Published:Updated:

அக்கா... அவன்... ஹரிணி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கீதா சங்கர், ஓவியம்: ரவி

அக்கா... அவன்... ஹரிணி - சிறுகதை

கீதா சங்கர், ஓவியம்: ரவி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
கீதா சங்கர்
கீதா சங்கர்

துபாயில் பிரபல மருத்துவமனை ஒன்றில் சீஃப் நர்ஸாக இருக்கும் மாதவி, இந்தியா வந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் சென்னையில் அவளுக்கென இருக்கும் ஒரே சொந்தமான அக்கா சாந்தியின் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் இருப்பாள். அக்கா, அத்தான், ஹரிணியுடன் தங்குவாள். அக்கா பெண் ஹரிணி, மெடிசன் படித்துவிட்டு ஸ்கேன் செய்வதில் நிபுணத்துவப் படிப்பை அந்த வருடம்தான் முடித்திருந்தாள். அவளுக்கு உதவ வேண்டுமென்று இந்த முறை மூன்று மாதங்கள் விடுப்பு கேட்டிருந்தாள்.

50 வயது கடந்த மாதவிக்கு ஹரிணி ரொம்ப செல்லம். ஒரு நாள் பேசிக்கொண்டே, ``சாந்திக்கா... எப்படி பட்டாம்பூச்சி மாதிரி இருக்கா பாரு ஹரிணி... புத்திசாலி, சமர்த்துக் குட்டி. நல்லா வளர்த்திருக்க... 24 வயசு ஆகிடுச்சு. நல்லவனா பார்த்து ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுக்கணும். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டியா?” என்றாள்.

``நாம என்ன பார்க்கறது... அவளே ஒரு பையனைப் பார்த்துட்டா... உங்கிட்ட சொல்ல லாம்னுதான் இருந்தேன். நீயே கேட்டுட்டே. இந்தக் கல்யாணம் எனக்குப் பிடிக்கலை. நீ சொன்னா கேட்பா. சொல்லிப்பாரு...'' - பேச்சை ஆரம்பித்தபோது கோபமாய் இருந்த சாந்தியின் குரல் முடிக்கையிலே அழுவதுபோல குழைந்தது.

``நீ பேசாம போ... நான் அவகிட்டே பேசிக்கறேன்” என்றாள் மாதவி அமைதியாக.

ஹரிணி படுக்கையில் போன் பேசிக் கொண்டிருந்தாள்.

மாதவியைப் பார்த்ததும், ``வாங்க சித்தி...” என்றவள், ``உன்னை பத்து நிமிஷத்துல கூப்புடறேன்” என போனை கட் செய்தாள்.

“யாருடி அது... உங்கம்மா இப்பதான் சொன்னாங்க... போட்டோ காட்டு... பேரென்ன... என்ன படிச்சிருக்கான்?”

“எனக்கு சீனியர். எம்.டி முடிச்சிருக்காரு. பேரு கார்த்தி. நம்ம ஜாதி இல்லை, அந்தஸ்தில் லைன்னு அம்மாவுக்குப் பிடிக்கலை.''

“அவங்க வீட்டுல என்ன சொல்றாங்க?”

``அவங்க அப்பாவுக்கும் விருப்பமில்லை சித்தி. அவரோட அக்கா பொண்ணு ப்ளஸ் டூ படிச்சுட்டு வீட்ல இருக்காளாம். அவளைத் தான் கட்டி வைக்கணும்னு பிடிவாதமா இருக்காராம். இங்கே அம்மா, அங்கே அவங்க அப்பா. எனக்கு என்ன செய்றதுன்னு தெரி யலை” மிகுந்த யோசனையுடன் கவலையாகப் பேசினாள் ஹரிணி.

அக்கா... அவன்... ஹரிணி - சிறுகதை

``ஹரிணி, நான் ஒண்ணு சொல்றேன். அப்படிப் பண்ணறியா?”

``சொல்லுங்க.”

சொல்லிமுடித்து அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

காத்திருந்த சாந்தி, ``என்னடி சொல்றா?” என்றாள் பேராவலுடன்.

``நான் துபாய் போகும்போது அவளையும் என்னோட அழைச்சிட்டுப் போகலாம்னு இருக்கேன். இவ படிச்ச படிப்புக்கு, அங்கே நல்ல வேலை கிடைக்கும். எல்லார் மனசும் மாறும்” என்றாள்.

``சரி மாதவி... உன் விருப்பப் படியே செய்” என்றாள்.

ஹரிணியுடன் மாதவி துபாய் புறப்பட்டு சென்ற சில நாள்களில் கூரியரில் வந்த லெட்டரை வாங்கிய சாந்தி, ‘என்னது நேத்துகூட போன்ல அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தா... இது என்ன புதுசா கூரியர்ல கடிதம்’ என நினைத்தவாறே, அந்த கவரைப் பிரித்தாள்.

‘அன்புள்ள அக்கா...

இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கும், நீ எனக்கும் பண்ணின தியாகம் விலையில்லாத ஒன்று. நான் எங்க ஹாஸ்பிடலில் டாக்டரா வேலை பார்த்த பிச்சை முத்துவை, அவரோட நல்ல குணத்தைப் பார்த்து காதலித்தேன். நீயும் நம்ம அம்மாவும், அவர் நம்ம ஜாதி யில்லை. சொந்தக்காரங்க கேலி பண்ணுவாங்கன்னு சொல்லி, எங்க கல்யாணத்துக்கு ஒப்புக் கலை. லீவுக்கு வந்தபோது யாருக் கும் தெரியாம நாங்க ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எப்பவும் போல ஹாஸ்பிடலில் நான் தனியா தங்கியிருக்கிறதா நீங்க நம்பினீங்க... நான் பிச்சை யுடன் வாழ்ந்துகிட்டு இருந்ததை உங்ககிட்ட மறைச்சேன்.

உனக்கு கர்ப்பப்பை குறை பாடு காரணமா குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவுன்னு கலங்கிப் போய் இருந்தாய். அப்பதான் நான் கர்ப்பமானேன். இப்ப மாதிரி அப்போ வீடியோ கால் வசதியெல்லாம் இல்லை. உங்க கிட்ட இருந்து சுலபமா என் கர்ப்பத்தை மறைச்சாலும், நான் உங்களை ஏமாத்தறோமேன்னு துடிச்சுப் போய் நின்னேன். நம்ம அம்மா ஹார்ட் அட்டாக்கில இறந்தாங்க.

அக்கா... அவன்... ஹரிணி - சிறுகதை

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவ பிறந்த இரண்டு நாளில், ஒரு ஆக்சிடெண்டில் பிச்சை இறந்துட்டார். அதே வாரம் ஒரே முடிவா என் குழந்தை யோட ஊருக்கு வந்தேன். உன்கிட்ட நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டு, என் குழந் தையை உன் மடில போட்டேன். உங்களையே பெற்றவர்கள்னு போட்டு பிறப்பு சான்றிதழ்கூட வாங்கிட்டேன்.

அதே சமயம் தஞ்சாவூர்ல இருந்து அத்தான் டிரான்ஸ்ஃபர்ல சென்னை வந்தது தெய்வச் செயல்னு தான் சொல்லணும். பக்கத்து வீட்டுல யார் இருக் கான்னே கவலைப்படாத நகரவாசிகள், நம்மளை பத்தி எதுவும் தெரிஞ்சிக்க ஆர்வம் காட்டலை. என் குழந்தைக்கு நீதான் பேர் வச்சே... உன்னைத் தான் அவ அம்மானு நினைச்சுட்டு இருக்கா... என் குழந்தைனு நான் உரிமை கொண் டாடினதேயில்லை. ஆனால், அவ கல்யாண விஷயத் துல உனக்குத் தெரியாம நான் முடிவெடுத்துட்டேன் அக்கா...

என்னை மன்னிச்சுடு...

மாதவியோட கார்த்திக்கையும் நான் துபாய்க்கு கூட்டுட்டு வந்துட்டேன். அவ கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு, இரண்டு பேரும் துபாயில வேலை பார்த்துட்டு, சந்தோஷமா வாழறாங்க... அவ உடம்புல ஓடற ரத்தம் என்னுடையதுனு எனக்கு மட்டும்தான் தெரியும். அது எல்லாருக்கும் ஒண்ணுதான். அவளுக்கு எப்பவுமே நீங்கதான் அம்மா - அப்பா. நான் ஒரு துணை மட்டும்தான். அவளுக்கு இது எதுவும் தெரியாது... தெரியவும் வேண்டாம்.”

கடிதத்தை முடித்த சாந்தி விக்கித்து உட்கார்ந்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism