Published:Updated:

முடத்தெங்கு - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- பாரதிவசந்தன்

"பூவா பிஞ்சா இருக்கறப்போ பக்கத்தில் வராதவங்க இப்ப காயா பழமா ஆனதுக்கப்புறம் கைநீட்டிப் பறிக்கறதுக்கு வர்றாங்க” என்று புட்லாய் கிழவி அடிக்கடி புலம்புவதை அவன் கேட்டிருக்கிறான். கிழவிக்கு எப்போதும் தொணதொண பேச்சுதான். வாய் ஓயாது. ஓலைவாய் என்று, உப்புவேலூரில் கட்டிக்கொடுத்த சின்னவள் கமலா அவ்வப்போது திட்டுவதை அவன் கேட்டிருக்கிறான். புட்லாய் கிழவி சதாகாலமும் இப்படியே பேசிப்பேசி அல்லது திட்டித்திட்டியே வாழ்ந்துவிட்டவள். அவளின் இந்தக் குணம் அவனுக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம்.

அவன் ஜீவானந்தம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே தூங்கும்போது புட்லாய் கிழவியோடுதான் படுத்துக்கொள்வான். “இப்பதான் புள்ள பால்குடிக்கிற வயசு. அவங்க ஆத்தாகூடவே படுத்துக்குது” என்று அவனுடைய அப்பா திட்டிக்கொண்டே அடிக்க வருவார். கிழவிதான் குறுக்கே வந்து தடுப்பாள். “விடு மகாலிங்கம் அப்பா. நம்ம புள்ளதான” என்று பதிலுக்கு சமாதானப்படுத்துவதுபோல் பேசினால், அவனுடைய அப்பாவுக்கு இன்னும் அதிகமாய் கோபம் வரும். “மீசை கருகருன்னு முளைச்சிட்டுது. கல்யாணம் செஞ்சுவச்சா அடுத்த வருஷத்திலயே தகப்பன் ஆயிடுவான். பேச வந்துட்டா” என்று அவர் எகிறிவிழுவார். புட்லாய் கிழவி அதைக் காதில் வாங்காமல் அவனை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொள்வாள். அவள் புடவை அழுக்கேறி வேர்வை பிசுபிசுத்து அடுப்பங்கரைக் கரித் துணியைப்போல் இருக்கும். கூடவே வயிற்றைப் புரட்டும்படியான நெடி.

காலையிலிருந்து ராத்திரிவரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் செய்கிற வேலை. அதுவும் கூலி வேலை. ஒவ்வொரு குடியானவர் வீட்டுக்கும்போய் வீடுபெருக்கி, சாணி அள்ளி, அவர்கள் தொட்டி கக்கூஸை எல்லாம் சுத்தப்படுத்தி அப்போது தருகிற மிச்ச சோத்தைப் புடவை முந்தானையில் கையேந்தி வாங்கிவந்து தன் பிள்ளைகளுக்குக் கொடுத்து அவர்களை ஆளாக்கிவிட்டவள். இப்படி புட்லாய் கிழவி பட்ட கஷ்டம் எதையும் அவன் மறக்காமல் இருந்ததால் கிழவி அவனுக்குப் பாசத்தோடு தலைதுவட்டி விடும்போதும், அவன் அவளோடு படுத்துத் தூங்கும்போதும் கிழவியின் புடவையிலிருந்து வரும் நெடியை உள்ளூர ரசித்து இழுத்து மூச்சு விடுவான். அந்த வாசம் அவனுக்குள் எழுந்த நினைவுகளின் வழியே பயணப்பட்ட காலங்களைக் கடந்து மெல்ல மனதுக்குள் எட்டிப் பார்த்தது. அவன் கண்கள் கலங்கின.

முடத்தெங்கு - சிறுகதை

‘நறுக்’ என்று உயிர்நாடியில் கட்டெறும்பு கடித்ததுபோல் இருந்தது. அவன் திடுக்கிட்டு தன் நினைவுக்கு வந்தபோது “பெரியபுள்ள மகாலிங்கம் இன்னும் வரலையா” என்று ராஜம்மா கேட்டாள். அவங்க புட்லாய் கிழவிக்குத் தங்கச்சிமுறை. அந்தவகையில் அவனுக்குச் சின்னம்மா உறவு. கீழூரை அடுத்த மண்டகப்பட்டில் இருந்து வந்திருக்கிறாள்.

“எங்கம்மாவுக்கு அதான் ஆண்டாளு ஆயாவுக்கு பெரியவனதாம்பா புடிக்கும். மகாலிங்கம் வூட்டுக்கு மூத்த புள்ளைங்கறத விடவும் அக்கா மக பெத்த தலைச்சன் புள்ளைங்கறதால அவன்னா ரொம்ப இஷ்டம்.”

அவன் ராஜம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கும் அது தெரியும். அவனுடைய அம்மா புட்லாய் கிழவி சொல்லிப் பலமுறை அழுதிருக்கிறாள். “எங்க அம்மாமாருங்களும், தம்பிமாருங்களும் கொண்டாந்து போட்டத தின்னுட்டு வளர்ந்தவங்க இல்ல நீங்க. இப்ப கவருமென்ட்டு உத்தியோகத்துக்குப் போயி கைநிறைய சம்பாதிக்கிறீங்க. என்ன புண்ணியம். உங்க பணத்தில ஒருபைசா எங்க குடும்பம் தின்னு பார்க்கல. எங்கிருந்தோ இட்டுக்கினு வந்த கழிசடைங்க பொண்டாட்டிங்கிற பேர்ல தின்னுட்டுக் கொழுத்துத் திரியறாளுங்க” இந்தவிதமாக புட்லாய் கிழவி புலம்புவதைக் கேட்கிற போதெல்லாம் கிழவி திட்டுகிறாளா, இல்லை அதையே சாக்காக வைத்து சபிக்கிறாளா என்று அவனுக்கு சந்தேகம் வந்துவிடும்.

அவன் புட்லாய் கிழவி படுத்திருந்த திசையைப் பார்த்தபடி ராஜம்மா சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நடுத்தம்பி, உங்கிட்ட சொல்றதுக்கு எனக்கு என்னப்பா பயம். பக்கத்தில பூமியான்பேட்டையில இருக்கிற ஆனந்தாயி அம்மா புள்ள அஞ்சாலாட்சி வூட்டுக்குப் போனேம்பா. வழியிலதான் பெரியவன் வூடு இருக்குது. என்னைப் பார்த்துட்டான். புள்ளையாச்சேன்னு ரெண்டு வார்த்தை பேசினேன். ‘என்ன ராஜம்மா எப்படி இருக்கிற, ஏதா இருக்கிற’ன்னு ஒரு வார்த்த பேசல. என்னை வெளியிலயே நிக்க வச்சிட்டு கடகடன்னு வூட்டுக்குள்ளபோயி ஒருபத்திரிகைய எடுத்துக்கினு வந்து ‘என்பெரிய பொண்ணுக்குக் கல்யாணம், வந்துடு’ன்னு சொல்லி என்கிட்ட கொடுத்தான். எனக்கு என்னா எழுதப் படிக்கவா தெரியும்... புள்ள கொடுத்தத சந்தோஷமா கைநீட்டி வாங்கிக்கிட்டேன். ‘சரி வர்றம்பா’ ன்னு சொல்லிட்டு கொஞ்ச தூரம் வந்திருப்பேன். பின்னாடியே ஓடியாந்தவன் ‘ராஜம்மா, அந்தப் பத்திரிகைய கொடு. நிறைய பேருக்குக் கொடுக்கணும். வேற பத்திரிகை இல்ல. உனக்கெதுக்கு அது, கொண்டா இப்படி’ன்னு வெடுக்குனு பிடுங்கிக் கிட்டாம்பா. எனக்கு அங்கயே அப்பவே மனசு உடைஞ்சிட்டது. நம்ம புள்ள இப்படி நடத்துதேன்னு நேரா அஞ்சாலாட்சி வூட்டுக்கு வந்து அழுதுகிட்டே சொன்னேன்.”

அவன் அந்த நிலைமையிலும் அவசரம் அவசரமாகத் திருப்பிக் கேட்டான்.

“அஞ்சாலாட்சி சித்தா என்ன சொன்னாங்க?”

“அடி கம்மினேட்டி குட்டி. உனக்கு அறிவில்ல. அவன் கல்லு வூடு கட்டிக்கிட்டு காசு பணத்தோட பொண்டாட்டி பேச்ச கேட்கறவனா மாறிட்டான். நான் அவன் வூட்டுக்கும் பக்கத்திலதான் இருக்கிறேன். எப்பவாச்சும் அங்க போனா அவன் பொண்டாட்டி ஓடியாந்து ‘அவரு இல்ல. வெளிய போயிருக்காரு’ன்னு மூஞ்சால அடிச்சது போல சொல்லி அனுப்புவான்னு அக்கா சொல்லுச்சி.”

ராஜம்மா சொன்ன இந்தச் சம்பவம் ஒன்றும் அவனுக்குப் பெரிதாகப்பட வில்லை. அவனுக்குத் தன் அண்ணன் மகாலிங்கத்தைப்பற்றி நன்றாகத் தெரியும். அவன் சுயநலத்தின் மொத்த உருவம். புட்லாய் கிழவியினுடைய தம்பி குப்புசாமி அவனுக்குத் தாய்மாமன் உறவுமுறை. அவர் நவமால்மருதூரில் மளிகைக்கடை வைத்து சீரும்சிறப்புமாக வாழ்ந்தவர். தன் அக்கா பிள்ளைகளான அவனையும், மகாலிங்கத்தையும், அவன் அக்காவான ஜெயலட்சுமியையும் படிக்க வைத்து வளர்த்தவர். அவர்களுக்கு எல்லாமும் செய்தவர். கடவுள் மாதிரி. அப்படிப்பட்ட குப்புசாமி மாமா மகாலிங்கத்தைத் தேடி வீட்டுக்குப் போனால் ‘எங்கே அவருக்கு உதவிசெய்ய வேண்டுமோ’ என்று பயந்துகொண்டு எப்போதும்போல சொந்த வீட்டுக்குள்ளேயே திருடனைப்போலப் பதுங்கிக்கொள்வது தெரிந்து அவனிடத்தில் வந்து அவர் அழுது முறையிட்டிருக்கிறார்.

அவன் ராஜம்மாவிடம் இருந்து தன் கவனத்தைத் திருப்பிக்கொண்டு, புட்லாய் கிழவி இருந்த பக்கமாக யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதுபோல நோட்டம் விட்டான். விழலால் கூரை வேய்ந்த அவன் வீட்டினுள்ளும், வெளியேயும் நிறைய பேர் சேர்ந்து விட்டிருந்தார்கள். ஆளாளுக்கு ஏதேதோ பேச்சு. என்னென்னவோ சங்கதிகள். அந்த அமைதியான சூழலையும் மீறி ஒரே சத்தம். ராஜம்மா ‘பெரியவன் மகாலிங்கம் வருகிறானா’ என்று பார்ப்பதும், அவனைப் பார்ப்பதும், பிறகு புட்லாய் கிழவியைப் பார்ப்பதுமாகப் பரிதவித்துக் கொண்டிருந்தாள். தாதர் ஊதுகிற சங்கின் அபஸ்வர ஓலத்தையும் தாண்டி அவர் அடிக்கிற சேகண்டி மணியின் அமங்கல ஓசை விட்டுவிட்டுக் கேட்கிற இடைவெளிக்குள் புகுந்து அவன் மனம் பின்னோக்கிப் போனது.

பழனியும், புட்லாய் கிழவியும் அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சொந்தமான கசனாதோப்பு மதில்சுவரில் சாணி தட்டிக் கொண்டிருந்தார்கள். அவன்தான் வீட்டிலிருந்து சாணியை உருண்டை பிடித்து வைக்கோலில் போட்டு உருட்டி, கூடையில் தூக்கிவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது புவேன்கரேவீதி மெயின் ரோட்டில் மகாலிங்கம் நடந்துபோவது தெரிந்தது. பழனியும், புட்லாய் கிழவியும் பதறியடித்துக்கொண்டு அவனை வழிமறித்து நின்றார்கள்.

“எப்பா மகாலிங்கம், எங்கள வுட்டுட்டு எங்கப்பா போயிட்ட...”

கைகால்கள் நடுக்கம் எடுக்க, கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் அழுதுகொண்டே கேட்டது மகாலிங்கம் காதில் விழவில்லை. அவன் எதுவும் தெரியாததுபோல இளங்கோ நகருக்குப் போவதிலேயே குறியாக இருந்தான். அங்குதான் அவன் பொண்டாட்டியும், பிள்ளைகளும் இருக்கிறார்கள். யாரோ ஊர் பேர் தெரியாத ஒருத்தியை மகாலிங்கம் இழுத்துக்கொண்டு ஓடிப்போனது ஒருத்தருக்கும் தெரியாது. புட்லாய் கிழவி, அவர் புருஷன் பழனி, பிள்ளைகளான அவனும், அவன் அக்கா, தம்பி, தங்கைகள் என்று இருக்கிற மொத்தக் குடும்பத்தையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு மகாலிங்கம் போனபோது அவனுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாத வயது.

மகாலிங்கத்தைப் பார்த்து பழனியும், புட்லாய் கிழவியும் கதறினார்கள்.

“எப்பா சாமி, நீ எங்க இருந்தாலும் வூட்டுக்கு வந்துடுப்பா. உன் பொண்டாட்டி புள்ளைங்களகூட அழைச்சிகிட்டு வா. தம்பி தங்கச்சிகளும் நாங்களும் உன்னைக் காணாம தவிக்கிறம்பா.”

மகாலிங்கம் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கசனாதோப்பு மதில்சுவரின் மேல் வளர்ந்துகிடந்த மூங்கில்புதரை முறைத்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். கீழே தவிட்டுப் புறாக்களின் உதிர்ந்த சிறகுகளைப்போன்று காய்ந்த சருகுகள் சிதறிக்கிடந்தன. அவர்கள் புலம்புவதைக் காதுகொடுத்துக் கேட்காமல் நெல்லித்தோப்பு மார்க்கெட் இருக்கும் பக்கமாகப் போனான்.

பழனியும் புட்லாய் கிழவியும் மகாலிங்கத்திற்காகத் தரையில்விழுந்து புரண்டு அழுது அரற்றியதைப் பார்த்துத் தாங்கமுடியாமல் அவனும் அங்கே அழுதுகொண்டிருந்தான். மகாலிங்கம் அப்போது போனவன் போனவன்தான். அதன்பிறகு அவன்தான் படித்தது போதும் என்று படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு சவானா மில்லில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அந்த வேலைகூட மகாலிங்கத்திற்காகப் பழனி ஏற்பாடு செய்திருந்தது. அந்தச் சமயம் மகாலிங்கம் வீட்டில் இல்லாததால் ரொம்பவும் சின்ன வயதான அவன் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள சவானா மில்லுக்குப் போனபோது அங்கிருந்த லேபர் ஆபீஸர் உட்பட எல்லோருமே சிரித்துக் கிண்டல் செய்தார்கள். “என்னடா இது. மூக்கு ஒழுகிக்கிட்டிருக்கிற பசங்கள எல்லாம் வேலைக்கு அனுப்பியிருக்காங்க” என்றபோது அவன் கூனிக்குறுகிப் போனான். அது நடந்து ஒரு ஆறு மாதம் சென்றதும் நாலுமுழ வேட்டியைக் கட்டிக்கொண்டு சண்டே மார்க்கெட்டில் போய் கட்டைவைத்த பெரிய செருப்பாகப்பார்த்து வாங்கிக் காலில் போட்டு, பெரியமனுஷன் தோரணையில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். மூத்தவன் மகாலிங்கத்திற்குப் பதிலாக அன்றைய தினத்திலிருந்து அவன்தான் குடும்பச் சுமையைத் தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டிருக்கிறான். பாரம் தாங்காமல் அவன் விழுகிறபோதெல்லாம் தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக அவனை எப்போது அறையலாம் என்று சிலுவையைச் செய்தபடி ரகசியமாய்க் காத்திருந்தார்கள் மகாலிங்கமும், அவன் தம்பியும். அதற்கான நேரம் வந்திருந்தது.

வீடு நிசப்தத்தில் உறங்கிக்கிடக்க புட்லாய் கிழவியும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். நல்ல தூக்கம். இனி எப்போதும் எழுந்திருக்க முடியாதபடியான தூக்கம். பலநாள் தூங்கித்தூங்கி ஒத்திகை பார்த்து இன்றைய தினத்தில் அரங்கேற்றமாகிவிட்ட தூக்கத்தின் நேரடிக் காட்சி. நடையில் புட்லாய் கிழவி படுத்திருக்க, பக்கத்து அறையில் அவன் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். புட்லாய் கிழவிமீது பூமாலைகள். தலைமாட்டில் கூரையின்கீழ் எரிந்த குண்டு பல்பைத்தவிர துணைக்கு ஒருத்தரும் இல்லை. சாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லாம் போய்விட்டி ருந்தார்கள். ஒரேவீட்டில் அடுத்தடுத்த இடத்தில் புட்லாய் கிழவியும், அவனும் படுத்திருந்தார்கள். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு ஆயிரம்வேலைகள் இருக்கும். அவர்களுக்கும் பொண்டாட்டி பிள்ளைகள் என்று குடும்பம் இருக்கிறது. இனி நாளைக்குப் புட்லாய் கிழவியை எடுக்கும்போதுதான் வருவார்கள். ஆனால் குடும்பத்தினர் அத்தனை பேரும் அவனை மட்டும் புட்லாய் கிழவிக்குக் காவல் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

அவனுக்கு நெஞ்சு வலித்தது. அந்த வலி அதிகமாகி அப்படியே இறந்துபோய் விடுவோமோ என்றுகூட அவனுக்கு சந்தேகம் வந்தது. இப்படிப்பட்ட உறவுகளைவிடவும், குடும்பத்தைவிடவும் செத்துப்போவது எவ்வளவோ மேல். அவன் புட்லாய் கிழவியைப் பார்த்து அழுதுகொண்டிருந்தான். வாய்விட்டு அழமுடியாத ஊமைக்குமுறல். கண்ணீர் அவன் கன்னங்களின்மேல் வழிந்து கொண்டிருந்தது. அதன் வெம்மையை அவன் உணர்ந்துகொள்வதற்குள் எதிர்வீட்டிலிருந்து அவன் தம்பி தன் பொண்டாட்டியிடம் பேசுகிற குரல்கேட்டது.

“இங்க பாருடி, கிழவி செத்ததுக்கு உள்ளூர் டி.வி-யில செய்தி கொடுத்திருக்கிறேன். என் போட்டோவோட அந்த விளம்பரம் வரும். தூங்கிடாம முழிச்சிருந்து அத பார்த்துட்டு, காலையில என்கிட்ட சொல்லணும்” என்றபடி உள் அறைக்குள்போய் கதவைச் சாத்திக்கொண்டு படுக்கப்போனது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. காலையிலிருந்து ரெண்டு மூணுதரம் அவன் தம்பி மனைவி புட்லாய் கிழவி படுத்திருந்த இடம் பக்கமாக வந்துவிட்டுப் போனாள். அத்தோடு சரி. ராத்திரி ஆனதும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட இல்லை. பூமியான்பேட்டையில் கடடிக் கொடுத்திருந்த அவனுடைய அக்கா ஜெயலட்சுமி பிள்ளைகளோடு வந்து பார்த்துவிட்டுத் தன் புருஷனுக்கு சாப்பாடு செய்ய வீட்டுக்குப் போய்விட்டாள். அவளோடு ராஜம்மாவும் போய் நீண்ட நேரமாகிவிட்டது. எல்லோரும் அவரவர் காரியங்களில் கவனமாய் இருக்க, அவன்மட்டும் அழுது அழுது அந்தக் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டான்.

விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அஞ்சாலாட்சி புருஷன் வீரப்பன் வந்து புட்லாய் கிழவி கால்மாட்டில் நின்றுகொண்டு “அண்ணி, போயிட்டியே. யாருமே வூட்ல இல்லாம அநாதப் பொணம் போல கெடக்கிறியே” என்று அழுது மூக்கைச் சிந்தியபடியே வீட்டின் பக்கமெல்லாம் திரும்பிப் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் அவன் படுத்திருந்த அறையை நோக்கி வந்தார். வீரப்பன் புலம்பின சத்தம்கேட்டு ஏற்கெனவே எழுந்திருந்த அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவர் அழுதார். வீரப்பன் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருக்கிறார். அந்தச் சாராய நெடி தாங்க முடியவில்லை. ஆனாலும் அவன் முகம்சுளிக்காமல் வீரப்பனை அப்படியே கட்டிக்கொண்டான்.

“சித்தப்பா.”

அவனுக்கு அந்த நேரத்தில் வீரப்பன் வந்தது பெரிய ஆறுதலாக இருந்தது. அவன் இதுவரை தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் பொங்கிப் பீறிட்டுக்கொண்டு வெளி வந்தது. கதறி அழுதான்.

“உன்னை அம்போன்னு வுட்டுட்டு ஒருத்தர்கூட இங்க இல்லாம எங்கப்பா போயிட்டாங்க?”

அவனால் பேச முடிய வில்லை. வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்டதைப்போல் இருந்தது. நூறடிரோடு ரயில்வே கேட்டுக்கும் அருகில் உள்ள சாராயக்கடையில் எடுக்கப் பிடிக்க வேலை செய்கிற சாதாரண ஒரு கூலித் தொழிலாளி வீரப்பன். அவருக்கு அவன் ஒருநாள்கூட சோறு போட்டதில்லை. பத்துப் பைசா செலவுக்குக் கொடுத்ததில்லை. எப்பவாவது வழியில் பார்த்தால் ‘சித்தப்பா’ என்று சொல்லி, சிரிப்பான். அவரும் நின்று அவனிடத்தில் பேசிவிட்டுத்தான் போவார். அவர்தான் அவன் தன் தாயை இழந்துவிட்டுத் தனிமரமாய் நிற்கும் இந்த நேரத்தில் வந்து அழுகிறார். அவன் துன்பத்திலும் துயரத்திலும் பங்கெடுக்கிறார்.

ஆயிற்று. எல்லாம் முடிந்துபோயிற்று. புட்லாய் கிழவியை எடுத்துப்போய் பூமியான்பேட்டை இடுகாட்டில் புதைப்பதற்குக் குழியில் இறக்கியபோது உப்புவேலூர்க்காரி கமலாவும், அக்கா ஜெயலட்சுமியும், அவனும் துக்கம் தாளாது பெற்ற தாயை இனி எப்போது பார்ப்போமென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். எப்படியோ அடக்கம் செய்கிற நாளான அன்றைய தினம் போனால் போகட்டு மென்று மகாலிங்கம் வந்திருந்தான்.

நன்கு இருட்டியிருந்தது. சாவுக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராய் கலைந்துபோக, மகாலிங்கமும் அவன் தம்பியும், உப்புவேலூர்க்காரியின் புருஷனும் புட்லாய் கிழவியின்மேல் மண் அணைந்த பிறகும் அங்கேயே சுற்றிச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள். தலைமாட்டுக்கும் கொஞ்ச தூரம் தள்ளி அவளைக் கிடத்திவந்த அழுக்குப்பிடித்த தலைகாணி எவர் கண்ணிலும் படாமல் தனியே கிடந்தது.

அவன் கிழவியின் காரியத்தை நல்லவிதமாக முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தான். விளக்கைப்போட அவனுக்கு விருப்பமில்லை. அந்த வெளிச்சம்கூட அவன் மனதை உறுத்துகிற விஷயமாகப்பட்டது. பேசாமல் படுத்துக் கிடந்தான். என்னென்னவோ உணர்வுகள் வந்துவந்து அடித்துச்சிதறுகிற அலைகளைப்போல் ஓயாத எண்ணங் களாக அவனுக்குள் இருந்து கொண்டி ருந்தன. அவன் மனம் ஒருநிலையில் இல்லை.

அவன் தம்பி வீட்டிலிருந்து பேசுகிற சத்தம் நன்றாகக் கேட்டது. உப்புவேலூர்க்காரியின் புருஷன்தான் பேசினான்.

“என்ன மாமா, குழியில இருந்து எல்லாரும் போயிட்ட பிறகும் எவ்வளவுநேரம் தேடினோம். ஒண்ணும் கிடைக்கலையே?”

“கிழவி நெறைய பணத்த சேர்த்து வச்சிருந்தாப்பா. முதியோர் பென்ஷன் வேற மாசா மாசம் வாங்கினா.”

அவன் தம்பி சொன்னதும், அண்ணன் மகாலிங்கத்திடமிருந்து சலிப்போடு வார்த்தைகள் வந்தன.

“என்னை என்னடா செய்யச் சொல்றீங்க? நான் தூரக்கையில இருந்தவன். இவன்தான் கிழவிகூட எப்பவும் இருந்தான். இவனுக்குத் தெரியுமில்ல...”

“நானா அவகூட இருந்தேன். நடுலுவருதான் இருந்தாரு. அவரக் கேளுங்க.”

“வீணாப்போனவன்கிட்ட போயி என்னத்த கேட்கச் சொல்றீங்க?”

“இப்படி ஆகும்னு தெரிஞ்சிதான் நான் கிழவி போட்டிருந்த மூக்குத்தி, ரெண்டு கம்மல், தோடு, வளையல் எல்லாத்தையும் அப்பவே கழட்டி எடுத்துக்கிட்டேன்.”

“அப்ப என்னோட பங்கு?”

உப்புவேலூர்க்காரியி்ன் புருஷன் அவசர அவசரமாகக் கேட்டான். மகாலிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.

“டேய், வூட்டுக்குப் பெரியவன் நான். எனக்கே எதுவும் கிடைக்கல. கொண்டான் கொடுத்தான் நீ, உனக்கு என்ன உரிமை இருக்கு?”

அவன் தம்பியும், மகாலிங்கத்தோடு சேர்ந்துகொண்டான்.

“அதான் உன் பொண்டாட்டி உப்புவேலூர்க்காரி, கிழவியோட பண்ட பாத்திரத்த எல்லாம் ஒண்ணுவிடாம வாரி எடுத்துக்கிட்டுப் போயிட்டாளே!”

முடத்தெங்கு - சிறுகதை

மகாலிங்கத்திற்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. கத்தினான்.

“நிறுத்துங்கடா. உங்க கதைய கேட்கறதுக்காகவா இளங்கோ நகர்ல இருந்து இங்க வந்திருக்கிறேன். கிழவி பணத்த எல்லாம் தலைகாணிக்குள்ள ஒளிச்சி வச்சிருக்கான்னு சின்னவன் சொன்னத நம்பி எல்லாரும் போனதுக்கப்புறம் குழிக்கரையில தலைகாணிய எடுத்து அவ்வளவு நேரம் தேடினோம். ஒண்ணும் கிடைக்கல. நானே அந்த வயித்தெரிச்சல்ல இருக்கிறேன். நீ்ங்க என்னடான்னா சண்டை போடறீங்க?”

மகாலிங்கம் மூச்சிரைக்கப் பேசிக் கொண்டிருந்தபோது வீரப்பன் அங்குவந்து நின்றார். அவர் நெக்க குடித்திருந்தார்.

“ஏம்பா பெரியவனே, நடுத்தம்பி உனக்காக குடும்பப்பொறுப்ப ஏத்துக்கிட்டு அப்பாவையும் அம்மாவையும் காப்பாத்துனதோடு கூடப்பொறந்தவங்களை எல்லாம் கரைசேர்த்திருக்கு. அவன் உழைப்பால நீங்கள்லாம் ஒருவழியா ஆயிட்டீங்க. பாவம் அவன். எத்தனை நாளைக்குத்தான் தனியா கிடப்பான். அவனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு வைக்கக்கூடாதா?”

வீரப்பன் இப்படிக் கேட்பார் என்று சற்றும் எதிர்பாராத மகாலிங்கத்திற்கு அவர்மீது சொல்ல முடியாத கோபம் வந்தது.

“குடிகாரன் நீ, நியாயம் பேச வந்துட்டியா? நடுலுவன பத்தி உனக்கு என்னா தெரியும். அவன் ஒரு பொறுக்கி. கூத்திக்கள்ளன். சரியான கரப்போக்கு. எப்பப்பாரு ஒரு பொம்பளைய வச்சிக்குவான். கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு ஊர்மேயற திருட்டுப் பையன் விஷயத்தை இனிமே எடுக்காத. அந்த அயோக்கியன் கதை கிழவி செத்த இன்னையோட முடிஞ்சிபோச்சி.”

அண்ணன் மகாலிங்கம் வீரப்பன் சித்தப்பாவை அதட்டுவதுபோல பேசியதை தன் வீட்டிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு இதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. அந்தக் கணமே அதிர்ச்சியில் நொறுங்கிப்போனான். கூடப்பிறந்த தம்பி என்கிற பாசம் கொஞ்சம்கூட இல்லாமல் நெஞ்சிலே நெருப்பை அள்ளிக் கொட்டுவதைப் போல் மகாலிங்கம் சொன்ன அபாண்டமான வார்த்தைகள் அவன் மண்டையை சுக்குநூறாகப் பிளப்பதைப்போல் தெரிய, தலையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு அப்படியே மீண்டும் படுக்கையில் சரிந்தான்.

‘எத்தனை மோசமான, கொடூரமான சித்திரிப்பு. ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமா பாதுகாத்து வளர்க்கிற தென்னை மரம், காய்காய்ச்சி பலன் கொடுக்கறப்போ அத வளர்த்தவனுக்குப் பயன்படாம வேலிய தாண்டியோ இல்ல மதிலைத் தாண்டியோ வளைஞ்சிபோய் அடுத்தவங்க இடத்தில அந்தக்காய் விழுந்துச்சுன்னா அதுக்குப்பேரு முடத்தெங்கு. இப்படிப்பட்ட முடத்தெங்குங்க தென்னை மரங்கள்ல மட்டும் இல்ல. மனுஷர்கள்லயும் இருக்காங்க. அப்பா பழனியும், புட்லாய் கிழவியும் கையேந்திப் பிச்சை எடுத்துவந்தத சாப்பிட்டு வளர்ந்தவங்க, நான் ராக்கண்ணு பகல்கண்ணு முழிச்சி சவானா மில்லுல சம்பாதிச்சத வச்சி வாழ்க்கையில முன்னேறினவங்க என்னை நல்லா பயன்படுத்திக்கிட்டு நடுத்தெருவில விட்டுட்டாங்க. அதகூட என்னால மன்னிக்க முடியும். அப்படி மேல போனவங்க அதுக்குக் காரணமான பெத்தவங்களையும், என்னையும் அம்போன்னு விட்டுக் கெடாசிட்டு என்னையும் இல்ல அநியாயமா பழிபோட்டுப் பேசறாங்க.

எங்க நான் கல்யாணம் செஞ்சிகிட்டுத் தனியாப் போயிட்டா குடும்பத்த கவனிக்க ஆள் இல்லாமப் போயிடுமேன்னு எனக்குன்னு ஒரு குடும்பம் இல்லாமச் செய்துட்ட சூழ்ச்சிக்காரர்கள நம்பி நான் மோசம் போயிட்டேன். என்னை என் குடும்பமே ஒன்றுசேர்ந்து கொன்று குழிதோண்டிப் புதைச்சிட்டுது.’

அவன் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிற நிலைமைகளையெல்லாம் மறந்துபோய், தன் தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டு மனம் பேதலித்தவனைப்போல திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

புட்லாய் கிழவியை இழந்த துயரத்தில் கனத்த இதயத்தோடு இருந்தவன் இதுவரையில் தேக்கி வைத்திருந்த பெருஞ்சோகம் யாவும் அணை உடைந்த வெள்ளமெனப் புரண்டுவருவதை அடக்குவதற்கு வழிதெரியாமல் சிறு குழந்தையைப்போலக் கதறி அழுதபோது, இருட்டு அவன்மீது ஒரு போர்வையைப்போல் படிந்திருந்தது.