு, வந்து படுக்க மணி ரெண்டு… எந்திரிச்சு என்ன செய்யப்போறோம்..?”

“ஜமுனாகூட என்னா சண்டை?’’

“எல்லாம் காசுதான்… ஒரு கோழிப் பண்ணையை வைக்கலாம்னு யோசனை. உங்கப்பன்தான் ஊருக்குள்ள வட்டிக்குக் குடுத்துக் காசு வச்சிருக்கான்ல, வாங்கிக் குடுறின்னேன்... ‘உனக்கு நான் தெண்டம் அழுக முடியாது’ன்னு ஒரே சண்டை… முக்காலியைத் தூக்கி மூஞ்சியில அடிச்சுட்டேன்”

“ம்க்கும்… பெரிய வீரன்தான் மாப்ளை நீய்யி?! சரி வா… நான் ஜமுனா கிட்ட பேசறேன். புருசன் பொண்டாட்டி சண்டை எத்தனை நாளைக்கி..?”

ஒரு வடக்கன் வீர கதா - சிறுகதை

“ம்ஹும்…அவங்கப்பனைப் பத்தித் தெரியுமில்ல? மகளை முக்காலியைக் கொண்டி அடிச்சிருக்கேன். இப்ப போனோம்னு வையி… ஒரு வேளை கரெக்டா கையை வெட்டினாலும் வெட்டிருவான்...”

“என்னா மாப்ளை. நீ எத்தத் தெண்டி வீரன்னு நான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டிருக்கேன்...மாமனாருக்குப் போயி பயப்படறவன்? அந்தாளு கிட்ட நான் பேசவா?”

“ரெண்டு நாள் போகட்டும் மாப்ள. பாத்துக்கலாம்.”

இருவரும் கதவைப் பூட்டுகையில் அபோய் எனும் வெளுப்பான இளைஞன் எதிர் போர்ஷனில் இருந்து குளித்து முடித்து நெற்றியில் பொட்டெல்லாம் வைத்து, கதவைப் பூட்டிவிட்டு வந்தான். இவர்களைப் பார்த்து சினேகமாய்ச் சிரிக்க முயல, சாமித்துரை அவனை விரோதமாகப் பார்த்துக் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தான்.

“அந்த வடக்கனைப் பாரு, பொழைக்க வந்த நாயி, மூஞ்சியைப் பாரு.”

“எதுக்கு மாப்ளை அவனை வையிறவன்?”

“ஜமுனாகூட சண்டை போட்டப்ப விலக்கி விடுறேன்னு வந்து என்னை அடிச்சிட்டான்டா.”

மணி சட்டென்று குரலை உயர்த்தினான் ``என்னாது, ஒன்னைய இவன் அடிச்சானா? என்னா மாப்ளை சொல்ற? இவன் எந்தூரு?”

“வடக்கன்டா… இந்திக்காரன்டா.”

சாமித்துரைக்கு எல்லாமே இந்திக்காரன்தான். அபோய் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன். இங்கே தேனிக்கு வந்து ஒரு மில்லில் இன்ஜினீயராக வேலை பார்க்கிறான். சாமித்துரை குடியிருக்கும் வீட்டில் எதிரெதிரே இரண்டு போர்ஷன்கள். இரண்டையும் இணைக்கும் வராண்டா. வராண்டாவின் ஒரு ஓரத்தில் பாத்ரூம் என்று வாடகைக்கு விடுவதற்கே கட்டப்பட்ட வீடு. வீட்டு ஓனர் சாமித்துரையின் எதிர் போர்ஷனை மில் முதலாளியின் சிபாரிசின் பேரில் அபோய்க்கு விட்டிருந்தார். அபோய் தொந்தரவில்லாத ஆள். வயது இருபத்தெட்டு இருக்கலாம். கல்யாணம் ஆகவில்லை. சாமித்துரையைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பான். ஜமுனாவை ‘தீதி... தீதி...’ என்று அழைப்பான். அவ்வப்போது அவன் சமைக்கும் பெங்காலி அயிட்டங்களைக் கொடுப்பான். ஜமுனா அவனுக்கு அவ்வப்போது தான் சமைக்கும் காரக்குழம்பையும் மீன்குழம்பையும் கொடுப்பாள். ‘வெரி டேஸ்ட்டி தீதி’ என்று கண்கலங்கியபடி சொல்வான்.

மூன்று நாள்களுக்கு முன்பு சண்டை நடந்தபோது அபோய் ஓடி வந்தான். சரக்கில் இருந்த சாமித்துரை காச் பூச் என்று கத்தி முக்காலியால் ஜமுனாவின் மீது அடிக்க, அவள் கைமுட்டியில் பட்டு புஸ்ஸென்று வீங்கிவிட்டது. ‘ஐயோ’ என்று அவள் அலற, பதறிப்போன அபோய் மேலே கை வைத்து விலக்க முயன்றதில் சாமித்துரை தடுமாறிக் கீழே விழுந்தான். விழுந்தவன் கோபமாக எழுந்து அபோய் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட, அபோய் அதை எதிர் பாராமல் தடுமாற, இவன் பீறிட்டெழுந்த வீரத்துடன் அபோயை அடுத்தடுத்து அடிக்க, ஒரு கட்டத்தில் அபோய் சட்டென்று இவன் கையைப் பிடித்து பலமாக முறுக்க, இவன் நிலைமை “ஐயோ, எலேய் விடுறா...” என்று திட்டுவதைத் தாண்டி எதையும் செய்ய முடியாமல் போனது. ஒருக்களித்தபடி குனிந்து முதுகுக்குப் பின் முறுக்கப்பட்ட கையுடன் கதற வேண்டியதாகிவிட்டது. என்னதான் மறத்தமிழன் என்றாலும், நடுத்தர வயது ஆகிவிட்டது. சரக்கு போதை வேறு. அவனோ வங்கத்து இளஞ்சிங்கம். ரசகுல்லாவும் மீனுமாகத் தின்றிருப்பான்போல. திமிற முடியவில்லை.

அபோய் புன்னகையுடன் இவனிடம் ஏதோ பெங்காலியில் பணிவாகச் சொன்னான். “ஸாரி” என்பது மட்டும் புரிந்தது.

சாமித்துரை முறைப்பாக அவனை மேலும் கீழும் பார்த்தான்.

ஒரு வடக்கன் வீர கதா - சிறுகதை

அபோய் இவன் பார்வையிலிருந்து இவன் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டு இரண்டு கரங்களையும் கூப்பினான். “ஸாரி… அண்ணா…’’ என்று மேற்கொண்டு அபுஷ் குபுஷ் என்று ஏதோ சொன்னான்.

இவர்கள் இருவரும் மறுபடி அவனை முறைக்க, அவன் ஒரு விநாடி தயங்கிவிட்டு என்ன செய்வதென்று புரியாதவனாக, வாசலில் இருந்த பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போனான்.

அவன் போவதையே பார்த்திருந்த மணி அவன் போனதும் சொன்னான். “ஏன் மாப்ளை, ஒரு கிந்திக்காரப் பய உன் வீட்டுக்குள்ள வந்து ஒன் மேல கை வச்சிருக்கான், அவனை வெட்ட வேணாமா?”

சாமித்துரைக்கு ஏதோ ஒரு ஓரத்தில் சுருக் என்றது. ``ஏய். அவன் சண்டையை விலக்கத்தான் வந்தான், நான் போதையில இருந்தனா, அப்படியே தள்ள, தடுமாறி விழுந்துட்டேன்.”

“ஏய்… மாப்ளை. என்னா இப்பிடி பேசறவன்? ஒரு வீரன் கணக்கா, ஆம்பளை கணக்கா பேசு. அவன் எம்புட்டு தைரியம் இருந்தா நீ போடுற சண்டையை வந்து விலக்குவான்? உன் பொண்டாட்டியை நீ அடிக்கிறே. வடக்க இருந்து பொழைக்க வந்த நாயிக்கு என்ன வலிக்குது. நானா இருந்தா அப்பவே அவனை அல்லையில குத்தி எறிஞ்சிருப்பேன்.”

சாமித்துரைக்கு இப்போது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ``மாப்ளை, அவனை நான் சும்மா ஒண்ணும் விடலை… எத்து எத்துன்னு எத்திப்புட்டேன். மூலையில விழுந்து இந்தியில கத்துனான் தெரியுமில்ல?” அபோய் தன் கையை முறுக்கியதும், கூன் விழுந்த கிழவன்போல் இவன் குனிந்து ‘விடுறா... விடுறா...’ என்று கதறியதையும் சொல்லவில்லை.

மணி இவனை உற்றுப் பார்த்தான். “மாப்ளை, எனக்கு மேலெல்லாம் எரியுது. வெளியூர்க்காரன் நம்மளை அடிக்கிறதா? நீ ஒரு வார்த்தை சொல்லு. அவன் குரவளையைக் கடிச்சுத் துப்பட்டுமா, சொல்லு நீய்யி.”

“ஏய்... அதான் நானும் அவனை அடிச்சிட்டேன்ல?”

“வந்து சிரிச்சுப் பேசிட்டுப் போறான்?’’

“மன்னிப்பு கேக்கறான் மாப்ளை… ‘ஸாரி அண்ணா’ன்னு சொன்னான்ல?”

“எனக்கு மனசு ஆறலை. இவன் எப்ப திரும்பி வருவான்?”

“நைட்டு ஒம்போது மணிக்குத்தான். வேலை முடிஞ்சு ஓட்டல்ல சாப்டுட்டு வருவான்.”

“நான் இன்னைக்கு நைட்டு வர்றேன். அவனை வம்பிழுத்து, கை வெரலையாவது வெண்டிக்கா உடைக்கிற மாதிரி உடைச்சாத்தான் என் மனசு ஆறும்” என்றான் மணி.

சாமித்துரை வேறு வழியின்றித் தலையாட்டினான். மணி அவன் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான்.

“இன்னைக்கு எனக்கு நீ சரக்கு வாங்கிக் குடு மாப்ளை. அவனை நான் பாத்துக்கிறேன். உன் மேல கைய வைக்கிறானா அவன்!”

இருவரும் கிளம்பி, கடைக்குப் போனார்கள். சரக்கும் பிரியாணியும் வாங்கிக்கொண்டு குளக்கரைக்குப் போய் சரக்கடித்துவிட்டு, தூக்கம். பிறகு மாலையிலும் ஏற்றிக்கொண்டு பிரிய மனமின்றிப் பிரிந்தார்கள்.

“மாப்ளை நீ வீட்டுக்குப் போ... ஒன்பது மணிக்கு நான் வர்ரேன்... என்னா? அவனை வகுந்துருவோம்… வீட்டுக்குப் போயிட்டு வரேன்.”

மணி விடைபெற்றுப் போய்விட, இவன் வீட்டுக்கு வருகையில் மாலை ஐந்து மணி இருக்கும்.

கதவைத் திறந்து சோர்வாக அமர்ந்தான். பொம்பளை இல்லாத வீடு வீடாக இல்லை என்று மனதில் தோன்றியது. அப்போது வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு எஸ்.ஐ வந்து வீட்டைப் பார்த்தார்.

“இந்த வீடுதானா?”

சாமித்துரை லேசான பீதியுடன் வெளியே வந்து நிற்க, அவர் இவனை ஏற இறங்கப் பார்த்தார்.

“நீ இந்த வீட்டிலதான் இருக்கியா?”

“ஆமாங் சார்”

அவர் வாட்சைப் பார்க்க, ஏட்டு இவனருகில் வந்தார்.

“ஒண்ணுமில்லை, உனக்கு எதிர்த்த போர்ஷன்ல ஒரு வடக்கத்திப் பையன் இருந்தான்ல?”

“ஆமா” சாமித்துரைக்குக் குழப்பமாயிருந்தது. இன்னைக்கி ராத்திரி அவனை அட்டாக் பண்ணப்போறது தெரிஞ்சு கம்ப்ளையின்ட் எதும் குடுத்துட்டானா என்று யோசித்தான்.

ஏட்டு நிதானமாகச் சொன்னார், “அந்தப் பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயி ஆளு ஸ்பாட் அவுட்.’’

திடுக் என்றது சாமித்துரைக்கு. அடப்பாவி. காலையில சாமி கும்பிட்டுட்டுப் பொட்டெல் லாம் வச்சுட்டுப் போனானே?

“ஐயோ! எப்ப சார்?”

“எட்டரை மணி இருக்கும். போலீஸ் ஸ்டேஷன் முன்னாலதான் ஆக்ஸி டென்ட்... பாடி போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சு வர்ற நேரம்தான். அந்த வீட்டில அவன் மட்டும்தான இருக்கான்?”

“ஆமாங்க சார். கல்யாணம்கூட ஆகலை…” சாமித்துரைக்குத் தொண்டை வறண்டது. உள்ளுக்குள் ஏதோ செய்தது. வயிறு கலங்கியது.

அவனது கலக்கத்தை அதிகரிக்கும் விதமாக ‘உய்ய்ங்... உய்ய்ங்’ என்று சைரன் சுழல ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதன் பின்னால் ஒரு கார். மில் மேனேஜர் வந்தார். இன்னும் சில ஆட்கள்.

பின்னாலேயே ஒரு வண்டியில் ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது.

“யோவ், எதிர்வீட்டுச் சாவி இருக்காய்யா உன்கிட்ட?” என்று எஸ்.ஐ அதட்டலாகக் கேட்க, சாமித்துரை பதறி ``அவன் வீட்டுச் சாவி அவன்கிட்டதான் சார் இருக்கும்?’’ என்று சொல்ல, அவர் ஏட்டைப் பார்க்க, ஏட்டு “சாவி இல்லை சார்” என்று சொல்ல,

எஸ்.ஐ, “பரவால்லை. ஏய்… வராண்டாவில பிளக் பாயின்ட் இருக்கில்ல, அங்க செட் பண்ணு.”

ஃப்ரீசர் பாக்ஸை வராண்டாவில் வைத்தார்கள். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு பக்காவாக பேக் செய்யப்பட்ட பாடியை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடி வராண்டாவில் வைத்து பிளக் பாயின்டில் செருக, ஃப்ரீசர் இயங்கத் தொடங்கியது. ஒருத்தன் கத்தை ஊதுபத்தியைக் கொண்டு வந்து கொளுத்தி வைத்தான். இன்னொருத்தன் ஒரு மட்டமான சென்ட்டை எடுத்து வந்து பாக்ஸின் மீது அடித்தான்.

பிரமை பிடித்த மாதிரி சாமித்துரை பார்த்துக் கொண்டிருக்க, சாமித்துரையின் வீட்டுக் கதவில் இருந்து இரண்டடி தூரத்தில் அந்த ஃப்ரீசர் பாக்ஸை வைக்க, சாமித்துரை மெதுவாக எஸ்.ஐ-யிடம் வந்து “சார்” என்று முனக, அவர் கடுப்பாக “என்னய்யா?’’ என்று கத்தினார்.

“என்ன சார், பொணத்தை இங்க கொண்டாந்து வைக்கிறீங்க?”

அவர் இவனைக் கடுமையாக முறைத்தார். “வேற எங்க வைக்கிறது, இதான அவன் வீடு?”

“அது… அந்த வீடு சார்” எதிர் போர்ஷனைக் காட்டினான் சாமித்துரை.

“நீ என்ன இந்த வீட்டுக்கு ஓனரா?”

“இ… இ… இல்லை சார்.”

“இந்த பாரு… இந்த வீட்டு ஓனருகிட்ட பேசிட்டோம். அந்தாளு குடும்பத்தோட திருப்பதியில இருக்காரு. பாடியை இங்க வைக்கச் சொல்லிட்டாரு. அந்த போர்ஷன் சாவி இல்லை… இருந்தாலும் அந்த வீட்டுக்குள்ள வைக்கக் கூடாதுன்னுட்டாரு… அதான் வராண்டாவுல வச்சிருக்கோம்.”

ஏட்டு, “உனக்கு என்னய்யா பிரச்னை இதுல?”

“இல்லைங்க நான் இந்த வீட்டில இருக்கேன்.”

“இருந்துட்டுப் போ. இந்த வராண்டாவுல இவனுக்கும் ரைட்டு இருக்கில்ல?”

எஸ்.ஐ சாமித்துரையைப் பார்த்து, கடுமையான குரலில் அழைத்தார்.

“ஏய்... இங்க வா. உன் பேரு என்ன?”

“சாமித்துரை சார்.”

“இந்த பாரு சாமித்துரை. இந்தப் பையன் ஊரு கல்கத்தா. அவன் வீட்டுக்குத் தகவல் சொல்லியிருக்கோம். அவங்க ஃப்ளைட்ல கிளம்பி வர்றாங்க. அவங்க வந்து எடுத்துட்டுப் போற வரைக்கும் பாடி இங்கதான் இருக்கும். ஹவுஸ் ஓனர்கிட்ட பேசியாச்சு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. உன் வீட்டில யார் யாரு இருக்கா?”

“நான் மட்டும்தான் சார்”

“நீ மட்டுமா?”

“பொண்டாட்டி அப்பன் வீட்டுக்குப் போய்ருக்கா சார்.”

“அப்புறம் என்ன, நீ மட்டும்தானே... பாத்துக்க…வாய்யா போலாம்.”

அவர் ஜீப்பில் ஏறிக்கொள்ள, போலீஸ்காரர்கள் போனதும், அக்கம் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மெதுவாகக் கலைந்து செல்ல, மில் மேனேஜரும் இன்னும் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் நின்றிருந்தார்கள். இருட்டிய பிறகு அவர்களும் ஸ்கூட்டரில் ஏறிப் போய்விட்டார்கள்.

அவர்கள் எல்லாரும் போன பிறகு சாமித்துரை வீட்டினுள் போய் தண்ணீர் குடித்தான். ‘என்ன நடக்குதுடா, பாவிப் பய கடவுளே!’ என்று தலை சுற்றியது.

வாசலிலே அபோய் பிணமாக. இவன் அபோயுடன் தனியாக. கதவை உள்ளே பூட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தான். பசித்தது. வெளியே கொளுத்தி வைத்த ஊதுவத்தியின் மணம் ஒரு மாதிரி வயிற்றைப் புரட்டியது. `இப்ப என்ன செய்யிறது? எப்படித் தூங்கறது?’ என்ற இரண்டு மாபெரும் கேள்விகள் அவனுக்குள் எழுந்தன.

மணி பார்த்தான். ஒன்பதாகியிருந்தது. ஊரின் ஓசைகள் குறையத் தொடங்கியிருந்தன. பாவிப் பய இப்படியா வந்து சாவான்? ச்சே...

மெதுவாகக் கதவைத் திறந்து வந்தான், வராண்டாவில் அபோய் பெட்டிக்குள் அமைதியாகப் படுத்திருந்தான். முகம் லேசாக வீங்கியிருந்தது. சாமித்துரை தன் வலது கையை அசைத்துப் பார்த்தான். இவன் அன்று முறுக்கிய வலி இன்னும் மீதம் இருந்தது.

பாட்டி அவள் சாகும் வரை சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது ‘அல்பாயுசுல போனவங்க ஆத்மா மேலோகம் போகாமல் இங்கனக்குள்ளதான்டா சுத்திக்கிட்டிருக்கும். உன் தாத்தன் இப்படித்தான் கிணறு வெட்டையில உள்ள விழுந்துட்டாரு. உடம்பு சிதறிப்போச்சு. என்னா கொடுமைன்னா அன்னைக்கின்னு இந்தப் பாதகத்தி அயிரைமீன் குழம்பும் நெல்லுச்சோறும் ஆக்கிக் கொண்டு போய்ருந்தனா, அதைத் திங்காமலேயே செத்துப் போயிட்டாரு… இப்பவும் பல நாளு கதவுகிட்ட வந்து நின்னுக்கிட்டு `ஏண்டி விளா காமாச்சி… அயிரை மீனு கொழம்பு எங்கடி?’ அப்படின்னு கேட்டுக்கிட்டே நிக்கிறாரு.”

பாட்டி அழுகையும் அபிநயமுமாகப் பல முறை சொன்னதெல்லாம் நினைவு வந்து கை கால்கள் ஒரு மாதிரி தொள தொளத்தன. ‘அயிரை மீன் கொழம்புக்கே தாத்தன் நெதமும் வாசல்ல வந்து நின்னாரு… ஆனா இவனை இன்னைக்கி அடிச்சு, கை விரலையாவது ஒடைக்கணும்னு மணியும் நானும் பேசிக்கிட்டோமே? சும்மா விடுவானா இவன்?’

இப்படி யோசிக்கையிலேயே கெவுளி தலைக்கு மேலே கெச் கெச் கெச் என்று சத்தமாக அடிக்க, உலுக்கி விழுந்து உள்ளே ஓடி, கதவை மூடிக் கொண்டான். மூச்சு வாங்கியது. வியர்த்து ஊற்றியது… ‘ஐயோ… தனியா இருக்க முடியாது போலிருக்கே.’ மணி பத்தாகப்போகிறது. ஊரடங்கி விட்ட அமைதி இன்னும் அச்சுறுத்தியது.

‘டொட்டாய்ங்க்... டொட்டாய்ங்க்...’ என திடுதிப்பென்று எழுந்த சத்தத்தில் மறுபடி உலுக்கி விழுந்தான். மொபைல் போன் ஒலித்தது. வேகமாக எடுத்துப் பரபரப்பாக ‘ஹலோ’ என்க, மறுமுனையில் மணி.

ஒரு வடக்கன் வீர கதா - சிறுகதை

“மாப்ளை, சரக்கு இருக்கா?”

“அதெல்லாம் இருக்குடா… ஏய், வெவரம் தெரியுமா ஒனக்கு?”

“தெரு முக்குலதான் இருக்கேன் மாப்ளை. கையில சாமான் இருக்கு… இன்னைக்கி என்னான்னு பாத்துருவோம்.’’

விவரம் சொல்லும் முன் போன் கட் ஆகி விட்டது. சரி, மணி வந்தால் தெம்பாக இருக்கும். அவனைக் கூடவே இருக்கச் சொல்லிவிடலாம் என்று கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.

மணி முக்குத் திரும்பி வீடு நோக்கி வந்தான். வீட்டில் இருந்த ஒரு அடி கத்தி ஒன்றை இடுப்பில் செருகியிருந்தான். கையில் இருந்த குவார்ட்டரில் மீதத்தை அங்கேயே நின்று குடித்துவிட்டு பாட்டிலைத் தூக்கி எறிந்தான். “நேராப் போயி அந்த வடக்கன் வீட்டுக் கதவை ஒரு எத்து… வெளியில வந்ததும் கத்தியைக் காட்டுனா அங்கியே ஒண்ணுக்குப் போயிருவான்... ஊரு விட்டு வந்து எங்ககிட்டயா?”

வீட்டை நெருங்கினான். `எதுக்கு வெளிச்சமா வரண்டாவுல லைட்டைப் போட்டு இருக்கான். கரண்டு பில்லுக்கு நிறயா காசு வச்சிருக்கானா மாப்ளை?’ என்று யோசித்தவாறே லேசாகத் தள்ளாடி வீட்டினுள் நுழைந்தான்.

நேர் எதிரே யாருமற்ற தனிமையில் அபோய். முகம் இப்போது கொஞ்சம் நீலம் பாரித்து, பெட்டியின் மேல் சில ஈக்கள் மொய்க்க, ஊதுவத்தி மணம், சென்ட் மணம் எல்லாம் லேசாக அடித்தபடி இருக்க, இது எதையும் எதிர்பார்த்திராத மணி “ஐயய்யோ” என்று கத்திய அடுத்த நொடி கரன்ட் ஆஃப் ஆனது.

உள்ளே ஏற்கெனவே பயந்திருந்த சாமித்துரைக்கு, ‘ஐயய்யோ’ என்ற குரலும், அடுத்த நொடி கரன்ட் கட் ஆனதும், பீதியை சடாரென்று அதிகப்படுத்த, வேகமாக எழுந்தவன் இருட்டில் அருகே இருந்த பாத்திரங்களைக் காலால் இடறிவிட, ‘கடமுடா’ என்று பாத்திரங்கள் விழும் ஓசை, பேரோசையாக இரவில் எதிரொலித்தது.

“ஐயய்யோ... பேயி... பேயி...’’ என்று வந்தவழியே ஓடத் தொடங்கினான் மணி. போகும் வழியில் இரண்டு முறை விழுந்து எழுந்து, சிராய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் ஓடி, வழியில் மூடி இருக்கும் கடையின் படிக்கட்டில் அமர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினான்.

இங்கே பயத்தில் நடுங்கியபடி இருந்த சாமித்துரை, மணிக்கு போன் செய்தான்.

“அலோ மணி…”

“மாப்ள, சாமித்துரை, என்னடா இப்பிடி பண்ணிட்ட?”

“நான் என்னடா செஞ்சேன்?’’

“நைட்டு வந்து அந்த வடக்கனை நாலு மிதி மிதிச்சு விரலை ஒடிக்கலாம்னுதானே சொன்னேன். நீ ஆளையே கொன்னு பொட்டியில வச்சிட்டியேடா… கொலைகாரப் பாவி.’’

“நான் கொன்னனா? என்னாடா சொல்ற?’’

“இப்ப வீட்டுக்கு வந்து பாத்தேனேடா... ஏன் மாப்ளை, கொன்னதுதான் கொன்ன, பொணத்தை எங்கியாச்சும் கம்மாயிலயோ ஓடையிலயோ போடாம வீட்டு முன்னாலயா வைக்கிறது?”

“எலேய் குடிகார நாயி, அவன் ஆக்ஸிடென்ட் ஆயி செத்துட்டான்டா… போலீஸ்காரங்க கொண்டாந்து வாசல்ல வச்சுட்டுப் போயிட்டாங்க.”

மணிக்கு போதை லேசாகக் குறைந்தது. “அப்பிடியா… அதான பாத்தேன். ஒனக்கு ஏது அம்புட்டு தைரியம்?”

“ஏலேய் மாப்ளை, தைரிய மயிரு எல்லாம் அப்புறம் பாக்கலாம். நீ வீட்டுக்கு வா.”

“ஒன் வீட்டுக்கா, எதுக்கு?”

“பொணத்தை வாசல்ல வச்சுக்கிட்டு ஒத்தையில இருக்க ரொம்ப பயமா இருக்குடா…கூட வா… சரக்கு இருக்கு, கொஞ்சம் குடிக்கலாம்.”

“ஏய், நான் ரொம்ப தூரம் ஓடியாந்துட்டேன். கீழ விழுந்து சிராய்ச்சுக்கிட்டேன். போதை வேற.”

“வர்றயா இல்லையாடா?”

“விடிஞ்ச பெறகு வர்ரேன்.”

டக்கென்று போன் கட் ஆகிவிட்டது. சாமித்துரை மறுபடி டயல் செய்ய, மணி போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

“பயந்தோளிப் பய... வாய் மட்டும் இல்லைன்னா உன்னைய நாய் தூக்கிட்டுப் போயிரும்டா.”

பெருமூச்சு விட்டான். அவன் மூச்சு அவனுக்கே கேட்டது. கரன்ட் இன்னும் வரவில்லை.

வியர்த்து ஊற்றியது. இருளில் சரக்கு பாட்டிலைத் தேடி எடுத்து அப்படியே கவிழ்த்துக் கொண்டான். லேசாக மயங்கினான்.

அபோய் கதவைத் திறந்து உள்ளே வந்து தமிழில் பேசினான்.

“அண்ணே, மன்னிச்சிருங்க… வேணும்னு உங்க கையை முறுக்கலை. தீதியை அடிக்கலாமா? அதான்... பாக்க வீரமா இருக்கீங்க, அக்கா கிட்ட வீரத்தைக் காட்டறீங்க. ஆனா கையை முறுக்கினதும் கதறிட்டீங்களே அண்ணே...”

“ஐயோ அபயீ’’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான்.

கரன்ட் வந்திருந்தது. வாசலில் சத்தம், கதவைத் திறந்தான்.

ஜமுனா. ஃப்ரீசர் பாக்ஸின் மீது புரண்டு அழுதுகொண்டிருந்தாள்.

“தீதி... தீதி...ன்னு அம்புட்டு அம்சமா கூப்பிடுவியே ராசா! இப்பிடி வந்த இடத்துல அநாதையா ஒத்தையில கிடக்கிறியே… கண்ணு முழிச்சு ஒரு வார்த்தை பேச மாட்டியா என் ராசா...”

இவன் அருகே செல்ல, அவள் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்காக ஏத்துக்கிட்டு வந்தான்யா இவன்… தங்கம் பெத்த புள்ளைய அன்னைக்கி எத்தனை அடி அடிச்சே... வெளங்குவியா நீய்யி... எடுபட்ட பயலே...”

அருகில் இருந்த எதையோ எடுத்து அவள் இவனை நோக்கி எறிய, இவன் வீட்டினுள் வந்து அமர்ந்தான்.

ஜமுனா வெளியில் அபோயின் அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

அவளுக்கு பயமே இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு