Published:Updated:

அத்தீஸ் - சிறுகதை

அத்தீஸ் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அத்தீஸ் - சிறுகதை

எதிர்வீட்டுல குழந்தை இருக்குங்க. ராத்திரில்லாம் அழற சத்தம் கேக்குது…” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் அழுகைச் சத்தம் அதிகரித்தது.

அத்தீஸ் - சிறுகதை

எதிர்வீட்டுல குழந்தை இருக்குங்க. ராத்திரில்லாம் அழற சத்தம் கேக்குது…” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் அழுகைச் சத்தம் அதிகரித்தது.

Published:Updated:
அத்தீஸ் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அத்தீஸ் - சிறுகதை

ஒரு கதையின் இளம் கதாநாயகியை வாசகர்கள் ரசிக்குமாறும், அதே சமயத்தில் என் மனைவி அதைப் படிக்கும்போது அவள் மனம் புண்படாதவாறும் எவ்வாறு வர்ணித்து எழுதுவது?

நெடுநேரமாக யோசித்துத் தலை வலிக்க… சிகரெட் பிடிப்பதற்காகத் தெருமுனைக்குச் சென்றேன். சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நின்றபோது, திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஒரு பழுப்பு நிற நாட்டு நாய் என்னைப் பார்த்து வாலை ஆட்டியபடி சத்தமாகக் குரைக்க… எனக்குள் நடுங்கியது. எனது பள்ளிக்காலத்தில், என் அப்பாவை ஒரு முறை நாய் கடித்து, தொப்புளைச் சுற்றி ஊசி போட்டமையால், சிறுவயதிலிருந்தே நாய் என்றால் அதீத பயம்.

பயத்தை வெளிக்காட்டாமல் நாயின் குரைப்புக்கு மரியாதை கொடுத்து நான்கடி தள்ளி நிற்க… அந்த நாய் என்னருகில் வந்து குரைத்தது. தெருவுக்கு இந்த நாய் புதிது. ஏரியா விட்டு ஏரியா வந்துவிட்டது போல. நான் கண்டுகொள்ளாமல் திரும்பி சிகரெட்டைப் புகைத்தேன். திடீரென்று யாரோ என் கைலியை இழுப்பது போல் தோன்ற… அரண்டுபோய் திரும்பினேன். அந்த நாய் வாயில் எனது கைலியின் கீழ்நுனியைக் கவ்வியிருந்தது. எனக்குக் குலை நடுங்க… கைலியை இழுத்துக்கொண்டு, சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு, வேகமாக வீட்டை நோக்கி நடந்தேன். நாய் குரைத்தபடி என் பின்னாலேயே வந்தது.

நான், “ஏய்...  போ…” என்று கையை வீசி சப்தமிட்டபடியே நெஞ்சம் பதை பதைக்க வீட்டுக் கதவைத் திறந்து, பயத்தில் கதவைக்கூடச் சாத்தாமல் வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன். நாய் என் பின்னாலேயே வீட்டிற்குள்ளும் நுழைய… நான் கலவரமாக, “ரேகா… இங்கப் பாரு… நாய் உள்ள நுழையுது…” என்று என் மனைவியை அழைத்தேன்.

அறையிலிருந்து கையில் வார இதழுடன் வந்த ரேகா, “நாய் வீட்டுக்குள்ள நுழையுது. நீங்களே துரத்தாம என்னைக் கூப்பிடுறீங்க…” என்றாள் கோபமாக.

“எனக்கு பயமா இருக்கு. தெரு முனைலேருந்து என்னைத் துரத்திக்கிட்டே வருது.”

ரேகா ஒரு கம்பியை எடுத்துக்கொண்டு, ``ஏய்… வெளிய போ… தொலைச்சுருவேன் தொலைச்சு…” என்று கண்டிப்பான குரலில் கூற… நாய் ஒரு விநாடி என்னைப் பார்த்துவிட்டு வெளியே சென்று வீட்டு வாசல் மரத்தடியில் படுத்துக்கொண்டது.

வாசலுக்குச் சென்ற ரேகா நாயை உற்றுப் பார்த்துவிட்டு, “ஏங்க… தெரு நாய் இல்லங்க. கழுத்துல பட்டை போட்டிருக்கு. ஏதோ வீட்டு நாய்தான். வழி தவறி இங்க வந்திருக்கும். இந்த வீடு, அந்த வீடு மாதிரி இருக்கும்போல. நீங்களும் அந்த வீட்டுக்காரர் மாதிரி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதான் உங்களப் பாத்தவுடனே உங்க பின்னாடியே வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுச்சு” என்றாள்.

அத்தீஸ் - சிறுகதை

அன்றிரவு நான் அலுவலகம் விட்டு மிகவும் தாமதமாக வந்தபோதும், அந்த நாய் வீட்டு வாசலிலேயே  படுத்துக் கிடந்தது. என்னைப் பார்த்தவுடன் உற்சாகமாக எழுந்து குரைத்தபடி என்னருகில் வந்தது. நான் இரக்கமின்றி விரட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் ரேகா, ``கதவத் திறந்தாலே அந்த நாய் வீட்டுக்குள்ள நுழையத்தான் பாக்குது… மத்த வீட்டுக்கு எல்லாம் போக மாட்டேங்குது. இங்கேயேதான் சுத்தி சுத்தி வருது. சாப்பாடு போட்டாலும் சாப்பிடாம நம்ம வீட்டையே ஏக்கத்தோட பாக்குது… பாக்க பாவமா இருக்குங்க… பேசாம வீட்டுக்குள்ள விட்டு நம்பளே வளர்க்கலாமா?” என்றாள் ரேகா. சிறு வயதில் ரேகாவின் வீட்டில் நாய் வளர்த்திருக்கிறார்கள்.

“ஏய்… விளையாடுறியா? தெருவுல நாயப் பாத்தாலே வெடவெடங்குது. இதுல வீட்டுக்குள்ள வேறயா? அதுவா போயிடும்…” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தேன்.

“ஏங்க இவ்வளவு லேட்டு? ஸ்ருதி வேற ஊர்ல இல்லையா, பயங்கர போர்...'’ என்றபடி பூட்டியிருந்த எதிர்வீட்டைப் பார்த்தாள் ரேகா. நானும் எதிர்வீட்டைப் பார்த்தபடி புன்னகைத்தேன்.

நான் சென்னையில் 28 ஆண்டுக்காலம் வசித்து வந்த மந்தைவெளியை விட்டு, இந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தபோது ஏதோ வெளிநாட்டிற்கு வந்ததுபோல் அன்னியமாக இருந்தது. குடிவந்து ஒரு வாரம் கழித்து வாசல் நாவல் மரத்தடியில் ஓய்வாக அமர்ந்திருந்தோம். 

அப்போது இரண்டு அழகிய இளம் பெண்கள் அழகாகச் சிரித்தபடி எங்களைக் கடந்து செல்ல…  நான் ரேகாவிடம், “எவ்ளோ புது இடமா இருந்தாலும், பக்கத்துல அழகான பொண்ணுங்களப் பாத்தா அந்த இடமே ரொம்பப் பழகின இடமா மாறிடுது… உலகத்துல பொண்ணுங்கள்ல பத்து பர்ஸன்ட் அழகா இருப்பாங்க. அதுல அஞ்சு பர்ஸென்ட் இந்த ஏரியாலதான் இருக்காங்க” என்றவுடன் என்னை முறைத்த ரேகா, “நம்ப பையனுக்கு 22 வயசாவுது. கல்யாணம் பண்ணி வச்சா பத்தாவது மாசம் பிள்ளையோட வந்து நிப்பான். பேச்சப் பாரு…” என்று தோளில் இடித்தாள்.

“ஏய்… இது நீ நினைக்கிற மாதிரி இல்ல ரேகா. இந்த நிலாவப் பாக்குற மாதிரி… பூவப் பாக்குற மாதிரி...”

“கல்யாணம் ஆன நாள்லருந்து நீங்க நிலாவையும் பூவையும் பாத்து நான் பாத்ததே இல்ல.”

நான் சத்தமாகச் சிரித்தபோது எதிர்வீட்டிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

“எதிர்வீட்டுல குழந்தை இருக்குங்க. ராத்திரில்லாம் அழற சத்தம் கேக்குது…” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே குழந்தையின் அழுகைச் சத்தம் அதிகரித்தது.

சில விநாடிகளில், “அழக்கூடாது… அழக்கூடாது… என் லட்டுல்ல?” என்றபடி கையில் குழந்தையுடன் அந்த இளம்சிவப்பு நிற இளம்தாய் வெளியே வந்தாள். எங்களை அன்னியமாகப் பார்த்தபடி அந்த மூக்குநுனி மச்ச இளம்தாய், “ஸ்கைல மூன் பாரு…” என்று வானத்தைக் காண்பிக்க… குழந்தை விடாமல் அழுதது. 

அழுத குழந்தை நன்கு கொழுகொழுவென்று, ஜட்டி மட்டும் அணிந்தபடி, கழுத்தில் தங்கச் செயினுடன், செயினைவிட பொன்னிறத்தில் பளபளப்பாக மின்னியது. 

குழந்தை விடாமல் அழ… “பாப்பா அழகா இருக்குல்ல?” என்றபடி ரேகா குழந்தையை நோக்கிக் கை காண்பித்தாள். ஒரு விநாடி அழுகையை நிறுத்திவிட்டுப் பார்த்த குழந்தை மீண்டும் சத்தமாக அழுதது.

ரேகா மீண்டும் கை காட்டிச் சிரிக்க… அந்த வட்டமுக இளம்தாய் இப்போது ரேகாவைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தபடி, ``ஏன்னே தெரியல… அரைமணி நேரமா விடாம அழுதுட்டிருக்கா” என்றவள் குழந்தையிடம், “அங்க பாரு… புது ஆன்ட்டி பாரு…” என்றாள். குழந்தை ரேகாவைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்து அழுதது.

“பாப்பா பேரு என்ன?” என்றாள் ரேகா.

“ஸ்ருதி…”

“வயசு?”

“ஒன்னர வயசாவுது…”

“ஸ்ருதி… ஆன்ட்டிகிட்ட வர்றியா?” என்ற ரேகா இரண்டடி முன் வைக்க… இப்போது குழந்தை மேலும் சத்தமாக அழுதது. நான் சிரித்தேன். என்னை முறைத்த ரேகா சில விநாடிகள் யோசித்துவிட்டு நாவல் மரத்திற்குப் பின்னால் சென்று மறைந்தாள். குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு மலங்க மலங்க விழித்தது.

“ஆன்ட்டிய எங்க காணோம்?” என்று அந்த கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு இளம்தாய் குழந்தையிடம் கேட்க… ஸ்ருதி கண்களில் ஆச்சரியத்துடன் தலையை வெடுக் வெடுக்கென்று திருப்பி ரேகாவைத் தேடியது. சட்டென்று மரத்திற்குப் பின்னாலிருந்து தலையை மட்டும் எட்டிப் பார்த்த ரேகா, “ஜுஜு ஜுஜு… ஜு…” என்று சிரித்தபடி கூற… குழந்தை சத்தமாகச் சிரித்தது. தன் அம்மாவின் கன்னத்தைப் பிடித்து, ரேகாவை நோக்கிக் காண்பித்த ஸ்ருதி, விடாமல் சிரித்துக்கொண்டேயிருந்தாள். இப்போது ரேகா மீண்டும் மரத்திற்குப் பின்னால் மறைய… ஸ்ருதி சிரிப்பை நிறுத்திவிட்டு மரத்தையே உற்றுப் பார்த்தாள்.

ரேகா சட்டென்று மரத்திற்குப் பின்னாலிருந்து தலையை நீட்ட… குழந்தை மீண்டும் சத்தமாகச் சிரித்தது. ரேகா மீண்டும் மீண்டும் விளையாடினாள். குழந்தை மிகவும் சத்தமாக சிரித்துக்கொண்டேயிருந்தது. சில நிமிட விளையாட்டிற்குப் பிறகு ரேகா எதிர்வீட்டை நோக்கிச் சென்றாள். ரேகா ஸ்ருதியை நெருங்கக் கூடவில்லை. நான்கடி தொலைவில் சென்றபோதே ஸ்ருதி அப்படிச் சிரித்தபடி, அவ்வளவு சந்தோஷமாக தன் அம்மாவின் கழுத்தை விட்டுவிட்டு, ரேகாவை நோக்கி இரண்டு கைகளையும் அகல விரித்தபடி தாவினாள். ரேகா சந்தோஷத்துடன், “ஐயோ… என் தங்கம்…” என்று முகமெல்லாம் சிரிப்புடன் ஸ்ருதியை வாங்கி அணைத்துக்கொண்டாள்.

அந்த முத்துத்தோடு இளம்தாய் ஆச்சரியத்துடன், “யாருகிட்டயும் போகவே மாட்டா ஆன்ட்டி… உங்களப் பாத்தவுடனே இப்படித் தாவுறா…” என்றவுடன் ரேகா திரும்பி என்னைப் பெருமையுடன் பார்த்தாள். ஸ்ருதி ரேகாவின் கன்னத்தை வருடி, ரேகாவின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க ஆன்ட்டி?” என்றாள் சில்வர் பிரேஸ்லெட் இளம்தாய்.

“மந்தவெளில… உங்க பேரு?’’

‘‘நித்யா. உங்க வீடு ஆறு மாசமா காலியா இருந்துச்சு. எப்பப் பாத்தாலும் ஒரே இருட்டா இருக்கும். இப்ப நடுராத்திரி ரெண்டு மணிக்கெல்லாம் லைட் எரியுது” என்றாள்.

“இவருதான் எதாச்சும் எழுதிட்டிருப்பாரு…” என்றாள் ரேகா.

“என்ன எழுதுவாரு?”

“அவரு ரைட்டர்…”

“ரைட்டர்னா?” என்றவுடன் எனக்குப் புரைக்கேறியது.

“ரைட்டர்னா…” என்று சில விநாடிகள் தடுமாறிய ரேகா, “எழுத்தாளர்…” என்றாள்.

“எழுத்தாளர்னா?” என்று நித்யா களங்கமற்ற முகத்துடன் கேட்க… “நாசமாப்போக…” என்று நான் எழுந்துவிட்டேன்.

மறுநாள் காலை. நான் நாவல் மரத்தடியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டிலிருந்து, ‘அத்தீஸ்…” என்று குரல் கேட்க… நிமிர்ந்தேன். ஸ்ருதிதான். நித்யாவின் இடுப்பில் அமர்ந்தபடி எங்கள் வீட்டுச் சமையலறை ஜன்னலைப் பார்த்துதான் கத்தினாள். இந்த வீட்டுச் சமையலறை தெருவைப் பார்த்தாற்போலிருக்கும். ரேகா சமையலறையில்தான் வேலையாக இருந்தாள். மீண்டும் குழந்தை, ‘அத்தீஸ்…” என்று கத்த... நான் நித்யாவைப் பார்த்து, “அத்தீஸ்ன்னா?” என்றேன்.

அத்தீஸ் - சிறுகதை

“அவளுக்கு ஆன்ட்டின்னு வாய்ல வரல… அத்தீஸ்ங்கிறா” என்றபோது, ஸ்ருதி ஜன்னல் வழியாக ரேகாவைப் பார்த்து அடித்தொண்டையில் சத்தமாக, ‘`அத்தீஸ்…” என்று கத்தினாள். நித்யா, “இருடி… ஆன்ட்டி சமைச்சுட்டிருக்காங்க….” என்றாள். ரேகா சமையலறையிலிருந்து, ‘‘அடுப்புல குழம்பு இருக்கு. ஒரு நிமிஷம்…” என்று குரல் கொடுத்தாள். அப்போதும் ஸ்ருதி சத்தமாக, ‘`அத்தீஸ்… அத்தீஸ்…” என்று விடாமல் கத்த… நித்யா தர்மசங்கடமாக என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

“இருங்க… நான் அனுப்பி வைக்கிறேன்…” என்று வீட்டிற்குள் நுழைந்தேன்.

“என்னங்க… இப்படிக் கத்துது…” என்று ரேகா கூறும்போதே மீண்டும் ‘அத்தீஸ்’ சத்தம்.

“சரி… நீ போ. நான் அடுப்பப் பாத்துக்குறேன்…”

“இது பெரிய பாசத்தொல்லையா இருக்கும்போல…” என்ற ரேகா வேகமாகத் துப்பட்டாவை எடுத்து நைட்டியின் மேல் போர்த்திக்கொண்டு வெளியே செல்வதற்குள் ஸ்ருதி பத்து முறை ‘`அத்தீஸ்…” என்று கத்திவிட்டாள். ரேகாவைப் பார்த்தவுடன், “அத்தீஸ்…” என்று குழந்தை வேகமாகத் தாவ… ரேகா ஸ்ருதியை வாரி அணைத்துக்கொண்டாள். நான் சமையலறை ஜன்னல் வழியாக இக்காட்சியைப் புன்னகையுடன் பார்த்தேன்.

ரேகாவின் இடுப்பிலிருந்து கீழிறங்கிய ஸ்ருதி மழலைக் குரலில், “உக்கா… உக்கா…” என்று தன் வீட்டுப் வாசல்படியைக் காண்பித்தாள். ரேகா, ``ஐயோ… ஆன்ட்டிக்கு வேலையிருக்குடி…” என்றாள் சிரிப்புடன். ஸ்ருதி அதைக் கண்டுகொள்ளாமல் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு அருகிலிருந்த இடத்தைத் தட்டி ரேகாவைப் பார்த்து, “உக்கா…. உக்கா…” என்று கூற… ரேகா வேறு வழியின்றி அமர்ந்தாள். நித்யாவும் அருகில் அமர்ந்தாள்.

நித்யா, “ஸாரி ஆன்ட்டி…. உங்க வேலைய கெடுக்குது…”

“பரவால்லங்க.. குழந்தைதானே…”

“வெளிய வந்து உங்க வீட்டப் பாத்த அடுத்த செகன்டே அத்தீஸ்னு கத்த ஆரம்பிச்சுட்டா…” என்ற நித்யாவின் கன்னத்தில் ஓங்கி அடித்த ஸ்ருதி, ரேகாவின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டாள்.

“நான் உங்ககிட்ட பேசக்கூடாதாம்…” என்று நித்யா சிரிப்புடன் கூற… ஸ்ருதி கீழே கிடந்த மண்ணை எடுத்து ரேகாவின் கையில் போட்டாள். ரேகா அதைக் கீழே வீசினாள். ஸ்ருதி சிரித்தபடி மீண்டும் ரேகாவின் கையில் மண்ணைக் கொட்டி விளையாடும் காட்சியை நான் ரசித்துப் பார்த்தேன்.

இவ்வாறு ரேகா-ஸ்ருதியின் பாசக் காட்சிகளை தினம் தினம் பார்த்தேன். தினந்தோறும் ரசித்தேன்.

மூன்று மாதங்களுக்குள் ரேகா ஸ்ருதிக்குப் புதிய ஆடைகள் மற்றும் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டாள். ஸ்ருதி தெருவுக்கு வந்தாலே எங்கள் வீட்டைப் பார்த்து, ``அத்தீஸ்... அத்தீஸ்...’’ என்று கத்துவாள். ரேகா உடனே போயாக வேண்டும். இல்லையென்றால் ரேகா போகும்வரை விடாமல் கத்திக்கொண்டேயிருப்பாள்.

தினம் நான் அலுவலகம் விட்டு வந்தவுடன், ரேகா ஸ்ருதியைப் பற்றிக் கூற ஆரம்பித்துவிடுவாள். 

“போன ஜென்மத்துல ஏதோ விட்ட குறை தொட்ட குறை போலங்க… என்னை விடமாட்டேங்குது. இன்னைக்கி அவங்க வீட்டுக்குள்ள அழைச்சுட்டுப் போயி அவ செப்பு சாமான எல்லாம் எடுத்துட்டு வந்து காமிச்சா... நானும் அவளும் சேந்து சமைச்சோம்.’’

“இன்னைக்குப் புது செருப்பக் கொண்டு வந்து காமிச்சா…”

“இன்னைக்கு டப்பால இருந்த வத்தல எடுத்து எனக்கு ஊட்டி விட்டா…’’

“ஸ்ருதி வீட்டுக்குள்ள இருக்கிறப்ப பேசாமதான் இருக்காளாம். வீட்டு வாசலுக்கு வந்தாலே ‘அத்தீஸ்’னு கத்த ஆரம்பிச்சுடுறாளாம். அதனால எனக்கு டிஸ்டர்பா இருக்கும்னு அவங்க வெளிய வரவே யோசிக்கிறாங்களாம். நான் அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லன்னு சொல்லிட்டேன். ஆனா நம்ம வீட்டுக்கு வான்னு கூப்பிட்டா வரமாட்டேங்குறா.’’

இவ்வாறு சென்றுகொண்டிருந்த ரேகா-ஸ்ருதி பந்தத்தில் ஒரு சின்ன பிரேக். நித்யாவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அவர்கள் சேலம் சென்றுவிட... கடந்த ஒரு வாரமாக ஸ்ருதியைப் பார்க்க முடியாமல் ரேகா தவித்துக்கொண்டிருக்கிறாள். 

நள்ளிரவு. ஒரு கதை எழுதிக்கொண்டிருந்த நான், இடையில் சிகரெட் பிடிப்பதற்காக வெளியே வந்தேன். அந்த நாய் என் வீட்டு வாசலிலேயே தூங்கிக்கொண்டிருந்தது. நான் நாயைக் கடந்து சென்று சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். சட்டென்று கண் விழித்த நாய் என்னைப் பார்த்தவுடன் அருகில் வந்து, என்னை சிகரெட் பிடிக்க விடாமல் சுற்றி சுற்றி வந்து குரைத்தது. திடீரென்று அது என் கைலியின் கீழ்ப்பகுதியைப் பிடித்து இழுக்க... பயத்தில் நான் பாதி சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு வேக வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.

மறுநாள் நான் ரேகாவிடம், “இந்த நாய்த் தொல்லை ஜாஸ்தியாயிகிட்டே போகுது. பேசாம கார்ப்பரேஷன்ல சொல்லி பிடிச்சுட்டுப் போச்சொல்லப்போறேன்…”

“பாவம்ங்க… அது என்னங்க பண்ணுது. அது பாட்டுக்கும் வீட்டு வாசல்ல படுத்துட்டிருக்கு…”

‘‘ஏய்… அது என் லுங்கிய புடிச்சி இழுக்குதுங்கிறேன்…”

‘‘அது... நாள் முழுசும் பொறுமையா இருந்து பாத்துச்சு. நாம அதை வீட்டுக்குள்ள விடறதா தெரியல. கோபம் வந்துடுச்சு. பேசாம நம்மளே அதை வளர்க்கலாமா?” என்றவுடன் நான் முறைத்த முறைப்பில் ரேகா உள்ளுக்குள் ஓடிவிட்டாள்.

இரண்டு நாள்கள் இப்படியே சென்றன. நான் வெளியே சென்றால் குரைத்துக்கொண்டே என் பின்னால் வரும். ஆனால் நான் அதைக் கண்டுகொள்வதேயில்லை.

நான் அலுவலகத்திலிருந்தபோது போன் செய்த ரேகா, “ஏங்க… கார்ப்பரேஷன்ல சொல்லிடுங்க. இன்னைக்கி நம்ப பையன் வெளிய போறப்ப அவன் பேன்ட்ட பிடிச்சு இழுத்து அவன வெளிய போகவே விடமாட்டேங்குது’’ என்றவுடன் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு பத்து நிமிடத்திற்குள் வீட்டிற்கு வந்தேன்.

தெருவில் ஒரே கும்பலாக இருந்தது. என் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தான். நாய் அவனை வெளியே செல்லவிடாமல் வழியை மறித்தபடி குரைத்துக்கொண்டிருந்தது.

“நீ பாட்டுக்கும் வாடா…” என்றேன்.

“இறங்கினா கடிக்கிற மாதிரி தாவுது…” என்றபோதே என்னருகில் வந்த நாய் வேகமாகக் குரைக்க… நான் கீழேயிருந்த கல்லைத் தூக்கி எறிந்தேன். அது பத்தடி பின்னால் செல்ல… வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டோம்.

கார்ப்பரேஷனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் இன்று மாலை வந்து பிடித்துச் செல்வதாகச் சொன்னார்கள். நான் சிகரெட் பிடிப்பதற்காக வெளியே சென்றேன். என்னையும் தெருவில் இறங்க விடாமல் நாய் பயங்கரமாகக் குரைக்க… “ஆத்தாடி…” என்று வேகமாக வீட்டிற்குள் வந்துவிட்டேன்.

“நாம அதைச் சேத்துக்குலன்னு ரொம்ப கோபமாயிடுச்சுங்க. அதான் நம்பள வெளியவே விடமாட்டேங்குது…” என்றாள் ரேகா.

அன்று மாலை எதிர்வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அடுத்த நொடியே, ``அத்தீஸ்…” என்று ஸ்ருதியின் குரல் கேட்டது. ரேகா முகமெல்லாம் சிரிப்புடன் வேகமாக எழுந்து வெளியே செல்ல முற்பட… நான், “ஏய்… வேண்டாம். நாய் விடாது” என்றேன்.

“என்னைல்லாம் விடும்…” என்றபடி வாசற்கதவைத் திறந்தாள். நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.

நித்யாவின் இடுப்பிலிருந்த ஸ்ருதி ரேகாவைப் பார்த்தவுடன் நான்கு நாள் கழித்து ரேகாவைப் பார்த்த உற்சாகத்தில் வழக்கத்தைவிட சத்தமாக, “அத்தீஸ்…” என்று கத்தினாள். சிரிப்புடன் ரேகா படிக்கட்டில் காலை வைத்தாள். கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்த நாய் விருட்டென்று எழுந்து ரேகாவைப் பார்த்துக் குரைத்தது. ரேகா அதைக் கண்டுகொள்ளாமல் சாலையில் இறங்கினாள். அடுத்த விநாடியே பாய்ந்து வந்து ரேகாவின் வழியை மறித்த நாய், ஆவேசத்துடன் வள் வள்ளென்று குரைக்க… பொதுவாக நாய்களுக்குப் பயப்படாத ரேகாவே பயந்துபோய் நின்றுவிட்டாள்.

ஸ்ருதி, “அத்தீஸ்…” என்று இரண்டு கைகளையும் நீட்டியபடி கத்தினாள்.

“இருடி வரேன்… இந்த நாய் வேற…” என்று அடுத்த அடியை வைக்க…. நாய் சட்டென்று ரேகாவின் நைட்டியைப் பற்களால் கவ்வி இழுக்க… நான் பதற்றத்துடன், “ரேகா… உள்ள வா…” என்று கத்தினேன்.

எதிர்வீட்டு நித்யா, “என்ன ஆன்ட்டி… இந்த நாய் புதுசா இருக்கு…” என்றாள். சுருக்கமாக நாய் விவகாரத்தைக் கூறிய ரேகா, “இப்ப எங்க யாரையும் வெளிய போகவே விடமாட்டேங்குது. கார்ப்பரேஷன்ல சொல்லியிருக்கோம். நான் அப்புறம் வர்றன்ங்க…” என்று திரும்ப… ஸ்ருதி, “அத்தீஸ்…” என்று கத்தினாள். ரேகா திரும்பி ஸ்ருதியைப் பார்க்க, ஸ்ருதி, `வாங்க’ என்பதுபோல் கைகளால் சைகை செய்தாள்.

“ஏய்… ஆன்ட்டி அப்புறம் வருவாங்க…” என்று நித்யா அவர்கள் வீட்டை நோக்கித் திரும்ப… ஸ்ருதி உயிர் போவதுபோல் அடித்தொண்டையில் வீலென்று அலறியபடி அழுதாள். அழுதுகொண்டே, “அத்தீஸ்… அத்தீஸ்…” என்று உச்சபட்சக் குரலில் கத்த… பக்கத்து வீடுகளிலிருந்து ஆட்கள் வெளியே வந்தனர்.

“என்னாச்சுங்க?”

“குழந்தை என்கிட்ட வரணும்னு அழுது. நாய் விடமாட்டேங்குது…”

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. நீங்க போங்க…” என்றவுடன் ரேகா குழந்தையை நோக்கி நடக்க முற்பட… நாய் பயங்கரமாகக் குரைத்தபடி கால்களை உயர்த்தி நின்று தடுத்தது.

அத்தீஸ் - சிறுகதை

நித்யா, “ஆன்ட்டி… நீங்க வீட்டுக்குள்ள போங்க…” என்றாள். ஆனால் ஸ்ருதி உச்சக் குரலெடுத்து, “அத்தீஸ்…” என்ற அலற… ரேகாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நாய் விடாமல் குரைத்தபடி வழியை மறித்தது. நாயின் குரைப்புச் சத்தத்தையும் தாண்டி மிகவும் சத்தமாக ஸ்ருதி, “அத்தீஸ்… அத்தீஸ்…” என்று கத்திக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை கத்தும்போது அத்தீஸில் வரும் ‘தீ’யை சற்று இழுத்து அவளின் அதிகபட்ச சக்தியுடன் கத்தினாள்.

“அத்தீ.......ஸ்”

இப்போது நாய் திரும்பி ஸ்ருதியைப் பார்த்துவிட்டு மீண்டும் குரைக்க ஆரம்பித்தது.

“வள்... வள்...”

“அத்தீ................ஸ்”

“வள்... வள்...”்

``அத்தீ...............................ஸ்”

“வள்... வள்...”

“அத்தீ................................................ஸ்”

தெருவில் அனைவரும் அமைதியாக ரேகாவையும், ஸ்ருதியையும் பார்த்தனர். நாயின் குரைப்புச் சத்தமும், ‘அத்தீஸ்’ சத்தமும் மட்டுமே தெருவில் கேட்டது. நானே ஒரு சினிமாக் காட்சி போல நாய் ஜெயிக்கிறதா, அத்தீஸ் ஜெயிக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஸ்ருதியின் ‘அத்தீஸ்’ சத்தம் அதிகரிக்க அதிகரிக்க… ரேகாவையும், ஸ்ருதியையும் மாறி மாறிப் பார்த்த நாயின் குரைப்புச் சத்தம் குறைந்துகொண்டே வந்தது. சில விநாடிகளுக்குப் பிறகு குரைப்புச் சத்தம் நின்றது. அமைதியாக இருந்த தெருவில் ஸ்ருதியின் “அத்தீஸ்…’’ சத்தம் மட்டும் தனித்து ஒலித்தது. ஸ்ருதியைச் சில விநாடிகள் பார்த்த நாய் திடீரென்று ரேகாவிற்கு வழி விடுவது போல் நகர்ந்தது. ஸ்ருதி பக்கம் தலையைக் காண்பித்து, “போ...” என்பது போல் ரேகாவைப் பார்த்து மெலிதாகக் குரைத்தது. சட்டென்று கண்கலங்கிய ரேகா நாயின் தலையில் தடவிக் கொடுத்துவிட்டு வேகமாக ஸ்ருதியை நோக்கி ஓடினாள்.

ஸ்ருதி அழுகையை நிறுத்திவிட்டு, “அத்தீஸ்…” என்று உற்சாகக் குரலெழுப்பியபடி பாய்ந்து ரேகாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

அரை மணி நேரம் கழித்து கார்ப்பரேஷன் பணியாளர்கள் வந்தபோது, நான் அந்த நாயைப் பிடிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு, எங்கள் வீட்டிற்குள் நாயை நுழைய அனுமதித்தேன்.

ஒரு வாரம் கழித்து ரேகா, “நாய்க்கு என்னங்க பெயர் வைக்கலாம்?” என்றாள். நான் சில விநாடிகள் யோசித்துவிட்டு புன்னகையுடன் “அத்தீஸ்” என்றேன்.