Published:Updated:

மீண்டும் ஒருமுறை - சிறுகதை

மீண்டும் ஒருமுறை
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ஒருமுறை

- பாரதிபாலன்

மீண்டும் ஒருமுறை - சிறுகதை

- பாரதிபாலன்

Published:Updated:
மீண்டும் ஒருமுறை
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ஒருமுறை

மழை! சடசடவென்று மழை! இங்கொன்றும் அங்கொன்றுமாக முத்துமுத்தாகக் கொட்டுகிறது. சற்று நேரம்தான். சடசடவென்றுஊத்திவிட்டது. வேகமாக எட்டு வைத்து நடந்து ஒதுங்குவதற்குள் நன்றாகப் பிடித்துக் கொண்டது. இப்படி மழையைப் பார்த்துக்கூட ரொம்ப நாள் ஆயிற்று!

வாசல் படியை விட்டு இறங்கியதும் அம்மா ஓடிவந்து, “கொடையை எடுத்தாரட்டா?’ என்றாள். ``கொடையா..!” என்று நடந்துவிட்டான்.

மெல்லத் திரும்ப மழையைப் பார்த்தான். மழை ஒரே சீராக தொடர்ச்சியாக ஒரே தாள லயத்தில் தொடர்ந்து கொண்டி ருந்தது. மழையை இத்தனை விவரமாகப் பார்த்து எத்தனை நாள்? இளமை நினைவுகளைத்தான் மழை கொண்டு வந்துவிடுகிறது. மழைக் காதலன் அல்ல அவன்; வெயில் பிரியன். எப்போதும் வெயிலிலே அலைகிறவன். சிறுவயதில் அவன் பூசிக்கொண்ட வெயில் வாசம் அவன் உடம்பில் இன்னும் இருக்கிறது. அந்த மணம் அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

அவன் சோழிங்கநல்லூர் இன்ஃபோசிஸில் சேர்ந்து இரண்டாவது வருடம் ‘ஆன் - சைட்’ வாய்ப்பு வந்தது. அமெரிக்கக் கனவோடு பொறியியல் படித்தவனுக்கு அது மிகப் பெரிய உற்சாகம்! ஒரு வாரம் அதே நினைப்பு! சோழிங்கநல்லூரில் ஒரு உணவு விடுதியில் சீனியர்களோடு இதைப் பற்றித்தான் பேச்சு. எங்கு யாரைச் சந்தித்தாலும் இதே பேச்சு! யாரை எங்கு அனுப்புவார்கள். நான்கும் ஒரே புராஜெக்ட்தான். சைட் தான் வேறு வேறு; அப்படி அமைவது அபூர்வம்! அது ஒரு இன்ஷூரன்ஸ் புராஜெக்ட்!

அற்புதமான பனிப்பொழிவு கொண்ட நியூஜெர்சி, எப்போதும் அடைமழையில் ஈரமிதப்பாக இருக்கும் சியாட்டில், நம்ம ஊர் போல வெயில் கொண்ட கலிபோர்னியா, ஜிலுஜிலுவென்று தென்றல் வீசும் தென் கரோலினா. அதிகம் போட்டியே இல்லாத, வெயிலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு, கலிபோர்னியா போனான் இவன். இங்குதான் இவன் கதை தொடங்குகிறது!

இதுதான் அவனுக்கு முதல் அமெரிக்கப் பயணம். அதுவே அவன் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கமாகவும் ஆகிவிட்டது. அந்த முதல் அமெரிக்கப் பயண அனுபவத்தினை எப்படி மறந்துவிட முடியும்? காரணம் அமெரிக்கா மட்டுமல்ல; அது வேறு. காதல்! ஓமன் மஸ்கட்டில் இருந்து லண்டன் Heathrow வழியாக வாஷிங்டன் Dulles நோக்கிய பயணம். பிரிட்டிஷ் ஏர்வேஸில் A380 wide body double Decker விமானம் அது! அதுவும்கூட ஒரு வெயில் காயும் மே மாதம் தான். வாஷிங்டன் Dulles-இல் இறங்க, வேறு ஒரு கிரகம்போல உணர்ந்தான். எங்கே இறங்கணும், எப்படி வெளியே வரணும். எங்கே டாக்ஸி பிடிக்கணும் எல்லாம் படித்துப் படித்துச் சொல்லியிருந்தார்கள். தெளிவாக வாட்ஸ் அப்பிலும் தகவல் வந்துகொண்டிருந்தது. விமான நிலையத்திற்குள் வட்ட வடிவில் சுழன்ற 7ஆம் நம்பர் Carousel-இல் அவனுடைய மூன்று பெரிய பெட்டிகளையும் தேடி எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

மீண்டும் ஒருமுறை - சிறுகதை

சுட்டெரிக்கும் உச்சி வெயில். திறந்த வெளி கார் நிறுத்தம் வந்தடைந்தான். சற்றுநேரம்தான் இருக்கும். உடல் வேறு ஒரு நிலையை உணரத் தொடங்கியது. திடீரென்று உடம்பெல்லாம் ஈரம் ஏறுவது போல் ஓர் உணர்வு. மெல்ல அந்த ஈரம் உடம்பெல்லாம் படர்ந்து, உடல் மெல்ல ஆட்டம் கண்டது. குளிர்! கிடுகிடுவென்று வெட்ட வெளியில் எங்கு ஓடி ஒதுங்குவது? குளிர் தாங்கும் வஸ்துகள் எல்லாம் பெட்டியில் அடைபட்டுக் கிடக்கின்றன. இந்த இடத்தில் வைத்து அதை எப்படித் திறப்பது?

இங்குமங்கும் அலைபட்டுக் கொண்டிருந்தவன் கண்களில்தான் அவள் பட்டாள். அவள் பேசிய தமிழ்தான் அந்தக் குளிருக்கு வெயிலாக வந்தது. மொபைல் போனில் யாருடனோ தமிழில் பேசிக்கொண்டே இவனைக் கடந்தாள். இவன் அவளுடைய ‘வெளீர்’ என்ற வெள்ளை முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் இவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள்! அவளும் அதே விமானத்தில் இருந்துதான், மஸ்கட்டிலிருந்து வந்து இறங்கியிருக்கிறாள். விதி வலியது பாருங்கள். அவளுக்கும் அவன் போக வேண்டிய ‘க்ரௌன் பிளாசா’ ஹோட்டலைத் தாண்டித்தான் போக வேண்டும். சற்று நேர குசல விசாரிப்பில், ஒரு சின்ன பாரம் குறைந்தது. அவளே அவனை அவளது டாக்ஸியில் இறக்கிவிடுவதாகச் சொன்னாள். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது. அவ்வளவு அழகு! உயரம் சற்று குறைவுதான். அதற்கும் சேர்த்து முகப்பொலிவு! ‘அதிர்ஷ்டம்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான். அதை இன்றுதான் நேரில் பார்க்கிறான்.

“இதான் முதல் தடவையா?”

‘`ஆமா!”

‘`மஸ்கட்லெயா?’’

‘`இல்லை. சென்னை. இன்ஃபோசிஸ், மஸ்கட்லெ ஒரு கிளைன்ட் விசிட்!”

‘`இங்க ஆன்சைட் விசிட்டா?”

“ஆமா! வாஷிங்டன்லெ ஒருமாசம் டிரெயினிங். முடிஞ்சதும் கலிபோர்னியா!”

‘`ஒங்க பேர் என்ன சொன்னீங்க?’’

‘`ராம்-ராமச்சந்திரன்!”

‘`அண்ணா யுனிவர்சிட்டி?’’

‘`இல்லை. பி.எஸ்.ஜி. கோயமுத்தூர். உங்க பேர்?’’

‘`அபீர்!’’

‘`வாவ்! பீரா?’’

‘`அபீர்!”

‘`ஓ! க்யூட். புதுசு!”

‘`அப்படினா நறுமணம்னு அர்த்தம்!’’

‘`ஓ! அதான் இவ்வளவு பிரமாதமான மணம் எங்கிருந்து வருதுன்னு பார்த்தேன்!”

“ஓகே... ஓகே...’’ என்று சிரித்தாள்.

இவள் முஸ்லிமா? எந்த அடையாளமும் இல்லை. நெற்றியில் பொட்டு இல்லை. பர்தாவும் இல்லை. சிலுவை செயினும் கூடக் காணோம்! தூக்கி அடிக்கும் அழகு! ஆனால் அந்த அழகு ஒருவித அமைதியில் உறைந்து கிடந்தது. அவளை - அந்த அழகை மனதில் தேக்கிக் கொண்டி ருந்தான். முதன் முதலாகப் பார்க்கும் வாஷிங்டன் புறக் காட்சி அகத்தில் பொங்கும் அபீர் என்று, ஒரு விதமான உற்சாக மனநிலை! உள்ளே சிறு துளியாக முளைவிட்ட மிரட்சியும் பயமும் மறைந்து ஒருவிதமான படபடப்பு. பின் சீட்டில் அபீருடன் அருகில் தான் அமர்ந்திருந்தான்.

“நீங்க எந்த ஊரு?”

“நானும் சென்னைதான். மஸ்கட்லெ ஒரு ஃபேஷன் ஷோ, அட்டெண்ட் பண்ணிட்டு வர்றேன். வாஷிங்டன்லெதான் வேலை!”

‘`ஆன் சைட் மாதிரியா?’’

‘`நான் எல் - ஒன் விசாவுலெ வொர்க் பண்ணிட்டிருக்கேன். என்னோட ஸ்பெஷலைசேஷனுக்கு இங்க நல்ல டிமாண்ட். எச்-ஒன்.பி-க்கு ட்ரை பண்றேன்!’’

‘`கஷ்டமா?’’

‘`எல்லாம் உங்களமாதிரி இன்போசிஸ், டி.சி.எஸ், சி.டி.சி ஆட்களே அள்ளீடுறீங்களே...”

‘`நீங்க?’’

‘`என்.ஐ.எப்.டி.லெ ஃபேஷன் டிசைன் முடிச்சேன். இங்க யு.எஸ் பேஸ்டு எம்.என்.சி-லெ இருக்கேன். ஒரு வருஷம் முடியப் போவுது...’’

“இங்க வந்தபிறவுதான், இந்தக் கலரா, இல்லை பிறவியிலேவா..?”

சிரித்தாள்.

‘`பார்த்ததும் ப்ளஸ் டூ படிக்கிறீங்களோன்னு நெனைச்சேன்.’’

“சும்மா ஓட்டக் கூடாது...”

இப்படியாகத்தான் அந்த நெருப்பு பற்றிக்கொண்டது. அவள் அவனை ஹோட்டலில் விட்டுவிட்டுப் போனாள். அங்கிருந்து நடை தூரம்தான் அவள் தங்கியிருக்கும் சர்வீஸ் அப்பார்ட்மென்ட். ராமு, அடிக்கடி அபீரின் விசிட்டிங் கார்டை எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாதிரி மூச்சைப் பிடித்துக்கொண்டு மூன்று நாள்களைக் கடத்தினான். முடியவில்லை. நாளாவது நாள் மாலை அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டான். ‘`என்ன, கூப்பிடலையேன்னு பார்த்தேன்’’ என்று அவள் குரல் கசிந்ததும் அப்படியே உருகிவிட்டான்.

அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைப்பாகவே கிடந்தான். அந்த வார இறுதியில் வாஷிங்டன் முழுக்க அந்த இருவரின் வாசம்தான். மாலை நேரம் ‘டைடல் நதி’யைச் சுற்றி நடந்தார்கள். சுற்றிலும் இருந்த செர்ரி மரங்களுக்கு நடுவே நடப்பது, அவன் மனதை என்னவோ செய்தது. இருவரும் சேர்ந்து நடக்கும்போது, முதன் முறையாக அவளுடைய கைகளைப் பற்றினான். அவளுடைய பிடியிலும் பிரியம் கூடித்தான் தெரிந்தது!

மீண்டும் ஒருமுறை - சிறுகதை

அவர்கள் சந்திப்புகள் தொடர்ந்தன. தொலைபேசி வழியாக அடிக்கடி தொட்டுக்கொண்டார்கள். ஒரு மாதம் கழிந்து, அவன் கலிபோர்னியா செல்லும் நாள். அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தாள். அவனும் அதே நிலையில். ஏதோ சூழலில் மாட்டிக்கொண்டாற்போல் மனம் வதைபட்டது. நன்றாகக் கனிந்து விட்டது. ஒரு மாதத்திற்குள்ளா! பழுக்கும் பக்குவம் வந்துவிட்டால் ஒருநாள் போதாதா? வார இறுதி நாள்கள் எல்லாம் அவன் கலிபோர்னியாவிலிருந்து, வாஷிங்டன் வந்துவிடுவான். மறுவாரம் இவள் கலிபோர்னியா போவாள்; பயணங்கள் பயணங்கள்தான். அதில் ஒரு தித்திப்பு இருந்தது!

எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். மறுப்பிற்கும் எதிர்ப்பிற்கும் இடமே இல்லை; பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சிறு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. எல்லாம் நெஞ்சுக்குள்ளே. சென்னையில்தான் திருமணம். ஒரு மாதம் சென்னையில் அபீர் வீட்டில்; ஒரு மாதம், கம்பத்தில் ராம் வீட்டில். இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை. இரு குடும்பங்களும் சென்னை விமான நிலையம் வந்து, கையசைத்து அனுப்பி வைத்தார்கள். அதற்குப் பிற்பாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா வந்துபோகிற வைபோகங்கள் நடந்தேறின. குழந்தைகள் இருவருமே அங்குதான் பிறந்து வளர்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் ராம் மனதிலும் அபீர் மனதிலும் ஒருவித சலிப்பு. மனம் எல்லாவற்றையும் எதுக்களிக்கத் தொடங்கிற்று! பணம்... பணம்... எலெக்ட்ரானிக் வஸ்துகள்... கால நேரப்படி நடக்கும் காரியங்கள்... கார்ப் பயணங்கள்... சுற்றுலா, பொழுதுபோக்கு... விதவிதமான மெப்பர்ஜிப், எல்லாம் மிதமிஞ்சிப் போகிறபோது, அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று ஆகிவிடுகிறது! ஒரு விதமான கசப்பு நாக்குக்கடியில் தங்கிவிட்டால் எதை எப்படிச் சுவைப்பது? உள்ளம் உறுத்தி ஒதுங்கும் மன நிலையா? ஒன்றும் புரியவில்லை. உள்நடுக்கம் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. அதுவும் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் அது தீவிரம் கொண்டது. இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம், நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல; மூன்று வருடங்கள் மனம் திரும்பத் திரும்ப அந்த முட்டுச் சந்திலே வந்து நின்று விடுகிறது. அந்த முறை இந்தியா வந்தபோது எல்லாக் கணக்கு வழக்குகளையும் முடித்துவிட்டுத்தான் வந்திறங்கினார்கள்.

அந்தப் பயணத்தில் அதிக சுமை என்றால் அவர்களுடைய ‘வாஷிங்டன் காதல் நினைவுகள் தான்!’ எந்த சூட்கேஸுக்குள்ளும், எந்தப் பொதிக்குள்ளும் அடங்க மறுத்து அவர்களை அது அழுத்திக் கொண்டேதான் இருந்தது. ஒரு வாரம் - வாஷிங்டன் பயணம் - பழைய தழும்புகளை எல்லாம் தடவித் தடவிப் பார்த்தார்கள்.

சென்னை வேளச்சேரியில் புத்தம் புது அடுக்கு மாடிக் குடியிருப்பில் நான்கு அறைகள் கொண்ட வீடு. புது வீட்டின் வாசத்தோடுதான் சென்னையில் வாழ்வு தொடங்கியது. புது வேலையும், அங்கு வாங்கிய ஊதியம் இல்லாவிட்டாலும், மிக நாகரிகமான ஊதியமும் புதுக் காரும் வீடும் என்று அந்தப் புதிய பயணம்.

குழந்தைகள் இருவரையும் தரமணியில் உள்ள அமெரிக்கன் இண்டர் நேஷனல் ஸ்கூலில் சேர்த்துப் படிக்க வைத்தனர். காலையில் அபீர் வேலைக்குப் போகும்போது, குழந்தைகளை காரில் பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் செல்வாள். மதியம் நான்கு மணி வாக்கில், ராம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவான். வீட்டில் அபீரின் அம்மா கூட இருந்தாள். ஒரு வருடம்தான், பிற்பாடு ஹைதராபாத்திற்கு மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்!

அமெரிக்காவிலிருந்து திரும்பிய சில மாதங்களிலே அபீருக்கும் ராமிற்கும் மன விரிசல். அது வளர்ந்து வளர்ந்து மன விலகலாக மாறிவிட்டது. அடிக்கடி கோபம். எரிச்சல், சின்னப் புறக்கணிப்பு என்றுதான் முதலில் தொடங்கியது. காரணமில்லாமல் இல்லை. காரணம் ஏதோ உண்டு. அது என்னவென்று கண்டறியத்தான் முடியவில்லை. இதேபோல் ஒரு மழைநாளில்தான் வெளியே ஹோட்டலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, திருவான்மியூர் சிக்னல் என்று நினைவு, அவள் ஏதோ சொன்னாள். இவனும் ஏதோ சொன்னான். அந்த ‘சொல்’தான் தொற்றிக்கொண்டது!

அன்று இரவு அபீர் அவனுடன் பேசவே இல்லை; பேசவில்லை என்றால் அவள் இயல்பில் இல்லை. இறுக்கம் கூடியிருந்தது. குழந்தைகளும் அப்படித்தான். வழக்கமான கலகலப்பும் கூச்சலும் இல்லை. ஒரு விதமான அமைதி! எதுவும் தெரியாதபடிக்குப் பாடப் புத்தகங்களால் தங்களை மூடிக் கொண்டனர். ராம் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு, பால்கனிக்குப் போய்விட்டான். சன்னமான ஊதா நிற வெளிச்சமும் வெளி இருளும் அவனோடு சேர்ந்து இருந்தன. நேரம் ஆக ஆக நிலா நன்கு பழுக்கத் தொடங்கிற்று.

விழித்துப் பார்த்தபோது, மணி காலை பத்து. வீடு வெறிச்சென்று இருந்தது. அபீர் அலுவலகம் போய்விட்டாள். குழந்தைகளும் இல்லை. அபீரே அவர்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருப்பாள். ஒரு வார்த்தை எழுப்பிச் சொல்லி விட்டுச் சென்றிருக்கலாம். இல்லை, பிள்ளைகளாவது குரல் கொடுத்திருக்கலாம். வெளியே இருந்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இவனிடமும் ஒரு சாவி உண்டு. உள்ளே இருந்தே திறந்துகொள்ளலாம். ஆனால் மனம் மட்டும் இறுக மூடிக் கொண்டது. இனி எந்தச் சாவி போட்டு அதைத் திறக்க? ஒருவிதமான ஆவேசம் பொங்கிற்று. ஆத்திரம். கிச்சனில் அவனுக்காகத் தயாரித்து வைத்த காலை உணவு காய்ந்து கிடந்தது. மனம் கோணிவிட்டது.

மாலையில் அவர்கள் வீடு திரும்பும்போது, இதே போல் ஒரு ‘வெறுமை’ அவர்களை அலறடிக்க வேண்டும். நீண்டு நெளியும் மலைப் பாம்புபோல அந்த அமைதி வீடு முழுவதும் நெளிந்துகொண்டிருக்கவேண்டும். அந்த அமைதியின் விஷக்கொடுக்குகள் அபீர்மீது இறங்க வேண்டும். கொஞ்சம் கொடூரமான சிந்தனைதான்! ராமின் மனதில் பொங்கும் ஆவேசத்தை அடக்க முடியவில்லை. தலைப்பாரம் கூடிற்று. உடம்பெல்லாம் நடுக்கம். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

முதலில் இந்த வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். வெளியே கிளம்பிவிட வேண்டும். மாலையில் கிளம்பி இரவு திரும்பும் ‘கிளம்பலாக’ அது இருக்கக் கூடாது. கண்காணாது போய்விட வேண்டும். தூரம் தொலைவாகப் போய்விட வேண்டும். தன் மொபைல் போனிலே ‘மேக் மை ட்ரிப்’பை நோண்டினான். டெல்லிக்கு மாலை நாலு மணிக்கு ‘இண்டிகோ’ இருந்தது. டிக்கெட் போட்டான். ‘சிட்டி கேட்’ ஹோட்டலில் அறை புக் செய்தான். உடைகளை ‘பேக்’ செய்தான். `ஓலா’ புக் செய்து ஏற்போர்ட்டிக்குக் கிளம்பிவிட்டான்!

இரவு பத்துமணிக்கு அபீரிடம் இருந்து போன். அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் செல்போன் சினுங்கியது. குரல் வளையை நெரித்துக் குரலை ஒடித்துவிட்டான். கண நேரத்தில் மீண்டும் உயிர் பெற்று ஓலமிட்டது. அதை அலட்சியம் செய்துவிட்டு, அசந்து தூங்கிவிட்டான். அதிகாலையில் தொலைபேசியைத் திறந்த போது அபீர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் ‘வேர் ஆர் யூ?’ நள்ளிரவு ஒரு மணிக்கு அனுப்பியிருக்கிறாள். அவன் பதில் விடவில்லை. தொலைபேசி அழைப்பு தொடர்ந்தது. நாளாவது நாள் ‘ஐ’ஆம் மை வே, டோண்ட் லுக் பார் மீ!’ என்று டைப் செய்து தட்டி விட்டான். போன வேகத்தில் ‘ஒய் திஸ் பெய்ன் பார் மீ!’ அந்தக் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. மனம் வேறு ஒரு நிலையில் தவித்துக்கொண்டிருந்தது. அப்புறம் டெல்லியில் இருந்து பெங்களூரு ஒரு வாரம்.

மீண்டும் ஒருமுறை - சிறுகதை

ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் சென்னையை விட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லை. அலுவலகத்திலும் சில தவிர்க்க முடியாத வேலைகள். சென்னைக்குத் திரும்பி வந்தான். அப்போதுகூட அவன் வீட்டிற்குப் போகவில்லை. நண்பனின் அறையில் தங்கியிருந்துதான் ஆபீஸ் போய் வந்தான். அலுவலக வேலைகளை எல்லாம் ஒரு வாரத்தில் முடித்துக்கொண்டு, நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு, சொந்த ஊரான கம்பத்திற்கு வந்து சேர்ந்தான்.

ராமின் மனம் ஒரு விதமான வாதையில் இருந்தது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் அலைக் கழிந்துகொண்டிருந்தது. அம்மாவின் முகத்திலும் தெளிவு இல்லை. உயிரற்ற பார்வைதான் பார்க்கிறாள். குரலும் அப்படித்தான். இவன் ஏன் எப்போதும் இல்லாமல் இப்போது இப்படி வந்து கிடக்கிறான். ஏன் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுவிட்டு தனியாக வந்து கிடக்க வேண்டும், நான் என்னான்னு காங்கட்டும்? வாய்விட்டுக் கேட்கவும் முடியவில்லை. ஆனால் ஏதோ சங்கடத்தில் இருக்கிறான் என்று மட்டும் தெரிகிறது.

நேற்று மழைக்கு ஒதுங்கிய இடத்தில் - பெட்டிக்கடையும் வீடுமாக இருந்த இடத்தில் அவன் கண்ட காட்சி - வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தை - அந்தக் காட்சியைப் பார்த்த மாத்திரத்தில் அவனுடைய மகள்களின் நினைவு - தினசரி எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறாள். வாட்ஸப்பிலும் ஏதேதோ ‘கோட்’ ஆங்கிலத்தில் அனுப்புகிறாள். ஏங்கும் வரிகள்; அன்பிற்கு அலைபாயும் சிந்தனை... அதை எல்லாம் கண்களால் கடந்தாலும் மனசில் விழாமல் இல்லை. எல்லாம் ஒன்றுசேர்ந்து கடைக்காரனின் மனைவி தலைவாரி, பவுடர் பூசி - பூச்சூடி எவ்வளவு பாந்தம்! அபீரும் அப்படித்தான் இருப்பாள்! திடீரென்று தன்னை அலங்கரித்துக்கொண்டு, பூவும்பொட்டுமாக, அவன் முன் வந்து நின்று கொண்டு ‘இப்ப நான் எங்க ஊரு பொம்பளைங்க மாதிரி இருக்கனா?’ என்று கேட்பாள்.

இப்படி ஒவ்வொன்றாக, அவன் நினைவுகளில் விழுந்து நீந்தத் தொடங்கிற்று. எப்போதோ மண்ணில் விழுந்த விதைகள் மழைக்குப் பின்பு முளைக்கத் தொடங்குவதுபோல அவன் மனதில் முளைவிடத் தொடங்கிற்று. மறுநாள் கம்பத்திலிருந்து ஸ்லீப்பர் பஸ் பிடித்து சென்னை வந்தான். அந்தப் பயணம் அவன் நெஞ்சைப் புண்ணாக்கிவிட்டது. தூங்கவே இல்லை. துரத்தும் நினைவுகள். நிம்மதியற்ற மனம். அபீருடன் சிறு சிறு ஊடல்கள் இல்லாமல் இல்லை. அது இந்த அளவுக்கு ரத்தம் வரக் கிழித்துவிடவில்லை. இந்த வலியிலிருந்து தப்பிக்க வாஷிங்டனின் நினைவுகளில் குதித்து நீந்தத் தொடங்கினான். இப்போது, வீட்டிற்குப் போனதும் அபீர் முகத்தை எப்படிக் காண்பேன். அவளுடைய ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்!

அதிகாலை ஐந்தரை மணி. இருள் பிசுபிசுப்பு நீங்காத வேளை. வீட்டின் காலிங் பெல்லை அழுத்த அவன் கை வைக்கப் பட்டபாடு... கீழே லிப்டில் கால் வைத்ததுமே அந்தப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காலிங் பெல் அதிர்வு அடங்குவதற்குள் கதவு திறந்தது. அபீர்தான். தூக்கக் கலக்கத்தில் கலைந்து இருந்தாள். ஆச்சரியத்தில் அவள் முகம் அகன்றது. ஒருவிதமான பரவசம். பதற்றம். ‘ஏன் என்னை இப்படித் தனியா விட்டுட்டுப் போன?’ என்ற கோபமும் முகத்தில் குழைந்து கிடந்தது. வந்த வேகத்தில் அவன் கைச் சுமைகளை அப்படியே வாங்கிக்கொண்டாள் - அவனை வாங்கிக்கொள்வதுபோல! அதை உள்ளே வைத்துவிட்டு வந்தவள் அவன் முகம் பார்த்து ஓவென அழத் தொடங்கிவிட்டாள். அந்தப் பால் வெள்ளை முகத்தில் குங்குமம் சிதறினாற் போல் ரத்தச்சிவப்பு கூடிவிட்டது. சோபாவில் சரிந்துகொண்டு கேவிக் கேவி அழுதாள். இது அவன் எதிர்பாராதது. அவளின் அழுகை அவன் மனதை அறுத்துவிட்டது. அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு அவள் தோளைத் தொட்டு இழுத்துத் தன்மீது சரித்துக் கொண்டான். அவன் மடியில் விழுந்து குலுங்கினாள். அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான். அவள் உதடு படபடவென்று துடித்திற்று. மூக்கு நுனி சிவந்து விட்டது. சிரமப்பட்டுத்தான் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். அவளுடைய முகத்தைத் தன் இரு கைகளாலும் எடுத்தான். அந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். மனம் அடங்கவில்லை. அவன்மீது விழுந்து கிடந்த அவளின் முதுகை வருடினான். இப்படிச் சில நிமிடங்கள்.

அவள் விம்மலுக்கும் விசும்பலுக்கும் இடையே டீப்பாயைக் கைகாட்டினாள். அது அபீரின் அலுவலக முத்திரையிட்ட கடிதம். அபீரை ஒரு புராஜெக்ட்டிற்கு இரண்டு வருடம் வாஷிங்டனுக்கு மாற்றியிருப்பதை அறிவிக்கும் கடிதம்!